ஆதி சங்கரர் சொன்ன நான்கு விஷயங்கள்
ஆதிசங்கரர் பாரத பூமியில் அவதாரம் செய்யவில்லை என்றால் ஸநாதன தர்மம் மிக க்ஷீணமாகப் போயிருக்கும். இன்றைய தினம் நாம் எல்லோரும் இவ்வாறு ஸத்விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்ப்பே வராமலிருந்திருக்கும். எதனாலே? ஆதிசங்கரரின் அவதாரத்திற்கு முன்பு இந்த தேசத்தின் பரிஸ்திதி சூழ்நிலை மிகவும் விபரீதமாக இருந்தது. அதாவது ஸநாதன தர்மத்திலும் தர்மத்திற்கு மிகவும் ப்ரமாணமாக இருக்கக் கூடிய வேதங்கள் விஷயத்திலும் ஜனங்களுக்கு விஸ்வாசம் இழந்து விட்டது. எல்லோரும் தங்களுக்கு பிடித்ததை தர்மம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவனும் புதிது-புதிதாக ஒன்றை இதுதான் சித்தாந்தம் என்று ப்ரசாரம் செய்து கொண்டு இருந்தான். அப்பேர்ப்பட்ட ஸந்நிவேசத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார். அவர் முக்யமாக ஸநாதன தர்மத்தின் பெருமையை ஜனங்களுக்கு போதித்தார். தர்மம் என்றால் என்ன என்கிற விஷயத்தைத் தெளிவாக ஜனங்களுக்கு சொல்லித் தந்தார். வேதங்களின் பெருமை எவ்வளவு என்பதைச் சொன்னார். இந்த வாழ்க்கை எப்படி சார்த்தகமாகும் என்கிற விஷயத்தை சொன்னார். ஸன்மார்கத்தை காட்டினார். அப்பேர்ப்பட்ட மஹா கார்யத்தை உலக சரித்திரத்திலேயே ஆதிசங்கரர் ஒருவர்தான் செய்தார். அதனாலேதான் அவதாரமாகி 1200 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆதிசங்கரருடைய பெயர் முழு உலகத்திலேயே ஒரு அசாதாரண-அபாரமான தபஸ்வி என்று ப்ரசாரத்தில் இருக்கிறது. ஆதிசங்கரர் நித்ய ஜீவனத்தில் அனுசரிக்கவேண்டியவை என்ன என்கிற ப்ரச்னைக்கு பதிலை மிக அழகாகச் சொன்னார்.
உலகத்தில் அநேகம் பேருக்கு ஒரு ப்ரமை உண்டு “ஆதிசங்கரர் ஏதோ சில பண்டிதர்களுக்குத் தெரியும்படியாகத்தான் புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார். ரொம்பப் பெரிய வேதாந்த சர்ச்சை, நமக்கு யாருக்கும் புரியாத விஷயம். சாதாரண மனிதர்கள் அவருடைய த்ருஷ்டியிலே இல்லை. சாதாரண மனிதர்களுக்காக அவர் ஒன்றும் சொல்லவில்லை” என்ற ப்ரமை.
ஆதிசங்கரருடைய த்ருஷ்டி ரொம்ப விசாலமானது. உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நன்மை உண்டாக வேண்டும், ஸ்ரேயஸை அடையவேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். அதனால் அவர் பாஷ்யங்களை எழுதியதோடு நிற்கவில்லை. மிக எளிமையான ஸ்தோத்ரங்களையும், மிக சுலபமாகப் புரியும்படியான உபதேசங்களையும் எழுதி வைத்தார். நான் அநேக இடங்களில் ஆதி சங்கரரைப் பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்வேன். பெரிய வகுப்புக்குப் பாடம் சொல்கிற ஆசிரியரிடம் சிறிய வகுப்புக்கு பாடம் சொல்லச் சொன்னால் முடியாது என்பார். ஆதி சங்கரர் அப்படி இல்லை அவர் வி.கி வகுப்புக்கும் பாடம் சொல்வார். 1ம் வகுப்புக்கும் சொல்லுவார். அப்பேர்ப்பட்ட கருணை ஆதிசங்கரருக்கு உண்டு. அதனால் பெரிய பெரிய பாஷ்ய நூல்களை எழுதியதோடு மிக தெளிவான ப்ரகரணநூல்களையும் எழுதி ஜனங்களுக்கு மஹோபகாரம் செய்தார். நாம் கேட்டுக் கொண்ட கேள்வி என்ன? சாதாரண மனிதனுக்கு ஆதிசங்கரருடைய உபதேசம் என்ன? அதற்கு அவர் சொன்னார் “நான்கு விஷயங்களை சொல்கிறேன் அப்பா! இதை ஒவ்வொருவனும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே வாழ்க்கையை நடத்த வேண்டும்”. என்ன நான்கு விஷயங்கள்? “நமக்கு எவ்வளவோ சமயம் கிடைக்கிறது அல்லவா? அந்த சமயத்தை நாம் வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம். யாரும் எந்த வேலையிலும் 24 மணி நேரமும் வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. வேலை இல்லாத சில நேரமும் கிடைக்கும் அந்த நேரத்தில் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள்? பலர் அதை வ்யர்த்தமாகத்தான் (வீணாக) கழித்துக் கொண்டு இருப்பார்கள். வ்யர்த்தமாக போக்கிக் கொண்டு இருப்பார்கள் என்பதற்கு என்ன அர்த்தம்? வேண்டாத கதை புஸ்தகங்கள் படிக்கவோ அல்லது சினிமாவுக்குப் போகவோ டி.வி. பார்க்கவோ அல்லது அநாவஸ்யமான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கவோ செய்வார்கள். அதே சமயத்தை ஒரு பவித்ரமான க்ரந்தத்தைப் படித்து நம்முடைய ஆத்மோத்தாரத்திற்கு வேண்டிய மார்க்கத்தைத் தெரிந்து கொள்வோம் என்கிற ஆவல் இருந்தால் அதற்காக அந்த சமயத்தை வினியோகம் செய்தால் எவ்வளவு நல்லது! அதைப்படிக்கவேண்டும், உடனே ப்ரச்னை வரும். நம் எல்லோருக்கும் ('ஹிந்து') மிக கௌரவத்துக்கும் மிக ஆதரவுக்கும் பாத்திரமான பவித்ரமான க்ரந்தம் பகவத் கீதை. அப்பேர்ப்பட்ட பகவத் கீதையை உனக்கு சமயம் கிடைத்த பொழுதெல்லாம் படித்தாயானால் உனக்கு எவ்வளவு ஸ்ரேயஸ்! கீதையில் பகவான் க்ருஷ்ண பரமாத்மா எவ்வளவோ உபதேசங்களைச் சொல்லி இருக்கிறார். உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் அவ்வளவையும் சுருக்கமாக பகவான் க்ருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கிறார்.
அதுதான் பகவத் கீதையின் பெருமை. உபநிஷத்துகளெல்லாம் பார்த்துப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால் அதுவே பகவத் கீதையைப் பார்த்தால், படித்தால் நாம் மிக அழகாகப் புரிந்து கொள்ளலாம். சாஸ்திரத்தின் ரகஸ்யம் என்ன? மனிதனுடைய
வாழ்க்கைக்கு லக்ஷ்யம் என்ன? நாம் இருக்க வேண்டியது எப்படி? ஆத்மா என்றால் என்ன? இந்த கேள்விகளுக்கு நாம் பகவத் கீதையில் அழகான ஜவாபுக்களைப் பார்க்க முடியும். ஆகையினாலேயே ஆதி சங்கரர் சொன்னார் “உனக்கு சமயம் கிடைத்த பொழுதெல்லாம் பகவத் கீதை மாதிரி பவித்ரமான க்ரந்தங்களை படித்து அந்த சமயத்தை போக்க வேண்டும்.”
மனிதனுடைய ஜீவிதத்தில் மிக அமூல்யமான பொருள் சமயம் ஒன்றுதான். வேறு எந்தப் பொருளும் காணாமல் போனால் அல்லது தொலைந்து போனாலும் அதைத் திரும்ப அடைய முடியும். நம்முடைய எவ்வளவு அமூல்யமான நகையானாலும், பணமானாலும், சொத்தானாலும், எதுவானாலும் காணாமல் போய்விட்டது, அல்லது தொலைந்து போய்விட்டது என்றால் அதை ரொம்ப முயற்சி பண்ணினால் சம்பாதிக்க முடியும். ஆனால் சமயம் என்பதை மட்டும் சம்பாதிக்க முடியுமா? ஒருவனுக்கு பகவான் நூறுவருஷம் ஆயுள் கொடுத்திருந்தாலும் அவனுடைய ஆயுளில் ஒருநாள் போய்விட்டது என்று சொன்னால் இனி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த ஒரு நாளை சம்பாதிக்க முடியுமா? இனி அவனுடைய ஆயுளில் 99 வருஷம் 11 மாசம் 29 நாட்கள் தான். அந்த 30 வது நாள் போய்விட்டது. அப்படி நம்முடைய ஜீவனத்தில் சமயம் என்பது அமூல்யமானது, துர்லபமானது. அந்த சமயத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோமே! இது நமக்கு நியாயமா?
மனிதன் ரொம்ப விவேகி. “எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது? நாம் எப்படி இருக்க வேண்டும்”? இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப யோசித்துத் தீர்மானம் செய்யக் கூடிய சக்தி உள்ளவன் மனிதன். அதனால் தான் அவனை 'விவேகி' என்று சொல்வோம். விவேகியான நீ உன்னுடைய சமயத்தை வ்யர்த்தமான விஷயங்களில் போக்கினால் அது நியாயமல்ல. பின்பு என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த பகவத் கீதை முதலான பவித்ரமான க்ரந்தங்களைப் படிப்பதில் உன் சமயத்தைக் கழிக்க வேண்டும். அதேபோல் பகவானுடைய பவித்ரமான நாமத்தை ஜபிப்பதில் உன் சமயத்தைப் போக்க வேண்டும். பகவானுடைய நாமத்தை சொல்லவேண்டும் என்று சொன்னால் அதற்கு நாம் அதிகமான கஷ்டப் பட வேண்டியது இல்லை. பணம் செலவும் ஒன்று இல்லை. ரொம்ப ஸ்ரமப்படவேண்டும் என்றும் இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே பகவானுடைய நாமத்தை சொல்லலாம்.
முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்
(நமஸ்சிவாய மந்த்ரோயம்
வாகேஷா வச வர்த்தினி
அஹோ மோஹஸ்ய மாகாத்ம்யம்
நவர ஸந்தேன பஸ்யதி)
வாகேஷா வச வர்த்தினி
அஹோ மோஹஸ்ய மாகாத்ம்யம்
நவர ஸந்தேன பஸ்யதி)
“நமஸ்சிவாய” என்கிற ஐந்து அக்ஷரங்களை உச்சாரணம் செய்வதற்கு ஒரு ஸ்ரமும் கிடையாது. இதில் ஒன்றும் கடினமான அக்ஷரம் ஒன்றும் இல்லை. இதைச் சொன்னால் பெரிய புண்ணியம் கிடைக்கும். நம்முடைய ஜன்மம் சார்த்தகமாகும். ஆனால் மனிதர்களுடைய ஒரு தௌர்பாக்யம் என்னவென்றால் எவ்வளவோ பேச்சுக்களை பேசிக் கொண்டு இருப்போமே தவிர இந்த பகவன் நாமத்தைச் சொல்வதற்கு மட்டும் மனது வராது. இதற்கு மகா மோகம் என்று சொல்ல வேண்டுமே தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த நாமம் சொல்ல ஒரு கஷ்டமும் இல்லை. நமக்குச் சொல்வதற்கு முடியாது. நமக்கு வாயிலே நுழையாது என்பதும் இல்லை. நமக்கு சமயம் கிடைக்காது என்பதும் இல்லை. இப்படி இருந்தும் நாம் இதை சொல்ல மாட்டோம் என்றால் “அஹோ மோஹஸ்ய மாஹாத்ம்யம்” எவ்வளவு மோகத்திலே மனிதன் இருக்கிறான். தனக்கு இவ்வளவு சௌகர்யம் இருந்தும் கூட இதை உபயோகம் செய்துகொள்ள மாட்டேன் என்கிறானே? அதுதான் ஆதிசங்கரர் ஒரு இடத்தில் சொன்னார் “ஐயா! உன்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமாகப் போய் விடுகிறது. நீ என்னவெல்லாமோ பண்ணிக் கொண்டு இருக்கிறாய் உனக்கு என்ன வேண்டும் என்பதை மட்டும் யோசிக்க மாட்டேன் என்கிறாயே! இது எங்கேயாவது உண்டா?” அவர் சொல்கிறார்
“இத ஹ் கோன் வஸ்தி: மோஹாத்மா யஸ்தி ஸர்வார்த்தே ப்ரமாத்யதி”
நல்ல விஷயத்தையே மறக்கக்கூடிய அவிவேகி யாராவது இருப்பார்களா? எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு இந்த சரீரத்திலேயிருந்து ப்ராணன் போனதற்கும் பிறகு உன் விஷயம் என்ன ஆகப் போகிறது என்பதை யோசனை பண்ணவே மாட்டேன் என்கிறாயே? உனக்கு ஒரே சரீரம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாயா? எத்தனையோ ஆகிவிட்டது. இனி எத்தனையோ வரப் போகிறது.
பகவான் சொன்னார் -
(பஹுனி மே வ்யதீதாந ஜன்மானி தவ சார்ஜூந
தான்யஹம் வேத ஸர்வாணிந த்வம் வேத்த பரந்தப)
சர்வான் தத்வம் வேததான்யஹம்)
தான்யஹம் வேத ஸர்வாணிந த்வம் வேத்த பரந்தப)
சர்வான் தத்வம் வேததான்யஹம்)
“இங்கு பார் உனக்கு எத்தனையோ ஜன்மங்கள் ஆகிவிட்டது. உனக்கு அது ஒன்றும் தெரியாது” என்றார் பகவான். அதேபோல் நாம் இந்த சரீரத்தை விட்ட பிறகு என்ன ஆகப் போகிறது? அங்கேயும் நாம் சௌக்யமாக இருக்கவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்வியை யாருமே கேட்டுக் கொள்வது இல்லையே? இதைத் தவிர மீதி விஷயங்களைப் ப்ற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்களே! இது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார் பகவத் பாதர் ஆதி சங்கரர்.
நாம் இந்த சரீரத்தை விட்டபிறகு இன்னொரு சரீரத்தில் ப்ரவேசிக்கப் போகிறோம். அங்கேயும் சுகம்தான் வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அங்கே நமக்கு கிடைக்க வேண்டிய சுகம் நாம் இந்த ஜன்மத்திலே ஏதாவது தர்மத்தை செய்திருந்தால் தான் கிடைக்கும். அது இல்லாமல் தர்மம் என்கிற வார்த்தையைப் பற்றியே பேசாமல் பகவான் என்கிற நாமத்தைப் ப்ற்றியே பேசாமல் ஏதோ நாமும் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அதனால் நமக்கு ஒன்றும் ஆகாது. பரலோகத்தில் சகாயம் செய்யக் கூடியது இந்த தர்மம் என்கிற ஒன்று தான்.
(ம்ருதம் சரீரம் உத்ஸ்ருஜ்ய காஷ்ட லோஷ்ட ஸமங்க்ஷிதௌ
விமுகா பாந்தவா யாந்தி தர்மஸ்த மனுகச்சதி)
விமுகா பாந்தவா யாந்தி தர்மஸ்த மனுகச்சதி)
இந்த சரீரத்திலேயிருந்து ப்ராணன் போய்விட்டது என்று சொன்னால் நீங்கள் யாரையெல்லாமோ பந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களுக்கு என்ன வெல்லாமோ கொடுத்து வைத்திருக்கிறீர்களே அவர்கள் எல்லோரும் இந்த சரீரத்திலேயிருந்து ப்ராணன் போன பிறகு ஒரு மணி நேரம் கூட அந்த வீட்டில் இந்த சரீரத்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். உடனே பூமிக்கோ, அக்னிக்கோ சமர்ப்பணம் பண்ணி விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவார்கள். பின்பு உன் கதியை யார் பார்க்கப் போகிறார்கள். என்று சொன்னால் “தர்மஸ்தமனுகச்சதீ”. “நீ“ போன பிறகு கூட உன்னுடன் வரக் கூடியது “நீ” இன்றைக்கு செய்கிற தர்மம் தான். இதை மட்டும் என்றைக்கும் ஞாபகம் வைத்துக் கொள். இதை மறக்காதே என்று சாஸ்த்ரங்கள் ஸ்பஷ்டமாகச் சொல்கின்றன. ஆதி சங்கர பகவத் பாதரும் அந்த சந்தேசத்தை நமக்கு சொன்னார்.
ஆகையினாலே உனக்குக் கிடைக்கக் கூடிய சமயத்தை நீ சார்த்தகம் ஆக்க வேண்டியிருந்தால் பகவானுடைய நாமத்தை சொல்வதோ, பகவத் கீதை படிப்பதோ முதலான காரியங்களைச் செய். பகவானுடைய நாமத்துக்கு அவ்வளவு மகிமை இருக்கிறதோ? என்று கேட்டால் இருக்கிறது.
பாகவதத்தில் ஒருகதை, அஜாமிளன் என்று ஒரு பெரிய ராக்ஷஸன் இருந்தான். அவன் செய்யாத பாவம் கிடையாது. எல்லாப் பாவங்களையும் செய்து இருக்கிறான். ஆனால் அவன் என்ன பண்ணினான் என்றால் அவனுடைய பையனுக்கு 'நாராயணா' என்று பெயர்வைத்து விட்டான். அவன் கடைசியிலே சாகும்போது பகவானைக் கூப்பிட வேண்டும் என்று அவனுக்கு எண்ணம் இல்லை. மகாபாபி அல்லவா? ஆனால் தன் பிள்ளை மீது அதிகமான பாசம். அதனால்தன் பிள்ளையைக் கடைசியிலே பேர் சொல்லி கூப்பிட்டு விட்டு ப்ராணனை விட்டு விட்டான் “நாராயணா” என்றான். ப்ராணன் போய் விட்டது. இதை பகவானைக் கூப்பிடணும் என்பதற்காக அல்ல. தன்னுடைய பிள்ளையைக் கூப்பிடவேண்டும் என்பதற்காக. “நாராயணா” என்கிற நான்கு அக்ஷரங்களைச் சொல்லி ப்ராணனை விட்ட உடனே அவனுக்கு பகவானுடைய சாந்நித்யம் கிடைத்து விட்டது. இது பாகவதத்தில் ஸ்பஷ்டமாக இருக்கிறது. நான் இதை நம்ப மாட்டேன் என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் எதை நம்புவார்கள் என்று முதலில் தெரிய வேண்டும். நம்பிக்கை என்கிற ஒன்று இல்லையென்றால் இந்த வாழ்க்கையை நடத்தவே முடியாது. அநேகம் பேர் சொல்வார்கள் நான் என் கண்ணால் பார்த்ததைத்தான் நம்புவேன். நான் என் கண்ணால் பார்க்க வில்லையென்றால் நம்ப மாட்டேன். அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்- “உனக்கு அப்பா இருந்தாரா?” “இருந்தார்” “தாத்தா இருந்தாரா?” “இருந்தார்”. அது
எப்படி தாத்தா இருந்தார் என்று சொல்வாய், உன் தாத்தாவை நீ பார்த்தாயா? நான் பார்க்கவில்லை. எங்க அப்பா சொன்னார். ஓய்! உனது அப்பா சொன்னார் என்பதால் மட்டும் தாத்தா இருந்தார் என்பதை ஒத்துக் கொள்கிறாயே? சாஸ்த்ரம் சொல்கிறது என்பதை மட்டும் பகவான் விஷயத்தையும் ஒத்துக்கொள்ளமுடியாது என்கிறாயே? யாரை ஏமாற்றுவதற்கு இந்தக் கேள்வி கேட்கிறாய் அப்பா! உன்னைத்தான் நீ ஏமாற்றிக் கொள்கிறாயே தவிர இன்னொருவனை ஏமாற்ற முடியாது. நம்பிக்கை என்பது இல்லாமல் இந்த வாழ்க்கையை நடத்தவே முடியாது.
அப்படி இருக்கும்போது நான் ராமாயணத்தை நம்ப மாட்டேன், எதையும் நம்ப மாட்டேன் என்று நாஸ்திகன் மாதிரி வாழ்க்கையை நடத்துகிறேன் என்றால் அதுவும் ஒரு வாழ்க்கையா? எத்தனையோ ப்ராணிகள் தெருவில் போய்க் கொண்டு இருக்கின்றன. அதுவும் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறது. ஒரு காகம் எத்தனையோ நாட்கள் ஜீவிக்கிறது. அது உன்னை விட ஒன்றும் குறைந்துவிடவில்லை. தன்னுடைய ஆஹாரத்தைத் தானே சம்பாதிக்கிறது. தன்னுடைய குஞ்சுகளுக்கும் கொடுக்கிறது. அதனாலே அப்பேர்ப்பட்ட வாழ்க்கை நம் வாழ்க்கை ஆகக் கூடாது. நம்முடைய ஒரு ஆஸ்திக பரம்பரை எத்தனையோ நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது நாம் ஒரு பவித்ரமான பரம்பரையைச் சேர்ந்து இருக்கிறவர்கள். இந்த பரம்பரைக்கும், இந்த தர்மத்திற்கும் அனுசாரமாகத்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும். நாம் நினைக்கிறோம், நம் முன்னோர்களுக்கு புத்தியில்லை. நான் ரொம்ப புத்திசாலி, நான் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறேன். நம்முடைய முன்னோர்களுக்கு புத்தியில்லை என்கிற அளவுக்கு நமக்கு புத்தி வந்துவிட்டது என்று நாம் நினைக்கிறோமே அது பெரிய அவிவேகம் அல்லவா?
நம்முடைய முன்னோர்கள் எழுதிய க்ரந்தங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய சக்தி கூட நமக்கு இல்லை. நம் முன்னோர்கள் புத்தியில்லாமலா, விவேசனா சக்தி இல்லாமலா சும்மா குருட்டுத்தனமாக தர்மத்தை அனுஷ்டித்தார்கள்? பகவானை வழி பட்டார்கள்? அவர்கள் ரொம்பவும் யோசனை செய்து ரொம்ப விவேகிகளாக இருந்து தான் தர்மத்தை அனுஷ்டித்தார்கள்.
ஆகையினாலே இந்த ஆஸ்திக்யத்தைப் பற்றி பேசுகிறபோது தர்மத்தைப் பற்றி பேசுகிற போது நாஸ்திக த்ருஷ்டி (பார்வை) நமக்கு வரக் கூடாது. அதுதான் என்னுடைய மனதில் இருக்கக் கூடிய அபிப்பிராயம். நம்முடைய பரம்பரைக்கு, நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்க்கு விருத்தமான பாவங்கள் நம் மனதில் வரக் கூடாது. பாகவதத்திலே வந்த அஜாமிளன் உபாக்யானம் சொல்கிறபோது நான் அதை நம்பமாட்டேன் என்பது சரியல்ல. பகவானுடைய நாமத்துக்கு அவ்வளவு மகிமை இருக்கிறது. அந்த மகிமையை அறியாமல் அந்த நாமத்தை சொன்ன மாத்ரத்திலேயே அவ்வளவு சாந்நித்யம் கிடைத்து விடும் போது இனி அந்த நாமத்தின் மகிமையைத் தெரிந்து கொண்டு நாம் அந்த நாமத்தை உச்சரித்தால் நமக்கு எவ்வளவு புண்ணியம் வரும்! விவேகிகளல்லவா நாம்?
அதனால் பகவன் நாமத்திற்க்கு மிகவும் மகிமை இருக்கிறது. அந்த நாமத்தை உச்சரிக்கிறது கஷ்டம் இல்லை. உச்சரிப்பதற்கு வேண்டிய சக்தி நமக்கு இருக்கிறது, அதற்கு வேண்டிய சமயமும் கிடைக்கிறது என்கிறபோது அந்த சமயத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் என்று பகவத் பாதாள் சொன்னார். அதே போல் நாம் எத்தனையோ சமயங்களில் நமக்கு வேண்டாத விஷயங்களையே யோசனை செய்வோம் நமக்கு சம்பந்தமே இல்லாதவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்போம். அதனால் மனதில் என்ன ஆகிறது? ஒரு விக்ஷேபம் வரும் விக்ஷேபம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள் இந்தக் காலத்து பாஷையிலே ஞிவீstuக்ஷீதீணீஸீநீமீ என்று சொல்வார்கள். அந்த அனாவஸ்யமான ஒரு விக்ஷேபம் மனதுக்கு ஏற்படுகிறது. நமக்கு நிம்மதி கெடுகிறது. அதே சமய்த்தில் ஈஸ்வரனைப் பற்றியே சிந்தித்தால், பகவானைப் பற்றியே மனத்தில் திரும்பத்திரும்ப த்யானித்தால் எவ்வளவு ஆனந்தம் உண்டாகும்? பகவானுக்கு வாஸ்தவமாக ரூபம் என்பது ஒன்றும் இல்லாவிட்டாலும் பக்த ஜனங்களை அனுக்ரஹிப்பதற்காக அநேக விதமான ரூபங்களை பகவான் எடுத்துக் கொண்டு இருக்கிறான். பகவான் கீதையிலேயே சொல்லி இருக்கிறான் -
(அஜோபி ஸந்நவ்ய யாத்மா பூதானாம் ஈச்வரோஸபிஸந்
ப்ரக்ருதிம்(ஸ்)வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்ம மாயயா)
ப்ரக்ருதிம்(ஸ்)வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்ம மாயயா)
எனக்கு எந்தவிதமான உற்பத்தி வினாசங்கள் (அழிவு) கிடையாது. நான் என்றும் ஒரே மாதிரி இருக்கக் கூடியவன்தான். ஆனால் அநேக சமயங்களில் அநேக உருவங்களை எடுத்துக் கொள்வேன். பக்த ஜனங்களுக்கு அவர்களுடைய சௌகர்யத்திற்காக என்று சொன்னார். அந்த மாதிரி உருவங்கள்தான் ஸ்ரீராமச்சந்திரன் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீந்ருஸிம்மர், ஈஸ்வரன், தேவி, கணபதி, முருகன் முதலானவை.
ஒரு நான்கைந்து நாட்கள் முன்பு ஒருவர் என்னிடம் வந்தார். அவர் கேட்டார் “ஸ்வாமீஜீ, நம்முடைய மதத்தில் அநேக கடவுள்கள் அல்லவா? அதில் எந்தக் கடவுளை நாம் உபாஸனை அதில் பண்ணவேண்டும். எனக்கு தீர்மானம் செய்யவே முடிவதில்லை. தயவு செய்து தாங்கள் சொல்லுங்கள்”. என்று சொன்னார். நான் சொன்னேன், “அநேக கடவுள்கள் என்பது வாஸதவம் அல்ல. இருக்கிறது ஒரே கடவுள், அவனுக்கு அநேக ரூபங்கள், நீ ஒரு ரூபத்தை எடுத்துக் கொண்டால் (உனக்கு) அவனுக்கு மனத்திற்கு இஷ்டமாகும் என்று நினைக்கிறாய்? வாஸ்தவமாக அநேக கடவுள்கள் என்று நினைப்பதால் தான் உனக்கு அந்த சம்சயம். இருக்கிறது கடவுள் ஒருவர்தான் எந்த ரூபத்தை நீ உபாஸனை செய்தாலும் அதிலே ஒன்றும் ஆக்ஷேபணை இல்லை. ஒரு திதிப்பு சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. சர்க்கரையைப் போட்டு அநேக விதமான பக்ஷணங்கள் செய்து வைத்து இருக்கிறார்கள். எல்லாம் சர்க்கரையினால் தான் பண்ணி இருக்கிறார்கள். இதில் எந்த பக்ஷணத்தைச் சாப்பிடவேண்டும் என்று ஒரு பெரிய ப்ரச்னையாக இருக்கிறது. என்று சொன்னால் அவனுக்கு நாம் என்ன சொல்ல வேண்டும்! எல்லாம் ஒரே சர்க்கரையினால் செய்த பக்ஷணங்கள் ஆனதினால், நீ எந்த பக்ஷணத்தைச் சாப்பிட்டாலும் சர்க்கரையினுடைய திதிப்பு உனக்கு கிடைக்கும். அதில் உனக்கு எந்த விதமான ப்ரச்னைக்கும் அவகாசம் இல்லை. நான் இதைச் சொன்ன உடனே அவருக்கு மிகவும் மனதிற்கும் த்ருப்தியாகி விட்டது. எனக்கு ரொம்ப நாளாக இந்த ப்ரச்னைக்கு ஜவாபே கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருந்தேன். நீங்கள் கொடுத்த உதாரணத்தை அனுசரித்து பார்த்தால் மிக அழகாக இருக்கிறது. என்னுடைய ப்ரச்னைக்கு சமாதானம் கிடைத்தது” என்று சொன்னார். ஆகையால் பகவான் ஒருவரே. அவருடைய ரூபங்கள் பல ராம, ராமா, என்று சொல், சிவ, சிவா, என்று சொல் முருகா, முருகா என்று சொல், கணேசா, கணேசா என்று சொல்.
(ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி)
எந்த தெய்வத்தை நமஸ்கரித்தாலும் கேசவனையே அடைகிறது” பகவானுடைய நாமத்தை தான் சொல்ல வேண்டும். வேறு வ்யர்த்தமான பேச்சுக்கள் பேச வேண்டாம் என்கிறது தான் முக்யமான அபிப்ராயம். அதே போல் மனதில் பகவானைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும் வேறு எதையும் சிந்திக்கக் கூடாது.
நான் ஆரம்பத்தில் சொன்னேன் ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் என்று.
1. முதலில் சொன்னது: பகவானுடைய நாமத்தை ஜபி.
பகவத் கீதையைப் படி,
பகவத் கீதையைப் படி,
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய், வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே. இதே 2வது விஷயம்.
3. மூன்றாவது விஷயம்: நீ சகவாசம் செய்வதாயிருந்தால் நல்ல மனிதர்கள் சகவாசத்தில் இரு. யார் நல்ல மனிதர்கள், பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவரகளுடன் கொஞ்ச நாட்கள். சகவாசம் பண்ணியதற்குப் பின்பு தான் அவர்களுடைய நிறம் குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம் அதற்கு சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கிறது. நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் - @tமீ sஜிஜீuங;ணீ> ஜீக்ஷீணீஷ்ஸி .....sஸ்ணீஸிஷ்ணீஸிஸீ! ஜீவீக்ஷீஜிஹ்யிஹ் (ஏதே ஸத் புருஷா பரார்ந்த திடளா: ஸ்வார்த்தானன் பரித்யஜ்ய).
அதாவது முக்யமாக இன்னொருவனுக்கு உபகாரம் செய்யவேண்டும் என்கிற பாவம் உள்ளவர்கள். நல்லவர்கள். ஆனால் அதிலேயும் அநேக வித்யாஸங்கள் உண்டு, இன்னொருவனுக்கு உபகாரம் செய்யவேண்டும். நாம் இன்று அவனுக்கு ஒரு உபகாரம் செய்தால் திரும்ப அவனிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசனை செய்வார்கள். அவர்களை ஸத் புருஷர்கள் என்று நாம் சொல்லவில்லை. திரும்ப அவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் அவனுக்கு உபகாரம் செய்யவேண்டியது என் கடமை. என்று நான் செய்கிறேன் என்று யார்சொல்வார்களோ அவர்கள் ஸத்புருஷர்கள். அந்த விஷயத்தில் ராமாயணத்தில் ஒரு ஸந்நிவேசத்தை நாம் ஞாபகப் பசத்திக் கொள்ள வேண்டும். ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமசந்திரருடைய மனைவி சீதா தேவியை ராவணன் என்கிற ராஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமசந்த்ரருக்கு உபகாரம் செய்தது ஹனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய ஸமுத்ரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு, பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி கீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து
ராமருக்கு கொடுத்து மஹோபகாரம் செய்தவர் ஹனுமார். அந்த ஹனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார்.
(மய்யேவ ஜீர்ணதாம் யாதுர் யத் வையோபக்ருதம்வரே
நப்ரத்யுப காரார்த்தி: விபத்தி நபிகாங்க்ஷதி)
நப்ரத்யுப காரார்த்தி: விபத்தி நபிகாங்க்ஷதி)
என்று ராமர் சொன்னார். இங்கு பாரப்பா, நீ எனக்கு செய்த உபகாரத்தை நீ மறந்துவிடு. இப்படிக் கேட்டால் எல்லோருக்கும் ஆச்சர்யமாகும். என்ன ஓய்! இவ்வளவு பெரிய உபகார்தை என்னிடம் வாங்கிக் கொண்டு அதை நான் மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாரே. ஆனால் ராமர் ஒரு காரணத்தைச் சொன்னார். “நீதிரும்ப ஒரு உபகாரம் என்னிடமிருந்து எதிர் பார்க்காதே.” “ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உபகாரம் எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அந்யாயம்? என்ன ஸ்வார்த்தம்,” என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் அவர். ஒரு மனுஷ்யனுக்கு இன்னொரு மனுஷியனுடைய உபகாரம் எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். கஷ்டத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்பதையும் எதிர்பார்க்கிறாய் என்று அரத்தம். இதை எதற்காகப்பா எதிர் பார்க்கிறாய்? நீ சௌக்யமாக சரியாக நன்றாக இருக்க வேண்டியவன் எனக்கு ஒரு கஷ்டம் வரட்டும். அப்போது எனக்கு அவர் உதவி செய்யட்டும் என்று எதற்கு விரும்புகிறாய்?”
(நர ப்ரத்யுபகாரார்த்தி விபதி நபிகாங்க்ஷதி)
அதனால் நீ ப்ரத்யுபகாரத்தை எதிர்பார்க்காதே என்று ராமர் ஹனுமாரிடம் சொன்னாராம். ரொம்பவும் தத்வார்த்தம் இருக்கிற ஸ்லோகம். ஸத்புருஷன் யார் என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம் எவன் இன்னொருவருடைய கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு உபகாரம் செய்வானோ மற்றும் அவனிடமிருந்து திரும்ப உபகாரத்தை அபேக்ஷிக்க மாட்டானோ அவன் ஸத்புருஷன்.அதேபோல் எவன் பகவான் விஷயத்தில் அவ்யாஜமான (காரணமில்லாத) பக்தியை வைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் ஸத்புருஷன்.
“அவ்யாஜமான” என்று ஒரு ஸம்ஸ்க்கு தபத்தைப் போட்டோம். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். அதாவது பகவானை பூஜை செய்வது, பகவானைப் பற்றி சிந்திக்கிறது என்பது இன்னொருவன் பாரக்கவேண்டும் என்பதற்காக எவ்ன செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை நிக்வகிக்கிறேன் என்கிற த்ருப்தி, இதற்காகத் நான் ஈஸ்வரனை உபாஸிக்கிறேனே தவிர இன்னொருவனுக்காக அல்ல. அநேகம் பேர் தான் ஒரு சின்ன தர்மம் செய்தாலும் அதற்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு கோவில் கட்டுகிறோம் கொஞ்சம் நன்கொடை கொடுங்கள் என்று சொன்னால் ஒரு 500 ரூ நன்கொடை கொடுத்துஅதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். அது நியாயமில்லை. நாம் செய்வது ஈஸ்வரனுக்குத் தெரியும் அது போதும். என்னை இவர்கள் யாரும் துதிக்க வேண்டியது இல்லை. அதேபோல் நாம் செய்யக்கூடிய ஈஸ்வர பக்தி நாம் செய்யக்கூடிய ஆராதனை என்னுடைய கர்த்தவ்யத்தை செய்கிறேன் என்கிற த்ருஷ்டியிலேதான் இன்னொருவனுடைய ப்ரஸம்ஸைக்காக அல்ல. இன்னொருவன் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல என்று யார் இருப்பார்களோ அவருடைய பக்தி அவ்யாஜமான பக்தி என்று சொல்லப்படும். அப்பேர்ப்பட்ட அவ்யாஜமான பக்தி பகவத் விஷயத்திலே இருக்கிற அவன் ஸத்புருஷன். அதனால் பரோபகாரமும் பகவத் பக்தியும் ஆகிய இரண்டும் எவனிடம் சரியான ரீதியில் இருக்கிறதோ அவன் ஸத்புருஷன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்பேர்ப்பட்டவருடைய சகவாசத்தில் நீ இருக்க வேண்டும். அப்போது உனக்கும் அதே ஸத்குணங்கள் வரும்.
மனிதனுடைய ஸ்திதி தான் யாருடைய சகவாசத்தில் இருப்போமோ அவனுடைய ஸ்வபாவம் தான் வேண்டும் வரும். ஒருவன் தினமும் சாயங்காலமானால் கோவிலுக்குப்போவான். நாம் அவருடைய சகவாசம் செய்தோமானால் நமக்கும் அதே அப்யாஸம் வரும். அதுவே இன்னொருவனுக்கு சாயங்காலம் என்றால் சினிமாவுக்குப் போகும்
அப்யாஸம் (வழக்கம்) அவனுடைய சகவாஸம் நமக்கு வந்தால் தினமும் சினிமாவுக்குப் போவோம். மனுஷ்யனுக்கு தான்யாருடைய சகவாசத்தில் இருப்பார்களோ அவர்களுடைய குணமானாலும், அப்யாஸமானாலும் அவை நமக்கும் வந்து விடும். அதனால் நீ ஸத்புருஷர்களோடு சகவாசம் செய். உன்னுடைய ஜீவிதம் நல்லதாகும். இது மூன்றாவதாகச் சொல்லி இருக்கிறார். நான்காவதாக சொன்னார், முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். முடிந்த அளவு, நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நீ இப்படி செய்யவேண்டும், அப்படி செய்யவேண்டும் என்று, நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். உபகாரம் செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்கள் பகவானுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவானைப் பற்றி பூஜிக்க வேண்டும். ஸத்புருஷர்களுடைய சகவாஸத்தை செய்ய வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும், இந்த நாலு விஷயங்களை நம் ஜீவிதத்தில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அது தான் ரொம்ப உத்தமம் ஆகும். வாழ்க்கை ஸார்த்தகமாவதற்கு இதுதான் வழி. பகவத் பாதர் சொன்ன வார்தை யாரோ சிலரை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார் என்று நினைக்கவே கூடாது எல்லோருக்காக சொன்னது தான். நமக்கு எல்லோருக்கும் மஹோபதேசங்களை அனுக்கரஹித்து ஸநாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கர பகவத்பாதர். அப்பேர்ப்பட்ட பகவத் பாதசங்கரருடைய விஷயத்தில் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதஜாதியும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை சமஸ்த பாரதத்திலும் மிக வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாக்ஷத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று ஸ்ரேயஸை அடையட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன். பகவத் பாதர் ச்ருங்கேரியில் சாரதா பீடத்தை ஸ்தாபித்து உலகத்துக்கு மஹோபகாரம் செய்தார். அந்த சாரதா பீடம் ஸுரேச்வர ஆசார்யாளில் ஆரம்பித்து ஒரு அவிச்சின்னமான குரு பரம்பரையோடு விளங்குகிறது. அந்த குரு பரம்பரையில் எங்க குருநாதர் ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் அவர் தக்ஷிண பாரதத்திலேயும் உத்தர பாரதத்திலேயும் ரொம்ப விசாலமாக சஞ்சாரம் செய்து ஜனங்களுக்கு தர்மோபதேசங்களை அருளினார்கள். அவர்களைப் போல ஆஸ்திக தர்மத்தை ப்ரபோதம் செய்தவர்கள் பாரதத்தில் யாருமே இல்லை. அப்பேர்ப்பட்ட என்குருநாதரின் உத்தரவின் பேரில் நாங்கள் இந்த தர்ம யாத்திரையை செய்து கொண்டு இருக்கிறோம். இங்கு இருக்கும் மகாஜனங்களுக்கு தர்மோபதேசம் செய்யவேண்டும். இங்கு வந்தோம் உங்களைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டோம். உங்களுக்கு இருக்கக் கூடிய தர்ம ஸ்ரத்தை இன்னும் அபிவிருத்தி ஆகட்டும். பகவானுடைய கடாக்ஷம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கட்டும் என்று சொல்லி இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.
மிகவும் அழகு..
ReplyDelete