பக்தி எதைத்தான் சாதிக்காது?
“பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது? படிப்பறிவில்லாததொரு காட்டுமிராண்டி பரம பக்தர்களுள் தன் களங்கமற்ற பக்தியினால், முதன்மையானவனாக ஆகிவிட்டானே! இத்தனைக்கும் அந்த திண்ணன் செய்ததெல்லாம் உலகியலில் செய்யத் தகாத மஹாபாபங்களல்லவா? காட்டிலும் மேட்டிலும் நடந்து தேய்ந்த செருப்பினால் சிவலிங்கத்தின் மீதிருந்த நிர்மால்யங்களை அவன் களைந்தால், அதை வேதோக்தமாக செய்யப்பட்ட கூர்ச்சத்தினால் களையப்பட்டதாக இறைவன் ஏற்றுக் கொண்டார். பாத்திரம் இல்லாததால் தன் வாய் நிறைய தண்ணீரை உறிஞ்சிவந்து லிங்கத்தின் மீது அவன் எச்சில் நீரை உமிழ்ந்தால், அதை அவர் கங்காதி நதிகளிலிருந்து கொணர்ந்து ருத்ராபிஷேகம் செய்ததாக ஏற்றுக்கொண்டார். ருசியாக இருக்கிறதா? என தான் உண்டு பார்த்த மிச்சமான பன்றி மாமிசத்தை அவன் தந்தால், அதை சாஸ்த்ரோக்தமாக ஆசாரம் தவறாது செய்யப்பட்ட நிவேதனமாக அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அவனை பக்தர்களுள் முதலாவதாக செய்துவிட்டாரே! என்ன அதிசயம்!” என வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். கண்ணப்ப நாயனாரைப் பற்றி தன் ‘சிவானந்தலஹரி’யில். மேலும் அதே நூலில் பக்தியின் இலக்கணத்தையும் கூறுகிறார் அவர். “ஏறு அழிஞ்சில் மரத்தின் விதை தெறித்து எங்கே விழுந்தாலும் மேல்ல நகர்ந்து தாய் மரத்தில் ஏறி ஒன்றுவது போலவும், காந்தத்தை நோக்கி இரும்பு ஊசியானது நகர்ந்து ஒட்டிக்கொள்வது போலவும், தன் நாதனிடம் விரைந்து வந்து ஒரு பத்தினிப்பெண் ஒன்றுவது போலவும், மரத்தின் மேல் அருகிலிருக்கும் ஒரு கொடியானது வந்து படர்வது போலவும் கடலில் விரைந்து வந்து ஒரு நதியானது கலப்பது போலவும், இறைவனின் பாதங்களில் மனத்தாலும் செயலாலும் சென்று இயற்கையாக கலப்பதுதான் பக்தி எனப்படும்” என்கிறார்.
இறைவனிடம் நாம் கொள்வது மட்டும்தானா பக்தி? இல்லை, பக்தியில் மாத்ரு பக்தி, பித்ரு பக்தி, குரு பக்தி, பித்ருக்களிடம் கொள்ளும் பக்தி, பதிபக்தி, தெய்வ பக்தி எனப் பலவகை உண்டு. ஒவ்வொன்றாலும் மகத்தானவற்றை சாதித்தவர்கள் பலரைப் பற்றி நம் இதிகாச, புராண, சரித்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொன்றையும் சிறிது காண்போம்.
வேதம் “தாய்தான் முதன்மையாக வணங்கத்தக்க தெய்வம். அடுத்து தந்தையும், அவர்களுக்கு அடுத்து குருவும், அடுத்து விருந்தினரான அதிதியும்” என்கிறது. தர்ம சாஸ்திரங்கள் ஒருபடி மேலேபோய் “குருவிற்கு செய்யும் பணிவிடையை விட தந்தைக்கு செய்யும் பணிவிடை நூறு மடங்கு உயர்ந்த பலனை அளிக்கவல்லது. தந்தைக்கு செய்வதைவிட தாய்க்கு செய்யும் பணிவிடையானது நூறுமடங்கு உயர்ந்த பலனை அளிக்க வல்லது” எனக் கூறுகின்றன. தாயாரிடம் அளவுகடந்த பக்தியைக் கொண்ட போதிலும், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என உணர்ந்த பரசுராமர், அவர் சொற்படி அன்னை ரேணுகாதேவியின் சிரத்தைக் கொய்து பிறகு மனம் குளிர்ந்த தன் தந்தையிடம் வரமாக தன் தாயாரின் உயிரை யாசிக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழிவாங்க க்ஷத்ரிய குலத்தையே அழிக்க புறப்பட்ட அவர் போர்க்களம் கண்ட ஒவ்வோர் இடத்திலும் அமைத்த படைவீடுகளில் தன் அன்னை ரேணுகாதேவிக்கு ஆலயம் எழுப்பி பூஜை செய்துவிட்டுத்தான் போரிடுகிறார். அவற்றில் தன் மாத்ரு பக்தியினால் வெற்றிவாகையும் சூடுகிறார்.
தாய் தந்தையை தெய்வமாகக் கருதி அவர்களைத் தன் தோள்களில் சுமந்து சென்று புனிதத் தலங்களில் நீராட்டிய ஸ்ரவண குமாரன் என்னும் தவப்புதல்வன் ஸப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் தவறுதலாக தசரத மன்னனால் அடிக்கப்பட்டு உயிர் துறக்கும் நிலையிலும் அம்மன்னனை மன்னித்து தேற்றித் தன்னைக் கொன்றதனால் அவருக்கு பிரஹ்மஹத்தி தோஷம் வராதென்றும், ஏனெனில் தன் தந்தை ஒரு வைஸ்யரென்றும், தாயார் வேளாளர் குல மங்கை என்றும் கூறி ஆனால் அவர்கள் மஹா தபஸ்விகளென்றும் அறிவுறுத்தி, அவர்களது தாகத்தைத் தன் சார்பாகச் சென்று தீர்க்குமாறு கூறி தன் தாய், தந்தையிடம் கொண்ட பக்தியினால் ஸ்வர்க்கத்தை அடைகிறான்.
தன் தந்தை செய்வது (சீதா தேவியை அபகரித்து சிறை வைப்பது) தவறு என உணர்ந்த போதிலும், தந்தையான இராவணனிடம் கொண்ட பக்தியினால் ஹனுமானாலேயே மஹாவீரனாகவும், தேஜஸ்வியாகவும் வியந்து புகழப்பட்ட, அக்ஷகுமாரன் ஹனுமானிடம் போரிட்டு மடிகிறான். அவன் தம்பி மேகநாதனும் தன் தந்தையிடம் கொண்ட பக்தியினாலேயே தேவர் தலைவன் இந்திரனையே ஜயிக்கும் திறன் பெற்று ‘இந்திரஜித்’ என்னும் பட்டப்பெயரை அடைகிறான். அவருக்காகவே போரிட்டு லக்ஷ்மணர் கையினால் மாள்கிறான்.
அஷ்டவஸுக்களில் ஒருவராக சந்தனு மஹாராஜாவுக்கு கங்காதேவியிடம் பிறந்த தேவவிரதன், தன் தந்தையிடம் கொண்ட பக்தியினால் அவர் யோஜனகந்தி என்று காரணப் பெயரைக் கொண்ட சத்யவதி என்ற மீனவப் பெண்ணை விவாஹம் புரிய விரும்பியபோது மூத்தவன் தான் இருக்க அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இராஜ்யம் கிடைக்காதே என அவளது தந்தை மறுத்தபோது, அவரை அண்டி தான் எக்காலத்திலும் மணம் புரியமாட்டேன் என்னும் பயங்கரமானதொரு சபதத்தைச் செய்து ‘பீஷ்ம’ரென தேவர்களாலும் புகழப்பட்டதொரு தியாகசீலர் ஆனார்.
தன் தந்தை யயாதி இளமையுடன் இல்லற சுகங்களை அனுபவிக்க விரும்பியதால் அவருக்கு தன் இளமையை ஆயிரம் ஆண்டுகளுக்கு அளித்து, அவர் தன் இளைய மனைவி சர்மிஷ்டையின் மீது கொண்ட அளவு கடந்த அன்பினால் வெகுண்ட முதல் மனைவி தேவயானியின் தந்தை சுக்ராசாரியாரின் சாபத்தினால் விளைந்த முதுமையை பதிலுக்குத் தான் பெற்று அவரது ஆசிகளையும் அழியாப் புகழையும் பெற்றான் புரு என்னும் சத்புத்ரன்.
தன் தந்தை கோபத்தில் எரிச்சலடைந்து “உன்னை யமனுக்கு தானமாக அளிக்கிறேன்” எனக்கூறியதை தன் பித்ருபக்தியினால் சிரமேற்கொண்டு தன் தவ வலிமையால் யமனுடைய மாளிகைக்குச் சென்று, யமன் வெளியே சென்றிருந்த காரணத்தினால் யஜமானன் வராது வீட்டினுள் செல்லக்கூடாது என மூன்று நாள்கள் வெளியேயே காத்திருந்து, திரும்பிய யமன் தன் தவறுக்கு (அதிதியை காத்திருக்கச் செய்வது) பிராயச்சித்தமாக எதையும் தரத்தயாராக இருந்த நிலையில், தேவரஹஸ்யமான ‘இறந்த பின்னர் ஆன்மா என்னவாகிறது’ என்பதை தனக்கு விளக்கச் சொல்லி, அவர் மற்ற எத்தனையோ தரத்தயாராக இருந்தாலும் அவை யாவற்றையும் புறம் தள்ளித் தான் விரும்பியதை அறிந்து ‘கடோபனிஷத்’ தோன்றக் காரணமாகிறான் நசிகேதஸ் என்னும் மற்றொரு முனிகுமாரன்.
இவர்கள் எவரிலும் தான் குறையாது ஸ்ரீஇராமர் தன் தகப்பனார் தசரதரின் சொல்காக்க பதினான்கு ஆண்டுகள் கானகம் சென்று பல இன்னல்களையும் எதிர்கொண்டு தன் பித்ருபக்தியை வெளிப்படுத்தி காவியத்தலைவனாக ‘தர்மத்தின் உருவ’மாக தன் எதிரியான மாரீசனாலேயே புகழப்படுகிறார்.
தாய், தந்தையிடம் கொண்ட பக்திக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர், கெட்டலைந்த புண்டரீகனையும் நல்வழிப்படுத்திய குக்குடமுனிவர். இவருடைய ஆஸ்ரமத்தில் தாங்கள் செய்த சேவையினால்தான் பலரது பாபச்சுமைகளை ஏற்றதனால் குரூரமான உருவை அடைந்த கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிதேவதைகளும், அழகிய உருவை அடைகின்றனர். புண்டரீகனைக் கண்டதனால் மறுபடி குரூபிகளான அவர்கள் அவனைக் குஷ்டரோகியாக சபித்து அந்த சாபம் அவனுடைய தாய், தந்தையின் மனத்தைக் குளிர்விப்பதனாலேயே தீரும் எனக் கூறுகின்றனர். இது அவனுடைய அகக் கண்ணைத் திறந்து தாய், தந்தையை சரணடைந்து அவர்களுடைய சேவையினால் உயர்வுற்றுத் தன் ஆஸ்ரம வாசலுக்கு அனுக்ரஹம் செய்ய வந்த பகவான் ஸ்ரீபாண்டுரங்கரையும், ருக்மிணி தேவியையுமே அங்கேயே தாய், தந்தைக்குத் தான் செய்யும் சேவை முடியும் வரை ஒரு செங்கல் மீது நிற்கச் செய்து அந்தப் பக்தியின் சிறப்பினால் தன் தாய், தந்தையுடன் தான் முக்தியடைந்ததோடல்லாமல் இன்றளவும் பாமர மக்களும் உய்யும் வண்ணம் பண்டரீபுரத்தை மேன்மையுறச் செய்தான்.
இதுபோலவே கௌசிகன் என்னும் சித்திகள் பெற்ற முனிவரின் வாழ்வில் அவரது குருவாய் அமர்ந்து உபதேசம் செய்யும் அளவுக்கு மிதிலையில் வாழ்ந்த தர்மவியாதன் என்னும் ஒரு கசாப்புக் கடைக்காரன் தன் தாய், தந்தையிடம் கொண்ட பக்தி அவனை உயர்த்தி விடுவதையும் காண்கிறோம்.
அடுத்து சமீபகாலத்தில் தன் அன்னை ஜீஜாபாயிடம் கொண்ட அபரிமிதமான பக்தி எப்படி ஒரு சாதாரண மராத்திய வீரனான சிவாஜியை சக்கரவர்த்தியாக, உலகம் புகழும் ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த உத்தமனாக உயர்த்தியது என்றும், தன் தாய் புத்லிபாயிடம் கொண்ட பக்தியானது ஒரு சாதாரண குஜராத்திய சிறுவனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை பார்புகழும் மஹாத்மா காந்தியாக உயர்த்தியது என்றும் நாம் காண்கிறோம்.
பித்ரு தேவதைகளிடம் கொண்ட பக்திக்கு உதாரணமாக பகீரதனைக் கூறலாம். பல இன்னல்களுக்கிடையே ஆகாச கங்கையைப் பூமிக்கு கொண்டுவந்து, பாதாளத்திலிருந்த கபிலரின் ஆஸ்ரமம் வரை கொண்டு சென்று சகரபுத்ரர்களான தன் முன்னோர்களது அஸ்தியை நனைத்து அவர்களுக்கும் மோக்ஷமளிக்கிறான்.
குருபக்தியும் இதற்குச் சிறிதும் வீரியத்தில் குறைந்ததல்ல. தேவாசுர யுத்தங்களில் இறந்துவிழும் அசுரர்களை குருசுக்ராசார்யர் ம்ருதசஞ்ஜீவனி மந்திரத்தினால் உயிர்தந்து எழுப்ப, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பிருஹஸ்பதியின் மகன் கசன் சுக்ராசார்யரிடமே சிஷ்யனாக சேர்ந்து அவருக்கும் அவரது மகள் தேவயானிக்கும் பக்தியுடன் சேவை செய்கிறான். அவனைக் கொன்று துண்டுதுண்டாக்கி நாய்களுக்கு அசுரர்கள் போட்டுவிட தேவயானியின் முறையீட்டினால் சுக்ராசார்யார் அவனை உயிர்ப்பிக்கிறார். இரண்டாம் முறை அசுரர்கள் அவனைக்கொன்று அவன் தேகத்தை அரைத்து சமுத்திரத்தில் கரைக்க மறுபடி தேவயானியைத் திருப்திபடுத்த சுக்ராசாரியார் கசனை ம்ருதசஞ்ஜீவினியால் உயிர்ப்பிக்கிறார். மூன்றாம் முறையாக அசுரர்கள் அவனைக் கொன்று உடலை சுட்டுச் சாம்பலாக்கி அதை பானத்தில் கரைத்து சுக்ராசாரியாருக்கே குடிக்கக் கொடுத்து விடுகிறார்கள். இந்த முறை அவனை உயிர்ப்பித்தால் தான் இறந்துவிடுவோம் என்பதை அறிந்த அசுரகுருவுக்கு அதுவரை கசனுக்குத்தான் உபதேசிக்காத ம்ருதசஞ்ஜீவினியை உபதேசிப்பது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது. அவரது வயிற்றிலிருந்து வெளிவந்த கசன் அவரை உயிர்ப்பித்து அவரது நல்லாசிகளுடனும், காரியசித்தியுடனும் தேவலோகம் போகிறான். பக்தியின் பிரபாவம் இது.
தௌம்யர் என்னும் மஹரிஷிக்கு உபமன்யு ஆருணி, வேத: என்னும் மூன்று சிஷ்யர்கள். மூவரையும் மூன்று விதமாக அவர் சோதிக்கிறார். உபமன்யுவை தன் மாடுகளை மேய்த்து வரும் பணியில் அமர்த்துகிறார். அவன் புஷ்டியுடன் இருப்பது கண்டு காரணத்தை விசாரிக்கையில் அவன் பிக்ஷை எடுத்து உண்பதாக அறிந்து பிக்ஷையைத் தன்னிடம் தந்துவிட வேண்டும் என வாங்கிக்கொண்டு விடுகிறார். மறு நாளும் அவன் புஷ்டியாக இருப்பதுகண்டு விசாரித்து அவன் மறுபடி பிக்ஷை எடுப்பதாக அறிந்து இது புதிதாக பிக்ஷை எடுப்பவரையும் கிரஹஸ்தர்கள்களையும் பாதிக்கும் என தடுத்து விடுகிறார். அதற்கு அடுத்த நாளும் அவன் உடல் வற்றாது இருப்பது கண்டு மாடுகளின் பாலைக்கறந்து அவன் குடிப்பதாக அறிந்து, மாடுகளின் பால் தன் யக்ஞங்களுக்கானது எனத் தடுக்கிறார். மறுநாள் அவன் கன்றுகள் பால்குடிக்கும்போது வழியும் நுரையை உண்பதாக அறிந்து அது கன்றுகளின் வயிறு நிறையாது செய்துவிடும் எனத் தடுக்கிறார். இலையை உண்டு அதனால் கண்பார்வை இழந்து கிணற்றில் விழுந்து விடுகிறான். அவனைத் தேடிவந்து குரு அவனுக்கு அஸ்வினி தேவர்களைக் குறித்த ஸ்தோத்திரத்தைக் கூறி துதிக்கச் செய்ய அதனால் கண்பார்வை பெற்ற அவனுக்கு அஸ்வினிதேவர்கள் ஓர் அப்பத்தை அளிக்கின்றனர். தன் குருவின் அனுமதியின்றி அதை அவன் சாப்பிட மறுக்கும் போது அவர்கள் அவனுடைய குருவே தன் குருவின் அனுமதியின்றித் தான் தாங்கள் தந்த அப்பத்தை உண்டார் எனக்கூறியும், தான் அவ்வாறு செய்யத் தன் குருபக்தி அனுமதிக்காது என அவன் மறுக்க தௌம்யர் அவனை ஆசிர்வதித்து அவனுக்குத்தான் அதுவரை உபதேசிக்காது விட்டிருந்த வேத சாஸ்திரங்களெல்லாம் தானே அவனுக்கு ஸ்புரிக்கும் என வரம் தருகிறார்.
ஆருணியை தௌம்யமுனி தன் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி அணைகட்ட அனுப்புகிறார். அவன் அப்படியே தண்ணீர் பாய்ச்சியபின் அணைகட்ட முயற்சிக்க என்ன செய்தும் தண்ணீர் வயலினின்றும் வெளியேறுவதை தடுக்க முடியாதவனாக தண்ணீருக்கு அணையாகத்தானே அங்கு வயலோடு வயலாக படுத்துக் கிடக்கிறான். அஸ்தமனத்திற்குப் பிறகும் அவன் வராதது கண்டு அவனைத் தேடி வரும் குரு அவனது தீவிர குருபக்தியை மெச்சி அவனை அன்றிலிருந்து உலகம் ‘உத்தாலக ஆருணி’ (வயலோடு வயலான ஆருணி) எனப்புகழும் எனக்கூறி அவனுக்கும் சகல வேத சாஸ்திரங்களும் தானே ஸ்புரிக்கும் என அனுக்ரஹிக்கிறார்.
வேத: என்னும் சிஷ்யனையும் பலவிதமாகத் துன்புறுத்தி அத்தனையையும் சகித்துக் கொண்டு அவன் சேவை செய்வது கண்டு, மனமிரங்கி அவனுடைய குருபக்தியே அவனுக்கு சகல வித்யைகளையும் அளித்துவிட்டது எனக் கூறுகிறார். அவனோ இவர் தன்னைத் துன்புறுத்தியது போல தனக்கு வாய்க்கும் சிஷ்யர்களைத் தான் ஒருபோதும் துன்புறுத்துவது இல்லை என்னும் உறுதியுடன் வாழ்கிறான்.
எந்த நிலையிலும் உண்மையை மறைத்து அறியாத காரணத்தால் ‘ஸத்யகாம’ என்னும் பட்டத்துடன் விளங்கிய ஜாபாலி முனிவருக்குப் பல சிஷ்யர்கள். மற்ற அனைவருக்கும் எல்லா வித்யைகளையும் போதித்து விடை கொடுத்து அனுப்பிய பின்னரும் உபகோஸலன் என்னும் ஒரு சிஷ்யனுக்கு மட்டும் எதுவும் போதிக்காது, தன் ஆன்ஹிக அக்னிகள் மூன்றையும் பாதுகாத்து வரும்படி அவனை பணித்து விட்டு குரு க்ஷேத்ராடனம் சென்றுவிட்டார். இது உபகோஸலனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தாலும் குருபத்னியினால் மனம் தேற்றப்பட்டவனாக மூன்று அக்னிகளையும் பக்தி ஸ்ரத்தையுடன் பாதுகாத்து வந்தான். இதனால் உள்ளம் குளிர்ந்த அக்னி தேவன் அவனுக்கு சகல சாஸ்திரங்களும் வசமாகும்படி அனுக்ரஹித்தான். குரு ஜாபாலி திரும்பிவரும்போது அக்னிக்குஞ்சென ஜ்வலிக்கும் உபகோஸலனைக் கண்டு நடந்ததையும் அறிந்து இவ்வாறு அவன் திவ்யானுக்கிரஹம் பெற்று விளங்கவேண்டும் என்றுதான் தான் அவனுக்கு எதுவும் அதுவரை போதிக்காது அவன் வசம் மூன்று அக்னியையும் ஒப்படைத்துச் சென்றதாகக் கூறி அவனது குருபக்தியை மெச்சி அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.
மஹாராஜா ஜனகருடைய முன்னோர்களான கேஸித்வஜனும், காண்டிக்ரீவனும் ஒன்றுவிட்ட சகோதர்களாயினும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கேஸித்வஜன் ஆத்ம ஞானத்தில் சிறந்தவனாகவும், காண்டிக்ரீவன் வைதிக சாஸ்திரத்தில் சிறந்தவனாகவும் விளங்கினார். ஒருநிலையில் கேஸித்வஜன் ஜயித்துவிட காண்டிக்ரீவன் தன் மகளுடன் காட்டிற்குச் சென்றுவிடுகிறான். வெற்றியைக் கொண்டாட கேஸித்வஜன் செய்த யாகத்தில், யக்ஞ பசு இறந்துவிட பரிஹாரம் அறிய பலரிடம் சென்று, கடைசியில் வைதிக சாஸ்திரத்தில் சிறந்தவனான காண்டிக்ரீவனிடமே பரிஹாரத்தை உபதேசமாக பெற்று அதை செய்தும் ஆத்மநிம்மதி இல்லாது, அதற்குத் தான் குரு தக்ஷிணை தராததே காரணமென உணர்ந்து காட்டிற்கு விரைகிறான். அவன் தன்னைக் கொல்ல வருகிறான் எனக் கருதிய காண்டிக்ரீவனுக்கு அவனது இராஜ்யத்தை குருதக்ஷிணையாகத் தான் தருவதாக கேஸித்வஜன் கூற இனி தனக்கு இராஜ்யத்தில் பற்று இல்லை எனக்கூறி ஆத்மஞானத்தை அவனிடம் தக்ஷிணையாக கேட்டுப் பெறுகிறான்.
சூர்ய வம்சத்தின் மன்னனும், ரகுவின் தந்தையுமான திலீபன் தன் குரு வசிஷ்டரது பிரியத்திற்குரிய பசுவான நந்தினி தேனுவின் காப்பாளனாக காட்டுக்கு மேயச் சென்ற அந்த தேனுவுடன் சென்றவன், அதை கும்போதரன் என்ற சிவகணமானது சிங்கமாக வந்து தாக்க, அப்பசுவின் உயிர்காக்க சிங்கத்துடன் விவாதித்து “உன் சிவபெருமான் கோபித்தால் என்னை என் குரு காப்பார்; ஆனால் இந்தப் பசுவை இழந்து நான் என் குருவின் கோபத்தை அடைந்தேன் என்றால் உன் சிவனைப்போல் பலர் வந்தாலும் என்னை காக்க முடியாது” என தன் குருபக்தியை வெளிப்படுத்தியவனாக இறுதியில் தேனுவுக்குப் பதிலாக தன்னையே இரையாக சிங்கத்துக்குத் தர முன்வந்து தேவர்களாலும் புகழப்படும் பேறு பெற்று, நந்தினி தேனுவிடம் பிள்ளைவரமும் பெறுகிறான்.
நேராக ஆசார்ய துரோணரிடம் வில்வித்தை கற்க முடியாத ஏகலைவன் என்னும் வேடச் சிறுவன் தன் நிகரிலா குருபக்தியினால் தானே செய்த குருவின் சிலைமுன் வில்வித்தை பயின்று, அவரது தலைசிறந்த மாணவனாக போற்றப்பட்ட அர்ஜுனனுக்குச் சமானமான தேர்ச்சியை அடைகிறான். அர்ஜுனனுக்கு இணையாக வேறு எவரும் இருப்பது சகியாது துரோணர் அவனது கட்டை விரலை குருதக்ஷிணையாகக் கேட்க தயங்காது அதை அரிந்து தந்து அழியாப்புகழ் அடைகிறான்.
அர்ஜுனனோ, தன் குரு துரோணருடன் படித்த இளவரசன் த்ருபதன், தான் அரசனானால் பாதி இராஜ்யதை அவருக்குத் தருவதாகக் கூறி, பின் அரசனான அவனைக் காணச்சென்ற அவரை பிச்சைக்கார பிராஹ்மணரென அவமதித்த த்ருபதனைத் தான் வென்று குரு துரோணரின் காலடியில் அவனது இராஜ்யத்தை குரு தக்ஷிணையாக வைத்து அவரது ஆசியையும், அழியாப் புகழையும் அடைகிறான்.
பிராஹ்மணரல்லாதவருக்கு பிரஹ்மாஸ்திரம் கற்றுத் தராதவரான பரசுராமரிடம் அவற்றைக் கற்க விழைந்து தன்னை ஒரு க்ஷத்ரியனாக வெளிப்படுத்திக் கொள்ளாது அந்தண வேடம் பூண்டு கற்றாலும், கர்ணன் குருபக்தியில் எவருக்கும் குறைந்தவனல்லன். தன் மடி மீது தலைவைத்து தன் குரு தூங்குகையில் தன் மகன் அர்ஜுனனுக்கு இவன் இப்படி பிரஹ்மாஸ்திரம் கற்பது ஆபத்து எனக்கருதிய இந்திரன் வண்டு உருவில் வந்து தன் தொடையைத் துளைத்தபோது, குருவின் தூக்கம் கெடக்கூடாது எனக்கருதி அவன் அசையாது இருந்தாலும், தொடையிலிருந்து பீரிட்ட ரத்தத்தின் ஈரத்தினால் தூக்கம் கலைந்த பரசுராமர் ஒரு பிராஹ்மணனால் இவ்வாறு வலியைச் சகித்துக்கொண்டு இருக்க முடியாது என முடிவுக்கு வந்தவராக க்ஷத்ரியனான அவன் தன்னை ஏமாற்றி கற்ற பிரஹ்மாஸ்திரம் அவனுக்குத் தன் பிராணனைக் காப்பாற்றிக் கொள்ள தேவைப்படும் நேரத்தில் மறந்துவிடும் என சபிக்கிறார். இறுதியில் பாரதப் போரில் அவ்வாறே நடக்கத் தன் உயிரையே குரு தக்ஷிணையாக்குகிறான் கர்ணன்.
ஸ்ரீகிருஷ்ணரும் தன் குருபக்தியைக் காட்டும் நேரம் வருகிறது. ஸாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் முடிந்து அவரது மனத்துக்கினிய குருதக்ஷிணையை அளிக்க பகவான் விரும்பியபோது, குருபத்னி பத்து வருடங்களுக்கு முன் பிரபாஸ தீர்த்தம் என்னும் சமுத்ரக்கரையில் ஸ்நானம் செய்யச் சென்று மூழ்கிவிட்ட தன் மகனை உயிருடன் தன்முன் கொண்டு வந்து நிறுத்தக் கோருகிறாள். அப்படியே செய்வதாக வாக்களித்து ஸ்ரீகிருஷ்ணர் வருணனை பிரார்த்திக்க அவன் அந்த குருபுத்ரனை பாஞ்சஜன்யன் என்னும் சங்கு உருவ ராக்ஷஸன் விழுங்கிவிட்டதாகக் கூற பாஞ்சஜன்யனைக் கொன்று அவனைத் தன் கையில் ஆயுதமாக ஏந்திக் கொண்ட பின்னரும், அவனிடம் தன் குருபுத்ரனைக் காணாது யமதர்ம ராஜனிடம் சென்று வாதாடி, அவனை உயிருடன் கொணர்ந்து குருவின் முன் நிறுத்தி குருவுக்கும் குருபத்னிக்கும் ஒருசேர இன்பத்தை அளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தன் குரு ஸ்ரீகோவிந்த பகவத்பாதாளை நர்மதைக்கரை குகையில் கண்டு அவரை குருவாக வரித்த பின்னர், அவரையும் அவர் தவம்புரியும் குகையையும் நர்மதையின் வெள்ளத்திலிருந்து காக்க தன் குருபக்தியினால் அந்த வெள்ளத்தைத் தன் கமண்டலுவில் அடக்கி விடுவதுடன் தான் இயற்றிய நூலான ‘பஜ கோவிந்த’த்தில் தன் குருவை மனத்தில் கொண்டே பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் மூடமதே என மறுபடி மறுபடி கூறுகிறார்.
அவர் சிஷ்யரான ஸந்தனர் தன் அதீதிமான குருபக்தியாலேயே குருவிற்கு உலர்ந்த துணிகளை எடுத்து வந்தவர், குரு ஆதிசங்கரர் சீக்கிரம் வா எனக்கூறியவுடன் கங்கையைக் கடந்துவர நதியில் காலை வைக்க அவரது பாதங்களுக்குக் கீழ் தாமரைகள் தோன்றி அவரைத் தாங்க, அதனாலேயே ‘பத்மபாதர்’ என்னும் பெயரைப் பெறுகிறார். அவரது மேன்மையை மற்ற சிஷ்யர்களும் அறிகிறார்கள். இதே குருபக்திதான் காபாலிகனிடமிருந்து தன் குருவைக் காக்க கோபத்துடன் அவர் அவன்மேல் பாயும்போது அவருள் பகவான் நரஸிம்ஹரை ஆவிர்பவிக்கச் செய்கிறது.
சமீபகாலத்தில் வித்யாரண்யரிடம் கொண்ட குருபக்தி ஹரிஹர மன்னனை, அவனது இராஜ்யாபிஷேகம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் தவறான ஸம்க்ஞையினால் நிகழ்ந்துவிட விஜயநகர சாம்ராஜ்யத்தின் நீடித்த மேன்மை கோரி அவர் குரு தக்ஷிணையாக அவனது சாம்ராஜ்யாதிபத்யத்தை கேட்க, தயங்காது அவரது தாள்களில் வைக்கத் தூண்டி, இன்றும் ச்ருங்கேரி ஸம்ஸ்தானம் இராஜகம்பீரத்துடன் இருக்க வழிசெய்தது. இதே போல தன் குரு சமர்த்த இராமதாஸரிடம் சத்ரபதி சிவாஜி கொண்ட குருபக்திதான் அவனை இராஜ்யத்தையே அவருக்கு அர்ப்பித்து அவரது தாசனாகச் செய்து, அன்னை பவானி அருளுக்கும் பாத்திரமாக்கி, பல இன்னல்களினின்றும் அவனைக் காத்தது.
நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்திரி காவ்யரசனையை, ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரையை ஏற்று, கவியான பிஷரடியிடம் சென்று தனக்கு குருவாக இருக்க விண்ணப்பிக்க, அவர் தான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தயங்கி பின் பட்டத்திரி வற்புறுத்தவே சம்மதித்தார். பின் பிஷரடியை வாத நோய்பாதிக்க, அதைத் தான் ஏற்றுக் கொண்டு தன் குருபக்தியை காட்டிய பின், நாராயணீயம் பாடி வாதநோய் நீங்கப்பெறுகிறார்.
இனி பதிபக்தியால் மேன்மை பெற்ற சில் உத்தமிகளைப் பற்றிக் காண்போம். நளாயினி என்ற மௌத்கல்ய மஹா முனிவரின் பத்னியின் பதிபக்தியை உலகுக்கு காட்ட அந்த முனிவர் குஷ்டரோகியாகத் தன்னை ஆக்கிக் கொண்டதுடன், தன்னை தன் மனத்துக்கினிய தாஸியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சுமந்து செல்லும்படி தன் பத்னியை பணிக்கிறார். அவ்வாறு அவள் சுமந்து செல்லும் போது அந்த கூடை, தவறுதலாக திருடரென நினைத்து இராஜசேவகர்களால் கழுவில் ஏற்றப்பட்டு வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஆணிமாண்டவ்யர் என்னும் முனிவர் மேல் பட, வேதனை தாங்காது அவர் மௌத்கல்யர் மறுநாள் சூர்யோதயத்தில் உயிரிழப்பார் என சபித்து விடுகிறார். மஹாபதிவ்ரதையான நளாயினி சூர்யனே உதிக்காது போகக்கடவது எனக் கூறிவிடுகிறாள். சூர்யன் இல்லாது உலகு தவிக்க இறுதியில் அருந்ததி மௌத்கல்யருக்குத் தீர்க்க ஆயுளையும் தந்து சூர்யனை உதிக்கச் செய்கிறாள். மௌத்கல்யரும் தன் இயற்கையான உருவினை மறுபடி அடைகிறார்.
மஹாராஜா ஸர்யாதர் என்னும் மனுவின் வம்சத்தில் உதித்தவரின் மகளான சுகன்யா தான் தவறுதலாக குச்சியினால் குத்தி குருடாக்கிய மாமுனி ச்யவனரையே மணந்து, சிறந்த பதிபக்தியுடன் அவருக்கு பணிவிடை செய்து வருகிறாள். அவள் முன் தோன்றிய அஸ்வினி தேவதைகள் அவளது பதிபக்தியை மெச்சி ச்யவனருக்கு பார்வையைத் தந்ததுடன் அவரது இளமையையும் தந்து அருளுகிறார்கள்.
மஹாராஜா அஸ்வபதியின் மகளான சாவித்ரி தான் விரும்பிய சத்யவான் என்னும் நாடிழந்து காட்டில் வாழும் இராஜகுமாரனை அவன் இன்னும் ஒரு வருடமே உயிர் வாழ்வான் எனத் தெரிந்தும், பிடிவாதமாக மணந்து அவனுக்கும் அவனுடைய தாய், தந்தைக்கு பணிவிடை செய்துகொண்டு பதிபக்தியுடன் காட்டில் அவனுடன் வாழ்கிறாள். விறகு வெட்டச் சென்ற அவனுடன் நாளும் பின்தொடர்ந்த அவளது பதிவ்ரத மஹிமை அவனது உயிரைக் கவர வந்த யமதர்மராஜனை பின் தொடரச் செய்கிறது. இழந்த இராஜ்யம் முதலாக பல வரங்களை யமன் தந்தும் பிடிவாதமாக தன் பதியின் உயிரை வேண்டி அவள் பணிய அவளை பதினாறும் பெற்று வாழ ஆசிர்வதித்த யமனுக்கு பதினாறுபேறும் அவள் பெற அவளது பதியின் உயிரைத் திருப்பித்தருவது இன்றியமையாததாகி விடுகிறது.
தான் விரும்பி மணந்த நளன் கலியினாலும், சனியினாலும் பல இன்னல்களைச் சந்தித்து குரூபியாகவும் மாறி ருதுபர்ண மஹாராஜாவுக்கு ஊழியம் செய்யும் தாழ்ந்த நிலையை அடைந்த போதிலும், அவை யாவற்றிலிருந்தும் வெளி வந்து தான் இழந்த இராஜ்யத்தையும் ரூபத்தையும் மறுபடி அடைந்து காட்டில் விட்டுப் பிரிந்த தன்னுடன் மறுபடி சேரும்படி தன் பதிபக்தியின் மஹிமையினால் கலி மற்றும் சனியின் பிடியிலிருந்து அவனை விடுவிக்கிறாள் உத்தமியான தமயந்தி.
விதர்ப்ப தேசத்து அரசனின் மகளாக, ஒவ்வொரு மிருகம், பக்ஷி இவற்றின் அழகையெல்லாமும், உலகிலுள்ள ஸ்திரீ லக்ஷணங்கள் எல்லாவற்றையும் கொண்டதொரு அதிரூப சுந்தரியாக, அதனாலேயே ‘லோபாமுத்ரா’ என்னும் காரணப் பெயரைக் கொண்டவளாக, அகஸ்தியர் மனத்தில் ஸங்கல்பம் செய்து கொண்ட லக்ஷணங்களுடன் பிறந்த இராஜகுமாரியாக இருப்பினும், அகஸ்தியரின் பித்ருக்களை உய்விக்கத் தன் இராஜபடாடோபங்களை உதறி சாதாரண மரவுரி தரித்து அவரது மனைவியாகி அவர் பின் சென்று, அவருக்கு செல்வச்செழிப்பு சேர வாதாபி இல்வலர்களை வென்று அவர் அவர்களது செல்வத்தை அடையவும், தன் தேவி பக்தியினால் அவர் ஸாக்தத்தின் நுணுக்கங்களை குரு ஹயக்ரீவரிடம் கற்று மேன்மையுறவும் காரணமாகிறாள். தன் உயர்ந்த பதிபக்தியினால் அவரை கணமும் பிரியாது பின் தொடர்ந்து தென்னாட்டுக்கு அவர் செல்லும்போது அவரது கமண்டலுவிலேயே ஜலஸ்வரூபத்தில் அவருடன் சென்று காவிரி நதியாக வற்றாத ஜீவநதியாக ஆகிறாள்.
மாமுனி வஸிஷ்டரின் மனைவியான அருந்ததியோ சிறந்த பதிபக்தி கொண்டவளாக அவரது கால் கட்டை விரலையே பார்த்துக்கொண்டு பணிவாக இருப்பவளாக தன் பதிபக்தியால் ‘விடிவெள்ளி’ என்னும் நக்ஷத்திர பதவியை அடைந்து, புதிதாக மணமான தம்பதிகள் தங்கள் தாம்பத்ய உறவு சிறக்க அவளுடைய தரிசனம் செய்வது மேன்மை என்னும் உயர்ந்த நிலையை அடைகிறாள்.
தக்ஷபிரஜாபதியின் மகளான அனுசூயை அத்ரி மஹாமுனியை மணந்து தன் பதிபக்தியின் மஹிமையால் பத்து வருடங்கள் மழையில்லாது உலக மக்கள் பஞ்சத்தால் வாடிய போது, வருணனை மழை பெய்து வளம் பெருக்க கட்டளையிடுகிறாள். பெய்யெனப் பெய்கிறது. வளமும் சேர்கிறது. அவளது பதிபக்தியின் மஹிமை மும்மூர்த்திகளின் தேவியராலும் முடியாது என ஒதுக்கப்பட்ட நாரதர் கொண்டு வந்த இரும்புக் கடலைகளை பக்குவம் செய்து தந்து தன்னை சோதிக்கவும் சிறுமைப்படுத்தவும், யாசகம் கேட்டு வந்து நிர்வாணமாக உணவளிக்க வேண்டும் எனக் கூறிய மும்மூர்த்திகளையும் சிசுக்களாக்கி பின்னர் அவர்கள் மூவரின் அம்சமான தத்தாத்ரேயரை மகனாக அடையச் செய்கிறது.
அதே தக்ஷபிரஜாபதியின் மகளான சதி சிவனை மணந்து தன் தந்தை செய்த யாகத்தில் தன் கணவருக்குரிய ஹவிர்பாகம் மறுக்கப்பட்டு அவர் புறக்கணிக்கப்பட்டு விட்டதை கண்டித்துத் தன் பதிபக்தியினால் யாகத்தீயிலேயே தன் தேகத்தை பொசுக்கிக் கொண்டு தக்ஷன் யாகம் அழிவதற்கு காரணமாகிறாள்.
தக்ஷபிரஜாபதியின் இருபத்தேழு பெண்களை சந்திரன் மணந்தபோதிலும், அவர்களில் ஒருவளான ரோஹினி தன் தீவிரமான பதிபக்தியினால் அவனது முழு அன்பையும் பெற்று அவனுக்கு நெருக்கமான தாரகையாக உயர்கிறாள்.
ஸ்ரீஇராமரை மணந்த சீதாதேவியோ, தன் பதிபக்தியின் மிகையினால் காட்டிலும் அவரைத் தொடர்ந்து பல இன்னல்களையும் சந்தித்து, தன் பாதிவ்ரத்யத்தாலேயே இராவணனை பொசுக்கி இருக்க முடியும் எனினும், ஸ்ரீஇராமர் அவனை வெல்வதுதான் தன் பதிக்கு புகழ் சேர்க்கும் என எண்ணி பொறுமை காக்கிறாள். இலங்கைக்கு அனுமன் வைத்த தீயோ தான் அக்னிப்பிரவேசம் செய்த அக்னியோ கூட சீதையை எரிக்க முடிவதில்லை. மாறாக அவளது பதிபக்தி அனுமனுக்கும் வாலில் அரக்கர்கள் வைத்த தீ ஏதும் செய்திடாது காக்கிறது.
இதே போல ருக்மிணியின் பதிபக்தியானது உன்னதமானது என நிரூபிக்க ஸ்ரீகிருஷ்ணர் ஒரு நாடகமாடுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் தனக்கே உரியவர் தன் செல்வச் செழிப்பிலும் அழகிலும் அடிமைப்பட்டு தன்னிடம் கிடப்பவர் என கர்வம் கொண்ட சத்யபாமா, தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையில் ஸ்ரீகிருஷ்ணரை நாரதரிடம் இழக்க நேரிடுகிறது. அவரை மீட்க துலாபாரம் ஒன்றே வழி என்ற நிலையில் தன் செல்வமனைத்தையும் தராசு தட்டில் வைத்தும் அவையெல்லாம் சேர்ந்தும் கூட ஸ்ரீகிருஷ்ணருக்கு ஈடாகாதது கண்டு வெட்கி வேறு வழியின்றி ருக்மிணியின் உதவியை அவள் நாடவேண்டியதாகிறது. பக்தி ஸ்ரத்தையுடன் ருக்மிணி ஒரு துளஸிதளத்தை அவை யாவற்றுக்கும் பதிலாக தராசு தட்டில் வைக்க, அவளது பதிபக்தி அதை ஸ்ரீகிருஷ்ணரின் எடைக்கு ஈடாக்குகிறது. அதுதான் தூய பதிபக்தியின் மஹிமை.
இவ்வாறே பக்வத் பக்தியாலும் சாதித்தவர் பலருண்டு, கண்ணப்பனைப் போல சிவபக்தியால் யமனையே வென்று என்றும் பதினாறு வயதாக நின்ற மார்க்கண்டேயர் சிவபக்தியால் நந்தியையே விலகி இருக்கச் செய்த நந்தனார் தேவியிடம் கொண்ட பக்தியால் இடையனாய் பிறந்திருப்பினும் உலக மஹாகவி காளிதாஸனாக மாறியவரும், ஷண்முகரிடம் தான் கொண்ட ஆழ்ந்த பக்தியினால் உய்வடைந்த அருணகிரிநாதர் அவரைப் போலவே முருகனிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியால் ஹிந்துஸ்தானி மொழியில் சைவ சிந்தாந்தத்தை காசிவரை சென்று ஸ்தாபித்த குமரகுருபரர் சிறுவனாக இருந்தும் தன் சிறந்த விஷ்ணு பக்தியினால் இராஜ்யத்தையும் நக்ஷத்திரப் பதவியையும் அடைந்த துருவன் தன் சிறந்த பக்தியினால் தன்னை பல வழிகளில் இன்னல்படுத்திய தன் தந்தை ஹிரண்யகசிபுவிடமிருந்து தன்னைக் காக்க பகவான் விஷ்ணுவையே நரஸிம்ஹ அவதாரம் எடுக்கச் செய்து அவரிடம் மேன்மையான யோகம் பயின்ற பிரஹ்லாதன், தன் திடமான ஏகாதசி விரத மஹிமையினால் விஷ்ணுவின் சுதர்ஸன சக்ரத்தை தன் ரக்ஷையாக அடைந்து, தன்னை அநியாயமாக தாக்க வந்த மஹரிஷி துர்வாஸரையே தன்னிடம் பணியச் செய்த மன்னன் அம்பரீஷன், ஸ்ரீஇராமரிடம் தான் கொண்ட அதீத பக்தியினால் வரிப்பணத்தில் அவரது ஆலய புனருத்தாரணம் செய்து சிறைபட்டு, அவரையே தன் சேவகனாக வந்து நவாப் தானீஷாவுக்கு தான் தரவேண்டிய வரிப்பணத்தை கொடுக்கச் செய்து அழியாப் புகழ் பெற்ற பத்ராசலம் இராமதாசர், ஸ்ரீவேங்கடநாதரிடம் பாலியத்தில் கொண்ட பக்தியினால் அலமேலு மங்கத்தாயாராலேயே ஞானப்பால் ஊட்டப் பெற்று பாகவதோத்தமனாக உயர்ந்து கீர்த்தனங்கள் இயற்றிய அன்னமாசாரியார், ஸ்ரீகிருஷ்ணரிடம்தான் கொண்ட பக்தியினாலேயே நாராயணீயம் பாடி வாதநோயினின்றும் விடுபட்ட நாராயண பட்டத்திரி என பக்தியினால் சாதித்தவர்கள் பலரை பகவத் பக்தி வரிசையில் காண்கிறோம். எவரைக் கூறுவது? எவரை விடுவது?
மேற்கூறியவை யாவையுமே அந்தந்தப் பக்திக்கு சில சிறந்த உதாரணங்கள் தானே தவிர, முழுமையான பட்டியலல்ல. பக்திக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, உங்களுக்கும் ருசிக்கத்தந்து, நானும் ருசித்துள்ளேன்.
நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்
No comments:
Post a Comment