Friday, 23 May 2014

தர்மானுஷ்டத்தின் அவசியம்: (ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்)

தர்மானுஷ்டத்தின் அவசியம்:

(ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்)

ஆதிசங்கர பகவத்பாதாளுடைய அவதாரம் சநாதன தர்மத்தை புனருத்காரணம் செய்வதற்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பகவானுடைய ஒவ்வொரு அவதாரத்தின் லக்ஷ்யம் அதேதான். தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். அதர்மம் நீக்கப்பட வேண்டும். ப்ராதான்யம் கொடுத்து பகவான் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு வேறு யாரையும் அனுப்பாமல், தானே வந்து விடுகிறான்.

உலகத்தில் கூட ஒரு பெரிய ஸ்தாபனத்தில் ஏதாவதொரு ப்ரச்னை வந்தால் அந்த ஸ்தாபனத்தின் எஜமானர் வந்து அதற்கு ஒன்றும் உள்ளே வரமாட்டார். ஏனெனில் அவருக்கு கீழ் நிறையப் பேர் இருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் அதைப் போய்த் தீர்வு பண்ணிவிடுவார்கள் என்று சொல்லி அவர்களையே அனுப்புவார். எந்தப் ப்ரச்னையை வேறு யாராலும் தீர்வு பண்ண முடியாதோ அதை மட்டும் தீர்வு பண்ணுவதற்கு அந்த எஜமானரே வருவார்.

இங்கேயும் தர்மத்தை ரக்ஷணம் செய்வதற்கு வேறு யாராலும் முடியாததனால் ஸ்வயம் பகவானே வந்து அந்தக் கார்யத்தை செய்ய வேண்டி வந்துவிட்டது. வேறு யாராலும் ஏன் முடியாது என்று கேட்டால் தர்மம் என்பது அவ்வளவு ஸர்வ ஸ்ரேஷ்டமானது. அவ்வளவு ஸர்வஸ்ரேஷ்டமான தர்மத்தை உத்தாரணம் செய்யக்கூடியது அவ்வளவு லேசான கார்யம் இல்லை. அதனால் ஸ்வயம் அவதாரம் செய்ய வேண்டி வந்துவிட்டது.

பகவான் ஒவ்வொரு அவதாரத்திலேயும் தர்ம ரக்ஷணம் செய்திருக்கிறார் என்பது நமக்கு இதிகாச புராணங்களிலிருந்து தெரிகிறது. பகவான் தர்ம ரக்ஷணத்தை செய்தான் எனில் அந்தத் தர்மத்தை ஆசரணம் செய்ய வேண்டிய கடமை நம்முடயதுதானே!

நாம் சாப்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்யலாம். சமையல் சரியாக செய்துவைக்கலாம். பரிமாறவும் செய்யலாம். சாப்பிட வேண்டியது அங்கே உட்கார்ந்தவனைச் சேர்ந்ததுதானே? அதுவும் சமையல் செய்தவனோ, சாமான் கொண்டு வந்தவனோ செய்யக்கூடிய கார்யம் இல்லையே இது.
அதேபோல் பகவான் ஒவ்வொரு யுகத்திலேயும் அவதாரம் எடுத்து தர்மரக்ஷணம் செய்தார். தர்மரக்ஷணம் என்றால் என்ன? தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு என்னவெல்லாம் விக்னங்கள் (தடைகள்) இருந்ததோ அவற்றையெல்லாம் நிவாரணம் செய்துவிட்டார். என்ன விக்னங்கள்? ராக்ஷஸர்கள் தர்மானுஷ்டத்திற்கு இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். ஒருகார்யத்திற்கு ஒருவன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறான் என்றால் அந்தக் கார்யம் நடக்காது. அந்தக் கார்யம் நடக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் அந்த இடைஞ்சலை நீக்கவேண்டும்.

தர்மானுஷ்டானுத்தில் இடைஞ்சல்களாக வந்து கொண்டிருந்த ராக்ஷஸர்களை நீக்க வேறு யாராலும் முடியாததினால் பகவான் வந்து ராக்ஷஸ ஸம்ஹாரம் செய்தார். இனி தாராளமாக தர்மானுஷ்டானம் செய்பவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என்று சொன்னார். அந்தக் கார்யம் பகவான்தான் செய்ய முடியும்; செய்துவிட்டார். பின் தர்மத்தை அனுஷ்டானம் செய்ய வேண்டிய கடமை நம்முடையதுதானே! அப்போதும் நாம் ஒன்றும் நம் கடமையை செய்யாமல் இருந்தால் நமக்கு சரியான பலன் கிடைக்காவிட்டால் நாம் யாரை தூஷிக்கமுடியும்? சமையல் பண்ணி பரிமாறி எல்லாம் ஆனதற்குப்பிறகு ஒருவன் சாப்பிடாமல் தனக்கு வயிறு நிரம்பவில்லை என்று சொன்னால் அது யாருடைய தவறு? சாப்பிடாமல் இருந்தவனுடைய தவறுதானே? அந்த மாதிரி பகவான் நமக்கு தர்மானுஷ்டத்திற்கு வேண்டிய எல்லா சௌகர்யத்தையும் செய்து கொடுத்தார்.

என்ன சௌகர்யம் என்றால் முதலில் பகவான் நமக்கு இந்த நர ஜன்மம் (மனித) கொடுத்தானே தர்மானுஷ்டானம் செய்வதற்கு சௌகர்யமாகட்டும் என்பதற்காக இந்த மனுஷ்ய சரீரத்தை கொடுத்தான். வேறு எந்த ப்ராணி சரீரம் கொடுத்தாலும் தர்மானுஷ்டானம் செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய யானை சரீரமாகட்டும், ஒரு சின்ன பூனை சரீரமாகட்டும், யானையாகவோ, பூனையாகவோ பிறந்திருந்தால் நாம் தர்மத்தை அனுஷ்டிக்க முடியுமா? வேத அத்யயனம் செய்ய முடியுமா? ஒன்றும் முடியாது.

இந்த மனுஷ்ய சரீரம் என்பது எல்லாவற்றுக்கும் தகுந்தது உகந்தது. வேத அத்யயனமும் செய்ய முடியும். யாக ஹோம அனுஷ்டானமும் செய்ய முடியும். தேவாராதனையும் செய்ய முடியும். தேவோபாசனையும் செய்ய முடியும். ஞானத்தையும் அடைய முடியும். எல்லாவற்றுக்கும் அனுகூலமானது இந்த மனுஷ்ய சரீரம். இதை நமக்கு பகவான் அனுக்ரஹம் செய்திருக்கிறார்.
அதாவது தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யத்தை பகவான் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த சௌகர்யத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நமக்கு இந்த தர்மத்தில் இருக்க வேண்டிய ஸ்ரத்தை வேறு எதிலேயோ போய் விடுகிறது. மீதி விஷயங்களில் நாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறோமோ அந்த உற்சாகத்தை நாம் தர்மானுஷ்டானத்தில் காட்டுவதில்லை.
ஒரு பத்து நிமிஷமாவது எந்த விஷயத்தையும் மனதிற்குக் கொண்டுவராமல் ஸந்த்யாவந்தனம் செய் என்று சொன்னால் யாராலாவது முடிகிறதா? முடியாது. சிலர் நான் 300தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்திருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் மனது எங்கே போனது என்று அவரைத்தான் கேட்க வேண்டும். மனது அங்கே இருப்பத்தில்லை. மனசு அங்கே இல்லாமல் நாம் சும்மா 1000தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்தாகச் சொல்லிக் கொண்டால் என்ன ப்ரயோஜனம்? நாம் செய்கிற கார்யம் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டால் த்ரிகரணசுத்தியாகச் செய்யவேண்டும். த்ரிகரணங்கள் என்று சொன்னால் மனம், வாக்கு, சரீரம் இந்த மூன்றும் சுத்தமாக இருக்கவேண்டும். மனதிலே வேறு எந்தவிதமான யோசனையும் வரக்கூடாது. வாக்கால் (வாயால்) வேறு எந்தவிதமான பேச்சும் வரக்கூடாது. சரீரத்தில் வேறு எந்தவிதமான கார்யமும் நடக்கக் கூடாது. ஜபத்துக்கு உட்கார்ந்தோம் அல்லது பூஜைக்கு உட்கார்ந்தோம் அல்லது த்யானத்துக்கு உட்கார்ந்தோம் என்று சொன்னால் அதில்தான் மனது இருக்கவேண்டும். வேறு எதிலேயும் மனது போகக்கூடாது. அப்படி செய்தால் அதற்குப் பலன் உண்டு. நாம் யாரும் அப்படி செய்வதில்லை. செய்யாமல் நாம் என்ன செய்கிறோம் நிறைய ஜபம் செயதாயிற்று. பாராயணம் செய்தாயிற்று. யாகம் செய்தாயிற்று. ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஒரேயடியாகச் சொல்லிவிடுகிறோம் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று. சொல்லுகிற நம்முடைய மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் இதெல்லாம் உண்மையா சரிதானா? என்று ஒரு சந்தேக பாவம். ஏனென்றால் யாகம் செய்யச் சொல்கிறார்கள், ஹோமம் செய்யச் சொல்கிறார்கள் இதெல்லாம் செய்தால் கார்யம் கைகூடுமா? ஏதோ ஜோஸ்யர் சொல்கிறார் இல்லை வாத்யார் சொல்கிறார் அவ்வளவுதான் என்று நமக்கு தோன்றுகிறது. வாஸ்தவமாக அந்த சந்தேகம் கூடாது. சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் ஆகாகது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் இல்லை. நம்முடைய மனதில் ஸ்ரத்தை இல்லாததினால் கார்யம் நடக்கவில்லை.
பகவான் கீதையிலே சொல்லியிருக்கிறான்.

அஸ்ரத்யா ஹுதம்தத்தம்
தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
அஸதித்யுச்யதே பார்த்த
நசதத்ப்ரேத்ய நோஇஹ ||

நீ ஸ்ரத்தை இல்லாமல் எந்த கார்யம் செய்தாலும் உனக்கு பலன் கிடைக்காது. நீ நிறைய தவம் செய்தேன். ஹோமம் செய்தேன். தானம் செய்தேன் என்று என்ன சொன்னாலும் ஸ்ரத்தை இல்லாமல் செய்துவிட்டு பலன் கிடைக்கவில்லை என்று சாஸ்த்ரத்தை ஆட்சேபிக்கிறாய். தவறு உன்னிடம் இருக்கிறது. தவறு சாஸ்த்ரத்தில் இல்லை. உன்னிடம் இருக்கும் தவறை திருத்திக் கொள்ளாமல் சாஸ்த்ரத்தின் மேல்பழி போட்டால் என்ன ப்ரயோஜனம்? அதனால் பகவான் நமக்கு தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யம் கொடுத்துவிட்டு இடைஞ்சல்களையும் நீக்கி நமக்கு பெரிய உபகாரம் செய்தாலும் கூட அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதாவது சரியாக தர்மாசரணம் செய்யாமல் இருந்தால் அது நம்முடைய தவறே ஒழிய யாரையும் ஆட்சேபிக்க முடியாது.
பகவான் தன்னுடைய அவதார கார்யத்தை சரியாக நடத்தினான். பகவத்பாதாள் அவதாரம் எடுத்துவிட்டு தர்மத்துக்கு விரோதமாக வேதத்திற்கு விரோதமாக ப்ரசாரங்கள் செய்து கொண்டு இருந்தார்களோ அவை எல்லாவற்றையும் தடுத்து விட்டார். அப்பேர்ப்பட்டவருக்கு துளி கூட அவகாசம் இல்லாமல் செய்துவிட்டார். இனி நீ தாராளமாக ஸ்ரத்தையான தர்மத்தை செய்யலாம் என்கிற ஒரு பரிஸ்திதியை உண்டாக்கினார். ஆனால் நாம் அப்படி இருந்தாலும் கூட சரியாக தர்மானுஷ்டானம் செய்யவில்லை யென்றால் அது ரொம்பப் பெரிய அபராதமாகும்.

தர்மத்தை நாம் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிட்டாலும் தர்மத்திற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஈஸ்வரனுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகப்போவது நமக்குத்தான். நாம் தர்மத்தை அனுஷ்டித்தால் நமக்கு நலம். நாம் தர்மானுஷ்டானம் செய்யவில்லை என்றால் நமக்குத்தான் கெடுதல். நமக்கு எல்லாருக்கும் கெடுதல் ஆகக்கூடாது நல்லது ஆகவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஸத்கர்ம அனுஷ்டானம் செய் என்கிறபோது மட்டும் நாம் என்னவெலாம் காரணங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

சிலபேர் எனக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. சீக்கிரம் ஆபீஸ் போக வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் டி.வி பார்க்கிறதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவதில்லையே இல்லை இரண்டுபேர் வேண்டாத விஷயங்களைப் பேசுவதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவது இல்லையே ஆனால் ஸந்த்யாவந்தனம் விஷயம் வரும்போது சொல்கிறீர்கள் சீக்கரம் ஆபீஸ் போக வேண்டியிருக்கிறது அப்போது அவன் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வாஸ்தவமாக தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம். அதற்கு பின்புதான் மீதி விஷயங்கள் எல்லாம். தனக்கு நித்யகர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சல் வருவதாக இருந்தால் அந்தக் காரியமே தனக்கு வேண்டாம் என்கிற அளவிலே நம் முன்னோர் இருந்தார்கள்.

முன்பு பெரிய பெரிய இராஜா சபைகளில் பெரிய வித்வான்கள் இருந்தார்கள். அந்த வித்வான்கள் அந்த இராஜாவுடைய ஆஸ்ரயத்திலே இருந்ததனால் அந்த இராஜாவின் கட்டளைப்படி அவர்கள் நடக்க வேண்டும் வேறு வழியில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய அனுஷ்டான சமத்தில் இராஜாவிடமிருந்து யாரேனும் வந்து “மகாராஜா உங்களை வரச் சொல்கிறார்” என்றால் “அனுஷ்டானத்தை முடித்து விட்டு வருகிறோம்” என்று சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்தார்களாம் “இல்லை உடனே வரச் சொல்லு” என்று சொன்னால் “இல்லை அனுஷ்டானம் முடிந்த பிற்பாடு வருகிறேன்” என்று சொல்வார்கள்.

அவர்களுக்கு இராஜா என்ன செய்வானோ என்கிற பயம் இல்லை. என்ன செய்யப்போகிறான் என்னுடைய அனுஷ்டானத்தைவிட இராஜா எனக்கு ஒன்றும் பெரியது அல்ல. அவனுடைய கடமை முடிந்தபிறகு இராஜாவிடம் போனால் இராஜா “நான் உங்களுக்கு சொல்லி அனுப்பி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது வருகிறீர்களே” என்று கேட்பாராம். அப்போது அந்தப் பண்டிதர்கள் “அனுஷ்டானம் முடியவில்லை, அனுஷ்டானத்தை முடித்து விட்டு நேராக வந்து விட்டோம்.” என்பார்களாம். ஆனால் “என்னை காக்க வைத்து விட்டீர்களே” என்று இராஜா கேட்டால் அதற்கு “உங்கள் நன்மைக்காகத்தான் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தோம். அனுஷ்டானம் ஒழுங்காக செய்வதால்தானே உங்ககது இராஜ்யத்துக்கும் உங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும். நடுவில் அனுஷ்டானத்தை விட்டுவிட்டு வந்தால் உங்களுக்கும் நல்லது ஆகாது. உங்கள் இராஜ்யத்திற்கும் நல்லது ஆகாது.” என்று சொல்வார்கள்.

எப்பேர்ப்பட்ட ஸ்ரத்தை இருந்தது அந்தப் பண்டிதர்களுக்கு. அந்த மகான்கள் எல்லோரும் நம் முன்னோர் என்று சொல்லிக் கொள்வதிலேயே திருப்திப்படுகிறோமே ஒழிய நாமும் அதுமாதிரி இருக்கவேண்டும் என்று நமக்கு யாருக்கும் வருவதில்லை. நம் முன்னோர் அந்த மாதிரி இருந்தார்கள். அவர்கள் யாருக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.

தர்மத்திற்கு மேலே எதுவும் இல்லை. ஈஸ்வரனுக்கு மேலே எதுவும் இல்லை. என் தர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் அந்தக் காரியம் எனக்குத்தேவையில்லை. அந்த மாதிரி ஒரு வைராக்யத்தோடு இருந்ததினால் அவர்கள் மகான்கள் ஆனார்கள். இன்றைக்கு அதற்கு மதிப்பு கொடுக்காமல் கேவலம் லௌகீகமான போகம் முக்யம். பணம்தான் முக்யம் பெயர்தான் முக்யம். லௌகீகமான உத்யோகம்தான் முக்யம். வேறு எதுவும் முக்யம் இல்லை என்கிற பாவத்தில் நாம் இருக்கிறோம். அப்போது பகவான் அவ்வளவு கஷ்டப்பட்டு அவதாரம் செய்து இந்த ராக்ஷஸ ஸம்ஹாரம் எல்லாம் செய்ததற்கு ப்ரயோஜனம் என்ன? அதனால் நாம் அது எல்லாவற்றையும் சரியாக கவனித்து நம்முடைய ஜீவனத்தில் தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம் கொடுக்கவேண்டும். அதற்குத்தான் இந்த மனுஷ்யஜன்மா வந்து இருக்கிறது. இந்த மனுஷ்ய ஜன்மா ரொம்ப துர்லபமானது. இந்த ஜன்மா போய் விட்டது என்றால் திரும்ப மனுஷ்யாளாகவே பிறப்போம் என்று யாருக்காவது உத்தரவாதம் உண்டா? கிடையாது. திரும்ப எந்த ஜன்மா வரப்போகிறதோ யாருக்குத் தெரியும். வேறு ஏதாவது ஜன்மா வந்தால் ஒன்றும் செய்ய முடியாதே. அதை நினைத்துக்கொண்டு இந்த ஜன்மாவிலேயே நாம் தர்மானுஷ்டானத்தை கூடுமான வரையிலும் அதிகமாக செய்து இன்னும் உத்தம ஜன்மா வருவதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர இந்த ஜன்மாவை கேவலம் கௌகீகமான விஷயத்திலேயே கழிப்பது கொஞ்சமும் ந்யாயமில்லை.

அதற்குத்தான் பகவத்பாதாள் இந்தச் சதுராம்னாய பீடாஸ்தாபனம் செய்தது. ஜனங்களுக்கு அடிக்கடி இந்த தர்ம விஷயத்திலே ப்ரபோதம் செய்யவேண்டும் என்று எண்ணினார். ஏனெனில் நமக்கு யாராவது சொல்கிறவர் ஒருவர் இருந்தால் ஒரு நாள் இல்லை ஒரு நாளைக்காவது நமக்கு நல்ல கார்யம் செய்ய வேண்டும் என்று தோன்றும். யாராவது சொல்கிறவர் ஒருவர் வேண்டும். நாம் வழி தவறினால் நீ வழி தவறுகிறாய் என்று சொல்கிறவர் வேண்டும். அதற்குத்தான் அந்தப் பரம்பரையை பகவத்பாதாள் ஏற்படுத்தினது. இந்தப் பரம்பரையிலே வரக்கூடிய ஆசார்ய புருஷர்கள் அந்தந்த காலத்தில் ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காட்டவேண்டும். தொடர்ந்து செய்து வருகிறார்கள். யார் தர்ம மார்க்கத்தை மீறிப் போகிறார்களோ அவர்களுக்குச் சரியான மார்க தர்சனம் செய்வதையும் சரியான வழியில் கொண்டுவரவும் வற்புறுத்துகிறார்கள். அப்படி சொல்லியும் யார் செய்ய மாட்டார்களோ அது அவர்கள் பாபம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் எந்த அளவுக்கு செய்ய முடியும். ஜனங்களுக்கு நல்லவழி சொல்லலாம். எப்படி இருப்பது உசிதம், எப்படி இருப்பது உசிதம் இல்லையென்று. ஒருவன் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கிறான் அங்கே முன்னால் போனால் ஒரு குழி இருக்கிறது; அவனுக்குத் தெரியாது; நீங்கள் அங்கே அப்படியே போகாதீர்கள் அங்கே ஒரு குழி இருக்கிறது வேறு வழியில் போகலாம் என்று சொல்லலாம். தெரியும்! குழியில் விழவேண்டும் என்றுதான் போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன செய்வது? அவனுக்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அதே மாதிரி நீ தர்ம மார்க்கத்தை விட்டுவிட்டால் ரொம்ப அனர்த்தமாகும். அதனால் தர்ம மார்க்கத்தை விடாதே என்று நாம் சொல்லலாம். அனர்த்தத்துக்குத்தான் நான் போவேன் என்று சொல்பவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் பகவத்பாதாள் அந்தந்த காலத்திலே ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பீட ஸ்தாபனம் செய்தார். அதிலேயும் தக்ஷிணாம்னாய பீடாஸ்தாபனம் ச்ருங்கேரி க்ஷேத்ரத்திலே செய்து பகவத்பாதாள் மஹோபகாரம் செய்தார். அந்த ஸ்தானத்தினுடைய மகிமை என்ன? ச்ருங்கேரி என்கிற ஸ்தானத்தினுடைய மகிமை சகஜமான வைரம் இருக்கக்கூடிய த்வேஷம் இருக்கக்கூடிய சத்ருத்வம் இருக்கக்கூடிய இரண்டு ப்ராணிகள் ஸ்நேகத்தோடு மித்ரத்தை தேடிவாழ்ந்த இடம் ச்ருங்கேரி.

பாரதத்திலேயே எந்த ஒரு இடத்திலேயும் இந்த மாதிரி ஒரு சந்நிவேசத்தை யாரும் பார்க்கவில்லை. சங்கரருக்கு அப்படி ஒரு சந்நிவேசம் கண்ணிலே பட்டது. பாம்பும், தவளையும் ஸ்நேகத்தோடு வாழ்ந்த இடம் ச்ருங்கேரி. அதனால் இந்த இடத்திலே பீட ஸ்தாபனம் செய்வதுதான் ரொம்ப உசிதம் என்று தீர்மானம் செய்து சங்கரர் அங்கு பீட ஸ்தாபனம் செய்தார். சங்கரருடைய சிஷ்யர்களிலே வயதிலேயும், வித்யையிலேயும் பெரியவர் சுரேஸ்வரர். சங்கரருடன் நேராகவே சர்ச்சை, வாதம் செய்து கடைசியிலே சங்கரர் சொல்வதுதான் ஸர்வார்த்தமாக சரி என்று ஒப்புக்கொண்டு சங்கரருக்கு சிஷ்யரானவர். அப்பேர்ப்பட்ட சுரேஸ்வரரை ச்ருங்கேரியிலே முதல் ஆசார்யாளாக நியமித்தார். தொடர்ந்து சங்கிலியாக ஒரு பரம்பரையை ஏற்படுத்தினார் சங்கரர். எல்லாக் காலங்களிலேயும் இந்த தர்மப்ரசாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் அமைப்பை தோற்றுவித்தார்.

தர்மம் நடந்து கொண்டு இருந்தால்தான் தேசம் சுபிக்ஷமாக இருக்கும். எங்கே தர்மம் நடக்கவில்லையோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் ஜனங்களுக்கு ஒரு ஸ்ரத்தை இல்லையோ அந்த இடத்திலே ஜனங்கள் சுகமாக வாழமுடியாது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் எல்லோரும் ரொம்பவும் ஸ்ரத்தையோடு இருந்து தங்களுக்கு கூடுமானவரை அனுஷ்டானம் செய்துகொண்டு இருக்கிறார்களோ அந்த இடத்தில்தான் சுபிக்ஷம் இருக்கும். அங்குதான் ஜனங்கள் சௌகர்யமாக வாழமுடியும். இந்த த்ருஷ்டியினால் சங்கரர் இந்தப் பீட ஸ்தாபனம் என்ற உத்தமமான கார்யம் செய்தார். இந்தப் பீடத்தை ச்ருங்கேரியில் ஸ்தாபனம் செய்தார்.

ஆனால் காலக்ரமத்திலே ஜனங்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே பகவத்பாதாளுடைய ஸாந்நித்யம் சாரதாம்பாளுடைய ஸாந்நித்யம் வேண்டும் என்பதற்காக இந்தப் பீடத்தில் வந்த ஆசார்யார்கள் அங்கங்கே சங்கர மடங்களை நிர்மாணம் செய்து அங்கே பகவத்பாதாளையும், சாரதாம்பாளையும் ஸ்தாபனம் செய்தார்கள், செய்து வருகிறார்கள்.

அதனால் எல்லோருக்கும் சாரதாபரமேஸ்வரியையும் பகவத்பாதயும் சங்கரரை தர்சனம் செய்யக் கூடிய ஒரு பாக்யம் கிடைத்துள்ளது. அந்தஸந்நதியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து த்யானம் செய்யக் கூடிய பாக்யம் நமக்குக் கிடைத்திருக்கிறது. சங்கரர் நமக்கு குரு. சாரதை சகல வித்யைகளுக்கும் அதிபதியானவள். நமக்கு வேண்டியது ஞானம். அந்த வித்யா தேவதையான சாரதையினாலேயும் குருவினாலேயும் கிடைத்துவிடும். ஏனெனில் ஞானத்துக்குச் சமானமான பவித்ரமான ப்ரும்மமான பொருள் இன்னொன்று இல்லை என்று பகவான் கீதையில் சொன்னார்

நஹிஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே

அந்த ஞானம் யாரால் கிடைக்கும்? குருவினாலேயும் அந்த ஞானஸ்வரூபிணியான சாரதையினாலேயும்தான் நமக்கு ஞானப்ராப்தி ஆகும். அதற்காக தினந்தோறும் ஞான நாயகனான குருவையும் ஞானஸ்வரூபிணியான சாரதையையும் நாம் நமஸ்கரிக்க வேண்டும். ஸ்மரிக்கவேண்டும், ஆராதிக்கவேண்டும், தியானம் செய்யவேண்டும். அந்த த்ருஷ்டியிலே இந்த சங்கர மடங்கள் சங்கர பகவத்பாதாளையும் சாரதா பரமேஸ்வரியையும் ஸ்தாபனம் செய்வது என்பது அநேக ஆண்டுகளாக சம்ப்ரதாயத்தில் வந்த விஷயம்.

எங்கள் பரமேஷ்டி குருநாதர் ஜகத்குரு ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்மபாரதீ ஸ்வாமிகள் எங்க பரமகுருநாதர் ஸ்ரீசந்த்ரசேகரபாரதீ மகாஸ்வாமிகள் எங்கள குருநாதர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் இந்த சங்கர மடங்களெல்லாம் ஆங்காங்கு நிர்மாணம் செய்து ஜனங்களுக்கு மஹோபகாரம் செய்தார்கள். அதே த்ருஷ்டியிலே இந்த கல்லிடை குறிச்சி கிராமத்திலே சங்கர மடத்தை நிர்மாணம் செய்து இங்கே சாரதா சங்கரரை ப்ரதிஷ்டை செய்தார்கள். இங்கே இருக்கும் மகாஜனங்களுக்கு அத்யந்த உபகாரம் ஆகும். பரமானுக்ரஹம் ஆகும். அந்த ஒரு பாவத்தினாலே இங்கே சங்கர மடத்தை ஏற்படுத்தியது. அந்த சங்கரமட நிர்மாணத்துக்கு வாஸ்தவமாக இன்றைய தினம் குருபக்த ரத்னம் கிட்டாமணி ஐயரை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் இந்த சங்கரமட நிர்மாணத்துக்கு காரணமானவர். அவருடைய முயற்சியினாலே இங்கே சாரதா சங்கரமடத்தின் நிர்மாணம், ப்ரதிஷ்டை, கும்பாபிஷேகம் மற்றும் சாரதா சங்கரருக்கு சேவை நடக்க வேண்டியதற்கு வ்யவஸ்தை எல்லாம் அவராலே நடந்தது.

ஊர்க்காரர்கள் எல்லோரும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சந்தேகமேயில்லை. உங்கள் எல்லோருக்கும் இருக்கிற ஒரேஒரு தீர்மானம் நமது குரு ச்ருங்கேரி ஜகத்குரு. அவர் என்ன சொன்னாலும் அதை நாம் செய்யவேண்டும் என்கிற ஒரே ஒரு தீர்மானம் உங்களுக்கு.

அந்தத் தீர்மானத்தில் இந்த சங்கரமட நிர்மாணத்திலேயும் நீங்கள் விசேஷமான ஓர் அபிமானத்தைக் காட்டினீர்கள். பகவத்பாதாள் சாரதா பரமேஸ்வரியுடைய ஸாந்நித்யம் இந்த இடத்தில் விசேஷமாக இருக்கிறது. அது உங்கள் எல்லோருக்கும் அத்யந்த பாக்யமான விஷயம்.

இந்த ஊருக்கு ‘கல்யாணபுரி’ என்கிற பெயர் எங்கள் பரமேஷ்டி குருநாதரால் கொடுக்கப்பட்டது. அந்த கல்யாணபுரி என்கிற பெயரை சார்த்தகமாக்கிக் கொண்டு நீங்கள் இந்தக் கிராமத்திலே வசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜகத்குருநாதர் எப்போது வந்தாலும் அவரை அத்யந்தமான பக்தி ஸ்ரத்தைகளுடன் சேவிக்கவேண்டும், வரவேற்க வேண்டும். அவருடைய அனுக்ரஹத்தை சம்பாதிக்க வேண்டும் என்கிற பரிபூர்ணமான பாவனையோடு இருக்கக்கூடியவர்கள் நீங்கள். நான் 17 வருஷத்திற்குப் பிறகு கல்லிடைகுறிச்சிக்கு வந்து இருக்கிறேன். உங்களையெல்லாம் பார்த்து மிகவும் சந்தோஷமடைகிறேன். உங்கள் எல்லோருக்கும் பரிபூர்ணமான ஆசிர்வாதம் செய்து சாரதாசங்கரரின் அனுக்ரஹம் பூர்ணமாக இருக்கட்டும் என்று சொல்லி இந்த பாஷணத்தை இங்கு முடிக்கிறேன்.

ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா

No comments:

Post a Comment