Thursday, 24 April 2014

விபூதி மற்றும் ருத்ராட்சத்தின் மகிமை:

விபூதி மற்றும் ருத்ராட்சத்தின் மகிமை:

விபூதிக்குரிய விபூதி, பஸிதம், பஸ்மம், க்ஷாரம், ரக்ஷை என்னும் ஐந்து பெயர்களுள் விபூதியின் பொருள்.
விபூதி என்பதற்கு மேலான ஐசுவரியம் என்று பொருள். வி-மேலான; பூதி-ஐசுவரியம்; எனவே தன்னைத் தரித்தவர்களுக்கு என்றும் அழிவில்லாத மேலான ஐசுவரியத்தைத் தருதலால் விபூதி என்னும் பெயர் பெற்றது. இங்கே ஐசுவரியம் என்றது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பரமுத்தியேயாகும். இவ்வாறு பொருள் கொள்வதோடு விநாயகன் என்ற சொல்லுக்குத் தனக்கு மேலொரு நாயகன் இல்லாதவன் என்று பொருள் கூறுவதுபோல விபூதி என்ற பதத்துக்குத் தனக்கு மேலான ஐசுவரியம் இல்லாததெனச் சொல்லவும் படும். அன்றியும் வி-சிவபெருமான்; பூ-பாவனை; தி-அடைதல், எனப்பொருள் கொண்டு சிவத்துவ பாவனையை விளக்கும் இயல்புடையது என்று விசேடப் பொருள் பகர்வதற்கும் உரித்தாயுள்ளது. இவ்வுண்மை வாதுளாகமத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விபூதிக்குப் பூதியென்னும் பெயருமுண்டு.

மற்றைய பெயர்களின் பொருள்
ஆன்மாக்களுடைய பாபங்களைனைத்தையும் நீறாக்கி விடலால் நீறு அல்லது பஸ்மம் (பற்பம்) என்றும், அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தை அளித்தலால் பஸிதம் என்றும், ஆணவாதி மலபந்தங்களைக் கழுவுதலால் க்ஷாரம் என்றும், பூதப்பிரேத பிசாசம், பில்லி, சூனியம் முதலியவற்றாலுண்டாகும் துன்பங்களினின்றும் நீக்கி ரக்ஷித்தலால் ரக்ஷை அல்லது காப்பு என்றும் சொல்லப்படுகிறது.

விபூதி வேதோக்தமானது.
வேதத்தின் ஞானகாண்டப் பொருளை விளக்க எழுந்த நூற்றெட்டு உபநிடதங்களுள் விபூதியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் உபநிடதங்கள் பதினைந்து. அவற்றுள் பஸ்ம ஜாபாலம், காலாக்னி ருத்ரம், ஜாபாலி என்னும் உபநிடதங்கள் பஸ்ம வைபவத்தைத் தாரண விதியோடு விளக்கிக் கூறுகின்றன. பிருகஜ்ஜாபாலமோ பிரமவித்தையின் அங்கமாகிய திருநீற்றை வேத விதிப்படி உண்டாக்கும் முறையையுங் கூறுகிறது. வைதிகர்களின் ஆசாரத்தில் விபூதி தாரண சம்பிரதாயம் இதன் வழியே நீண்ட காலமாயுண்டு. இவ்வுபநிடதத்தில் திருநீறு தரித்தல் எல்லாக் கன்மங்களுக்கும் முக்கியாங்கமாகவும், ஞானாங்கமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நூற்றெட்டு உபநிடதங்களின் சாரமாய் விளங்கும் தசோபநிடதங்களில் ஆதியந்தங்களிலுள்ள ஈசாவாஸ்ய பிருஹதாரண்ய உபநிடதங்களிலும், தைத்திரீய உபநிடதத்திலும் இந்தத் திருநீற்றின் பிரபாவம் பிரகாசப்படுத்தப்பட்டிருக்கிறது. இவையுமல்லாமல் காமிக முதல் வாதுளாந்தமாயுள்ள இருபத்தெட்டு சிவாகமங்களினும் அவற்றின் பிரிவுகளாகிய உபாகமங்களினும், பராசர, கௌதம, மநுவாதி ஸ்மிருதிகளினும், சைவம், கூர்மம், இலிங்கம், ஸ்காந்தம் முதலிய புராணங்களினும் பாரதம், இராமாயணம், சிவரஹஸ்ய மென்னும் இதிகாசங்களினும் இத்திருநீற்றின் பெருமை விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் பரமாசாரிய மூர்த்திகளுள் ஒருவராகிய அம்பிகையின் அருட்பாலையுண்டருளிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச் செய்த தமிழ் வேதத்திலே “திருநீற்றுப்பதிகம்” ஒன்றோதி, அற்புதச் செய்கை செய்து அதன் மகிமையைப் புறச்சமயிகளும் உணரும்படி விளக்கிக் காட்டியுள்ளார். வேதோக்தமாயும், சிவசின்னமாயும் விளங்கும் திருநீற்றைப் பொதுவாகவும் சிறப்பாகவும் எடுத்துப் பேசும் முதல் நூல்களும் வழி நூல்களும் அளவுக்கடங்காதலால் இதுவே வைதிகமென்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிலுணரக் கிடக்கிறது. இதை வேறு வழிநூல்கள் ஒப்பினும் ஒப்பாவிடினும் யாதுங் குறைவில்லை. திருநீறு வைதிகமென்பது மால், அயன் முதலிய பெரிய தேவர்களாலும் மறுக்கப்படாத பரம சித்தாந்தமாம்.

விபூதி தாரண வகை.
விபூதியை உத்தூளணமாகவும் திரிபுண்டரமாகவும் தரிக்க வேண்டும். உத்தூளணமாவது-பரவப்பூசுதல். திரிபுண்டரமாவது-மூன்று குறியாகத் தரித்தல், (திரி-மூன்று, புண்டரம்-குறி) திரிபுண்டரமாகத் தரிக்கத் தக்க ஸ்தானங்கள் சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், இரு முழந்தாள்கள், இரு புயங்கள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இரு விலாப்புறம், முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம். இவற்றுள் விலாப்புறம் இரண்டையும் நீக்கி செவிகளிரண்டையும் கொள்வதுமுண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு ஸ்தானங்களையே கொள்வதுமுண்டு. திரிபுண்டரந் தரிக்குமிடத்து நெற்றியில் இரண்டு கடைப்புருவவெல்லை வரையும் தரிக்க வேண்டும். மார்பிலும், புயங்களிலும் ஆறங்குல நீளந் தரித்தல் வேண்டும். மற்றைய ஸ்தானங்களில் ஒவ்வோரங்குல நீளந்தரித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் ஒன்றையொன்று தீண்டலாகாது. மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாயிருக்க வேண்டும். சிவதீக்ஷை பெற்ற ஒவ்வொருவரும் காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலங்களில் மாத்திரம் ஜலத்துடன் கூட்டித்தரிக்க வேண்டும். மற்ற காலங்களில் ஜலம் சேர்க்காது உத்தூளணமாகத் தரிக்க வேண்டும்.

சிவதீக்ஷையில்லாத ஆடவர், பெண்களும், வைதிக சந்நியாசிகளும், பிரமசாரிகளும், வானப்பிரஸ்தர்களும், கன்னிகைகளும் உச்சி காலத்துக்கு முன்னே ஜலங்கூட்டித் தரிக்கலாம். பின் ஜலங்கூட்டாமலே உத்தூளணமாகவே தரிக்க வேண்டும். கருநிற விபூதி நோயையுண்டாக்குதலாலும், செந்நிற விபூதி கீர்த்தியைப் போக்குதலாலும், புகைநிற விபூதி ஆயுளைக் குறைப்பதாலும், பொன்னிற விபூதி சம்பத்தைக் கெடுத்தலாலும் இவ்வகையான விபூதிகளை ஒருபோதுந் தரிக்கலாகாது. சகல ஐசுவரியங்களையுந்தரும் வெண்ணிற விபூதியே தரிக்கற்பாலது. மேலும் சிவதீக்ஷையில்லாதவர் கொடுத்த விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், ஒரு கையால் வாங்கிய விபூதியும், மதுமாம்ஸ பட்சணிகள் தரும் விபூதியும் எந்தக் காலத்திலும் தரிக்கலாகாது. விபூதியைப் பட்டுப்பையிலாவது சம்புடத்திலாவது வைத்துக் கொள்ள வேண்டும். விபூதியை வடக்கு முகமாவது கிழக்கு முகமாவது இருந்து கொண்டு வலக்கையின் நடுவிரல் மூன்றினால் தரிக்க வேண்டும். ஒரு விரலாலேனும் ஒருகையாலேனும் தரிக்கலாகாது. நெற்றியில் தரிக்கிறபோது பூமியிலே சிந்தாவண்ணம் சிரசைச் சிறிதுமேல் நோக்கிச் சிவபெருமானையும் ஆசாரியரையுஞ் சிந்தித்து, “சிவசிவ” என்று உச்சரித்துக் கொண்டே தரிக்க வேண்டும். எப்பொழுதும் தலையை அசைத்துக் கொண்டாவது, கவிழ்ந்து கொண்டாவது, அண்ணாந்து கொண்டாவது, வாயங்காந்து கொண்டாவது தரிக்கலாகாது. ஒருக்கால் விபூதி பூமியிலே சிந்தினால் சிந்திய விபூதியை எடுத்துவிட்டு அந்த இடத்தைச் சுத்தி செய்யவேண்டும். முக்கியமாய் நித்திரை செய்யப் போகும்போதும், நித்திரைவிட்டெழுந்த போதும், மலஜல விசர்க்கஞ்செய்து சௌசஞ் செய்தபின்னும், தந்தசுத்தி செய்தபின்னும், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமிக்கும்போதும், ஸ்நானஞ் செய்தவுடனும், போஜனத்துக்குப் போகும்போதும், போஜனஞ் செய்தபின்னும் விபூதியைத் தரிக்கவேண்டும். ஆசாரியராவது சிவனடியாராவது விபூதி தந்தால் அவர்களை நமஸ்கரித்து இரண்டு கைகளையும் நீட்டி வாங்கி, பக்தியோடுந் தரித்துக்கொண்டு பின்னும் அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். சுவாமிக்கு முன்னாவது குருவுக்கு முன்னாவது, சிவனடியார்களுக்கு முன்னாவது, விபூதி தரிக்க நேர்ந்தால் முகத்தைச் சிறிது திருப்பிக்கொண்டு தரிக்க வேண்டும். விபூதியணிந்தே வெளியே புறப்பட வேண்டும்.
விபூதி உடம்பில் அணியப்படும் ஒரு பொருளாக இருப்பதுமன்றி மருந்தாகவும் உட்கொள்ளும் மேன்மையுடையது. அதை விசுவாசத்தோடும், சிவபெருமானைச் சிந்தித்தும் உட்கொள்ளின் தீராத எப்பிணியுந் தீரும். ஆகையினாலன்றோ ஆயர்வேதமும் திருநீற்றைப் பூசு மருந்தாகவும், புசிக்கும் மருந்தாகவும் வியந்து கூறிற்று. சங்கரஸம்ஹிதையும் விபூதியை யுண்ணுவதால் எல்லாப் பாபங்களும் தொலைவதோடு ஸர்வதீவினைக்கும் மூலமான ஆணவமலமும் அற்றுப்போமென முழக்கியது.
விபூதி நித்தியப் பொருள்.

விபூதியானது குருபஸ்மா, லகுபஸ்மா என இருவகைப்படும். இவற்றுள் குருபஸ்மா சிவபெருமானேயாம். லகுபஸ்மா அவரது அருட்டிரு மேனியிற் பூத்த திருநீறேயாம். திருப்போரூர், சிதம்பரசுவாமிகளும் “ஆதிபகவன் ஞானவடிவழலிற் பூத்து நித்தியமாய்” என்று அருளிச் செய்தார். “நீறுபூத்த மேனியனே” என்று புகழ்ந்தது தமிழ்வேதம். “நீறுபூத்த நெருப்பு” என்பது உலகவழக்கு. சிவபெருமான் அக்கினி வடிவினரும், அக்கினிக் கண்ணரும், அக்கினிதாரணரும், அக்கினிபூதேசருமாகலின் அக்கினியென அவரை வேதங்கள் முழங்காநிற்கும். அன்றியும் அவரது இளைய குமாரராகிய சுப்பிரமணியசுவாமியை “அக்கினிபூ” என்று அவ்வேதங்களே துதிக்கும். அக்கினி வடிவினராகிய சிவபெருமான் எவ்வாறு நித்தியவஸ்துவோ அதுபோன்றே அவரது திருமேனியிற் பூத்த திருவெண்ணீறும் என்றும் அழியாது நித்தியப் பொருளாம். இவ்வுலகத்தில் பஸ்மமாகாத வஸ்து ஒன்றுமே கிடையாது. ஸர்வமும் அந்தமதாவது நீறு என்றபடி ஒரு காலத்திலே பஸ்மமாகத்தான் முடியவேண்டும். பஸ்மத்தை எத்தனை முறை புடம் வைத்தாலும் நிறை குறையாது. நிறம் மாறாது. அழியாது. அப்படியேயிருக்கும். அதுவே அப்படியானால் சிவனார் திருமேனியிற் பூத்த நீற்றைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! சுண்ணத்திலிருக்கிறது சூட்சுமம் என்ற வாக்கியத்தின் கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது. சுண்ணம் என்பது நீறு; இவ்வுண்மையை உலகத்துக்குணர்த்தவே சத்தியமாவது நீறு, தத்துவமாவது நீறு என்று திராவிடவேதம் விதந்தோதியது. அன்றியும் கூர்மபுராணமும் “பிரம்மதேவர் சிருஷ்டி செய்கையிலேயே நித்தியமாயுள்ள பஸ்ம மஹாத்மியத்தைக் கூறி அதனையணிந்து கோடற்காகவே நெற்றியைக் குறுக்காகப் படைத்தார். மேனோக்காகவும், வட்டமாகவும் படைத்தாரல்லர். அப்படிச் செய்திருந்தும் மூர்க்கர் சிலர் நெற்றியிலே திரிபுண்டரமணிவதில்லை” என்று சதோபதேசஞ் செய்துள்ளது. மஹாபாரதமும் சாந்தி பர்வத்தில் “தர்மராஜனே! ஆயுள்விருத்தியை அவாவுவோரும், செல்வத்தை இச்சிப்போரும், வீடுபேற்றை விரும்புவோருமான துவிஜர் நாடோறும் பஸ்மதாரணஞ் செய்யவேண்டும்” என்று அறைந்துள்ளது. இக்கருத்தனைத்தையும் நல்லோர்பால் கேட்டுத் தெளிக.

விபூதி இலக்கணம்.
விபூதியாவது யாகாக்கினியினாலாவது, சிவாக்கினியினாலாவது நல்ல இலக்கணமுடைய பசுவின் சாணத்தைக் கொள்ள வேண்டிய முறைப்படி கொண்டு மந்திரங்களாலுருட்டித் தகிப்பித்த திருநீறாம். இது வைதிக விபூதியென்றும், சைவ விபூதியென்றும் இருதிறப்படும். அவற்றுள் வைதிக விபூதியாவது-வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களில் பொடிப்பட்ட நீறாம். இது புத்தியை (போகத்தை) மாத்திரம் அளிக்கும். சைவவிபூதியோ-சிவாகமவிதிப்படி சிவதீக்ஷை செய்யப்பட்ட அக்கினியில் பொடிப்பட்ட நீறாம். இது புத்தி, முத்தியாகிய இரண்டையுந் தரும். இவ்விபூதி கற்பம், அநுகற்பம், உபகற்பம் என மூன்று வகைப்படும்.
கற்பமாவது-ஸ்ரீகயிலாசத்தில் வீற்றிருக்கும் இடப தேவருடன் வாழ்கின்ற நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாய்ச் சிவாக்ஞையால் திருப்பாற் கடலினின்றுந் தோன்றி இவ்வுலகில் பரவிய உத்தமமான பசுக்களில் கன்றீன்று பத்து தினத்துக்கு உடபட்டதும், கன்று பிரசவியாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழத் தன்மையுடையதும், மலடும், கர்ப்பமுள்ளதும், வால், காது, கொம்பு அறுந்ததும் ஆகியவற்றை யொழித்துச் சிறந்து விளங்கும் பசுக்களில், பங்குனி மாதத்தில் பசானம் என்னும் நெல்லின் தாளை மேய்ந்த பசுவின் சாணத்தைத் தாமரை இலையில், அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி ஆகிய திதிகளில் சத்தியோஜாத மந்திரஞ்சொல்லி ஏற்று, மேலிருக்கும் வழும்பை யொழித்து, வாமதேவ மந்திரஞ்சொல்லி, பஞ்சகௌவியம் விட்டு, அகோரமந்திரஞ் சொல்லிப் பிசைந்து, தற்புருடமந்திரஞ் சொல்லிக் கையாலுண்டை செய்து, ஈரமாகவேனும், உலர்ந்தபின்பேனும், ஓமாக்கினியில் சம்பா நெற்பதருடன் வைத்து, ஈசான மந்திரத்தாற் சுட்டெடுத்து, ஒரு கோடி வஸ்திரத்தில் வடிகட்டி, ஒரு புதுப்பாண்டத்தில் நிரப்பி, விபூதி காயத்ரி மந்திரஞ்சொல்லி, பூமியில் வைத்து மலர்சாத்தி, வெள்ளை வஸ்திரத்தால் அப்புதுப்பாண்டத்தின் வாயைக்கட்டிப் பத்திரமாகச் சேமித்து வைத்த விபூதியாம்.

அநுகற்பமாவது-சித்திரை மாதத்தில் காட்டிற் சென்று, அங்கு உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தை எடுத்துத் தூளாக்கி, கோசலம்விட்டு, முன்சொன்ன மந்திரங்களாற் பிசைந்து, உருட்டி, மேலே கற்பவிபூதிக்குக் கூறிய முறைப்படி சிவாக்கினியில் விளைவித்தெடுத்த விபூதியாம்.

உபகற்பமாவது-வானத்தில் காடாக்கினியினாலுண்டாகிய சாம்பலை எடுத்துப் பஞ்சகௌவியம் விட்டு, முன்சொன்ன மந்திரங்களைக் கொண்டு பிசைந்து உருட்டி, சிவாக்கினியில் விளைவித்தெடுத்த விபூதியாம்

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

1 comment: