Saturday, 12 April 2014

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின் அபாரமான மந்திரஸித்தி

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின்

 அபாரமான மந்திரஸித்தி:



“யச்சந்தி யத்பதாம்புஜ பக்தா:
குதுகாத் ஸ்வபக்தேப்ய:|
ஸர்வான் அபி புருஷார்த்தா:
தம் அஹம் ப்ரணமாமி சந்திரமௌளீசம்||”

பக்தர்களின் குறைகளை, வேண்டுகோளை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருப்பாதங்களில் ஸ்ரீஆசார்யாள் சமர்ப்பிக்கிறார்கள். குறைகளைப் போக்கி அருளுமாறு பக்தர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். பகவான், பக்தர்களுக்கு அருள் புரிவார் என்ற திடமான நம்பிக்கையுடன் குருநாதர்கள் ஆசி வழங்குகிறார்கள். அவர்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையும் பிரார்த்தனையும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறது.

அத்தகைய தபஸ் சக்திபடைத்த ஆசார்யர்களுள் ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் விசேஷமாகக் குறிப்பிடத் தக்கவராவார். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜையிலேயே நாளெல்லாம் மூழ்கியவர். ஈடினையற்ற மந்திர ஸித்தி கைவரப் பெற்றவர். தீக்ஷண்யமான விழிகளைக் காண்பவர்கள் பயமும் பக்தியும் ஒருங்கே அடைவார்கள்.

ஜபமும் விரதமும் அவரை அக்னியைப் போல ஜொலிக்கச் செய்தன. ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால், அதிலிருந்து பின் வாங்காத இயல்பு பெற்றவர்.

சிருங்கேரியில் ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் தங்கியிருந்த போது, ஒருநாள் திடீரென்று ஸ்ரீமடம் அதிகாரிகளிடம், “நாளை ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் யாத்திரையாகக் கிளம்புகிறார்” என்று அறிவித்தார்.
ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் யாத்திரை என்றால் ஸ்ரீஸ்வாமிகள் யாத்திரை செய்யப் போகிறார் என்பது தான் அதன் உட்பொருள். யாத்திரைக்குத் தயார் செய்வது என்பது எளிதான செயல் அல்ல. அதனால் அதிகாரிகள், “யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு நாள் கூட இல்லையே” என்று தயக்கத்துடன் மறுமொழி கூறினார்கள்.

“உங்கள் சௌகர்யம்” என்று ஸ்ரீஸ்வாமிகள் ஒரே வார்த்தையில் பதிலளித்து விட்டுச் சென்றார்கள். அதிகாரிகளும் சிப்பந்திகளும் ஸ்ரீஸ்வாமிகளின் இயல்பை நன்கு அறிந்து கொண்டவர்கள் தாம். ஆயினும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டது.
பூஜைக்கான பாத்திரங்கள், சமையல் செய்வோர், யானைகள், குதிரைகள், சிப்பந்திகள், பசு, பல்லக்கு, தேவையான சாமான்கள் என சித்தம் செய்வதில் அதிகாரிகள் முனைந்திருந்த போது ஒருநாள் ஆகிவிட்டது. ஸ்ரீஸ்வாமிகள் அனைத்தும் சித்தமான பிறகே யாத்திரை மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் நினைத்துக் கொண்டார்கள்.

மறுநாள் உச்சிக்காலம் வந்தது. ஸ்ரீநரஸிம்ம பாரதீஸ்வாமிகள் பிக்ஷை ஆனதும் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர், ரத்ன கணபதி அடங்கிய பூஜைப் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார். சிருங்கேரியிலிருந்து கிளம்பி விட்டார்கள்.

ஸ்ரீமடமே பரபரப்புக்குள்ளாயிற்று. ஏற்கெனவே தயாராகிக் கொண்டிருந்தவையெல்லாம் அதிவிரைவில் ஏற்பாடாகின. பாதசாரியாக விரைந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீஆசார்யாளை அடைய, அனைவரும் விரைந்தார்கள். பல்லக்குகள், அதனைத் தூக்கும் போகிகள், மற்ற பரிவாரங்கள் என எல்லாம் ஓட்டமும் நடையுமாக, ஸ்ரீஸ்வாமிகளைத் தொடர்ந்து சென்றன.

“மேனா பல்லக்கில் எழுந்தருள வேண்டும்” என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்ட பின்பு வெகுதூரம் நடைபயின்று வந்த ஸ்ரீஸ்வாமிகள் மேனாவில் அமர்ந்து கொண்டார்கள். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜைப் பெட்டியை தம்முடன் பல்லக்கில் வைத்துக் கொண்டார்கள். யாத்திரை தொடர்ந்தது. யாத்திரை, மைசூர் வழியாக மராட்டியத்தை அடைந்தது. தென் மராட்டியப் பிரதேசங்கள் காடுகளால் சூழ்ந்தவை. மலைகள் அரண்களாக நின்றன. துஷ்ட மிருகங்களும் வனத்தில் வசிக்கும் பறவைகளும் பாம்பு போன்ற ஊர்வனவும் நிறைந்த பகுதி. வனப்பகுதியிலே வாழும் கொள்ளையர்களும் வழிப்பறி செய்பவர்களும் எதற்கும் அஞ்சாதவர்கள்.

பூனாவுக்கு அருகில் ஸ்ரீஸ்வாமிகள் யாத்திரை செய்து கொண்டிருந்தார்கள். அப்பகுதியில் “தக்தியர்' (tலீuரீs) என்று கூறப்பட்ட கொள்ளையர்கள் வாழ்ந்து வந்தார்கள். வனத்தில் யாத்திரை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களின் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொலை செய்து, அவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்ளும் வழக்கமுடையவர்கள். அத்தகைய வனப்பகுதியில் ஸ்ரீஉக்ரநரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் மேனா பல்லக்கு சென்று கொண்டிருந்தது. மேனா பல்லக்குடன் ஸ்ரீமடத்தின் காவலர்கள், பரிவாரங்கள் நடந்து சென்றார்கள்.

ஸ்ரீஆசார்யாள் இருபுறமும் பார்த்துக் கொண்டே சென்றார். மிகுந்த ரம்மியமான மாலைவேளை. சூரியன் மேலை வானில் செம்பொற் பந்தாகச் சுழன்று கொண்டிருக்க, பசுமையெல்லாம் பொன்மயமாக தேஜோமயமாகக் காட்சி தந்து கொண்டிருந்த பொன்மாலைப் பொழுது. சற்று தொலைவிலே வெண்ணிற அருவி மலைமீதிருந்து விழுகின்ற காட்சியிலே ஸ்ரீஸ்வாமிகள் லயித்திருந்தார்கள். அருவி, சிற்றாறாகப் பாய்ந்தோடும் பகுதியைக் கடந்த போது, ஸ்ரீஸ்வாமிகள், மேனாவிலிருந்து எட்டிப் பார்த்து, “அடுத்ததாகச் செல்ல உத்தேசித்திருக்கும் ஊர் சமீபத்தில் தான் இருக்கிறதா?” என வினவினார்கள்.
“சமீபத்தில் இல்லை. விரைவாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் அங்கே போய் விடலாம். “சந்தியாகாலம் வந்துவிட்டது. ஸ்நானம் செய்ய அருகில் சிற்றாறு ஓடுகிறது. ஆகையால் அடுத்த முகாமுக்குப் போவதற்கு பதிலாக இன்றைய அனுஷ்டானம், பூஜைகளை இங்கேயே செய்துவிடலாம். மேனாவை இறக்கி வைத்து விட்டு, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்”

கணீரென்ற குரலில் ஸ்ரீஸ்வாமிகள் மொழிவது அனைத்துமே உத்தரவாகவே இருந்தன. ஸ்ரீமடத்து அதிகாரிகள் அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அடர்ந்த காடு, ஓங்கி உயர்ந்த மலைகள், மரங்கள். சூரியன் அஸ்தமித்த நேரம். இன்னும் சிறிது நேரத்தில் பூரணமாக இருள் சூழ்ந்து விடும். ஆறு சலசலத்து ஓடும் ஒலியும் பறவைகளின் ஒலியும் காதுக்கு இனிமையாக இருந்தாலும், இருள் கவிந்த காட்டில் பூஜை செய்வது அபாயமல்லவா? கள்வர்கள், கொலைக்கும் அஞ்சாதவர்கள் நிறைந்த பகுதி இது என்பது ஸ்ரீஆசார்யாள் அறியாததா?

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் நினைத்த செயலை நடத்திக் காட்டும் இயல்புள்ளவர் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். எனவே மறு வார்த்தை கூறாமல், கவலையும் அச்சமும் கொண்டவர்களாக, இரவு பூஜைக்கான ஏற்பாடுகளை, செய்வதில் முனைந்தார்கள். ஸ்ரீஸ்வாமிகள் சிற்றாற்றில் ஸ்நானம் செய்யச் சென்றார்கள்.

சருகுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. தீவட்டிகள் ஏற்றப்பட்டன. பூஜை நடைபெறும் இடத்தைச் சுற்றி சிப்பந்திகள் தயாராக நின்றார்கள். ஸ்ரீமடம் காவலாளிகள் நீண்ட வாட்களைத் தாங்கியவர்களாக சற்று தொலைவில் நின்றார்கள். குதிரைகள், யானை, பசு, போன்றவை மரங்களில் கட்டப்பட்டிருந்தன. அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீஆசார்யாள் அங்கே வந்தார். நெற்றியிலே விபூதி பளிச்சிட்டது. கழுத்தில் ஸ்படிக மாலை. ருத்ராட்ச மணிமாலை. புதுவஸ்திரம் தரித்துக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார்கள். ஸ்ரீஆசார்யாள், ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜையைத் தொடங்கினார். அவர் முன்பாக மலர்கள் தட்டுத் தட்டாக வைக்கப்பட்டிருந்தன. அபிஷேகம் முடிந்து அலங்காரத்தைத் தொடர்ந்தார்.
அச்சமயத்தில் தக்கியக் கொள்ளைக்காரர்கள் தீவட்டி வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு அதை நோக்கி வந்தார்கள் “பல்லக்கு, பரிவாரம் என்று வந்திருப்பவர்கள் கொழுத்த தனவந்தர்கள் தான். இன்று நமக்கு நல்ல அதிர்ஷ்டம் வாருங்கள். நாம் அவர்களை நெருங்குவதை அவர்கள் அறியக் கூடாது. அடிமேல் அடிவைத்து வாருங்கள்.”

கொள்ளையர்களின் தலைவனைப் போன்ற ஒருவன் கூறியதை அனைவரும் ஏற்று, மெல்ல நடந்து சென்று ஸ்ரீஆசார்யாள் பூஜை செய்யும் இடத்தை அணுகினார்கள். பூஜை செய்யும் ஸ்ரீஆசார்யாளைச் சுற்றி சிப்பாய்கள் நிற்பதைக் கண்ட கொள்ளையர்கள், வாளேந்திய சிப்பாய்களை, கொடுவாளைக் காட்டி மிரட்டி அழைத்துச் சென்று விட்டார்கள். அவர்களை ஓரிடத்தில் கட்டிப் போட்டு விட்டு கொள்ளையர்கள் மீண்டும் ஸ்ரீஆசார்யாள் பூஜை செய்யும் இடத்திற்கு வந்தார்கள்.
கரிய தோற்றம்; முகத்திலே முறுக்கு மீசை, உருட்டி விழிக்கும் கொடூரமான பார்வை, கூர்மையான ஆயுதங்களைத் தாங்கிய புஷ்டியான கரங்கள். கறுத்த போர்வையைப் போர்த்திக் கொண்டு நின்ற கொள்ளையர்களை மடத்தின் சிப்பந்திகளும் போகிகளும் பார்த்து அச்சத்தால் தேகம் நடுங்க பேச்செழாமல் நின்றார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள், வேறு எந்த விதச் சிந்தனையுமின்றி பூஜையில் ஆழ்ந்திருந்தார். 
ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் தங்கக் கவசம் அணிந்து, தங்க, வைர மாலைகளை அணிந்து ஒளிவீசிக் கொண்டிருந்ததைக் காணக் காண கொள்ளையர் தலைவனின் கொடூரமான முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது. ஸ்ரீஆசார்யாளின் அமுத மொழிகளிலே ருத்ரமும் சிவஸ்தோதிரரிங்களும் ஒலித்ததைக் கேட்டு கொள்ளையர்களும் அருகில் நெருங்க அஞ்சினார்கள். பூஜை முடிவடையட்டும் என்று காத்திருந்தார்கள். பூஜை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இருள் கனத்து, வானில் நக்ஷத்திரங்கள் மின்னின. பூஜை முடிவதற்குள் பொழுதே விடிந்து விடுமோ என்ற கவலை தோன்ற, தலைவன் தனது கூட்டத்தாரைப் பார்த்தான். பரிஜனங்களும் மடத்தைச் சேர்ந்த பிறரும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன், பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். குருநாதரின் கவனத்தைத் திருப்பும் துணிவு எவருக்கும் இல்லை.

பூஜை, நைவேத்யம், பிரார்த்தனை, தியானம் அனைத்தும் முடிந்த பிறகு ஸ்ரீஆசார்யாள் கண் மலர்ந்த போது அவருக்கு முன்னால் தலைவன் நின்றான். பளபளக்கும் வாளையும் அவனையும் பார்த்த பார்வையிலேயே, கொள்ளையர் தலைவனின் கொடூரம் மறைந்துபோயிற்று. கைகள் ஒருசேரக் கும்பிட்டான். மற்ற கொள்ளையர்கள் இதைக் கண்டு கோபமும் வியப்பும் அடைந்தார்கள். “இதென்ன! கொலை செய்யும் கைகள் முதல் முறையாகக் குவிகின்றனவே! இவரிடம் ஏதோ மாயம் இருக்கிறது! இல்லாவிடில் நமது தலைவர் இப்படி பணிந்து குழைந்து நின்றதில்லையே!”
“அவரைச் சொல்கிறாயே. நமக்கே அருகில் நெருங்க அச்சமாக இருக்கிறதே.” என்றான் மற்றொருவன். ஸ்ரீஆசார்யாள், தமக்கு முன்னால் நின்ற கள்வர் தலைவனை தீர்க்கமாக நோக்கினார். அவர் பார்வையில் பயமோ, உடலில் பதற்றமோ துளியும் இல்லாததைக் கண்டு, அந்தத் தலைவன் பரபரப்புற்றான்.

ஆயினும் வந்த வேலையைக் கவனிக்க வேண்டும் என்ற உணர்ச்சி உந்த, தலைவன், ஸ்ரீஆசார்யாளை நோக்கிக் கூறலானான். “சாமிக்குப் போட்டிருக்கும் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்து விடுங்கள் நாங்கள் போய்விடுகிறோம்.” ஸ்ரீ ஆச்சார்யாளின் அருள் வதனத்தில் புன்னகை அரும்பியது. “யாரப்பா நீங்கள்? எதற்காக நகைகளை உன்னிடம் கொடுக்க வேண்டும்? காரண காரியங்களைப் பார்த்துத் தான் எதையும் செய்ய இயலும். நீ வந்த காரியம், அதற்கு என்ன காரணம் விளக்கமாகச் சொல். கேட்போம்.”
இவ்வாறு அவனிடம் பேசியவாறே சுற்றிலும் அவருடைய திருவிழிப்பார்வை சென்று திரும்பியது. அங்காங்கே அச்சமே உருவாக நின்ற மடத்தின் சிப்பந்திகளையும் அவர்கள் அருகில் வாளும் கையுமாக நின்ற அரக்கர்களையும் கண்டார்.

“சாமி, நான் ரொம்ப நேரமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். வந்தோம் முடித்தோம் கிடைத்ததைப் பறித்துக் கொண்டு சென்றோம் என்கிற கொள்ளையர்கள் நாங்கள். இந்தக் காட்டு வழியிலே வருகிற பிரயாணிகளை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை நடக்கிறது. இன்றைக்கு, உங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றால் நாங்கள். எல்லோரும் பல நாட்கள் பசியின்றி இருக்க முடியும். உங்களைப் பார்த்தால், நாங்க கும்புடற சாமிமாதிரித் தெரியுது. அதனால் தான் இவ்வளவு நேரமா, ஒண்ணும் செய்யாமலே நாங்கள் இருக்கோம். நீங்களா கொடுத்து விட்டால் நல்லது.” கொள்ளையர் தலைவன் கூறிய பின்பும் ஸ்ரீ ஆச்சார்யாளின் வதனத்தில் மலர்ந்த புன்னகை மறையவே இல்லை.

“அன்பனே! நீ கூறியதெல்லாம் சரிதான். உன் குலத்தொழிலை நீ செய்யவந்திருக்கிறாய். ஆனால் ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் அணிந்திருக்கும் இந்த ஆபரணங்கள் எல்லாம் அவருக்குச் சொந்தமானவை. பக்தர்களால் அளிக்கப்பட்டவை. எல்லாம் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தவைகள். இவற்றை, எனக்கு சொந்தமில்லாத இவற்றை நான் எப்படி உனக்கு அளிக்க முடியும்? நீகேட்பது நியாயமாக இல்லையே!, மேலும் இவை எல்லாமே சிவபெருமானின் சொத்துக்கள். சிவன் சொத்து குல நாசம் என்பதை நீ அறிந்ததில்லையா? நீ செய்கின்ற பாபத்தொழிலைக் கைவிட்டு விடு. இனியாகிலும் திருந்தி நல்ல வழியிலே வாழுங்கள்.”

“காலங்காலமாகச் செய்கிற தொழிலில் பாப புண்ணியம் பார்த்துக் கொண்டிருந்தால் நாங்கள் எல்லாரும் பசியால் உயிரை விட வேண்டியது தான். இனிமேலும் பேசிக் கொண்டிருக்க முடியாது. அடேய், இருளா, சாம்பா, அந்தப் போர்வையைக் கீழே விரித்துப் போடு. பூஜை செய்யற சாமியை நாம தொடவேண்டாம். அவங்களே எல்லா நகைகளையும் எடுத்து இதில் போடட்டும். நாம் எடுத்துக் கொண்டு வந்த வழியில் போய்விடலாம். ம். போர்வையைக் கொண்டுவா!”

கொள்ளையர் தலைவன் கூறியதும் நான்கு பேர் ஓடிவந்து ஸ்ரீஆசார்யாள் முன்பாக கறுப்புக் கம்பளியை விரித்தார்கள். ஸ்ரீஆசார்யாள், ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு நமஸ்காரங்கள் செய்த பின்பு, அலங்காரமாகத் திகழ்ந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றினார்.

தங்கக் கவசத்தையும் ரத்தின மாலைகளையும் தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளங்களையும் மேலும் பல ஆபரணங்களையும் கம்பளியில் வைத்தார். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும் ரத்ன கர்ப கணபதியையும் பூஜைப் பெட்டியில் வைத்து விட்டு, “அப்பனே! இவற்றையெல்லாம் கொண்டு செல்ல உங்களால் முடிந்தால் கொண்டு செல்லுங்கள்” என்றார். “சாமி சொன்னபடி செய்துவிட்டார். வாங்க வாங்க. கம்பளியில் சுருட்டி பத்திரமா எடுத்துட்டுப் போகலாம்” என்றான் கொள்ளையர் தலைவன். தலைவன் உத்தரவுக்காகவே காத்துக் கொண்டிருந்த கொள்ளையர்களில் ஒருவன் கம்பளியைச் சுருட்டவந்தான். முடியவில்லை. அவனுக்கு உதவி செய்ய நான்கு பேர் ஓடிவந்தார்கள். நான்கு மூலைகளையும் ஆளுக்கு ஒரு புறமாகத் தூக்க முயன்றும் கம்பளியைத் தூக்க முடியவில்லை. மரத்தைப் பிடுங்கி வீச எறியத்தக்க பலசாலிகளான தங்களால் கேவலம் இந்தக் கம்பளிப் போர்வையைத் தூக்க முடியவில்லையே, எதனால்? என்று திகைத்தனர். மேலும் பலர் உதவிக்கு வந்தார்கள்.

இவற்றையெல்லாம் மடத்து சிப்பந்திகள் கண் கொட்டாத வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். 'இதென்ன விந்தை! இத்தனை தடியர்களால் தூக்க முடியவில்லை என்றால்?” அப்போது எவரும் எதிர்பாராதபடி கம்பளிப் போர்வை பற்றி எரிந்தது. நகைகள் இருந்த இடம் தவிர மற்ற பகுதிகள் எரிந்து கரிந்தன.

கொள்ளையர் தலைவன் திடுக்கிட்டான் எதிரிலே அமர்ந்து மோன நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் இவர் யார்? நாம் கும்பிடும் சாமிதானா? இவரிடமே நாம் திருடவந்தது தவறா? கம்பளியைத் தூக்க முடியாதது, ஒரு பக்கம் என்றால் கண் முன்னே எரிந்து போனது எதனால்?
நாம் செய்தது தவறு, செய்யத் தகாத குற்றத்தைச் செய்துவிட்டோம் என்று கொள்ளையர்கள் உணர்ந்தார்கள். “நாங்க கும்பிடற சாமி நீங்க, ஒங்ககிட்டே களவு செய்ய வந்த எங்களை மன்னிக்கணும். எங்களை வாழவைக்க வேணும். சாமி சாமீ..” என்று தலைவன் அரற்றினான், அழுதான். அழுது புரண்டான். விழுந்து வணங்கினான். அவனைத் தொடர்ந்து கொள்ளையர் கூட்டமே ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பாதகமலங்களைப் பற்றிக் கொண்டது. தங்களுடைய பாதகமலங்களைப் போக்கியருளும்படி கண்ணீர் விட்டார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள், கருணையும் வாத்ஸல்யமும் நிறைந்த திருஷ்டியால் அவர்களை நோக்கினார்கள். கூட்டத்தினர் அந்த 'நோக்கிலே' தங்கள் வாழ்வின் நோக்கமே அழிந்து போவதை உணர்ந்தார்கள். பாறைகளாக இருந்த அவர்கள் இதயத்திலே ஈரம் கசிந்தது. மனிதத்துவம் பூத்தது. கொடூரம் மறைந்தது.

ஸ்ரீஆசார்யாள் அவர்களின் திருமுகத்தையே தரிசித்தவண்ணம் அனைவரும் நின்றார்கள். அவருடைய அமுத மொழிகளைப் பருகுவதற்காக சாதகப் பறவைகளைப் போலக் காத்துக் கொண்டிருந்தார்கள். “ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரின் ஆபரணங்களை அபகரிக்கும் நோக்கத்துடன் வந்தீர்கள். இவர் யார் தெரியுமோ! மிகப்பெரும் கொள்ளைக்காரர். உங்களுக்கெல்லாம் தலைவர். ஸ்ரீருத்ரத்தில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?

“ககுபாய நிஷங்கிணே ஸ்தேனானாம் யதயே நமோநமோ
நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ”

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமோ? வாள் ஏந்திய கள்வர் தலைவராகிய பரமேஸ்வரருக்கு நமஸ்காரம். வில்லும் அம்பும் ஏந்திய கொள்ளையர் தலைவராகிய பரமேஸ்வரருக்கு நமஸ்காரம்” அத்தகைய பரமேஸ்வரர் தான், இதோ இங்கு ஸ்ரீசந்திரமௌளீஸ்வரராகக் காட்சி தருகிறார். உங்களுடைய தலைவரிடமிருந்தே நீங்கள் கொள்ளையடிக்க வந்தது அபசாரம் இல்லையா? பரமேஸ்வரர் உலகிலுள்ள எல்லாருக்கும் தந்தை. சொந்தத் தந்தையிடமே களவு செய்யலாமா? என அமைதியாய்க் கேட்டார். “சாமி! நாங்க புத்தியில்லாத அற்ப ஜன்மங்கள், எங்களுக்கு புத்தி கூறித்திருத்துங்கள், இனிமேல் நாங்கள் கொள்ளையடிக்க மாட்டோம். வழிப்பறி செய்யமாட்டோம். இது சத்தியம், சத்தியம். என்றனர் கொள்ளையர்கள்.

“ஆசீர்வாதம். எல்லாரும் க்ஷேமமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.” என்று தொடங்கி அவர்களுக்கு நல்லுபதேசங்கள் அளித்ததுடன் அவர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்கவும் உத்தரவிட்டார்கள், ஸ்ரீ ஆச்சார்யாள். இரவு முழுவதும் கொள்ளையர் அனைவரும், ஸ்ரீஆசார்யாள், பரிவாரங்களுக்குக் காவல் இருந்ததுடன், அவர்கள் அடுத்த முகாம் செல்லும் வரை உடன் சென்றார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின் அபாரமான மந்திரஸித்தியையும் அளவற்ற கருணையையும் கண் முன்னே கண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் பரிவாரங்களும் மெய்சிலிர்த்தார்கள்.

நன்றி : அம்மன் தரிசனம் மாத இதழ்



No comments:

Post a Comment