Friday, 23 May 2014

ராமனும் பரமேச்வரனும் ஒன்று தான் - ஆசார்யாள் அனுக்ரஹ பாஷணம்

ராமனும் பரமேச்வரனும் ஒன்று தான்

நம்முடைய பாரத தேசத்தில் இருக்கிற க்ஷேத்திரங்களில் ராமேச்வர க்ஷேத்திரம் மிகவும் ப்ரஸித்தமானது. பகவான் பரமேச்ரவன் இங்கே ஸ்ரீராமச்சந்திரனுடைய கரகமலங்களால் ப்ரதிஷ்டிதனாகி ராமநாதர் ராமேச்வரர் என்கிற பெயரில் விராஜமானவனாக இருக்கிறான். இப்பேர்ப்பட்ட ஒரு வைசிஷ்யம் வேறு எங்கேயும் இல்லை. ஸ்ரீராமனுடைய கரகமலங்களால் ப்ரதிஷ்டையானது இந்த இடத்தில்தான். வேறு எங்கேயும் கிடையாது.

பகவானிடையே வித்தியாசம் இல்லை. சிவனும் விஷ்ணுவும் ஒன்றுதான். அதில் வித்தியாசம் நாம் பார்க்கக்கூடாது. ஆனால் ஒரு லௌகிகமான த்ருஷ்டியில் இங்கே ஸ்ரீராமசந்திர கர ப்ரதிஷ்டிதனானதில் இந்த இடத்திற்கு ஒரு வைசிஷ்யம். ஆதிசங்கர பகவத்பாதருடைய சிஷ்யர் பத்மபாதர் யாத்திரையாக ராமேச்வரத்திற்கு வந்தார். ராமேச்வரத்திற்கு வந்த சமயத்தில் இங்கே இருக்கிற எல்லோரும் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். “ராமேச்வர சப்தத்திற்கு என்ன அர்த்தம் சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள்.
அப்போது பத்மபாதர் “ராமேச்வர சப்தத்திற்கு சிலர் வந்து ராமனுக்கு ஈஸ்வரர் என்று அர்த்தம் சொல்வார்கள். சிலர் ராமன் யாருக்கு ஈஸ்வரரோ அவன் என்று அர்த்தம் என்று சொல்லுவார்கள். நாங்கள் ராமனும் ஈச்வரனும் ஒன்றுதான் என்று அர்த்தம் என்று சொல்லுவோம். ராமனுக்கு ஈச்வரன் உயர்வு என்று சொல்லக்கூடியவர்கள் ராமனை விட ஈஸ்வரன் உயர்வு என்று சொல்லக்கூடியவர்கள் அதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ராமனுக்கு ஈச்வரன் என்று சொல்லக்கூடியவர்கள், ராமன் ஈச்வரனைவிட உயர்வு என்று சொல்லக்கூடியவர்கள் அதையும் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு ராமனிடமும் ஈச்வரனிடமும் வித்தியாசம் இல்லை. அதே ராமேச்வர சப்தத்தை நாங்கள் சமமாகத்தான் பாவிப்போம்.”

எங்களுக்கு ராமனிடமும் சிவனிடமும் பேதம் இல்லை. சிவகேசவர்களிலும் எங்களுக்கு பேதம் இல்லை. நாங்கள் அத்வைதிகள்”

“சிவாய விஷ்ண ரூபாய
சிவ ரூபாய விஷ்ணவே”
“யதா சிவவே விஷ்ணுஹி
விஷ்ணுவே சிவ:”

என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள் பல இடங்களிலும் அத்வைத பாவத்தை சொல்லக்கூடிய வெவ்வேறு பெயர்கள் இருக்கிறன்றன. ஆனால் இங்கே இந்தப் பெயரிலேயே அத்வைத பாவம் இருக்கிறது. அதனால் இந்த க்ஷேத்திரமும் இந்த ஸ்வாமியும் நமக்கு அத்யந்த பூஜனீயமானது. பகவத் பாத சங்கரர் சதுராம்னாய பீடங்களை ஸ்தாபனம் செய்தார். அதில் தென் திசையில் பீடத்தை சிருங்கேரியில் ஸ்தாபனம் செய்தார்.

அவர் ஒவ்வொரு பீடத்திற்கும் க்ஷேத்திரம், சக்தி, மஹாவாக்யம், ஆசார்யாள், ஸம்ப்ரதாயம் என்று தனித்தனியே சொன்னார். சிருங்கேரிக்கு க்ஷேத்திரம் என்பது ராமேச்வரம் என்று சொல்லிவிட்டார். தக்ஷிணாம்னாய பீடத்தினுடைய க்ஷேத்திரம் ராமேச்வரமானதால் சிருங்கேரி ஆசார்யாள் இங்கு ஸ்வயம்(தானே) பூஜை செய்யக்கூடிய ஒரு உரிமை பகவத்பாதர் காலத்திலிருந்து இருக்ககூடியது. சிருங்கேரி ஆசார்யாள் ஸ்வாமிக்கு ஸ்வயம்பூஜை செய்து ஜனங்களுக்கு அனுக்ரஹம் பண்ணவேண்டும். இங்கே பூஜை செய்யக் கூடியவர்களுக்கு சிவதீக்ஷை, மந்த்ர தீக்ஷை, தீக்ஷாதானம் கொடுத்து அவர்களுக்கு இங்கே பூஜை செய்யக்கூடிய யோக்யதையை சிருங்கேரி ஆசார்யாளிடமிருந்தான் பெறவேண்டும் என்ற ஒரு தீர்மானம் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது.

இன்றைக்கு இங்கு இருக்ககூடிய எல்லோரும் என்னிடம் தீக்ஷை வாங்கியவர்கள்தாம். அப்பேர்ப்பட்ட ஒரு மஹாக்ஷேத்திரமான ராமேச்வரத்திற்கு நான் எங்கள் குருநாதரோடு 1975இல் வந்து இருந்தேன். அதாவது 37வருஷங்களுக்கு முன்னால் இங்கே கும்பாபிஷேகத்திற்காக எங்கள் குருநாதரோடு வந்து இருந்தேன். அதற்குப்பின் 1980இல் மறுபடி நானும் எங்கள் குருநாதரும் வந்தோம். சிவராத்திரி ஆசரணம் பண்ணினோம். 1995இல் இங்கு வந்தேன். உத்தரபாரத யாத்ரையை முடித்துக்கொண்டு வந்தேன். மீண்டும் இங்கு வந்து கும்பாபிஷேக வைபவத்தை நடத்தினோம். இப்போது இந்த தக்ஷிணபாரத யாத்ரை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தில் ராமேஸ்வரம் கட்டாயம் வரவேண்டும், இங்கு வந்து ஸ்வாமிக்கு பூஜை செய்யவேண்டும், உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு வந்தேன். நம் எல்லோருக்கும் முக்கியமாக வேண்டியது பகவத் அனுக்ரஹம். நாம் ஜீவனத்தில் எவ்வளவோ முன்னேற்றத்தை அடைந்தாலும் பகவத் அனுக்ரஹம் என்பது இல்லாவிட்டால் அஃது ஒன்றும் ப்ரயோஜனத்துக்கு வராது. அந்த பகவத் அனுக்ரஹம் வேண்டுமானால் நாம் அத்யந்த ஸ்ரத்தை பக்திகளோடு அந்த பகவானை உபாசனை செய்யவேண்டும். பகவானுக்கு யார் விஷயத்திலும் பாராபட்சம் கிடையாது.

ஸமோஷிஹம் ஸ்வபூதேஷு
மமோத்வேஷயோ ஷிஸ்தி ந ப்ரிய: ||

என்பது பகவத் வாக்யம். எல்லோரையும் சமானமாக அனுக்ரஹிக்கக் கூடிய ஸ்வாபம் பகவானுடையது. நாம் பக்தியோடு பகவானை ஆஸ்ரயிக்கவேண்டும். நாம் பக்தியோடு பகவானை ஆஸ்ரயித்தால் அந்த பகவத் க்ருபை நமக்குக் கிடைக்கும். நம்முடைய கஷ்டங்கள் நீங்கும். நம்முடைய இஷ்டார்த்தங்கள் நிறைவேறும். நமக்கு சகலவிதமான சௌக்யம் உண்டாகும். ஆகையால் அந்த பகவானை அத்யந்த ஸ்ரத்தா பக்திகளோடு ப்ரார்த்திக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமையாகும்.

ராமேஸ்வரத்தில் இருக்கக் கூடியவர்கள் அந்தப் பகவானுடைய ஸாந்நித்தியத்தில் இருக்கக் கூடியவர்கள் உங்களுக்கு தினந்தோறும் அந்த பகவானை ப்ரார்த்திக்கக்கூடிய ஒரு பாக்யம் இருக்கிறது. நீங்கள் தன்யர்கள். ஆனால் இங்கே இருக்கிறவர்கள் எப்போதும் தினம் போய் பகவானை தரிசனம் செய்வார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் செய்யக்கூடிய ஒரு பாக்யம் உங்களுக்கு இருக்கிறது.

நீலகண்டதீக்ஷிதர் ஒரு வார்த்தை சொன்னார் “நித்யம் ப்ரயாகவாசி கோடிஸ்நானம் ஸமாசரதி” என்று சொன்னார். நம் எல்லோருக்கும் திரிவேணி சங்கமத்திற்கு போகவேண்டும் அங்கே திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகக் கூடிய திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்று சொல்லி என்றைக்கு ஜீவிதத்தில் அந்த ஒரு மகா பாக்யம் கிடைக்கும் என்று சிலர் தவித்துக்கொண்டு இருப்போம். எப்போதோ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். போய் அத்யந்த பக்தியோடு எவ்வளவு குளிர் காலமானாலும் கூட காலையில் போய் அங்கே திரிவேணி ஸ்நானம் செய்துவிட்டு வருவோம்.

ஆனால் ப்ரயாகையிலேயே இருக்கிறவன் என்ன செய்வான் என்று கேட்டால் அவன் ஒரு நாளும் திரிவேணி சங்கமத்திற்குப் போக மாட்டானாம். அவன் வெறும் கிணற்றுத் தண்ணீரிலோ, (அன்றைக்கு தீக்ஷிதர் காலத்தில் கிணற்றுத் தண்ணீர்) இன்றைக்கு பைப் தண்ணீரிலோ அதில் ஸ்நானம் செய்வானாம். அங்கேயிருக்கிறவனுக்கு அதனுடைய மகிமை தெரியாது என்கிறார். ஆனால் நீங்கள் எல்லோரும் வாஸ்தவமாக பாக்யவான்கள். இந்த ராமனாத ஸ்வாமியின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கக்கூடியது.

இங்கே இந்த சிருங்கேரி மடம் அத்யந்த ப்ராசீனமானது. ஏனெனில் சிருங்கேரிக்கு க்ஷேத்ரம் ராமேஸ்வரமானதில் இங்கே ப்ராசீனமாக சிருங்கேரி மடம் இருக்கிறது என்பது வாஸ்தவமான விஷயம். இந்த மடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு பாவத்தில் 15வருஷம் முன்னால் ஆரம்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு வந்த சமயத்தில் புதுப்பிக்கக்கூடிய கார்யம் எல்லாம் முடிந்து விட்டதால் அவர்கள் பகவத்பாதருடைய மூர்த்தி புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. பகவத் பாதாள் மூர்த்தி முதலிலிருந்தே இங்கே இருந்தது. புனர் ப்ரதிஷ்டைதான் செய்தோம். அப்பேர்ப்பட்ட இந்த ராமேஸ்வர க்ஷேத்ரத்தில் நல்ல கார்யத்தை செய்யவேண்டும், சிருங்கேரி மடத்திலிருந்து ஒரு பெரிய கார்யம் நடக்கவேண்டும் என்கிற சங்கல்பம் அநேகம் பேருக்கு இருந்தது. சாரதாம்பாளுடைய க்ருபையினால் ஒரு பெரிய கார்யத்தை செய்ய இங்கே சங்கல்பம் செய்தோம். தெற்கு கோபுரத்தை நிர்மாணம் செய்யக்கூடிய கார்யத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒரு சாஸ்வதமான கார்யம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கூட இது சிருங்கேரி மடம் செய்த கார்யம் என்கிற ஒரு விஷயம் எப்போதும் இருக்கும் என்பதற்காக சாரதையின் க்ருபையினால் எங்கள் குருநாதரின் க்ருபையினால் அந்த கார்யத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். பகவானுடைய க்ருபையினால் அந்த கார்யம் நிர்விக்னமாக முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூடிய சீக்கிரம் அந்த கார்யம் முடியும். ஏனெனில் இப்பேர்ப்பட்ட க்ஷேத்ரத்தில் நாம் எந்த ஒரு நல்ல கார்யம் செய்தாலும் கூட அது சாஸ்வதமாக இருக்கும். பகவானுக்கு ப்ரீதிகரமாகும். பக்த ஜனங்களுக்கு ஸந்தோஷகரமாகும். அதனால் அப்பேர்ப்பட்ட கார்யத்தை செய்யவேண்டும். இந்த கார்யம் பக்த ஜனங்களுடைய உதவியினாலும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. பகவானை நான் ப்ரார்த்தனை பண்ணுகிறேன். இது நிர்விக்னமாக நடக்கட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் இந்தச் சமயத்தில் என்னுடைய பரிபூர்ணமான ஆசீர்வாதங்களைத் தெரவிக்கிறேன். சிருங்கேரி ஜகத்குருக்கள் இங்கு வந்தால் எப்படி சம்ப்ரதாயமாக நாம் வரவேற்கவேண்டும் என்று இருக்கிறதோ அந்த சம்ப்ரதாயப்படி நீங்கள் ஸ்வாகதம் (வரவேற்பு) அளித்து பூஜைகள் செய்து என்னுடைய ஆசீர்வாதத்திற்கு பாத்திரமானீர்கள் இந்த சம்ப்ரதாயம் என்றைக்கும் காப்பாற்றப்பட வேண்டும். இந்த விதமான குருபக்தியும், தெய்வபக்தியும் உங்களுக்கு என்றறென்றைக்கும் இருக்கட்டும் என்று சொல்லி உங்கள் எல்லோருக்கும் மற்றொரு தடவை என்னுடைய ஆசீர்வாதங்களைத் தெரிவித்து இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.

- ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

No comments:

Post a Comment