ஞான யோக ஸாதனைகள்
பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓங்காரநந்தர்
மனிதனின் தனிச்சிறப்பு அறிவும் ஒழுக்கமுமே ஆகும். மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. பிறவிச் சூழலிலிருந்து விடுபட முயற்சி செய்வதும், அதில் வெற்றிபெறுவதும் மனிதப் பிறவியில் மட்டுமே ஸாத்தியமாகிறது.
மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழ வழிகாட்டுவதற்கென்றே வேதம் என்ற அறிவுச்செல்வம் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வேதங்களின் முற்பகுதி, அறத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறது. அதற்கு வேதபூர்வம் அல்லது கர்மகாண்டம் என்று பெயர். வேதங்களின் இறுதிப்பகுதி மெய்ப்பொருள் தத்துவத்தை உபதேசிக்கிறது. அதற்கு வேதாந்தம் அல்லது ஞான காண்டம் என்று பெயர்.
மோக்ஷத்திற்கு ஸாதனம் ஞானம்
வாழும் காலத்திலேயே மனிதன் தன்னுடைய துன்பங்களிலிருந்து அடியோடு விடுபட்டு, யாண்டும் பேரின்பத்தில் நிலைத்திருத்தலே மோக்ஷம் ஆகும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து ப்ரச்னைகளுக்கும் காரணம், நம்மைப்பற்றிய, இறைவனைப் பற்றிய, உலகைப் பற்றிய அறியாமை என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. அறியாமையை நீக்கிக்கொள்ள அறிவொன்றே சாதனமாக இருக்கிறது.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள் : 355)
மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள் : 355)
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும், (அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
ஆன்மிக வாழ்க்கையில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஞானம். சிலர் ஞானம் வேறு, அறிவு வேறு என்று நினைக்கின்றனர். ஞானம் என்பது வடமொழிச்சொல், அறிவு என்பது தமிழ்ச்சொல். அவ்வளவே.
ஒரு விளம்பரப் படத்தில், பூனையும், நாயும் அருகருகில் இருக்கின்றன. நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது; பூனை அருகில் சிரித்துக் கொண்டிருக்கிறது. இது எப்படி ஸாத்தியம்? நாயைக் கண்டவுடன் பூனை ஓட்டம் பிடிப்பதுதானே வழக்கம்? ஆனால் படத்தை உற்றுக் கவனித்துப் பார்த்தால், நாய் கயிற்றினால் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. நாயால் குரைக்கத்தான் முடியுமே தவிர, தன்னை நெருங்கிக் கடிக்க முடியாது என்ற அறிவு பூனைக்கு இருக்கிறது. அதனால் அது கவலையற்றிருக்கிறது. நமக்கும் நம்முடைய உண்மையான இயல்பைப் பற்றிய அறிவு தெளிவாக இருந்தால், துன்பங்களால் நம்மைத் தாக்க முடியாது.
முழுமையான பேரமைதியை மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேதாந்த நூல்களை முறையாகக் கற்று மெய்யறிவைப் பெறுவதொன்றே ஸாதனம் என்று சாஸ்த்ர நூல்கள் உறுதியாகக் கூறுகின்றன.
ஞாநம் லப்த்வா பராம்சாந்திம் அசிரேணாதிகச்சதி ! (ஸ்ரீமத்பகவத்கீதை 4-39)
மெய்யறிவை அடைந்தவன் அதிவிரைவில் பேரமைதியில் நிலைத்திருக்கிறான்.
ஞானத்திற்கு ஸாதனம் சாஸ்த்ர விசாரம்
இராமாயணத்தைப் படிப்பதால் இராமரைப் பற்றி அறிகிறோம். பாகவதத்தைப் படிப்பதால் க்ருஷ்ணரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். வேதாந்த சாஸ்த்ரம் நம் உண்மையான இயல்பைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. தன்னைப் பற்றிய அறிவே ஆத்ம ஞானம் எனப்படுகிறது.
ஹோமம் செய்வதால் ஆத்ம ஞானத்தைப் பெற்று வி முடியாது. இறைவனுடைய திருநாமங்களை ஜபம் செய்வதால் ஒருவர் ஆத்ம ஞானத்தைப் பெற முடியாது. தனியே அமர்ந்து த்யானம் செய்வதால் ஆத்ம ஞானத்தைப் பெற முடியாது. இவையனைத்தும் மனத்தைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்திக் கொள்ள உதவும் ஸாதனங்கள். இவை ஞானத்திற்குரிய தகுதிகளைப் பெறுவதற்கு உதவுகின்றன. பக்குவப்பட்ட மனத்திற்கே ஆத்ம ஞானம் விளங்கும், பயனைக் கொடுக்கும்.
மெய்யறிவைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் முறையான ஸாதனைகளுக்கு ஞான யோகம் என்று பெயர்.
ஞானயோகத்திற்குரிய தகுதிகள்
ஞானயோகத்திற்குத் தகுதி கர்மயோகம் ஆகும். கடமைகளில் விருப்பு வெறுப்பின்றி, கடமைகளின் பலன்களில் விருப்பு வெறுப்பின்றி, கடமைகளைக் கடவுள் கட்டுப்பாட்டுணர்வுடன் இயற்றுவதே கர்ம யோகம் ஆகும்.
மேலும், ஞானத்தைப் பெறுவதற்குரிய தகுதிகளாக, சாஸ்த்ரங்கள் நான்கு ஸாதனைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
* எது நிலையற்றது, எது நிலையானது என்பது பற்றிய பகுத்தறிவு (விவேகம்)
* நிலையற்ற பொருள்களில் பற்றின்மை (வைராக்யம்)
* (அ) மனவடக்கம் (சம:)
* நிலையற்ற பொருள்களில் பற்றின்மை (வைராக்யம்)
* (அ) மனவடக்கம் (சம:)
(ஆ) புலனடக்கம் (தம:)
(இ) ஞானயோகத்திற்குத் தகுதிபெறும் பொருட்டு உலகியல் ரீதியான பொறுப்புகளைக் குறைத்துக்கொள்ளுதல் (உபரதி:)
(ஈ) வாழ்க்கையின் இருமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல் (திதிக்ஷா)
(உ) சாஸ்த்ர வாக்கியங்களிலும், குருநாதரிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுதல் (ச்ரத்தா)
(ஊ) மன ஒருமுகப்பாடு (ஸமாதாநம்)
* நிலையான மெய்ப்பொருளை அறிந்து, வாழ்வின் துன்பங்களிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமென்ற பேராவல் (முமுக்ஷுத்வம்)
* நிலையான மெய்ப்பொருளை அறிந்து, வாழ்வின் துன்பங்களிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமென்ற பேராவல் (முமுக்ஷுத்வம்)
உலகியல் பலன்களை விரும்பாமல், உண்மையை உணர வேண்டும் என்ற பேராவலுடன் இறைவனை வழிபடுபவர்களுக்கு இறைவன் ஞான யோகத்தை வழங்கி அருள்புரிகிறார்.
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்|
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே|| (ஸ்ரீமத்பகவத்கீதை 10:10)
உறுதியான உள்ளத்துடன் என்னிடம் பேரன்பு செலுத்துபவர்களுக்கு, எதன் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ அந்த புத்தியோகத்தை (ஞானயோகத்தை) வழங்குகிறேன் என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்.
மூர்த்திதலம் தீர்த்தம் முறையாகத் தொடங்கினார்க்கு
வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
ஞான யோக ஸாதனைகள்
ஆத்ம ஞானத்திற்குரிய ஸாதனைகளை சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றன.
ஆத்மஞானத்தைப் பெறுவதற்குரிய ஸாதனைகள் மூன்று, அவை ச்ரவணம் (கேட்டல்), மனனம் (சிந்தித்தல்), நிதித்யாஸனம் (தெளிதல்). பின்வரும் ப்ருஹதாரண்யக உபநிஷத் மந்த்ரமே, அதற்கு ப்ரமாணமாக விளங்குகிறது.
ஆத்மா வா அரே த்ருஷ்டவ்ய: ச்ரோதவ்யா மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:| (மைத்ரேயீ ப்ராஹ்மணம் 2.4.5) ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, சிந்தித்து, தெளிந்து அபரோக்ஷமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேட்டலுடன் சிந்தித்தல் கேடுஇலா மெய்த்தெளிவால்
வாட்டமுறும் உத்பவ நோய்
என்பது தாயுமானவர் வாக்கு.
வாட்டமுறும் உத்பவ நோய்
என்பது தாயுமானவர் வாக்கு.
1. ச்ரவணம் - கேட்டல்
ச்ரவணம் என்றால் கேட்டல். தகுந்த குருநாதரின் திருவடி நிழலில் அமர்ந்து, வேதாந்த சாஸ்த்ர நூல்களை முறையாக, நீண்ட காலம் தொடர்ந்து கேட்டல் ச்ரவணம். தன்னைச் சரணடைந்த தகுதிவாய்ந்த சீடருக்கு, சாஸ்த்ரங்களின் துணைகொண்டு, குருநாதர், “நீ உடல் அல்ல, மனம் அல்ல, புத்தி அல்ல” என்றும், “நீ அதுவாக (மெய்ப்பொருளாக) இருக்கிறாய்” (தத் த்வம் அஸி|) என்று உபதேசிக்கிறார். “நான் மெய்ப்பொருளாக இருக்கிறேன்” (அஹம் ப்ரஹ்ம அஸ்மி|) என்று சீடனும் அறிந்துகொள்கிறான்.
ச்ரவணம் என்றால் கேட்டல். தகுந்த குருநாதரின் திருவடி நிழலில் அமர்ந்து, வேதாந்த சாஸ்த்ர நூல்களை முறையாக, நீண்ட காலம் தொடர்ந்து கேட்டல் ச்ரவணம். தன்னைச் சரணடைந்த தகுதிவாய்ந்த சீடருக்கு, சாஸ்த்ரங்களின் துணைகொண்டு, குருநாதர், “நீ உடல் அல்ல, மனம் அல்ல, புத்தி அல்ல” என்றும், “நீ அதுவாக (மெய்ப்பொருளாக) இருக்கிறாய்” (தத் த்வம் அஸி|) என்று உபதேசிக்கிறார். “நான் மெய்ப்பொருளாக இருக்கிறேன்” (அஹம் ப்ரஹ்ம அஸ்மி|) என்று சீடனும் அறிந்துகொள்கிறான்.
வேதாந்த தாத்பர்ய நிச்சய: ச்ரவணம்|
வேதாந்தத்தின் உட்பொருளை அறிந்துகொள்வது ச்ரவணம் எனப்படும்.
வேதாந்தத்தின் உட்பொருளை அறிந்துகொள்வது ச்ரவணம் எனப்படும்.
சீடன், ச்ரவணத்தின் மூலம் வேதாந்தத்தின் உட்பொருளை அறிந்துகொள்கிறான். உண்மையில் மெய்ப்பொருள் ஒன்றே இருக்கிறது என்றும், தானே அந்த மெய்ப்பொருள் என்றும் அறிந்துகொள்கிறான்.
உபக்ரமாதி ஷட்லிங்க ஸஹித தாத்பர்ய நிச்சய: ச்ரவணம்|
ஒரு வேதாந்த சாஸ்த்ர நூல் ஆரம்பத்தில் என்ன சொல்கிறது, முடிவில் என்ன சொல்கிறது, நடுவில் எந்த விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது, எந்தக் கருத்தை வேறு எதனாலும் தெரிந்துகொள்ள முடியாது முதலியவற்றை குருமுகமாகக் கேட்டு நன்கு அறிந்து கொள்வது ச்ரவணம் எனப்படுகிறது.
2. மனனம் - சிந்தித்தல்
மனனம் என்றால் சிந்தித்தல். குருநாதரிடம் கேட்ட சாஸ்த்ரக் கருத்துகளைக் கேட்ட பிறகும், உள்ளத்தில் பல சந்தேகங்கள் எழும். சந்தேகத்துடன் கூடிய ஞானம் பயன் தராது.
மனனம் என்றால் சிந்தித்தல். குருநாதரிடம் கேட்ட சாஸ்த்ரக் கருத்துகளைக் கேட்ட பிறகும், உள்ளத்தில் பல சந்தேகங்கள் எழும். சந்தேகத்துடன் கூடிய ஞானம் பயன் தராது.
யுக்தித: சிந்தநம் மநநம்|
குருநாதர் மனனத்தின்போது பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
நகை, தங்கம் என்று இரண்டு சொற்களைக் கூறினாலும், தங்கத்திற்கு வேறாக நகை இல்லை. அதுபோல், பரம்பொருளுக்கு அந்நியமாக உலகம் இல்லை.
அலை என்ற சொல்லும், கடல் என்ற சொல்லும் தண்ணீரின் மீது கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல, உயிர் என்ற சொல்லும், உலகம் என்ற சொல்லும் அழியாத பரம்பொருளின்மீது கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
யுக்திபூர்வக ஸம்சய நிவ்ருத்தி: மநநம்|
குருநாதர் கூறும் உதாரணங்களைக் கொண்டு, தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுதல் மனனம்.
3. நிதித்யாஸநம் - தெளிதல்
பரம்பொருள் தத்துவத்தை சந்தேகம் இன்றித் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகும், நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கும். நம்மை உடலாகவும், மனமாகவும் கருதும் நீண்டகாலப் பழக்கத்தால், இந்த ஞானம் அவ்வப்பொழுது மறந்துபோய்விடும். ஞானம் பெற்ற பிறகும், தன்னை உடலாகவும், மனமாகவும் கருதும் தவறான எண்ணத்திற்கு விபரீத பாவனை என்று பெயர்.
ப்ரஹ்மாப்யாஸ: நிதித்யாஸநம்|
குருநாதரிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துகளை ஆழ்ந்து த்யானம் செய்வதன் மூலம், அவை ஆழ்மனத்திற்குச் செல்கின்றன. விபரீத பாவனை நீங்குகிறது. அறிவு வலிமை மன வலிமையாக மாறுகிறது.
ஞானம் பெற்ற பிறகு செய்யப்படும் த்யானம் குறித்து பகவத்கீதையின் ஆறாம் அத்யாயத்திலும் (யோகீ யுஞ்ஜீத ஸததம்| 6-10), பதினெட்டாம் அத்யாயத்திலும் (த்யாநயோக பரோ நித்யம்| 18-52) பல கருத்துகளை பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியிருக்கிறார்.
த்யானம் செய்வதால் புதிதாக ஞானம் எதுவும் ஏற்படாது. ச்ரவணத்தின் மூலம் கிடைக்காத ஞானம், மனனத்தாலோ நிதித்யாஸனத்தாலோ கிடைக்கப் போவதில்லை. ச்ரவணத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. ஆனால் மனனம், நிதித்யாஸனத்தின் மூலம்தான் ஞானம் உறுதிப்படுகிறது.
மநோபுத்யஹங்கார சித்தாநி நாஹம் ந ச ச்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே|
ந ச வ்யோமபூமிர் ந தேஜோ ந வாயு: சிதாநந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம்||
நான் மனம் அல்ல, புத்தி அல்ல, அஹங்காரம் அல்ல, சித்தம் அல்ல, காது அல்ல, நாக்கு அல்ல, மூக்கு அல்ல, கண் அல்ல, ஆகாசம் அல்ல, பூமி அல்ல, நெருப்பு அல்ல, காற்று அல்ல - யாண்டும் இருக்கின்ற பேரின்ப வடிவான தூய உணர்வே நான்
என்று த்யானம் செய்ய வேண்டும்.
ச்ரவணத்தின்போது, வேதாந்த சாஸ்த்ரத்தை குருமுகமாகத்தான் கற்க வேண்டும். மனனத்திற்கும் குருநாதர் உதவி புரிவார். ஆனால் நிதித்யாஸனத்திற்கு குரு உபகாரம் செய்ய முடியாது. வாயில் உணவை ஊட்டிவிடும் வரைதான் தாய் உதவி செய்யலாம். ஆனால் உணவை விழுங்குவது குழந்தையின் வேலை.
நம் மனத்தில் அநாத்ம வ்ருத்தி மிக அதிகமாக இருக்கிறது. ஆத்மாகார வ்ருத்தி பலமாக இல்லை. ஆத்மாகார வ்ருத்தியை பலப்படுத்துவது நிதித்யாஸனத்தின் வேலை. இதன்மூலம் அனைத்துவிதமான வேற்றுமை உணர்ச்சிகளும், பயங்களும் நீங்கிவிடுகின்றன.
ச்ரவணத்தின் மூலம் அறியாமை நீங்குகிறது. மனனத்தின் மூலம் ஐயங்கள் நீங்குகின்றன. நிதித்யாஸனத்தின் மூலம் தவறான எண்ணப் பழக்கங்கள் நீங்குகின்றன.
தனக்கு வேறாக ஒரு பொருளும் இல்லை என்ற தெளிந்த மெய்யறிவில் நிலைத்திருக்கும் ஆத்மஞானிகள் பேரானந்தத்தில் திளைத்திருக்கிறார்கள்.
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்ற மஹாகவி பாரதியாரின் வரிகள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை.
இறையருள் துணைகொண்டு கர்மயோகத்தை முறையாகக் கடைப்பிடித்து, குருவருள் துணைகொண்டு ஞானயோகத்தை முறையாக மேற்கொண்டு பேரின்பத்தில் நிலைத்திருந்து பிறவாப் பெருநிலை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்
No comments:
Post a Comment