Saturday, 3 May 2014

ஆதிசங்கரர் நமக்கு மார்க்கதர்சிகர்

ஆதிசங்கரர் நமக்கு மார்க்கதர்சிகர்

உலகத்துலே ஆச்சர்யமான விஷயம் என்ன என்று கேட்டால் ஒவ்வொருத்தன் ஒவ்வொன்றைச் சொல்லுவான். தான் இது முடிய எதைப் பார்க்கவில்லையோ அப்பேர்ப்பட்ட ஒரு ஸந்நிவேசத்தைப் பார்த்தால் அது அவனுக்கு ரொம்ப ஆச்சர்யமாகத் தோன்றும். ஆனால் ஒரு சமயத்துலே தர்மராஜரிடம் இந்த ஒரு ப்ரச்னை வந்தது. (மஹாபாரதத்துலே) ஆச்சர்யம், ஆச்சர்யம் என்றால் நீங்கள் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

அப்போது தர்மராஜர் சொல்கிறார்
“அஜன் அஷனிபூதாநி ப்ரவிசந்தி
யமாலயம் சேஷாஸ்தாவரமிச்ஸந்தி
இமாச்சர்யம் இதபரம்” என்றார்.

“எனக்கு ஓர் ஆச்சர்யம் தெரிகிறது. என்ன ஆச்சர்யம் என்று கேட்டால் உலகத்துலே ஒரு நியமம் என்ன இருக்கிறது என்று கேட்டால் யாரானாலும் பிறந்தவனுக்கு மரணம் என்பது ஸகஜமாகவே இருக்கிறது. எப்பேர்ப்பட்டவன் ஆனாலும் பெரும் பணக்காரனாய் இருக்கட்டும், பண்டிதனாய் இருக்கட்டும், சக்கரவர்த்தியாய் இருக்கட்டும், பெரும் மகரிஷியாய் இருக்கட்டும், ஸித்தராய் இருக்கட்டும். என்றைக்காவது ஒரு நாள் ம்ருத்யு என்பது தப்பாது. நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். தினந்தோறும் யாராவது ஒருத்தன் ம்ருத்யுவுக்கு வசமாகிக்கொண்டே இருக்கிறான். அப்படி இருந்தாலும் மீதிப்பேர் என்ன நினைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால் ‘எனக்கு மட்டும் ம்ருத்யு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும். நான் சாஸ்வதமாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று நினைக்கிறான். இதைவிட ஆச்சர்யம் இன்னொன்று எனக்குத் தோன்றவில்லை” என்றார் தர்மராஜர். எல்லாரும் போய்க் கொண்டே இருக்கிறார்கள் அதைத்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ‘நான் ஒருத்தன் மட்டும் சாஸ்வதமாய் இருந்தால் போதும்’ என்று நினைக்கிறான். நான் ஒருத்தன் மட்டும் என்றால் இந்த சரீரத்தோடு என்று அர்த்தம். ஆத்மா சாஸ்வதம்தான். ஆனால் அதை விட்டுவிட்டு இந்த சரீரம் சாஸ்வதமாய் இருக்கட்டும் என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் வாஸ்தவமான விஷயம் வந்து ஆத்மா இல்லாமல் இந்த சரீரம் சாஸ்வதமாய் இருப்பதற்கு சாத்யமே இல்லை.

பகவான் பகவத் கீதையிலே

“ஜாதஸ்ய ஹித்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்யச
தஸ்மா தபரி ஹார்யேர்த்தே”

என்று சொன்னார். ஜனன மரணங்கள் என்பது அது ஒன்றன்பின் ஒன்று நியமமாக வரும். நியமமாக என்று சொன்னால் தப்பாமல் வரும். எப்படி காலையில் சூர்யோதயம் ஆகிவிடுகிறநோ அப்படியே மாலையில் சூர்யாஸ்தமனம் ஆகிவிடுகிறது. திரும்ப காலையில் சூர்யோதயம் ஆகிவிடுகிறது. அதிலே எப்படி ஒருவிதமான மாறுதல் என்பதும் கிடையாதோ அதேபோல் இந்த ஜென்ம, மரணங்களுக்கு நியமம் என்பது அப்படியே உண்டு மாறுதல் இல்லை. “அபரிகார்யோதே” இதை நீ ஒன்றும் மாற்ற முடியாதப்பா. ‘நான் இந்த சரீரத்துலே சாஸ்வதமாக இருப்பேன் என்று சொன்னால் நடக்காது. இந்த சரீரம் ஏதோ கொஞ்ச காலம் இருக்கும். பின்பு வேறு ஒரு சரீரம் கிடைக்கத்தான் செய்யும். நாம் எதுக்காக இப்படி இந்த சரீரத்தோடு சாஸ்வதமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம் என்று கேட்டால், இப்போது பகவான் அனுக்ரஹத்துலே நல்ல ஸ்திதியிலே இருக்கிறோம். சௌக்யமாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது என்றைக்குமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். இப்படியே இருக்க வேண்டும் என்பது உத்தேசம். ‘இப்போது ஒருவிதமான கவலை இல்லாமல் சௌக்யமாக இருக்கிறேன். இப்படியே தொடர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும். இந்த சரீரம் போய்விட்டது என்றால் இந்த சௌக்யம் போய்விடுமே’ என்ற பயம். இந்த சௌக்யத்தை எப்போதும் அனுபவிக்கணும் என்பதற்காக இந்த சரீரத்தோடே நான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். ஆனால் இந்த சரீரத்திலேயே சர்வ காலத்திலும் நீ சௌக்யத்தை அடைய முடியாது. இதற்கு ஓர் அவதி உண்டு. அந்த அவதியோடு சரி. பின்பு புது சரீரம் வர வேண்டியதுதான். அந்த சரீரத்தில்தான் நீ சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும்.

அப்போது சாஸ்த்ரம் என்ன சொல்கிறது என்று கேட்டால் அந்தப் புது சரீரம் இன்னொன்று வரப் போகிறது. அந்த சரீரத்திலும் நீ சௌக்யமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயே அதற்காக நீ இப்போது தர்மத்தை ஆசரணம் பண்ணு. வரப்போகிற சரீரத்திலேயும் சௌக்யமாக இருக்க வேண்டும் என்று உனக்கு திடமான பாவனை இருந்தால் நீ இப்போதே தர்மத்தை ஆசரணம் பண்ண வேண்டும். சிலருக்கு ஒரு ப்ரச்னை. “இந்த சரீரத்துலே தர்மம் ஆசரணம் பண்ணினால் அடுத்த சரீரத்துலே எப்படி சௌக்யத்தை அடைய முடியும்? நான் இப்போது ஒரு ராஜாவோடு யுத்தம் பண்ணினால் அடுத்த சரீரத்துலே அந்த ராஜ்யம் எனக்குக் கிடைக்குமா? நான் இப்போது பணத்தை சேகரித்து வைத்துக் கொண்டால் ஜென்மாந்தரத்துலே இந்தப் பணம் எனக்கு உதவிக்கு வருமா?” என்று கேட்பார்கள். பணத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டால் அது மட்டும் உதவிக்கு வராது. தர்மத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டால் அது உதவிக்கு வரும். இதுதான் வரும் அது வராது என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள்? என்று கேட்டால் நமக்கு சாஸ்த்ரம் ப்ரமாணம்.

நாம் வந்து நமக்குத் தோன்றியபடி சாஸ்த்ரார்த்தம் சொல்வதாக இருந்தால் அப்போது ஒவ்வொருவன் ஒவ்வொன்று சொல்லுவான். நாம் நமக்குத் தோன்றியபடி சாஸ்த்ரார்த்தம் சொல்வது கிடையாது. அங்கே என்ன இருக்கிறதோ அதைத்தான் நாம் சொல்ல முடியும். அங்கே என்றால் எங்கே? வேதங்களில். வேதானுசாரியான சாஸ்த்ரங்களில் அதென்ன சொல்கிறது?

“புண்யோ ஹவதி புண்யேன கர்மணா பவதி
பாபம் பாபேன” என்று சொல்கிறது.
“புண்யேன கர்மணா புண்யோஹவதி”
புண்ய கர்மாவை ஆசரித்தவன் சௌபாக்யத்தை அனுபவிப்பான். பாபேன பாப:” பாப கர்மத்தைச் செய்தவன் துக்கத்தை அனுபவிப்பான் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. இந்த சரீரத்துலே நாம் செய்த தர்மங்கள் ஜென்மாந்தரத்துலே நமக்கு சுக, துக்கங்களைக் கொடுக்கும் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. எப்படி என்று கேட்டால்

“ம்ருதம் சரீரம் முச்ருச்ய காஷ்டலோஷ்ட
சமஞ்க்ஷிதௌ விமுகாபாந்தவாயாந்தி
தர்மஸ்த மனு கச்சதி”

நாம் சரீரத்தை விட்ட பிறகு இனி யாரும் நம்மோடு வர மாட்டார்கள். வரக்கூடியது எவை என்றால் நாம் செய்த புண்ய பாபங்கள் மட்டும்தான். தர்மராஜர் கடைசியிலே மஹாப்ரஸ்தானம் செய்கிற சமயத்துலே அவரோடு அவருடைய சகோதரர்களும் அவருடைய தர்மபத்னி த்ரௌபதியும் போய்க் கொண்டிருந்தார்கள். அடுத்து அர்ஜுனர். இன்னும் கொஞ்ச தூரத்தில் பீமர். கொஞ்ச தூரத்தில் த்ரௌபதி. ஆனால் அவர்களோடு ஒரு “ஸ்வானம்” மட்டும் போய்க் கொண்டே இருந்தது. கடைசியிலே இந்த்ரன் வந்துவிட்டு புஷ்பக விமானம் கொண்டு வந்து “இந்த விமானத்தில் நீ ஏறு. உன்னை இப்படியே ஸ்வர்க்கத்துக்குக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்ன உடனே அப்போது தர்மராஜர் சொன்னார்.” என் பின்னாடி ஒரு ஸ்வானம் வருகிறது. அதையும் நீங்கள் கொண்டு போக வேண்டும். (ஸ்வானம் என்றால் நாய் என்று அர்த்தம்.) என்றார்.
அதற்கு இந்த்ரன் “அதற்கெல்லாம் இங்கு இடம் கிடையாது” என்று சொன்னான். “என்னை நம்பி அது வந்து இருக்கிறது. அதற்கு இடம் இல்லாவிடில் நானும் வரமாட்டேன்” என்று தர்மராஜர் சொன்னாராம். கடைசியிலே யார் அது என்று பார்த்தால் அந்த தர்மராஜன் அனுஷ்டித்த தர்மம் “அந்த” ரூபத்திலே அவனை பரீட்சிப்பதற்காக வந்தது. கடைசியிலே யமதர்மராஜன் ப்ரத்யக்ஷனாகி உன்னை பரீட்சிப்பதற்காக வந்தேன். இந்த சமயத்திலேயும் நீ உன்னுடைய தர்ம புத்தியை விடவில்லை. நமக்கு அந்த தர்மபுத்தி எப்படி இருக்க வேண்டும் என்றால் ஏதோ எல்லாம் சரியாக இருக்கும்போது தர்மீகனாகவே இருக்கிறேன். பின்பு ஒரு சமயத்துலே நான் அதார்மீகனாகவும் இருப்பேன் என்கிற மாதிரி இருக்கக் கூடாது. தர்மராஜனை அந்த பகவான் அநேக சமயங்களில் பரீட்¬க்ஷ பண்ணினான். அவனுடைய மனசு தர்மம் பக்கத்திலேயே இருக்கிறதா அதர்ம பக்கத்துக்குத் திரும்புகிறதா என்று பார்த்தான்.

ஒரு முறை தர்மராஜருடைய சகோதரர்கள் நான்கு பேரும் விழுந்து விட்டார்கள். அப்போது ஈஸ்வரன் வந்து “இந்த நான்கு பேரில் ஒருத்தன் பிழைக்க முடியும். யார்?” என்று கேட்கும்போது, நிஜமாக அந்த பஞ்ச பாண்டவர்களில் பீமனும், அர்ஜுனனும் மஹா பலசாலிகள், மஹாபராக்ரமசாலிகள். ஆனால் தர்மராஜன் அந்த இரண்டு பேரையும் கேட்கவில்லை. “யாரோ ஒருத்தன் தானே பிழைக்க முடியும் என்று சொல்கிறீர்கள்? நகுலன் பிழைக்கட்டும்.” என்றார். “அது எப்படி அவ்வளவு பராக்ரமசாலிகளான அவர்களை விட்டுவிட்டு இவனைக் கேட்கிறாய்? என்று கேட்டால் “அப்படி இல்லை. என்னுடைய சிறிய தாயார் மாத்ரிக்கு பிண்டோதகத்துக்கு வேண்டாமா? எங்க தாயார் குந்திக்கு நான் இருக்கிறேன். சிறிய தாயாருக்கு ஒருத்தன் வேண்டாமா? அதனால் நகுலனைக் கேட்டேன் என்றாராம். அப்போதும் பகவான் சந்தோஷப்பட்டார். நான்கு பேரும் பிழைப்பார்கள். உன்னுடைய தர்ம புத்திக்கு பரமானந்தமாகிறது என்று பகவான் சொன்னான். எதற்கு சொல்கிறோம்? நாம் செய்யக்கூடிய தர்மம்தான் ஜென்மாந்தரத்திலேயும் நமக்குக் கூட வரும். அந்த விஸ்வாசம் நமக்கு வேண்டும். அதற்காகச் சொல்ல வருகிறேன்.

அந்த யுதிஷ்டிரனுக்கு இருந்த விஸ்வாசம் அபரிமிதமான விஸ்வாசம். அந்த ஒரு விஸ்வாசம் நமக்கு இருந்தால்தான் நாம் மனிதனாக வாழ்வதற்கு ஒரு தகுதி உள்ளவர்களாக இருப்போம். அந்த தர்ம விஸ்வாசமே இல்லை என்று சொன்னால் இனி மனித வாழ்க்கைக்கும், மிருக வாழ்க்கைக்கும் என்ன வித்யாசம்? “பஸ்வாதி விஸ்ச அவிசேஷாத்” என்று சொன்னார். பகவத் பாதர் இந்த ஆகாரம் எடுத்துக் கொள்ளும் விஷயத்திலோ தூங்கும் விஷயத்திலோ எவனாவது நமக்கு ஏதாவது கொடுக்க வருகிறான் என்று சொன்னால் அவனிடம் போகும் விஷயத்திலோ எவனாவது நமக்குத் தொந்தரவு பண்ண வருகிறான் என்று சொன்னால் அவனிடமிருந்து தூரத்திலே விலகும் விஷயத்திலோ பசுக்களுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை. பின்பு எங்கே வித்யாசம்? இந்த ஒரு தர்மானுஷ்டானம் என்பது மனிதனுக்குத்தான் முடியும். பஸ்வாதிகருக்கு அது இல்லை. எப்போது இந்த தர்மானுஷ்டானம் என்பது நம்மிடம் இல்லையோ இனி அதுகளும் நாமும் ஒன்றுதான். ஆகையால் மனிதனுக்கு மிகவும் அவசியமானது தர்மத்தில் ஸ்ரத்தை. நாம் ஆரம்பித்த விஷயம் எது? உலகத்திலே ஆச்சர்யமானது எது? ‘எல்லாரும் போய்க் கொண்டிருந்தாலும் நான் இருப்பேன்’ என்று நினைப்பதுதான் ஆச்சர்யமானது என்று. அதனால் எல்லோரும் போகும் போது நான் இதே சரீரத்தோடு இருப்பேன் என்பது இருக்கக் கூடாது. நானும் போகத்தான் செய்வேன் அப்படி போவதற்குள் நான் எவ்வளவு தர்மத்தைச் செய்தேன் என்கிற ப்ரச்னைதான் நமக்கு வேண்டும்.
நாம் தினந்தோறும் ஒரு ப்ரச்னையை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டுமாம். இன்னொருத்தன் நம்மைக் கேட்டால் “நீ எல்லாம் சரியாக உன்னுடைய கடமையை நடத்திக் கொண்டு இருக்கிறாயா?” என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லுவோம். ஏனெனில் அவனுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று என்ன தெரியப் போகிறது? நான் என்ன சொன்னாலும் அதை நம்புவார்கள். “நீ தினமும் சரியாக ஸந்த்யாவந்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறாயா?” என்று நாம் கேட்டால் “ஆமாம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்” என்று சொல்கிறான். அவன் பண்ணுகிறானா இல்லையா என்பதை நாம் எங்கு பார்க்கிறோம்? ஆனால் அவன் தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும், “நான் தினமும் ஸந்த்யாவந்தனம் பண்ணுகிறேனோ இல்லையா?” என்று அப்போது பண்ணுகிறேன் என்ற ஜவாப் வராது. யாருமே இன்னொருவனை ஏமாற்றலாமே தவிர தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள முடியாது. அதனால்

“ப்ரத்யஹம் ப்ரத்யவே க்ஷேத்ர
நரஸ்ச இத மாத்மன:
கின்னுமே பசுவிஸ்துல்யம்
கின்னு ஸத்புருஷைரிவா”

என்று சொன்னார். ப்ரதி தினமும் மனிதன் தன்னைத்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். என்ன கேட்டுக்கொள்ளணும்? ‘நான் ஸத்புருஷர்கள் மாதிரி வர்த்திக்கிறேனா? பசுக்கள் மாதிரி வர்த்தனை செய்கிறேனா? இன்னொருவன் கேட்கணும், நீ பதில் சொல்லணும் என்பது இல்லவே இல்லை. அது சரிப்பட்டு வராது. உன்னையே நீ கேட்டுக்கொள். அந்த ப்ரச்னைக்கு நான் ஸத்புருஷர்கள் மாதிரிதான் ஜீவிக்கிறேன் என்கிற ஜவாப் வந்தால் அன்றைக்கு நீ க்ருதார்த்தனானேன் என்று வைத்துக் கொள். அந்த ஜவாப் வரவில்லை என்று சொன்னால் நீ அதற்கு வேண்டிய முயற்சி எடுக்க வேண்டும். அந்த ஜவாப் அவ்வளவு எளிதாக வராது. நாம் எல்லாரும் நம்மையே கேட்டுக் கொண்டால், இன்று நான் என்ன பண்ணினேன் என்று கேட்டுக்கொண்டால் ‘ஐயோ! இவனிடம் பொய் சொன்னேன். இவனை ஏமாற்றினேன், இவனுக்கு இவ்வளவு தொந்தரவு பண்ணினேன். இப்படி ஒரு தவறான யோசனை பண்ணினேன்.’ இப்படி நம்முடைய அந்தக்கரணத்துக்கு மட்டும் ஜவாப் வரும். வேறு யாரிடமும் அது வராது. நிஜமாக இந்த மாதிரி எதுவும் நாம் செய்யவில்லை என்று சொன்னால் ஒருவிதமான தவறும் நாம் செய்யவில்லை. நம்முடைய மனசில் எந்தவிதமான தவறான எண்ணமும் உண்டாகவில்லை. நாம் யாருக்கும் எந்த விதமாகவும் துரோகம் செய்யவில்லை என்று சொன்னால் அப்போது நம்முடைய மனசிலே சரியான ஜவாப் நமக்கு வரும். ஆமாம் ‘நான் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை. என்னுடைய கடமையை நான் சரியாக நிர்வகித்து இருக்கிறேன்.’ என்று அந்த ஜவாப் வருவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய ஜீவிதம் அப்போதுதான் ஸார்த்தகமாகும். அதுமுடிய இந்த வாழ்க்கை ஸார்த்தகம் என்று நாம் சொல்லமுடியாது. எப்படியோ போய்க் கொண்டிருக்கும்.

“ஜாயஸ்விம் ம்ரியஸ்வே ஏதத் த்ருதீயம் ஸ்நானம்” என்று சொன்னார்.

பிறக்கிறோம். எப்படியோ இந்த ஜீவனத்தை நடத்துகிறோம். போய் வருகிறோம். என்ன சாதித்தீர்கள்? சாதித்தது ஒண்ணும் இல்லை. அப்படி இல்லாமல் இந்த ஜீவனத்திலே நான் தர்மத்தை அனுஷ்டித்தேன். என்னுடைய கர்தவ்யத்தை நிர்வகித்தேன் என்று வேண்டும். கர்தவ்ய நிர்வாகம் என்பது ரொம்பவும் அவசியம். என்ன கர்தவ்ய நிர்வாகம்? ப்ரதி ஒருத்தனுக்கும் ஒரு தர்மம் சாஸ்த்ரத்திலே விகிதமாகி இருக்கிறது. ப்ரம்மசாரி ஆனால் இப்படி இருக்க வேண்டும். க்ருஹஸ்தன் ஆனால் இப்படி இருக்க வேண்டும். யதி ஆனால் இப்படி இருக்க வேண்டும் என்று சாஸ்த்ரத்தில் தர்மங்கள் சொல்லி இருக்கிறது. அந்த தர்மங்களை நாம் ஆசரிக்கவே இல்லை என்று சொன்னால் அதுதான் நாம் கர்தவ்யத்தை நிர்வகிக்கலை என்று அர்த்தம்.

அந்தக் கர்தவ்யத்தை நிர்வகிக்கலை என்று சொன்னால் அப்போதுதான் நம்முடைய ஜென்மம் ஸார்த்தகம் ஆகவில்லை என்று அர்த்தம். அதனால் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட மிக முக்யமானது தர்மம். அந்த தர்மம் நாம் ஜென்மாந்தரத்திலேயும் சௌக்யத்தை அடைவதற்காக சஹாயமாகக் கூடியது. அநேகம் சமயங்களில் நான் சொல்லியிருக்கிறேன். யாரும் தனக்கு கண்ணுக்குத் தெரியாததை நம்ப மாட்டேன் என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அது பெரும் மூர்க்கத்தனம் ஆகிவிடும். உன் கண்ணுக்குத் தெரியாத மாத்திரத்திலே அது இல்லை என்று நீ சொல்வது பெரும் தவறாகிவிடும். இந்தக் குற்றத்தை நாம் செய்யக்கூடாது. நாம் மனிதர்கள், புத்திசாலிகள். ஒன்னும் தெரியாதவன் அப்படி சொன்னால் வேறு. நாம் புத்திசாலிகள் என்று ப்ரசித்தி பெற்றவர்கள். நாமும் என் கண்ணுக்குத் தெரியாததை நம்ப மாட்டேன் என்று சொல்வது மிகவும் மூர்க்கத்தனமாகும்.

அதனால் அந்த தர்மம் என்கிற ஒரு பதார்த்தம், ஒரு வஸ்து நம்முடைய பாரதீய ஸம்ஸ்க்ருதியில் மிக ப்ரதானமானது. அப்பேர்ப்பட்ட அதிப்ரதானமான தர்மத்துக்கு நாம் அவசியம் அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் இன்றைய தினம் ஈஸ்வர ஆராதனை செய்கிறோம். மாதா பிதாக்களை ஆதரிக்கிறோம். ஓர் அதிதி வந்தால் அவரை கௌரவிக்கிறோம். குரு வந்தால் அவரை மிக ஸ்ரத்தையோடு பூஜிக்கிறோம் என்று சொன்னால் இதெல்லாம் நம்முடைய முன்னோர்கள் நமக்கு தர்மத்தில் ஸ்ரத்தை இருக்க வேண்டும் என்று சொல்லித் தந்த பாடத்தின் பலம். அப்படி ஒரு பாடம் நமக்கு இல்லை என்று சொன்னால், அப்பேர்ப்பட்ட ஒரு ஸம்ஸ்காரம் நமக்கு இல்லை என்று சொன்னால் நாம் இப்படி இருக்கவே மாட்டோம். இப்படி உட்கார மாட்டோம். அவனவனுக்குத் தோன்றியபடி அவன் இருப்பான். ஒரு குரு ஒரு சிஷ்யன் என்கிற ப்ரச்னையே இருக்காது. ஓர் உபதேஷ்டா, ஓர் உபதேஷ்யன் என்கிற ப்ரச்னையே இருக்காது. ஆனால் அத்ப்ராசீனமாக, அநாதியாக வந்திருக்கக்கூடிய நம்முடைய பரம்பரை இந்த அளவுக்காவது நாம் ஒரு ஸன்மார்க்கத்திலே இருப்பதற்கு அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதற்காக நம் முன்னோர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சமயத்துலே நாம் செய்யவேண்டியது இந்தப் பரம்பரையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒன்றுதான். அதுவே நம்முடைய கடமை.

நம் முன்னோர்கள் இந்த தர்ம மார்க்கத்தை ரொம்பவும் ஜாக்ரதையாக ரொம்பவும் ஸ்ரத்தையோடு அனுசரித்து நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த மார்க்கத்தை நாம் தவறாமல் அனுஷ்டித்து அடுத்த வாரிசுக்கு உபதேசிக்க வேண்டும். பகவத்பாத சங்கரர் இந்த தர்ம மார்க்கத்தை நாம் அவிச்சின்னமாக தொடர்ந்து அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் சதுராம்னாய மடஸ்தாபனத்தைச் செய்தார். பகவத் பாத சங்கரருடைய மஹோன்னதமான அதிவிசாலமான த்ருஷ்டியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கேவலம் ஒரு பெயர் வாங்க வேண்டும், ஒரு ப்ரசித்தியை அடைய வேண்டும் என்கிற அத்யல்பமான ஸ்வார்த்த பாவனை இருந்தவர் அல்லர். அவருடைய ஒரே நோக்கம் அநாதி பரம்பரையாக வந்திருக்கக்கூடிய இந்த ஸனாதன தர்மம் என்றைக்கும் இந்த பாரதத்தில் அவிச்சின்னமாக ப்ரசாரத்தில் இருக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நோக்கம் அவருக்கு. நீ என்னைப் புகழ வேண்டியது இல்லை. நீ என்னை ஒன்றும் பூஜிக்க வேண்டியது இல்லை. நீ தர்மத்தை ஆசரணம் செய் என்கிறதுதான் அவருடைய ஒரு பெரும் நோக்கம். அதற்காகத்தான் அவர் இந்த க்ரந்த ரசனை செய்ததும், இந்த சதுராம்னாய பீடஸ்தாபனம் செய்ததும், தன் ஜீவிதத்திலே அவ்வளவு சஞ்சாரம் செய்து ஜனங்களுக்கு தர்மோபதேசம் செய்ததும் அதற்காகத்தான்.

அப்பேர்ப்பட்ட மஹான் சங்கரர் நமக்கு மார்க்க தர்சிகர். அவர் எந்த மார்க்கத்தைக் காட்டினாரோ அந்த மார்க்கம் நமக்கு சிரோதார்யமானது. அவர் நம் எல்லாருக்கும் பரம ஆரார்த்யரான குரு. அப்பேர்ப்பட்ட சங்கரர் ஸநாதன தர்மப்ரசாரத்துக்காக நமக்கு அனுக்ரஹம் செய்த இந்த ஸனாதன பரம்பரை. இந்தப் பரம்பரையின் ரக்ஷணம் நமக்கு ரொம்பவும் அவசியம். இந்தக் காலத்திலே அநேகம் பேர் சொல்வார்கள். அந்தப் பழைய காலம் மாதிரி எல்லாம் இப்போது இருக்க முடியாது. இப்போது எல்லாம் (கொஞ்சம் இந்தக் காலத்துப் பதத்தை உபயோகம் பண்ணுவதாக இருந்தால்) ரொம்ப ‘மாடர்ன்’ ஆக இருக்கணும்” என்று சொல்வார்கள். எவ்வளவு தூரத்துக்கு ‘மாடர்ன்’ ஆக இருப்பது? ரொம்ப ‘மாடர்ன்’ ஆக இருக்கப் போனால் ‘மூடனாக’ வேண்டி வரும். நான் அநேகம் பேரிடம் சொல்லியிருக்கிறேன், நீங்கள் சொல்றேள். பழைய காலம் மாதிரி இப்போது நடத்த முடியாது என்று சொல்லி, சாஸ்த்ரத்திலே ‘முக்யகல்பத்தை’ அனுசரிக்க முடியாவிடில் ‘அதுகல்பம்’ அல்லது ‘கௌண கல்பம்’ என்று சொல்லியே இருக்கிறது. ‘முக்ய கல்பம்’ ஸந்த்யாவந்தனம் பண்ணனும் என்பதில் 1000 காயத்ரி பண்ண வேண்டும் என்பது முக்கிய கல்பமானால் அது செய்ய முடியாவிடில் 108 காயத்ரி செய் என்று சொல்லியே இருக்கிறது. நான் ஸந்த்யாவந்தனத்தையே பண்ண மாட்டேன் என்று சொல்வதுதான் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. அதற்கு மட்டும் சாஸ்த்ரத்திலே இடம் இல்லை. முக்ய பக்ஷம் அனுசரிக்க முடியாவிடில் கௌணபக்ஷத்தையாவது அனுசரி. அதனால் நாம் இந்தக் காலத்துக்குத் தகுந்தபடி தர்மத்தை மாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது. நம்முடைய சக்தியை அனுசரித்து நாம் தர்மத்தை அனுஷ்டிக்க நமக்கு அவகாசம் இருக்கிறது. அந்த அவகாசத்தை நாம் உபயோகித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்யமான விஷயம். அதனால் காலம் மாறிப்போச்சு. தர்மத்தை அனுஷ்டிக்க அவகாசம் இல்லை என்று யாரும் சொல்லக்கூடாது. காலம் மாறிப்போச்சு அதனால் இப்போது சாப்பிடுவதற்கு அவகாசம் இல்லை என்று யாராவது சொல்லுவார்களோ?” பழைய காலத்திலே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தா. இப்போது கலிகாலம். சாப்பிடுவதற்கு எங்கே அவகாசம்? என்று சொல்வார்களா? அதெல்லாம் கிடையாது. எவ்வளவு நாழிகை ஆனாலும் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. எவ்வளவு நாழிகை ஆனாலும் தூங்காமல் இருக்க முடியாது. அந்த இரண்டுக்கும் இருக்கிற அவகாசம் தர்மத்தை அனுஷ்டிக்க மட்டும் இல்லை என்று சொல்வதென்பது ரொம்பவும் அனுசிதமான வார்த்தை. அதனால் நாம் ஜென்மாந்தரத்திலேயும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற தீவிரமான அபிப்ராயம் உள்ளவர்கள் ஆனால் நாம் அவசியம் தர்மத்தை ஆசரிக்க வேண்டும் என்பதுதான் இந்த உபன்யாசத்தின் கருத்து. எல்லாரும் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு தார்மீகர்களாக இருந்து தர்ம ஸ்ரத்தாருகளாக இருந்து ஸ்ரேயஸை அடைந்து இந்த ஸநாதன பரம்பரையைக் காப்பாற்றி இந்த மனித வாழ்க்கையை ஸார்த்தகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறதுதான் நம்முடைய அதிப்ரீதமான விஷயம்.

- ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

No comments:

Post a Comment