ஆசார்யாளின் அறவுரைகள்
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”
பிறவாழி நீந்தல் அரிது”
என்கிறது வள்ளுவம். அஃதாவது, ஈஸ்வரன் பதங்களைப் பற்றியவனே பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுபடுகிறான் என்பது பொருள். அப்படியிருக்க, புலன்களுக்கும் அறிவிற்கும் அப்பாற்பட்ட ஈஸ்வரனின் பதங்களை எவ்வண்ணம் பற்றுவது? அது சாத்தியமா? என்றால் ‘சாத்தியம்’ என்றே சொல்ல வேண்டும். கருணையே வடிவான ஈஸ்வரன், கொடிய வாழ்வில் ஒழுகி, சிக்கித் திணறும் நம் போன்ற அறிவிலிகளுக்காகவே குரு வடிவைப் பூணுகிறான். அதனால் நம்மால் அவனை அணுகவும் முடியும், பதங்களைப் பற்றவும் முடியும். “பதம்” என்றால் “பாதம்” என்று மட்டும் பொருள் அல்ல. “வார்த்தை” என்றும் கூறலாம். அதாவது குருவாக அவதரித்த அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் (அதாவது பதமும்) ஓர் உபதேசமாகும். அதை சிறிதளவும் பிசகாது பின்பற்ற வேண்டும். அதுவே “பதங்களைப் பற்ற வேண்டும்” என்பதற்குப் பொருள் ஆகும்.
அப்படி நமக்கெனவே அவதரித்தவர் தான் ஜகத்குரு ஸ்ரீபாரதீதீர்த்த மஹா ஸ்வாமிகள். இப்படி நம்மிடையே அவதரித்து இன்றளவும் அண்டியோர்க்கு மயர்வற மதிநலம் அருளிடும் அந்த குருவின் உபதேச ரத்தினங்களை பக்தியுடன் அணுகுவோம். அவற்றைச் சிரம் சூடி, அகம் நிறுத்தி, அஃதொழுகி, கடைத்தேறுவோம், வாருங்கள்.
குரு யார்?
ஆதிசங்கரபகவத்பாதாள் சநாதன தர்மோத்தாரணம் செய்வதற்காக இந்தப் பவித்ரமான பாரதத்தில் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக அவதாரம் செய்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆதிசங்கர பகவத்பாதாளை ஜகத்குரு என்று நாம் சொல்கிறோம். ஜகத்குரு என்று சொன்னால், ஜகத் எல்லாவற்றிற்கும் குருவாக இருந்தவர் என்று அர்த்தம். அந்த குரு என்னும் வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று கேட்டால் யார் நன்றாக சாஸ்திரத்தின் தத்துவத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறாரோ, யார் தன்னுடைய சிஷ்யனுக்கு எப்போதும் நன்மையை உண்டாக்குவாரோ அவர்தான் குரு. தத்துவம் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தால்தான் சிஷ்யனுடைய ஐயங்களை நீக்கமுடியும். சிஷ்யனுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாதவன் குருவாக முடியாது.
குரு தேவை
ஆதிசங்கர பகவத்பாதர் ஸாக்ஷாத் பரமசிவ அவதாரம் என்று எல்லாருக்கும் தெரியும். அவரும் கூட கோவிந்த பகவத்பாதர் சந்நிதியை அடைந்து அவரிடம் பயின்று, வேதாந்த தத்வ ஞானத்தை அடைந்தார் என்கிறது சங்கர திக்விஜயம். சிலருக்கு ஒரு கேள்வி “ஆதிசங்கரர் பகவான் பரமேஸ்வரனின் அவதாரம் என்கிறீர்களே, அவருக்கும் குருவிடம் போகவேண்டி இருந்ததா? அவர் தெரியாமல் போனாரா; தெரிந்தே போனரா? அல்லது, அவர் கோவிந்த பகவத்பாதரைப் பரீக்ஷிக்கப் போனாரா?” அவர் கோவிந்த பகவத் பாதரை பரீக்ஷிப்பதற்காகப் போகவில்லை. ரொம்ப விநயத்துடன்தான் போனார். அப்போது, தெரியாமல் போனாரா, தெரிந்தே போனாரா என்று கேட்டால், “தெரியுமோ, தெரியாதோ, குருவிடமிருந்து வந்தால்தான் அதற்கு ஒரு மதிப்பு” இராமர் வசிஷ்டரின் சந்நிதியில் தத்வத்தை கிரஹித்துக் கொண்டார் என்று வசிஷ்ட இராமாயணம் சொல்கிறது. இராமர் சாக்ஷாத் பரமாத்மாவின் அவதாரம் அல்லவா? அவருக்கு வசிஷ்டர் சொல்லவேண்டி இருந்ததா? கிருஷ்ண பரமாத்மா ஸாந்தீபனி மஹரிஷியிடமிருந்து வித்தைகளைக் கிரஹித்துக் கொண்டார் என்று பாகவதம் சொல்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் ஸாந்தீபனி மஹரிஷியிடம் பாடம் கற்றுக்கொள்வதற்காகச் செல்ல வேண்டுமா என்று கேட்டால் அது ஒரு சம்பிரதாயம். குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும், ஸபலமாகும் என்று உபநிஷத் கூறுகிறது. குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது.
மறைவழி நிற்கவேண்டும்
நம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. கண்ணுக்குத் தெரியக்கூடியதைத்தான் நான் நம்புவேன். தெரியாததை நான் நம்பமாட்டேன் என்று சொல்லக்கூடியது நம்முடைய பரம்பரை அல்ல; நம்முடைய கலாசாரம் அல்ல. அது சார்வாகன் சொல்லக்கூடியது; ஒரு நாஸ்திகன் சொல்லக் கூடியது; ஒரு நாஸ்திகன் சொல்லக்கூடிய வார்த்தைக்கு எந்த விதமான மதிப்பும் கிடையாது என்பது நம் தீர்மானம். நம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிச் சொல்லக்கூடிய உரிமை சாஸ்திரத்திற்குத்தான் இருக்கிறது. நமக்குக் கிடையாது. அந்தச் சாஸ்திரம் சொல்கிறது. “நீ இந்த வஸ்துவிற்கு ஒரு ஸம்ஸ்காரம் பண்ணி அந்த ஸம்ஸ்காரத்தினால் புனிதமடைந்த அந்த வஸ்துவினால் ஹோமம் செய்தால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும்” அங்கே எந்த ஒரு குதர்க்கத்திற்கும் அவகாசமே கிடையாது. “நான் இந்த ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேன்” என்றால் என்ன அர்த்தம்? முதலில் இந்த ஹோமம் செய்யவேண்டும் என்ற பாவனை உனக்கு எப்படி வந்தது?”இந்த ஹோமம் பண்ணினால் இந்தப் பலன் கிடைக்கும்” என்று சாஸ்திரம் சொல்கிறது என்று நீ சொல்வாயேயானால், அதே சாஸ்திரம்தான் “இந்த ஸம்ஸ்காரம் பண்ணி அதனால் ஹோமம் பண்ணினால்தான் அந்தப் பலன் வரும்” என்றும் சொல்கிறது. அதே சாஸ்திரத்திலே இந்தப் பக்கத்திலே சொன்ன பலனை ஒத்துக்கொள்கிறேன். அடுத்த பக்கத்திலே சொன்ன விஷயத்தை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?
நாம் கடைப்பிடிப்பதையே சொல்லவேண்டும்
முதலில் நாம் சரியாக, சாஸ்த்ரோக்த ரீதியிலே, ஆசாரத்திலே இருக்கவேண்டும். நாம் இன்னொருவனுக்கு இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியிருந்தால் முதலில் அந்த மாதிரி நடக்கக்கூடிய யோக்யதாம்சம் நமக்கு வேண்டும். “நீங்கள் தினமும் ஸ்நானம் பண்ணாமல் இருக்கிறீர்களே” என்று யாரையாவது பார்த்துச் சொல்லவேண்டும் என்றால் முதலில் நாம் ஸ்நானம் பண்ணவேண்டும். நாம் ஒரு நாள் கூட காலைவேளையிலே ஸ்நானம் பண்ணுவது கிடையாது. ஆனால் இன்னொருவரிடம், “ஏன் இப்படி ஸ்நானம் பண்ணாமல் ஸந்தியாவந்தனம் செய்யறேள்” என்று எப்படி கேட்க முடியும்? முதலில் தான் ஸதாசாரத்திலே இருந்து அப்புறம் இன்னொருவனுக்கு தர்மத்தை உபதேசம் பண்ணவேண்டியது நம் கடமை.
அறத்தைப் போற்றிக் காக்கவேண்டும்
நம் நாட்டில் ஸநாதன தர்மம் தழைத்தோங்கியிருக்கும் காலம்வரை நாடு செழிப்புற்று விளங்கும். தர்மத்திற்குரிய இடம் இல்லாது போனால், நாடு தழைக்காது. எவ்வளவுதான் விஞ்ஞான ரீதியிலே நாம் முன்னேறினாலும், எவ்வளவுதான் பொருளாதாரத் துறையிலே நாம் சிறந்து விளங்கினாலும், தர்மத்திலே நாம் அவநம்பிக்கை வைத்து அதை வெறுப்போமானால் நாம் பெரும் அபாயத்தில் சிக்குவதோடு, நமக்குப் பெரும் அழிவைத் தேடிக் கொள்வதாகவும் அமையும். நம் நாட்டிலே, “நாம் விஞ்ஞான, பொருளாதார ரீதியில் முன்னேறிச் செல்லும்போது நம் வாழ்க்கையில் தர்மத்திற்கு என்ன இடம் இருக்கப் போகிறது?” என்று சிலர் கேட்கிறார்கள். தர்மத்தின் இயல்பையும், தர்மத்தின் சிறப்பையும், தர்மத்திற்கு உறைவிடமான வேதத்தின் தன்மையையும் அறியாத காரணத்தால் இம்மாதிரி கேள்விகள் கேட்கப்படுகின்றன. நம் இந்தியக் கலாசாரத்தைப் பற்றிய நம் அறியாமையைப் புலப்படுத்துவதாக இக்கேள்விகள் அமைந்துள்ளன. தாம் நினைப்பதுதான் சரியென்று எண்ணும், புத்தி பேதலித்த மனிதர்கள் இத்தகைய கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள்.
இறைவனை நிந்திக்கக்கூடாது
கடவுளின் அருள் என்பது என்னவென்று நம் முன்னோர் நமக்குத் தெளிவுபடக் கூறியுள்ளனர். மாடுகளை மேய்ப்பவன் தன் கையில் கோலுடன் மாடுளை விரட்டுவது போன்று கடவுள் தோன்றுவதில்லை. நாம் நற்செயல் ஆற்றுவதற்குரிய பிரேரணையை பகவான் அருளுகிறார். நாம் விரும்பும் எச்செயலுக்கும் ஓர் உள்ளுணர்வு நம்மை உந்துகிறது. அவ்வாறின்றி நாம் செயல்படுவதில்லை. இந்த உந்துதலை கடவுள் நமக்கு அருளுகிறார். அவன் அருளன்றி நற்செயல்கள் செய்வதிலே நாம் உந்தப்படுவது எங்ஙனம்? நாம் தீய செயல்கள் செய்யும்போது ஏற்படும் உந்தலுக்குக் காரணம் என்ன? அதுவும் கடவுளால்தான் ஏற்படுகிறது. அவ்வாறானால், நாம் மிகவும் பெரிய நிலையில் வைத்துள்ள கடவுள், நம் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரியவரான பகவான் தீய செயல்கள் செய்ய நம்மை ஏன் தூண்ட வேண்டும்? இதற்கு நம் சாஸ்திரங்கள் கூறுவது என்னவெனில், “புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன” நாம் முற்பிறவியில் செய்த கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். அதற்காக உரிய பிரேரணைகளை (நல்லதோ, கெட்டதோ) நமக்கு பகவான் அளிக்கிறார். இதற்காகக் கடவுளை நாம் குற்றம் சாட்டவோ, நிந்திக்கவோ முடியாது.
சான்றோரைச் சார்ந்திருக்க வேண்டும்
சில சமயங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வகையில் நமக்குச் சந்தேகம் ஏற்படலாம். ஒவ்வொருவனுக்கும் சாஸ்திரங்களை ஆராய்ந்து தன் சந்தேகத்தைத் தவறில்லாமல் நிவர்த்தித்துக்கொள்ளும் திறமை இருந்துவிட முடியாது. இத்தகைய நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று உபநிஷத்துகள் கூறியுள்ளன: “சாஸ்திரங்களைப் படித்து உன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் திறமை உனக்கு இல்லையானால் நீ பெரியவர்களின் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும்”
பெரியவர்கள் என்றால் நல்ல அறிவாளிகளும், சாஸ்திரங்களை ஆராய யோக்யதை யுள்ளவர்களுமேயாவார்கள். அவர்கள் வழியில் நீயும் செல்லலாம். அவ்வழியே சென்றால் நீ சிரேயஸ்ஸை அடைவாய் என்று உபநிஷதங்கள் கோஷிக்கின்றன. இந்நாளில் அநேகம் பேருக்குச் சந்தேகங்கள் வருகின்றன. எல்லாருக்கும் சாஸ்திரங்களை ஆராய்ந்து சந்தேக நிவர்த்தி செய்து கொள்ளுதல் சாத்யமாகாது. அந்நிலையில் முன்னோர் வழியையே சிறிதும் விச்வாசம் குறையாமல் பின்பற்ற வேண்டும். அதுவே நமக்குச் சிரேயஸ்ஸைக் கொடுக்கும். ‘நம் முன்னோர் அறிவற்றவர்கள்; நாம்தான் அறிவாளிகள்’ என்று எண்ணிக் கொண்டிருந்தால் அதை விட அறியாமை வேறொன்றுமில்லை. நம் முன்னோர் தீர்க்கமாக யோசனை செய்யாமல் நாம் செல்ல வேண்டிய வழியை வகுக்கவில்லை. தங்கள் அறிவு காட்டிய வழியில் தர்மத்தைப் பின்பற்றி அவர்கள் சிரேயஸ்ஸை அடைந்தார்கள். ஆகையால் நாமும் அவர்களைப் பின்பற்றி அவ்வழியில்தான் செல்ல வேண்டும் என்ற தீர்மான புத்தியுடன் இருக்க வேண்டும்.
மோஹத்தைத் தவிர்க்க வேண்டும்
உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் ‘மோஹம்’ உண்டாகிறது. அவை ‘பெண்’ மற்றும் ‘பொன்’ என்பவையே. இந்த இரண்டிலும் மோஹமடைபவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கிறான். எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே ‘மஹாத்மா’ எனப்படுகிறான்.
இந்த இரண்டு விஷயங்களிலும் மோஹமடைந்ததால் அழிந்தவர்களுக்கு உதாரணங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய காவியங்களில் காட்டப்படுகின்றன. பெண்ணாசையால் இராவணன் அழிந்தான். பொன் (செல்வம் மற்றும் இராஜ்ஜியம்) ஆசையால் துரியோதனன் அழிந்தான்.
இராவணன் சீதையைத் தவறான பார்வையில் பார்த்தான். அழிந்து விட்டான். இதனால் என்ன தெரிகிறது என்றால் உலகத்தில் எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்க்கக் கூடாது என்பதுதான். நம்முடைய பாரதப் பண்பாட்டிலே கூட “உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் தாயாருக்குச் சமானம் என்றுதான் கருதப்பட வேண்டும்” என்பதைத்தானே கூறியிருக்கிறார்கள்? ஒருவன் எப்படிப்பட்ட தீயவனாயினும் சரி, தன் தாயாரின் விஷயத்தில் எவ்விதக் கெட்ட எண்ணத்தோடும் இருக்க மாட்டான். எல்லாப் பெண்களையும் தாயாராகப் பாவித்தால் மனத்திலே எவ்வித விகாரமும் ஏற்படாது. தேவீமாஹாத்மியத்திலே தேவதைகள் அந்தப் பரதேவதையைத் துதிக்கும்போது “ஸகல ஸ்த்ரீகளும் உன் ஸ்வரூபமே” என்று கூறுகிறார்கள். இதைப் பின்பற்றும் வண்ணமாகத்தான் நம்முடைய முன்னோர் நமக்கு வழிமுறைகளை உபதேசித்திருக்கிறார்கள். இதற்கு மாறாக நாம் நடந்தோமானால் அது மிகப் பெரும் தவறாகிவிடும்.
பிறருடைய சொத்தை நாம் சிறிதும் விரும்பக்கூடாது. தெருவில் எவ்வளவோ கல்லும் மண்ணும் நிறைந்துகிடக்கிற போதிலும் எவருடைய மனமேனும் அவற்றை நாடுகிறதா? இதே பாவனையைத்தான் நாம் பிறருடைய சொத்து விஷயத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாவனை எவனுக்கு இல்லையோ எவன் பிறர் சொத்தை அபகரிக்க நினைக்கிறானோ அவனுக்கு துரியோதனனுடைய கதையே ஓர் எச்சரிக்கை. துரியோதனன் தன் சிற்றப்பாவின் பிள்ளைகளுக்கு முறைப்படி சேரவேண்டிய சொத்துகளைக் கொடுக்காமல் தானே அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கப் பேராசைப்பட்டான். விளைவை அனுபவித்தான்.
வீண் ஆசை கூடாது
நம்முடைய கர்ம பலன்களுக்கேற்ப நமக்கு என்ன (பொருள், வசதி) கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு திருப்தியடைய வேண்டும். திருப்தி இல்லாதவனுக்கு சந்தோஷமும் இல்லை. சௌக்யமும் இல்லை. இதை உணர்த்தும் வகையில்தான் பகவத்பாத சங்கரர்
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் |
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் ||
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் ||
“விவேகமற்றவனே, பொருள் வர வேண்டும் என்ற பேராசையை ஒழித்து விடு. மனத்தில் பேராசையற்ற நல்ல புத்தியை நாடு” என மிக அழகாகக் கூறியிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக அப்பய்ய தீக்ஷிதர் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு முறை அரச சபைக்குச்சென்று சாஸ்திர விளக்கம் செய்தார். அவருடைய புலமையால் பெரிதும் கவரப்பட்ட அரசன் அவருக்கு மிக விலையுயர்ந்த சால்வையொன்றைப் பரிசாக அளித்தான். இல்லம் திரும்பி தீக்ஷிதர் அச்சால்வையை தம் அக்னிஹோத்ர குண்டத்தில் இட்டுவிட, அதை அறிந்த அரசன் மிகுந்த கோபங்கொண்டு தீக்ஷிதரிடம் அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்க, அவர் “தங்கள் சிரேயஸ்ஸைக் கருதியே அவ்வாறு செய்தேன்” எனப் பதிலளித்தார். ஒன்றும் புரியாத அந்த அரசன், “சால்வையை நெருப்பில் இடுவது எனக்கு எப்படி சிரேயஸ்ஸைத் தரும்?” எனக் கோபமாகக் கேட்க, இவர் ‘அது நெருப்பில் பஸ்பமாகவில்லை. சிதம்பரம் நடராஜரின் உடலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது” என்றார். இவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வராத அந்த அரசன் சிதம்பரம் கோவிலில் சென்று பார்த்தபொழுது, தான் அளித்த அதே சால்வை பகவானின் மேனியை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து போனான்.
எப்பேர்ப்பட்ட ஈச்வர விச்வாசம் இருந்தால் இது நடந்திருக்க முடியும்! ஆகவே மஹான்களும் பக்தர்களும் தங்களுக்கு வேண்டியதை ஈச்வரன் பார்த்துக் கொள்வான் என்னும் தீர்மானத்துடன் திருப்தியாக வாழ்ந்தனர். பணத்தில் பேராசை கொள்ளவில்லை.
கொண்டதில் திருப்தி கொள்
எதை ஜனங்கள் வெறுக்கிறார்கள்? “தாரித்ர்யம்” என்பதே அது; தான் ஒரு தரித்ரனாக இருப்பதை எவனும் விரும்புவதில்லை. பின், எது ‘தார்த்ர்யம்’ எனப்படுகிறது? யார்தான் தரித்ரன்? எவனிடம் செல்வம் இருக்கிறதோ அவன் தரித்ரன் அல்லன் என்பதும் எவனிடம் செல்வம் இல்லையோ அவன் தரித்ரன் என்பதும் சாதாரணமாக இருக்கக்கூடிய அபிப்ராயம். ஆனால், ஆராயந்து பார்த்தால் தாரித்ர்யத்திற்கும் செல்வத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை என்று தெரியும். யாருக்கு ஆசைகள் இருக்கின்றனவோ அவன் தரித்ரன். ஆசைகள் இல்லாதவன் “பாக்கியசாலி” இதுதான் தாரித்ர்யம் பற்றிய உண்மையான கருத்து. ஒரு ரூபாய் வைத்துக்கொண்டிருக்கும் மனிதன் ஒருவனை எடுத்துக் கொள்ளுங்கள். தனக்கு நூறு ரூபாய் கிடைத்தால் தான் பாக்கியசாலி என்றும் பிறகு நன்கு வாழ்க்கை நடத்த முடியும் என்றும் அந்த மனிதன் கூறுவான். நூறு ரூபாய் வைத்துக் கொண்டிருப்பவன், ஆயிரம் ரூபாய் தேவை என்று எண்ணுவான். அதேபோல் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவன் ஓர் இலட்சம் ரூபாய் தேவை என்றும் இலட்சாதிபதியாக இருப்பவன் தனக்குக் கோடி ரூபாய் தேவை என்றும் கருதுவான். ஆகவே செல்வமே இல்லாதவன்தான் தரித்ரன் என்று சொல்வது சரியாகாது.
நல்லவற்றை அறிந்து கொள்ளவேண்டும்
மனிதன், தனக்கு நல்லது எது? கெட்டது எது? என்ற விவேகம் பெறாமல் இருப்பது தவறாகும். ஆனாலும், ஒவ்வொருவனும் தான் செய்யும் காரியம் சரி என்றுதான் கூறிக் கொண்டிருப்பான். திருட்டுத்தனம் செய்கிற திருடன்கூட, ‘நான் சரியான காரியத்தைத்தான் செய்கிறேன்’ என்று தர்க்கம் செய்வான். அது எப்படி என்று கேட்டால், அவனுக்கும் தர்க்கம் இருக்கிறது. “நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கும் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாரையும் நான் காப்பாற்ற வேண்டும். எனக்கோ பணம் கிடையாது. கவர்ன்மெண்ட்டில் எனக்கு ஒரு வேலையும் கொடுக்கப்படவில்லை. அதனாலே அந்தப் பணக்காரர் வீட்டுக்குப் போனேன். அவரிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. அவருக்கு அவற்றை என்ன செய்ய வேண்டும் என்பதே புரியவில்லை. எனக்கு வேண்டிய அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன். அதிகமாகக் கொண்டு வரவில்லை. அதனால் என் சம்சாரம், குழந்தைகள் எல்லாரும் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்?” என்று அவனும் ஒரு தர்க்கம் செய்யலாம். இப்படி ஒவ்வொருவனும், தான் செய்கிற காரியம் நல்ல காரியம்தான் என்று சாதிப்பதற்கு முயற்சி செய்கிறானே தவிர, இது சரியா? தவறா? என்று சிந்தனை செய்கிற அளவிலே யாரும் இல்லை.
அல்லதிலும் நல்லது காண்.
தீயவையிலும் நல்லதையே பார்க்கவேண்டும் தர்க்க சாஸ்திரத்தில், புலமை வாய்ந்த ஒரு பெரிய மஹான் இருந்தார். அவர் பெயர் உதயணாசாரியார் என்பதாகும். ஈஸ்வரன் உலகின் கர்த்தா என்பதை ஸ்தாபிப்பதற்காகவே பெரும் நூல் ஒன்றை எழுதினார். அந்தக் கிரந்தத்தின் முடிவில் அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார்:
இத்யேவாம் ச்ருதி-நீதிஸம்ப்லவஜலைர்பூயோபிராக்ஷாலிதே
யேஷாம் நோபகமாததாஸிஹ்ருதயே தே சைலஸாராசயா: |
கிந்து ப்ரஸ்துத விப்ரதீபமதயோப்யுச்சைர் பவச்சிந்தகா:
காலே காருணிகத்வயைவ க்ருபயா தே ரக்ஷணீயா நரா: ||
யேஷாம் நோபகமாததாஸிஹ்ருதயே தே சைலஸாராசயா: |
கிந்து ப்ரஸ்துத விப்ரதீபமதயோப்யுச்சைர் பவச்சிந்தகா:
காலே காருணிகத்வயைவ க்ருபயா தே ரக்ஷணீயா நரா: ||
“பகவானே! நீ இருக்கிறாய் என்பதை எத்தனையோ யுக்திகளையும், பிரமாணங்களையும் சொல்லி நிரூபணம் செய்தேன். இவ்வளவு சொல்லியும், நீ இருப்பதை சில கல் நெஞ்சக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தாலும் என் மனத்தில் கருணைதான் உண்டாகிறது. பகவானே! அவர்களையும் நீதான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அவர்கள் உன் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ‘ஈஸ்வரன் இல்லை, ஈஸ்வரன் இல்லை’ என்று சத்தமாகக் கூறிக் கொண்டிருக்கும்போது, ஈஸ்வரன் என்னும் அட்சரங்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அதற்காகவாவது, நீ அவர்களை அனுக்ரஹிக்க வேண்டும்” என்று உதயணாசாரியார் பகவானிடம் வேண்டுகிறார்.
இன்சொல்லே பேசவேண்டும்
ஒரே விஷயத்தை நாம் பல விதங்களில் சொல்வதற்கு முடியும். ஒருவரைக் கூப்பிடும் போது, “இங்கே வாருங்கள்! உங்களிடம் நான் ஒரு விஷயம் பேச விரும்புகிறேன்” என்று சொல்வதற்கும், “ஏய்! இங்கே வா! நான் சொல்வதைக் கேள்!” என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டிலும் அர்த்தம் ஒன்றாயினும், நம் பேச்சினால் உண்டாகக் கூடிய விளைவுகள் வித்தியாசமாக உள்ளன. முதலில் கூறியது போல் மரியாதையாகக் கூப்பிட்டால், ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியோடு வருவார். ஆனால், அதேசமயம் அதிகாரத்தோடு கூப்பிட்டால் “இவன் ரொம்பப் பெரிய மனிதன் போல் என்னை அதிகாரம் செய்கிறானே!” என்று நினைத்து அவனிடம் போக மாட்டார்.
வசனே கா தரித்ரதா
கௌரவமான வார்த்தைகள் சொல்வதில் என்ன செலவு செய்ய வேண்டும்? ஆனால் சிலருக்குப் பாவனை இருக்காது. வார்த்தைக்கு வார்த்தை அடுத்தவர் மனத்திற்கு துன்பம் ஏற்படும்படி பேசும் குணம், மிகுந்த பாபத்தைத் தரும்.
பொய் பேசக்கூடாது
இது எல்லாருக்கும் தெரியும். பொய் சொல்வது பெரும் பாபம். இது தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் நடைமுறைக்கு வரும்போது, அதை அனைவரும் மறந்து விடுகிறார்கள். பொய் சொல்வது தவறு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், பொய் சொல்லாமல், யாராலும் இருக்க முடிவதில்லை. இது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.
பகவான் ஸ்ரீஇராமசந்திரன் தன் வாழ்வில் என்றுமே பொய் சொன்னதில்லை. அவர் ஒருவனுடைய சொத்துக்கும் ஆசைப்பட்டதில்லை. அதேசமயம்,பொய் சொல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது பெரும் தவறு. அப்படிப்பட்டவர்களுக்குத் தாங்கள் பவித்ரமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதில் தீவிரம்இல்லை. பவித்ரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற தீவிரம் இருந்தால், ஒருவன் பொய் சொல்லவே மாட்டான்.
பாபத்தின் பலன் நோயே
சிலர் என்னிடம் “சுவாமிகளே! எனக்குப் பணம், சொத்து எல்லாம் நிறைய இருக்கிறது. ஆனால் மனத்தில் மட்டும் நிம்மதி இல்லை” என்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் போன ஜன்மத்தில் மானசீகமாகச் செய்த பாபத்தின் பலன்தான். அதேபோல, வாக்கால் பாபம் செய்திருந்தால், அவர்கள் அதன் பலனாக ஊமையாகவோ, பேச்சு சரியாக வரப்பெறாமலோ, பிறக்கின்றனர். அதே போல, சரீரத்தாலே செய்யப்பட்ட பாபத்தின் பலனாக நாம் சரீரத்தாலே அனுபவிக்கக்கூடிய ரோகங்களுக்குக் கணக்கே இல்லை. புதிது புதிதாக ரோகங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் இருந்தும், ரோகங்கள் மட்டும் நீங்குவதில்லை. அந்தக் காலத்திலெல்லாம் எல்லா வகையான வியாதிகளுக்கும் ஒரே மாதிரி படிப்பு படித்த வைத்தியர்கள் தான் உண்டு. ஆனால் இப்பொழுதோ கண்ணுக்குத் தனி, காதுக்குத் தனி, நெஞ்சுக்குத் தனி என்று வெவ்வேறு படிப்பு படித்த வைத்தியர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில், வலக் கண்ணுக்கு ஒரு சிறப்பு டாக்டரும் இடக்கண்ணுக்கு சிறப்பு டாக்டரும் என்று ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு உடலால் செய்யப்பட்ட பாபங்களுக்குப் பலன் பலவித நோய்களின் வடிவாக இருக்கிறது.
புண்ணியத்தைச் சம்பாதிக்க வேண்டும்
பாபங்களில் பத்து வகை உள்ளது போல் புண்யங்களிலும் பத்து வகை உள்ளன. இன்னொருவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று மனத்தில் நினைப்பது மானசீகமான புண்யம் ஆகும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்ய நினைப்பது இன்னொரு புண்யம். அதேபோல், சாஸ்திர சம்பந்தமான எண்ணங்கள் மனத்தில் இருப்பது ஒரு புண்ணியமாகும். சிலருக்கு சிறுவயது முதல் நல்ல எண்ணங்கள் இருப்பது உண்டு. இது அவர்களின் மானசீகமான புண்யம். சில குழந்தைகள் சிறுவயதிலேயே கோவிலுக்குப் போக வேண்டும், பகவான் நாமாவை உச்சரிக்க வேண்டும் பூஜைசெய்ய வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்களாய் இருப்பர். அப்பா கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போகாவிட்டால் சில குழந்தைகள் அழும். அப்பா வீட்டில் பூஜை செய்யும்போது தானும் பூஜை செய்ய வேண்டும் என்று அழுது அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளும் உண்டு. இதற்குக் காரணம் அக்குழந்தைகள் செய்த புண்யமே ஆகும்.
இன்னொருவன் மனத்திற்குத் துன்பம் உண்டாக்காமல் பேசுவதும், சத்தியத்தைப் பேசுவதும் இன்னொருவனுக்கு உபகாரம் பற்றிய பேச்சுகளைப் பேசுவதும், நாம் வாக்கினாலே செய்யும் புண்யங்கள். அதே போல் இன்னொருவருக்கு உபகாரம் செய்வதும். மற்றவரை ஹிம்சிக்காமல் இருப்பதும், பிற பெண்டிர் விஷயத்திலே “தாய்” என்று பாவனையுடன் நடந்து கொள்வதும் சரீரகமான புண்யங்கள்.
அறவழியில் நடக்கவேண்டும்
உலகத்திலே எத்தனையோ தர்மங்களிருந்தாலும் நம் ஸநாதன தர்மம் என்பது எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த தர்மம். இப்பேர்ப்பட்ட பவித்ரமான பாரத தேசத்திலே இப்பேர்ப்பட்ட உயர்ந்த தர்மமான ஸநாதன தர்மத்தைச் சேர்ந்த வம்சங்களிலே நாமெல்லாரும் பிறந்திருக்கிறோம் என்பது ஒரு பெரும் பாக்கியம். எந்த ஸநாதன தர்மத்தை அனுசரித்து நம் முன்னோர் தங்களுடைய வாழ்க்கையை பவித்ரமாக்கிக் கொண்டார்களோ, அதே ஸநாதன தர்மம் நமக்கெல்லாருக்கும் அவசியம் அனுஷ்டிக்கத்தக்கது. இந்த தர்மத்தின் விஷயத்திலே யாருக்கும் எந்த சமயத்திலும் உபேக்ஷா புத்தி இருக்கக்கூடாது. உபேக்ஷா புத்தி என்று ஸம்ஸ்க்ருதத்திலே சொல்லுவார்கள். “அதைச் செய்தாலென்ன செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யத்தான் வேண்டுமா என்ன?” இந்த மாதிரி பாவனைகள் “உபேக்ஷா” பாவனைகளெனப்படும். அப்பேர்ப்பட்ட உபேக்ஷை, தர்மத்தின் விஷயத்திலே இருக்கக்கூடாது. மீதி எந்த விஷயத்திலே அந்த உபேக்ஷை இருந்தாலும் பாதகம் இல்லை. தர்மத்தின் விஷயத்திலே உபேக்ஷை புத்தி இருந்தால் மிகவும் பாதகம் ஆகும். மிகவும் தொந்தரவு ஆகும்.மனிதன் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் விரும்பிக் கொண்டிருக்கும் இன்பம் என்பது தர்மத்தின் ஆசரணத்தினால்தான் உண்டாகும். எல்லா மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையிலே எதைத் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்களோ அந்தத் துன்பமானது அதர்மத்தின் ஆசரணத்தினால்தான் உண்டாகிறது. அப்படி இருக்கும்பொழுது நமக்கு வேண்டிய இன்பத்தைக் கொடுக்கக்கூடிய தர்மத்தை நாம் ஆச்ரயிக்கவில்லை என்று சொன்னால் அப்போது நம்முடைய இஷ்டார்த்தம் எப்படி நிறைவேறும்?
நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்
“செய்தால் எல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும். எங்களால் ஒழுங்காகச் செய்ய முடியாது. அதனால் விடுவதுதான் நல்லது” என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பையன் ஸ்கூலில் பரீட்சைக்கு உட்கார்ந்திருக்கிறான். அவன் கையில் வினாத்தாள் கிடைத்தவுடன் அவன் பார்க்கிறான். பார்த்தவுடனேயே அவனுக்குத் தெரிகிறது இத்தனை வினாக்களுக்கும் தன்னால் விடை எழுத முடியாது என்று. அப்போது உங்கள் வாதத்தின்படி அவன் என்ன செய்யவேண்டும்? பேசாமல் அப்படியே வெற்றுத்தாளைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். அப்படி யாரும் கொடுத்துவிட்டு வருவதில்லை. அவன் என்ன நினைக்கிறான்? இத்தனை வினாக்களுக்கும் என்னால் பதில் எழுத முடியாவிட்டாலும் எத்தனைக்கு என்னால் பதில் எழுத முடியுமோ அத்தனைக்கு நான் எழுதுவேன். அத்தனை எழுதினாலும் நான் பாஸ் ஆகிவிடுவேன். 40 மார்க் வந்தாலும் நான் பாஸ் ஆகிவிடுவேன். அதற்கு நான் முயற்சி செய்வேன் என்று அவனுக்குத் தெரிந்த அளவில் பதில் எழுதிவிட்டு வருகிறானே தவிர, இத்தனைக்கும் எனக்கு விடைதர முடியாதென்பதற்காக இந்த வினாத்தாளுக்கு விடை எழுத வேண்டிய தேவையில்லை என்று யாரும் வருவதில்லை. அப்போது, லௌகீகமான வியவஸ்தையிலேயே இப்படியோர் அவகாசம் இருக்கிறபோது பகவான் செய்திருக்கிற தர்ம வியவஸ்தையிலே இந்த அவகாசமில்லையா? பகவான் கீதையிலே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் என்று சொன்னார். தர்மத்தை ஆச்ரயிக்க வேண்டும். அது வாஸ்தவம். ஆனால் உன்னால் அதை சம்பூர்ணமாக ஆச்ரயிக்க முடியாவிட்டாலும் எந்த அளவிற்கு உன்னால் ஆச்ரயிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆச்ரயித்தாலும் உனக்கு நல்லது.
இறைவனை ஆராதிக்கவேண்டும்
பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார். “உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை) வீணாக்காமல் அதை பகவானுடைய நினைவிலே கழிக்கவேண்டும்.” எவ்வளவோ சமயம் நமக்கு கிடைக்கும். அப்போது வேண்டாத பேச்சுகளைப் பேசிக்கொண்டு நாம் சமயங்களைக் கழிக்கிறோம். அந்தப் பேச்சினாலே நமக்கு ஓர் உபயோகமும் இருக்காது. ஆனால் வீணாக சமயத்தைப் போக்குவதுதான் அதிலே இருக்கிறது. ஆனால் அதேசமயத்தில் பகவானுடைய சிந்தனையிலே கழித்தால் பகவானுடைய நாமஸ்மரணத்திலே கழித்தால் பகவத் சேவையிலே அந்தச் சமயத்தை உபயோகம் பண்ணினால் அது எவ்வளவு விவேகமாகும்? பகவத்பாதாள் சொன்னார்: “இந்த விஷயத்தை மறக்காதே; உனக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சமயத்தையும் பகவானுடைய சேவையிலே, பகவானுடைய சிந்தனையிலே, பகவந் நாம ஜபத்திலே உபயோகம் செய். இந்த விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்.
உபத்திரவம் செய்யக்கூடாது
முடிந்த அளவில் பிறருக்கு உதவி செய். யாருக்கும் தொந்தரவு செய்யாதே. நாம் எத்தனையோ சமயங்களில் நம்மை அறியாமலேயே மற்றவர்களுக்கு ஏதோ ஓர் உபத்திரவம் செய்துகொண்டிருப்போம். சிலர் தெரிந்தே செய்வர். சிலர் தெரியாது செய்வர். ஆனால் அப்படி பிறருக்கு உபத்திரம் செய்வது என்பது பெரும் பாபம். நம்முடைய மனத்திலே தயை என்பது வேண்டும். தயை என்று சொன்னால் பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம். மற்றவன் கஷ்டத்திலே இருந்தால் அவனுடைய கஷ்டத்தை நீக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் தயை. அந்தத் தயை மனிதனுக்கு மிகவும் அவசியம். தயை இல்லாத மனிதன் மனிதனல்லன். அவன் இராக்ஷஸன் என்று சொல்லப்படுவான். இராக்ஷஸர்களுக்குத் தயை என்பது சுத்தமாக இருக்காது. அவர்கள் எப்பொழுதும் குரூரமான சுபாவத்தோடு இருப்பார்கள். இன்னொருவருக்குத் தொந்தரவு செய்வதுதான் அவர்களுக்கு வேலை.
கடமையைச் செய்தல் வேண்டும்
மஹான்கள் தங்களுக்கு எது கிடைக்க வேண்டும் என்று பகவானால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது கிடைத்தால் போதும் என்று கருதித் திருப்தியுடனிருப்பார்கள். “ஈச்வரன் எது கொடுக்க நினைத்தாலும் அதில் எங்களுக்குத் திருப்தி” என்பார்கள் அவர்கள். இது விஷயம்குறித்து பகவான் கீதையில் முக்கியமானதோர் உபதேசம் கொடுத்துள்ளார்.
யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: |
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வா(அ)பி ந நிபத்யதே ||
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வா(அ)பி ந நிபத்யதே ||
“என்னுடைய கடமையை நான் செய்கிறேன். எந்தப் பலன் கிடைத்தாலும் எனக்குச் சந்தோஷம்தான்” என்கிற பாவனை மனிதர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். இவ்வாறில்லாமல் பலன் இவ்வளவு வர வேண்டும், அவ்வளவு வர வேண்டும், என்று எதிர்பார்த்தால் எந்தவிதப் பிரயோஜனமுமில்லை. ஏனென்றால் நாம் எதிர்பார்ப்பதெல்லாம் நடந்துவிடப்போவதில்லை. ஆகவே இறைவன் என்ன கொடுக்கிறானோ அதிலேயே ஆனந்தமாக இரு.
சமநோக்கு கொள்ளவேண்டும்
ஒருவன் தனக்கு சுகம் வந்தாலும் துக்கம் வந்தாலும் ஒன்று போலவே இருக்க வேண்டும். துக்கம் வந்தால் அழுவோம். ஒன்று போலவே இருக்க வேண்டும் என்றால் சுகம் வந்தாலும் அழுது கொண்டிருக்க வேண்டுமா? இவ்வாறு விபரீதமாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. சுகத்திலும் துக்கத்திலும் நம் மனம் சஞ்சலப்படக்கூடாது என்பதுதான் முக்கியமானதாகும். சிலபேர் சுகம் அதிகமாக வந்துவிட்டால் தலைகால் தெரியாமல் குதிப்பார்கள். சிறிதே துக்கம் வந்தாலும் வானமே தலையில் விழுந்தாற்போல் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு பாவனைகளுமே தவறானவைதான். நம்முடைய சுகமும், துக்கமும் இறைவனின் சங்கல்பத்தினால்தான் என்ற எண்ணத்துடனிருந்து அதிக மகிழ்ச்சி. அதிக துக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
மனிதப் பிறவியில் சுகமும் துக்கமும் கலந்து வருகிறது. ஒருவன் தன் துக்கத்தினால் மனம் சஞ்சலப்படுபவனாக இருந்தால், அவன் மனத்தில் மற்றவர்களைப் பற்றிப் பல தவறான எண்ணங்கள் ஏற்படும். “என்னுடைய துன்பத்திற்கு அவன் காரணம். அவனை எப்படிப் பழி வாங்குவது?” போன்ற சில எண்ணங்கள் அவனுக்கு உண்டாகும். நன்கு ஆராய்ந்து பார்த்தால் நாம் பழி சுமத்தியவனுக்கும் நம் துன்பத்திற்கும் தொடர்பில்லை என்பதையும், துன்பம் நமக்குத் தற்செயலாக வந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இன்று வந்திருக்கும் சுகதுக்கங்களுக்குக் காரணம் ஜன்மாந்தரத்தில் நாம் செய்த புண்ணிய பாபச் செயல்களே. இத்தகைய பாவனை ஒருவனுக்கு இருந்துவிட்டால் அடுத்த ஜன்மத்தில் துன்பம் வரக்கூடாது என்பதை மனத்தில் கொண்டு நாம் இப்போது நல்ல செயல்களையே செய்வோம்.
பொறாமை தவிர்க்க வேண்டும்
யாராவது நம்மைவிடப் படித்தவனோ பணக்காரனோ தென்பட்டால் முதலில் நமக்கு வருவது வயிற்றெரிச்சல் தான். “அவன் என்ன அவ்வளவு படித்தவனா? என்னிடம் வரட்டும், பார்க்கிறேன்” என்று தோன்றுகிறது. நம்மைவிடப் படித்தவன் இருந்தால் நமக்கு என்ன? நாமும் அந்த யோக்யதையைச் சம்பாதிக்க முயற்சி செய்யலாமே. அசூயைப்பட்டதால் மட்டும், நம்முடைய படிப்பு அதிகமாகாது. அவன் படிப்பும் குறைந்துவிடாது. அதேபோல் பணக்காரன் ஒருவன் தானம் செய்வதைப் பார்த்தால், “அவன் தகாத வழிகளின் மூலம் நிறையப் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளான். அந்தப் பணத்தில் கொஞ்சம் தானம் செய்வது பெரிய காரியமா?” என்போம். ஆனால் நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கும் முயற்சி செய்ய மாட்டோம்.
ஆகவே நம்முடைய சந்தோஷத்தையும் பாராட்டையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமே தவிர நம்முடைய கீழ்த்தரமான மனத்தை மற்றவர்களுக்குப் பிரகடனம் செய்வதனால் எந்தவிதமான லாபமும் கிடையாது.
சிந்தையாலும் நிந்தை செய்யக்கூடாது
ஒருவன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தால் அவனோடு சிநேக பாவத்துடனிருங்கள். பொறாமைப்படாதீர்கள். அவனிடம், “ரொம்ப சந்தோஷம். நீங்கள் மேலும் மேலும் முன்னுக்கு வரவேண்டும் என்பதுதான் எனக்கு விருப்பம்.” என்று சொல்லுங்கள். ஒருவன் கஷ்டத்தில் இருந்தால் “அவனுக்கு அது வேண்டும். அனுபவிக்கட்டும்” என்று நினைக்காதீர்கள். தயை காட்டுங்கள். ஏனென்றால் நமக்கும் ஒரு சமயம் கஷ்டம் வரும். அப்போது நமக்கும் இன்னொருவனின் உதவி தேவைப்படும். நாம் இன்று ஒருவனுக்கு உதவினால்தான் நாளை நமக்கு மற்றவர்கள் உதவுவார்கள். ஆகவே மற்றவர்கள் கஷ்டப்படும்போது உதவ வேண்டும். கஷ்டத்தை நீக்க நம்மால் முடிந்தால் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பகவானிடம், “இவனுடைய கஷ்டத்தைத் தீர்த்து விடுங்கள்” என்ற பிரார்த்தனையாவது செய்ய வேண்டும். பகவான் கீதையில் தைவீ ஸம்பத் அல்லது தெய்விகக் குணங்கள் பற்றிக் கூறியிருக்கிறார்.
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் |
தயை, சௌசம் முதலியவை தெய்விகக் குணங்கள். நாம் ஆஸுரி (அகர) குணங்களைக் கொண்டு ராக்ஷஸர்களாக இருக்கக்கூடாது. தர்ம காரியங்களைச் செய்யும் ஒருவனிடம் நம் சந்தோஷத்தைக் காண்பிக்க வேண்டும். அவருடைய நற்காரியங்களைக் குறை கூறக்கூடாது. “இன்னும் தர்மம் செய்க” என்று அவரை ஊக்குவிக்க வேண்டும். பாபம் செய்பவர்களை நிந்திக்காதீர்கள். அவர்களுக்கு நல்ல உபதேசம் செய்யுங்கள். அப்படியும் திருந்தாவிட்டால் அவனை விட்டுவிடுங்கள். தூஷணம் மட்டும் செய்யாதீர்கள்.
செல்வம் நிலையில்லாதது
ஒருவன் அழகு பொருந்தியவனாக இல்லாவிட்டாலும், அவன் தனவந்தனாக இருந்துவிட்டால் ஜனங்கள் அவனை மன்மதன் என்று வர்ணிக்கிறார்கள். அவன் இழிந்த குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவனை உயர்ந்த வம்சத்தைச் சேர்ந்தவன் என்று ஜனங்கள் புகழ்கிறார்கள். அத்தகைய ஒரு தனவாந்தனுக்கு, தன் பெயரைக் கையொப்பமிடக்கூடத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவன் மிகப் பெரும் பண்டிதன் என்று புகழப்படுகிறான். சங்கீதம் என்றால் என்ன என்றே அவனுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவனை ஜனங்கள் மஹா ரசிகன் என்று பாராட்டுகிறார்கள். இவ்வாறெல்லாம் நிகழ்வதற்கு என்ன காரணம்? அவனிடம் பணம் உள்ளதுதான் காரணம். அதனால் சில ஜனங்கள் பணம்தான் எல்லா வஸ்துகளிலும் உயர்ந்தது என்று கருதுகிறார்கள்.
ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய கூற்று சரி என்று சொல்வதற்கு முடிவதில்லை. ஏனென்றால் பணமானது ஒரே ஓர் இடத்தில் எவ்வளவு காலம்தான் நிலையாக இருக்கும்? ஒருவன் பெரும் சக்ரவர்த்தியாக இருப்பினும் பின்பு ஒரு காலத்தில் அவன் பிச்சைக்காரனாகி பிச்சைப் பாத்திரத்தோடு திரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணத்தை நம்பிக் கொண்டிருந்தோமேயானால் நாம் முட்டாள்கள் ஆகிவிடுவோம்.
எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்
பகவானுக்கு எந்தவிதமான கடமையோ, எதையாவது அடைய வேண்டும் என்பதோ கிடையாது. காரணம் அவர் பூரணமானவர் (பரிபூர்ணர்) பகவானே கூறியிருக்கிறார்:
“ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷுகேலகேஷு கிஞ்சன |
நானவாப்தமவாப்தவ்யம்.....”
நானவாப்தமவாப்தவ்யம்.....”
“மூன்று லோகங்களிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. அடைய வேண்டியது எதுவும் என்னால் அடையப்படாததாக இல்லை.” இவ்வாறிருக்கையில் பகவான் எதற்காக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரஸிம்ஹ, வாமன, பரசுராம மற்றும் இராம அவதாரங்களை எடுத்துக் கொண்டார்? “மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்பதுதான் அதற்குக் காரணமாகும். ராக்ஷஸர்கள் இடையூறு செய்து கொண்டிருந்ததால் ஜனங்களுக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அந்த சமயம் கடவுள், “நான் இங்கேயே இருந்து விடட்டுமா? அல்லது மக்களைக் காப்பாற்றுவதற்காகச் செல்லட்டுமா? இதில் எது சிறந்தது?” என்று சிந்தித்தாராம். ஒரு தராசை எடுத்து ‘கைவல்யம்’ என்பதை ஒரு தட்டிலும் ‘பரோபகாரம்’ என்பதை மறு தட்டிலும் இட்டுப் பார்த்தார். பரோபகாரம் தான் அதிக எடையுள்ளது என்பதை அது காட்டியது.
உதவிடும் மனம் அற்றோரைவிட விலங்குகளே மேல்
ஆதிசங்கரர் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளானார். தம் அற்ப ஆயுளான முப்பத்திரண்டு வருடங்களுக்குள் நாட்டில் மூன்று முறை திக்விஜயம் செய்தார். அவருடைய காலத்தில் ரயில் வண்டியோ, மோட்டார் வாகனமோ, ஆகாய விமானமோ இருக்கவில்லை. அவர் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. ஆனாலும் அவர் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று, பண்டிதர்களுடன் வாதங்களில் கலந்து கொண்டு அவற்றில் அவர்களை வென்று, அவர்களுக்கு ஸநாதன தர்மத்தின் உண்மையான கருத்தை உபதேசித்தார். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது. அந்த எண்ணம் இல்லாமலிருந்திருந்தால் ஞானியான அவர் தன் வழ்வை பிரச்னைகள் எதுவும் இல்லாமல், தனிமையில் கழித்திருக்க முடியும்.
“பரோபக்ருதிசூன்யஸ்ய திங்கமுஷ்யஸ்ய ஜீவிதம்”
என்று ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கிறது. மற்றவனுக்கு உதவி செய்யாத மனிதன் ஒருவனின் வாழ்க்கை வீண். ஏன் இத்தகைய உறுதியோடு இந்த வாக்கியம் சொல்லப்பட்டிருக்கிறது? வாழும்போதும் சரி இறந்தபிறகும் சரி - பிறருக்கு உதவாதவனால் என்னதான் பயன்? பிராணிகளே அத்தகைய மனிதனை விடச் சிறந்தவை.
நம் ஆத்மாவே நமக்குப் பிரியமானது
மனிதர்கள் எவ்வளவோ விதமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்கள்; வேறு சிலரோ ஏழைகள். சிலர் படித்தவர்கள். படிக்காதவர்கள் பலர் உள்ளனர். சிலர் அழகாய் இருக்கின்றனர். சிலரோ அழகற்றவர்களாய் இருக்கின்றனர். இப்படி பலவிதமான மனிதர்கள் இருப்பினும், அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. “நாம் சுகமாக இருக்க வேண்டும்” என்ற எண்ணமே அது. ஒரு திருடன் திருடுவதற்குக் காரணம் ஒரேயடியாகப் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று அவன் நினைப்பதால்தான். தான் எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அவன் திருட்டுத் தொழிலில் ப்ரவர்த்திக்கிறான். ஆனால் அது தவறான வழியாதலால் கடைசியில் அவன் தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. ஆகவே ஜனங்கள் எவ்வளவு வித்யாசமானவர்களாக இருந்தாலும், தான் சுகமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எல்லாருக்கும் சாமான்யமாக இருக்கிறது. ஆகவேதான் பிரபஞ்சத்தில் ஒருவனுக்கு மிகவும் பிரியமான வஸ்து எது என்று கேட்டால் “நான்” என்பது தான் பதில். தன்னைவிட (ஆத்மாவைவிட) பிரியமான வஸ்து ஒருவனுக்கு வேறெதுவுமேயில்லை.
விஷயசுகம் சுகமல்ல
புலன் விஷயங்களைத் துறப்பதில்தான் சுகமே இருக்கிறது. உலக விஷயங்களில் பற்று வைத்து அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எவ்வளவுக்குப் பற்று வைக்கிறோமோ அவ்வளவிற்கு “அவை வேண்டாம்” என்றே தோன்றும். ஆகவே ஆரம்பத்திலிருந்தே லௌகீக விஷயங்களில் பற்று வைக்காமலிருந்தால் ஏமாற்றமோ துக்கமோ நேரிடாது. லௌகிக விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்பதிலேயே மனத்தைச் செலுத்தாமல் பகவத் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சுகம் உண்டாகும் என்று நம் முன்னோர் அறிவுரை கூறியுள்ளனர். இந்த இடத்தில் நாம் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். சகல உலகையும் வழி நடத்துபவனான ஈச்வரன் ஒருவன் இருக்கிறான் என்பதே அது. இதனை நாம் மறந்து விட்டால் நாம் பெரும்பாபம் செய்தவர்கள் ஆகிவிடுவோம்.
இறைவனே எண்ணங்களுக்கு ஆதாரம்
நாம் நற்காரியங்களில் இறங்குவதற்கான பிரேரணையை இறைவன் கொடுக்கிறான். மனிதன் எந்தச் செயலில் இறங்க விரும்பினாலும் அதற்கு முதலில் மனத்துக்கு அதுபற்றித் தோன்ற வேண்டும். பிறகுதான் செயலில் இறங்க முடியும். மனத்தில் எண்ணங்களைத் தோன்ற வைப்பதே இறைவன்தான். ஆகவே இறைவன் இருக்கிறான் என்ற விஷயத்தில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை.
“இறைவன் ஏன் நம் முன் வருவதில்லை?” என்பது சிலரின் கேள்வி. நம் நம்பிக்கை என்னவென்றால் இறைவன் எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் என்று. அவனால் முடியாதது எதுவுமேயில்லை. அப்படிப்பட்ட இறைவன் நம் முன் வந்தால் நாம் அவனைத் திரும்பிப் போக விடுவோமா? சாதாரண மந்திரி நம் ஊருக்கு வந்தால் கூட “எங்களுக்கு மின்சாரம் வேண்டும். தண்ணீர் வேண்டும். குழாய்க் கிணறு வேண்டும்.” என்றெல்லாம் கூறி அவரைப் பிடித்துக் கொண்டு விடுவோம். இறைவனே வந்துவிட்டால் சும்மா விடுவோமா? “ஸ்வர்கத்தை இங்கே கொண்டு வந்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களைப் போகவிட மாட்டோம்” என்று கூட ஜனங்கள் கூறிவிடுவர். ஆகவே நம் முன் இறைவன் வருவானோ? வரமாட்டான்.
எத்தனையோ மஹான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள். நமக்கு அவனது தரிசனம் கிடைக்காததற்குக் காரணம், நாம் நம்முடைய முன்னோர் கடைப்பிடித்த வழியை- சாதனையைக் கடைப்பிடிக்காததேயாகும்.
செயல்களின் நோக்கம் உயர்வாக இருக்கவேண்டும்
நம் முன்னோர் செய்த சாதனையையேதான் நாமும் செய்கிறோம் என்று கூறலாம். அது எப்படி? அவர்கள் தவம் செய்தார்கள். நாமும் தவம் செய்கிறோம். அவர்கள் தியானம் செய்தார்கள். நாமும் தியானம் செய்கிறோம். அவர்கள் வெயில் மழை ஆகியவற்றை சகித்துக் கொண்டார்கள். நாமும் இவற்றைச் சகித்துக் கொள்கிறோம். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த பலன் நமக்குக் கிடைப்பதில்லை. இது எப்படி?
அவர்கள் தங்களுக்கு எதிலும் ஆசைகள் இருக்கக் கூடாது என்பதற்காகத் தவம் செய்தார்கள். நாமோ, நம் மனத்திலுள்ள ஆயிரம் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் “தவம்” செய்கிறோம். அவர்கள் மழை, வெயில், குளிர் ஆகியவற்றைச் சந்தோஷத்துடன் சகித்தனர். நம் நிலை? வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால், ஜெனரேட்டர் இல்லை என்ற காரணத்தால் வெறுப்புடன் “சரி, போகட்டும்” என்று பொறுத்துக் கொள்கிறோம். குளிர் காலத்தில் வெந்நீர் போட விறகு இருக்காமல் போகலாம். அப்போது மட்டும், “சரி, விடு, தண்ணீரே போதும்” என்போம். இது நம் வழி! அவர்கள் வழியோ:
யத்காங்க்ஷந்தி தபோபிரன்யமுனயஸ்தஸ்மின் தபஸ்யன்த்யமீ
“எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. ஈச்வர ஸாக்ஷாத்காரம்தான் வேண்டும்” என்பது அவர்களின் லட்சியமாக இருந்தது. அதேபோல் அவர்கள் பகவானின் பாதத்தை 24மணி நேரமும் தியானித்தார்கள். நாமும் தியானம் பண்ணுகிறோம் எதன் மீது?
த்யாதம் வித்தமஹர்னியம்
24மணி நேரமும், “பணம் எப்படிச் சேர்ப்பது? அதை எப்படி இரட்டிப்பாக்குவது?” என்று பணத்தைப் பற்றியே நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காரணங்கள்தான் அவர்கள் பெற்ற பலனை நாம் பெறவிடாமல் தடுக்கின்றன.
பூஜையில் படாடோபம் கூடாது
நாம் செய்யும் பூஜையோ ஜபமோ மற்றவர்கள் பார்ப்பதற்கு அல்ல. நாம் செய்யும் நல்ல காரியம் விளம்பரத்தை எதிர்பார்த்துச் செய்யப்படக்கூடாது. நாம் செய்வது இறைவனுக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அல்ல என்பது நமக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இன்னொரு விஷயம்-சிலர் பூஜை செய்யும்போது சொல்லப்படும் சங்கல்பத்தில் தங்கள் விருப்பங்களையெல்லாம் அடைவதற்காக நிறைய சொற்களைச் சேர்த்துக்கொள்வர்.
க்ஷேமஸ்தைர்யவீர்யவிஜய- ஆயுராரோக்ய- ஐச்வர்யாபிவ்ருத்ர்யர்த்தம்
இது தேவையா? நமக்கு என்ன வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியாதா? அவன் ஸர்வக்ஞன் என்றுதானே நாமெல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்? ஆகவே ஸ்ரீபரமேச்வரப்ரீத்யர் தம் என்று மட்டும் சொன்னால் போதாதா? ஆனால் ஜனங்களுக்கு இது போதாது என்று தோன்றுகிறது. இன்னும் ஏதாவது ஸங்கல்பம் இருந்தால் சொல்லுங்கள் என்று அவர்கள் தங்கள் புரோஹிதரைத் தொந்தரவு செய்வார்கள். ஆனால் ஸர்வக்ஞன்-ஸர்வசக்தனான பகவானுக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவனுக்கே எல்லாம் தெரியும். அவன் திருப்தியடைந்தான் என்றால் இனி நமக்கு ஆகவேண்டியது எதுவுமே இல்லை.
பூஜைக்கு பக்தி அவசியம்
பத்து நிமிடமாவது பக்தியுடன் இறைவன் பெயரைச் சொன்னால் அது பெரும் நற்கார்யம். சிலர் பூஜையோ, ஸந்த்யாவந்தனமோ செய்து கொண்டிருப்பார்கள். அப்போது ஆயிரம் யோசனைகள் செய்து கொண்டிருப்பார்கள். அவனிடமிருந்து இவ்வளவு பணம் வர வேண்டும். இவன் மீது ‘கேஸ்’ போட வேண்டும் என்று பல யோசனைகளுடன் இருப்பார்கள். அது தவறு அந்தப் பத்து நிமிடமாவது மற்ற விஷயங்களை மறந்து பகவத் பூஜையிலேயே மனத்தை நிலைத்திருக்கச் செய்யுங்கள். அது உங்களுக்கு பரம சிரேயஸ்ஸிற்குக் காரணமாகும். குறைந்த நேரம் பூஜை செய்தாலும், பக்தியோடு செய்தால் அது விசேஷமான பலனைத் தரும்.
கார்யத்தின் பலன் இறைவனின் கையில் உள்ளது
எல்லாருக்கும் ஒழுங்காகக் காரியம் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் இருக்கிறது. மனத்தில் அப்படி ஸங்கல்பம் செய்து நாம் முயற்சியும் செய்கிறோம். ஆனால் எல்லாருக்கும் பலன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பெரியவர்:
துல்யம் கர்ஷந்தி ப்ருதிவீம் துல்யம் சாஸ்த்ராண்யதீயதே |
உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி தைவஸ்யைகஸ்ய லீலயா ||
என்று சொன்னார்.
உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி தைவஸ்யைகஸ்ய லீலயா ||
என்று சொன்னார்.
துல்யம் கர்ஷந்தி ப்ருதிவீம் -பூமி வைத்துக் கொண்டு இருந்தனர் இருவர். இருவரும் சமமாகவே வேலை செய்தனர். ஒருவனுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஒருவனுக்கு நிறையக் கிடைத்துவிட்டது. துல்யம் சாஸ்த்ராண்யதீயதே-இரண்டு பேர் ஒரு பெரியவரிடம் சாஸ்த்ரம் படிக்க வந்தனர். அந்தப் பெரியவர் இருவருக்கும் ஒரே மாதிரியே சாஸ்திரம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தார். யார் மேலேயும் பக்ஷபாதம் இல்லாமல் தனக்குத் தெரிந்ததை இரண்டு பேருக்கும் சொன்னார். இருவரும் ஒரே மாதிரி படித்தார்கள். உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி -ஒருவன் பெரும் பண்டிதன் ஆகிவிட்டான். இன்னொருவனுக்கு சாஸ்திர அறிவே வரவில்லை. அதற்கு வேறு என்ன காரணத்தைச் சொல்ல முடியும்? குருவின் மேல் தோஷத்தைச் சொல்ல முடியாது. வித்யார்த்தியின் மேலும் தோஷத்தைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் ரொம்ப ச்ரத்தையாகத்தான் கவனித்துக் கொண்டிருந்தான். அப்படியிருந்தும் அவனுக்கு சாஸ்திர அறிவு வரவில்லை என்றால் தைவஸ்யைகஸ்ய லீலயா-கேவலம் ‘அதிருஷ்டமான’ ஒரு காரணம் அவனுக்கு அப்பேர்ப்பட்ட பலனையும் இவனுக்கு இப்பேர்ப்பட்ட பலனையும் கொடுத்துவிட்டது. அந்த விஷயத்தில் திருஷ்டமான (காணப்படும்) காரணத்தை எதையும் சொல்ல முடியாது. சில பேருக்கு நம்முடைய இந்திரியங்களுக்குக் கோசரமாகக் கூடிய (புலன்களால் அடையப்படக் கூடிய) விஷயத்தையே நம்பமுடியாது என்ற அபிப்ராயம் இருக்கிறது. இம்மாதிரி நம்புபவனால் மேற் சொல்லப்பட்ட விஷயத்திற்கு ஒரு காரணமும் சொல்ல முடியாது. திருஷ்டமான காரணத்தைச் சொல்லவே முடியாது. அந்த இடத்தில் அதிருஷ்டம் ஒன்றுதான் காரணம். அதனால்தான் நாம் எவ்வளவு புத்திசாலிகள் ஆனாலும் ஈச்வரனின் அனுக்ரஹம் இல்லாவிட்டால் நம்முடைய கார்யம் பலிக்காது என்று சொல்கிறோம்.
பக்தியோடு கார்யத்தை முயலவேண்டும்
நம்முடைய முன்னோர் ரொம்பவும் விவேசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மனிதனுடைய வாழ்க்கை ஒரு ரதம்போல் இருக்கிறது. ரதத்திற்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு சக்கரங்கள் வேண்டும். அந்தச் சக்கரங்களில் எந்த ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் ரதம் செல்லாது. மனுஷனுடைய வாழ்க்கை என்ற ரதத்திற்கு இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் என்னவென்று கேட்டால், ஒன்று நம்முடைய ப்ரயத்னம். இன்னொன்று ஈச்வரனுடைய அனுக்ரஹம். இந்த இரண்டு சக்கரங்களினால் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க்கொண்டு இருக்கிறது. நாம் ஒரே சக்கரத்தினால் அந்த ரதத்தை ஓட்ட வேண்டும் என்று பார்க்கிறோம். முடிவதில்லை. அதனால்தான் சிலருக்கு அதிருஷ்டத்தில் நம்பிக்கை இல்லாமல் ‘நான் நினைத்தால் என்ன வேண்டுமாலும் சாதிப்பேன்’ என்கிற அஹங்காரம். இது தவறு. சிலருக்கு ‘ஈச்வர ஸங்கல்பம் இருந்தால் எல்லாம் நடக்கும். அதற்கு நான் ஏன் சிரமப்பட வேண்டும்?’ என்கிற ஒரு ஜாட்யம் (ஜடத்தன்மை) இதுவும் தவறு. நீ ப்ரயத்னத்தைச் செய்தால் அதற்கு ஈச்வர அனுக்ரஹம் சககாரியாய் (உதவியாக) இருக்குமே தவிர, உன்னுடைய ப்ரயத்னம் இல்லாமல் ஈச்வர அனுக்ரஹம் ஒன்று இருந்தால் போதும் என்று பேசாமல் உட்கார்ந்தால் அந்தக் கார்யம் நடக்காது.
மானுடப் பிறவி மிக அரிது
எத்தனையோ லக்ஷம் ஜீவராசிகள் இருந்தாலும் மனுஷ்யனுக்கு ப்ராதான்யத்தை சாஸ்திரத்தில் ஏன் கொடுத்தார்கள்? தன்னுடைய ஆகாரத்தைச் சம்பாதித்துக் கொள்ளும் விஷயத்தில் மனுஷ்யனும் மீதி பிராணிகளும் சமம்தான். சங்கரபகவத்பாதாள் “பச்வாதிபி: ச அவிசேஷாத்” என்று சொல்கிறார். பிராணிகளும் நாமும் ஒன்றுதான். எப்படி ஒன்று? அதுவும் தனக்கு யாராவது தீனி கொடுப்பார்கள் என்று தெரிந்தால் அவனிடம் போகும். யாராவது கையில் கம்பு வைத்துக்கொண்டு அடிக்க வருகிறான் என்றால் ஓடிப்போகும். நாமும் அப்படித்தான் இருக்கிறோம். யாராவது நமக்கு நல்லது செய்வான் என்றால் அவனிடம் போவோம். அவனால் தொந்தரவு என்றால் அவனிடமிருந்து தூரத்தில் இருப்போம். இந்த விஷயத்தில் “பச்வாதிபி: ச அவிசேஷாத்” என்று பகவத்பாதாள் சொன்னமாதிரி, மீதி பிராணிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை. பின் எந்த விஷயத்தில் வித்தியாசம்? ஒரு வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால் அதுவும் சொல்ல முடியாது. கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது. எந்த விஷயத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கேட்டால் “நமக்குப் பெரிய விவேகத்தை பகவான் கொடுத்தான்” நம்முடைய விவேகத்தினால் எது ஹிதம் (நன்மை) எது அஹிதம் (தீமை) எது உபாதேயம் (ஏற்றுக்கொள்ள வேண்டியது) எது பரித்யாஜ்யம் (விட்டுவிடவேண்டியது) இத்தனையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய புத்தி சக்திக்கு அளவு இல்லை. இந்தக் காலத்தில் விஞ்ஞானிகள் போய்க்கொண்டிருக்கும் ரீதியைப் பார்த்தால் அவர்களின் ஆராய்ச்சி எவ்வளவிற்கு இருக்கிறது. என்று தெரியும். ஒரு விஷயத்தை எவ்வளவு ஸூக்ஷ்மமாகப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள்? அது கேவலம் பகவான் நமக்குக் கொடுத்த புத்தியின் ப்ரபாவம்தானே! இப்படிப்பட்ட விசித்ரமான புத்தியை பகவான் மீதி பிராணிகளுக்குத் தரவில்லை.
இலட்சியத்தை அடைய அயரது முயற்சி செய்ய வேண்டும்
நாம் எத்தனையோ வேண்டாத விஷயமெல்லாம் பேசுகிறோம். நம்முடைய சிரேயஸ் எது என்பதை யோசிக்கிறோமா? பிறவியில் எவ்வாறு கடைத்தேறுவது என்று யோசிக்கிறோமா? நாம் மறு பிறவி எடுக்காமல் இருப்பதற்கு ஏதாவது முயற்சி செய்கிறோமா? நம்முடைய சிரேயஸ்ஸைப் பற்றி யோசிக்காமல் ஊரில் உள்ள விஷயங்களைத் தலையில் போட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் தங்கள் நலனையே முதலில் விரும்புவார்கள். இதுதான் இயற்கை. ஆனால் நாம் நம் சிரேயஸ்ஸைப் பற்றிச் சிந்திக்காமல் மற்ற விஷயங்களையே யோசிப்பது எவ்வளவு விசித்திரம்? இந்த இடத்தில் என் குருநாதர் ஸ்ரீசந்திரசேகரபாரதி மஹாஸ்வாமிகளைப் பற்றிய சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அவரும் சதாசிவ ப்ரஹ்மேந்திராளைப் போலவே மாபெரும் ஜீவன்முக்தர். எப்போதும் அந்தர்முகமாகவே இருந்தார் அவர். ஆத்ம தத்வத்திலேயே எப்போதும் மூழ்கியிருந்த அவர் வெளி விஷயங்களில் ஈடுபடுவதையே நிறுத்தியிருந்தார். மடத்து அதிகாரி தக்க தருணம் பார்த்து ஒரு நாள் அவரிடம், “நீங்கள் இப்போதெல்லாம் வெளியே வந்து ஜனங்கள் யாரையும் விசாரிப்பதேயில்லை. ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வந்து, தங்களது தரிசனம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிப் போகிறார்கள். ஆகவே மடத்தின் தலன் கருதி தாங்கள் வரும் ஜனங்களை விசாரிக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு குருநாதர், “முதலில் என்னை நான் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு மற்றவர்களை விசாரிக்கலாம்” என்று பதில் கூறினாராம்.எப்போதும் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட பதில்தான் கிடைக்கும். ஆகையால் நம்முடைய வாழ்க்கையின் இலட்சியத்தை நாம் முதலில் சிந்தித்து அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பக்தியே முக்திக்கு எளிய வழி
சாதாரணமான ஜனங்கள் பக்தி வழியையே எளிதானது என்று கருதுவார்கள். கர்ம மார்க்கத்தை அனுசரிக்கலாம் என்றால் அதற்கு எவ்வளவோ நியமங்கள். அவ்வளவு நியமங்களையும் அனுசரிப்பதென்பது யாருக்கும் சாத்தியப்படாது. ஞான மார்க்கத்தை அனுசரிக்கலாம் என்றால், அதற்கும் சாதன சதுஷ்டயம் (விவேகம் வைராக்யம், சம, தமாதி ஷட்க ஸம்பத்தி மற்றும் முமுக்ஷுத்வம்) என்னும் நான்கு தகுதிகள் வேண்டும். இதையெல்லாம் பார்க்கும்போது, பக்தி மார்க்கமே மிகவும் சுலபம் என்று தெரியும். யுதிஷ்டிரர், “தர்மங்களிலேயே எந்த தர்மம் சிறந்தது?” என்று பீஷ்மரிடம் கேட்டார். அதற்கு பீஷ்மர்:
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஸ்ஸதா ||
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஸ்ஸதா ||
“பகவானைப் பக்தியுடன் வழிபடுவதே சிறந்த தர்மம்” என்றார். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த சுலோகத்திற்குப் பாஷ்யம் எழுதுகையில் ஸ்ரீசங்கரர் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். கர்மாக்களைச் செய்வதற்கு பல நியமங்களை அனுசரித்தாக வேண்டும். ஆனால் பக்திக்கு நியமங்கள் கிடையா. கர்மங்கள் செய்யப்படும்போது குறைகள் நேரிடலாம். சாஸ்திரத்தில் ஓரிடத்தில், “அவிதினா க்ருதம் அக்ருதம்” என்று சொல்லப்பட்டதால் முறையின்றிச் செய்யப்பட்ட கர்மம் அது செய்யப்படாதது போலாகிவிடும். பக்தி விஷயத்தில் இப்படியெல்லாம் நேருவதற்கு அவகாசமேயில்லை. ஆகவே பக்தி மார்க்கம்தான் முக்தியடைய மிக எளிதான மார்க்கம்.
தன்னையே அளிப்பவன் தன்யன் ஆகிறான்
நம்முடைய நாக்கு பகவானுடைய நாமங்களைச் சொன்னால்தான் அதற்கு பவித்ரத் தன்மையே வரும். வேறு விஷயங்கள் பேசுவதால் அது பவித்ரம் அடையாது. இறைவனுடைய திவ்ய மங்கள உருவத்தைக் கண்டால்தான் நம் கண்களுக்குப் புனிதம். மற்ற விஷயங்களைப் பார்ப்பதால் அல்ல. நம்முடைய கைகள் பகவானைப் பூஜிப்பதற்காகத்தான் இருக்கின்றன. பகவானைப் பூஜை செய்யாத கைகளை ‘கைகள்’ என்றே அழைக்க முடியாது. இதேபோல், நம் மனம் இறைவனது பாதாரவிந்தத்தையே எப்போதும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒருவன் தன் எல்லா அவயவங்களையும் இறை வழிபாட்டிற்கே செலவிட்டானேயானால் அவன் தன்யன்.
பகவத் சிந்தனை எப்போதும் தேவை
பகவான் கீதையில் ஒரு வார்த்தை சொன்னார். “எவன் தன் கடைசி நேரத்தில், அதாவது தன் பிராணன் போகும் நிலையில் எந்த விஷயத்தை நினைத்து பிராணனை விடுவானோ அவன் அதையே அடைவான்” அந்தக் கடைசி நேரத்தில் பகவானையே நினைத்து நாம் பிராணனை விட்டால் பகவானுடைய ஸான்னித்யம் நமக்குக் கிடைக்கும்.
இதைச் சொன்னால் அநேகம் பேருக்கு மனத்திலே என்ன பாவனை வருகிறதென்று கேட்டால் “கடைசி நேரத்தில் பகவானை நினைத்தால் போதும் இல்லையா? இப்போதிலிருந்தே ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அந்தக் கடைசி நேரத்தில் நினைத்தால் ஸாயுஜ்யம் வந்துவிடுகிறது. அப்படியே நினைக்கிறோம். அதனால் இப்போது எங்களை சுதந்தரமாய் விடுங்கள். இப்போது எங்களை நிர்பந்தப்படுத்தாதீர்கள்.” என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உங்களுக்கு இன்று முதல் அந்த அப்பியாசம் இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் திடீரென்று பகவானுடைய நினைவு வருமா என்று கேட்டால், கண்டிப்பாக வராது. அதற்காகத்தான் சொல்கிறோம். “எப்போதுமே பகவானுடைய நினைவிலேயே இரு. அந்த அப்பியாச பலத்தினாலே கடைசி நேரத்தில் பகவானுடைய நினைவு உனக்கு வரும். அதை இன்று முதல் அப்பியாசம் செய். பகவானை நினைத்திரு. ஒவ்வொரு வார்த்தையிலும் பகவானை ஞாபகம் செய்து கொண்டு அப்பியாசம் செய்தால் கடைசி நேரத்தில் பகவான் சிந்தனை உனக்கு வரும்.
No comments:
Post a Comment