Wednesday, 2 April 2014

நமது ஜெகத்குரு - ஓர் ஒப்பற்ற சீடர்

நமது ஜெகத்குரு - ஓர் ஒப்பற்ற சீடர்



சிஷ்ய ஸ்வீகாரம் முடிந்த அன்றைய தினத்திலிருந்தே ஸ்ரீ மஹாஸன்னிதானம் தம் சீடரை “ஸ்வாமிகள்” என்றே அழைக்கத் தொடங்கி விட்டார். 'எனக்கு எந்தவித உயர்ந்த மரியாதை அளிக்கப்படுகிறதோ அதே அளவு மரியாதை ஸ்வாமிகளுக்கும் இனிமேல் அளிக்கப்பட வேண்டும்' என்ற அறிவிப்பை ஸ்ரீ மஹாஸன்னிதானம் பக்த ஜனங்கள் மற்றும் மடத்து ஊழியர்களிடையே வெளியிட்டார். தம்மைத் தரிசிக்க வரும் அனைவரிடமும் தம் சிஷ்ய ஸ்வாமிகளையும் அவசியம் சென்று தரிசிக்கும்படி உபதேசித்தார். தரிசனம் முடிந்து புறப்படவிருக்கும் பக்தர்களை தம் சிஷ்ய ஸ்வாமிகளிடம் சென்று மந்திராட்சதையைப் பெற்றுக் கொள்ளும்படி பணித்தார்.

சிஷ்ய ஸ்வீகாரம் முடிந்த அன்று பக்தர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீமஹாஸன்னிதானம் தமது குரலில் பெருமை மிளிரக் கூறியதாவது: “சாரதா பீடத்தில் அமரும் அனைத்து பீடாதிபதிகளுக்கும் மிகக் கடினமான பரீட்சை ஒன்று பகவானால் வைக்கப்படுகிறது. தகுந்ததொரு சீடரைத் தேர்ந்தெடுத்து இப்பீடத்தின் அடுத்த வாரிசாக நியமிப்பதே அது. ஸ்வாமிகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நான் இந்தப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறிவிட்டேன்!” மற்றொரு முறை, நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே உரையாற்றிய ஸ்ரீமஹாஸன்னிதானம், “உங்களையெல்லாம் வழி நடத்திச் செல்லத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று கூறி இப்படிப்பட்ட உத்தம குருவை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி மேன்மையடையவேண்டும் என்பதை சூசகமாக உணர்த்தினார். மூதாட்டியான பக்தை ஒருவர் ஸ்ரீ ஆஞ்சநேயலுவை ஸ்ரீமஹாஸன்னிதானத்திடம் வித்யார்த்தியாக அவர் சேர்ந்த காலத்திலிருந்தே அறிவார். ஸ்ரீ ஆஞ்சநேயலு சந்யாஸம் பெற்றுக் கொண்டு பீடாதிபதியானவுடன் அனைவரும் அவரது பாதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்யவே, இந்த மூதாட்டிக்கு, 'என்னுடைய பிள்ளையாகவே பாவித்து வந்த இவருக்கு நான் இப்போது நமஸ்காரம் செய்வதா, கூடாதா?' என்று மனக்குழப்பம் ஏற்பட்டது. இக்குழப்பத்துடன் இவர் சென்று ஸ்ரீமஹாஸன்னிதானத்தை தரிசனம் செய்த பொழுது ஸ்ரீமஹாஸன்னிதானம் இவரது மன ஓட்டத்தை நொடியில் புரிந்து கொண்டவராய், “உங்களுடைய வாத்ஸல்யம் (தாயன்பு) எனக்குப் புரிகிறது. வாத்ஸல்யம் என்பதும் ஒரு வகை பக்திதான். ஸ்வாமிகள் தற்போது ஒரு சந்நியாஸி மட்டுமல்லாது இந்தப் பிரசித்தி பெற்ற பீடத்தின் அதிபதியும் கூட. இதை நீங்கள் மனத்தில் கொள்ள வேண்டும்” என உரைத்ததுமல்லாமல் அந்த அம்மையார் பிறகு ஒரு சமயம் தம்மையும் தம் சீடரையும் ஒரு சேர தரிசிக்க வந்தபோது தம் சீடரை நோக்கி, “ஸ்வாமிகளே! இந்த பக்தை தங்களது தரிசனத்திற்காக வந்திருக்கிறார். ஆசீர்வதியுங்கள்” எனக்கூறி விட்டு இந்த பக்தையை நோக்கி “பீடாதிபதிக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என உத்தரவிட, தமது குழப்பங்கள் அறவே நீங்கப் பெற்ற அந்த பக்தை பயபக்தியுடன் ஆச்சார்யாள் ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகளை நமஸ்கரித்து ஆசி பெற்றார்.

குருநாதரின் திருவடி நிழலில் தங்கி அவருக்கு ஆத்மார்த்தமான சேவையைச் செய்வதிலேயே உத்தமமான ஒரு சீடருக்குத் தம் பிறவிப் பெரும்பயனை அடைந்த திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகி விடுகிறது. இதற்கு மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆச்சார்யாள் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளேயாவார். “ஸ்ரீமஹாஸன்னிதானம் என்னைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு சந்யாஸ ஆசிரமத்தையும் தந்தருளியது எனக்குக் கிட்டிய மாபெரும் பாக்கியமே” என ஆச்சார்யாள் பலமுறை தமது குரலில் நன்றி கலந்த பக்தி மிளிரக் கூறியிருக்கிறார். ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் ஆணைகளைக் கவனமாகக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றுவதை தமது முழுமுதற் கடமையாகக் கொண்டிருந்தார் நம் ஆச்சார்யாள். சில சமயங்களில் ஸ்ரீ மஹாஸன்னிதானம் “இன்றைய சந்திரமௌலீஸ்வர பூஜையை ஸ்வாமிகள் செய்வார்” எனக் கூறிவிடுவார். இது ஆச்சார்யாளுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் பூஜைக்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு விடுவார். ஒருமுறை விஜய யாத்திரை செய்த ஓரிடத்தில் உரையாற்றிய ஸ்ரீமஹாஸன்னிதானம் தம் உரையை முடிக்கும் தருவாயில், “அடுத்ததாக ஸ்வாமிகள் பேசுவார். அவர் மிக அழகாகப் பேசுவார். ஆனாலும் இன்று அவரால் அதிக நேரம் பேச முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில், இப்போதே மிகவும் நேரமாகி விட்டது. இனி ஸ்வாமிகள் ஸ்நானத்திற்குப் போய்விட்டு, அனுஷ்டானங்களை முடித்து, பிறகு பூஜைக்கும் வரவேண்டும்” எனக் குறிப்பிட்டார். அடுத்ததாகப் பேசிய ஆச்சார்யாள், “ஸ்ரீமஹாஸன்னிதானமே கூறிவிட்டார்கள் நான் அதிக நேரம் பேச முடியாதென்று. அவர்களது வார்த்தைகளில் அவர்களது ஆணையும் கலந்திருக்கிறது. அவர்களது ஆணையை நிறைவேற்றுவது நமது தலையாய கடமையல்லவா” எனக் குறிப்பிட்டதுடன் தம் உரையையும் விரைவிலேயே முடித்து ஸ்நானத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

சிஷ்ய ஸ்வீகாரம் முடிந்த பிறகு ஸ்ரீ மஹாஸன்னிதானம் பொன்னிற ஜரிகையுடன் கூடிய காவி உடையை விட்டு சாதாரணமான காவி உடையை அணியத் தொடங்கி விட்டார். இதைக் கண்ட ஆச்சார்யாள், “நானும் ஏன் என் குருநாதரைப் போன்றே எளிமையான ஆடையையே அணிந்து கொள்ளக்கூடாது?” என எண்ணித் தாமும் அதே போல் எளிமையான ஆடையையே அணிந்து கொண்டார். இதைக் கவனித்து விட்ட ஸ்ரீமஹாஸன்னிதானம், “என்ன இது ஸ்வாமிகளே! சாதாரண காவி ஆடையை உடுத்தியிருக்கிறீர்கள்? என்னதான் எளிமையாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினாலும் நீங்கள் தற்போது ஒரு பீடாதிபதி என்பதையும் மறவாதீர்கள். மடத்துச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. ஆகவே ஜரிகையுடன் கூடிய ஆடையைத்தான் நீங்கள் அணிய வேண்டும்” எனக் கூற, குருவின் ஆணையை ஆச்சார்யாள் உடன் நிறைவேற்றினார்.

ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் விஷயத்தில் தாம் மிகப் பணிவுடனும் பக்தியுடனும் நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் ஏனையோரையும் அவ்வாறு நடந்து கொள்ளும்படி உபதேசிப்பார் நம் ஆச்சார்யாள்.

ஒருமுறை ஆச்சார்யாளை அணுகிய ஒரு பையன் “எனக்கு மந்திரோபதேசம் கொடுங்கள்” எனக் கேட்டான். இம்மாதிரியெல்லாம் வந்து மந்திரோபதேசம் கேட்பது தவறு என அவனுக்கு உணர்த்திய ஆச்சார்யாள் அவனை “நீ ஸ்ரீ மஹாஸன்னிதானத்திடம் சென்று முறைப்படி, 'ஸ்ரீமஹாஸன்னிதானம் எனக்கு மந்திரோபதேசம் செய்தருள்வார்களா?' எனப் பணிவுடன் கேட்டுக் கொள்” என அனுப்பி வைத்தார். அதன்படியே பணிவுடன் நடந்து கொண்டு ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் சம்மதத்தைப் பெற்ற அந்தப் பையன் மீண்டும் ஆச்சார்யாளிடம் வந்து விஷயத்தைக் கூறினான். மிகவும் சந்தோஷப்பட்ட ஆச்சார்யாள் தம் அருகிலிருந்த ஒருவரிடம் “இந்தப் பையன் இன்று காலை என்னிடம் வந்து சிறிதும் முறை தெரியாத வகையில் அலட்சியமாக 'மந்திரோபதேசம் கொடுங்கள்' எனக் கேட்டு விட்டான். முறையாக எப்படி வேண்டிக் கொள்வது என்பதை இவனுக்குக் கற்றுக் கொடுத்து ஸ்ரீ மஹாஸன்னிதானத்திடமே அனுப்பி வைத்தேன். நல்ல வேளை, முதலில் என்னிடம் வந்து இப்படி நடந்து கொண்டான். இவனைத் திருத்த முடிந்தது. இல்லையென்றால் நேரடியாக ஸ்ரீமஹாஸன்னிதானத்திடம் சென்று இப்படி கேட்டிருப்பான். அது எவ்வளவு பெரிய அபராதமாகியிருக்கும்!” என்று கூறினார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஆச்சார்யாள் சன்னிதியிலேயே அவன் அப்படி நடந்து கொண்டதும் பெரிய அபராதம்தான். ஆயினும் தம் அந்தஸ்திற்கு மதிப்புக் கொடுத்துக்கொள்ளாது தமது குருநாதருக்கே முக்கியத்துவம் கொடுக்க முனைந்தது ஆச்சார்யாளின் குருபக்தியைக் காட்டுகிறது.

மற்றொரு முறை குருவும் சீடருமாக சபரிமலைக்கு விஜயம் செய்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதி வரை காரில் சென்ற அவர்கள் பிறகு அங்கிருந்து மலையில் நடந்து ஏறத் தொடங்கினர். ஆச்சார்யாளும் மற்றும் சில பக்தர்களும் சற்று முன்னதாக ஓரிடத்தை அடைந்தனர். அங்கு காணப்பட்ட மிக ரம்மியமான இயற்கைக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்த ஆச்சார்யாள் அங்கு சற்று நேரம் நின்று ரசிக்கத் தொடங்க, உடன் இருந்த பக்தர்களில் ஒருவர், “ஸ்ரீமஹாஸன்னிதானம் இங்கு வரும் சமயம் அவர்களை அவசியம் இந்த இடத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வரவேண்டும் என்று நாம் சொல்ல வேண்டும்” எனக் கூறினார். இதைக்கேட்ட ஆச்சார்யாள் உடனடியாக, “ஸ்ரீமஹாஸன்னிதானத்திடம், இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள்' எனக் கூறுவதற்கு நாம் யார்? அவர்களது ஆணையை நிறைவேற்றி வைப்பது தான் நம் கடமையே தவிர அவர்களுக்கு ஆலோசனை தந்து கொண்டிருப்பதல்ல” என உரைத்தார். தமது தவற்றை உணர்ந்து கொண்ட அந்த பக்தர் குருநாதரிடம் எம்முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனும் முக்கியமான பாடத்தை அன்று கற்றுக் கொண்டார்.
“குருவின் வார்த்தைகளே தனக்கு வேதம்; குரு எதைச் செய்கிறாரோ அதுவே எனக்கும் வழிகாட்டி” என்பதே உண்மையான ஒரு சீடனின் தீர்மானமாக இருக்கும். ஆச்சார்யாள் ஸ்ரீ ஸ்ரீபாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல! தமது குருநாதரிடம் பரிபூரண சரணாகதியடைந்த இச்சீடரின் எண்ணம், பேச்சு மற்றும் செய்கை அனைத்துமே குருநாதரைப் பின்பற்றியே அமைந்திருந்தன!

ஆச்சார்யாள் சந்திரமௌலீஸ்வர பூஜையைச் செய்யும் சமயங்களில் தம் குருநாதர் அப்பூஜையை எவ்விதம் செய்வாரோ அவ்விதமே செய்வார். மணியை ஒலிக்கச் செய்வது, லிங்கத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு துடைப்பது போன்ற சிறு சிறு விஷயங்களில் கூட ஸ்ரீ மஹாஸன்னிதானம் எவ்விதம் செயல்படுவாரோ அவ்விதமே ஆச்சார்யாளும் செயல்படுவார்.
குரு, சீடர் இருவருமாக விஜய யாத்திரை செய்யும் சமயங்களில் பற்பல இடங்களில் உபன்யாஸங்கள் செய்வார்கள். முதலில் ஸ்ரீமஹாஸன்னிதானம் உபன்யாஸம் செய்து முடித்த வுடன் பிறகு நம் ஆச்சாயாள் தம் உபன்யாஸத்தைத் தொடங்குவார். அதில் தாம் புதிதாக எதையும் கூறாமல் தம் குருநாதர் எக்கருத்துகளைக் கூறினாரோ அதையேதான் தாமும் கூறுவார். குருநாதர் எந்தெந்த ஸ்லோகங்களை மேற்கோள் காட்டிப் பேசினாரோ, அதே ஸ்லோகங்களையே இவரும் மேற்கோள் காட்டுவார். இதை உணர்ந்த குருநாதரோ தம் சீடர் சொந்தமாக, தனிப்பட்ட முறையில் தம் கருத்துகளை வெளியிடுவது அவசியம் எனக் கருதினார். ஆகவே, ஒரு நாள் அவர் தம் சீடரிடம் “என்ன ஸ்வாமிகளே இது? நான் சொன்னவற்றையே நீங்களும் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்க, சீடரும் மிகப் பணிவாக, “(குருவின் வார்த்தைகளைவிட மேலானது எது உள்ளது எனும் தீர்மானத்துடன்) அப்படிப் பேசுவதே சரியானது; போதுமானது என எனக்குத் தோன்றுகிறது. இது தவறானதா?” என வினவினார். சீடரின் இந்த பதிலைக் கேட்ட ஸ்ரீமஹாஸன்னிதானம், “இனிமேல் நீங்கள் தனிப்பட்ட முறையில், புதிய விஷயங்களை ஜனங்களுக்குக் கூற வேண்டும் ஸ்வாமிகளே!” என்று உறுதிபடக் கூறிவிட 'அப்படியே செய்து விடுகிறேன்' என்றுரைத்த இவ்வற்புதச் சீடர் தமது மறு உபன்யாஸத்திலிருந்தே தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்கி தம் குருவின் ஆணையை நிறைவேற்றினார்.
பக்தரொருவர் தமது புத்திரனையும் அழைத்துக் கொண்டு ஒருமுறை ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் தரிசனத்திற்காக வந்திருந்தார். இருவரையும் ஒரு சேரக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீமஹாஸன்னிதானம் சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு இறுதியில், “நான் என்ன நினைக்கிறேனோ அதையேதான் ஸ்வாமிகளும் நினைப்பார். ஸ்வாமிகள் என்ன நினைக்கிறாரோ அதையேதான் நானும் நினைப்பேன். நீங்கள் இருவரும் கூட இந்த முறையில் தான் இருந்து வரவேண்டும்” என உபதேசித்து ஆசீர்வதித்தார்.
ஸ்ரீமஹாஸன்னிதானம் தமக்கும் தம் சீடருக்குமிடையே இருந்து வரும் பரஸ்பர பாவனையைப் பற்றிக் கூறிய வார்த்தைகளின் உண்மையைக் கண்கூடாகக் கண்டு வியந்து ரசித்து அனுபவித்தவர்கள் பற்பலருண்டு.

பத்திரிகை நிருபர்கள் சிலர் ஒரு முறை ஸ்ரீ ஆச்சார்யாளைப் பேட்டி கண்டனர். அது முடிந்ததும் உடனடியாக அவர்கள் ஸ்ரீமஹாஸன்னிதானத்தை அணுகி முன்பு தாங்கள் ஆச்சார்யாளிடம் எந்தெந்தக் கேள்விகளைக் கேட்டனரோ அதே கேள்விகளை இவரிடமும் கேட்டனர். என்ன ஆச்சர்யம்! ஆச்சார்யாள் தமது கருத்துகளாக எதையெதைக் கூறினாரோ அவற்றையே ஸ்ரீமஹாஸன்னிதானமும் கூறினார். குரு-சிஷ்ய எண்ணவொற்றுமை அவர்களை வியக்கச் செய்தது.

ஒரு முறை மடத்து பக்தர்கள் பலர் ஒன்று கூடி தங்களுக்குள் நிதி திரட்டி பள்ளிக் கூடம் ஒன்றிற்கு கட்டடம் ஒன்றை சிருங்கேரி மடத்தின் சார்பில் கட்டித் தருவது எனத் தீர்மானித்தனர். பக்தர் குழுவின் தலைவர், ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களை தரிசனம் செய்து தங்களது முடிவினைப் பற்றித் தெரிவித்து அவர்களின் ஆசீர்வாதத்தைக் கோரினார். ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களோ, “இந்த நல்ல காரியத்தில் நானும் பங்கு கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி மடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவரிடம் அளிக்கும்படி உத்தரவிட்டு தமது பரிபூரண ஆசிகளை அளித்தருளினார். பின்னர் அந்த பக்தர் ஆச்சார்யாள் ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளை அணுகி, கட்டட விஷயத்தைத் தெரிவித்த போது ஆச்சார்யாள் உடனே, “இந்த நல்ல காரியத்தில் நானும் பங்கு கொள்ள விரும்புகிறேன்” எனத் தம் குருநாதர் கூறிய அதே வார்த்தைகளைக் கூறியது மட்டுமல்லாது தம் குருநாதர் எவ்வளவு தொகையைக் குறிப்பிட்டார்களோ அதே தொகையினை இவர்களும் குறிப்பிட்டு அதை இந்த பக்தரிடம் அளித்து விடும்படி தம் செயலாளரிடம் உத்தரவிட்டார். அந்த பக்தருக்கு இந்த குரு-சீடர் எண்ண ஒற்றுமை மிக ஆச்சர்யத்தை அளித்தது.

ஒருமுறை குருவும் சீடருமாக ஒரு நகருக்கு விஜயம் செய்திருந்த சமயம் குருநாதர் மடத்திலேயே தங்கி விட, சீடர் ஒரு பக்தரின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். ஆச்சார்யாளை முறைப்படி வரவேற்றுப் பணிந்த அந்த பக்தர் அவரிடம் இரு வேண்டுகோள்களை விடுத்தார்.

1. தான் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி முடித்து கூடிய விரைவில் கிரஹப் பிரவேசம் செய்ய இருப்பதால், அதற்கு ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

2. தனது பிள்ளைக்கு உபநயனம் செய்ய நாள் நிச்சயித்து விட்டார். பிள்ளையை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

இவற்றைச் செவிமடுத்த ஆச்சார்யாள் உடனடியாக, “கிரஹப் பிரவேசத்திற்கு என்னுடைய பரிபூரண ஆசிகள். ஆனால் உபநயனம் தக்ஷிணாயன காலத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது சாஸ்திரங்களுக்கு எதிரானது. ஆகவே உங்கள் பிள்ளையின் உபநயனத்தை உத்தராயனத்தின்போது சிருங்கேரியில் வைத்து நடத்துங்கள். என்னுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்” எனக் கூறிச் சென்று விட, பெரிதும் ஏமாற்றமடைந்த அந்த பக்தர் சென்று ஸ்ரீமஹாஸன்னிதானத்தை தரிசனம் செய்து தாம் ஸ்ரீஆச்சார்யாளிடம் பிரஸ்தாபித்ததைப் பற்றி எதுவும் கூறாமல் அதே இரண்டு வேண்டுகோள்களை முன் வைத்தார். அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஸ்ரீமஹாஸன்னிதானம், “கிரஹப் பிரவேசத்திற்கு என்னுடைய ஆசிகள் உண்டு. உபநயனத்தை உத்தராயன காலத்தில் சிருங்கேரியில் வைத்துக்கொள்ளுங்கள். என் ஆசீர்வாதத்தைத் தருகிறேன்” என்று பதிலளித்து விடவே அந்த பக்தருக்கு மிக ஆச்சரியமாகிவிட்டது.
பக்தர் ஒருவர் ஒருமுறை சிருங்கேரிக்குச் சென்று ஸ்ரீமஹாஸன்னிதானத்தை தரிசனம் செய்து அவர்களது பாதுகைகளைத் தனக்குத் தந்து அனுக்ரஹம் செய்தால் அவற்றை பூஜையில் வைத்து வழிபட விரும்புவதாக வேண்டிக் கொண்டார்.

குரு: நீ உனது நித்திய கர்மாக்களைச் சரிவரச் செய்து கொண்டு வருகிறாயா?
பக்தர்: ஆமாம்.
குரு: உனக்கு மந்திரோபதேசம் ஆகி விட்டதா?
பக்தர்: இன்னும் இல்லை.
குரு: அப்படியானால் நீ முதலில் மந்திரோபதேசத்தைப் பெற்றுக்கொள். பாதுகை பற்றி பிறகு யோசிக்கலாம்.

மறுநாள் அந்த பக்தர் ஸ்ரீமஹாஸன்னிதானத்திடம் மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டார். வெகு காலத்திற்குப் பிறகு இந்த பக்தர் ஆச்சார்யாளை தரிசனம் செய்தார். முன்பு தான் ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களை தரிசனம் செய்து பாதுகைகளை வேண்டியது குறித்தோ, அவர்களது திருநாவால் உபதேசம் பெற்றுக் கொண்டது குறித்தோ எதையும் கூறாமல், தனது பூஜையில் வைத்து வழிபட ஆச்சார்யாள் தமது பாதுகைகளைத் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டார். இவரது பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்ட ஆச்சார்யாள் அழகிய புன்சிரிப்பைத் தவழ விட்டபடியே, “ஆக, நீ உன்னுடைய நித்திய கர்மாக்களை சரியாகச் செய்து வருகிறாய். மந்திர உபதேசமும் ஆகிவிட்டது. பாதுகை வரவேண்டியதுதான் பாக்கி இல்லையா?” என்று கூறித் தமது பாதுகைகளைத் தந்தருளினார்.

பக்தை ஒருவரது கனவில் ஒரு முறை ஸ்ரீமஹாஸன்னிதானம் தோன்றி நான்கு அடிகள் கொண்ட ஸ்லோகம் ஒன்றை உபதேசித்து மறைந்தார். காலையில் விழித்த பிறகு அந்த பக்தையால் அந்த ஸ்லோகத்தின் நான்காம் அடியினை மட்டுமே நினைவு கூர முடிந்தது. முதல் மூன்று அடிகளை மறந்து விட்டதை எண்ணி வருந்திய அந்த அம்மாள் ஆச்சார்யாளை தரிசனம் செய்து, தான் கண்ட கனவை விவரித்து, ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களால் உபதேசித்தருளப்பட்ட ஸ்லோகத்தின் முதல் மூன்றடிகளை தான் மறந்து போய் விட்டதைக் கூறி அருள் வேண்ட, ஆச்சார்யாள் அந்த மூன்றடிகளை எடுத்துக் கொடுத்து ஆசீர்வதித்ததுடன் மிகவும் சிரத்தையுடன் அந்த ஸ்லோகத்தை ஜபித்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

1982ஆம் வருடம் வரை நம் ஆச்சார்யாள் தம் குருநாதருடனேயே விஜய யாத்திரைகளை மேற்கொண்டு வந்தார். தம் சீடர் தனிப்பட்ட முறையில் விஜய யாத்திரைகளை மேற்கொள்வது அவசியம் என ஸ்ரீமஹாஸன்னிதானம் உத்தரவிட தம் குருவின் ஆணையை ஏற்று தனிப்பட்ட முறையில் விஜயயாத்திரை செய்யத் தொடங்கினார், நம் ஆச்சார்யாள்.
தனிப்பட்ட விஜய யாத்திரையின் போது குருவும் சீடரும் கடிதப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வது வழக்கம். தமது கடிதத்தில் தம்முடைய குருநாதரின் அருளாசிகளினால் தம்மால் எந்தெந்தக் காரியங்கள் நடைபெற்றன என்பதை விவரமாக ஆச்சார்யாள் குறிப்பிடுவதுடன் இனி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள காரியங்களைப் பற்றியும் குறிப்பிட்டு அவையும் செவ்வனே முடிவு பெற தம் குருநாதரின் மேலான ஆசிகளைக் கோருவார். சீடரின் கடிதங்களைப் பெறும் ஸ்ரீமஹாஸன்னிதானமும் தமது வார்த்தைகளில் மிகுந்த வாத்ஸல்யத்தைக் காட்டி பதில் எழுதுவதுடன் தம் சீடரின் முயற்சிகளை வெற்றியடையச் செய்யுமாறு ஸ்ரீசாரதா சந்திரமௌலீசுவரரைப் பிரார்த்திப்பதையும் தமது கடிதத்தில் குறிப்பிடுவார். (எடுத்துக்காட்டாக, இரு கடிதங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.)

ஸ்ரீமஹாஸன்னிதானம் நம் ஆச்சார்யாளுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எனது மிகப் பிரியமான சீடரும் துறவிகளில் சிறந்தவருமான ஸ்ரீபாரதீதீர்த்தர் விஷயத்தில் ஜீவ-ப்ருஹ்ம ஐக்கியச் சிந்தனையை முன்னிட்டுக் கற்பிக்கப்பட்ட ஆசிகள் நன்கு விளங்கட்டும். பௌஷ கிருஷ்ண நவமியாகிய சனிக்கிழமையன்று (24.1.87) எழுதப்பட்டு வேதாரண்யத்திலிருந்து ஸ்ரீமடத்தின் காரிய நிர்வாஹகர் மூலமாக அனுப்பப்பட்ட கடிதத்தைப் பெற்றேன். இடையூறு நிரம்பிய நிலையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தீர்மானித்தபடி யாத்திரை நிறைவேறியது என்றறிந்து உவகை நுகர்கிறேன். சிவராத்திரி பூஜை ராமநாத க்ஷேத்ரத்தில்
(ராமேஸ்வர க்ஷேத்ரத்தில்) அனுஷ்டிக்கப் போகிறீர்கள் என்றும் பிரபவ ஆண்டு வைசாக மாதம் சுக்ல பக்ஷத்தில் ஸ்ரீசாரதாதேவியின் பிரதிஷ்டையை சாலிவாடீ நகரத்தில் செய்யப் போகிறீர்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். தடையின்றி ஸங்கல்பப்படி எல்லாக் காரியங்களும் பூர்த்தி அடையட்டும் என்று சாரதா சந்திரமௌலீசுவரரைப் பிரார்த்திக்கிறேன். புஷ்ய மாத கிருஷ்ண பக்ஷத்தில் த்விதீயா திதியன்று (17.1.1987) உல்லால சிருங்கேரி மடத்திற்கு வந்தேன். சில நாள்கள் தங்கிவிட்டுச் சிருங்ககிரிக்குச் (சிருங்கேரிக்குச்) செல்வதாயுள்ளேன். இங்கு எல்லாம் நலமாய் உள்ளது. மேலும் எழுத வேண்டியது எதுவும் இல்லை.

மாகமாதம் சுக்லபக்ஷம் ஆக நாராயணஸ்மரணம்
த்விதீயா(31.1.1987) (வித்யாதீர்த்த:)
கோட்டேகர், மங்களூர்
நம் ஆச்சார்யாள் தம் குருநாதருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
மிகுந்த மரியாதைக்குரிய குருநாதரின் தாமரைத் திருவடிகளில் மீண்டும் மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் சமர்ப்பித்துக் கொண்டது. குருநாதரின் பரமானுக்ரஹத்துடன் சிருங்கேரியிலிருந்து புறப்பட்டு மாக க்ருஷ்ண தசமியன்று ஸ்ரீசைலம் க்ஷேத்திரத்தை அடைந்தேன். மஹாசிவராத்திரியன்று மாலை ஏழு மணிக்கு பகவான் மல்லிகார்ஜுனரை பூஜித்தேன். பிறகு பகவானுக்கு பட்டு வஸ்த்ரம், தங்க பில்வதளம் வெள்ளிப் பாத்திரம், 1000/- ரூபாய் முதலியவற்றைச் சமர்ப்பித்தேன். அதன் பிறகு ப்ரமராம்பிகையைப் பூஜித்தேன். அம்பாளுக்கு தங்கத்தினாலான மாலை, விசேஷமான வஸ்த்ரம் மற்றும் 300/-ரூபாயையும் சமர்ப்பித்தேன். அந்நாளன்று லட்சத்துக்கும் மேற்பட்ட
ஜனங்கள் அங்கு கூடியிருந்தனர். ஆந்திர மாநில மந்திர தேவாதாயர் மற்றும் உயர்ந்த அதிகாரிகள் எங்களை கௌரவத்துடன் தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்றனர். நம் சிஷ்யர்கள் பலரும் வந்தனர். அன்றிரவு நான்கு யாமங்களிலும் இடைவிடாது சந்திர மௌலீஸ்வர பூஜை செய்தேன். அப்போது அங்கு கூடியிருந்த சிஷ்ய ஜனங்கள் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்கள். இவையெல்லாம் குருநாதரின் க்ருபையால்தான் நடந்தன என்று உறுதியாக நம்புகிறேன். இங்குள்ள சிருங்கேரி மடத்தின் கட்டட வேலைகள் நடந்து வருகின்றன. எழுப்பப்படுகின்ற மற்றும் கட்டப்படப் போகின்ற கட்டடங்களுக்கு 'சங்கர க்ருபா' என்று பெயரிட விழைகின்றேன். பால்குண க்ருஷ்ண தசமியன்று கல்யாண நகரை அடைவேன்.
மஹபூப் நகர் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்
விபவ வருஷம் செய்யும் மிகவும் பிரியமான சிஷ்யன்
பால்குண மாதம் -பாரதீதீர்த்த:
க்ருஷ்ண பக்ஷம்
பஞ்சமி
சனிக்கிழமை

தனிப்பட்ட முறையில் விஜய யாத்திரைகளை மேற்கொண்டு தம்முடைய தனிப்பட்ட கருத்துகளை ஜனங்களிடையே உபன்யாஸமாகச் செய்தாலும் தம்முடைய குருநாதரின் மகிமைகளை உலகோர் அறியச் செய்வதை மட்டும் இச்சீடர் மாற்றிக் கொள்ளவே இல்லை.
ஸ்ரீமஹாஸன்னிதானத்தைத் தரிசனம் செய்து ஆசிபெற்ற ஒருவர் பிறிதோர் ஊரில் முகாமிட்டிருந்த ஆச்சார்யாளையும் தரிசனம் செய்து ஆசி கோரிய போது, “ஸ்ரீமஹாஸன்னிதானமே உங்களை ஆசீர்வாதம் செய்திருக்கிறார். அதுவே அனைத்தையும் தந்து விடுமே,” என மகிழ்ந்து கூறினார் ஆச்சார்யாள். மற்றொரு சமயம் ஓர் இடத்தில் உபன்யாஸம் செய்யும் போது புஷ்பதந்தர் எழுதிய சிவ மஹிம்ன ஸ்தோத்திரத்தின் முதல் செய்யுளைக் கூறி அதன் பொருளைப் பின் வருமாறு விளக்கினார். “ஹே சம்போ, உன்னுடைய மஹிமையைப் பரிபூரணமாக அறிந்தவர் மட்டுமே உன்னைத் துதிக்கலாம் என்றால் அந்த நான்முக ப்ரம்மாவும் இதற்குத் தகுதியவற்றவராகி விடுகிறார். மாறாக, அவரவர் தங்கள் அறிவுக்கேற்ப உன்னைத் துதிக்கலாம் என்றால் என்னுடைய துதியும் உனக்கேற்றதே!” இதை விளக்கிய பின் ஆச்சார்யாள் கூறியது: “ஸ்ரீமஹாஸன்னிதானத்திடமும் நான் இதே பாவனையைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிமையும் அளவிட முடியாததே. ஆயினும் நம்மால் இயன்ற அளவு அவர்களைத் துதித்து வணங்கினோமானாலும் அவர்கள் நம்மைக் கருணையுடன் காத்து அருள்வார்கள்.”

மற்றொரு தருணத்தில் நம் ஆச்சார்யாள் உபதேசித்தது: “நம் மஹாஸன்னிதானத்திடம் சென்று பொருள் வேண்டும், பதவி வேண்டும் என்றெல்லாம் நாம் வேண்டுவது சரியானதாகாது, 'அவர்களுடைய க்ருபை நமக்கு என்றென்றும் வேண்டும்' என்பதைத் தான் நாம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். அவர்களது க்ருபை ஒன்றே நமக்கு அனைத்தையும் தந்து விடும்”.
இப்படித் தம் குருநாதரின் நினைவினிலே இந்த அற்புதச் சீடர் உலவி வந்து கொண்டிருக்க, அனைத்தையும் கடந்த, ஜீவன் முக்தரான குருநாதரோ மாயையால் கற்பிக்கப்பட்ட தமது தேஹம் பிரியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ தமது பிரிவு நெருங்குவதை தமது ப்ரிய சீடருக்கும் மற்றும் பல பக்தர்களுக்கும் சூசகமாக உணர்த்திடத் தொடங்கினார்.
ஒருமுறை ஸ்ரீமஹாஸன்னிதானமும் ஆச்சார்யாளும் பரமேஷ்டி ஆச்சார்யாளின் அதிஷ்டானத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த சமயம், ஸ்ரீமஹாஸன்னிதானம் நம் ஆச்சார்யாளிடம், “ஸ்வாமிகளே! என்னுடைய ஆயுள் முடிந்தவுடன் எங்கே என் சமாதியை நிறுவுவது என்று நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை; இதோ இந்த இடத்திலேயே நிறுவி விடுங்கள்” எனக் கூறி பரமேஷ்டி ஆச்சார்யாளின் அதிஷ்டானத்தின் தென்புறத்தைக் காண்பித்தார். தம் குருநாதரின் திருநாவிலிருந்து அவர்களது பிரிவைப் பற்றிய பேச்சுகள் வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத நம் ஆச்சார்யாள், “எதற்காகத் தாங்கள் இந்த மாதிரியெல்லாம் இப்போது பேச வேண்டும்?” என ஆதங்கத்தோடு முறையிடவே தமக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் ஸ்ரீமஹாஸன்னிதானம் “ஸ்வாமிகளே! நான் என்னுடைய சமாதியைப் பற்றி மட்டும் பேசவில்லை. உங்களுடைய காலம் முடிந்தவுடன் உங்கள் சமாதியும் என்னுடைய சமாதியின் தென்புறந்தான் அமைய வேண்டும். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. வித்வத் ஸதஸ் இப்போதெல்லாம் இங்கே சமாதிகள் அமைந்துள்ள கட்டடத்தின் முன் மண்டபத்தில் தான் நடைபெறுகிறது. என்னுடைய சமாதியும் இப்போதிருக்கும் இந்த இரண்டு சமாதிகளை ஒட்டியே கட்டப்பட்டதானால் மேலும் பற்பலர் இங்கே அமர்ந்து ஸதஸில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் அல்லவா!” எனப் பதிலளித்தார். ஏனையோரது நலனையே ஸ்ரீமஹாஸன்னிதானம் எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தது இதன் மூலமும் வெளிப்படுகிறது அன்றோ!

அவ்வப்போது ஸ்ரீமஹாஸன்னிதானம் நம் ஆச்சர்யாளிடம், “என்னுடைய உடல் இறந்து மறைந்ததும் உங்களுடைய துக்கம் அளவிட முடியாதபடி இருக்கும் என்பதை நானும் அறிவேன். இருந்தாலும் பிறந்துபடும் எல்லா உடல்களுக்கும் இறப்பு என்பது என்றைக்காவது ஒருநாள் ஏற்பட வேண்டிய விஷயம்தானே!” என்று குறிப்பிடுவதுமுண்டு.

1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது வட இந்திய விஜய யாத்திரையை நம் ஆச்சார்யாள் தொடங்குவதற்கு சில நாள்கள் இருக்கையில் ஒரு நாள் ஸ்ரீமஹாஸன்னிதானம் தம் சீடரிடம், “ஸ்வாமிகளே! இன்னும் எவ்வளவு காலம் நான் வாழ வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என வேடிக்கையாகக் கேட்ட சமயம் நம் ஆச்சார்யாள், “குருநாதா! நான் பேராசை கொள்ள விரும்பவில்லை. மனித வாழ்வின் ஆயுள் 100 வருடங்கள் என வேதமே கூறுகிறது. இப்போது தங்களுக்கு 72 வயது ஆகிறது. ஆகையால் தாங்கள் இன்னும் 28 வருடங்கள் வாழ வேண்டும்!” எனப் பதிலளித்தார். இதைச் செவியுற்ற ஸ்ரீமஹாஸன்னிதானம், “என்ன ஸ்வாமிகளே இப்படிச் சொல்கின்றீர்கள்? இந்த 72 வருடங்கள் போதாதா? இன்னும் 28 வருடங்கள் வேறு நான் வாழவேண்டுமா? எனக்கு அது தேவையே இல்லை!” என உறுதியாகக் கூறி உரையாடலை முடித்தார். 'ஸ்ரீ மஹாஸன்னிதானம் இவ்விஷயத்தை சாதாரணமாகக் குறிப்பிடவில்லை; அதில் ஆழ்ந்த பின்னணியுமிருக்கிறது' என்பதை ஆச்சார்யாள் அந்த சமயத்தில் உணரவில்லை.

ஆச்சார்யாள் தமது வட இந்திய யாத்திரையைத் தொடங்கிய சில மாதங்களில் ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்கள் தமது காலடி யாத்திரையைத் துவக்கினார். ஸ்ரீமஹாஸன்னிதானம் அமர்ந்திருந்த காரை சிருங்கேரியிலிருந்து ஓட்டிக் கொண்டுவந்த ஒருபக்தர் வழியிலிருந்த ஓர் ஊரில் இறங்கிக் கொண்டார். அங்கே மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்ட அவர் குருநாதரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு அங்கிருந்து பெங்களூருக்குக் கிளம்பினார். கிளம்பிய சில நிமிடங்களில் மடத்து ஊழியர் ஒருவர் அவரது பின்னால் ஓடி வந்து ஸ்ரீமஹாஸன்னிதானம் அவரை அழைப்பதாகக் கூறவே இவரும் உடனடியாக தம் குருநாதரிடம் சென்றார். தமது குரலில் கருணை பொழிய இவரை நோக்கி ஸ்ரீமஹாஸன்னிதானம், “நீ ஏன் அடுத்த ஊர் வரை என்னுடன் வரக்கூடாது? உன்னுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது” எனக் கூறியதோடு கூடவே “யாருக்குத் தெரியும்? இதற்குப்பிறகு நாம் சந்திக்கப் போகிறோமோ இல்லையோ!” என்றும் குறிப்பிட்டார். மிகச் சாதாரணமான முறையில் ஸ்ரீமஹாஸன்னிதானம் பேசிய விதம் இந்த பக்தரது மனத்தில் அந்த சமயத்தில் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களுடன் அடுத்த ஊர் வரையில் பேசிக் கொண்டே சென்ற அந்த பக்தர் அடுத்த ஊரில் இறங்கி, குருநாதரின் பேராசிகளைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார். அதற்குப் பிறகு தான் தன் குருநாதரின் திருவுடலை தரிசனம் செய்யவே முடியாது எனும் விஷயம் அவருக்கு அப்போது தெரியவில்லைதான்!

மற்றொரு பக்தை சென்னையிலிருந்து காலடி சென்று குருநாதரை தரிசித்தார். அச்சமயம் அவர், “இம்முறை நீண்ட நாள்கள் தங்கி தங்களைத் தரிசிக்கும் முடிவுடன் வந்திருக்கிறேன்” எனக் குறிப்பிட, அதைக் கேட்ட ஸ்ரீமஹாஸன்னிதானம் மிகச் சாதாரணமாக, ஆனால் அதே சமயம் மறைமுகமாக தமது கருத்துகளை வலியுறுத்தும் வண்ணம், “உனக்கு எவ்வளவு தரிசனம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு செய்து கொள். உன் மனத்திலுள்ள ஆசை தீருமளவுக்கு முழுமையாக இப்போதே செய்து முடித்து விடு!” எனக் கூறினார். அந்த பக்தை அங்கே தங்கியிருந்த நாள்கள் முழுவதிலும் ஸ்ரீமஹாஸன்னிதானம் எப்போதுமில்லாத அளவிற்கு அதிக நேரம் பக்தர்களனைவருக்கும் தரிசனமளித்தார். பிற்காலத்தில்தான் அப்பக்தைக்கு ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களது வார்த்தைகளுக்கும் அவர்கள் அதிக நேரம் தரிசனம் கொடுத்ததற்கும் காரணம் புரிய வந்தது!

21.9.1989 அன்று சென்னையில் வசித்து வந்த பக்தர் ஒருவருக்கு அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் ஒரு கனவு தோன்றியது. அதில் ஸ்ரீமஹாஸன்னிதானம் அவருக்கு தரிசனம் கொடுத்து பிரசாதம் அளித்தார். பிறகு இவரை ஆசீர்வதித்த ஸ்ரீமஹாஸன்னிதானம், “இனிமேல் ஸ்வாமிகளிடமிருந்து நீங்கள் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறி மறைந்தார். உடனடியாக விழித்துக் கொண்ட இந்த பக்தர் இந்தக் கனவின் உள்ளர்த்தம் என்னவாக இருக்கும் என வியந்தபடியே இருந்தார். அன்றைய தினம் மாலையில் அவர் கேள்விப்பட்ட ஒரு விஷயம் அவரது கனவின் காரணத்தை அவருக்கு விளக்கியது.

இதேபோல், திண்டுக்கல் நகரில் வசிக்கும் ஒரு பக்தையின் கனவில் அதே நாளில் (21.9.1989) தோன்றிய ஸ்ரீமஹாஸன்னிதானம் “இனிமேலிருந்து நான் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடப் போகிறேன்!” எனக் கூறினார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே அவரது திவ்விய உடல் ஒரு தெய்விக ஜோதியாக மாறத் தொடங்கியதையும் அந்த அம்மாள் காண நேர்ந்தது. உறங்கி விழித்த அந்த மாதுவிற்கு இந்த விசித்திரமான கனவின் காரணம் விளங்கவில்லை. பிறகு மாலையில் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்த போதுதான் அந்த பக்தைக்கு தன் குருநாதரின் வார்த்தைக்குரிய அர்த்தம் புரிய வந்தது.

யோகியரின் சிகரமும் இணையில்லாத கருணாமூர்த்தியுமான குருராஜர் ஸ்ரீமஹாஸன்னிதானம் 21.9.1989 அன்று காலை வேளையின் பிற்பகுதியில் தமது புவியுடலை நீத்துப் பரவெளியில் கலந்தார்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட லட்சோபலட்சம் பக்தர்களின் இதயங்களில் சொல்லவொணாத் துயர் குடி கொண்டது. பெற்ற தாயினும் மேலாக பாசத்தைப் பொழிந்து தங்களது நலனையே தமது கடமையாக எண்ணித் தங்களைப் பேணிக் காத்து வந்த தங்களது குருநாதர் இருக்கப் பெறாத இவ்வுலகு அவர்களுக்குச் சூனியமாகவே காட்சியளித்தது. பெரும்பாலான பக்தர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்ட சில கணங்களில் சிருங்கேரிக்குக் கிளம்பிவிட்டார்கள்.

மராட்டிய மாநிலத்தில் விஜய யாத்திரை செய்து கொண்டிருந்த ஆச்சார்யாளுக்கு குருநாதரின் மறைவு பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்ட பொழுது அவர்களது மனது பெரும் துயரில் ஆழ்ந்துவிட்டது. அவ்வளவு விரைவாகத் தமது குருநாதரின் பிரிவு ஏற்படும் என்பதை சீடர் எதிர்பார்க்கவில்லைதான். பக்த ஜனங்கள் மற்றும் அரசாங்கத்தாரின் உதவியால் பூனாவிலிருந்து விமானம் மூலம் மங்களூரை அடைந்த ஆச்சார்யாள் அங்கிருந்து கார் மூலம் சிருங்கேரியை அடைந்தார்.

குருநாதரின் திவ்ய தேகத்தின் முன் நமஸ்கரித்த ஆச்சார்யாள் அதே நிலையில் நீண்ட நேரம் இருந்து பிறகு தம்மைத் தேற்றிக்கொண்டு எழுந்தார். பின்பு அங்கு கூடியிருந்த ஜனங்களிடம், “ஸ்ரீமஹாஸன்னிதானம் உடலால் நம்மிடையேயிருந்து மறைந்துவிட்டாலும் உணர்வால் நம் அனைவரின் உள்ளங்களிலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்” என ஆறுதல் கூறியதுடன் தம் குருநாதரின் இறுதிச் சடங்குகளைத் தொடங்க முனைந்தார்.

ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் திருவுடல் துங்கையின் வட கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீஆதிசங்கரரின் சந்நிதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே தமது குருநாதரின் மெல்லுடலுக்கு ஆச்சார்யாள் பஞ்சாம்ருத அபிஷேகமும் கமண்டலு தீர்த்த அபிஷேகமும் செய்வித்தார். பின்னர், சிவப்புப்பட்டு மற்றும் அரிய விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆன கிரீடம் மற்றும் ஆபரணங்களால் திருவுடல் அலங்கரிக்கப்பட்டு, ஒரு வெள்ளிப் பல்லக்கில் பத்மாஸன
நிலையில் அமர்த்தப்பட்டு சிருங்கேரியின் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பெற்ற பின் பிரவசன மந்திரத்தில் பொது ஜனங்கள் தரிசிப்பதன் பொருட்டு வைக்கப்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி உட்பட பற்பல பிரமுகர்களும் ஏராளமான பக்த ஜனங்களும் ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் பொன்னுடலைத் தரிசனம் செய்து முடித்தபின், திருவுடல் துங்கையின் தென் கரையிலுள்ள சந்தியா மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. துங்கையில் நீராடி முடித்த ஆச்சார்யாள் தமது திருக்கரங்களால் தம் குருநாதரின் திருவுடலுக்கு துங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்வித்தவுடன் திருவுடல் பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திற்கு எடுத்து வரப்பட்டது. பஞ்சாம்ருத அபிஷேகம் மற்றும் பூஜை ஆகியவற்றால் சீடர் தமது குருநாதரின் பூவுடலுக்கு ஆராதனை செய்த பின், குருநாதரின் திருவுடல் 10 அடி விட்டமும் 8 அடி ஆழமும் கொண்ட பள்ளத்தினுள் இறக்கப்பட்டது. பின்னர் பள்ளத்தின் கீழ்த்தள மத்தியில் 2 1/2 அடி விட்டமும் 3 அடி ஆழமும் கொண்ட ஒரு குழியுள் ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் திருவுடல் அமர்த்தப்பட்டது. பின்னர் அந்த உட்குழி முழுவதும் கற்பூரம், மணல் மற்றும் உப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்டது. ஸ்ரீமஹாஸன்னிதானம் உபயோகித்து வந்த தண்டம் சாஸ்திர விதிகளுக்கேற்ப மூன்று துண்டுகளாகவும் அவர்களது கமண்டலு பல துண்டுகளாகவும், உடைக்கப்பட்டு அவர்களது திருவுடலுடன் அக்குழியினுள் வைக்கப்பட்டன. உயிர் நீங்கிய சந்யாசியின் தலையில் தேங்காய்களை உடைத்து கபாலத்தைப் பிளக்கச் செய்யும் சம்பிரதாயம் ஒன்று உண்டு. ஆயினும் தம் உயிரினும் மேலான குருநாதரின் சிரத்திற்கு இம்மாதிரியான ஒரு சேதத்தை விளைவிக்க இந்த தெய்விகச் சீடருக்கு விருப்பமில்லை. ஆகவே சங்கு ஒன்றின் நுனிப்பகுதி மூலம் குருநாதரின் சிர உச்சியில் சிறு துளை போடப்பட்டு, பின்னர் தனியாக வேறிடத்தில் ஐந்து தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பிறகு, வெளிப்புறப் பள்ளம் முழுதும் மண்ணால் நிரப்பப்பட்டு, மேல் தளத்தில் ஒரு மண்ணாலான லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. மாலையில் ஆச்சார்யாள் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அன்று இரவும் தம் குருநாதரின் சமாதியில் ஆச்சார்யாள் வழிபட்டார்.

தம் குருநாதரின் பிரிவு அவரை எவ்வளவு துயரப்படச் செய்திருந்தது என்பதைப் பற்பல தருணங்களில் அவரது பேச்சு வெளிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக சில சம்பவங்களை இங்கே குறிப்பிடலாம்.
ஸ்ரீமஹாஸன்னிதானம் விதேஹ முக்தி அடைந்த பிறகு ஒரு நாள் ஆச்சார்யாள் துங்கையில் வசிக்கும் மீன்கள் உண்ணும் பொருட்டு சில தேங்காய்த் துண்டுகளையும் வேறு சில உணவுப் பொருள்களையும் துங்கா நதியில் வீசிய சமயம் ஒரு மீன் கூட நதியின் மேற்புறம் வந்து உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளவில்லை. ஆச்சார்யாளுடன் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் இதைக் கண்டு வியப்புற்று ஆச்சார்யாளிடமும் இதைச் சுட்டிக் காட்டினார். அதற்கு ஆச்சார்யாள் அளித்த விளக்கமாவது: “நம் குருநாதரின் மறைவினால் துங்கா நதியில் இருக்கும் மீன்கள் கூடத் துயரமடைந்து விட்டன போலும்! அதனால் தான் அவை தங்களது வழக்கமான செயல்களைக் கூடச் செய்யாதிருக்கின்றனவோ?”
1989ஆம் வருடத்திய நவராத்திரி தர்பாரின் போது ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களின் உருவப்படம் ஒன்றை ஆசனத்தின் மேல் இருத்தி அவர்களது கம்பீர முன்னிலையில் தர்பாரை நடத்தும் பாவனையில்தான் ஆச்சார்யாள் தர்பாரை நடத்தினார். அச்சமயம் அங்கே வீற்றிருந்த காசி ஸ்வாமிகளிடத்தில் “ஸ்ரீமஹாஸன்னிதானம் தமது ஸ்தூல உடலுடன் நம்மிடையே இப்போது இல்லையே” என்று கூறி வருந்தினார். மேலும் 1990ஆம் ஆண்டு கணபதி வாக்யார்த்த சபையின் சமயம் ஆச்சார்யாள் தாம் நிகழ்த்திய உரையில், “இந்தச் சபையை இச்சமயத்தில் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடையும் எனக்கு நம் குருநாதர் இப்போது நம்முடன் தம் ஸ்தூல உடலில் இல்லையே என எண்ணும்போது அளவேயில்லாத வேதனை உண்டாகிறது” எனக் குறிப்பிட்டார். மற்றொரு சமயம், “காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை சிருங்கேரியின் பெருமைகளைப் பரப்பிய நம் குருநாதர் இப்போது நம்மிடையே இல்லாதிருப்பது நமது மாபெரும் துரதிர்ஷ்டமே. ஆயினும் அவர் காட்டிச் சென்ற பாதையில் செல்வேன் எனும் தீர்மானத்தை நான் மேற்கொண்டுள்ளேன்” என உரைத்தார்.

'குருநாதரின் பிரிவால் தமக்கு மட்டும் துயரில்லை; அந்த மகாத்மாவின் ஏனைய சீடர்களுக்கும் மிகுந்த துயருண்டு' என்பதையும் ஆச்சார்யாள் உணர்ந்திருந்தார். ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களின் நேரடி பிரதிநிதியாக பீடத்தில் அமர்ந்திருந்தபடியால் ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் பக்தர்களிடத்தில் பரிவும் கருணையும் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்தருளி வந்தார். எடுத்துக்காட்டாக சில சம்பவங்களை இங்கே குறிப்பிடலாம்.

பக்தர் ஒருவர் ஆச்சார்யாளை அணுகி தனக்கு மஹாஸன்னிதானம் அவர்களின் பாதுகைகளை அனுக்ரஹம் செய்ய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டார். ஆச்சார்யாள், “அது எப்படி சாத்தியமாகும்? ஸ்ரீமஹாஸன்னிதானம் இப்போது உயிருடன் இல்லையே?” எனக் கூறினார். ஆயினும் அந்த பக்தரின் சிரத்தையுடன் கூடிய பிரார்த்தனையை உணர்த்திருந்தபடியால், “சரி, உங்களது பக்தி திடமானதாக இருக்கும் பட்சத்தில் பாதுகைகள் தாமாகவே வந்து சேரும்!” என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார். இது நடந்த சில நாட்களில் இரண்டு பெண்மணிகள் சிருங்கேரிக்கு வந்தார்கள். தங்களுடன் ஸ்ரீ மஹாஸன்னிதானத்தின் பாதுகைகளையும் கொண்டு வந்திருந்த அவர்கள் நம் ஆச்சார்யாளை தரிசனம் செய்து, பாதுகைகளையும் சமர்ப்பித்து, “தற்சமயம் இந்தப் பாதுகைகளை பூஜை செய்வதற்கு ஆண்கள் எவரும் எங்கள் குடும்பத்தில் இல்லை. மேலும் பாதுகா பூஜையைச் செய்யுமளவிற்கு எங்களுக்கும் தகுதி இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே பாதுகைகளை ஆச்சார்யாளான தங்களிடம் சமர்ப்பித்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து இங்கே கொண்டு வந்து விட்டோம்” எனக் கூறி நின்றார்கள். பாதுகைகளை ஏற்றுக்கொண்டு அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்த கையோடு ஆச்சார்யாள் ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் பாதுகைகளைக் கோரி சிருங்கேரிக்கு வந்து தங்கியிருந்த அந்த பக்தரை அழைத்து வரச் செய்து அவரிடம், “பாதுகைகள் வந்தாயிற்று!” என அறிவித்து, அதிசயித்து நின்ற அந்த பக்தருக்கு அந்தப் பாதுகைகளை அளித்து ஆசீர்வதித்தார்.

மற்றொரு பக்தர் ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களிடம் மந்திரோபதேசம் வேண்டிப் பிரார்த்திக்கவே, உபதேசம் செய்தருளுவதாக குருநாதரும் கூறியிருந்தார். ஆயினும் குருநாதர் விதேஹமுக்தி அடைந்து விட்டபடியால் அந்த பக்தர் இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டு ஆச்சார்யாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்த ஆச்சார்யாள் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அந்த பக்தரை சிருங்கேரிக்கு வரச் செய்து உபதேசமும் தந்தருளினார்.

ஸ்ரீ மஹாஸன்னிதானத்தின் பாதார விந்தங்களின் அளவுக்கேற்ப ஒரு ஜோடி பாதுகைகளை பக்தர் ஒருவர் செய்து எடுத்துக் கொண்டு சிருங்கேரிக்குச் சென்று ஆச்சார்யாளை தரிசனம் செய்தார். ஆச்சார்யாள் அந்தப் பாதுகைகளை ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தின் அருகில் வைத்து ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் பாத சக்தியை அந்த பாதுகைகளில் ஆவாஹனம் செய்து பிறகு அவற்றை அந்த பக்தருக்குத் தந்து ஆசீர்வதித்தார்.

இம்மாதிரியாக எண்ணற்ற சம்பவங்கள் நடைபெற்றன என்றாலும் பின்வரும் ஒரு சம்பவம் ஸ்ரீமஹாஸன்னிதானத்தின் பக்தரொருவர் விஷயத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தை விவரிக்கிறது. இந்த பக்தர் தபால் இலாகாவில் பணியாற்றியவர். 15 வருடங்கள் பணியாற்றி முடிந்ததும் 'வாலண்ட்டரி ரிடையர்மெண்ட்' திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுக் கொண்டு விட்டார். இவ்வாறு ஓய்வு பெற்றவர்கள் தங்களது பென்ஷன் தொகை முழுவதையும் முன்னதாகவே பெற்றுக் கொண்டு விடலாம் என மத்திய அரசு ஒரு விசேஷ திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்த பக்தரும் முழு பென்ஷன் தொகையைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துக் கொண்ட போதும், ஏதோ சில காரணங்களைக் காட்டி இவரது விண்ணப்பத்தை நிர்வாகம் நிராகரித்து விட்டது. நடுவர் மன்றத்தில் (ட்ரிப்யூனல்) முறையிடும்படி இவரது நண்பர்கள் கூறினர். ஆயினும் இவர் தன் மனைவியுடன் சிருங்கேரிக்கு விஜயம் செய்து ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்களை தரிசனம் செய்து, இவ்விஷயம் முழுவதையும் கூறி, இது பற்றி குருநாதரின் ஆலோசனையை வேண்டினார். “நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். வெற்றி உண்டாகும்” என ஸ்ரீ மஹாஸன்னிதானம் உபதேசித்தார்.

பெங்களூருக்குத் திரும்பிய அத்தம்பதி ஒரு வழக்கறிஞரிடம் சென்று கல்ந்தாலோசித்தனர். அவ்வழக்கை வெற்றிகரமாக நடத்தி பென்ஷன் தொகை முழுவதையும் பெற்றுத்தரத் தன்னால் முடியும் என அந்த வழக்கறிஞர் உறுதி கூறவே அதனால் திருப்தியடைந்த அத்தம்பதி அவரிடம் “நாங்கள் சிருங்கேரிக்குச் சென்று எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி ஆசி பெற்று வந்த பிறகு உங்களிடம் வழக்கை ஒப்படைக்கிறோம்” எனக் கூறினர். என்ன காரனத்தினாலோ அவர்களது இந்த பதிலால் எரிச்சலடைந்து விட்ட அந்த வழக்கறிஞர் மிகக் கோபமாக அவர்களை நோக்கி, “பேசாமல் நீங்கள் உங்கள் குருவையே கோர்ட்டுக்குச் சென்று வாதாடச் சொல்லுங்களேன்!” எனக் கூறினார். இவரது இப்படிப்பட்ட செய்கையினால் திகைப்படைந்த அத்தம்பதி அவருக்குரிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு வழக்கு விவரங்கள் கொண்ட தங்களது ஃபைலையும் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டு 'இவரிடம் வாழ்க்கை ஒப்படைப்பதற்கில்லை' எனும் தீர்மானத்துடன் வெளியேறினர். பிறகு தங்களது நண்பர்கள் சிலரைக் கலந்தாலோசித்த அத்தம்பதி அவ்வழக்கை தாமே நேரடியாக நடுவர் மன்றத்தில் தொடரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். இதற்கிடையில் ஸ்ரீமஹாஸன்னிதானம் அவர்கள் விதேஹமுக்தி அடைந்துவிட்டார். பிற்பாடு சிருங்கேரிக்கு வருகை புரிந்த அத்தம்பதி நடந்த விஷயங்கள் முழுவதையும் ஆச்சார்யாளிடம் கூறி அவரது ஆசிகளை வேண்டினர். “சாரதாம்பாள் துணையிருப்பாள்” எனக் கூறி ஆச்சார்யாள் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.
முறையாக நடுவர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு நான்கு அல்லது ஐந்து முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் பற்பல காரணங்களால் மேலும் ஒத்தி வைக்கப்பட்டபடியே இருந்தது. அடுத்த முறை அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயம் நடுவர்மன்ற நீதிபதியாக இருந்த பெங்களூரைச் சேர்ந்தவர் உடல்நலக் குறைவினால் விடுமுறையில் சென்றிருந்தபடியால் சென்னையிலிருந்து ஒரு நீதிபதி பெங்களூருக்கு வந்திருந்தார். அன்றைய தினம் வேறொரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் விவாதங்கள் முடியவே மாலை 4 மணி ஆகி விட்டது. நேரமாகி விட்டதென நீதிபதியும் மீதி வழக்குகளை ஒத்தி வைக்க ஆயத்தமாகிவிட்டார். இதைக் கண்ட இந்த பக்தர் எதிர்த்தரப்பு வழக்கறிஞரை அணுகி, “இவ்வழக்கானது அடிப்படையில் மிகச்சிறிய ஒன்று என்பதால் இதன் விசாரணையையும் இன்றே எடுத்துக் கொள்ளலாமே” எனக் கேட்டுக்கொள்ள, அவரும் நீதிபதியை அவ்வாறே வேண்டிக் கொண்டார். இதற்கு சம்மதித்த நீதிபதியும் எதிர்தரப்பு வழக்கறிஞரிடம் வழக்கின் விவரங்களை எடுத்துரைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி விவரங்களை விவரித்த வழக்கறிஞர் மனுதாரருக்கு முழு பென்ஷன் தொகையைத் தர இயலாது என வாதாடினார். இவரது வாதங்களைக் கேட்ட நீதிபதி அங்கு அமர்ந்திருந்த வேறு சில வழக்கறிஞர்களை நோக்கி, “சென்னை நடுவர் மன்றத்தில் இதே மாதிரியான விவரங்களைக் கொண்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உங்களுள் யாரேனும் ஒருவர் அந்த வழக்கு பற்றிய விவரங்களை அறிந்திருந்தால் இங்கே கூறலாம்” என அறிவித்தார். உடனே, சென்னையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அந்த வழக்கின் குறிப்பு விவரங்களைக் கூறவே, அதைக் குறித்துக் கொண்ட நீதிபதி 'மனுதாரருக்கு பென்ஷனின் முழுத் தொகையும் வழங்கப்பட வேண்டும்” என அப்போதே தனது தீர்ப்பையும் வழங்கி விட்டார்.

எதிர்பாராத விதமாக சிறிது நேரத்திற்குள்ளாகவே வழக்கு முழுவதும் முடிந்ததுமல்லாமல் தங்களுக்குச் சாதகமாகவும் தீர்ப்பு அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்த அத்தம்பதியினர் பின்னர் சிருங்கேரிக்குச் சென்று ஆச்சார்யாளை தரிசனம் செய்த சமயம் நீதிமன்றத்தில் நடைபெற்றவற்றை ஆச்சார்யாளிடம் விவரித்தனர். அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஆச்சார்யாள் தமது முகத்தில் தெய்விகப் புன்னகையைத் தவழ விட்டபடியே, “ஸ்ரீமஹாஸன்னிதானத்தால் முடியாதது என்று எதுவுமேயில்லை. நீங்கள் இங்கிருந்து திரும்பி பெங்களூர் போகும் போது, முன்பு உங்களிடம் ஆணவமாகப் பேசிய அந்த வழக்கறிஞரை அவசியம் சந்தித்து 'எங்கள் குருநாதர் ஒரு வழக்கறிஞராக வரவில்லை. நீதிபதியாகவே வந்துவிட்டார்' என்று அவரிடம் கூறுங்கள்” என்று கூறினார்.
ஒரு முறை பக்தர் ஒருவர் ஆச்சார்யாளிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்: “தங்களது வாழ்நாளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தாங்கள் கருதுவது எது?” என்று அதற்கு ஆச்சார்யாள் மிகப் பெருமையுடன் அளித்த பதில்: “என்னைத் தம் சிஷ்யராக அங்கீகரித்து தமது பரமானுக்ரஹத்தை என் மீது என் குருநாதர் பொழிந்ததைத்தான் எனது வாழ்விலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். அவர் என் குரு மட்டுமல்ல. அவரே என் தந்தையும் தெய்வமும் ஆவார். சந்யாஸ தர்மம், பீடத்துச் சம்பிரதாயங்கள் என பற்பலவற்றை எனக்குக் கற்றுத் தந்தவரும் அவரே. என்னிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் அவர் மறைத்ததில்லை. என்னால் அவரே மறக்கவே இயலாது!”
என்னே இந்த சீடரின் குரு பக்தி!

No comments:

Post a Comment