Tuesday, 1 April 2014

ஐந்து தர்மங்கள் - ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்

ஐந்து தர்மங்கள்

ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்.
நம்முடைய பாரதீய ஸம்ஸ்க்குதியிலே தர்மத்துக்கு மிக பிராமுக்யம் இருக்கிறது. பிரதி ஒரு மனிதனும் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். தர்மத்தை ஆசரணம் செய்யவேண்டும். தர்மத்தின் ஆசரணத்தினால்தான் இந்த உலகம் சுப்ரதிஷ்டிதமா இருக்கும். எங்கே தர்மத்தின் ஆசரணம் இருக்காதோ அங்கே சுபிட்ஷம் இருக்காது என்று நம்முடைய சாஸ்த்ரங்களில் அடிக்கடி ஒரு கோஷம் இருக்கிறது. அந்த தர்மத்தினுடைய மஹிமை எவ்வளவு என்று சொன்னால் நான் இப்போது சொன்னேனே தர்மத்தை எங்கு ஆசரணம் செய்வார்களோ அங்கு சுபிட்ஷமாக இருக்கும் என்று சொன்னேன். மஹாபாரதத்திலே ஒரு ஸந்நிவேசம். பஞ்சபாண்டவர்கள் பாண்டு ராஜனுடைய குமாரர்கள். அவர்களில் மூத்தவர் தர்மராஜர் என்பவர். அவர் மிகவும் தர்மிஷ்டரானவர். ஒரு ஸந்நிவேசத்திலே அந்தப் பஞ்சபாண்டவர்கள் தர்மத்துக்கு கட்டுப்பட்டு பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் அதாவது காட்டிலேயே வாசம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதற்குப்பின் ஒரு வருஷம் அக்ஞாதவாசம். யாருக்கும் தெரியாமல் ஒரு வருஷம் காலம் கழிக்கணும் என்கிற ஒரு நியமம் ஏற்பட்டது. இந்த நியமம் துரியோதனனுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும். அதிலேயும் அந்த நியமம் எப்படி என்று கேட்டால் அந்த ஒரு வருஷ அக்ஞாதவாசம் காலத்திலே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று துரியோதனன் ஏதாவது கண்டு பிடித்தால் திரும்ப பன்னிரண்டு வருஷம் வனவாசம், ஒரு வருஷம் அக்ஞாதவாசம் என்பது. ரொம்பக் கொடூரமான நியமம்.

ஆனால் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அந்தப் பஞ்சபாண்டவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். பன்னிரண்டு வருஷங்கள் காலம் வனவாசம் முடிந்துவிட்டது. அந்த அக்ஞாத வாசத்தின் ஒரு வருஷம் ஆரம்பித்துவிட்டது. அந்தச் சமயத்திலே துரியோதனனுக்கு ஒரு துர்புத்தி உண்டாகிவிட்டது. இந்த ஒரு வருஷத்துக்குள்ளேயே நான் அவர்களைக் கண்டு பிடித்தால் இன்னும் 13 வருஷம் நான் சௌக்கியமாக இருக்கலாமே என்று. அதற்காக துரியோதனன் பீஷ்மரிடம் கேட்டான் “பஞ்சபாண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் சொல்லுங்கள்.” என்று. அப்போது பீஷ்மர் சொன்னார், “இங்கு பார்! அவர்கள் இந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அக்ஞாதவாசத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். எந்த தேசத்திலே எந்த ராஜ்யம் சுபிட்ஷமாக இருக்கிறதோ அங்கே அவர்கள் இருக்கிறார்கள் என்பது தீர்மானம். தர்மராஜன் கால் வைத்த இடம் சுபிட்ஷமாக இருக்கும். அவன் சாக்ஷாத்மூர்த்தியான தர்மம். இதுதான் அடையாளம். இவ்வளவுதான் சொல்வேன். இதைவிட ஜாஸ்தி சொல்வதற்குத் தெரியாது” என்றார்.
பின்பு அப்பேர்ப்பட்ட சுபிட்ஷமான தேசம் எது என்பதை ரொம்ப ஆராய்ச்சி செய்யும் போது விராடராஜனுடைய தேசம் சுபிட்ஷமாக இருக்கிறது என்பது தெரிந்தது. பின்பு அங்கு பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள், அவர்களைக் கண்டு பிடிக்கலாம் என்று துரியோதனன் முயற்சி செய்தான். ஆனால் அவன் கண்டு பிடிப்பதற்குள் அந்த ஒரு வருஷம் முடிந்து விட்டது வேறு விஷயம். எதற்காகச் சொல்கிறேன், தர்மிஷ்டனானவன் எந்த இடத்தில் இருப்பானோ அந்த தேசம் சுபிட்ஷமாக இருக்கும் என்கிறபோது தர்மத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட தர்மம் நாம் எல்லாரும் அவசியம் ஆசரணம் செய்ய வேண்டியது. ஆனால் தர்மத்தை ஆசரணம் செய்யும்போது நாம் என்ன செய்யவேண்டும் என்கிற ஒரு கேள்வி எல்லாருக்கும் வரும்.

சும்மா தர்மம் பண்ணனும் என்கிற வார்த்தையைச் சொல்லி முடித்து விடுகிறீர்கள். அப்படி என்றால் என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று சாதாரண மனிதர்கள்-சாஸ்திரத்தைப் பற்றி விசேஷ அறிவு இல்லாத வர்கள்-கேட்பார்கள். அதற்கும் சாஸ்திரம் ஜவாப் சொல்லியிருக்கிறது. உன்னுடைய ஜீவிதத்திலே சில நியமங்களை வைத்துக்கொண்டால், இந்த நியமங்களுக்கு அனுஸார மாகத்தான் என்னுடைய வாழ்க்கையை நான் நடத்துவேன் என்று நீ இருந்தால், நீ தார்மீகன். என்ன நியமங்கள் என்று சொன்னால் சாஸ்த்ரம் விளக்கம் சொல்கிறது.

அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், சௌசம்,
இந்த்ரிய நிக்ரஹ ஏதம் சாமாதிகம் தர்மம்
சாதுர்வர்ணே பிரதிர் மனு.

முதல் முதலில் அஹிம்ஸா என்று சொன்னால், நான் யாருக்கும் தொந்தரவு செய்யமாட்டேன் என்கிற ஒரு நியமத்தை வைத்துக் கொள்வது தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொன்னால் இன்னொரு வனை அடிக்கக்கூடாது என்பது மட்டும் அல்ல. இன்னொருவனுடைய மனசுகும் தொந்தரவு செய்யக்கூடாது. நாம் பாபங்களை அநேகவித மாகச் செய்வோம். இன்னொருவனுடைய மனசுக்கு நோவு உண்டாகும்படி பேசினால் அதுவே ஒரு பாபம். அவனை அடிக்கணும் என்று ஒன்றும் இல்லை. அவன் மனசுக்கு நோவு உண்டாகும்படி பேசினாலே அதுவே ஒரு பெரிய பாபம் ஆகிவிடுகிறது. அதையும் நாம் செய்யக்கூடாது. அதுவும் ஒருவிதமான ஹிம்ஸை ஆகும். நாம் எப்படி இருந்தால் நம்மால் இன்னொருவனுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதோ அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். இந்த மாதிரி வாழ்க்கையை நடத்துவது சிரமம் என்று சிலருக்குத் தோன்றும். ஆனால் அதை அனுபவத்துக்குக் கொண்டுவந்துவிட்டால் ஒரு சிரமமும் இருக்காது. நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டு அனாவசியமாக எந்தவித மான இன்னொருவனுடைய வம்புக்கும் நாம் போகாவிட்டால் அதுவே பெரிய விஷயம்தான். நமக்கு அது இப்போது அப்யாசத்தில் இல்லாததனால் இது ரொம்பக் கஷ்டம் என்று தோன்றும்.

அதனால் முதல் ஸூத்ரம் அஹிம்ஸா. யாருக்கும் தொந்தரவு செய்யக்கூடாது என்பது, முதல் தர்மம். அதே போல் இரண்டாவது தர்மத்தைப் பற்றி சொன்னா சத்யம் என்பது. சத்யம் என்றால் உண்மை சொல்வது என்று அர்த்தம். எந்த விஷயத்தை எப்படி வாஸ்த வமாக நாம் தெரிந்து கொண்டு இருக்கிறோமோ அப்படியே சொல்வதுதான் சத்யம். நமக்கு அந்த விஷயம் தெரிந்தது ஒரு மாதிரி உள்ளது நமக்குத் தெரியும். ஆனால் அதை மட்டும் நாம் சொல்வதில்லை. நாம் அதை வேறு விதமாகச் சொல்லுவோம். அது ஒரு விளையாட்டுக்குச் சொல்லுவோம் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அது எவ்வளவு பாபத்தைக் கொடுக்கும் என்பதை நாம் யோசிக்க மாட்டோம். அதாவது புதிதாக ஓர் ஆள் வந்திருக்கிறார். அவர் ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. அந்த ஊருக்கு எப்படி போகணும் என்று கேட்பார். அதற்கு இப்படி கிழக்கு பக்கம் போக வேண்டியிருக்கும். நாம் விளையாட்டுக்கு இப்படி நீங்கள் நேராகப் போங்கள் என்று சொல்லுவோம். நமக்கு என்னவோ அது ரொம்ப விளையாட்டாகத்தான் தோன்றும். ஆனால் அந்த மனுஷர் அப்படி மேற்கு பக்கம் திரும்பிப் போனால் அவன் விரும்பிய இடத்தில் போய்ச் சேரமுடியுமா? அங்கே அப்படியே போய்க் கொண்டு இருந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த அந்த சமயத்திலே நம்மைப் பற்றி என்ன நினைப் பான்? நமக்கு அதெல்லாம் யோசனை இருக்காது. கடைசியில் என்னப்பா இப்படி சொன்னாயே?” என்று கேட்டால் “தமாஷ§க்கு சொன்னேன் ஸார்” என்பான். “உன்னுடைய தமாஷு நமக்கு இவ்வளவு ப்ராண ஸங்கடத் துக்கு வந்துவிட்டதே!” அப்படி என்பதை யோசிப்பதில்லை. இது ஓர் உதாரணத்துக்குச் சொன்னது. இந்த மாதிரி எவ்வளவோ சந்தர்ப் பங்கள் நாம் அசத்யத்தைச் சொல்லி கேவலம் பாபத்தைச் சம்பாதிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அந்த சந்தர்ப்பங்கள் நமக்கு வரக்கூடாது. அசத்யம் அதாவது பொய் வார்த்தையை நாம் சொல்லக் கூடாது. இந்த ஒரு நியமத்தை வைத்துக் கொள்ளவேண்டும். நாம் என்றைக்கும் சத்யத்தைச் சொல்லுவோம் என்ற ஒரு நியமத்தில் இருக்க வேண்டும். இது இரண்டாவது தர்மம்.

சாதாரணமாக நாம் தர்மத்தை அனுஷ்டிப்பது எப்படி என்ற கேள்விக்கு ஜவாப்.

மூன்றாவது தர்மமாகச் சொன்னார்கள் அஸ்தேயம். அஸ்தேயம் என்று சொன்னால் இன்னொருவனுடைய பொருளை அபகரிக்கக் கூடாது என்று அர்த்தம். நமக்கு நியாயமாக இன்னொருத்தனிடமிருந்து வரவேண்டி இருந் தால் அதை நாம் விரும்பினால் தவறில்லை. நாம் அநியாயமாக இன்னொருத்தனுடைய வஸ்துவை நம்முடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுதான் மிகவும் பாபமாகும்.

அந்த ஓர் அஸ்தேயம் என்று சொன்னால் இன்னொருத்தனுடைய சொத்துக்கு ஆசைப்படாமல் இருக்கிறது என்பது. அது ஒன்று நமக்கு இருந்தால் நாம் எவ்வளவோ புண்யசாலிகள் ஆகமுடியும். அது ஒன்று இல்லை என்று சொன்னால் எவ்வளவோ பாபங்களை நாம் செய்யக்கூடிய சந்தரப்பங்கள் உண்டாகும். அப்பேர்ப்பட்ட ஒரு விவேகம் இல்லாமல் கேவலம் ஓர் அத்யாசையினாலே இன்னொருத்தனு டைய பதார்த்தத்தை அபகரிக்க முயற்சி செய்து எவ்வளவோ கஷ்டங்களில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அநேகம் பேருக்கு வரும் என்பதை நாம் புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. இராமாயணத்தில் அவ்வளவு பெரிய பலசாலியாய் இருந்த இராவணன் கூட கேவலம் பகவான் ஸ்ரீஇராமச்சந்திரனுடைய தர்மபத்னியான அந்தச் சீதாதேவியை விரும்பி அவளை அபகரித்துப் போனதனால் அவனுக்கு ஸர்வநாசம் ஆனதை நாம் இராமாயணத்தி லிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். “இராவணன் செய்த தவறு என்ன?” என்று ஒருவன் கேட்டான். “இதைவிடப் பெரிய அபராதம் உலகத்திலே ஏதாவது உண்டாப்பா? இன்னொரு ஸ்த்ரீயை நாம் நம்முடைய தாயார் மாதிரி பார்க்கணும் என்று நம்முடைய சாஸ்த்திரம் சொல்கிறது.

“மாத்ருவத்பரதாரேஷி பரத்ரவ்ய்யேஷி
லோஷ்டவது ஆத்மவத் ஸர்வ பூதேஷி
எப்பஸ்யதி ஸபஸ்யதி”

பரஸ்த்ரீயாய் இருந்தால் அவள் விஷயத் திலே தாயார் மாதிரி பாவிக்கணும். நம்முடைய தாயார் விஷயத்திலே எப்பேர்ப்பட்ட ஸ்வப்னத் திலேயும் நமக்கு தப்பான எண்ணம் வராதோ அதே போல் பரஸ்த்ரீ விஷயத்திலே தப்பான எண்ணம் வரக்கூடாது என்று அதற்கு அர்த்தம். இதற்கு மாறாக ஏதாவது நடந்து கொண்டால் இனி அதைவிட மஹா பாபம் என்ன இருக்கும்? அப்பேர்ப்பட்ட பாபத்தை இராவணன் செய்தான். அதற்குப் பலனாக சர்வ நாசத்தை அனுபவித்தான். அவனு டைய சைன்யம், அவனுடைய சொத்து சர்வஸ்தமும் நாசமாகிவிட்டது. கேவலம் அந்த ஒரே ஒரு பாபத்தின் பலனே அப்படி இருக்கும்போது இன்னொருத்தனுடைய சொத்துக்காக நாம் ஆசைப்பட்டு செய்யக் கூடிய அநியாயங்கள் நமக்குக் கடைசியில் கேவலம் விபரீத பலனைத்தான் கொடுக் கும். அதனாலே நாம் அப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்கிற ஒரு நியமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாம் எப்படி பிழைக்கணும் என்று சிலர் கேட்பார்கள். “நியாயோ பார்ச்சித வித்தேன கர்தவ்யம் க்யாத்ம ரக்ஷணம்” நியாயமான மார்க்கத்தில் நமக்கு எது கிடைத்தாலும் அது நம்முடைய மஹாபாக் கியம் என்று நினைக்கவேண்டும். நாம் அநியாயமாக சம்பாதித்து கோடீஸ்வரன் ஆனாலும் அது நமக்கு யோக்கியமான நியாயமான மார்க்கத்திலே நாம் சாதாரண மான வாழ்க்கையை நடத்தினாலும் அதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை என்று சொல்லப்படும். அதற்காக “அஸ்தேயம்” இன்னொருத்தனுடைய சொத்துக்காக ஆசைப்படாமல் இருப்பது என்பது ஒரு தர்மம். இந்தத் தர்மத்தை எல்லாரும் அனுசரிக் கணும் என்று சொன்னார்கள்.
அதேபால் “சௌசம்.” சௌசம் என்றால் பவித்ரமாக இருக்கவேண்டும். பவித்ரமாக என்று சொன்னால் உடல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. மனமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். “சௌசன்சத் த்ரவிதம் ப்ரோக்தம் பாஹ்ய மாப் யந்த்ரந்ததா ம்ருச்சலாப்யாம் க்ருதம் பாஹ்யம் பாவசச்சித்தாந்தரம் சௌசம்” என்றால் அது இரண்டு விதம் பாஹ்ய சௌசம், அப்யந்த்ர சௌசம். பாஹ்ய சௌசம் என்று சொன்னால் உடலைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வது. மனத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்வது ஆப்யந்த்ர சௌசம். மனத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வது என்று சொன்னால் மனத்தில் எந்தவிதமான கல்மிஷம் இல்லாமல் பரிசுத்தமான மனத்துடன் இருப்பது என்று அர்த்தம்.
பின்பு கடைசியில் “இந்த்ரிய நிக்ரஹ” என்று சொன்னார். “இந்த்ரிய நிக்ரஹம்” என்று சொன்னால் நமக்கு எதைப் பார்த்தாலும் வேணும் வேணும் என்று தோன்றிக் கொண்டிருக்கும். தோன்றாமல் இருந்தால் அதுதான் இந்த்ரிய நிக்ரஹம். அப்படி புதிதாக ஒரு வஸ்து வந்தால் அது எனக்கு வேண்டும். ஒரு நல்ல த்ருசம் இருந்தால் அதை நான் பார்க்க வேண்டும். அங்கே ஏதோ நல்ல சப்தங்கள் இருந்தால் அதை நான் கேட்க வேண்டும். இந்த மாதிரி நம்முடைய ஒவ்வோர் இந்த்ரியமும் ஒவ்வொரு விஷயத்துக்கு மாட்டிக் கொண்டு இருக்கிறது. இனி அதற்காக நாம் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்த “இந்த்ரிய நிக்ரஹம்” என்பது இருந்து விட்டால்-எனக்கு இந்த சபலம் இருக்கக்கூடாது என்பது ஒன்று இருந்துவிட்டால்-நாம் சுகமாக இருக்கலாம்.

இந்த ஐந்து தர்மங்களை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டும் என்று சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. நாம் தார்மீகர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த ஐந்து தர்மங்கள் நமக்கு, மிகவும் அவசியமாகும். யாருக்கும் உபத்ரவம் செய்யமாட்டேன். என்றைக்கும் பொய் சொல்ல மாட்டேன். என்றைக்கும் இன்னொருத் தனுடைய சொத்துக்கு ஆசைப்படமாட்டேன். நான் பரிசுத்தமாக இருப்பேன். என் இந்த்ரியங் களை என் வசத்தில் வைத்துக் கொள்ளுவேன் என்ற, ப்ரதிக்ஞையை எவன் செய்வானோ, இப்பேர்ப்பட்ட பவித்ரமான வாழ்க்கையை எவன் நடத்துவானோ அவன் தான் தார்மீகன். அவன் பரிசுத்தமான மனிதன் என்று சொல்லப் படுவான். ஆனால் இதை நடத்தவேண்டும் என்று சொன்னால் நமக்கு பகவானுடைய அருள் மிகவும் தேவை. நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் நமக்கு பகவானுடைய அருள் மிகவும் தேவை. நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அந்தக் காரியத்திலே பகவானு டைய அருள் இல்லாவிட்டால் நமக்கு வெற்றி கிடைக்காது. நாம் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் நாம் எவ்வளவு சமர்த்தர்கள், கெட்டிக்காரர்கள் என்று நினைத்தாலும் நம்மை எல்லாரையும் விட உத்க்ருஷ்டமான சக்தி அந்த பகவான் ஸர்வேஸ்வரன். அவருடைய க்ருபை நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறது.

இதை வைத்துதான் முன்னோர்கள் ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். மனிதனுடைய வாழ்க்கை ஒரு வண்டி, ஒரு ரதம் மாதிரி என்று. எப்படி ரதத்திற்கு இரண்டு பக்கங்களில் இரண்டு சக்கரங்கள் இருக்குமோ அந்த இரண்டு சக்கரங் களும் என்னவென்றால் ஒன்று மனிதனுடைய முயற்சி ஒன்று பகவானுடைய அருள். இந்த இரண்டு சக்கரங்களும் சரியானபடியாக முன்னுக்குப் போனால்தான் வாழ்க்கை நன்றாக அமையும். ஆகையால் அதற்காக நாம் நம்மு டைய ஒவ்வொரு காரியத்திலும் ஈஸ்வரனுடைய அருளைப் பெறவேண்டும். அதற்காக நாம் பகவானை அனன்யமான மனத்துடன் சேவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். ஸ்மரிக்க வேண்டும். நாம் எப்பேர்ப்பட்ட பரிஸ்சிதி யிலும் ஈஸ்வரனை மட்டும் மறக்கக் கூடாது. நமக்கு ஒரு ஸ்வபாம். நாம் ரொம்ப சுகமாக இருக்கும்போது பகவானுடைய நினைவே வராது. கொஞ்சம் கஷ்டம் வந்தால் அப்போது தான் பகவானுடைய நினைவு வரும். ஆனால் எப்போதும் அந்த ஈஸ்வரனுடைய நினைவு நமக்கு ரொம்ப அவசியம். அதனால் அப்பேர்ப்பட்ட அந்தத் தார்மீகமான வாழ்க்கை நாம் நடத்த வேண்டியிருந்தால் அந்த ஈஸ்வரனுடைய அருள் மிகவும் தேவை. அதற்காக நாம் ஈஸ்வரனை அனன்யமான மனத்தோடு “பகவானே! இந்தத் தார்மீக வாழ்க்கையை நடத்துவதற்கு எனக்கு ப்ரேரணையும் சக்தியையும் கொடு” என்று நாம் ஈஸ்வரனை ப்ரார்த்திப்போம். நாம் பவித்ரமான மனத்தோடு செய்த ப்ரார்த்தனையை ஈஸ்வரன் அங்கீகரித்து நமக்கு அப்பேர்ப்பட்ட அனுக்ரஹத்தைச் செய்தால் அதைவிட இந்த ஜீவிதத்தில் நாம் அடையவேண்டியது வேறெதுவும் இருக்காது. ஒவ்வொருவனுக்கும் அப்பேர்ப்பட்ட பவித்ரமான புத்தியை பகவான் தரட்டும் என்று நான் பகவானை ப்ரார்த்திக்கிறேன்.

கொகுப்பு: சாரதா ரமணன்.

No comments:

Post a Comment