.
ப்ரபஞ்சத்திலே எல்லாப் பதார்த்தங்களுக்கும் ஒரு சாதாரணமான ஸ்வபாவம் உண்டு. என்ன ஸ்வபாவம் என்று கேட்டால் நாள் ஆக ஆக அந்தப் பதார்த்தத்தின் சக்தி குறைந்து கொண்டேயிருக்கும் அந்தப் பதார்த்தம் க்ஷீணமாகிக் கொண்டேயிருக்கும். இந்த ஸ்வபாவத்துக்கு விருத்தமான ஒரு பதார்த்தம் இருக்கிறது. அது என்ன பதார்த்தம் என்று கேட்டால் ஆசை என்கிற பதார்த்தம். பகவத்பாத சங்கரர் சொல்லியிருக்கிறார் எல்லாருக்கும் தெரிந்ததுதான்
“அங்கம்கலிதம் பலிதம் முண்டம் தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபிந முஞ்சத்யாசா பிண்டம்”
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபிந முஞ்சத்யாசா பிண்டம்”
வயதாகிவிட்டது, பல் எல்லாம் விழுந்து விட்டது, தலையெல்லாம் நரைத்து விட்டது, கைக்கு கம்பு வந்தாயிற்று, இவ்வளவு இருந்தாலும் மனதில் ஆசை ஏதாவது குறைந்து போயிற்றா என்று கேட்டால் அது மட்டும் ஒன்றும் குறையவில்லை. அது இன்னும் வ்ருத்தி ஆகிக் கொண்டேயிருக்கிறது. வயதான உங்களுக்கு என்ன ஆசை? ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அவர் என்னுடைய பேரனுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று, அதுதான் குறைச்சல். அவருக்கு பிள்ளை பிறந்தாகி விட்டது அந்த பிள்ளைக்கு பிள்ளை பிறந்தாகி விட்டது. அவனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்று இந்த தாத்தாவுக்கு வருத்தம்.
ஆசையினுடைய விஷயம் ரொம்ப விசித்தரமானது. மனிதனுக்கு ஸ்வபாவம் எப்படியிருக்கும் என்று கேட்டால் ஒரு ரூபாய் கையில் இருக்கிறவன் என்ன கேட்பான் பத்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைப்பான். பத்து ரூபாய் கிடைத்தால் போதுமா என்று நான் கேட்டால் நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்பான். நூறு ரூபாய் கிடைத்தால் போதுமா? ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பான். ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பத்தாயிரம் ரூபாய், பிறகு லக்ஷம் வேண்டும் என்று சொல்வானாம்.
லக்ஷம் போதுமா எ ன்றுகேட்டால் இல்லை நான் இந்த நாட்டுக்கே இராஜா ஆகிவிட்டால் சரி இராஜா ஆகிவிட்டது அப்போது போதுமா என்று கேட்டால் குபேரன் என்று சொல்கிறார்களே அந்த குபேரனாக நான் ஆகவேண்டும், ஆகிவிட்டால் அதெல்லாம் சரி அந்த இந்திர பதவி கிடைக்க வில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்பான். இந்திரனான பிறகு கேட்டால் எல்லாம் சரி நான் ஸ்ருஷ்டி கர்த்தா ஆகவில்லையே என்று எனக்கு வருத்தம். இப்படிப் போனால் ஆசையின் எல்லையை யார் பார்த்தார்கள்? யாரும் பார்க்கவில்லை. ஆசைக்கு அளவில்லை. ஆசை என்பது மனுஷ்யனுக்கு ஒரு பெரிய சத்ரு மாதிரி இருக்கிறது. ஆசை என்பது எவ்வளவு பெரியது என்பதற்கு தமாஷாக ஓரிடத்தில் சொன்னார்கள். உலகத்திலேயே பெரிய பதார்த்தம் எது? பர்வதம் (மலை) அதைவிடப் பெரியது எது? சமுத்ரம் (கடல்) கடலைவிடப் பெரியது எது? ஆகாயம். ஆகாயத்தை விடப் பெரியது எது? ப்ரம்மம். அதை விடப் பெரியது எது? ஆசை.
“மஹதீ பர்வத: ததபி
லோகே லம ஹதீ அப்தி:
அப்த்யேதி மஹதீ நப:
நபஸோதி மஹத் ப்ரஹ்மா
ததோத் மஹத்யாசா ||
லோகே லம ஹதீ அப்தி:
அப்த்யேதி மஹதீ நப:
நபஸோதி மஹத் ப்ரஹ்மா
ததோத் மஹத்யாசா ||
இந்த ஒரு ஸ்வபாவத்தில் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதை சாதிப்பதற்காக இந்தப் பிறவியை எடுத்தோமோ அதையே மறந்து விடுகிறோம். எதனாலே? இந்த ஆசை என்கிற ஒரு பெரிய சத்ருவினாலே. நம் மனதிலே வந்து நம்முடைய லக்ஷ்யத்தையே கெடுத்துவிடுகிறது. நம்முடைய லக்ஷ்யமே வேறு. இந்த மானவ ஜன்மம் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்காக நமக்கு வந்தது. மோக்ஷத்தை அடையவேண்டும் என்கிற லக்ஷ்யத்தை சாதிப்பதற்கு இந்த ஆசை என்பது ரொம்ப விரோதமான ஒரு வஸ்து. விருத்தமான வஸ்து.
ஆசை என்றால் என்ன? உலகத்திலே எந்த பதார்த்தத்தைப் பார்த்தாலும் அது தனக்கு வேண்டும் என்கிற இச்சை. எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்கிற புத்தி வராமல் இருப்பது. இது நம்முடைய லக்ஷ்ய சாதனைக்கு ரொம்ப ப்ரதிபந்தகமான விஷயம். நம்முடைய லக்ஷ்யத்தை எப்போது சாதிக்க முடியும் என்று கேட்டால் யார் இந்த சகல விஷயங்களிலிருந்தும் விமுகர்ளா விரக்தர்ளா இருப்பார்களோ யார் கேவலம் பகவத் ப்ரக்ஞயர்களாக இருப்பார்களோ அவர்கள் இந்த லக்ஷ்யத்தை அடைவார்கள். அவர்களுக்கு இந்த ஆசை என்பது அத்யந்த சத்ரூ பூதமானது. அதனால் நம்முடைய லக்ஷ்யத்தையே நாசமாக்கக்கூடிய இந்த ஆசைக்கு நாம் அடிமையாகிவிட்டால் இனி நாம் நம் லக்ஷ்யத்தை சாதிக்கவே முடியாது. ஆகையால் நம் சாஸ்த்ரங்களுடைய உபதேசம் முதலில் மனதிலிருந்து ஆசைகளை வெளியில் தள்ளிவிடு, ஆசையை வெளியில் தள்ளுவது என்பது முடியுமா? அது ரொம்ப முடியாத காரியம் அல்லவா என்று கேட்டால் முடியாத காரியம் என்று சொல்ல முடியாது. முடிகிற காரியம்தான்.
எப்படி என்றால் ஆசை என்பது எப்போது வரும்? அந்த பதார்த்தத்தினால் எனக்கு ஏதாவது சுகம் கிடைக்கும் என்கிற பாவம் இருந்தால் அதில் ஆசை ஏற்படும். ஸ்வாமிகள் ப்ரவசனம் பண்ணுகிறார் என்று சொன்னால் அதை கேட்கணும் என்கிற ஆசை யாருக்கு ஏற்படும்? யாருக்கு இந்தப் ப்ரவசனத்தைக் கேட்டதினாலே தனக்கு உபயோகம் இருக்கும் என்கிற அபிப்ராயம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இதை கேட்கவேண்டும் என்கிற ஆசை ஏற்படும். அந்த அபிப்ராயம் இல்லாதவர்களுக்கு ஆசை ஏற்படுமா? அப்படி எல்லோருக்கும் ஆசை ஏற்படும் என்று சொன்னால் முழு திருநெல்வேலி இந்த கல்யாண மண்டபத்துக்குள் வரவேண்டியிருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை. என்ன காரணம்? அதிலே நமக்கு உபயோகம் இருக்கிறது என்கிறபுத்தி இருந்தால் அதிலே ஆசை உண்டாகி நிறையப்பேர் வருவார்கள்.
சினிமாவுக்குப் பையன்கள் போகிறார்கள். பையன்கள் என்று சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. இப்போது எல்லாருமே போகிறார்கள். எதற்காகப் போகிறார்கள்? என்னமோ அதைப் பார்த்தால் அங்கே போனால் தனக்கு ஏதோ மனதிற்கு சந்தோஷம் உண்டாகும் என்கிற பாவம் வந்து போகிறார்கள். ஒரு ஆசாரமான விப்ரவானை அங்கே போகச் சொல்லுங்கள். நான் நூறு ஜன்மம் எடுத்தாலும் அங்கே போக மாட்டேன் என்பார். ஏன் போக மாட்டீர்கள்? அங்கே போனால் என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை. ப்ரயோஜனம் இல்லாத காரியத்தை யாராவது செய்வார்களா? நான் போக மாட்டேன். அதற்கு நான் லக்ஷம் ரூபாய் கொடுத்தாலும் போக மாட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆசை என்பது ஏற்பட வேண்டுமானால் அந்தப் பதார்த்தத்தினாலே நமக்கு ஒரு உபயோகம் வரும் என்கிற பாவம் மனதிலே உண்டாகும். அந்த பாவம் யாருக்கு இல்லையோ அவன் மனத்தில் ஆசையே உண்டாகாது. அதனாலே பதார்த்தங்களில் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் அதற்கு முதலில் வேண்டியது என்ன? அதனால் எனக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை என்கிற பாவம் வரவேண்டும். அந்த பாவம் எப்படி வரும்?
ஒரு மாம்பழம், அது சாப்பிட்டால் ரொம்ப தித்திக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதிலிருந்து எனக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை என்கிற பாவம் வரட்டும் என்றால் அது எ ப்படி வரும் என்று கேட்கலாம். எனக்கு ப்ரயோஜனம் இல்லை என்று சொல்கிறோம் இல்லையா? அதில் அந்த ப்ரயோஜனம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அதை கவனிக்க வேண்டும். ப்ரயோஜனம் என்று சொன்னால் தற்காலத்திலே நாக்குக்கு ரொம்ப தித்திப்பாக இருக்கும் என்கிறதை நாம் சொல்லவில்லை. எந்த ஆத்யந்திகமான என்றைக்கும் அழியாத சுகத்தை நாம் விரும்புகிறோமோ அது கிடைக்கிறது இல்லை என்று அர்த்தம். நமக்கு என்றைக்கும் அழியாத சுகம் வேண்டும். நமக்கு லௌகீகமான பதார்த்தங்களினால் சுகம் கிடைக்கிறது. எத்தனை நாழிகை இருக்கும். கொஞ்சம் நாழிகைதான். மாம்பழம் சாப்பிட்டவனுக்கு எத்தனை நாழிகை சுகம்? அதை சாப்பிடுகிற நேரத்திலே சுகம். பின்பு என்னவோ வயிற்றிலே கோளாறு வந்துவிட்டது என்றால் அவன் கதி எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் எந்த பதார்த்தத்தை எடுத்துக் கொண்டாலும் ஆரம்பத்திலே சுகம் என்று தோன்றும். கடைசியில் அதுவே துக்கத்துக்கு காரணமாகும்.
பகவான் பாச சுகத்தைப் பற்றி சொல்லுவார்
“விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்த தக்ரே (அ) ம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் ||
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் ||
ஆரம்பத்தில் ரொம்ப அம்ருதம் மாதிரி அநுபவிக்கக் கூடியதாக இருக்கும். பரிணாமத்துக்கு அது விஷமாகும். நாம் விஷயங்களில் ஆசையை வைத்துக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? இந்த விஷயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் நமக்கு சுகத்தைக் கொடுக்கக் கூடியதாக தோன்றும். பரிணாமத்தில் அதனால் நமக்கு சுகம் இல்லை. பகவத்பாத சங்கரர் பகவான் லக்ஷ்மீ ந்ருஸிம்மரை ஸ்தோத்ரம் பண்ணும் சமயத்திலே ஓர் இடத்திலே சொன்னார்
“ஸ்ரக் சந்தனவனிதாதீந்
விஷயான் ஸுகதான் மத்வா
தத்ர விஹரஸே
கந்த பலீஸ த்ருசா தனுதே(அ)மீ
போகா னந்தர துக்கக்ருதஸ் யு: ||
விஷயான் ஸுகதான் மத்வா
தத்ர விஹரஸே
கந்த பலீஸ த்ருசா தனுதே(அ)மீ
போகா னந்தர துக்கக்ருதஸ் யு: ||
அவர் மனதை ஸம்போதனம் பண்ணச் சொல்லுகிறார். “நீ வந்து நல்ல பூமாலை போட்டுக் கொண்டாலோ சந்தனம் பூசிக் கொண்டாலோ, இல்லை ஒரு சுந்தரமான (அழகான) ஸ்திரீயை (பெண்ணைப்) பார்த்தாலோ சுகம் வரும் என்று எதிர் பார்க்கிறாய். கடைசியிலே உனக்கு துக்கம்தான்.” “போகானந்தர துக்க க்ருதஸ்யு:” பெரிய மாலை கொடுப்பார்கள் போட்டுக்கொள்ளும்போது ரொம்ப நன்றாக இருக்கும்; ஐந்து நிமிஷம் ஆன உடன் எப்போது இதை எடுத்து வைப்போம் என்று தோன்றிவிடும். எங்களுக்கு அதை போட்டுக் கொண்டு அப்யாஸம் இல்லாததினாலே அனுபவம் இல்லை. ஆனால் ஜனங்கள் சொல்வதினாலே அந்த விஷயம் தெரிய வருகிறது. யார் எப்பேர்ப்பட்ட பெரிய மாலை கொடுத்தாலும் நாங்கள் போட்டுக் கொள்வதில்லை. கையில் வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டு விடுவோம். அதேபோல் ஒவ்வொரு விஷயமும் கூட ஆரம்பத்தில் நமக்கு சுகம் கொடுக்கக் கூடியதாக இருந்தாலும் கடைசியில் அதிலிருந்து துக்கம்தான் ப்ராப்திக்கும். அதனால் நாம் முதலில் என்ன சொன்னோம். இதிலிருந்து எனக்கு ப்ரயோஜனம் இல்லை என்கிற பாவம் வரவேண்டும் என்று சொன்னோமே, அதில் ப்ரயோஜனம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என்றைக்கும் அழியாத நித்யமான சுகத்தை நான் விரும்புவதால் அந்த சுகம் இந்த எந்த பதார்தத்திலிருந்தும் கிடைக்காது என்கிற பாவம் மனத்திலே வரவேண்டும். அப்போது நமக்கு அதிலே ஆசை வராது. அதனாலே ஆசையை தடுக்கமுடியும். ஆசை வராமல் செய்து கொள்ள வேண்டும் என்பது அசாத்யமான காரியம் என்று யாரும் நினைக்கக் கூடாது. சாத்யம். வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. யாருக்கு வருகிறது? யாருக்கு வேதா அத்யயனம் பண்ணினால் தனக்கு அதிர்ஷடம் கிடைக்கும் என்கிற பாவம் வருகிறதோ அவனுக்கு வேத அத்யயனத்தில் ஆசை வரும். ஸ்கூலில் நன்றாக படிக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு வருகிறது? நன்றாக படித்தால் நான் பாஸாகி விடுவேன். அடுத்த க்ளாஸுக்கு போவேன். அதுதான் தனக்கு வேண்டும் என்கிற அபிப்ராயம் யாருக்கு இருக்கிறதோ அவன் நன்றாக படிப்பான். அந்த அபிப்ராயமே இல்லாதவன் படிக்கவும் மாட்டான். படிப்பதற்கு அவனுக்கு ஆசையும் வராது. எந்த விஷயத்தை நாம் பார்த்தாலும் இந்த க்ரமம்தான். இந்த க்ரமத்திலே வித்யாசமே இல்லை. அதனாலே மனதிலிருந்து ஆசைகளை போக்கடிப்பது என்பது சிரமமில்லை. ஆனால் அதற்கு இது மார்க்கம். இந்த மார்க்கத்திலே நாம் ஆசைகளை போக்கடிக்கலாம். ஆசைகளை விட்டு விட்டால் பின்பு என்ன பண்ண வேண்டும் என்பது ஒரு ப்ரச்னை. ஆசைகளை விட்டு விட்டால் என்ன பண்ணவேண்டும் என்று கேட்டால் நமக்கு வேண்டியது அந்த ஈஸ்வரசாக்ஷாத்காரம் அல்லவா? இனி அதற்காக உட்காரலாம். எது முடிய நாம் இந்த லௌகீகமான பதார்த்தங்களை அபேக்ஷித்துக் கொண்டு இருக்கிறோமோ அது முடிய நமக்கு பகவத் சிந்தனைக்கே அவகாசம் இல்லை. அநேகம் பேர் “ஸ்வாமிகளே ஈஸ்வர பூஜை பண்ணுகிறேன், எல்லாம் பண்ணுகிறேன். ஆனால் மனம் நிற்க மாட்டேன்” என்கிறது. எதற்காக நிற்கமாட்டேன் என்கிறது? அப்போது வாசலில் வருபவனுக்கு ஜவாப் சொல்ல வேண்டுமே, இவனுக்கு ஜவாப் என்ன சொல்லவேண்டும்? எங்கெங்கேயோ ரூபாய் வைத்திருக்கிறேனே அந்த ரூபாய் என்ன ஆகுமோ? ரூபாய் கொடுக்க வேண்டியவன் கொடுப்பானோ என்னவோ? இது தான் நாம் பூஜையிலே உட்கார்ந்து யோசனை பண்ணுவோம். அப்போது மனம் எப்படி இருக்கும்? எப்போது இது எல்லாவற்றையும் விட்டாகிவிட்டதோ அப்போது மனம் எப்படி இருக்கும். எப்போது இது எல்லாவற்றையும் விட்டாகி விட்டதோ அப்போது மனதிலே வேறு எந்த விஷயமும் வருவதில்லை. கேவலம் ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் ஒன்றுதான் மனதிலே இருக்கும். அதனாலே யார் விஷயங்களில் ஆசையை விட்டு விடுவார்களோ அவர்களுக்கு ஈஸ்வரனை த்யானிப்பதற்கோ ஈஸ்வரனை உபாசிப்பதற்கோ மிகவும் சௌகர்யம் ஏற்படும். தாராளமான அவகாசம் ஏற்படும். நாம் எல்லோரும் எல்லா வியவகாரத்தையும் வைத்துக் கொண்டு ஈஸ்வர சாக்ஷாத்காரம் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் என்று எதிர் பார்க்கிறோம். நம்முடைய த்ருஷ்டி அப்படி இருக்கிறது. வ்யவகாரத்துக்கு இடைஞ்சல் வரக்கூடாது. அதெல்லாம் செய்து கொண்டேயிருப்போம். ஆனால் ஈஸ்வர சாக்ஷாத்காரம் வரவேண்டும்.
இந்த வ்யவகாரத்தை எல்லாம் வைத்துக் கொண்டு சரீர போஷணத்தைப் கொள்கிறோம். ஆனாலும் ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்க வேண்டும் என்று எவன் இருப்பானோ அவன் எப்பேர்ப்பட்ட மனுஷ்யன்? ஒரு நதியைத் தாண்டவேண்டும். நதியை தாண்டவேண்டும் என்று சொன்னால் ஒரு தோணி வேண்டும். அங்கே தோணி இல்லை. ஒரு முதலை இருந்தது. அதன் மேலே உட்கார்ந்து விட்டான். இனி இது அக்கரைக்குப் போகும் இல்லையா சுகமாகப் போய்விடலாமே ஆனால் என்ன ஆச்சு, இவனையே டக்குன்னு சாப்பிட்டு விட்டது அது. அதேபோல் லௌகீகமான வ்யவகாரத்திலேயே ஆத்ம சிந்தனை செய்கிறேன், ஆத்ம சாக்ஷாத்காரம் வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு அந்த ஆசை நிஷ்ப்ரயோஜனமான ஆசை. அது என்ன ஆகும் என்று கேட்டால் கேவலம் ஜனங்களை ஏமாற்றிய மாதிரிதான் ஆகுமே தவிர ஆத்மார்த்தம் என்பது ஒன்றும் இருக்காது. பகவான் வந்து நமக்கு கீதையிலேயும், தவிரவும் தேவீ க்ரந்தங்களிலேயும் இந்த மார்க்கத்தை வெகு ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அனுஷ்டிக்க வேண்டியது ஒன்றுதான் நம்முடைய கடமை. சொல்கிற காரியம் எல்லாம் அவன் செய்ய வேண்டியதை செய்தாகி விட்டது. ஆனால் இந்தக் காலத்திலே நமக்கு வந்திருக்கக் கூடிய ஸமஸ்தை என்ன வென்று கேட்டால் நமக்கு சாஸ்த்ரத்திலே சொன்னதை செய்யவேண்டும் என்கிற தீவிரம் மனதிலே இல்லை. ஒரு பெரியவர் நாம் வந்து யாரை குருவாக நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர் சாஸ்த்ர சித்தாந்தத்தைச் சொன்னால் அதை செய்யவேண்டும் என்கிற பாவம் மனதிலே இல்லை. செய்யவேண்டும் என்கிற பாவம் இல்லாவிட்டால் இத்தனை பேர் உபன்யாஸத்துக்கு எதற்கு வருவார்கள் என்று கேட்டால் ஸ்வாமிகள் உபன்யாஸம் எப்படி செய்கிறார்? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு. ஏனெனில் உபன்யாஸம் ஆன பிற்பாடு அநேகம் பேர் சொல்லுவார்கள். ஸ்வாமிகள் ரொம்ப நன்றாக பேசுகிறார்கள் என்று நமக்கு சர்டிபிகேட். நான் அநேகம் பேரிடம் சொன்னேன், நான் நனகு பேசினேன், பேசவில்லை என்கிற சர்டிபிகேட் தேவையில்லை. நான் சொன்ன விஷயத்தை ஏதாவது மனதிலே கொண்டீர்களா? அதில் ஏதாவது அனுஷ்டானம் பண்ண முடியும் என்பதற்கு வந்தீர்களா? அது இருந்தால் சொல்லுங்கள். வெகு சந்தோஷம் ஆகும். நீங்கள் சொன்னது மனதில் ஆகிவிட்டது. அப்படி செய்வதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் பஹுசந்தோஷம். அதை விட்டுவிட்டு ரொம்ப நன்றாக பேசுகிறீர்கள். தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள். எப்படி பேசுகிறேள். இந்தப் பேச்சு எனக்கு தேவையில்லை. அப்படிச் சொன்னால் எனக்கு பிடிக்காது. ஆனால் யாராவது பகவான் கீதையிலே “மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே” என்று சொன்ன மாதிரி இத்தனை பேரில் ஒருவனாவது ஆசார்யாள் சொன்னதை நாம் அனுஷ்டானத்தில் கொண்டு வரவேண்டும் என்கிற அபிப்ராயத்துக்கு வந்தால் நிஜமாக அவன் ஸ்லாக்யமான மனுஷ்யன். அவன் தன்யனான மனுஷ்யன். அதனால் நாம் ஜீவிதத்திலே ஆத்யந்திகமான சுகத்தை அபேக்ஷிக்கிறோம். அது வந்து கேவலம் ஈஸ்வர அனுக்ரஹத்தினாலே ஈஸ்வர சாக்ஷாத்காரத்தினாலேதான் எற்படும். வேறு எதுவும் இல்லை. அப்பேர்ப்பட்ட ஈஸ்வர சாக்ஷாத்காரம் கிடைக்கிறதாக இருந்தால் நாம் ப்ரபஞ்சத்தில் ஆசையை விட்டுவிட்டு ஆத்ம சிந்தனைக்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நாம் எல்லாரும் ப்ரபஞ்சத்தை விட்டுவிட்டு ஆத்ம சிந்தனைக்கு உட்பகாரவேண்டும் என்று சொன்னால் அப்போது எல்லோரையும் கர்தவ்யப்ரஷ்டாளாக (கடமையை செய்யாதவர்களாக) ஆக்குகிறேன் என்று நினைக்கக்கூடாது. கர்தவ்யத்தை (கடமையை) நிர்வகித்து விட்டு பின்பு நம் ஆத்மார்த்தத்துக்கு வேண்டிய வழியை பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் கர்தவ்யத்தை நிர்வஹித்துவிட்டு என்று சொன்னால் திருப்பி தகராறு வருகிறது. எதுமுடிய கர்தவ்யம்? பையனுக்கு கல்யாணம். பேரனுக்கு கல்யாணம். கொள்ளுப் பேரனுக்கு கல்யாணம். இவ்வளவும் கர்தவ்யமாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நியாயமாக இவ்வளவும் நம் கர்தவ்யம் அல்ல. நம் க ர்தவ்யம் நமக்கு புத்ரன், அவனுக்கு கல்யாணம் பண்ணியாகிவிட்டது என்றால் நம் கர்தவ்யம் தீர்ந்தது. ஆனால் நாமாகவே இல்லாத கர்தவ்யங்கள் எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொள்கிறோம். போட்டுக் கொண்டு என்னுடைய கர்தவ்யம் இன்னும் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வாஸ்தவமாக நம்முடைய கர்தவ்யம் முடியத்தான் இருக்கிறது. அதனாலே அந்த கர்தவ்யத்தை செய்தாகி விட்டது என்று சொன்னால் இனி அந்த விஷயத்துக்கு நாம் சிந்தனை செய்யப் போகக் கூடாது. செய்தால் அதற்கு முடிவு இல்லை. நான் முதலிலேயே சொல்லி ஆகிவிட்டது. ஒரு ரூபாய்க்காரன் பத்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்காரன் ஆயிரம் ரூபாய்க்கும் ஆசைப்பட்டுக் கொண்டேயிருப்பான். ஏதோ ஒரு இடத்திலே ஆசை என்பது நிற்க வேண்டாமா? அதற்கு அவதி (முடிவு) என்பது இல்லை.
தங்களுடைய கர்தவ்யத்தை எவ்வளவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்பிறதோ அவ்வளவு செய்துவிட்டு இனி தன்னுடைய ஆத்ம சாக்ஷாத்காரத்துக்கு வேண்டிய வழியை பார்த்துக் கொண்டால் அது ரொம்ப உத்தமமான ஒரு ஸந்நிவேசம். அதற்கு பகவான் எல்லாருக்கும் அனுக்ரஹம் செய்யவேண்டும் அதற்குத் தகுந்த ப்ரேரணையை கொடுக்கவேண்டும். தவிர நாம் வ்யவகாரத்திலேயே அத்யந்த ஈடுபாடு வைத்துக் கொள்ளக்கூடாது. அதிலே என்ன ஆகும். மனதிலே ஈஸ்வர சிந்தனைக்கு அவகாசம் இருக்காது. எவ்வளவுக் கெவ்வளவு வ்யவகாரங்களை ஜாஸ்தி ஆக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஈஸ்வர சிந்தனையிலிருந்து தூரமாகிக் கொண்டே இருக்கும். ஆனால் வியவகாரத்திலே இருக்கும் போது நமக்கு இருக்கிற ராக த்வேஷங்களோ காமக்ரோதங்களோ நம்மை ஜாஸ்தியாக வ்யவகாரத்துக்குள்ளேயே கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறது. ஒருவன் வந்து நமக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் என்று சொன்னால் அதை ரொம்பப் ப்ரமாதமாக்கி விடுகிறோம். ஒருவன் வந்து நம்மை ஒரு சின்ன வார்த்தை பேசிவிட்டான் என்று சொன்னால் அது ரொம்ப ப்ரமாதமாகிறது நமக்கு. கொஞ்சம் தெய்வசம்பத்து நமக்கு இருந்தால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் பகவான் கீதையிலே சொல்கிறார் நாம் எல்லோரும் கீதை படிக்கத்தான் படிக்கிறோம்.
“துவ்ய நிந்தாதுஸ்திர் மௌனீ
ஸந்துஷ்டோ யேனகேனசிதுப ஸ்துதிர்(த்)|
அனிகேத ஸ்திரமதிர் பக்திமான் மே
ப்ரியோ நர: ||”
ஸந்துஷ்டோ யேனகேனசிதுப ஸ்துதிர்(த்)|
அனிகேத ஸ்திரமதிர் பக்திமான் மே
ப்ரியோ நர: ||”
என்கிறார். அவன் திட்டினால் உனக்கு என்ன? அவன் உன்னைப் புகழ்ந்தால் உனக்கு என்ன? அவன் திட்டி விட்டான் என்பதற்காக அவன் மேல் வ்யவகாரத்துக்கும் போக வேண்டாம். அவன் புகழ்ந்தான் என்பதற்காக அவனை ரொம்ப கட்டிக் கொள்ளவும் வேண்டாம். இரண்டும் வேண்டாம். இரண்டுக்கும் மௌனியாக இருங்களேன். இன்றைக்கு நமக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதற்கு நாம் சந்தோஷப் படவேண்டும். இவ்வளவு கிடைக்க வேண்டியது ஆயிற்றே! இவ்வளவு கிடைக்க வில்லையே என்று அதற்காக கொஞ்சமும் நம்முடைய ப்ரயத்தனம் (முயற்சி) பண்ண வேண்டாம். அதனால் ஈஸ்வரனிடமிருந்து தூரமாகிக் கொண்டே இருப்போம். ஈஸ்வரனுக்கு தூரமாகிக் கொண்டு இருக்கலாம் என்றால் திரும்ப ஒருவர் என்ன ஈஸ்வரனுக்கு தூரம்? ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான்தானே நாம் தூரம் எப்படி ஆகி விடுவோம் என்று. அப்படி அர்த்தம் இல்லை. ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அந்த சாக்ஷாத்காரம் நமக்கு கிடைப்பது இல்லையே. நாம் வாயில் சொல்கிறோமே தவிர வாஸ்தவமாக ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்கிற ஸ்திரமான பாவம் இருக்கிறதா? யாருக்கும் இல்லை. ப்ரஹ்லாதனுக்கு இருந்தது. பாகவதத்திலே அந்த பாவம் ப்ரஹ்லாதனுக்கு இருந்தது. அதனாலே ஈஸ்வரன் ஸர்வத்ர இருக்கிறான் என்கிற பாவம் ஸ்திரமாக வேண்டும். அது ஸ்திரமானால் அதுதான் ஈஸ்வர சாக்ஷாத்காரம். ஆனால் வ்யவகாரத்திலேயே போய்க்கொண்டிருந்தால் அந்த பாவம் எப்படி ஸ்திரமாகும்? அதற்காகத்தான் சொல்கிறோம். ஒருவன் நிந்தித்தாலும், ஒருத்தன் புகழ்ந்தாலும் சமமாக இருக்கவேண்டும். மௌனி என்று சொன்னால் எப்போதும் மௌனமாக இருக்கவேண்டும். அதாவது பகவத் விஷயமான பேச்சு தவிர வேறு பேச்சு வேண்டாம் என்று அர்த்தம். மௌனம் என்று சொன்னால் எனக்கு வேண்டாத விஷயம் யாராவது பேச வந்தால் அப்போது எனக்கு மௌனம். எனக்கு வேண்டிய விஷயம் யாராவது பேச வந்தால் அப்போது நன்றாகப் பேசுவேன். இந்த மாதிரி இல்லை. பகவத் விஷயமான அத்யாத்ம விஷயமான பேச்சு இருந்தால் பேசுவோம். அது இல்லையென்றால் மௌனமாக இருப்போம் என்று உபநிஷத்திலேயே சொல்வார்கள்.
என்றைக்கு எனக்கு எது லப்யமாக இருக்குமோ ப்ராப்தமாக இருக்குமோ அன்றைக்கு அது எனக்கு கிடைக்கும். இதைவிட ஜாஸ்தி கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏன் ஸ்ரமப் படவேண்டும்? இவ்வளவுதான் எனக்கு ப்ராப்தம் என்று என் லலாடத்திலே (நெற்றியிலே) இருக்கிறது. அதற்காக நான் வ்யவகாரத்துக்கு போனால் என்ன ஆகும்? மனதில் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். என்ன நிச்சயம்? நமக்கு இருக்க வேண்டிய நிச்சயம் என்ன? இந்த சராசரமான விஸ்வத்துக்கு ஸ்ருஷ்டி கர்த்தாவானவன் பரமாத்மா இருக்கிறான். அவன் தான் நான் ஜன்மாந்தரத்தில் செய்த தர்மா தர்மங்களுக்கு பலத்தைத் தருவான். அவனை நான் என்றைக்கும் மறக்கக் கூடாது. அவனுடைய சாக்ஷாத்காரத்தினாலேதான். என்னுடைய ஜன்மத்துக்கு சார்த்தக்யம். இந்த ஸ்திரமான நிச்சயம் மனதிலே வேண்டும். இப்படி யார் இருப்பானோ அவன் எனக்குப் ப்ரியமானவன் என்று பகவான் சொன்னான். நாம் அந்த மாதிரி ஸ்திதியிலே இருக்க வேண்டும். நமக்கு அந்த ஸ்திதி ஏற்பட வேண்டும். அதற்கு நாம் பகவத் சிந்தனை செய்ய வேண்டும். அத்யாத்ம விஷயமான சாஸ்த்ரங்களைப் படிக்க வேண்டும். அது மட்டுமில்லை. மனமும் அதே மாதிரி பரிபாகத்திலே இருக்க வேண்டும். வேதாந்தத்திலே பெரிய பண்டிதர்கள் பேசுவது எல்லாம் எப்படி? வேதாந்தத்திலே பேச்செல்லாம் வ்யவகாரத்துக்கு சேர்ந்தது. அவ்வளவு வேதாந்தத்திலே பண்டிதன் ஆனவனுக்கு வைராக்யம் வரவேண்டாமா? என்று சொன்னால் ஒருவர் சொன்னார் இங்கு பாருங்கள் பாண்டித்யத்துக்கும், வைராக்யத்துக்கும் சம்பந்தமில்லை.
நிஷ்ணாதோ அபிச வேதாந்தே வைராக்யம் நைதி துர்ஜன: |
சிரம் ஜலநிதௌ மக்னோ மைனாக இ மார்தவம் ||
சிரம் ஜலநிதௌ மக்னோ மைனாக இ மார்தவம் ||
நிறைய புஸ்தகங்களைப் படித்திருக்கலாம். வேதாந்தத்திலே ப்ரவசனம் பண்ணலாம். மனதிலே வைராக்யம் வரவேண்டும் என்கிற உத்தேசம் கிடையாது. அப்படி உண்டா? உண்டு சாதாரணமாக எந்த பதார்த்தத்தையும் ஜலத்திலே போட்டால் அது ரொம்ப ம்ருதுவாகும். இது ஒரு சாமான்ய நியமம். ஆனால் நாம் புராணங்களில் கேட்கிற மாதிரி மைனாக பர்வதம் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஜலத்திலேயே மூழ்கி இருக்கிறது ஆனால் அதிலே கொஞ்சம் கூட மாற்றம் வரவில்லை. மென்மையாகவில்லை. “சிரஞ்ஜல நிதௌ மக்னோமைனாக இவ மார்த்தவம்” என்றார்.
ஆகையால் நாம் வேதாந்த க்ரந்தங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல் நம்முடைய வர்த்தனத்தையும் அந்த மாதிரி ஒரு நிவர்த்தி பரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அப்போது நம்முடைய ஜன்மம் சார்த்தமாகும். நம்முடைய வாழ்க்கை பவித்ரமான வாழ்க்கை ஆகும். இந்த விதமான வாழ்க்கையை நடத்துவதற்கு எல்லோரையும் ஈஸ்வரன் அனுக்ரஹிக்க வேண்டும். ஈஸ்வர பக்தி, குருபக்தி எல்லோருக்கும் மிகவும் அவசியமானது. அந்த இரண்டும் இந்த தெய்வ சாக்ஷாத்காரத்தை நமக்கு அனுக்ரஹம் செய்யக்கூடிய ஒரு நிதி மாதிரி ஆகும். உங்களுக்கு அது விசேஷமாக இருக்கிறது பகவத் அனுக்ரஹத்தினாலே உங்களுடைய குரு பக்தியும், தெய்வ பக்தியும் வ்ருத்தியாகட்டும். உங்களுக்கு இதேவிதமான ஒரு உத்தமமான ஸம்ஸ்காரம் ஏற்பட்டு பகவான் உங்களை அனுக்ரஹிக்கட்டும் என்று அந்த சாரதா சந்த்ரமௌளீஸ்வரரை ப்ரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment