குரு- சிஷ்யன் கேள்வி பதில்
சிஷ்யன் : மோக்ஷத்தை விரும்புபவனுக்குக் குரு தேவையா?
ஆச்சார்யாள் : மிகவும் தேவை.
சிஷ்யன் : குருவின் லக்ஷணம் என்ன?
ஆசார்யாள் : குருவானவர், தத்வத்தை அறிந்த ஞானியாகவும், சிஷ்யனின் நன்மையை விரும்புபவராகவும் இருக்க வேண்டும்.
சி : இக்காலத்தில் பலர் மகான்களைப் போல் நடிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது குருவை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஆ : இவ்வாறுதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டளையைக் கூற முடியாது. ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் இருந்தானானால் ஈச்வரன் அவனை ஸத்குருவை அடையும்படி செய்வான். நாம் யாரைக் குருவாகக் கருதுகிறோமோ அவர் ஞானியாகவும் நம் நன்மையை விரும்புபவராகவும் இருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளலாம். ஒருவர் ஞானியா எனத் தீர்மானிப்பது கடினமானாலும் பகவத் கீதையில் கூறப்பட்ட ஞானியின் வர்ணனைகளை ஓரளவுக்கு உபயோகப்படுத்தலாம். ஆனால் இவ்வாறு செய்யும்போது ஞானிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அந்த வர்ணனைகள் கூறப்படவில்லை என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
சி : குருவைப்பற்றி சிஷ்யனின் மனப்போக்கு எவ்வாறிருக்க வேண்டும்?
ஆ : குருவும், ஆத்மாவும், ஈச்வரனும் வேறு என்று கருதக்கூடாது.
‘ஈச்வரோ குருராத்மேதி’ ஈச்வரனும் குருவும் ஆத்மாவும் ஒன்று என்று கூறப்பட்டிருக்கிறது. குருவின் ஆக்ஞையின்படியே எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர் வேறு விதமாகக் கூறினாலும், குருவின் உபதேசத்தையே எந்த விஷயத்திலும் முடிவாகக் கருத வேண்டும்.
சி : ஞானம் அடையாதவர் மற்றோருக்கு ஆத்ம ஞானத்தை உண்டாக்க முடியுமா?
ஆ : “ந நரேணவரேண ப்ரோக்த ஏஷஸுவிக்ஞேயோ பஹுதா சிந்த்யமான: அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி.”
“ஆத்மாவை அறியாதவன் உபதேசித்தால் மிகவும் ஆராய்ந்தாலும் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை அறிந்தவன் உபதேசம் செய்தால் ஒருவன் மோக்ஷத்தை அடைகிறான்” என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
“ஆத்மாவை அறியாதவன் உபதேசித்தால் மிகவும் ஆராய்ந்தாலும் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை அறிந்தவன் உபதேசம் செய்தால் ஒருவன் மோக்ஷத்தை அடைகிறான்” என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
சி : ஆன்மிக வாழ்வில் ஈடுபாடுள்ளவன் தன் குருவைப் பற்றியோ ஈச்வரனைப் பற்றியோ பிறர் நிந்திப்பதைக் கேட்பது தவறா?
ஆ : ஆம்.
சி : அச்சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும்?
ஆ : நிந்தனை செய்பவன் யுக்தியை ஒப்புக் கொள்பவனாக இருந்தால் அவனிடம் அவ்வாறு நிந்தனை செய்ய வேண்டாம் என்று கூறலாம். அப்படியில்லாவிட்டால் நிந்தனை செய்யப்படுமிடத்திலிருந்து அந்த சிஷ்யன் விலகிச் சென்று விடலாம்.
சி : குருவை அடைவதிலும், ஆன்மிக வாழ்வை நடத்துவதிலும் விருப்பமுள்ளவன் குருவை அடைவதற்கு முன்பு ஆன்மிகச் சாதனையைச் செய்ய விரும்பினால் என்ன செய்யலாம்?
ஆ: உபநயனமாகியிருந்தால் அவன் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு காயத்ரீ ஜபத்தைச் செய்யலாம். மனத்தால் ஈச்வரனின் பூஜையைச் செய்யலாம். இதற்கு நியமங்களில்லை. ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம், சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் முதலியவற்றில் பூஜை செய்யும் முறை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எல்லாச் செயல்களின் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து இறை பக்தியை வளர்ப்பது நலம். விவேகம் மூலமாகத் தீவிரமான வைராக்யத்தைப் பெற வேண்டும். சிரத்தையுடன் ஈச்வரனைப் பிரார்த்தித்தால் ஸத்குருவை அடையும்படி அவன் செய்வான்.
சி : எந்த வயதில் ஆன்மிக ஸாதனைகளைத் தொடங்க வேண்டும்?
ஆ : எவ்வளவு சீக்கிரத்தில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. ப்ரஹ்லாதனும், த்ருவனும் ஆன்மிக ஸாதனைகளைத் தொடங்கும்போது சிறுவர்களாகத்தாமே இருந்தார்கள்?
சி : லௌகிக வாழ்வில் ஈடுபாடுள்ளவனுக்குக் குருவின் உபதேசம் தேவையா?
ஆ : வியாதியால் பாதிக்கப்பட்டவனுக்கு வைத்தியர் தேவையா?
சிஷ்யர் : ஆம்.
ஆச்சார்யாள் : லௌகிக வாழ்வில் சுகத்தை விரும்புகிறானே, அவன் விரும்பிய அளவுக்கு அவனுக்கு இன்பம் கிடைக்கிறதா? இல்லையே! அந்த இன்பம் பெறுவதற்கும் லௌகிக வாழ்வு வாழ்பவனுக்கும் ஒருவர் வழிகாட்டுவதாக இருந்தால் அவர் தேவையல்லரோ? தத்வத்தை அறிந்து கொண்டவரின் ஆசிக்கு மிகவும் சக்தியிருக்கிறது. ஆகையால் எவ்வாறு வாழ விரும்பினாலும் ஒரு மகானின் அருளும் உபதேசமும் பெறுவது நல்லது.
சி : சிலர் குருவின் ஆக்ஞைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதினாலும் எப்போதும் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. வேறு விதமாக நடந்து கொண்டால் இன்பம் பெறலாம் என்ற தவறான அபிப்ராயமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இம்மாதிரி எண்ணங்களை எவ்வாறு தடுப்பது?
ஆ : லௌகிகமாக வாழ்பவனுக்கும், ஒரு மஹானைப் பற்றி “இவருக்கு என்னைக் காட்டிலும் அறிவு அதிகமாக இருக்கிறது” என்ற எண்ணம் உண்டா இல்லையா?
சி : அவசியம் இருக்குமே.
ஆ : ஒருவர் குருவாக வேண்டுமென்றால் அவர் சிஷ்யனின் நன்மையையும் சிஷ்யனின் கஷ்டங்களையும் கருத்தில் கொண்டிருப்பார் அல்லவா?
சி : ஆம்.
ஆ : ஒருவர் நம் நன்மையைக் கருதுகிறார். நம்மைக் காட்டிலும் அறிவு அதிகம். நம் கஷ்டங்களையும் புரிந்து கொண்டிருக்கிறார். இப்பேர்ப்பட்டவர் நமக்கு ஏதாவது உபதேசம் கொடுத்தால் அது நமது நன்மைக்காகத் தானேயிருக்கும்? ஆகவே அவர் உபதேசப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எண்ணத்தை மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டால் சிஷ்யன் அவசியம் குருவின் உத்தரவின்படி நடந்து கொள்வான். அவர் கட்டளையின்படி நடப்பதில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், “நான் அவர் சொற்படி நடந்தால்தான் எனக்கு நல்லது” என்று நினைத்து அவர் கட்டளைப்படி நடந்து கொள்வான்.
சி : தன் மனத்திலுள்ளது எல்லாவற்றையும் குருவிடம் சொல்வதற்கு மக்களுக்குத் தயக்கம் உள்ளது. இப்படியிருக்கும்போது சிஷ்யன் தன் மனத்தில் தோன்றிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் குருவிடம் கூறுவதில்லை. ‘குரு என் நன்மைக்காகவே இந்த உபதேசத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் அதன்படி நடந்து கொள்வதில் சில கஷ்டங்கள் இருக்கின்றனவே. எனது சக்தியும் மிகக் குறைவாக இருக்கிறதே. இந்த உபதேசப்படி எப்படி நடந்து கொள்வது’ என்று உபதேசத்தின்படி அனுஷ்டிக்கக் கடினமாக இருந்தால் மக்கள் மனதில் சந்தேகமிருக்கலாமே?
ஆ : ஒரு வைத்தியரிடம் செல்லும்போது தன் வியாதியைப் பற்றி மறைத்து வைத்தால் அது அறியாமையாக இல்லையா? ஆதலால் சிஷ்யன் குருவிடம் எப்போதும் செல்லும்போது தனது கஷ்டங்களைத் தயக்கமில்லாமல் கூற வேண்டும். அஃது அவன் கடமை. அவ்வாறு செய்யா விட்டாலும் குரு, தத்வத்தை அறிந்தவராதலால் அவரின் வாக்கு ஈச்வரனின் விருப்பப்படிதான் இருக்கும். இப்படியிருக்கும்போது அவர் எதைக் கூறினாலும் நமக்குப் பொருத்தமாகத்தானிருக்கும். நமக்கு சாமர்த்தியமில்லாவிட்டால் அவர் அனுக்ரஹத்தினால் அந்த சாமர்த்தியமும் கிடைக்கும். உத்தமமான சிஷ்யன் குருவின் ஆக்ஞையின்படியே நடந்து கொள்வானே தவிர அதைப்பற்றி “நான் இவர் கூறியதைச் செய்ய முடியுமா? முடியாதா? வேறெதாவது செய்யலாமா?” இம்மாதிரி யோசனைகளுக்கு இடமே கொடுக்கமாட்டான். குருவின் கட்டளையின்படியே ஒருவன் நடந்து கொள்கிறானென்றால் அவனுக்குச் சொந்த மூளையில்லை என்று அர்த்தமில்லை. தன்னைக் காட்டிலும் உத்தமமான சக்தியிடம் தன் நன்மைக்காகச் சரணம் அடைந்திருக்கிறான் என்றுதான் பொருள்.
சி : குருவின் அருளிருந்தால் மஹாபாவியும் முன்னேற்றமடைய முடியுமா?
ஆ : இறைவனுடைய, குருவினுடைய அனுக்ரஹம் கிடைத்தால் எப்பேர்ப்பட்டவனும் முன்னேற்றமடையலாம். இம்மாதிரி மஹானின் அனுக்ரஹத்தால் நம் வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம் என்று நினைத்து கவனக்குறைவாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
சி : சிலர் பலவிதமான தவறுகள் செய்திருந்தாலும் ஒரு மஹானின் அனுக்ரஹம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் நன்மை அடைகிறார்கள். மற்ற சிலர் அவ்வளவு தவறு செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அவர்களுக்கு மஹான்களின் அனுக்ரஹம் கிடைப்பதில்லை. மஹான்களுக்கு ‘இவன் எனக்கு வேண்டியவன். இவன் எனக்கு வேண்டாதவன் என்ற எண்ணமில்லாவிட்டாலும் இம்மாதிரி வித்யாசங்கள் ஏன் ஏற்படுகின்றன?
ஆ : கார்யத்தைக் கண்டு காரணமென்ன இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும். ஒருவன் மற்றவனைக் காட்டிலும் பாவியாக இருக்கிறான். ஆனால் அவனுக்குக் கிருபை விசேஷமாகக் கிடைப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணமிருந்திருக்க வேண்டும். அது என்னவாயிருக்கும்? பாவியின் இப்பிறவி வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்த்தால் காரணம் கிடைக்கவில்லை என்றிருக்கலாம். அவ்வளவு மட்டும் ஆராய்ந்தால் போதாது. ஏனென்றால் முற்பிறவி இருந்தது. அதில் அவன் விசேஷமான நல்ல காரியங்களைச் செய்திருக்கலாம். அதனால்தான் இவன் இப்பிறவியில் ஒரு மஹானின் கருணைக்கு ஆளாகிறான். ஆதலால் ஒருவன் இப்போது நல்ல வாழ்க்கை நடத்தாமலிருந்தாலும் அவனுக்கு இப்போது மஹானின் அனுக்ரஹம் கிடைக்கிறதென்பதால் அவன் முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தான் என்று அனுமானம் செய்து கொள்ளலாம். இவ்வாறு ஆராய்வதை விட்டுவிட்டு ஒரு மஹானுக்கு பக்ஷபாதம் இருக்கிறது என நினைப்பது தவறு. ஜீவன் முக்தருக்கு அடைவதற்கு ஒன்றுமில்லை. “இவன் எனக்கு வேண்டியவன். ஆகவே இவனுக்கு அருள்புரிய வேண்டும். இவன் எனக்கு வேண்டாதவன். ஆகவே இவனுக்கு க்ருபை வேண்டாம்” என்றெல்லாம் அவர் நினைக்கமாட்டார். ஒருவனுக்கு அனுக்ரஹம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களுக்குப் பயன் ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்கள் அடைய வேண்டியதை அடைந்தவர்கள்.
சி : ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் தான் பகவானின் அருளைப் பெறுகிறானென்றால் அருளும் புண்ணியத்தால் வாங்கப்படும் பொருள் போலன்றோ ஆகிவிடும்?
ஆ : ஒரு தீபத்தின் ஒளி சுற்றியுள்ள இடங்களில் விழுகிறது. ஒருவன் அந்த ஒளியை உபயோகப்படுத்தி சாஸ்திரங்களைப் படித்துக் கொள்ளலாம். மற்றொருவன் அதில் கவனம் செலுத்தாமல் தூங்கிக் காலம் கழிக்கலாம். இதேபோல் மஹான்கள் எப்போதும் அருள்புரிந்து கொண்டு வருகிறார்கள். அவனவன் அவனவனது மன நிலையைப் பொறுத்துப் பயனடைவான். ஒருவன் குளத்திற்குப் பெரிய குடம் கொண்டு சென்றால் அதிக அளவு நீர் எடுத்து வரலாம். சிறிய குடம் கொண்டு சென்றால் நீர் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது என்று சொன்னதால் குளத்திற்குக் குடமே ஓர் எல்லை என்று கூற முடியாது. முற்பிறவியில் புண்யம் செய்திருந்தால் ஒருவனுக்கு மஹானின் சஹவாசம் கிடைக்கலாம். அதே சமயம் அவன் அதை உபயோகப்படுத்தாமலுமிருக்கலாம். ஆனால் மற்றவனுக்கு அவ்வளவுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கா விட்டாலும் முடிந்த அளவிற்கு உபயோகப்படுத்திக் கொண்டு சிறிது காலத்தில் மஹானின் அனுக்ரஹத்திற்கு விசேஷமான பாத்திரமுமாகலாம்.
சி : குரு, சிஷ்யன் ஒருவனுக்குத் தன் பாதுகையை அனுக்ரஹித்து அருளியிருந்தால் பாதுகையை அந்த சிஷ்யன் எவ்வாறு பூஜிக்க வேண்டும்?
ஆ : ஸாக்ஷாத் குருவிடம் எந்த மரியாதையைக் காட்டுவானோ அதே மரியாதையை பாதுகையிடமும் காட்ட வேண்டும். முழு சிரத்தையுடன் பாதுகையை வணங்கிப் பாதுகையின் மேல் சந்தனமும் புஷ்பமும் வைக்க வேண்டும். தினந்தோறும் பாதுகைக்கு அபிஷேகம் செய்வது ஒரு வகையில் நல்லது என்றிருந்தாலும், அந்தப் பாதுகை மரத்தால் செய்ததாக இருந்தால் சிஷ்யனும் அந்தப் பாதுகை தன்னிடம் நீண்ட காலம் இருக்க வேண்டுமென்று கருதினால், தினந்தோறும் அப்பாதுகையை அபிஷேகம் செய்தால் அஃது எவ்வளவுக்குப் பொருத்தம் என்பதை அவனே தீர்மானம் செய்து கொள்ளலாம். குருவின் பாதுகையை சிரத்தையுடன் வணங்கினாலோ குருவின் பாதுகையிடம் சிரத்தையுடன் பிரார்த்தித்தாலோ, ஸாக்ஷாத் குருவிடம் அவ்வாறு செய்த பலன் கிடைக்கும். ஆதலால் பாதுகை விஷயத்தில் கவனக்குறைவாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
சி : குருவின் பாதுகையின்மேல் தியானம் செய்ய வேண்டுமென்று ஒரு சிஷ்யன் கருதினால் எவ்வாறு செய்யலாம்?
ஆ : குரு பாதுகையை அணிந்து கொண்டிருக்கிறார் என்று கருதி பாதுகையுடன் அவர் பாதங்களைச் சிந்திக்கலாம்.
சி : குருவின் ஸந்நிதியில் சிஷ்யன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
ஆ : குருவிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது குருவின்
சேவையைச் செய்துவர வேண்டும். ஆனால் அதற்குமுன் அவரது அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மனஸில் ஏதாவது ஸந்தேகம் ஏற்பட்டால் குரு வேறு காரியங்களில் ஈடுபடாதிருக்கும் நேரத்தில் அவரிடம் கேட்கலாம். அவரிடம் பாடம் கற்றுக் கொள்வது நமது பெரிய பாக்யம் என்று கருதி, பாடத்தில் மிகுந்த சிரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அவர் தரும் உபதேசங்களை மறக்காமல் மனத்தில் வைத்துக் கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment