Saturday, 5 April 2014

மங்காத பகழ் கொண்ட மஹான் ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள்


ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் முப்பத்து மூன்றாவது பீடாதிபதியாக சுமார் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகளின் சரித்திரம் கன்னட மொழியில் மிகக் கோர்வையாக ஸ்ரீ ஸ்ரீ கண்ட சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் வெகு காலத்திற்கு முன்பு ஸ்ரீரங்கம் வாணி விலாஸ் அச்சகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஸ்ரீ கண்ட சாஸ்திரிகள் ஸ்ரீ ஆசார்யர்களின் பூர்வாசிரம பந்து.

ஸ்ரீ ஆசார்யர்கள் சிருங்கேரிக்கு வந்த போது அவருடனேயே தானும் சிருங்கேரிக்கு வந்து மடத்தின் கார்யங்களைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீ ஆசார்யர்களின் காலத்தின் போதும் அதற்கப்புறமும் மடத்தின் ஸர்வாதிகாரியாக இருந்துள்ளார். ஆகையால் அவர் எழுதிய அந்த நூல் முழுமையானதாகவும் ஆதார பூர்வமாக எழுதப்பட்டுள்ளதாகவும் இன்று வரை கருதப்படுகிறது.

அந்த ஜகத்குருவை அடுத்துப் பட்டத்திற்கு வந்த ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் சுமார் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தார். (1912 முதல்1954 வரை). அவருடைய முழு சரித்திரம் ஜனனம் முதல் விதேஹ கைவல்யம் அடைந்தது வரை எல்லா விவரங்களும் அடங்கிய ஒரே நூலாக எந்தத் தனி நபராலும் எழுதப்படவில்லை.

முதன் முதலில் ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (பூர்வாசிரமத்தில் திருநெல்வேலி ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்கள்) ஸ்ரீ ஆசார்யர்களின் சரித்திரத்தை மிகச் சுருக்கமாகவும் அத்துடன் தனித்தனி சம்பவங்களாகச் சிலவற்றையும் சிறு சிறு புத்தகங்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். அவற்றுக்கு கன்னட மொழி, தெலுங்கு மொழி அனுவாதங்கள் பின்னால் வெளி வந்தன. அவற்றின் மூலம் மஹாஸ்வாமிகளின் விசேஷ மஹிமைகள் உலகினருக்குத் தெரிய வரத் தொடங்கின. அந்த சமயத்தில் மஹாஸ்வாமிகள் விதேஹ கைவல்யத்தை அடைந்து விட்டிருந்ததால் அவரை நேரில் தரிசனம் செய்திருந்தவர்களிடமும் பலப்பல புதிய செய்திகளைச் சேகரித்து கன்னட மொழி அறிஞர்கள் எழுதி வெளியிடலானார்கள்.

அவர்களில் ப்ரொபஸர் எஸ். கே. ராமச்சந்திர ராவ் அவர்கள் எழுதிய “ஸ்ரீ சாரதா பீடத்தின் மாணிக்கம்”, ஸ்ரீ ஹுருலவாடி ல. ந. சாஸ்திரி எழுதிய “ஸ்ரீ சந்திரசேகர பாரதீ அனுக்ரஹ பரம்பரை” “துங்கையின் மடியில் தபஸ்வீ”, “அவதூத குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ” ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஸ்ரீ ஞானானந்த பாரதீ எழுதி வைத்திருந்த விவரங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் அவற்றைத் தவிர வேறு பல செய்திகளும் உள்ளன. மஹாஸ்வாமிகளின் பூர்வாசிரம மூதாதையர் யார், பள்ளி மாணவப் பருவத்தில் சிருங்கேரியில் அவர் வளர்ந்த போது நடந்தவை, அப்போதே அவரிடம் காணப்பட்ட விசேஷ குணங்கள், இவை போன்ற விவரங்களும், 1924 ஆம் ஆண்டில் முதல் முதலாக சிருங்கேரியிலிருந்து புறப்பட்டு பழைய மைசூர் ஸம்ஸ்தானத்தின் ஊர்களுக்கு அவர் விஜய யாத்திரை செய்த போது நடந்த நிகழ்ச்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

அவர் காலத்தில் ஸ்ரீ மடத்துடன் ஸம்பந்தம் வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆசார்யரின் ஸாமீப்யத்தை அனுபவித்த மஹனீயர்களின் வாய்மொழியாக அவரவர் குடும்பங்களில் இன்றும் பேசப்படும் விவரங்களும் ஆங்காங்கே அந்த கன்னட புஸ்தகங்களில் உள்ளன.

அவற்றை அவ்வப்போது படிக்கக் கேட்டு அனுபவித்த சந்தோஷத்தை இங்கே தந்து எல்லாருடன் பகர்ந்து கொள்ளும் உத்தேசத்துடன் இது இப்போது எழுதப்படுகிறது.


ஸ்ரீ ஆசார்யர்கள் முப்பத்து நான்காவது பீடாதிபதியாக வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தது 1912 ஆம் ஆண்டில். ஆங்கிலம் போதித்தப் பள்ளிக் கூடத்தில் அவர் எட்டாவது வகுப்பு வரைப் படித்துப் பொதுப் பரீட்சையில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசுக்கு உரியவராகத் தேறியிருந்தார். பிறகு, அப்போது ஜகத்குருவாக இருந்த ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ அவர்களின் உத்தரவினால் அவர் மடத்தின் (ஸத்வித்யா ஸஞ்ஜீவினி) பாடசாலையில் மூன்று ஆண்டுகள் வித்யார்த்தியாக இருந்து ஸம்ஸ்க்ருத காவியங்கள், வியாகரணம், தர்க்கம் கற்றுக் கொண்டிருந்தார். தவிர பங்களூரில் மடம் நிறுவி நடத்திக் கொண்டிருந்த கீர்வாண ப்ரௌட வித்யாபிவர்த்தனீ கலாசாலைக்கும் அனுப்பப்பட்டு பூர்வ மீமாம்ஸா சாஸ்திரத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தார். பங்களூரில் அவர் படித்தது ஒரு வருட காலம் தான். அப்போது அவருக்குக் குருவாக இருந்து போதித்தவர் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரி என்ற மஹாபுருஷர்.

டாக்டர் டீ. வீ. குண்டப்பா என்ற அறிஞர் தம்முடைய ‘ஞாபக சித்ரசாலா’ என்ற நூலில் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகளின் மிக உயர்ந்த குணங்களையும் பாண்டித்யத்தையும் பற்றி மிக மிக உயர்வாக எழுதியிருக்கிறார். “பாடம் சொல்வதில் மிகவும் கெட்டிக்காரர். தன்னலமே இல்லாதவர். வைராக்யம் நிறைந்தவர். தர்க்க சாஸ்திரத்திலும் வேதாந்தத்திலும் கரை கண்டவர்.” “மஹா மஹோபாத்யாயர் என்ற உயர்ந்த விருதைப் பெற்றவர்” இப்படியெல்லாம் ஸ்ரீ குண்டப்பா புகழ்ந்திருக்கிறார்.

ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் தம்முடைய பூர்வாசிரம மாணவப் பருவத்தில் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகளிடம் பாடம் கேட்டதைத் தாம் பெற்ற பெரும் பாக்யமாகக் கருதினார். சாஸ்திர பாடத்தைத் தவிர ஸ்ரீ சாஸ்திரிகளின் அமைதியான குணச் சிறப்பு, பொறுமை, கனிவு, தம்முடைய அறிவைப் பிறருக்கு அளிப்பதில் அவருக்கு இருந்த தன்னலமற்ற சிரத்தை, எளிமை எல்லாமே தமக்குப் பாடங்களாக அமைந்தனவாக அவர் கருதினார். ஆகையினால் தாம் சிருங்கேரியில் பீடாதிபதியானதும் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகள் தம்முடனே சிருங்கேரியிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் தாம் அதுவரை கற்ற பாடங்கள் போதாது, மேலும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது என்று கருதினார்.

ஆனால் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகள் அந்த அழைப்பை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. தம்முடைய நேற்றைய சிஷ்யர் இன்றைக்குத் தன்னுடன் சேர்த்து முழு ஜகத்திற்கே குருஸ்தானத்தில் இருக்கிறார். அவருக்குத் தான் இன்னமும் ஆசிரியராக இருந்து போதிப்பது என்பது நடக்கக் கூடாத காரியம் என்று கருதினார். ஆனால் ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைத்ததால் கடைசியில் இணங்கி சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார்.

உடனே வேதாந்த சாஸ்திரப் பாடம் ஆரம்பிக்கப்பட்டது. தினந்தோறும் குறிப்பிட்ட வேளையில் ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகள் அன்றைய பாடத்தைப் போதிக்க ஸ்ரீ ஆசார்யர்களின் அறைக்கு வருவார். ஸ்ரீ ஆசார்யர்களும் தம்முடைய ‘ஆசிரிய’ரை வரவேற்கத் தயாராக இருப்பார். ஸ்ரீ சாஸ்திரிகள் பங்களூரில் ஆசிரியராக இருந்த போது “சிஷ்யர்” அவரிடம் வருவார். வந்தவுடன் நமஸ்காரம் செய்து விட்டு ‘உட்கார்’ என்று சொன்னவுடன் பயபக்தியுடன் அமர்ந்து கொள்வார். ஆனால் இப்போது சிருங்கேரியில் கிரமம் வேறாகிவிட்டது. ஆனால் ஸ்ரீ ஆசார்யரின் உள்ளம் மாறவில்லை. ஆசிரியரிடம் அதே வினயத்தையே எப்போதும் மனதில் கொண்டிருந்தார். ஆனால் தாம் அமர்த்தப்பட்டிருந்த ஸ்தானத்தின் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு இருந்தது.

ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகள் எல்லா வியவஹாரங்களிலும் அததற்கு என்று ஏற்பட்ட ஒழுங்கைக் கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தவர். தாம் போதகராக இருந்தாலும் ஜகதாசார்யராக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து கொண்டிருப்பவரைத் தரிசித்தவுடன் வந்தனங்களைச் செய்வது தமது கடமை என்று சந்தேகமற உணர்ந்தவர். ஆகையால் எப்போது ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் முன் வந்தாலும் அவர் சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்து விடுவார். அவர் “உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று சொன்ன பிறகுதான் கீழே உட்கார்ந்து கொண்டு பாடத்தைத் தொடங்குவார்.

இந்தப் பிரச்சினைக்கு ஸ்ரீ ஆசார்யார் ஒரு தீர்வு கண்டுபிடித்து அதைத் தமது மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டார். ஆனால் செயலில் காட்டினார்.
“ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகள் வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிந்து கொண்டவுடன், அப்போது ஆஸனத்தில் அமர்ந்திருந்தால் ஏதோ ஒரு வியாஜத்தில் அதை விட்டு எழுந்து விடுவார். அறையில் வைக்கப்பட்டிருந்த தமது குருநாதர் ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளின் உருவப் படத்திற்கு அருகே போய் நின்று கொள்வார். உடனே கை கூப்பி அவரை வணங்கத் தொடங்குவார். ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரி அவர்கள் அறைக்குள் நுழைந்தவுடன் ஸ்ரீ ஆசார்யர் எங்கு நின்று கொண்டிருக்கிறாரோ அங்கே அவரருகே போய் சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்வார். உடனுக்குடன், ஸ்ரீ சாஸ்திரிகள் தமக்குச் செய்து கொண்டிருக்கும் நமஸ்காரங்களை ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் அவை தமது குருநாதருக்குச் செய்த நமஸ்காரங்களாகப் பாவித்து மானஸீகமாக அவருக்கே அர்ப்பணித்து விடுவார்.

“மஹா குரோ! இவருடைய இந்த நமஸ்காரங்கள் தங்களுக்கே உரித்தவை. ஆகையால் அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்!”.
இப்படி அவர் தம் மனஸில் பிரார்த்தனை செய்து கொள்ளும் நேரத்தில் அவருடைய பார்வை குருநாதரின் உருவப்படத்தின் மேலேயே இருக்கும். கைகள் அஞ்ஜலி செய்தவாறே இருந்து கொண்டிருக்கும்.

அதே சமயத்தில், புத்திமானாகவும், ஞானவானாகவும் இருந்த ஸ்ரீ விரூபாட்ச சாஸ்திரிகளின் மனதில், “இவரே அவர்! அவரே இவர்! இந்த நமஸ்காரங்கள் இருவருக்குமே செய்யப்பட்டதாக இருக்கட்டும்” என்ற பிரார்த்தனை நிச்சயமாக இருந்திருக்கும்.
இப்படி ஸ்ரீ ஆசார்யரும் ஸ்ரீ சாஸ்திரிகளும் தனித்தனியாக அந்த பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு மன அமைதியுடன் இருந்தார்கள். இது அந்தக் காலத்தில் இருந்த பெரியோர்களின் அநுமேயம்.
* * * *
பீடாதிபதியான பிறகு சுமார் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் பழைய மைசூர் ஸம்ஸ்தானத்தின் ஊர்களுக்கு விஜய யாத்திரையை மேற்கொண்டார். அப்போது அவருக்கு சுமார் முப்பத்து ஒரு வயதாகியிருந்தது.

அவர் சென்ற இடங்களில்தான் ஜனங்கள், முக்கியமாக பிராமணர்கள் ஸ்வதர்மத்தை விட்டு விலகிக் கொண்டிருப்பதையும், நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதில் சிரத்தை குன்றியவர்களாக இருப்பதைக் கண்டார். அதனால் மனம் வருந்தி அந்த மாதிரியான போக்கிலிருந்து அவர்களைத் திருப்ப வேண்டியதுதான் குரு ஸ்தானத்தை வகித்த தமது முதல் கடமை என்று நினைத்தார். போன இடத்திலெல்லாம் தனி நபர்களிடம் தனித்தனியாகவும் கூட்டங்களில் உபந்யாஸம் செய்ய வேண்டிய நேரங்களில் எல்லாருக்கும் பொதுவாகவும் எல்லாரும் தம் தம் குல தர்மத்தை விட்டுவிடாமல் இருந்து கொண்டு நித்ய கர்மானுஷ்டங்களையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
ஒரு சமயம் ஷிமோகா (சிவமொக்கா) என்ற ஊரிலிருந்து பக்தர்கள் ஒரு கூட்டமாக தரிசனத்திற்கு வந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் ஸ்மார்த்த பிராமணர்கள்.

துங்கா நதியில் ஸ்னானம் செய்து விட்டு, ஸந்தியாவந்தனம் செய்து விட்டு, ஸ்ரீ சாரதாம்பாளைத் தரிசனம் செய்து கொண்டு பிறகு குருவின் தரிசனத்திற்கு வந்தார்கள். வந்த இடத்திலும் தங்களுடையை நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்துவிட்டு நிதானமாகத் தம்மிடம் வந்த அந்தக் குழுவினரைப் பார்த்தவுடன் ஸ்ரீ ஆசார்யருக்குப் பரம திருப்தி உண்டாயிற்று. ஒவ்வொருவரிடமும் அவர் யார், என்ன ஜீவனோபாயம் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அவர்களில் ஒருவர் வயதானவர். சிவந்த மேனியர். சிகை வைத்துக் கொண்டிருந்தார். நெற்றியிலும் உடலெங்கும் விபூதியைத் தரித்துக் கொண்டு வசீகரமாக இருந்தார்.
அவர் அருகில் வந்தவுடன் ஸ்ரீ ஆசார்யர் அவரை விசேஷமாகக் கவனித்துப் பரிவுடன் விசாரிக்கத் தொடங்கினார்.
“நீங்களும் ஸ்மார்த்தர் தானோ?” என்ற முதல் கேள்வியைக் கேட்டவுடன் அந்தப் பெரியவர் சற்றுத் தடுமாறினார். பிறகு “இல்லை. நாங்கள் மாத்வ ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஷிமோகாவில் மூன்று தலைமுறைகளாக வசித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

“அப்படியா? அது பற்றி சந்தோஷம். ஆனால் நீங்கள் விபூதியைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே? நித்யமும் அப்படித் தானோ?” இது ஸ்ரீ ஆசார்யரின் அடுத்தக் கேள்வி.

பெரியவர் மீண்டும் தடுமாறி, “இல்லை, இல்லை. கிருஹத்தில் கோபி சந்தன நாமங்களைப் போட்டுக் கொள்வதுதான் வழக்கம். அதுவே எங்கள் சம்பிரதாயம்” என்று பதிலளித்தார்.

“அப்படியானால் அந்த நல்ல சம்பிரதாயத்தை இன்று ஏன் விட்டு பஸ்மதாரணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” ஸ்ரீ ஆசார்யர் கேட்டார்.

“மற்ற எல்லாரும் ஸ்மார்த்தர்கள். இந்தக் கோஷ்டியில் நான் ஒருவனே மாத்வன். அவர்களுடன் சேர்ந்து வந்ததால் நான் வித்யாஸமாகக் காட்சியளிக்க விரும்பவில்லை. அவர்களிடமிருந்து கேட்டு வாங்கி விபூதியைத் தரித்துக் கொண்டேன்” என்றார் அந்தப் பெரியவர். உடனேயே சேர்த்துச் சொன்னார், “நான் கோபீ சந்தனத்தை விட்டு விபூதியைத் தரித்ததில் அவர்களுக்கெல்லாமே மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று.”

அதைக் கேட்டு ஸ்ரீ ஆசார்யர்களின் முகத்தில் இருந்த புன்முறுவல் மறைந்து விட்டது. பரிதாபப்படும் உணர்ச்சியை அது வெளிக் காட்டியது.உடனே அந்தப் பெரியவரின் பக்கம் குனிந்து 
மெல்லிய குரலில் அவருக்கு மட்டும் கேட்கும்படியாகப் பேசத் தொடங்கினார். அது உபதேச மொழிகள்.
“நீங்கள் மாத்வர் என்றும் கோபீ சந்தனத்தைப் புண்ட்ரங்களாக அணிந்து கொள்ளுவதே உங்கள் குல வழக்கம் என்று சொன்னீர்கள். அதை விட்டு விடாமல் உங்கள் கிருஹத்தில் கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் சொன்னீர்கள். அதையறிந்து கொண்டதும் எமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் இன்னொரு பக்கம் வருத்தமே உண்டாயிற்று. அதற்குக் காரணம், இன்றைக்கு இந்த இடத்தில் எங்களைக் காண வந்தபோது அந்த குல வழக்கத்தை விட்டு விட்டு ஏன் பஸ்ம தாரணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் கொடுத்த பதில்தான்”.

“குல தர்மம் என்பது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல மாற்றிக் கொள்ளப்படலாம் என்று நீங்கள் நினைத்து இருந்தால் அது மிகவும் தவறு. நீங்கள் கோபீ சந்தனத்தை அணிந்து வந்தால் நான் உங்களிடத்தில் பிரியம் கொண்டவராக இருக்க மாட்டோம் என்று நினைத்திருந்தால் அதுவும் பெரிய தவறு. நீங்கள் பிராமணருக்கு உரிய ஆசார அனுஷ்டானங்களை விடாமல் கடைப்பிடித்து வருகிறீர்கள் என்று ஊகித்தபோது அதுவே எமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்று செய்தது போல மனம் பலஹீனம் அடைவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.”
“அடுத்த முறை இங்கே வரும்போது உங்கள் குல ஆசாரப்படி கோபீ சந்தனம் அணிந்து கொண்டு வாருங்கள். உங்கள் குடும்பத்தினர்களை அழைத்து வந்தாலும் அவர்களும் அப்படியே குல ஆசாரப்படி வஸ்திர தாரணம், புண்ட்ரதாரணம் இவற்றைச் செய்து கொண்டவர்களாக அழைத்து வாருங்கள். அதுவே எமக்கு பூரண சந்தோஷத்தை அளிக்கும்.”
இப்படி அறிவுறுத்தி ஆசீர்வதித்து அவரை அனுப்பி வைத்தார்.
அந்த மாத்வப் பெரியவர் பிற்காலத்தில் பெரிய தேச பக்தராக மைசூர் ராஜ்யத்தில் பிரஸித்தியடைந்த ஸ்ரீ வீ. கிருஷ்ணமூர்த்தி ராவ் என்று தெரிகிறது.
* * * *
ஸ்ரீ ஆசார்யரின் ஸமத்வ புத்தி விசேஷமும் பரந்த ஸமாஸ பாவமும் வேறொரு நிகழ்ச்சியாலும் தெரிய வந்தது. அது தும்கூர் ஜில்லாவில் திப்தூர் என்ற ஊரில் நடந்தது. நடந்த வருஷம் 1924. அப்போது ஸ்ரீ ஆசார்யர் மைசூர் ராஜ்யத்தில் ஊர் ஊராக விஜயம் செய்து ஜனங்களுக்கு ஸதுபதேசம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ஊரில் ஹிந்து சமூகத்தினருடன் முகமதிய மதத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ காரணங்களினால் இருவருக்கிடையே அவ்வப்போது போட்டா போட்டிகளும், மனஸ்தாபங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. தங்கள் தங்கள் மதத்திற்கு ஏற்பட்ட பண்டிகைகளைக் கொண்டாடும் போது தான் போட்டா போட்டிகளும் மனஸ்தாபங்களும் சண்டைகளும் அதிகமாக நடந்தன. முக்கியமாக முகமதிய மதத்தினர் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு எதிரில் ஹிந்துக்கள் வாத்ய கோஷங்களுடன் ஊர்வலங்கள் நடத்துவதை எதிர்த்தார்கள். ஹிந்துக்களில் சிலர் அப்படிச் செய்வதில் தீவிரமாக இருந்தார்கள்.
அந்த ஊரில் ஸ்ரீ ஆசார்யர் தம்முடைய விஜய யாத்திரையின் நடுவில் முகாம் செய்வதாக ஏற்பாடாகியது.

எந்த ஊருக்கு ஸ்ரீ ஆசார்யர் விஜயம் செய்தாலும் ஊர் எல்லையில் பூர்ண கும்ப மரியாதைகளுடன் வரவேற்று நாதஸ்வர வாத்யம், வேத கோஷம், பஜனைப் பாடல்கள் இவற்றுடன் அவரை ஊருக்குள் அழைத்து வருவதே தொன்று தொட்டு வந்த வழக்கம். அப்படியே அந்த ஊரில் இருந்த ஹிந்துப் பிரமுகர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
அந்த ஊரின் பிரதான வீதியின் மத்தியில் ஒரு மசூதி இருந்தது. ஸ்ரீ ஆசார்யர்களின் ஊர்வலமும் அந்த வழியாகச் சென்றுதான் அவருக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த ஜாகைக்கு வந்து சேர வேண்டும். அவருடைய ஸ்னானம், ஜபம், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஜனங்கள் அவரைத் தரிசனம் செய்வதற்கு வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் அந்த இடத்தில்தான் இருந்தன. முந்தைய ஆசார்யர்களும் அங்கேதான் தங்கி பூஜை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்டப் புனிதமான இடம் அது. ஆகையால் எல்லா ஏற்பாடுகளும் அங்கேயே செய்யப்பட்டிருந்தன.

ஸ்ரீ ஆசார்யர்கள் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவாக உயர்ந்த இடத்தில் இருப்பவராக, வணக்கத்துக்கு உரியவராக இருந்தாலும் மைசூர் அரசாங்கம் தான் முன் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தது. உயர் அதிகாரிகள் கூடி பலத்த பந்தோபஸ்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஊர்வலத்திற்கு எந்தவிதமான சிறிய குந்தகம் ஏற்படக்கூடாது என்பதில் மிக உஷாராக இருந்தார்கள்.

ஸ்ரீ ஆசார்யர் தம் ஊருக்கு விஜயம் செய்யப் போகிறார் என்ற சமாசாரத்தைத் தெரிந்து கொண்டதும் முஸ்லிம் சமூகத்தினரின் முக்கியப் பிரமுகர்கள் கூடி தாங்கள் ஸ்ரீ ஆசார்யர்களை வரவேற்பதில் நேரடியாகப் பங்கேற்காத போதிலும் அவருக்குத் தங்கள் சார்பிலும் மரியாதையளிக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் அதை மிக ரகஸ்யமாக வைத்துக் கொண்டார்கள்.
ஊர்வலம் எப்படியும் தங்களுடைய வழிபாட்டு ஸ்தலமான மசூதியைக் கடந்து செல்லப் போகிறது என்று தெரிந்தவுடன் உடனே அந்த இடத்தில் மசூதிக்கு எதிரே வீதியை அடைத்து ஒரு பந்தலைப் போட்டு அலங்கரித்து விட்டனர். ஸ்ரீ ஆசார்யரின் பல்லக்கு அந்த இடத்தில் ஒரு சில நிமிஷங்களாவது நிறுத்தப்பட்டுத் தாங்கள் அளிக்கவிருக்கும் மரியாதையை ஸ்ரீ ஆசார்யர் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று எண்ணினர். இரு சமூகத்தினரிடையே கருத்து வேற்றுமைகள் இருந்து கொண்டே இருந்ததனால் தங்களுடைய திட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டனர்.
ஸ்ரீ ஆசார்யர் ஊர் எல்லையில் பூர்ண கும்ப மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு மேனா பல்லக்கிலிருந்து கீழே இறங்கி விசேஷமாக மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த பல்லக்கில் ஏறி அமர்ந்தார். முன்னால் மேள தாள இசையுடன், பின்னால் வேத பாராயண கோஷ்டிகள், பஜனைகள் இவற்றுடன் ஊர்வலம் தொடங்கியது.

ஊருக்குள் நுழைந்து அதன் பிரதான வீதி வழியாக மிக கோலாகலமாக ஸ்ரீ ஆசார்யரின் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது.
மசூதி இருந்த இடத்தை அது நெருங்கிய போது முஸ்லிம் சமூகத்தினரின் பிரமுகர்கள் அந்த பச்சை வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழே வந்து குழுமி விட்டனர். அவர்களின் கைகளில் தட்டுத் தட்டாகப் புஷ்பங்கள், பழங்கள், கற்கண்டு, பாதாம் பருப்பு, திராட்சை, முந்திரி, சர்க்கரை என்று பல பொருள்களை எடுத்து வந்திருந்தனர். ஒரு தட்டில் அழகாகச் சட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு உரை, உருது மொழியில். அதே போல சட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு கவிதை. ஸ்ரீ ஆசார்யர்கள் நீண்ட காலம் ஆரோக்யமாக இருந்து கொண்டு ஜனங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்ளும் விதத்தில் எழுதப்பட்டிருந்த உருதுக் கவிதை அது.
வழியை அடைத்துக் கொண்டு ஊரின் மதிப்பைப் பெற்றிருந்த தனவான்களான முஸ்லிம் பிரமுகர்கள் நிற்பதைப் பார்த்ததும் நாதஸ்வர கோஷ்டியினர் தங்கள் இசையை நிறுத்து, ஒதுங்கி, அவர்களுக்கு வழி விட்டனர். அந்த அதிசயக் காட்சியைக் கண்டதும் ஊர்வலத்தில் முன்னணியில் வந்து கொண்டிருந்தவர்களும் பந்தோபஸ்து செய்வதற்காக வந்து கொண்டிருந்த போலீஸ் ஜவான்களும் பிரமித்து நின்று விட்டனர்.

ஸ்ரீ ஆசார்யர்களின் பல்லக்கு பந்தலை அடைந்தவுடன் முஸ்லிம் பிரமுகர்கள் தங்கள் கையில் ஏந்தியிருந்த தட்டுகளை அவர் முன் வைத்துத் தங்கள் உடல்களை வளைத்துக் குனிந்து சலாம் செய்து தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர். அதே சமயத்தில் உருது பாஷையில் எழுதப்பட்டிருந்த வரவேற்பு உரை படிக்கப்பட்டது. கடவுள் வணக்கமும் பாடப்பட்டது.
வரவேற்பு உரை வைக்கப்பட்டிருந்த தட்டும், பழங்கள் நிறைந்திருந்த தட்டும் அவர் முன்னே நீட்டப்பட்டு ஸமர்ப்பணம் செய்யப்பட்ட போது ஸ்ரீ ஆசார்யர் தமது வலது கரத்தை நீட்டி அவற்றைத் தொட்டு அங்கீகரித்தார். பிறகு கன்னட மொழியில் மூத்த முஸ்லிம் பிரமுகர்களாக முன் வரிசையில் நின்றவர்களை அருகில் அழைத்து சில இனிய வார்த்தைகளைப் பேசி அவர்களுக்குப் புஷ்பங்களை அளித்து வாழ்த்தினார்.

பிரமித்து நின்று கொண்டிருந்த ஊர்வலத்தினர் கர கோஷம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டார்கள். எல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்து விட்டது. ஸ்ரீ ஆசார்யர் சைகை செய்தவுடன் ஊர்வலம் தொடர்ந்தது. ஏதாவது கலவரம் நடக்கக் கூடும் என்று பயந்து கொண்டிருந்தவர்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த நிகழ்ச்சி அத்துடன் சுபமாக முடிந்துவிட வில்லை.
மறுநாள் ஊரில் சிறு சலசலப்பாக ஒரு வியவகாரம் தலை தூக்கியது.
முஸ்லிம் இளைஞர்களில் ஒரு சிலர் தங்களுடைய சினேகிதர்களாக இருந்து கொண்டிருந்த சில ஹிந்து இளைஞர்களிடம் விளையாட்டாகப் பேசத் தொடங்கி, பிறகு விஷமத்தனமாக அவர்களைச் சீண்டினார்கள்.
“தோழர்களே! பார்த்தீர்களா எங்கள் சாமர்த்தியத்தை? எங்களுடைய வழிபாட்டு இடத்திற்கு மரியாதை செய்வது போல உங்கள் குருவின் பல்லக்கும் நின்றது. உங்களுடைய மேள தாளங்கள் அடங்கி அமைதியாயிற்று. பாட்டு, கூத்து எல்லாவற்றையும் நிறுத்தி எல்லாரும் வாய் பொத்திச் செல்ல வேண்டியதாயிற்று” என்று ஒரு முஸ்லிம் இளைஞன் பிதற்ற அவனுடைய சகபாடிகள் கைத்தட்டி அவன் சொன்னதை ஆமோதித்தனர்

அந்த விஷயம் காது, மூக்கு எல்லாம் வைக்கப்பட்டு ஊர் முழுவதும் பரவி விட்டது. ஊர்வலத்தினரின் ஒரு சிறு பகுதிதான் அன்று என்ன நடந்தது என்று பார்த்திருந்தனர். ஆகையால் ஏதோ ஒரு தந்திரம் செய்து ஊர்வலத்தின் கோலாகலத்தை நிறுத்தி விட்டனர் என்று நினைக்கத் தொடங்கினர் பெரும்பான்மையான ஹிந்து ஸமூகத்தினர்.

“அது முஸ்லிம் சமூகத்தினரின் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். வரவேற்புரை அளிப்பதாக நடித்து நம்மை அங்கே அடக்கி விட்டனர். வாத்யங்களையும் வாசிக்க விடாமல் நிறுத்தச் செய்து விட்டார்கள். இதற்குப் பதிலடியாக நாம் ஏதாவது செய்யத்தான் வேண்டும். நாம் எப்படிப்பட்டவர் என்று அவர்களுக்குக் காட்ட வேண்டும்”. இப்படி ஓர் அபிப்ராயம் இளைஞர்களிடையே பரவிற்று.
அவர்களில் சிலர் ஓர் இடத்தில் கூடி “ஸ்ரீ ஆசார்யர்களின் சம்மதத்துடன் நாம் இன்னொரு பெரிய ஊர்வலத்தை நடத்த வேண்டும். வெளியூர்களிலிருந்து பல நாதஸ்வர கோஷ்டிகளை வரவழைத்து அவர்கள் மாற்றி மாற்றி வாசிக்க அந்த மசூதி இருக்கும் ரஸ்தா வழியாகவே செல்ல வேண்டும். யாருக்கும் பயப்படாமல் நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும். எந்த வழிபாட்டு ஸ்தலத்திற்கு எதிரேயும் வாத்யங்களும் பஜனைகளும் நிறுத்தப்படக் கூடாது” என்று தீர்மானித்தனர்.
அந்தக் குழுவினர் மிகவும் பணிவுடன் ஸ்ரீ ஆசார்யரை அணுகித் தாங்கள் இன்னொரு ஊர்வலத்தை விசேஷமாக நடத்தித் தங்கள் பக்தியைக் காட்ட விரும்புவதாக விக்ஞாபனம் செய்து கொண்டனர்.
ஸ்ரீ ஆசார்யரும் அப்போது இளைய வயதினர்தான். ஆனால் பிறவியிலேயே தீக்ஷிண்யமான அறிவையும் சமரஸமான மனப்பான்மையும் ஒருங்கே பெற்றிருந்தவராதலால் அந்தக் கோஷ்டியினரின் உள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு சில கேள்விகளைக் கேட்டுத் தம் சந்தேகத்தை உறுதியாக்கிக் கொண்டார். அவருடைய உள்ளம் அவர்களுடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளவே இல்லை. ‘முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம்’ என்று தீர்மானித்து விட்டார்.
அவர்களை உட்காரக் கூடச் சொல்லாமல் திடமான குரலில் பேசத் தொடங்கினார்:
“யாரோ ஒரு சில விஷமிகள் ஏதோ சில வார்த்தைகளைப் பேசி உங்கள் மனதைக் கலக்கியுள்ளார்கள். அதனால் உங்கள் சிந்தனை தெளிவாக இல்லாமல் போய் விட்டது. ஏதோ ஹிந்து ஸமூகமே அன்று அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கத் தொடங்கி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டீர்கள். அது மிகவும் தவறு. முஸ்லிம் சமூகத்தில் மிகவும் கௌரவமானவர்கள் அன்றைக்கு அங்கே வந்து, நீங்கள் எமக்கு அளித்த வரவேற்பு உபசாரத்தில் கலந்து கொண்டு எம்மிடம் தங்களுக்கு உள்ள மரியாதையைக் காட்டிக் கொண்டார்கள். அதுவும் நீங்கள் அவர்களை அழைக்காமல் தாமாகவே வந்து கலந்து கொண்டார்கள். உங்களுடைய திருஷ்டி கோணலாக இல்லாமல் நேராக இருந்தால் உங்களுக்கு இந்த உண்மை புலனாகும்.”

“மறுபடியும் எம்மை வைத்து இன்னொரு ஊர்வலம் நடத்தி அதே மசூதியின் முன் வாத்ய கோஷத்தை நிறுத்தாமல் எம்மை அழைத்துச் சென்று உங்கள் பக்தியையும் பலத்தையும் அவர்களுக்குக் காட்ட நினைக்கிறீர்கள். எமக்கு இப்போது தரப்பட்ட கௌரவம் போதும். நீங்கள் நினைக்கிற விதத்தில் இன்னொரு ஊர்வலத்தை நடத்தினால் எமது கௌரவம் அதிகமாகப் போவதில்லை.”
“உங்களுடைய எண்ணத்தை அறிந்து நாம் மிகவும் வருத்தப்படுகிறோம். உங்களுக்கும் அந்த சின்ன கோஷ்டிக்கும் ஏதாவது தகராறுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். அவற்றில் நீங்கள் ஜெயித்ததாகக் காட்டிக் கொள்ள எங்களை ஒரு கைப்பொம்மையாக ஆக்கி விட நினைக்காதீர்கள். அதற்கு நாம் சம்மதிக்க மாட்டோம்.”
இப்படிக் கண்டிப்பாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.


உடனே மடத்தின் அதிகாரிகளை அழைத்து மறுநாளே தான் அந்த ஊரைவிட்டுக் கிளம்ப விரும்புவதாகவும் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு விட்டார்.
ஊர் பிரமுகர்களுக்குச் செய்தி போனதும் அவர்கள் பரபரப்படைந்து ஓடி வந்து நமஸ்காரம் செய்தார்கள்.
“அந்த கோஷ்டியின் சார்பில் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆசார்யர்களின் முகாம் திட்டமிட்டபடி இன்னும் இரண்டு நாட்கள் இந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்” என்று தைன்யமாகப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

ஸ்ரீ ஆசார்யர் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அந்தப் பிரமுகர்களின் மனதில் பதியுமாறு சில வார்த்தைகளைக் கூறினார். அப்போது ஸ்ரீ ஆசார்யர் அவர்களிடம் கூறியது எல்லாரும் எக்காலத்திலும் மனதில் இருத்திக் கொண்டிருக்க வேண்டிய உபதேசமாகவே இருந்தது.


“துவேஷம், பகை, பொறாமை, போட்டி, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் இவை போன்றவை சமூகத்தில் வளர்ந்தால் அது எல்லாருக்கும் பெரிய தீங்கை விளைவிக்கும். அவற்றை வளரச் செய்து எந்த மதத்தையும் காப்பாற்றவோ வளர்க்கவோ முடியாது. ஆன்மிகப் பாதையில் முன்னேற்றத்தை அவை தடுத்துவிடும். இன்னொரு மதத்தினருடன் ஏதோ ஒரு போட்டியை கல்பித்துக் கொண்டு அதில் ஜெயிப்பதற்காக எம்மிடம் ஏதோ விசேஷ பக்தி இருப்பதாக யாராவது காட்டிக் கொண்டால் அந்த பக்தியை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்த இளைஞர்களுக்கு நல்ல புத்திமதி அளித்து சரியான பாதையில் செல்ல வழி காட்டுங்கள். நீங்கள் பெரியவர்கள். அவர்கள் உங்களுக்கு வழி காட்ட இடம் கொடுக்காதீர்கள்.”
தீர்மானித்தபடி ஸ்ரீ ஆசார்யர் மறுநாள் அந்த ஊரிலிருந்து சென்று விட்டார்கள் என்று தெரிகிறது.
அந்த மஹானின் புகழ் என்றும் மங்காது.

ஆக்கம்: கே. நாராயணஸ்வாமி, வித்யாரண்யபுரம், சிருங்கேரி

நன்றி: அம்மன் தரிசனம்

No comments:

Post a Comment