ஸ்ரீ வித்யாரண்யர் காலத்தில்தான் சிருங்கேரியில் இப்போது காணப்படும் ஸ்ரீசாரதாம்பாளின் விக்ரஹம் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்ரத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்குப் பின் தோன்றிய பீடாதிபதிகளும் தாங்கள் தபஸ் செய்து ஆத்ம ஸாக்ஷாத்கார வழிகளில் இருந்து கொண்டு உலகத்தைக் காப்பாற்ற வேண்டியதற்காக பல யாத்திரைகள் செய்து, ஸனாதன தர்மத்தை ஆங்காங்கு போதித்துக் கொண்டு எல்லாரும் நிஷ்காம்ய கர்ம மார்க்கத்தில் இருந்து கொண்டு ஆத்ம ஞானத்தைப் பெறும் வழியைப் புகட்டினார்கள். தங்களுடைய தபஸுக்குக் குறைவு ஏற்படாமலிருக்க வேண்டி சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வது அவர்களை நல்வழிப்படுத்துவது முதலிய காரியம் குறையாமல் இருக்க வேண்டி பல கிளை மடங்களைச் சிருங்கேரி பீடாதிபதிகள் பல இடங்களில் ஸ்தாபித்தார்கள்.
சிருங்கேரி பீடாதிபதிகளின் தபோ மகிமையை அறிந்த மைசூர் திப்புசுல்தான் உலக க்ஷேமத்திற்காக இவருடைய அனுக்ரஹத்தை வேண்டி பலதடவை பலனை அடைந்திருக்கிறார் என்பது சரித்திரத்தின் ஆராய்ச்சியாகும்.
இந்த ஸர்வக்ஞ பீடத்தில் 32ஆவது பீடாதிபதியாகத் தோன்றிய ஸ்ரீ நரஸிம்மபாரதீ ஸ்வாமிகளின் பெருமையைச் சற்று கவனிப்போம். இவர் சிருங்கேரியில் ஏழைக் குடும்பத்தில் ஜனித்தவர். சிறுவயதிலேயே சுகத்தைத் தேடாதவர். 20 வயது முடியும் முன்னரே நடைப் பயணமாகக் காசிக்குச் சென்றார். எல்லா சாஸ்திரங்களையும் அங்கு கற்றார். பசி, தூக்கம் என்ற இரு நோய்களைக் கடந்தார். இவர் 40வயது முதல் அன்ன பிக்ஷையை விட்டுவிட்டு பாகற்காயை ஒரே வேளை பிக்ஷையாகக் கொண்டார். எப்போதும் சிருங்கேரியில் குகை போன்ற ஓரிடத்தில் இருந்து கொண்டு தபஸ் செய்வார். ஸ்ரீசந்திரமௌலீசுவர பூஜையை சிஷ்யர்களின் க்ஷேமத்திற்காகச் செய்வார். அப்போது அங்கு கூடிய பக்திமிகுந்த சிஷ்யர்களால் கொடுக்கப்படும் பாகற்காயையே பிக்ஷையாக ஏற்றுக் கொள்வார். மீண்டும் தன்னுடைய தனி இடம் போய்த் தவம் செய்வார்.
ஆனாலும், மடத்தின் நிர்வாகமும், சிஷ்யானுக்ரஹ ரூபமான காரியங்களும் ஒழுங்காக கவனித்து வரப்பட்டன. இவர் பல பாஷைகளைக் கற்றவரானதால் இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சிஷ்யர்களுக்கு அனுக்ரஹமும், உபதேசமும் செய்யும் சந்தர்ப்பம் இவருக்கு வெகுவாக இருந்தது. இவர் சாந்தர். தபஸ் சக்தி நிறைந்தவர். உக்கிரமான தபஸின் மேன்மையால் இவரை ‘உக்ரநரஸிம்மபாரதீ’ என்றும் கூறுவார்கள். சிஷ்யானுக்கிரகத்துக்காக இந்தியா முழுவதும் பல யாத்திரைகள் செய்தாலும், தன் தபஸுக்குக் குறைவு வராமல் அதை அதிகப்படுத்தியே வந்தார். இந்த உன்னத நிலையில் இருக்கும்போது இவருக்குப் பல ஸித்திகள் கிடைத்தன. அவற்றால் இவருடைய ஜீவன்முக்தநிலை சிறிதேனும் பாதிக்கப்படவில்லை. அதே சமயம் இந்த சக்திகள் சிஷ்யர்களுக்குப் பலவிதமான ச்ரேயஸைக் கொடுத்தன.
சிருங்கேரி பீடாதிபதிகளின் விசேஷப் பெருமை இது. தபோ பலத்தால் பல சித்திகள் ஒரு மகானுக்கு சாதாரணமாகக் கிடைக்கும். ஆனால் அதில் அவர் ஈடுபடுவாரேயானால் அது அவருடைய ஆத்மஞான நிஷ்டையைப் பாதிக்கும். அதனாலேயே தங்களுக்குப் பல சக்திகள் தோன்றினாலும் அதைப் பொருட்படுத்தாமல், அதை (செப்பிடுவித்தை காட்டுபவன் போல்) உபயோகப்படுத்தி காரியங்களை இப்பீடாதிபதிகள் செய்வதில்லை. சிஷ்யர்கள் குருவினிடம் இந்த சக்தி தெரிந்ததாகச் சொன்னாலும் ‘அது அம்பாளின் அனுக்ரஹம்’ என்று சொல்லிவிட்டு அதைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
சிருங்கேரி பீடத்துக்கு உரியதான ஆடம்பரமான அலங்காரங்கள் தனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆனால் மைசூர் மஹாராஜா இவரை வணங்கி பீடத்தின் பெருமையை சாமான்ய உலகம் அறிந்து கொள்ள வேண்டியதற்காக இந்த ராஜரிஷி சின்னங்களை இவர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கேட்டுக் கொண்டு, தேவியின் பூஜைக்குத் தேவையான தங்கம், வெள்ளி பாத்திரங்களையும் மஹாராஜா குருவுக்குக் காணிக்கையாக சமர்ப்பித்தார். அதை குரு ஏற்றுக் கொண்டபோதிலும், உலகத்துக்காக அவற்றை ஏற்று உபயோகித்தாரே தவிர, இவருடையமனம் அவற்றில் கொஞ்சமும் செல்லவில்லை. சாரதாம்பாளுக்கு மைசூர் மஹாராஜாக்கள் கொடுத்த விலை உயர்ந்த ஆபரணங்கள் இப்போதும் இருக்கின்றன.
தனக்கு வயது 60 ஆகும்போது தன் தபஸுக்கு விக்னமில்லாமல் ஸ்ரீமடத்தின் கார்யங்கள் நடக்க வேண்டும் என்று எண்ணி மைசூரில் இருந்த சிவஸ்வாமி என்ற சிஷ்யனை தனக்கு அடுத்த பீடாதிபதியாக இருக்கும்படி நியமித்தார்.
இந்த நரசிம்மபாரதீ என்ற ஜகத்குருவின் தபோ மகிமையை மைசூர் ஸம்ஸ்தான கமிஷனராக இருந்த கர்னல் பௌரிங் என்பவர் (1858இல்) பிரத்யக்ஷமாகக் கண்டார். இவருடைய மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்ட இந்த கமிஷனர், இதைப் பரிசோதிக்க எண்ணி இரவு ஒரு மணிக்கு பெங்களூர் முகாமில் ஸ்ரீமடத்துக்கு வந்தார். குரு பூஜையில் அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். தான் அதைப் பார்க்க வேண்டும் என்று கமிஷனர் சொன்னார். ஸ்வாமிகள் பூஜை செய்து கொண்டிருந்த இடத்தை மறைத்துக் கொண்டிருந்த திரை சற்று நீக்கப்பட்டது. அங்கு, உலகத்தையே மறந்து ஏகாக்ர நிலையில், புஷ்பங்களால் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரை பூஜித்துக் கொண்டிருக்கும் பீடாதிபதியைக் கண்டார். கமிஷனர் மிகுந்த பக்தியுடனும், மரியாதையுடனும் குருவை வணங்கிவிட்டு, திரும்பி ஊருக்கு வந்து தான் நேரில் பார்த்ததைக் கடிதத்தில் எழுதி, தன் நமஸ்காரங்களையும் ஸத்குருவுக்குத் தெரிவித்தார்.
இந்த ஸ்வாமிகளின் தபோபலத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் உலகம் கண்டது. ஒரு சமயம், இராமேசுவர யாத்திரையின் போது, ஸ்ரீஸ்வாமிகள், இராமேசுவரத்தில் ஸ்ரீஇராமநாதஸ்வாமி கோவிலில் உள்ள கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். கோவிலுக்குச் சம்பந்தப்பட்ட பட்டர்கள் அந்தக் கிணற்றில் தங்களைத் தவிர வேறு ஒருவரும் ஜலம் எடுத்துக் கொடுக்கக் கூடாது என்றனர். “அப்படியானால் அது நமக்குத் தேவையில்லை” என்று ஸ்வாமிகள் சொல்லிவிட்டு, அதற்குப் பக்கமுள்ள ஸர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து “இங்கே ஸ்நானம் செய்தால் போதும், இனி யாரும் யாத்திரையின் பூர்த்திக்காக கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்றார். அது முதல் சில வருஷங்கள் யாரும் ‘கோடி தீர்த்தத்தில்’ ஸ்நானம் செய்யாமலேயே தங்கள் யாத்திரையை முடித்தார்கள். அந்தக் ‘கோடி தீர்த்தக்’ கிணற்றில் கிருமிகள் உண்டாகிவிட்டன. பின்னர் அடுத்த யாத்திரையின்போது மதுரைக்கு விஜயம் செய்த ஸ்ரீஸ்வாமிகளை இராமேசுவரம் கோவில் பட்டர்கள் தரிசித்து, வணங்கி தங்கள் அபசாரத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்க, திரும்பவும் ஸ்வாமிகள் இராமேசுவரத்துக்குச் சென்று, அந்தக் கோடி தீர்த்தக் கிணற்று ஜலம் முழுவதையும் இறைக்கச் செய்து தன் கமண்டலுவிலிருந்து தீர்த்தத்தைக் கிணற்றில் புரோக்ஷணம் செய்தார். ஜலம் முன்போல் சுத்தமாகி அது முதல் இன்றுவரை யாத்திரிகர்கள் அந்த கோடி தீர்த்தத்தை உபயோகிக்கிறார்கள்.
ஸ்ரீந்ருஸ்ம்மபாரதீ மஹாஸ்வாமிகள் 1872ஆம் வருடம் (ஆங்கிரஸ வருஷம்) மதுரைக்கு விஜயம் செய்தார்கள். சிருங்கேரி பீடத்தின் முந்தய வழக்கப்படி தம் கைகளாலேயே மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீமீனாக்ஷிக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அதை அங்கிருந்த குருக்கள் தடுத்தனர். உடனே மஹாஸ்வாமிகள் இரண்டு தேங்காய்களில் ஸ்ரீமீனாக்ஷி அம்மனின் சக்தியை ஆகர்ஷணம் செய்து கொண்டு, அந்தத் தேங்காய்களை கோவிலுக்கு முன்பு உள்ள ஸ்ரீசிருங்கேரி மடத்தில் வைத்துவிட்டு, “இனி, ஸ்ரீமீனாக்ஷி அந்தக் கோவிலில் இல்லை. இங்கே இந்தத் தேங்காய்களில் தான் இருப்பாள். இங்கேயே தரிசனம் செய்யுங்கள்” என்றார். அதன்படியே ஜனங்கள் நடந்தார்கள். கோவில் பட்டர்களுக்குப் பல கஷ்டங்கள் நேரிட்டன. அதன்பிறகு பட்டர்கள் வேறு முகாமில், ஸ்ரீஸ்வாமிகளிடம் வந்து, தாங்கள் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று கேட்க, ஸ்ரீஸ்வாமிகளும் மனமிரங்கி, திரும்பவும் அவர்களுக்காக மதுரைக்குச் சென்று, தேங்காய்களில் ஆகர்ஷணம் செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீமீனாக்ஷியின் கலையை மீண்டும் கோவிலில் உள்ள மூர்த்தியிலேயே சேர்த்து ‘இனி கோவிலில் ஸ்ரீமீனாக்ஷியைத் தரிசிக்கலாம்’ என்றார். மதுரையில் உள்ள சிருங்கேரி மடத்தில், எந்த இடத்தில், இரண்டு தேங்காய்களை வைத்து ஸ்ரீஸ்வாமிகள் பூஜை செய்தார்களோ அங்கு சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இப்போதும் பூஜிக்கப்பட்டு வருகிறது. இதை இப்போதும், மதுரையில் அம்மன் சந்நிதியில் உள்ள சிருங்கேரி மடத்தில் காணலாம்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும், சிருங்கேரி பீடாதிபதிகளின் தபோமகிமையை விவரிக்கவே இங்கு குறிப்பிடப்பட்டது. இதுபோல் பல நிகழ்ச்சிகள் உண்டு.
நன்றி: ஸ்ரீஅபிநவவித்யாதீர்த்த விஜயம் நூல்.
அனந்தஸ்ரீ ஸ்ரீந்ருஸிம்ஹபாரதீ மஹாஸ்வாமிகளின் ஆராதனை தினம் வைகாசி மாதம் 16ஆம் தேதி (30.5.2014)
No comments:
Post a Comment