ஆதிசங்கரரும் சிருங்கேரி குரு பரம்பரையும்
ஆதிசங்கரர் ஸநாதன தர்மோத்தாரத்திற்காக அவதாரம் செய்த சாக்ஷாத் பரமேச்வரன். அவர் 32 வருஷங்கள் தான் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார். ஆனால், அவர் செய்த காரியங்கள் மட்டும் அபாரமானவையாகும்.
சங்கரரைப் பற்றி சுருக்கமாக ஒரு ஸ்லோகத்தைச் சொல்வதுண்டு.
“அஷ்டவர்ஷ சதுர் வேதி
த்வாதஸே ஸர்வ ஸாஸ்த்ர வித்
ஷோடஸே க்ருதவான் பாஷ்யம்
ஸ்தவாத்ரிம் ஸே முனி ரப்யதாத்” என்று.
எட்டு வயது வருவதற்குள்ளே ஸகல வேதங்களையும் படித்து முடித்தவர். 12 வருஷங்கள் வருவதற்குள்ளே ஸகல சாஸ்த்ரங்களையும் படித்து முடித்தவர். 16வது வயது வருவதற்குள்ளே எல்லா பாஷ்ய க்ரந்தங்கள் லகு பாஷ்யங்கள், லகு ப்ரகரணங்கள் என அவ்வளவுக்ரந்தங்களையும் ரசனை செய்தார். 32 வயதிற்குள்ளே திக் விஜயத்தையும், தன் அவதார கார்யம் அவ்வளவையும் செய்தார் என்று சொன்னால் அப்பேர்ப்பட்ட ஓர் வ்யக்தி ஜகத்திலேயே மற்றும் இந்த விசாலமான காலத்திலேயே இன்னொருவர் பிறந்தாரா என்று கேட்டால்பிறக்கவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.
அப்பேர்ப்பட்ட மஹாபுருஷ ஸ்ரேஷ்டரான ஆதி சங்கர பகவத் பாதருடைய ஜயந்தியை நாம் கொண்டாடுவதற்கு எல்லோரும் சித்தமாய் இருக்கிறோம். ஆதிசங்கரருடைய ஜயந்தியை நாம் எல்லாரும் மிக பக்தி ஸ்ரத்தைகளோடுகொண்டாட வேண்டும் என்று முதன் முதலில் உலகத்துக்கு உத்தரவிட்டு அதை நடத்தியது ச்ருங்கேரி ஜகத்குரு பீடத்தில் 33வது ஆசார்யராக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ம பாரதீ ஸ்வாமிகள். அவர்யோசனை செய்தார். மனிதனுக்கு நன்றி என்பது ஒன்று வேண்டும். அது இல்லை என்றால் சரியல்ல. மனிதன். ஆதிசங்கரர் நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எவ்வளவு உபகாரம் செய்தார். ஆதிசங்கரர் அவதரிக்க வில்லை என்று சொன்னால் நாம் ஸநாதன தர்மத்திற்குப் பற்றி பேசிக் கொள்ளும் அவகாசம் நமக்கு கிடைத்திருக்கும்? நமக்கு வேதங்களைப் பற்றியோ இருந்ததா? வேதங்களில் சொல்லப்பட்ட அநேக விஷயங்களைப் பற்றியோ பேசிக் கொள்ளும் பாக்யம் ஆதிசங்கரர் அவதரிக்கவில்லை என்று சொன்னால் ஏற்பட்டிருக்குமா? அப்பேர்ப்பட்ட மஹோபகாரம் செய்த ஆதி சங்கரரின் விஷயத்தில் நாம் நன்றியைக் காண்பிக்கவில்லை என்று சொன்னால் இது நியாயமா என்று ரொம்ப நாட்கள் யோசனையிலேயே இருந்தார், அந்த மகான் ஸச்சிதானந்த சிவாபிநவ நருஸிம்ம பாரதீஸ்வாமிகள் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? என்று யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தார். “ஆதிசங்கரர் அவதாரம் செய்த காலடியை பவித்ரமான க்ஷேத்ரமாக பாவித்து அந்த க்ஷேத்ரத்தில் பகவத் பாதாளை ஆராதிக்க வேண்டும்.”
ஆதிசங்கரர் அவதாரம் செய்த இந்த வைசாக சுக்ல பஞ்சமி என்கிறதினம் எப்படி ஸ்ரீராம நவமி, ஸ்ரீக்ருஷ்ணஜன்மாஷ்டமி ந்ருஸிம்ம ஜயந்தி முதலியன நமக்கு மிக பவித்ரமான நாள்களோ அதே போல் இந்த வைசாக சுக்ல பஞ்சமி நமக்கு மிகவும் பவித்ரமான நாளாக இருக்க வேண்டும் அதை நாம் அதே மாதிரி ஆசரிக்க வேண்டும். மேலும் ஆதிசங்கரர் எழுதிய க்ரந்தங்களைப் ப்ரசாரம் செய்ய வேண்டும். ஆதிசங்கரருடைய அவதார ஸ்தலத்தைக் கண்டு பிடித்து அங்கே சங்கரருடைய ப்ரதிஷ்டை, செய்வது அவருடைய ஜன்ம தினத்தை மிக வைபவமாகக் கொண்டாடுவது, அவரது க்ரந்தங்களைப் ப்ரகாஸம் செய்வது. ஆகிய இந்த மூன்று கார்யங்களை நாம் செய்தால் தான் பகவத் பாதாள் விஷயத்தில் ஒரு அளவுக்காவது நம்முடைய நன்றியை தெரிவிக்க முடியும், இல்லை என்று சொன்னால் நமக்கு கொஞ்சமும் நன்றி இல்லை என்று அர்த்தம் என்று நினைத்து இந்த மூன்று கார்யங்களையும் மகா அற்புதமாக செய்து முடித்தார் அந்த மஹான்.
ஆதிசங்கரருடைய முதல் மூர்த்திப் ப்ரதிஷ்டையை அந்த சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ம ஸ்வாமிகள்தான் செய்தார். அதற்குப் பிறகு அநேக இடங்களில் நாம் சங்கரருடைய மூர்த்தியைப் பார்க்கிறோம். ஆதி சங்கரர் தேவாலயங்களைப் பார்க்கிறோம். ஆனால் அந்த கார்யத்தை முதன் முதலில் ஆரம்பித்த கீர்த்தி ச்ருங்கேரி ஜகத்குரு நாதர் ஸ்ரீஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ம பாரதீ ஸ்வாமிகளையே சாரும்.
நம்தேசத்தில் பெரிய வித்வான்கள் பெரிய அதிகாரத்தில் இருந்த பெரியோர்கள் எல்லோரும் ஆதி சங்கரருடைய மகத்துவத்தைப் பற்றி தெரிந்து கொண்டு அவருரை பற்றி மிக விசேஷமாக எழுதி இருக்கிறார்கள். ஆகையால்தான் ஆதிசங்கரருடைய ஜயந்தியை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக பாரதத்தை பரிபலானம் செய்பவர்களின் மனத்தில் சங்கல்பம் உதித்தது. நாம் ரொம்பவும்எல்லோரும் ஸந்தோஷப்பட வேண்டிய விஷயம். ஆதி சங்கரர் அவதாரம் செய்து 1200 வருஷங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருஷங்கள் ஆனாலும் ஆதிசங்கரரைப் பற்றி நம்முடைய பக்தி ஸ்ரத்தைகளுக்குக் கொஞ்சமும் கூட குறைவு இல்லை.
அவருக்குப் பிறகு எத்தனையோ பேர் பிறந்தார்கள். எத்தனையோ நூல்கள் எழுதி இருக்கிறார்கள். எவ்வளவோ கார்யங்களைச் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு சமானமான ஸ்தானம் மற்றொரு வ்யக்திக்கு கிடைக்கவில்லை என்று நாம் நிதர்கனமாகப் பார்க்கிறோம். அப்பேர்ப்பட்ட ஆதிசங்கர பகவத் பாதருடைய ஜயந்தி மஹோத்ஸவத்தை ச்ருங்கேரி சாரதா பீடத்தில் சம்ப்ரதாய சித்தமாக ப்ரதி வருஷமும் நடத்துவது எல்லோருக்கும் தெரியும். இந்த சென்னை நகரத்தில் எங்க குருநாதர் அநேக உத்ஸவங்களை நடத்தி இருக்கிறார். அதாவது சாதுர் மாஸ்யம் இங்கு நடந்தது. தேவீ நவராத்ரி மஹோத்ஸவம் இங்கு நடந்தது. எங்க குருநாதருடைய வர்தந்தி மஹோத்ஸவம் நடந்தது. மகா சிவராத்ரி மஹோத்ஸவம் நடந்தது. இந்த எல்லா உத்ஸவங்களும் நடந்து விட்டது. ஆனால் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை இங்கே நடத்தக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த நகரத்தில் ச்ருங்கேரி ஆசார்யாள் சங்கர ஜயந்தி உத்ஸவத்தையும் நடத்த வேண்டும் என்பது ஈஸ்வர சங்கல்பம் இருக்கிறதனால் இந்த சமயத்தில் நான் இங்கே வரும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. எங்க குருநாதருடைய உத்தரவின் பேரில் புறப்பட்டேன். எங்க குருநாதருடன் இங்கு வந்து நான் 2 மாத காலங்கள் இருந்தேன். நான் ச்ருங்கேரியில் புறப்படும் போது எங்க குருநாதரிடம் கேட்டுக் கொண்டேன் மதருஸில் இருந்து இரண்டு பேரும் திரும்ப ச்ருங்கேரிக்குத் தான் வருவோம் இல்லையா?” என்று ஆசார்யாள் சொன்னார், உங்களுக்கும் என் வயது வந்திருந்தால் உங்களது வார்த்தைக்கு நான் மதிப்பு கொடுத்திருப்பேன். “உங்களுக்கு என் வயதில் பாதிகூட இல்லை. நீங்கள் யாத்ரை செல்வதை விட்டுவிட்டு நானும் உங்களோடு ச்ருங்கேரிக்கு வருகிறேன் என்று சொல்வது நியாயமில்லை” என்றார். எனக்கு எங்க குருநாதருடைய வார்த்தை என்று சொன்னால் அது வேதவாக்யம். அவர் என்ன உத்தரவு சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும் அது தான் எங்களுக்குத் தெரியும். ச்ருங்கேரி சாரதா பீடத்தில் அந்த ஸம்ப்ரதாயம் அவிச்சின்னமாக வந்து இருக்கிறது. எங்க குருநாதர் சொல்லுவார், “எங்களுக்கு எங்க ஆசார்யாள் என்ன சொல்லித் தந்தாரோ, அதைத்தான் நான் செய்வேன் அப்பா! எங்க ஆசார்யாள் சொல்லாததை ஒன்றும் நான் செய்ய மாட்டேன், எங்க ஆசார்யாள் சொன்னதை ஒன்றும் செய்யாமல் இருக்க மாட்டேன்.” எனக்கும் அதே பழக்கம். எங்க ஆசார்யாள் “ஸ்வாமிகளே நீங்கள் தக்ஷிணதேச யாத்திரையை செய்ய வேண்டும் சிஷ்யர்கள் ரொம்பவும் ஆவலோடு இருக்கிறார்கள். எனக்கு மிக வயதாகி விட்டது. எனக்கு யாத்ரை செய்யும் சக்தி இல்லை. நான் ச்ருங்கேரியிலேயே இருந்து சாரதா சேவையை செய்து உங்களை ஆசீர்வாதம் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் யாத்ரை செய்யுங்கள்,” என்றுகட்டளை இட்டார். எங்க குருநாதருடைய ஆசீர்வாதப் ப்ரபாவத்தினாலும் சாரதையின் அனுக்ரஹப் ப்ரபாவத்தினாலும், யாத்ரை மிக சிறப்பாக நடந்தது. யாத்ரையில் எவ்வளவு விக்னங்கள் வந்தாலும் எல்லாவிக்னங்களையும் மீறி யாத்ரை மிக சிறப்பாக நடந்தது நாம் சில கார்யங்களை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு செய்தால் அதற்கு பல விக்னங்கள் வரும் என்பது இன்றைக்கு நாம் பார்க்க கூடிய விஷயம் அல்ல. என்றைக்கிருந்தோ இந்த மாதிரி ஸந்நிவேசங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
பரமேச்வரம் அவதாரமான ஆதிசங்கரர் ஸநாதன தர்ம ப்ரசாரம் செய்ய வேண்டும் அத்வைத தத்வ ப்ரசாரம் செய்ய வேண்டும் என்று இருந்தபோதிலே அவருக்கே விக்னங்கள் செய்ய வேண்டும் என்று எத்தனையோ காபாலிகள் முதலானவர்கள் ப்ரயத்னம் செய்தார்கள். ஆனால் அவர்களுடைய ப்ரயத்னம் ஒன்றும் பலிக்கவில்லை. சங்கரருடைய கார்யம் நிர்விக்னமாக முடிந்தது என்று நாம் சங்கர விஜயாதி க்ரந்ங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம். ஆகையால் நாம் ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று சங்கல்பித்த பொழுது அதற்கு நடுவில் விக்னங்கள் வந்தால் அந்த விக்னங்களுக்காக பயந்து நாம் அந்த ஸத்காரியங்களை நிறுத்தினால் அது சரியாகாது.
சாஸ்த்ரத்தில் ஒரு விஷயம் சொல்லி இருக்கிறது -
“விக்னை: புன:புன: ப்ரதிஹன்யமானா: ப்ராரப்தம் உத்தம குணாநபரித்யஐந்தி”
என்று, உத்தமமான குணம் உள்ளவர்கள். எவ்வளவு விக்னங்கள் வந்தாலும் தான் ஆரம்பித்த ஸத்கார்ய விஷயத்தைக் கைவிட மாட்டார்கள். முடிப்பார்கள் என்று கூறுகிறது.
நமக்கு எங்க குருநாதருடைய க்ருபா கடாக்ஷம், சாரதையின் க்ருபா கடாக்ஷம் இருக்கிறதினால் எல்லா விக்னங்களையும் கடந்து நம்முடைய சங்கல்பத்தை அனுசரித்து யாத்ரை செய்யக்கூடிய ஒரு சுபயோகம் ஏற்பட்டது. இதற்காக நான் எங்க குருநாதரையும் எங்க ஆராத்ய தேவியான சாரதா பரமேஸ்வரியையும் நான் புன: புன: (மறுபடியும் மறுபடியும்) ப்ரார்த்திக்கிறேன்.
இந்த யாத்ரையில் அநேகமான ஸத் கார்யங்கள் நடந்தன. அநேக இடங்களில் தர்மகார்யங்கள் அநேக விதமான யாகங்கள் முதலானவை நடந்தன. இவ்வளவும் நம்முடைய தேசத்தில் ஆஸ்திக்யத்துக்கு ஒன்றும் குறைவு இல்லை என்பதற்கு (சான்று) எங்களது குருநாதர் அநேக சமயங்களில் சொல்வது உண்டு அதாவது இந்த காலத்துலே ஜனங்களுக்கு தர்மத்தில் ஸ்ரத்தை இல்லை தர்மத்தில் ஸ்ரத்தை இல்லை என்று அநேகம் பேர் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஜவாப் ஆக குருநாதர் சொன்னது ஜனங்களுக்கு தர்மத்துலே ஸ்ரத்தை இல்லை என்று சொல்லாதீர்கள் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவர்களுக்கு இருக்கக் கூடிய தர்மஸ்ரத்தைகளைக் காண்பிக்கக்கூடிய ஸந்நிவேசங்கள் கிடைக்கிறது இல்லை என்று சொல்லுங்கள் அந்த ஸந்நிவேசம் கிடைத்தால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய தர்மஸ்ரத்தை அவச்யம் வெளியில் வரும். இதை எங்கள் அனுபவத்தில் நாங்கள் பார்த்தோம் என்று எங்க குருநாதர் அநேக ஸந்தர்ப்பங்களில் சொன்னார்கள். இதை நானும் என் யாத்ரையில் ஒவ்வொரு இடத்திலும் பார்த்தேன். எத்தனையோ இடங்களில் ஈஸ்வர விஸ்வாசமே இல்லாத ஜனங்கள் கூட குரு என்று சொன்னவுடன் நம் ஸந்நிதிக்கு வந்து தங்களுடைய ஸம்சயங்களை பரிகாரம் செய்து கொண்டு ஆஸ்திகர்களாக ஆன ஸந்நிவேசங்களும் இருக்கின்றன. இது இவ்வளவும் சாரதையின், குருவின் கடாக்ஷப் ப்ரபாவம்.
நான் என் யாத்ரையை முடித்துக் கொண்டு திரும்ப சென்னைக்கு வருவேன் என்று ஆரம்பத்தில் நினைக்க வில்லை. நான் கோயம்புத்தூரிலிருந்து திரும்ப அந்த பஸ்சிம தீரத்துவழியே திரும்ப ச்ருங்கேரிக்கு சென்று விடுவேன் என்று நினைத்தேன்.
திரும்ப பூர்வ சமுத்ர தீரத்திற்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் ஈஸ்வர சங்கல்பத்துக்கு முன்னால் நாம் யாரும் ஒன்றும் வித்யாஸமாக நடத்த முடியாது. சென்னைக்கு வந்தே இந்த தக்ஷிண யாத்ரையை சமாப்தி செய்யவேண்டும் என்று ஈஸ்வர சங்கல்பம் இருக்கு போல் இருக்கிறது. திரும்பவும் ஈஸ்வரன் என்னை சென்னைக்கு கொண்டு விட்டு இருக்கிறான். எங்களது சிஷ்யர் விஸ்வநாத ஐயர் (சுந்தரமையர் குமாரர்) திருச்சிராப்பள்ளிக்கு வந்து ஸந்நிதானம் திரும்பவும் சென்னைக்கு வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். விஷயம் என்ன என்று கேட்டேன். றி.ஷி. பிவீரீலீ ஷிநீலீஷீஷீறீல் இருக்கும் மாணவர்களும் அத்யாபகர்களும், நிர்வாகிகளும் ஸந்நிதானம் அங்கே வந்து அவர்கள் எல்லாருக்கும் பரிபூர்ணமான ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதே சமயத்தில் சங்கர ஜயந்தி மஹோத்ஸவமும் வருகிறது. இந்த சமயத்தில் ஸந்நிதானம் வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று எங்கள் அனைவருக்கும் அபிப்ராயம். ஸந்நிதானத்தின் வருகையை ரொம்பவும் எல்லாரும் எதிர்பார்க்கிறோம் என்று சொன்னார். நான் சொன்னேன், “உங்கள் இத்தனை பேருக்கு இப்படி ஒரு அபிப்ராயம் இருந்தால் அதற்கு வித்யாஸமாக செய்ய வேண்டும் என்று என் மனத்தில் இல்லை. நான் இந்த விஷயத்தை எங்க குருநாதருக்கே தெரியப் படுத்தி அவருடைய உத்தரவை வாங்கி இதை நடத்துவேன்” என்று சொன்னேன். உடனே எங்க குருநாதருக்குத் தெரியப் படுத்தினேன். எங்க குருநாதர் கருணா மூர்த்தி அல்லவா? அவர் நாம், என்ன சொன்னாலும் அதற்கு 'ததாஸ்து' என்று சொல்லுவார். அது மட்டும் இல்லை யாராவது சொல்லி இப்படி உங்க சிஷ்யர் சொல்லி இருக்கிறார், தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று சொன்னால் என் சிஷ்யன் சொன்ன பிற்பாடு எனக்கு இன்னொரு அபிப்ராயத்தை சொல்லக்கூடிய ஸந்தர்ப்பமே இல்லையப்பா! எனக்கும் என் சிஷ்யனுக்கும் ஒரே அபிப்ராயம். நான் இங்கே என்ன சொல்லுவேனோ அதைத்தான் என் சிஷ்யன் சொல்வார். அவர் அங்கே என்ன சொல்வாரோ பௌதீகமாக ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருந்தாலும் எங்க இரண்டு பேருடைய மனது மட்டும் (ஒரே மாதிரியாக) இருக்கும் என்று எங்க குருநாதர் சொல்லுவார். நானும் அதே விஷயத்தை தான் எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பேன். ஆகையினால் குருநாதருடைய உத்தரவுகிடைத்தது. மதராஸுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் செய்தேன். ஆனால் எனக்கு இப்போது என் குருநாதரைப் பார்த்து 16 மாதங்கள் ஆகிவிட்டன. இனி அதிக நாட்கள் இங்கு இருக்கும் அபிப்ராயம் இல்லை. எனக்கு எங்க ஆசார்யாளை தர்சனம் செய்யவேண்டும் என்கிற ஆவல் நாளுக்கு நாளாக வ்ருத்தியாகிக கொண்டு இருக்கிறது. ஆகையால் 7ந்தேதிக்கு மேல் நான் மதராஸில் இருக்கப்போவதில்லை. இந்த விஷயத்தில் யாருக்கும் ஸந்தேகம் வேண்டாம். மதராஸில் சங்கர ஜயந்தி மஹோத்ஸ்வத்தை நடத்தவேண்டும் என்று தீர்மானம் செய்தோம். முதன்முதலில் மதராஸில் ச்ருங்கேரி மடத்தின் கிளை ஜார்ஜ் டவுனில் இருக்கக்கூடிய ச்ருங்கேரி மடம். அதற்குப் பிறகு மதராஸிலே நான்கு இடங்களில் நான்கு மடங்கள்
ஏற்பட்டன. பகவத் பாதர் சதுராம்னாய சதுர்திக் ப்ரதிஷ்டாதா அல்லவா? ராஜா அண்ணாமலை புரத்தில் ஒரு மடம், தியாகராய நகரில் ஒரு மடம், க்ருபாசங்கரி தெருவில் ஒரு மடம், கோடம்பாக்கத்தில் ஒரு மடம், இப்படி நான்கு மடங்கள் ஏற்பட்டன. திரும்ப ஒரு ப்ரச்னை வந்தது. சங்கர ஜயந்திக்கு எங்கே இருக்கப் போகிறீர்கள் என்று எனக்கு தர்ம சங்கடம் இந்த நான்கும் எங்களுடைய மடங்கள் தான் இதிலே வித்யாஸம் இல்லை. இந்த நான்கில் பகவத் பாத சங்கரரின் ப்ரதிஷ்டை எங்க இருக்கிறது என்று கேட்டேன். பகவத்பாத சங்கரருடைய மூர்த்தி ப்ரதிஷ்டை இங்கே அண்ணாமலை புரத்தில் இருக்கும் மடத்தில்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். பகவத் பாதாளின் ஜயந்தி மஹோத்ஸவத்தைக் கொண்டாடுகிறோம். அவருடைய மூர்த்தி ப்ரதிஷ்டை எங்கே இருக்கிறதோ அங்கே கொண்டாடுவது ரொம்ப விசேஷம். ஆகையினால் இங்கு கொண்டாடுவேன் என்று சொன்னேன். சிலர் அபிப்ராயப்பட்டார்கள் அது வைத்ய சுப்ர மண்யருடைய மடம் என்று சொல்லி அது வைத்ய சுப்ரமண்ய அய்யருடைய மடம் இல்லை. அது ச்ருங்கேரி மடம்தான். ஆகையினாலே நாம் சங்கர ஜயந்தியை அங்கு நடத்துவதில் எந்தவிதமான சங்கோஜமும் இல்லை. எந்த விதமான சம்சயத்துக்கும ஆஸ்பதம் இல்லை. இந்த இடத்துலே சம்பூர்ண ஸ்வாதந்திரியம் ச்ருங்கேரி குருநாதருக்குத் தான் வேறு யாருக்கும் இல்லை. வைத்ய சுப்ரமண்ய அய்யர் என்னிடமே சொல்லி இருக்கிறார் நாங்கள் நீங்கள் வைத்த ஆட்கள். இதை ஸ்வாமிகள் எங்களை நிர்வாகம் பார்த்து கொள்ளுங்கள் என்றால் பார்த்து கொள்வோம் இல்லாவிட்டால் இல்லை என்று சொன்னார். (என்னிடமே)
ஆகையினாலே இந்த இடத்தில் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை நடத்துவதில் யாருக்கும் எந்த விதமான தயக்கமும் வேண்டாம். பரிபூர்ணமான பாவத்தோடு நாம் இங்கே சங்கர ஜயந்தி உத்ஸவத்தை நடத்த வேண்டும். ப்ரமுக மாகயார் இங்கே இருப்பார்கள் என்று சொன்னால் எல்லோரும் ப்ரமுகர்கள்தான். யாரும் எதற்கும் குறைச்சல் இல்லை. எங்க குருநாதர் முதன்முதலில் 1960ஆம் வருஷத்தில் சென்னைக்கு வந்தபோது ஆசார்யாளின் பாதுகைக்கு முதன்முதலில் பூஜை செய்யும் பாக்யம் காலம் சென்ற அனந்தராம க்ருஷ்ண அய்யருக்கு கிடைத்தது. நான் இப்போது முதலில் மதராஸுக்கு தனியாக வந்து கொண்டு இருக்கிறேன். இது முடிய எங்க குருநாதருடன் தான் வந்தேன். தனியாக முதன்முதலில் மதராஸுக்கு வரக்கூடிய ஸந்நிவேசம் இது. இப்போது அந்த பாரம்பர்யத்தை அனுசரித்து தான் நடக்குமோ என்று யோசனை பண்ணினேன். அதே மாதிரி நடந்தது. அன்றைக்கு எங்க குருநாதர் வந்த சமயத்தில் தூளி பாதபூஜை செய்யும் பாக்யம் அனந்தராமக்ருஷ்ண அய்யருக்கு கிடைத்தது. அதேபோல் அவருடைய ஜ்யேஷ்டகுமாரர் அதேபோல் தர்ம சிந்தனையும் ச்ருங்கேரி மடத்தில் அபாரமான ஸ்ரத்தா பக்திகளும் இருக்கும் சிவ சைலம் ஐயருக்கு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அவர் இதேபோல் ச்ருங்கேரி சாரதா சேவையை விசேஷமாக செய்யட்டும் அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ச்ருங்கேரி சாரதையின் எங்க குருநாதரின் எங்க குரு பரம்பரையின் கடாக்ஷம் என்றைக்கும் இருக்கட்டும் இனி இங்கு நடக்கக்கூடிய கார்யங்களில் நீங்கள் எல்லோரும் அத்யந்தஸ்ரத்தா பக்திகளோடு வந்து பங்கு கொள்வதற்கு தயாராக இருக்கும் பொழுது அந்த விஷயத்தை புதிதாக சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. இந்த கார்யம் எந்த ஒருவனுக்குச் சேர்ந்த கார்யம் அல்ல. இது பொது. எல்லோருக்கும் சேர்ந்த கார்யம் ஆகையால் இந்த கார்யத்தில் நீங்கள் எல்லோரும் வந்து பங்கு கொள்ள வேண்டியது. எல்லோருக்கும் ஆசீர்வாதத்தை தெரிவித்து இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.
* சங்கர ஜயந்தியை நாம் ஆண்டு தோறும் பகவான் க்ருஷ்ணனுடைய ஜன்மாஷ்டமியையும் ஸ்ரீராமநவமியையும், ந்ருஸிம்ம ஜயந்தியையும் மற்றும் நடத்தும் விசேஷவழிபாடுகள் போல் கொண்டாடவேண்டும். சங்கரர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் சாஸ்த்ரத்திலும் உபநிஷத்துகளிலும் வேதங்களிலும் சொல்லப்பட்டவை நாம் அவரது உபதேசங்களைப் பின்பற்றி வாழ்க்கையை ஸார்த்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
தொகுப்பு: சாரதாரமணன்
No comments:
Post a Comment