Thursday, 29 May 2014

மூன்று பிரார்த்தனைகள்

மூன்று பிரார்த்தனைகள்


நமக்கு எல்லாருக்கும் பகவானுடைய விஷயத்தில் பரிபூர்ணமான பக்தி இருக்கிறது. இந்த ஸமஸ்த உலகத்திற்கும் ஸ்ருஷ்டிஸ்திதி, ஸம்ஹாரங்களுக்குக் காரணமாக பரமாத்மா இருக்கிறான். நாம் செய்யக்கூடிய புண்ய பாபங்களுக்கு தகுந்த பலனைக் கொடுக்கக் கூடிய பரமாத்மா இருக்கிறான் என்கிறது சாஸ்திரத்தின் சித்தாந்தம். பகவான் பக்தன் என்ன வேண்டினாலும் அதை அவச்யம் அனுக்ரஹம் பண்ணுவான். ஆனால் நாம் பகவானிடம் என்ன ப்ரார்த்தனை செய்யவேண்டும் என்கிறதுதான் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஏனென்றால் எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய பரமாத்மா இருக்கிறபோது அந்த பரமாத்மாவிடம் ஏதோ ரொம்ப சாமான்யமான விஷயத்தைக் கேட்டால் அது விவேகமாகாது.

ஒரு பெரிய மஹாராஜா நம் விஷயத்தில் ரொம்ப சந்தோஷப் பட்டு, “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! நான் கொடுக்கிறேன்” என்று சொன்னால், “எனக்கு எழுதுவதற்கு பென்சில் இல்லை, பென்சில் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டால் எப்படி இருக்கும்? அந்த இராஜாவிடம் பென்சிலையா கேட்பது? இராஜாவிடம் மிகவும் விலையுயர்ந்த சாமான்யமாகக் கிடைக்காத பொருளைக் கேட்டு அவரிடமிருந்து அதை அடைந்து பெருமை சேர்க்க வேண்டும். அதேபோல் பகவானிடம் நாம் என்ன கேட்கவேண்டும்? எதை பகவான் நமக்கு கொடுத்தால் வாழ்க்கை பவித்ரமாகுமோ அந்த மாதிரி விஷயத்தை நன்கு யோசனை பண்ணி நாம் சரியாகக் கேட்கவேண்டும். அதற்காக பகவான் சந்நிதியில் பிரார்த்திக்க வேண்டியது என்ன? பகவானே! என் மனதில் இருக்கக்கூடிய அகங்காரத்தை போக்கு” என்று கேட்க வேண்டும். நமக்கு எல்லாருக்கும் ஏதோ ஒரு விதமான அகங்காரம் மனதில் இருந்து தப்புக் காரியங்களை செய்ய வைக்கிறது. ஒரு பெரிய பணக்காரனானால் அந்தப் பணத்தினால் அகங்காரம். அந்த அகங்காரத்தினால் அவன் தப்புக் காரியங்கள் செய்கிறான். அவன் என்ன நினைக்கிறான்? நான் என்ன தப்பு காரியங்கள் செய்தாலும் அதை நான் சரிபண்ணிக் கொண்டு விடுவேன். என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என்ன வேண்டுமானாலும் நான் பண்ணி விடுவேன் என்று அவன் நினைக்கிறான். இன்னொருவனிடம் பதவி இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு நான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அதை நான் சரிபண்ணிக் கொள்வேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவன் நினைக்கிறான். ரொம்பப் படித்தவன். நான் ரொம்பப் படித்திருக்கிறேன் எதை வேண்டுமானாலும் சரியாக்கி விடுவேன். என்னை யாரும் கேட்க முடியாது என்று அவன் நினைக்கிறான். இவர்கள் எல்லாரும் அந்தந்த ஒவ்வொரு விஷயத்தை வைத்துக் கொண்டு அகங்காரப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அகங்காரத்தினால் அகார்யங்களை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் யார் அகார்யத்தை பண்ணினாலும் அதனுடைய பலனை அவன் அனுபவிக்கத்தான் வேண்டும். அவன் பணக்காரனானாலும், பண்டிதனானாலும், பெரிய அதிகாரியானாலும் ஆனால் அவன் பண்ணிய அகார்யத்தின் பலனை அவன் அனுபவிக்காமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது கர்மாவினுடைய (சுபாவம்) இயற்கை. கர்மாவுக்குப் பலனை அந்தக் கர்மா செய்தவனுக்கு கொடுக்கக் கூடியது அதனுடைய இயற்கை. அதனால் யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அதனாலே இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தான் என்னதான் அகார்யம் பண்ணினாலும் அதை தான் சரிபண்ணிக் கொள்ள முடியும் என்கிற ஒரு ப்ரமையில் அஹங்காரத்திற்கு வசமாகி அகார்யங்களைப் பண்ணிவிடுகிறான். அஹங்காரம் மனதில் இல்லையோ அகார்யம் பண்ணினால் அதனுடைய பலத்தை நாம்தானே அனுபவிக்க வேண்டும். அந்தப் பலனை அனுபவிப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். அதனால் நாம் பண்ண வேண்டாம் என்கிற ஒரு பயம், பீதி வரும். அகங்காரம் உள்ளவர்களுக்கு அந்தப் பீதி வராது.

அதனால் எல்லா அனர்த்தங்களுக்கும் மூல காரணமாக இருக்கக்கூடிய அகங்காரத்தை போக்குவதற்கு நாம் ப்ராத்தனை செய்வோம். நம் முன்னோருடைய சரித்திரங்களைப் பார்த்தால் அவர்களுக்கு துளி கூட அகங்காரம் இல்லை என்பது தெரிகிறது. வேதத்தில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் யாக்ஞவல்க்யஞருடைய கதை வருகிறது. அவர் மகா ஞானி ப்ரும்மஞானி. ஜனக மஹாராஜாவினுடைய ஆஸ்தானத்தில் பெரிய பெரிய மகான்கள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் யாக்ஞவல்க்ஞயர் வந்திருந்தார். அப்போது ஜனக மகாராஜா இவர்களுக்குள் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஓர் ஆசை வந்துவிட்டது. ஜனகர் ஓர் ஆயிரம் பசு மாடுகளை அங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஒவ்வொரு பசுவினுடைய கொன்றிற்கும் பெரிய கவசம் போட்டு இருந்தார். அவற்றை நிறுத்தி விட்டு அங்கே உள்ளவர்களை கேட்டார். இங்கே யார் ப்ரம்மிஷ்டாளாக இருக்கிறார்களோ அவர்கள் இந்தப் பசு மாடுகளைக் கொண்டு போகலாம் என்று சொன்னார். எல்லோரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் யார் கொண்டு போவது என்று பார்த்துக் கொண்டார்கள். யாக்ஞவல்க்யர் தன் சிஷ்யரிடம் தம் ஆஸ்ரமத்திற்கு அனைத்து மாடுகளையும் கொண்டு போய் விடலாம் என்றாரார். மற்ற எல்லோருக்கும் கோபம் வந்தது. நாம் இத்தனை பேர் இருக்கும்போது இவர் தன்னை ப்ரும்மஞானி என்று சொல்லி தன் சிஷ்யர்களிடம் இந்தப் பசுமாடுகளையெல்லாம் கொண்டு போ என்று சொல்கிறாரே, இவர் என்ன பெரிய ப்ரும்மஞானி” என்று அவரிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். அப்போது யாக்ஞவல்க்யர் சொன்னார் “நான்தான் ப்ரும்மஞானி என்று இல்லை ப்ரும்மஞானிகள் எல்லோருக்கும் நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். நான்தான் ப்ரும்மஞானி என்கிற அகங்காரம் எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது” என்று சொன்னார். மேலும் ஜனக மகாராஜா சொன்னார், யார் இங்கு பிரமஞானியாக இருக்கிறவன் பசு தாடுகளைக் கொண்டு போகலாம் என்று சொன்னார். அதனால் கொண்டு போகிறேன்.” அப்போது “நீ ஞானியா?” என மற்றவர்கள் வினவினார். “உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” என்றார் யாக்ஞவல்க்யர். 

ஒவ்வொருவரும் பெரிய பெரிய ப்ரச்னைகளைக் கேட்டார்கள். எல்லா ப்ரச்னைகளுக்கும் யாக்ஞவர்க்யர் பதில் சொல்லிவிட்டார். எல்லோரும் வாயை மூடிக் கொண்டுவிட்டார்கள். கடைசியில் யாக்ஞவல்க்யர் கேட்டார். “நீங்கள் எல்லோரும் கேட்பது முடிந்து விட்டதல்லவா? இப்போது நான் எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்கவா? எப்படிக் கேட்கவேண்டும் எல்லோருக்கும் சேர்ந்து ஒரு கேள்வி கேட்கவா? தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கேட்கவா? என்றார். யாருக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவரே கேட்டும் விட்டார். ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கதை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் அவ்வளவு பெரிய ஞானியாக இருந்த யாக்ஞவல்க்யர் ஆரம்பத்தில் “எனக்கு நான்தான் பெரிய ஞானி என்கிற அகங்காரம் இல்லை. யார் பெரியவர்களோ அவர்கள் எல்லாருக்கும் என் நமஸ்காரம்” என்று சொல்ல வேண்டுமானால் அவர் மனதில் எந்த அளவுக்கு ஓர் அகங்காரம் என்பது துளிகூட இல்லாமல் இருந்தது. அப்பேர்ப்பட்ட மகானுக்கு கொஞ்சம்கூட அகங்காரம் இல்லை என்றால் சாதாரணமான நமக்கு அதாவது ஏதோ அரைகுறையாக படித்துவிட்டு நானும் பெரிய வித்வான் என்கிற அகங்காரம் வந்தால் அது என்ன அர்த்தம்? ஆதிசங்கரர் வேதவியாசருடைய ப்ரும்ம ஸூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதி சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். வேதவியாசரே (தானாகவே) ஸ்வயமாக ஒரு வ்ருத்த (வயோதிக) ப்ராமண ரூபத்தில் வந்து அவரைக் கேட்டார். என்ன நேரில் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது சங்கரருடைய சிஷ்யர்கள் பதில் சொன்னார்கள். “இவர் எங்கள் குருநாதர். வேதவியாசருடைய ப்ரும்மஸூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதி எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.” அப்போது அந்த வ்ருத்த ப்ராமணர் சங்கரரைப் பார்த்து “நீ வேதவியாசருடைய ஸூத்ரங்களுக்கே பாஷ்யம் எழுதுகிறாயாமே, அது ரொம்பக் கஷ்டமானது ஆயிற்றே! ஏதாவது ஒரு ஸூத்ரத்தை பற்றி கேட்கிறேன் சொல்கிறாயா?” என்றார் அவர். அப்போது சங்கரரும் யாக்ஞவல்க்யர் சொன்னமாதிரி வியாசருடைய ஸூத்ரங்களுக்கு அர்த்தம் எனக்குத்தான் தெரியும் என்கிற பாவனை எனக்கு இல்லை. அந்த ஸூத்ரத்தின் அர்த்தம் தெரிந்த மகான்கள் எல்லாருக்கும் நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். நீங்கள் ஏதோ கேட்கவேண்டும் என்று சொன்னீர்கள் கேளுங்கள். சொல்ல முடிந்தால் பதில் சொல்கிறேன்” என்றார். அவர் ப்ரச்னம் பண்ணி இவர் பதில் சொல்ல, திரும்ப அவர் கேள்வி, இவர் பதில் என்று இப்படி ஏழு நாட்கள் ஆனாலும் முடியவில்லை. கடைசியிலே பத்மபாதருக்கு வந்துள்ள மஹான் ஸ்வயம் வியாஸர்தான் என்று தெரிந்துவிட்டது. வேறு யாராலும் இந்த மாதிரி கேள்வி கேட்க முடியாது. சாக்ஷாத் ஸூத்ரகாரர் வேத வியாசரே இங்கு வந்து இருக்கிறார் என்று பத்மபாதர் சொன்னார். ஸாக்ஷாத் நாராயண ஸ்வரூபன் வேத வியாசர், ஸாக்ஷாத் சிவ ஸ்வரூபன் சங்கரர், உங்கள் இரண்டு பேருக்கும் வாதம் என்று ஆரம்பித்தால் நாங்கள் எல்லாரும் எங்கே போவது” என்றார். சங்கரர் அப்பேர்ப்பட்ட ஞானியாய் இருந்தாலும் கூட அவருடைய வார்த்தை என்ன? ஸூத்ரம் தெரிந்த எல்லா மகான்களுக்கும் என் நமஸ்காரம். நான்தான் சூத்ரார்த்தம் தெரிந்தவன் என்கிற பாவம் இல்லை. இப்படி எந்த மகான்கள் சரித்திரம் பார்த்தாலும் அவர்கள் எல்லோருக்கும் அகங்காரம் துளிகூட இருக்கவில்லை என்பது நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டு நான்தான் ரொம்ப தெரிந்தவன் என்கிற பாவனையிலே இருக்கிறோமே இது நியாயமா? அதேபோல் நம்மை விட எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள்; நான் என்ன பெரிய பணக்காரன் என்று சொல்லிக் கொண்டு நான் அகங்காரப்படலாமா? எனக்குத் தெரிந்தது ரொம்ப சொல்பம். நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு. நான் அகங்காரப்பட வேண்டியது சரியல்ல. அதேபோல் என்னிடம் இருக்கிற ஐஸ்வர்யம் ரொம்ப குறைந்தது. இதைவிட பெரிய ஐஸ்வர்யம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இதற்காக நான் ஏன் அகங்காரப்பட வேண்டும்? இந்த பாவம் நமக்கு வேண்டுமானால் அது பகவானுடைய க்ருபையினாலேதான் வரவேண்டும். அதனால் நாம் பகவானிடம் “என்னுடைய அகங்காரத்தைப் போக்கி விடு” என்கிற ப்ரார்த்தனை முதலில் செய்ய வேண்டியது ஆகும். அதே போல் இன்னொரு ப்ரார்த்தனை என்ன என்று கேட்டால் நமக்கு உலகத்தில் எதைப் பார்த்தாலும் எனக்கு வேண்டும் என்கிற ஒரு தோற்றம். எந்த ஒரு புது வஸ்துவைப் பார்த்தாலும் இது எனக்கு வேண்டும். எந்த ஒரு நல்ல பொருளைப் பார்த்தாலும் இது எனக்கு வேண்டும் என்கிற ஆசை. இந்த எனக்கு வேண்டும், வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே மனிதனுக்கு இந்த ஆசை என்பது சமுத்ரம் மாதிரி இருக்கிறது என்று வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. “சமுத்ரத்திற்கு எப்படி அந்தம் (முடிவு) இல்லையோ, அப்படி இந்த காமத்துக்கும் அந்தம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் கூட போதும் என்கிற சப்தம் நம் வாயில் வராது. அப்போது என்ன ப்ரயோஜனம்? சம்பாதித்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறோம், கடைசியில் அது யாருக்குப் போகுமோ தெரியாது. நாம் ஒருவருக்கும் தானம் பண்ணுவதும் இல்லை. நாம் அனுபவிக்கவும் இல்லை. சேர்த்து கொண்டேயிருக்கிறோம். அதனால் இந்த ஆசை அதிகமாகி அதை முழுவதும் நிறைவேற்றுவதற்குள்ளேயே நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. எங்கே பகவத் சேவைக்கு அவகாசம்? ஸத்கர்மானுஷ்டானத்திற்கு எங்கே அவகாசம்? மனதில் வருகிற ஆசைகளை நிறைவேற்றுவதற்கே நம்முடைய ஆயுள் முழுமையும் வ்யர்த்தம் ஆகி விடுகிறது. அதற்காக “பகவானிடம் பகவானே எனக்கு மனதில் இந்த ஆசைகள் வராமல் பண்ணிவிடு. இந்த ஆசைகள் எது முடிய வந்து கொண்டு இருக்குமோ அது முடிய எனக்கு சௌக்யம் என்பது இருக்காது.” எனப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

உலகத்தில் எந்தப் பொருளிலும் எவனுக்கு ஆசை இல்லையோ அவனுக்குத்தான் உண்மையாக சௌக்யம் அவன்தான் சுகமாக இருப்பான். இந்த ஆசைகளை மனதில் வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு சௌக்யம் என்பது இல்லவே இல்லை. எவ்வளவு வந்தாலும் இல்லை, இல்லை. அது ஒன்றுவர வேண்டியிருக்கிறது. இது ஒன்று வரவேண்டியிருகிறது என்ற கணக்கில்தான் இருக்கிறார்கள். அந்தக் கணக்கு என்றைக்கும் முடியவே முடியாது. ஆயுள் பூராவும் அந்த வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவனுக்கு சௌக்யம் கிடையாது. எனக்கு எதுவும் வரவேண்டியது இல்லை என்று சொல்கிறவனுக்குத்தான் சௌக்யம். அந்த வார்த்தை நம் வாயிலிருந்து வரப்போவதில்லை. அதனால் பகவானிடம் நாம் ப்ரார்த்தனை பண்ண வேண்டியது “பகவானே! எனக்கு ஆசைகள் வராமல் பண்ணிவிடு” என்று.

இன்னொரு ப்ரார்த்தனை என்னவென்று கேட்டால் “பகவானே! எனக்கு தயை என்ற குணம் வரும்படி செய்.” ஒருவனிடம் தயை இருநால்தான் பரோபகாரம் பண்ண முடியும். இல்லாவிட்டால் பரோபகாரம் பண்ண முடியாது. தயை என்கிற சப்தத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா? இன்னொருவனுடைய கஷ்டத்தை நீக்கவேண்டும் என்கிற பாவம். ஒருவன் கஷ்டத்திலே இருக்கிறான், அவன் கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு பரிகாரம் பண்ண முடியும் என்கிறபோது நாம் கட்டாயம் பண்ண வேண்டும். அவன் கஷ்டத்தை நீக்கவேண்டும் என்கிற பாவம் மனதில் வருகிறதே அந்த பாவத்துக்கு தயை என்று பெயர். அந்த பாவம் வந்தால்தானே அவன் கஷ்டத்தைப் போக்க முடியும். இல்லாவிடில் அந்த பாவமே மனதில் வரவில்லையென்றால் நாம் அவனுக்கு உபகாரம் பண்ண முடியாது. அந்த தயை என்பது பகவானுக்கு சமுத்ரம் மாதிரி இருக்கிறது. அதில் ஒரு துளியாவது தயை நமக்கு இருந்தால், நம்மால் எவ்வளவு நல்ல கார்யங்கள் நடக்கும்.

எத்தனையோ பேர், நம் எதிரில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கஷ்டத்திற்கு, ஒரு துளியாவது நாம் பரிகாரம் பண்ணினால், கொஞ்சமாவது உபகாரம் பண்ணினால் அது எவ்வளவோ நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இன்னொருவனுக்கு உபகாரம் பண்ணவேண்டும் ஆனால் அதனால் திரும்ப நமக்கு என்ன கிடைக்கும் என எதிர்பாரக்கக்கூடாது. இன்றைக்கு உபகாரம் பண்ணுவதால் திரும்ப க்ஷீமீtuக்ஷீஸீ எனக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றும். அந்தத் திரும்ப என்ன கிடைக்கும் என்பதை மட்டும் நாம் கேட்டுக் கொள்ளக் கூடாது. அதற்கு இராமாயணத்தில் ஓர் உதாரணம் சொல்லுவார்கள். இராமர் ஆரண்ய வாசம் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் சீதையை இராவணன் அபகரித்துக் கொண்டு போய் விட்டான். அப்போது இராமர் ரொம்ப வருத்தத்தில் இருந்தார். எவன் கொண்டு போய் விட்டான். எங்கே கொண்டு போய்விட்டான் என்று ஒன்றுமே தெரியாமல் ரொம்ப வருத்ததில் இருந்தார். அப்போது சுக்ரீவனுடைய ஸ்நேகம் கிடைத்தது. சுக்ரீவன் தன்னுடைய வானர சைன்யத்தையெல்லாம் சீதையைத் தேடுவதற்கு அனுப்பினான். ஹனுமார் சீதை இருக்கிற இடத்திற்கு லங்கா பட்டணத்திற்கே போய் சீதை எந்த மரத்தடியில் இருந்தாளோ அங்கே போய், அந்த சீதா தேவியோடு பேசினான். அந்த அம்மாவிற்கு இராமர் கொடுத்த மோதிரத்தை, அடையாளமாகக் கொடுத்து திரும்ப அந்த சீதா அம்மா கொடுத்த சூடாமணியை இராமருக்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அதைப் பார்த்து இராமருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்போது இராமர் ஹனுமாரிடம் சொன்னார். “இதோ பார் ஹனுமானே! நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணினாய். இந்த உபகாரத்தை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட உபகாரம் பண்ணினாய் இல்லையா, திரும்ப உனக்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் நீ நினைக்காதே. என்னிடம் இவ்வளவு உபகாரம் வாங்கிக்கொண்டு திருப்பி என்னிடமிருந்து நீ எதுவும் எதிர்பார்க்காதே என்று சொல்கிறாரே? இது நியாயமா? என்று பலபேருக்கு கேள்வி வரலாம். அதற்குக் காரணம் சொன்னார் பகவான். இன்றைக்கு நீ எனக்கு உபகாரம் பண்ணினாய். ஏனெனில் நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். அதனால் உபகாரம் பண்ணினாய். திருப்பி என்னிடமிருந்து நீ ப்ரத்யுபகாரத்தை எதிர்பார்க்கிறாய் என்றால் உனக்கு ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உபகாரம் பண்ண முடியும். நீ என்னிடமிருந்து ப்ரத்யுபகாரம் எதிர்பார்க்கிறாய் என்றால் நீ ஒரு கஷ்டத்தையும் எதிர் பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். ஏன் அப்படி எதிர் பார்க்கிறாய்? நீ சுகமாக இருக்கிறாய் ஒரு கஷ்டம் வரட்டும் அப்போது எனக்கு இவர் உபகாரம் பண்ணட்டும் என்று எதிர் பார்த்த மாதிரி ஆகிவிடும். அது வேண்டவே வேண்டாம். எப்பொழுதும் நீ சுகமாய் இரு என்று சொன்னாராம். அதனால் நாம் இன்னொருவருக்கு உபகாரம் பண்ணுகிறபோது திருப்பி அவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்கிற பாவனை இல்லாமல் நாம் பண்ணக்கூடிய உபகாரம்தான் ரொம்ப விசேஷமானது. அந்த பாவனையோடு நாம் பண்ண வேண்டும்.


அதனால்தான் பகவான் பகவத் கீதையிலே சொல்கிறபோது

தாதவ் மிதியத் தானம்
தீயதே அனுபகாரிணே |
தேசே காலேச பாத்ரேச
தத்தானம்ஸாத்விகம் ஸ்ம்ருதம் ||

எவன் தனக்குத் திரும்ப உபகாரம் பண்ணவேண்டும் என்கிற பாவனை இல்லாமல் தானம் பண்ணுகிறானோ அதுதான் மிக உயர்ந்தது. அதனால் நமக்கு அந்த தயை வரவேண்டும். அப்பேர்ப்பட்ட ஓர் அநுக்ரஹம் பகவான் நமக்கு செய்யட்டும் என்று நாம் பகவான் சந்நிதியிலே ப்ரார்த்திக்கவேண்டும்.
பகவானுடைய அநுக்ரஹத்தால் நம்முடைய ஜீவனம் ஸார்த்தகம் ஆகிவிடும்.

நம்முடைய அகங்காரத்தைப் போக்கவேண்டும். நமக்கு ஆசைகள் வராமல் பண்ண வேண்டும். நம் மனதில் தயை வரவேண்டும். இந்த மூன்று ப்ரார்த்தனைகளையும் பகவான் நமக்கு அனுக்ரஹம் செய்யட்டும். அதனால் நம்முடைய வாழ்க்கை ரொம்ப பவித்ரமாகும். ரொம்ப நன்றாக நடக்கும். அகங்காரம் என்பது போகவில்லை. ஆசை என்பது நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆகிக்கொண்டிருக்கிறது. தயை என்பது கொஞ்சமும் கிடையாது என்றால் அந்த வாழ்க்கை வ்யர்த்தமான (வீணான) வாழ்க்கை. அந்த வாழ்க்கையினால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை.

இப்பேர்ப்பட்ட ப்ரார்த்தனையை நாம் பகவத் சந்நிதியிலே செய்து பகவானுடைய க்ருபையினால் அதை அடைந்தோமானால் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கை பவித்ரமாகும். தன்யமாகும். எல்லோரும் இந்த மாதிரி ப்ரார்த்தனை பகவத் சந்நிதியிலே செய்யட்டும் என்று பகவத்பாதாள் சொல்லியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட ப்ரார்த்தனை செய்து அந்த பகவானுடைய க்ருபைக்கு எல்லோரும் பாத்திரம் ஆகட்டும்” என்று நான் சாரதாசந்த்ரமௌளீச்வராளைப் பிரார்த்திக்கிறேன்.

- ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

நன்றி: அம்மன் தரிசனம் 

No comments:

Post a Comment