Wednesday, 30 April 2014

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்
“சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருயுவா குரோஸ்தோமௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன சம்ஷயா:”

“தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியில் வீற்றிருக்கிறார். குரு இளையவர்; சீடர்களோ அவரை விட மூத்தவர்கள். உலகிலுள்ள சீடர்களை உய்விப்பதற்காக அவதாரம் செய்த ஸ்ரீசங்கரருக்குச் சீடர்களாக இருப்பவர்கள் இணையற்ற பாக்யம் செய்தவர்கள்” என்கிறது மாதவீய சங்கர விஜயம்.

ஸ்ரீஸனந்தனர் (பத்மபாதர்)
சங்கரர் காசி க்ஷேத்திரத்தில் வாசம் செய்த போது, ஓர் அந்தண குமாரன் ஆசார்யரைக் காண வந்தார். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே சங்கரர், இவன் ‘நான், எனது’ என்ற அபிமானம் இல்லாதவன் என்று எண்ணுமாறு அவர் தோற்றம் இருந்தது.
“சோழ தேசத்தவன் நான். சமசார பந்தத்தில் உண்டாகும் துக்கத்தைப் போக்கவே தங்களைச் சரணடைந்தேன்” என்றார் வந்தவர்.
சங்கரர் அவருக்கு முறைப்படி சந்யாச மந்திரம் உபதேசம் செய்தார். “ப்ரதமம் விநேயம் தம் தேஷிகேந்த்ரஸ்ய சனந்த நாக்யம்” ‘சனந்தரர்’ என்ற இவரே சங்கரரின் முதல் சீடர். திருமாலின் அவதாரம் என்றும் அருணரே சனந்தராகப் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது.

கங்கை நதியின் மறுகரையில் சனந்தரர் இருந்தபோது மறுகரையிலிருந்தார் சங்கரர். அவருடன் இருந்த 
சிஷ்யர்கள், “குருநாதர் சனந்தனருக்கு மட்டும் மும்முறை தம்முடைய கிரந்தங்களை உபதேசம் செய்திருக்கிறார்.” என்று அசூயை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனைப் போக்கவும் சனந்தனரின் ஒப்பற்ற குருபக்தியை வெளிப்படுத்தவும் விரும்பினார் சங்கரர். “சனந்தனா” என்று சங்கரர் அழைத்தது மறுகரையிலிருந்த சனந்தனரின் காதுகளை எட்டியது. அக்கணமே அவர் தாவி கங்கையில் கால் பதித்தார். சம்சாரமென்னும் பெரும் கடலையே தாண்டச் செய்கிறவர் ஆசார்யர்; அத்தகையவரின் சரண கமலங்களைத் தியானம் செய்தால் கங்கையைக் கடப்பதா கடினம் என்று கண் மூடித் தியானம் செய்து கை குவித்து கங்கையில் கால் பதித்தார் சனந்தனர். ஒவ்வொரு காலடி பதிக்கும் இடத்தில் எல்லாம் கங்கை கமலங்களைத் தோற்றுவித்தாள்.

உவகை பூத்து, சனந்தரை ஆலிங்கனம் செய்து கொண்டு “பத்மபாதரே” என்று பகவத்பாதர் அழைத்தார்.
உபநிஷத்துகளின் தாத்பர்யத்தை, வியாசர், சூத்திர வடிவிலே அருளினார். அதுவே பிரம்ம சூத்ரம். அதற்கு முதல் பாஷ்யம் இயற்றியவர் சங்கரர். அதனை விளக்கி பத்மபாதர் எழுதியதே “பஞ்சபாதிகா” ஆகும்.

“குருபக்தியிலே ஈடிணையற்றவராக விளங்கிய பத்மபாதர், பகவத்பாதரை, பரமேஸ்வரராகவே போற்றி வணங்கினார். ஆசார்யார் இருக்கும் இடத்தில் விலங்குகள் பகை மறக்கும்; வியாதிகள் அகலும்; துக்கம் நீங்கி விடும்; பூமித்தாய் மனிதகுலத்துக்குத் தேவையானவற்றை வாரி வழங்குபவளாகவும் இருப்பார்.” என்று சனந்தனர், குருநாதரின் குண விசேஷங்களைக் கூறித் துதித்தார்.
ஸ்ரீசைல க்ஷேத்திரத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வாசம் புரிந்த போது, தோஷங்கள் நிறைந்தவனும் கொடிய தோற்றம் கொண்டவனுமான காபாலிகன் அவரைக் கண்டான்.
“சான்றோரில் சிறந்தவரே! தங்கள் சிரஸை தானம் செய்தால் உங்களுக்குப் புகழும் எனக்குத் தவத்தின் பயனும் கிடைக்கும்” என்று கூறினான்.
அதற்கு ஆதிசங்கரர் இசைந்தார். கபால பைரவன் அவருடைய தலையைக் கொய்வதற்காகத் தயாராக நின்றான். சங்கரர் மனத்தையும் புலன்களையும் அடக்கி பிரணவத்தை ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.பைரவன் கத்தியைக் கையில் உயர்த்தியதை, ஸ்நானம் செய்து நிஷ்டையில் இருந்த பத்மபாதர், தம் ஞானக் கண்களால் கண்டார்.

நரஸிம்ம மந்திரத்தை வெகுகாலமாக ஜபம் செய்து ஸித்தியடைந்தவர் பத்மபாதர். பிரஹ்லாதனுக்கு அருள்புரிந்த நரஸிம்மரை நினைத்த மாத்திரத்தில் நரஸிம்ம மூர்த்தியாகவே மாறி, குதித்து ஓடினார். பாய்ந்து சென்று வஜ்ராயுதம் போன்ற தம் நகங்களினால் பைரவனின் மார்பைப் பிளந்தார். பின்பு உயிரற்ற அவனுடைய உடலைப் பற்களால் கவ்வினார். அட்டகாசமாகக் கர்ஜித்து அண்டத்தை நடுங்கச் செய்தார். ஆங்காங்கு சென்றிருந்த சீடர்கள் சிம்மகர்ஜனையைக் கேட்டு ஓடோடி வந்தார்கள். நிகழ்ந்ததை அறிந்து அதிசயமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.  நிஷ்டை கலைந்து நோக்கிய சங்கரர், ஆச்சர்யமான நரஸிம்ம வடிவத்தைத் தம் முன்னே கண்டு துதி செய்யலானார். “சந்த்ராம்ஷு சோதர்ய சடாஜடாலம்” என்று தொடங்கி பல ஸ்லோகங்களால் போற்றினார். “ஹர, ஹர நரஸிம்மரே! எங்களுடைய பாபங்களை விரைவில் விலக்குவீர்” என்று முடித்ததும் நரஸிம்ம ரூபம் சாந்தமடைந்து பத்மபாதராக குருவுக்கு வந்தனம் செய்தார். பின்பு சிறிதுகாலம் குருநாதருடன் வாசம் புரிந்த பத்மபாதர் சங்கரரின் பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதினார். முதல் பகுதி பஞ்சபாதிகையாகவும். அடுத்தது “விருத்தி” என்றும் எழுதி, பிரக்யாதி பெற்றார்.


பத்மபாதருக்குத் தீர்த்த யாத்திரை செய்யும் விழைவு ஏற்பட்டது. குருவின் அண்மையே புண்ணிய க்ஷேத்திரம். அவருடைய பாதஜலமே தீர்த்தம் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும் தீர்த்த யாத்திரை செல்ல குருநாதரின் அனுமதி வேண்டி, பின்பு செல்லலானார். வடதேசங்களில் சஞ்சாரம் செய்து விட்டு தென்திசை நோக்கி வந்தார். காளஹஸ்தி, காஞ்சி, சிதம்பரம், ஸ்ரீரங்கம் வந்ததும், காவிரிக் கரையில் அமைந்த பூர்வாச்ரம வீட்டை அடைந்தார். பத்மபாதரின் மாமானும் உறவினர்களும் வரவேற்று உபசாரம் செய்தார்கள். மாமன் வீட்டில் பிக்ஷை முடிந்து, அனைவருக்கும் உபதேச மொழிகளைக் கூறிய பின்பு பத்மபாதர் ‘பஞ்சபாதிகா’ எழுதிய சுவடிகளை வைத்து விட்டு, இராமசேதுவுக்குச் சென்று திரும்பும் போது எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.

அத்வைத மதத்தின் மீது கொண்ட பகையால் மாமன், சுவடியுடன் வீட்டையே எரித்துச் சாம்பலாக்கினார். இராமசேது யாத்திரை முடிந்து திரும்பிய பத்மபாதர் விஷயம் அறிந்து பெரிதும் மனம் வருந்தினார். பின்பு சங்கரபகவத் பாதரைத் தரிசிக்கக் கேரளத்துக்குச் சென்றார். சுவடிகள் எரிந்ததைப் பற்றி குருநாதரிடம் தெரிவித்தார்.

“சிருங்கேரியில் இருந்தபோது என் முன்னிலையில் படித்த பஞ்சபாதிகா, என் மனத்திலிருந்து நீங்கவில்லை. நான் கூறுகிறேன், எழுதிக் கொள்வீர்” என்று சங்கர பகவத்பாதர் கூறியதும் பத்மபாதர் அகமகிழ்ந்தார்.

குருநாதரின் வாய் மொழியாக எழுந்த பஞ்சபாதிகாவை பத்மபாதர் எழுதி முடித்தார். ஆனந்தக் கண்ணர் பெருக்கினார். ஆடினார்; பாடினார். பேரானந்தம் கொண்டவராக சுவடிகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவமாடினார். “எத்தகைய பேறு பெற்றேன்” என்றார்.
ஸ்ரீசங்கர பகவத்பாதரின் முதல் சீடரான சனந்தனர், ‘பத்மபாதர்’ என்று குருவினால் போற்றப்பட்டு, குருவாய் மொழியாலேயே பஞ்சபாதிகையை மீண்டும் எழுதி, பாரத நாட்டின் மேற்குத் திசையிலே பகவத்பாதர் நிறுவிய துவாரகா மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தார்.

ஸ்ரீஹஸ்தாமலகர்

ஸ்ரீசங்கர பகவத்பாதர் மூகாம்பிகையைத் தரிசித்து விட்டு ஸ்ரீபலிபுரத்துக்குச் சென்றார். அங்கே இரண்டாயிரம் பிராமணோத்தமர்கள் வசித்து வந்தார்கள். மிருத்யு, ஸ்ரீபலிபுரத்தை நெருங்கவே அஞ்சியது. வேத அத்யனனம், அக்னி ஹோத்ரம் யக்ஞங்கள் என சத்கர்மாக்களில் அனைவரும் ஈடுபட்டார்கள். அந்த அக்ரஹாரத்திலே சகல சாஸ்திர நிபுணராக, கீர்த்தியுடன் வாழ்ந்து வந்த பிரபாகரருக்கு ஒரு புத்திரன் இருந்தான்.
பிரபாகரருக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தும், சந்தோஷம் இல்லை. காரணம், அவருடைய புத்திரன் புத்தியற்ற ஜடமாக இருந்ததுதான்.
எதுவும் பேசுவதும் இல்லை; எவர் பேசுவதையும் கேட்பதும் இல்லை. விளையாட்டில் விருப்பமில்லை. முட்டாள் என்று பிறர் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் வருந்துவதுமில்லை. ஆனால் தோற்றத்திலே மன்மதனாக, முகம் சந்திர பிம்பமாக, பூமாதேவியைப் போல் பொறுமை மிக்கவனாக இருந்தான்.
பிரபாகரர், இவன் இவ்வாறு இருக்க என்ன காரணம் என்பதை அறிய இயலாதவராக, துன்பத்தில் மூழ்கியிருந்தார். அவர் தம் பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தார். பதின்மூன்று வயதான, அவனுடைய நிலைக்குப் பரிகாரம் காண முற்பட்டார்.
அப்போதுதான், ஸ்ரீசங்கரபகவத்பாதர், ஸ்ரீபலிபுரத்துக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்து, பிரபாகரர் புத்திரனை அழைத்துக் கொண்டு பகவத்பாதரிடம், சென்றார்.

பிரபாகரர் ஆசார்யாரை வணங்கினார். புத்திரனையும் வணங்குமாறு கூற, அவனும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்காமல் அப்படியே கிடந்தான். ஸ்ரீசங்கரர், பிரபாகரர் மூலம், பிள்ளயைப் பற்றி அறிந்து கொண்டதும், கீழே கிடந்த அவனைப் பரமகருணையுடன் தூக்கி நிறுத்தினார்.
“நீ யார்? ஏன் இவ்வாறு ஜடம் போன்று நடந்து கொள்கிறாய்?”
“குருவே! நான் ஜடம் இல்லை. ஜடமாகிய இவ்வுடல் சேதனனான என்னுடைய தொடர்பினால் செயல் உள்ளதாகிறது.” என்று கூறிய அப்பிள்ளை, மேலும் பல ஸ்லோகங்களைப் பொழிந்தான்.

“நான் ஆத்மா! தூய்மையான மெய்யறிவு ததும்பும் ஆத்மா” என்னும் பொருள் பொதிந்த தத்துவம் நிறைந்த ஸ்லோகங்களைக் கூறியதும் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வியப்படைந்தார்.

ஸ்ரீபகவத்பாதர், பிரபாகரரை நோக்கி, “பிராமண சிரேஷ்டரே! உம்முடைய புதல்வன் உபதேசம் இல்லாமலே ஆத்ம ஞானத்தை அடைந்தவர்.” என்று கூறி தம் திவ்யமான வலக்கரத்தினால், அப்பிள்ளையின் தலையைத் தொட்டு பூரண அனுக்ரஹம் வழங்கினார். பின்பு, “இவன் தங்களுக்கு எவ்விடத்திலும் பயனளிக்க மாட்டான். முன் ஜன்ம வாசனையால் ஆத்ம ஞானியாக விளங்குகிறான். பற்றற்ற துறவறமே இவனுக்கு உரியது.” என்று மொழிந்தார்.
ஒப்பற்ற பரமாத்ம தத்துவத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்ற அவருக்கு “ஹஸ்தாமலகர்” என்ற திருநாமம் சூட்டினார். அவர் இயற்றிய ஸ்லோகங்கள் ‘ஹஸ்தாமலகீயம்’ என்று போற்றப்பட்டன.
தத்துவார்த்தமானவற்றை மிக எளிமையாக ஹஸ்தாமலகர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கர பகவத்பாதர், ஹஸ்தாமலகீயத்திற்கு உரை எழுதியுள்ளார். குருநாதரின் நூலுக்கு சீடர்கள் உரை எழுதுவது நடைமுறை. ஆனால் சீடரின் நூலுக்கு குருநாதர் உரை எழுதி, அந்நூலுக்கும், அந்தச் சீடருக்கும் மகத்துவம் சேர்த்திருக்கிறார்.
பிறவி ஞானியாக ஹஸ்தாமலகர் விளங்கியதற்குக் காரணம் உள்ளது.


கங்கைக் கரையில் முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மணி, சிறுகுழந்தை ஒன்றுடன் கங்கையில் நீராட வந்தாள். குழந்தையை முனிவருக்கு அருகில் படுக்க வைத்து விட்டு அவள் நதிக் கரைக்குச் சென்று நீராடினாள். துயில் நீங்கிய குழந்தை மெல்லத் தவழ்ந்து சென்று நதியில் விழுந்து இறந்தது. தாய், விரைந்து வந்து குழந்தையை அணைத்துக் கொண்டு கதறினாள். முனிவர் தியானம் கலைந்ததும், நடந்ததை அறிந்து துயரமடைந்தார். தாம் செய்த தவற்றை உணர்ந்து, குழந்தைக்கு உயிரளிக்கத் தாமே, அதன் உடலில் புகுந்தார். அக்குழந்தையே தூய மெய்ஞானம் பெற்று ஹஸ்தாமலகர் ஆனார்.
ஹஸ்தாமலகர், ஸ்ரீசங்கரபகவத் பாதரின் அத்யந்த சீடரானார். பாரதநாட்டின் கிழக்கில், புரிஜகன்னாத் க்ஷேத்திரத்தில் ஸ்தாபித்த கோவர்த்தன மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தவர் ஹஸ்தாமலகர்.


ஸ்ரீதோடகாசார்யார்

சிருங்கேரியில் வாசம் புரிந்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர், சிஷ்யர்களுக்குப் பாஷ்ய பாடம் போதித்தார். மந்திரோபதேசம் செய்தார். பரதேவதையாக விளங்கும் ஸ்ரீசாரதையின் பூஜையிலும் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் ‘கிரி’ என்பவர் பகவத்பாதருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தார். பூஜைக்குத் தேவையானவற்றை சித்தம் செய்வார். பகவத்பாதர் எழுந்திருப்பதற்கு முன்பே கிரி எழுந்திருந்து, ஸ்நானம் செய்யத் தேவையான ஜலம், அணிய வஸ்திரம், அமர ஆசனம் அனைத்தையும் எடுத்து வைப்பது வழக்கம். அதிகம் படிப்பறிவில்லாதவர் எனினும் குருசேவையில ஆத்மதிருப்தி அடைபவராக விளங்கினார். குருநாதர் நின்றால், தாமும் நின்று, சென்றால் தாமும் செல்வார். பணிவின் இலக்கணம் ‘கிரி’ எனலாம். ஸ்ரீசங்கரர் ஒரு நாள் பாஷ்ய பாடம் நடத்துவதற்காக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் அவரிடம் பாடம் கேட்க காத்துக் கொண்டிருந்தார்கள். நேரம் சென்று கொண்டிருந்தது. பாடம் தொடங்க ஏன் தாமதம் என்று மாணாக்கர்களுக்குப் புரியவில்லை. “சிறிது பொறுத்திருங்கள். கிரியும் வந்து விடட்டும்.” என்று ஸ்ரீசங்கரர் கூறியதைக் கேட்டு சிலர் ஏளனமாகச் சிரித்தார்கள்.

பத்மபாதர், “புத்தியற்ற, சாஸ்திர பாடம் கற்கத் தகுதியற்ற சுவர் போன்ற அவனுக்காகவா காத்திருக்க வேண்டும்?” என்று நினைத்துக் கொண்டதை குருநாதர் அகக் கண்களால் அறிந்தார். மாணாக்கரின் மமதையைப் போக்க வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் கருதினார். கிரியின் மீதான அபிப்ராயத்தை மாற்ற விழைந்தார். உடனேயே கிரிக்கு பதினான்கு வித்யைகளை மனத்தினால் அருளினார். அக்கணமே கிரி ஒப்பற்ற ஞானமும் வாக்குவன்மையும் பெற்றார். ஆத்ம தத்துவம் செறிந்த ஸ்லோகங்கள் அவருடைய வாக்கிலே உதயமாயின. குருநாதரை தோடக விருத்தத்தில் பாடியபடியே வந்ததைப் பார்த்து, பாடம் கேட்க வந்த மாணாக்கர்கள் அதிசயித்தார்கள். பத்மபாதர் செருக்கு அகன்று, தோடகரைப் போற்றினார்கள்.

உபநிஷத்துகளின் சாரத்தை விளக்கும் “ஸ்ருதி ஸாரஸமுத்தரணம்” என்னும் நூலையும் தோடகர் இயற்றினார். “தத்வமஸி” என்ற மஹா வாக்யத்தின் கருத்தை இந்நூலில் விளக்கியுள்ளார். 179 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல் தோடகரின் பரந்த ஞானத்துக்கு எடுத்துக் காட்டாகவும் பக்திப் பனுவலாகவும் உள்ளது. வேதாந்தக் கருத்துகளின் பொக்கிஷமாகத் திகழ்கிற தோடகரின் ஞானச் செல்வத்தை அவருக்கு வாரி வழங்கியவரை “பவ சங்கர தேசிகமே சரணம்” என்று வணங்கி வழிபட்டார்.
உபநிஷத்துகளின் சாரத்தை எளிய முறையிலே விளக்கியுள்ளவர் ஸ்ரீதோடகாசாரியார். சங்கரபகவத் பாதரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரராகி ஞானம் பெற்றவர். ஸ்ரீபகவத்பாதர், பத்ரிகாஸ்ரமத்தில் ஜ்யோதிர் மடத்தை ஸ்தாபித்து அதன் முதல் ஜகத்குருவாக ஸ்ரீதோடகரை நியமித்தார்.

ஸ்ரீஸுரேஷ்வரர்:

மண்டனமிச்ரராக, உபயபாரதியை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டிருந்தவர். பூர்வ மீமாம்சா மதத்தின் தலைவராக விளங்கிய குமாரிலபட்டரின் சீடர் கர்மமே, வீடுபேறு அளிக்கும் என்பதில் உறுதி கொண்டிருந்தவர். திக்விஜயம் செய்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர் பிரயாகையில், துஷாக்னியில் பிரவேசித்த குமாரிலபட்டரை சந்தித்தார். அவருடைய மொழிகளுக்கு இணங்கி, மாஹிஷ்மதி நகருக்கு வந்து மண்டன மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிச்ரரின் மனைவி உபயபாரதி நடுவராக இருக்க, சங்கரருடன் வாதம் புரிந்தார். வாத நிபந்தனையின்படி, மண்டனர் தோல்வியுற்றதும் சங்கரரின் சீடரானார். ‘ஸுரேஷ்வரர்’ எனத் துறவியாக தீக்ஷாநாமம் பெற்றார்.

ஸ்ரீவியாசர், சங்கரர் ஆகியோருக்கு இணையான ஞானம் பெற்றவர் ஸுரேஷ்வரர். பிரம்மதேவரின் அவதாரம். அத்வைதத்தின் அடிப்படை பிரம்ம சூத்திரம். இதனை எழுதியவர் பாதராயணர் என்னும் வியாசர். இவர் சூத்திரக்காரர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். ஸுரேஷ்வரர் துறவுச் சன்யாசம் அடைந்த பின்பு நர்மதை நதிக்கரையில் தங்கி அத்வைத சித்தாந்தத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஞான சூரியனாக விளங்கிய ஸுரேஷ்வரரை, பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு “வார்த்திகம்” எழுதுமாறு சங்கரர் கூறினார். ஆனால் சங்கரரின் சீடர்கள் பலரும் இதை விரும்பவில்லை.

மீமாம்ஸகராக இருந்து பின்பு அத்வைதியாக மாறிய ஸுரேஷ்வரர், ‘வார்த்திகம்’ எழுதுவதற்கு சீடர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அதன் பிறகு ஸ்ரீசங்கரர் ஸுரேஷ்வரரிடம், அத்வைதக் கருத்தை விளக்கும் தனித்ததொரு நூலை எழுதுமாறு பணித்தார். அதற்கிணங்க, ஸுரேஷ்வரர் “நைஷ்கர்யஸித்தி” என்ற நூலை எழுதினார். நான்கே பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் “பந்தத்தைப் போக்கும் உபநிடதத்தின் மையமான ஆத்மஞானத்தை பல ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். ஆயினும் குருநாதரின் கட்டளைக்குப் பணிந்து தாம் எழுதியிருப்பதாக” விநயத்துடன் குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவத்தின் அனைத்து சாரத்தையும் பிழிந்து தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. “அசேஷ-வேதாந்த ஸார-ஸங்கிரஹ-பிரகரணம்” என்பதாக ஸுரேஷ்வரர் கூறியிருக்கிறார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்திற்கு ஸுரேஸ்வரர் எழுதியுள்ள அற்புதமான உரை நூலுக்கு “மானஸோல்லாஸம்” என்று பெயர். சங்கரரின் பஞ்சீகரணத்திற்கு வார்த்திகம் செய்துள்ளார். ‘வார்த்திகம்’ என்பது “உக்தானுக்த துருக்தார்த்தவ்யக்தி காரிது வார்த்திகம்” என்பது அதன் இலக்கணம். பாஷ்ய நூல் மூன்று விதமான விளக்கங்களுடன் இருக்க வேண்டும். அதுவே வார்த்திகம். மூலநூலில் உள்ளதை உள்ளவாறே கூறுதல்; அதில் கூறாததையும் கூறுதல்; மூலநூலின் கருத்துக்கு மாறான விளக்கங்களைக் கூறுதல். இதுவே ‘உக்த’, ‘அனுக்த’, ‘துருக்த’ என்பதாகும். ஸ்ரீசங்கரர் எழுதிய தைத்ரீய உபநிஷத் பாஷ்யத்திற்கும், பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கும் ஸுரேஷ்வரர் விளக்கவுரை எழுதியுள்ளார். “தைத்ரீய உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்,” “பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்” என்றும் அவை கூறப்படுகின்றன. ஸ்ரீசங்கரர் பல உபநிஷத்துகளுக்கு பாஷ்யங்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றுள் இரண்டு பாஷ்யங்களுக்கு மட்டுமே ஸுரேஷ்வரர் வார்த்திகம் எழுதியுள்ளார். அதற்கு ஒரு காரணம் இருந்தது.
ஸ்ரீசங்கரபகவத்பாதர் யஜுர்வேத தைத்ரீய சாகையைச் சேர்ந்தவர். அவரைப் போற்றும் வகையிலே அந்த உபநிஷத பாஷ்யத்திற்கு வார்த்திகம் அருளினார். யஜுர் வேதத்தின் காண்வ சாகையைச் சேர்ந்தவர் ஸுரேஷ்வரர். அதனால் பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கு வார்த்திகம் இயற்றியருளினார். சங்கரரை ‘பாஷ்யக்காரர்’ என்று போற்றுவது போல, ஸுரேஷ்வரரை “வார்த்திகக்காரர்” என்று போற்றுகிறார்கள்.

ஸ்ரீசங்கரபகவத்பாதர், நாட்டின் நான்கு திக்குகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார். அவர் முதன் முதலில் துங்கா நதி தீரத்தில் அமைந்த சிருங்கேரி எனப்படும் ரிஷ்யசிருங்கத் தலத்திலே ஸ்ரீசாரதா பீடத்தை நிறுவினார். அதற்கு ஸுரேஷ்வரரை முதல் ஆசார்யராக நியமித்தார்.
ஸ்ரீசங்கரபகவத்பாதர், பரமேஸ்வரரால் அளிக்கப்பட்ட ஸ்ரீசந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும் ஸ்ரீரத்ன கர்ப்பகணபதியையும் ஸுரேஷ்வரரிடம் அளித்தார். இன்றும் அவை சிருங்கேரியில் அவிச்சின்னப் பரம்பரையாக ஆசார்யாரால் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீசங்கரபகவத்பாதர், நான்கு சிஷ்யர்களையும் போற்றியுள்ளார். ‘பத்மபாதரே’ என்று ஸனந்தனருக்குப் பட்டம் வழங்கி அவருடைய பக்தியை உலகறியச் செய்தார். ஜடமாக இருந்தவரை ஆத்மஞானியாக அறிமுகப் படுத்தி ஹஸ்தாமலகீய பாஷ்யமும் அருளி, தம் சிஷ்யருக்குப் பெருமை சேர்த்தார் ஆதிசங்கரர்.

‘கிரி’யாக குருசேவை புரிந்து வந்த எளியவனை, உயர்ந்த நிலைக்குச் செல்ல அனுக்ரஹம் புரிந்து ‘தோடகாஷ்டகம்’ பாட வைத்தவர் ஆதிசங்கரர். வாதத்திலே வென்று, சிஷ்யராக்கிக் கொண்டு ஸுரேஷ்வரராக தீக்ஷாநாமம் அளித்தார். ஸுரேஷ்வரரின் ஞானத் தெளிவிலே ஆதிசங்கரர் பெருமிதம் கொண்டார். பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதத் தடை ஏற்பட்டபோது, சங்கரர் தம் சிஷ்யரை சமாதானம் செய்து “இப்பூமியிலே ‘வாசஸ்பதி’ யாகப் பிறந்து பாஷ்யங்களுக்கு விளக்கவுரை எழுதப் போகின்றீர்” என்று வாழ்த்தி அருளினார். ஆதிசங்கரரின் அத்வைத மதத்தைப் பரப்பும் பணியிலே அவருடைய சீடர்கள் நால்வரும் பெறும் பேறு பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். ஆதிசங்கரரைத் தொடர்ந்து சுரேஷ்வரரும், பத்மபாதரும், ஹஸ்தாமலகரும், தோடகரும் அத்வைத குரு பரம்பரையின் நான்கு ரத்னமணிகளாக ஒளிர்ந்தார்கள்.

குரு சிஷ்ய பரம்பரையைத் தொடங்கி வைத்தவர்கள் மும்மூர்த்திகள். அதனை,

“ஸதாசிவஸமாரம்ப்பாம் சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

என்று ஸ்லோக ரூபத்தில் கூறுவது மரபாகும்.

“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்ட்டம்
சக்திம்ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீசங்கராசார்ய மதாஸ்ய பத்ம
பாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்ககாரமன்யான்
அஸ்மத் குரூன் ஸந்ததமான தோஸ்மி

என்று ஸ்தோத்திரம் செய்து வந்தனை புரிவோம்!

நன்றி: அம்மன் தரிசனம்

Thursday, 24 April 2014

விபூதி மற்றும் ருத்ராட்சத்தின் மகிமை:

விபூதி மற்றும் ருத்ராட்சத்தின் மகிமை:

விபூதிக்குரிய விபூதி, பஸிதம், பஸ்மம், க்ஷாரம், ரக்ஷை என்னும் ஐந்து பெயர்களுள் விபூதியின் பொருள்.
விபூதி என்பதற்கு மேலான ஐசுவரியம் என்று பொருள். வி-மேலான; பூதி-ஐசுவரியம்; எனவே தன்னைத் தரித்தவர்களுக்கு என்றும் அழிவில்லாத மேலான ஐசுவரியத்தைத் தருதலால் விபூதி என்னும் பெயர் பெற்றது. இங்கே ஐசுவரியம் என்றது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பரமுத்தியேயாகும். இவ்வாறு பொருள் கொள்வதோடு விநாயகன் என்ற சொல்லுக்குத் தனக்கு மேலொரு நாயகன் இல்லாதவன் என்று பொருள் கூறுவதுபோல விபூதி என்ற பதத்துக்குத் தனக்கு மேலான ஐசுவரியம் இல்லாததெனச் சொல்லவும் படும். அன்றியும் வி-சிவபெருமான்; பூ-பாவனை; தி-அடைதல், எனப்பொருள் கொண்டு சிவத்துவ பாவனையை விளக்கும் இயல்புடையது என்று விசேடப் பொருள் பகர்வதற்கும் உரித்தாயுள்ளது. இவ்வுண்மை வாதுளாகமத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விபூதிக்குப் பூதியென்னும் பெயருமுண்டு.

மற்றைய பெயர்களின் பொருள்
ஆன்மாக்களுடைய பாபங்களைனைத்தையும் நீறாக்கி விடலால் நீறு அல்லது பஸ்மம் (பற்பம்) என்றும், அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தை அளித்தலால் பஸிதம் என்றும், ஆணவாதி மலபந்தங்களைக் கழுவுதலால் க்ஷாரம் என்றும், பூதப்பிரேத பிசாசம், பில்லி, சூனியம் முதலியவற்றாலுண்டாகும் துன்பங்களினின்றும் நீக்கி ரக்ஷித்தலால் ரக்ஷை அல்லது காப்பு என்றும் சொல்லப்படுகிறது.

விபூதி வேதோக்தமானது.
வேதத்தின் ஞானகாண்டப் பொருளை விளக்க எழுந்த நூற்றெட்டு உபநிடதங்களுள் விபூதியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் உபநிடதங்கள் பதினைந்து. அவற்றுள் பஸ்ம ஜாபாலம், காலாக்னி ருத்ரம், ஜாபாலி என்னும் உபநிடதங்கள் பஸ்ம வைபவத்தைத் தாரண விதியோடு விளக்கிக் கூறுகின்றன. பிருகஜ்ஜாபாலமோ பிரமவித்தையின் அங்கமாகிய திருநீற்றை வேத விதிப்படி உண்டாக்கும் முறையையுங் கூறுகிறது. வைதிகர்களின் ஆசாரத்தில் விபூதி தாரண சம்பிரதாயம் இதன் வழியே நீண்ட காலமாயுண்டு. இவ்வுபநிடதத்தில் திருநீறு தரித்தல் எல்லாக் கன்மங்களுக்கும் முக்கியாங்கமாகவும், ஞானாங்கமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நூற்றெட்டு உபநிடதங்களின் சாரமாய் விளங்கும் தசோபநிடதங்களில் ஆதியந்தங்களிலுள்ள ஈசாவாஸ்ய பிருஹதாரண்ய உபநிடதங்களிலும், தைத்திரீய உபநிடதத்திலும் இந்தத் திருநீற்றின் பிரபாவம் பிரகாசப்படுத்தப்பட்டிருக்கிறது. இவையுமல்லாமல் காமிக முதல் வாதுளாந்தமாயுள்ள இருபத்தெட்டு சிவாகமங்களினும் அவற்றின் பிரிவுகளாகிய உபாகமங்களினும், பராசர, கௌதம, மநுவாதி ஸ்மிருதிகளினும், சைவம், கூர்மம், இலிங்கம், ஸ்காந்தம் முதலிய புராணங்களினும் பாரதம், இராமாயணம், சிவரஹஸ்ய மென்னும் இதிகாசங்களினும் இத்திருநீற்றின் பெருமை விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் பரமாசாரிய மூர்த்திகளுள் ஒருவராகிய அம்பிகையின் அருட்பாலையுண்டருளிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச் செய்த தமிழ் வேதத்திலே “திருநீற்றுப்பதிகம்” ஒன்றோதி, அற்புதச் செய்கை செய்து அதன் மகிமையைப் புறச்சமயிகளும் உணரும்படி விளக்கிக் காட்டியுள்ளார். வேதோக்தமாயும், சிவசின்னமாயும் விளங்கும் திருநீற்றைப் பொதுவாகவும் சிறப்பாகவும் எடுத்துப் பேசும் முதல் நூல்களும் வழி நூல்களும் அளவுக்கடங்காதலால் இதுவே வைதிகமென்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிலுணரக் கிடக்கிறது. இதை வேறு வழிநூல்கள் ஒப்பினும் ஒப்பாவிடினும் யாதுங் குறைவில்லை. திருநீறு வைதிகமென்பது மால், அயன் முதலிய பெரிய தேவர்களாலும் மறுக்கப்படாத பரம சித்தாந்தமாம்.

விபூதி தாரண வகை.
விபூதியை உத்தூளணமாகவும் திரிபுண்டரமாகவும் தரிக்க வேண்டும். உத்தூளணமாவது-பரவப்பூசுதல். திரிபுண்டரமாவது-மூன்று குறியாகத் தரித்தல், (திரி-மூன்று, புண்டரம்-குறி) திரிபுண்டரமாகத் தரிக்கத் தக்க ஸ்தானங்கள் சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், இரு முழந்தாள்கள், இரு புயங்கள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இரு விலாப்புறம், முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம். இவற்றுள் விலாப்புறம் இரண்டையும் நீக்கி செவிகளிரண்டையும் கொள்வதுமுண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு ஸ்தானங்களையே கொள்வதுமுண்டு. திரிபுண்டரந் தரிக்குமிடத்து நெற்றியில் இரண்டு கடைப்புருவவெல்லை வரையும் தரிக்க வேண்டும். மார்பிலும், புயங்களிலும் ஆறங்குல நீளந் தரித்தல் வேண்டும். மற்றைய ஸ்தானங்களில் ஒவ்வோரங்குல நீளந்தரித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் ஒன்றையொன்று தீண்டலாகாது. மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாயிருக்க வேண்டும். சிவதீக்ஷை பெற்ற ஒவ்வொருவரும் காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலங்களில் மாத்திரம் ஜலத்துடன் கூட்டித்தரிக்க வேண்டும். மற்ற காலங்களில் ஜலம் சேர்க்காது உத்தூளணமாகத் தரிக்க வேண்டும்.

சிவதீக்ஷையில்லாத ஆடவர், பெண்களும், வைதிக சந்நியாசிகளும், பிரமசாரிகளும், வானப்பிரஸ்தர்களும், கன்னிகைகளும் உச்சி காலத்துக்கு முன்னே ஜலங்கூட்டித் தரிக்கலாம். பின் ஜலங்கூட்டாமலே உத்தூளணமாகவே தரிக்க வேண்டும். கருநிற விபூதி நோயையுண்டாக்குதலாலும், செந்நிற விபூதி கீர்த்தியைப் போக்குதலாலும், புகைநிற விபூதி ஆயுளைக் குறைப்பதாலும், பொன்னிற விபூதி சம்பத்தைக் கெடுத்தலாலும் இவ்வகையான விபூதிகளை ஒருபோதுந் தரிக்கலாகாது. சகல ஐசுவரியங்களையுந்தரும் வெண்ணிற விபூதியே தரிக்கற்பாலது. மேலும் சிவதீக்ஷையில்லாதவர் கொடுத்த விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், ஒரு கையால் வாங்கிய விபூதியும், மதுமாம்ஸ பட்சணிகள் தரும் விபூதியும் எந்தக் காலத்திலும் தரிக்கலாகாது. விபூதியைப் பட்டுப்பையிலாவது சம்புடத்திலாவது வைத்துக் கொள்ள வேண்டும். விபூதியை வடக்கு முகமாவது கிழக்கு முகமாவது இருந்து கொண்டு வலக்கையின் நடுவிரல் மூன்றினால் தரிக்க வேண்டும். ஒரு விரலாலேனும் ஒருகையாலேனும் தரிக்கலாகாது. நெற்றியில் தரிக்கிறபோது பூமியிலே சிந்தாவண்ணம் சிரசைச் சிறிதுமேல் நோக்கிச் சிவபெருமானையும் ஆசாரியரையுஞ் சிந்தித்து, “சிவசிவ” என்று உச்சரித்துக் கொண்டே தரிக்க வேண்டும். எப்பொழுதும் தலையை அசைத்துக் கொண்டாவது, கவிழ்ந்து கொண்டாவது, அண்ணாந்து கொண்டாவது, வாயங்காந்து கொண்டாவது தரிக்கலாகாது. ஒருக்கால் விபூதி பூமியிலே சிந்தினால் சிந்திய விபூதியை எடுத்துவிட்டு அந்த இடத்தைச் சுத்தி செய்யவேண்டும். முக்கியமாய் நித்திரை செய்யப் போகும்போதும், நித்திரைவிட்டெழுந்த போதும், மலஜல விசர்க்கஞ்செய்து சௌசஞ் செய்தபின்னும், தந்தசுத்தி செய்தபின்னும், சூரியன் உதிக்கும்போதும் அஸ்தமிக்கும்போதும், ஸ்நானஞ் செய்தவுடனும், போஜனத்துக்குப் போகும்போதும், போஜனஞ் செய்தபின்னும் விபூதியைத் தரிக்கவேண்டும். ஆசாரியராவது சிவனடியாராவது விபூதி தந்தால் அவர்களை நமஸ்கரித்து இரண்டு கைகளையும் நீட்டி வாங்கி, பக்தியோடுந் தரித்துக்கொண்டு பின்னும் அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். சுவாமிக்கு முன்னாவது குருவுக்கு முன்னாவது, சிவனடியார்களுக்கு முன்னாவது, விபூதி தரிக்க நேர்ந்தால் முகத்தைச் சிறிது திருப்பிக்கொண்டு தரிக்க வேண்டும். விபூதியணிந்தே வெளியே புறப்பட வேண்டும்.
விபூதி உடம்பில் அணியப்படும் ஒரு பொருளாக இருப்பதுமன்றி மருந்தாகவும் உட்கொள்ளும் மேன்மையுடையது. அதை விசுவாசத்தோடும், சிவபெருமானைச் சிந்தித்தும் உட்கொள்ளின் தீராத எப்பிணியுந் தீரும். ஆகையினாலன்றோ ஆயர்வேதமும் திருநீற்றைப் பூசு மருந்தாகவும், புசிக்கும் மருந்தாகவும் வியந்து கூறிற்று. சங்கரஸம்ஹிதையும் விபூதியை யுண்ணுவதால் எல்லாப் பாபங்களும் தொலைவதோடு ஸர்வதீவினைக்கும் மூலமான ஆணவமலமும் அற்றுப்போமென முழக்கியது.
விபூதி நித்தியப் பொருள்.

விபூதியானது குருபஸ்மா, லகுபஸ்மா என இருவகைப்படும். இவற்றுள் குருபஸ்மா சிவபெருமானேயாம். லகுபஸ்மா அவரது அருட்டிரு மேனியிற் பூத்த திருநீறேயாம். திருப்போரூர், சிதம்பரசுவாமிகளும் “ஆதிபகவன் ஞானவடிவழலிற் பூத்து நித்தியமாய்” என்று அருளிச் செய்தார். “நீறுபூத்த மேனியனே” என்று புகழ்ந்தது தமிழ்வேதம். “நீறுபூத்த நெருப்பு” என்பது உலகவழக்கு. சிவபெருமான் அக்கினி வடிவினரும், அக்கினிக் கண்ணரும், அக்கினிதாரணரும், அக்கினிபூதேசருமாகலின் அக்கினியென அவரை வேதங்கள் முழங்காநிற்கும். அன்றியும் அவரது இளைய குமாரராகிய சுப்பிரமணியசுவாமியை “அக்கினிபூ” என்று அவ்வேதங்களே துதிக்கும். அக்கினி வடிவினராகிய சிவபெருமான் எவ்வாறு நித்தியவஸ்துவோ அதுபோன்றே அவரது திருமேனியிற் பூத்த திருவெண்ணீறும் என்றும் அழியாது நித்தியப் பொருளாம். இவ்வுலகத்தில் பஸ்மமாகாத வஸ்து ஒன்றுமே கிடையாது. ஸர்வமும் அந்தமதாவது நீறு என்றபடி ஒரு காலத்திலே பஸ்மமாகத்தான் முடியவேண்டும். பஸ்மத்தை எத்தனை முறை புடம் வைத்தாலும் நிறை குறையாது. நிறம் மாறாது. அழியாது. அப்படியேயிருக்கும். அதுவே அப்படியானால் சிவனார் திருமேனியிற் பூத்த நீற்றைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! சுண்ணத்திலிருக்கிறது சூட்சுமம் என்ற வாக்கியத்தின் கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது. சுண்ணம் என்பது நீறு; இவ்வுண்மையை உலகத்துக்குணர்த்தவே சத்தியமாவது நீறு, தத்துவமாவது நீறு என்று திராவிடவேதம் விதந்தோதியது. அன்றியும் கூர்மபுராணமும் “பிரம்மதேவர் சிருஷ்டி செய்கையிலேயே நித்தியமாயுள்ள பஸ்ம மஹாத்மியத்தைக் கூறி அதனையணிந்து கோடற்காகவே நெற்றியைக் குறுக்காகப் படைத்தார். மேனோக்காகவும், வட்டமாகவும் படைத்தாரல்லர். அப்படிச் செய்திருந்தும் மூர்க்கர் சிலர் நெற்றியிலே திரிபுண்டரமணிவதில்லை” என்று சதோபதேசஞ் செய்துள்ளது. மஹாபாரதமும் சாந்தி பர்வத்தில் “தர்மராஜனே! ஆயுள்விருத்தியை அவாவுவோரும், செல்வத்தை இச்சிப்போரும், வீடுபேற்றை விரும்புவோருமான துவிஜர் நாடோறும் பஸ்மதாரணஞ் செய்யவேண்டும்” என்று அறைந்துள்ளது. இக்கருத்தனைத்தையும் நல்லோர்பால் கேட்டுத் தெளிக.

விபூதி இலக்கணம்.
விபூதியாவது யாகாக்கினியினாலாவது, சிவாக்கினியினாலாவது நல்ல இலக்கணமுடைய பசுவின் சாணத்தைக் கொள்ள வேண்டிய முறைப்படி கொண்டு மந்திரங்களாலுருட்டித் தகிப்பித்த திருநீறாம். இது வைதிக விபூதியென்றும், சைவ விபூதியென்றும் இருதிறப்படும். அவற்றுள் வைதிக விபூதியாவது-வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களில் பொடிப்பட்ட நீறாம். இது புத்தியை (போகத்தை) மாத்திரம் அளிக்கும். சைவவிபூதியோ-சிவாகமவிதிப்படி சிவதீக்ஷை செய்யப்பட்ட அக்கினியில் பொடிப்பட்ட நீறாம். இது புத்தி, முத்தியாகிய இரண்டையுந் தரும். இவ்விபூதி கற்பம், அநுகற்பம், உபகற்பம் என மூன்று வகைப்படும்.
கற்பமாவது-ஸ்ரீகயிலாசத்தில் வீற்றிருக்கும் இடப தேவருடன் வாழ்கின்ற நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐந்து பசுக்களின் வழியாய்ச் சிவாக்ஞையால் திருப்பாற் கடலினின்றுந் தோன்றி இவ்வுலகில் பரவிய உத்தமமான பசுக்களில் கன்றீன்று பத்து தினத்துக்கு உடபட்டதும், கன்று பிரசவியாத கிடாரியும், நோயுடையதும், கன்று செத்ததும், கிழத் தன்மையுடையதும், மலடும், கர்ப்பமுள்ளதும், வால், காது, கொம்பு அறுந்ததும் ஆகியவற்றை யொழித்துச் சிறந்து விளங்கும் பசுக்களில், பங்குனி மாதத்தில் பசானம் என்னும் நெல்லின் தாளை மேய்ந்த பசுவின் சாணத்தைத் தாமரை இலையில், அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி ஆகிய திதிகளில் சத்தியோஜாத மந்திரஞ்சொல்லி ஏற்று, மேலிருக்கும் வழும்பை யொழித்து, வாமதேவ மந்திரஞ்சொல்லி, பஞ்சகௌவியம் விட்டு, அகோரமந்திரஞ் சொல்லிப் பிசைந்து, தற்புருடமந்திரஞ் சொல்லிக் கையாலுண்டை செய்து, ஈரமாகவேனும், உலர்ந்தபின்பேனும், ஓமாக்கினியில் சம்பா நெற்பதருடன் வைத்து, ஈசான மந்திரத்தாற் சுட்டெடுத்து, ஒரு கோடி வஸ்திரத்தில் வடிகட்டி, ஒரு புதுப்பாண்டத்தில் நிரப்பி, விபூதி காயத்ரி மந்திரஞ்சொல்லி, பூமியில் வைத்து மலர்சாத்தி, வெள்ளை வஸ்திரத்தால் அப்புதுப்பாண்டத்தின் வாயைக்கட்டிப் பத்திரமாகச் சேமித்து வைத்த விபூதியாம்.

அநுகற்பமாவது-சித்திரை மாதத்தில் காட்டிற் சென்று, அங்கு உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தை எடுத்துத் தூளாக்கி, கோசலம்விட்டு, முன்சொன்ன மந்திரங்களாற் பிசைந்து, உருட்டி, மேலே கற்பவிபூதிக்குக் கூறிய முறைப்படி சிவாக்கினியில் விளைவித்தெடுத்த விபூதியாம்.

உபகற்பமாவது-வானத்தில் காடாக்கினியினாலுண்டாகிய சாம்பலை எடுத்துப் பஞ்சகௌவியம் விட்டு, முன்சொன்ன மந்திரங்களைக் கொண்டு பிசைந்து உருட்டி, சிவாக்கினியில் விளைவித்தெடுத்த விபூதியாம்

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

Thursday, 17 April 2014

தர்ம சூட்சுமங்கள் - ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

தர்ம சூட்சுமங்கள்

நமக்கு எல்லோருக்கும் அனாதிகாலமாக சநாதன தர்மத்தை அனுஷ்டிக்கக்கூடிய ஒரு பரம்பரை வாய்த்திருக்கிறது. இந்த தர்மானுஷ்டானம்தான் நம்முடைய ஜீவனத்தில் மிகவும் முக்கியமானது; தேவையானது. மனிதனுக்கு எப்போதும் தான் சுகமாக இருக்கவேண்டும் என்கிற ஆசை. அந்த ஆசை எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டால் இந்த ஜன்மத்தில் மட்டுமில்லை, வருகிற ஜன்மத்திலும் நாம் சுகமாகத்தான் இருக்க வேண்டும், எனக்கு என்றைக்கும் துக்கம் வரக்கூடாது என்கிற அளவுக்கு இருக்கிறது. இந்த ஆசை நிறைவேறுவதற்கு ஒரேயொரு உபாயம் தர்மானுஷ்டானம்தான். நாம் சாஸ்த்ரோர்க்தமான தர்மத்தை ஸ்ரத்தையோடு ஆசரணம் பண்ணினால் நமக்கு இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மத்திலும் சுகம் கிடைக்கும்.

தர்மத்தைப் பற்றி ஸ்ரத்தை இல்லையென்று சொன்னால் நம்முடைய விருப்பம் என்றைக்கும் நிறைவேறாது. தர்மத்தை ஆசரணம் பண்ணவேண்டும் என்று சொன்னால் அஃது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை. மனஸ் வேண்டும். கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. “மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.” அநேகப்பேருக்கு “ஸந்த்யா வந்தனம் பண்ணுகிறீர்களா?” என்று கேட்டால் “இல்லை ரொம்ப சீக்கிரம் அலுவலகத்திற்குப் போக வேண்டியிருக்கிறது, அவகாசமே கிடைக்க மேட்டேன் என்கிறது” என்பார்கள். மனம் இருந்தால் மார்க்கம் இருக்கத்தான் செய்யும். சீக்கிரம் ஆபீஸ் போகவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் முன்னால் எழுந்திருந்தால் என்ன தப்பு? சீக்கிரம் ஆபீஸ் போகவேண்டும் என்பது வாஸ்தவம்தான். கொஞ்சம் முன்னால் எழுந்திருந்து ஸ்நானம் செய்துவிட்டு ஒரு பத்து நிமிஷம் சந்த்யாவந்தனம் பண்ணிப் பின்னர் ஆபீஸ் போகக்கூடாதா? ஸ்ரத்தை இல்லை. அதனால் அந்தக் காரணத்தையெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வழி. நீங்கள் இங்கே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் துக்கம் வருகிறது சுகம் வருவதில்லை என்று வருத்தப்பட்டு பயனில்லை.

ஓர் இடத்தில் ஸதாசிவப்ரும்மேந்த்ராள் சொன்னார். மனஸை உத்தேசித்து சொன்னார். “ஏ மனமே! இப்பொழுது ரொம்பவும் துக்கம் வந்திருக்கிறது என்று ஏன் கவலைப்படுகிறாய். போன ஜன்மாவில் ஒரு நல்ல கர்மாவும் பண்ணாமல் பாப கர்மாவையே பண்ணி இப்போது துக்கம் வருகிறது என்று வருத்தப்பட்டால் என்ன ப்ரயோஜனம்?”

ஒருவன் மாம்பழம் வேண்டும் என்று நினைத்தான். அதற்கு மரத்தை நட வேண்டும் என்று சொல்லி ஆலமரத்தோட பீஜங்களை (விதைகளை) கொண்டு வந்து நட்டான். பெரிய மரம் ஆகிவிட்டது. மாம்பழமே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டான். “மாம்பழம் வரும் என்று நினைத்து இந்த ஆலமரத்து பீஜத்தை கொண்டு வந்து நட்டேன். மாம்பழம் வரும் என்று நினைத்தேன்; ஆசைப்பட்டேன்.” என்றான். எதற்கு எது சம்பந்தம். அதேபோல் பாபகர்மாவை செய்துவிட்டு எனக்கு சுகம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன ப்ரயோஜனம்?

போன ஜன்மத்தில் ஒரு நல்ல கார்யமும் பண்ணாமல் இப்போது எனக்கு சுகம் கிடைக்கவில்லையே துக்கம் வந்திருக்கிறதே என்று சொன்னால் என்ன ப்ரயோஜனம்?

கர்மாவுக்கு அனுகூலமாகத்தான் பலன் கிடைக்குமே தவிர கர்மாவுக்கு விரோதமாக (மாறாக) பலன் கிடைக்காது. ஒரு பையன் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில் 90% மார்க் வரவேண்டும் என்கிற தீவிரமான இச்சை இருந்தால் அதற்கு தகுந்தபடி உழைக்க வேண்டும்; படிக்கவேண்டும். நான் ஒன்றும் படிக்க மாட்டேன். ஆனால் எனக்கு 90% மார்க் வரவேண்டும் என்றால் அஃது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு விஷயத்திலும் இதே மாதிரிதான். நமக்கு எதில் ஆசை இருக்கிறதோ அதற்கு தகுந்த சாதனத்தை அனுஷ்டிக்க வேண்டும். அந்தச் சாதன அனுஷ்டானம் இல்லையென்று சொன்னால் பலன் கிடைக்காது; பலன் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு ப்ரயோஜனம் இல்லை. அதனால் நாம் எல்லோருக்கும் சொல்வது தர்மத்தில் ஸ்ரத்தை இருக்கட்டும். மீதி எல்லாவற்றையும் விட தர்மம் மிக உயர்ந்தது என்கிற பாவம் இருக்கட்டும்.

நமக்கு எப்போது ஸ்ரத்தை உண்டாகும் என்று கேட்டால், தர்மம்தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்கிற பாவம் வந்தால் அதில் ஸ்ரத்தை உண்டாகும். இது பழைய காலத்து கதை இப்போது அதெல்லாம் யாருக்கு வேண்டும் என்று ஒதுங்கினால் அதில் ஸ்ரத்தை வராது. தர்மம் விஷயத்தில் பழைய காலத்து கதை என்று நினைத்துக் கொள்ளவே கூடாது. தர்மம் எல்லாக் காலங்களிலும் ஒன்றுதான். பழைய காலத்திற்கு ஒரு தர்மம்; இந்தக் காலத்திற்கு ஒரு தர்மம் என்பனவெல்லாம் இல்லை. ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி சந்த்யாவந்தனம் பண்ணிக் கொண்டு இருந்தார்களோ அதே க்ரமத்தில்தான் இன்றும் நாம் சந்த்யாவந்தனம் பண்ணுகிறோம். அந்த க்ரமத்தை யாரும் ஒன்றும் மாற்றவில்லை. அதனால் தர்மத்தை ஸ்ரத்தையாக அனுஷ்டித்து அந்த தர்ம பலமான சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்பதுதான் சாஸ்த்ரத்தினுடைய கருத்து. சாஸ்த்ரம் தர்மத்தை விதித்தது மனிதனுடைய நன்மைக்காகத்தான். நாம் அந்த தர்மானுஷ்டானத்தை பண்ணவில்லையென்று சொன்னால் சாஸ்திரத்திற்கு குறைவு ஒன்றும் ஆகப்போவதில்லை. அந்த சாஸ்த்ரத்தை உபதேசித்த மகரிஷிகளுக்கும் ஒன்றும் போகப்போறதில்லை. போகப்போவது நமக்குத்தான்.

நாம் பகவானுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சொல்வோம். அந்தப் பூஜையினால் பகவானுக்கு என்ன உண்டாகப்போகிறது? பகவானுக்கு ஒன்றும் வரப்போவதும் இல்லை. போகப்போவதும் இல்லை. அவருக்கு என்ன வேண்டும் பகவான் கீதையில் சொன்னார்.

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம்
த்ரிஷுலோகேஸு கிஞ்சன || என்று சொன்னார்.
நானவாப்தமவாப்தவ்யம் வர்தேவச கர்மணி ||

எனக்கு இந்த மூன்று லோகங்களில் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை அடைய வேண்டியதும் ஒன்றும் இல்லை. பகவான் நித்ய பரிபூர்ணனானவன். நித்யத்ருப்தனானவன். அவனுக்கு எது தேவை? பின் ஏன் பகவானை பூஜை பண்ணவேண்டும் என்று கேட்டால் நம்முடைய நன்மைக்காக. நமக்கு நல்லது ஆகவேண்டுமானால் பகவானை ஆராதனை செய்ய வேஎண்டும். பகவத் சிந்தனை செய்ய வேண்டும். நம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லி இருக்கிறதே ஒழிய அதிலிருந்து பகவானுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.

அதே மாதிரி தர்மம் கூட நமக்கு ஸ்ரேயஸ் உண்டாக சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. இந்த சத்யத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகவத்பாதாள் மாதிரி மகான்கள் இந்த தர்மத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அவதாரம் பண்ணினார்கள். ஒவ்வொரு யுகத்திலும் பகவான் அவதாரம் பண்ணியது தர்மத்தை காப்பாற்றுவற்காகத்தான்.

அதாவது தர்மத்திற்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு பகவான் ஸ்வயமாக (தானே) வரவேண்டியிருந்தால் அஃது எவ்வளவு மதிப்பான வஸ்துவாக இருக்கவேண்டும். இல்லாவிடில் பகவானே ஏன் வரவேண்டும். அதனால் தர்மம் ஸர்வோத்க்ருஷ்டமானது. அந்த தர்மத்தினுடைய ஆசரணம் நம் எல்லோருக்கும் ரொம்பவும் ஆவஸ்யகம். அந்த தர்மங்களைப் பற்றி சொல்கிறபோது சாஸ்த்ரத்தில் ஸத்யம்வத தர்மம்சர ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் நப்ரமதிதவ்யம் | என்று சொல்லியிருக்கிறது. உண்மை சொல்வது தர்மம். அத்யயனம் பண்ணுவது தர்மம். பெரியவர்கள் மதிக்கிறது தர்மம். இது சாதாரண தர்மம். சத்யத்தை சொல்வது, பெரியவர்களை மதிப்பது, யாருக்கும் தொந்தரவு பண்ணாமல் இருப்பது, அஹிம்ஸா எல்லாவற்றுக்கும் முதல் தர்மம் என்று சொல்லியிருக்கிறது. அஹிம்ஸா பரமோ தர்ம: யாருக்கும் தொந்தரவு பண்ணக் கூடாது. ஒருவனைக் கொல்லக்கூடாது, அடிக்கக்கூடாது என்பது மட்டும் தொந்தரவு இல்லை. இன்னொருவனுடைய மனத்திற்குக் கூட கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.

இன்னொருவனுடைய மனத்திற்கு கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய பேச்சு பேசி அதனால் அவன் மனதுக்கு கஷ்டம் உண்டானால் அஃது ஒரு பாபம். நீ செய்யக்கூடிய பாபம். அஃது அனேகருக்கு இன்னொருவனோடு ஒரு ம்ருதுவாக பேசக்கூடிய ஸ்வபாவம் இருக்காது. தான் சொல்லக்கூடிய வார்த்தை இன்னொருவன் மனதுக்கு கஷ்டத்தை கொடுப்பது என்னும் நினைவே சிலருக்கு இருக்காது. ரொம்ப கடினமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அதனால் மற்றவனுக்கு வருத்தம் ஆகிறதே என்பதே இருக்காது. ஆனால் அப்படி கடினமான வார்த்தை சொல்லி அவர்கள் மனம் வருத்தம் ஆகிறது என்றால் உனக்கு ஒரு பாபம் வரும். அதனால் (அஹிம்ஸா) இன்னொருவனுக்கு கஷ்டத்தை கொடுக்காதே என்பது ஒரு பெரிய தர்மம். உண்மையைச் சொல் என்பது ஒரு பெரிய தர்மம்.
சிலருக்கு பொய் சொல்லியே பழக்கம். எல்லாவற்றுக்கும் பொய் சொல்வது. பொய் சொல்வதினால் தான் அதர்மம் பண்ணுகிறோம் என்ற நினைவு அவர்களுக்கு வராது. ரொம்ப சகஜமாக பொய் சொல்லி விடுகிறார்கள். ஏதோ வக்கீல்கள் மாதிரி ஆட்களுக்கு வேறு வழி இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனாலும் அவர்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது. வக்கீல்கள் சொல்வார்கள் எங்களுக்கு வேறு வழியில்லை என்று. அப்படி பொய் சொல்லாவிட்டால் கேஸ் ஜயிக்க முடியாது என்று சொல்கிறார்கள். ஆனாலும் பொய் சொல்வதை தர்மம் என்று யாரும் சொல்ல முடியாது. நம்முடைய ஜீவிதத்தில் பொய் சொல்வது என்பது அது பெரிய பாப கர்மா. வேண்டாத விஷயத்திற்கெல்லாம் பொய் சொல்வது.

அதுதான் சாஸ்த்தில் ஒரு தர்ம சூக்ஷுமம் சொல்லி இருக்கிறார்கள்.

ஸத்யம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத்

உண்மையைச் சொல்லவேண்டும் ப்ரியமான வார்த்தையைச் சொல்லவேண்டும்.

ஸத்யம் ப்ரூயாத் ட்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம் |
ப்ரியம் ச நாந்ருதம் ட்ரூயாத் ஏஷதர்ம: ஸநாதந: ||

ஒரு பையன் பரிட்சை எழுதியிருக்கிறான். ரிசல்ட் வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு அந்த ரிசல்ட் பார்க்க முடியவில்லை. அவனுடைய நண்பர் ஒருவர் பார்த்து விட்டு வந்தார். இவன் அவரிடம் கேட்டான் “சார்! ரிசல்ட் வந்து விட்டதாமே எனக்கு என்ன ஆயிற்று? “பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டாய் என்று அவர் சொல்லிவிட்டார். ஆனால் அவன் பெயில் ஆகியிருந்தான். அவனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் அப்படி பொய் சொன்னாராம். அப்புறம்தான் தெரிந்ததாம் அவன் பெயில் ஆகிவிட்டான் என்பது. அவன் என்னிடம் பொய் சொல்லிவிட்டாரே என்று ரொம்ப வருத்தப்பட்டானாம். சார் நீங்க ஏன் என்னிடம் பொய் சொன்னீர்கள்? என்றதற்கு இல்லை நீ சந்தோஷப்படுவாய் என்று சொன்னேனடா என்றாராம். சந்தோஷம் ஆகட்டும் என்று பொய் சொன்னீர்களா? ஒரு பெரிய பாபத்தை அல்லவா நீங்கள் செய்தீர்கள். அதனால்தான் அதில் சொல்லியிருக்கிறது “ப்ரியம் ச நாந்ருதம் ட்ருயாத்” ப்ரியமான வார்த்தை என்று சொல்லி பொய் சொல்லக்கூடாது. அப்ரியமான சத்யத்தை சொல்வதைவிட பேசாமல் இருப்பது நல்லது.

அந்தப் பையன் அவன் பெயில் ஆகி இருந்தாலும், ரிஸல்ட் எனக்கு சரியாகத் தெரியவில்லை என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஸத்யமான அப்ரியத்தை சொல்லக்கூடாது. அசத்யமான ப்ரியத்தையும் சொல்லக்கூடாது. இதுதான் தர்மத்தினுடைய சூக்ஷுமம். இந்த தர்ம சூக்ஷுமங்கள் ரொம்ப விசேஷமானவை.

ஒருவனை இராஜாவுடைய சைனிகர்கள் துரத்தி வந்து கொண்டு வந்தார்கள். அவன் ஒரு ரிஷியுடைய ஆஸ்ரமத்திற்குள் வந்தான். “சாமி! அவர்கள் எல்லோரும் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள் தயவு செய்து இடம் கொடுங்கள்.” என்று கேட்டானாம். “சரி வா! உள்ளே போய்க்கொள்” என்று அந்த ரிஷி சொல்லிவிட்டார். அவர்கள் எல்லோரும் வந்து “இங்கே ஒரு பையன் வந்தானா?” என்று கேட்டதற்கு “இல்லையப்பா இங்கு யாரும் வரவில்லை” என்று ரிஷி சொல்லி விட்டாராம். அப்போது அந்த ரிஷி சொன்னது சரிதான் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. ஏனெனில் அவர் உண்மையை சொல்லி அவன் இங்கு இருக்கிறான் என்று சொல்லியிருந்தால் அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டு போய் ரொம்ப ஹிம்ஸை பண்ணி இருப்பார்கள். அவனுடைய ஹிம்ஸையைத் தடுத்துவிட்டார் அவர். அதனால் அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னது பரவாயில்லை என்கிறது சாஸ்த்ரம். உண்மையை சொல்லி அவனுக்கு ஹிம்ஸையை வரவழைப்பதை அந்த ஒரு சின்ன அஸத்யத்தை சொல்லி அவனைக் காப்பாற்றினாரே! அது ரொம்ப பெரிய விஷயம். இதுதான் தர்ம சூக்ஷுமம் என்பது. அந்தச் சமயத்தில் அஸத்யம் அப்படி தர்மம் ஆகிறது. மீதி சமயத்தில் அஃது அதர்மம் ஆகிறது. அவையெல்லாம் தர்ம சூக்ஷுமங்கள்.

இன்னொருவனை ஹிம்ஸை பண்ணக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மிலிட்டரிக்கு போனவன். என்ன பண்ணவேண்டும்? அவன் சத்ரு சைன்யத்தைக் கொலை பண்ணவேண்டுமா? வேண்டாமா? பண்ணத்தான் வேண்டும்; அதற்காகத்தான் அவன் இருக்கிறான். என்னவோ யாரையும் கொலை பண்ணக்கூடாது என்று சொல்கிறீர்களே? என்றால் ஆமாம் அது நீ கொலை பண்ணினால் அதர்மம். அவன் பண்ணினால் தர்மம். அஃது எப்படி அவனுக்கு ஒரு சாஸ்த்ரம் எனக்கு ஒரு சாஸ்த்ரமா? ஆமாம்! பகவானே அர்ஜுனனிடம் என்ன சொன்னார்? நீ யுத்தம் செய். இஃது உன்னுடைய தர்மம். அர்ஜுனன் இத்தனை பேரைக் கொல்ல வேண்டுமே என்னால் முடியவில்லை; சாத்யமில்லை என்றான். அதற்கு பகவான் தவறு நீ நினைக்கிறது மகாதவறு. இஃது உனக்கு மகாபாக்யம்.

யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வார ம பாவ்ருதம் |
ஸுகின: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்த மீத்ருசம் ||

ரொம்ப அதிர்ஷ்டசாலிகளுக்குத்தான் இந்த அவகாசம் கிடைக்கும். உனக்கு இந்த அவகாசம் கிடைத்திருக்கிறது. கிடைத்த அவகாசத்தை விடாதே. யுத்த பூமியில் இருக்கிறவனுக்கு யுத்தம் பண்ணுவது அவனுடைய தர்மம். ஆனால் இந்தப் பக்கம் வந்துவிட்டு அவன் ஓர் அடி கொடுத்தாலும் அஃது அதர்மம். அந்த இடத்தில் மட்டும் நீ சத்ரு சைன்யத்தை அழிக்கிறது தர்மமே தவிர இந்தப் பக்கம் வந்துவிட்டு ஒரு சின்ன அடி கொடுத்தாலும் அஃது அதர்மம். இப்பேர்ப்பட்டவை தர்ம சூக்ஷுமங்கள். அந்த தர்ம சூக்ஷுமங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் தானம் பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ஒரு ஏழை இருக்கிறான். “சாமி! நான் பட்டினியாக இருக்கிறேன். ஏதாவது கொடுங்கள்.” அவனுக்கு கட்டாயம் நீங்கள் தானம் பண்ணவேண்டும். ஒரு மனிதன் உன் எதிரில் பட்னியாக இருக்கும்போது எப்படி பார்த்து சகிக்க முடியும். சாப்பாடு போடவேண்டும். அல்லது அவனுக்கு சாப்பாட்டுக்கு பைசாவாவது கொடுக்க வேண்டும். அதே மாதிரி சார்! கள்ளு குடிக்கவேண்டும் பத்துரூபாய் கொடுங்கள் என்று கேட்டால் அவனை கழுத்தைப் பிடித்து தள்ளவேண்டும்; அவ்வளவுதான். அஃது எப்படி? அவனுக்கு மட்டும் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். இவனுக்கு மட்டும் கழுத்தை பிடித்து தள்ளவேண்டும் என்கிறீர்களே? என்றால் அதுதான் தர்மம்.

அவன் செய்யக்கூடிய அதர்மத்துக்கு நீ உதவி செய்யக் கூடாது. கள்ளு குடிப்பது என்பது அதர்மம். ஆனால் இவன் நான் பட்னி இருக்கிறேன் சாகப்போகிறேன் என்கிறான். அதற்கு நீ கட்டாயம் உபகாரம் பண்ணவேண்டும். இப்பேர்ப்பட்ட தர்ம சூக்ஷுமங்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டு அந்தமாதிரி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நம் முன்னோர் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். அப்படி நாம் தார்மீகர்களாக நம் வாழ்க்கையை நடத்தினால் வாழ்க்கை பலிதமாகும்.

பகவான் நமக்கு சம்பத்து (செல்வம்) கொடுத்து இருக்கிறார். எதற்காக? இன்னொருவனுக்கு உபகாரம் பண்ணவேண்டும். பகவானுடைய சேவை பண்ணவேண்டும். அதற்குத்தான் பகவான் நமக்கு சம்பத்தை கொடுத்து இருக்கிறார். இந்தச் சம்பத்தினால் நாம் பகவானுக்கு சேவையும் பண்ணவில்லை. மற்றவர்களுக்கு தானமும் பண்ணவில்லையென்றால் என்ன பண்ணுவது. இந்த சம்பத்தை நாம் தலையில் கட்டிக் கொண்டு போகப் போகிறோமா? இல்லை. நாம் தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். ஒரு துணியும் போட்டுக் கொள்ளாமல் வந்தோம். அதே மாதிரிதான் போவோம். ஒரு துணியும் கூட இருக்காது கடைசியிலே. அப்படி இருக்கிறபோது இவ்வளவு சம்பத்து யாருக்காக? பகவத் சேவை செய்யவேண்டும். ஸத்பாத்திரத்தில் தானம் பண்ணவேண்டும். அப்போதுதான் ஜன்மம் சார்த்தகமாகும். இந்த மாதிரி தர்ம சூக்ஷுமங்களை நாம் பெரியவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை நடத்தினால் நம்முடைய வாழ்க்கை பவித்திரமாகும்.

பகவத்பாதாள் தர்மத்தை ப்ரசாரம் செய்வதற்குத்தான் அவதாரம் செய்தார். அவருடைய அவதாரம் வேதாந்த சித்தாந்தங்களை ஜனங்களுக்கு போதிப்பதற்காக ஆனது. அப்பேர்ப்பட்ட பகவத்பாதாள் நம்முடைய குருநாதர் என்பது நம்முடைய மஹாபாக்யம். அப்பேர்ப்பட்ட பகவத்பாதாளுக்கு ஒரு மடத்தை இங்கு நிர்மாணம் பண்ணவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் மனோபீஷ்டம் நிறைவேறட்டும் என்று நான் ஆசீர்வாதம் பண்ணுகிறேன்.


Tuesday, 15 April 2014

ஆசார்யாள் அனுக்ரஹபாஷணம்


.
ப்ரபஞ்சத்திலே எல்லாப் பதார்த்தங்களுக்கும் ஒரு சாதாரணமான ஸ்வபாவம் உண்டு. என்ன ஸ்வபாவம் என்று கேட்டால் நாள் ஆக ஆக அந்தப் பதார்த்தத்தின் சக்தி குறைந்து கொண்டேயிருக்கும் அந்தப் பதார்த்தம் க்ஷீணமாகிக் கொண்டேயிருக்கும். இந்த ஸ்வபாவத்துக்கு விருத்தமான ஒரு பதார்த்தம் இருக்கிறது. அது என்ன பதார்த்தம் என்று கேட்டால் ஆசை என்கிற பதார்த்தம். பகவத்பாத சங்கரர் சொல்லியிருக்கிறார் எல்லாருக்கும் தெரிந்ததுதான்

“அங்கம்கலிதம் பலிதம் முண்டம் தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபிந முஞ்சத்யாசா பிண்டம்”

வயதாகிவிட்டது, பல் எல்லாம் விழுந்து விட்டது, தலையெல்லாம் நரைத்து விட்டது, கைக்கு கம்பு வந்தாயிற்று, இவ்வளவு இருந்தாலும் மனதில் ஆசை ஏதாவது குறைந்து போயிற்றா என்று கேட்டால் அது மட்டும் ஒன்றும் குறையவில்லை. அது இன்னும் வ்ருத்தி ஆகிக் கொண்டேயிருக்கிறது. வயதான உங்களுக்கு என்ன ஆசை? ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அவர் என்னுடைய பேரனுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று, அதுதான் குறைச்சல். அவருக்கு பிள்ளை பிறந்தாகி விட்டது அந்த பிள்ளைக்கு பிள்ளை பிறந்தாகி விட்டது. அவனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்று இந்த தாத்தாவுக்கு வருத்தம்.

ஆசையினுடைய விஷயம் ரொம்ப விசித்தரமானது. மனிதனுக்கு ஸ்வபாவம் எப்படியிருக்கும் என்று கேட்டால் ஒரு ரூபாய் கையில் இருக்கிறவன் என்ன கேட்பான் பத்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைப்பான். பத்து ரூபாய் கிடைத்தால் போதுமா என்று நான் கேட்டால் நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்பான். நூறு ரூபாய் கிடைத்தால் போதுமா? ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பான். ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பத்தாயிரம் ரூபாய், பிறகு லக்ஷம் வேண்டும் என்று சொல்வானாம்.

லக்ஷம் போதுமா எ ன்றுகேட்டால் இல்லை நான் இந்த நாட்டுக்கே இராஜா ஆகிவிட்டால் சரி இராஜா ஆகிவிட்டது அப்போது போதுமா என்று கேட்டால் குபேரன் என்று சொல்கிறார்களே அந்த குபேரனாக நான் ஆகவேண்டும், ஆகிவிட்டால் அதெல்லாம் சரி அந்த இந்திர பதவி கிடைக்க வில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்பான். இந்திரனான பிறகு கேட்டால் எல்லாம் சரி நான் ஸ்ருஷ்டி கர்த்தா ஆகவில்லையே என்று எனக்கு வருத்தம். இப்படிப் போனால் ஆசையின் எல்லையை யார் பார்த்தார்கள்? யாரும் பார்க்கவில்லை. ஆசைக்கு அளவில்லை. ஆசை என்பது மனுஷ்யனுக்கு ஒரு பெரிய சத்ரு மாதிரி இருக்கிறது. ஆசை என்பது எவ்வளவு பெரியது என்பதற்கு தமாஷாக ஓரிடத்தில் சொன்னார்கள். உலகத்திலேயே பெரிய பதார்த்தம் எது? பர்வதம் (மலை) அதைவிடப் பெரியது எது? சமுத்ரம் (கடல்) கடலைவிடப் பெரியது எது? ஆகாயம். ஆகாயத்தை விடப் பெரியது எது? ப்ரம்மம். அதை விடப் பெரியது எது? ஆசை.

“மஹதீ பர்வத: ததபி
லோகே லம ஹதீ அப்தி:
அப்த்யேதி மஹதீ நப:
நபஸோதி மஹத் ப்ரஹ்மா
ததோத் மஹத்யாசா ||

இந்த ஒரு ஸ்வபாவத்தில் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதை சாதிப்பதற்காக இந்தப் பிறவியை எடுத்தோமோ அதையே மறந்து விடுகிறோம். எதனாலே? இந்த ஆசை என்கிற ஒரு பெரிய சத்ருவினாலே. நம் மனதிலே வந்து நம்முடைய லக்ஷ்யத்தையே கெடுத்துவிடுகிறது. நம்முடைய லக்ஷ்யமே வேறு. இந்த மானவ ஜன்மம் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்காக நமக்கு வந்தது. மோக்ஷத்தை அடையவேண்டும் என்கிற லக்ஷ்யத்தை சாதிப்பதற்கு இந்த ஆசை என்பது ரொம்ப விரோதமான ஒரு வஸ்து. விருத்தமான வஸ்து.

ஆசை என்றால் என்ன? உலகத்திலே எந்த பதார்த்தத்தைப் பார்த்தாலும் அது தனக்கு வேண்டும் என்கிற இச்சை. எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்கிற புத்தி வராமல் இருப்பது. இது நம்முடைய லக்ஷ்ய சாதனைக்கு ரொம்ப ப்ரதிபந்தகமான விஷயம். நம்முடைய லக்ஷ்யத்தை எப்போது சாதிக்க முடியும் என்று கேட்டால் யார் இந்த சகல விஷயங்களிலிருந்தும் விமுகர்ளா விரக்தர்ளா இருப்பார்களோ யார் கேவலம் பகவத் ப்ரக்ஞயர்களாக இருப்பார்களோ அவர்கள் இந்த லக்ஷ்யத்தை அடைவார்கள். அவர்களுக்கு இந்த ஆசை என்பது அத்யந்த சத்ரூ பூதமானது. அதனால் நம்முடைய லக்ஷ்யத்தையே நாசமாக்கக்கூடிய இந்த ஆசைக்கு நாம் அடிமையாகிவிட்டால் இனி நாம் நம் லக்ஷ்யத்தை சாதிக்கவே முடியாது. ஆகையால் நம் சாஸ்த்ரங்களுடைய உபதேசம் முதலில் மனதிலிருந்து ஆசைகளை வெளியில் தள்ளிவிடு, ஆசையை வெளியில் தள்ளுவது என்பது முடியுமா? அது ரொம்ப முடியாத காரியம் அல்லவா என்று கேட்டால் முடியாத காரியம் என்று சொல்ல முடியாது. முடிகிற காரியம்தான்.

எப்படி என்றால் ஆசை என்பது எப்போது வரும்? அந்த பதார்த்தத்தினால் எனக்கு ஏதாவது சுகம் கிடைக்கும் என்கிற பாவம் இருந்தால் அதில் ஆசை ஏற்படும். ஸ்வாமிகள் ப்ரவசனம் பண்ணுகிறார் என்று சொன்னால் அதை கேட்கணும் என்கிற ஆசை யாருக்கு ஏற்படும்? யாருக்கு இந்தப் ப்ரவசனத்தைக் கேட்டதினாலே தனக்கு உபயோகம் இருக்கும் என்கிற அபிப்ராயம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இதை கேட்கவேண்டும் என்கிற ஆசை ஏற்படும். அந்த அபிப்ராயம் இல்லாதவர்களுக்கு ஆசை ஏற்படுமா? அப்படி எல்லோருக்கும் ஆசை ஏற்படும் என்று சொன்னால் முழு திருநெல்வேலி இந்த கல்யாண மண்டபத்துக்குள் வரவேண்டியிருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை. என்ன காரணம்? அதிலே நமக்கு உபயோகம் இருக்கிறது என்கிறபுத்தி இருந்தால் அதிலே ஆசை உண்டாகி நிறையப்பேர் வருவார்கள்.

சினிமாவுக்குப் பையன்கள் போகிறார்கள். பையன்கள் என்று சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. இப்போது எல்லாருமே போகிறார்கள். எதற்காகப் போகிறார்கள்? என்னமோ அதைப் பார்த்தால் அங்கே போனால் தனக்கு ஏதோ மனதிற்கு சந்தோஷம் உண்டாகும் என்கிற பாவம் வந்து போகிறார்கள். ஒரு ஆசாரமான விப்ரவானை அங்கே போகச் சொல்லுங்கள். நான் நூறு ஜன்மம் எடுத்தாலும் அங்கே போக மாட்டேன் என்பார். ஏன் போக மாட்டீர்கள்? அங்கே போனால் என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை. ப்ரயோஜனம் இல்லாத காரியத்தை யாராவது செய்வார்களா? நான் போக மாட்டேன். அதற்கு நான் லக்ஷம் ரூபாய் கொடுத்தாலும் போக மாட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆசை என்பது ஏற்பட வேண்டுமானால் அந்தப் பதார்த்தத்தினாலே நமக்கு ஒரு உபயோகம் வரும் என்கிற பாவம் மனதிலே உண்டாகும். அந்த பாவம் யாருக்கு இல்லையோ அவன் மனத்தில் ஆசையே உண்டாகாது. அதனாலே பதார்த்தங்களில் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் அதற்கு முதலில் வேண்டியது என்ன? அதனால் எனக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை என்கிற பாவம் வரவேண்டும். அந்த பாவம் எப்படி வரும்?

ஒரு மாம்பழம், அது சாப்பிட்டால் ரொம்ப தித்திக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதிலிருந்து எனக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை என்கிற பாவம் வரட்டும் என்றால் அது எ ப்படி வரும் என்று கேட்கலாம். எனக்கு ப்ரயோஜனம் இல்லை என்று சொல்கிறோம் இல்லையா? அதில் அந்த ப்ரயோஜனம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அதை கவனிக்க வேண்டும். ப்ரயோஜனம் என்று சொன்னால் தற்காலத்திலே நாக்குக்கு ரொம்ப தித்திப்பாக இருக்கும் என்கிறதை நாம் சொல்லவில்லை. எந்த ஆத்யந்திகமான என்றைக்கும் அழியாத சுகத்தை நாம் விரும்புகிறோமோ அது கிடைக்கிறது இல்லை என்று அர்த்தம். நமக்கு என்றைக்கும் அழியாத சுகம் வேண்டும். நமக்கு லௌகீகமான பதார்த்தங்களினால் சுகம் கிடைக்கிறது. எத்தனை நாழிகை இருக்கும். கொஞ்சம் நாழிகைதான். மாம்பழம் சாப்பிட்டவனுக்கு எத்தனை நாழிகை சுகம்? அதை சாப்பிடுகிற நேரத்திலே சுகம். பின்பு என்னவோ வயிற்றிலே கோளாறு வந்துவிட்டது என்றால் அவன் கதி எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் எந்த பதார்த்தத்தை எடுத்துக் கொண்டாலும் ஆரம்பத்திலே சுகம் என்று தோன்றும். கடைசியில் அதுவே துக்கத்துக்கு காரணமாகும்.

பகவான் பாச சுகத்தைப் பற்றி சொல்லுவார்

“விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத்த தக்ரே (அ) ம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் ||

ஆரம்பத்தில் ரொம்ப அம்ருதம் மாதிரி அநுபவிக்கக் கூடியதாக இருக்கும். பரிணாமத்துக்கு அது விஷமாகும். நாம் விஷயங்களில் ஆசையை வைத்துக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? இந்த விஷயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் நமக்கு சுகத்தைக் கொடுக்கக் கூடியதாக தோன்றும். பரிணாமத்தில் அதனால் நமக்கு சுகம் இல்லை. பகவத்பாத சங்கரர் பகவான் லக்ஷ்மீ ந்ருஸிம்மரை ஸ்தோத்ரம் பண்ணும் சமயத்திலே ஓர் இடத்திலே சொன்னார்

“ஸ்ரக் சந்தனவனிதாதீந்
விஷயான் ஸுகதான் மத்வா
தத்ர விஹரஸே
கந்த பலீஸ த்ருசா தனுதே(அ)மீ
போகா னந்தர துக்கக்ருதஸ் யு: ||

அவர் மனதை ஸம்போதனம் பண்ணச் சொல்லுகிறார். “நீ வந்து நல்ல பூமாலை போட்டுக் கொண்டாலோ சந்தனம் பூசிக் கொண்டாலோ, இல்லை ஒரு சுந்தரமான (அழகான) ஸ்திரீயை (பெண்ணைப்) பார்த்தாலோ சுகம் வரும் என்று எதிர் பார்க்கிறாய். கடைசியிலே உனக்கு துக்கம்தான்.” “போகானந்தர துக்க க்ருதஸ்யு:” பெரிய மாலை கொடுப்பார்கள் போட்டுக்கொள்ளும்போது ரொம்ப நன்றாக இருக்கும்; ஐந்து நிமிஷம் ஆன உடன் எப்போது இதை எடுத்து வைப்போம் என்று தோன்றிவிடும். எங்களுக்கு அதை போட்டுக் கொண்டு அப்யாஸம் இல்லாததினாலே அனுபவம் இல்லை. ஆனால் ஜனங்கள் சொல்வதினாலே அந்த விஷயம் தெரிய வருகிறது. யார் எப்பேர்ப்பட்ட பெரிய மாலை கொடுத்தாலும் நாங்கள் போட்டுக் கொள்வதில்லை. கையில் வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டு விடுவோம். அதேபோல் ஒவ்வொரு விஷயமும் கூட ஆரம்பத்தில் நமக்கு சுகம் கொடுக்கக் கூடியதாக இருந்தாலும் கடைசியில் அதிலிருந்து துக்கம்தான் ப்ராப்திக்கும். அதனால் நாம் முதலில் என்ன சொன்னோம். இதிலிருந்து எனக்கு ப்ரயோஜனம் இல்லை என்கிற பாவம் வரவேண்டும் என்று சொன்னோமே, அதில் ப்ரயோஜனம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என்றைக்கும் அழியாத நித்யமான சுகத்தை நான் விரும்புவதால் அந்த சுகம் இந்த எந்த பதார்தத்திலிருந்தும் கிடைக்காது என்கிற பாவம் மனத்திலே வரவேண்டும். அப்போது நமக்கு அதிலே ஆசை வராது. அதனாலே ஆசையை தடுக்கமுடியும். ஆசை வராமல் செய்து கொள்ள வேண்டும் என்பது அசாத்யமான காரியம் என்று யாரும் நினைக்கக் கூடாது. சாத்யம். வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. யாருக்கு வருகிறது? யாருக்கு வேதா அத்யயனம் பண்ணினால் தனக்கு அதிர்ஷடம் கிடைக்கும் என்கிற பாவம் வருகிறதோ அவனுக்கு வேத அத்யயனத்தில் ஆசை வரும். ஸ்கூலில் நன்றாக படிக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு வருகிறது? நன்றாக படித்தால் நான் பாஸாகி விடுவேன். அடுத்த க்ளாஸுக்கு போவேன். அதுதான் தனக்கு வேண்டும் என்கிற அபிப்ராயம் யாருக்கு இருக்கிறதோ அவன் நன்றாக படிப்பான். அந்த அபிப்ராயமே இல்லாதவன் படிக்கவும் மாட்டான். படிப்பதற்கு அவனுக்கு ஆசையும் வராது. எந்த விஷயத்தை நாம் பார்த்தாலும் இந்த க்ரமம்தான். இந்த க்ரமத்திலே வித்யாசமே இல்லை. அதனாலே மனதிலிருந்து ஆசைகளை போக்கடிப்பது என்பது சிரமமில்லை. ஆனால் அதற்கு இது மார்க்கம். இந்த மார்க்கத்திலே நாம் ஆசைகளை போக்கடிக்கலாம். ஆசைகளை விட்டு விட்டால் பின்பு என்ன பண்ண வேண்டும் என்பது ஒரு ப்ரச்னை. ஆசைகளை விட்டு விட்டால் என்ன பண்ணவேண்டும் என்று கேட்டால் நமக்கு வேண்டியது அந்த ஈஸ்வரசாக்ஷாத்காரம் அல்லவா? இனி அதற்காக உட்காரலாம். எது முடிய நாம் இந்த லௌகீகமான பதார்த்தங்களை அபேக்ஷித்துக் கொண்டு இருக்கிறோமோ அது முடிய நமக்கு பகவத் சிந்தனைக்கே அவகாசம் இல்லை. அநேகம் பேர் “ஸ்வாமிகளே ஈஸ்வர பூஜை பண்ணுகிறேன், எல்லாம் பண்ணுகிறேன். ஆனால் மனம் நிற்க மாட்டேன்” என்கிறது. எதற்காக நிற்கமாட்டேன் என்கிறது? அப்போது வாசலில் வருபவனுக்கு ஜவாப் சொல்ல வேண்டுமே, இவனுக்கு ஜவாப் என்ன சொல்லவேண்டும்? எங்கெங்கேயோ ரூபாய் வைத்திருக்கிறேனே அந்த ரூபாய் என்ன ஆகுமோ? ரூபாய் கொடுக்க வேண்டியவன் கொடுப்பானோ என்னவோ? இது தான் நாம் பூஜையிலே உட்கார்ந்து யோசனை பண்ணுவோம். அப்போது மனம் எப்படி இருக்கும்? எப்போது இது எல்லாவற்றையும் விட்டாகிவிட்டதோ அப்போது மனம் எப்படி இருக்கும். எப்போது இது எல்லாவற்றையும் விட்டாகி விட்டதோ அப்போது மனதிலே வேறு எந்த விஷயமும் வருவதில்லை. கேவலம் ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் ஒன்றுதான் மனதிலே இருக்கும். அதனாலே யார் விஷயங்களில் ஆசையை விட்டு விடுவார்களோ அவர்களுக்கு ஈஸ்வரனை த்யானிப்பதற்கோ ஈஸ்வரனை உபாசிப்பதற்கோ மிகவும் சௌகர்யம் ஏற்படும். தாராளமான அவகாசம் ஏற்படும். நாம் எல்லோரும் எல்லா வியவகாரத்தையும் வைத்துக் கொண்டு ஈஸ்வர சாக்ஷாத்காரம் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் என்று எதிர் பார்க்கிறோம். நம்முடைய த்ருஷ்டி அப்படி இருக்கிறது. வ்யவகாரத்துக்கு இடைஞ்சல் வரக்கூடாது. அதெல்லாம் செய்து கொண்டேயிருப்போம். ஆனால் ஈஸ்வர சாக்ஷாத்காரம் வரவேண்டும்.

இந்த வ்யவகாரத்தை எல்லாம் வைத்துக் கொண்டு சரீர போஷணத்தைப் கொள்கிறோம். ஆனாலும் ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்க வேண்டும் என்று எவன் இருப்பானோ அவன் எப்பேர்ப்பட்ட மனுஷ்யன்? ஒரு நதியைத் தாண்டவேண்டும். நதியை தாண்டவேண்டும் என்று சொன்னால் ஒரு தோணி வேண்டும். அங்கே தோணி இல்லை. ஒரு முதலை இருந்தது. அதன் மேலே உட்கார்ந்து விட்டான். இனி இது அக்கரைக்குப் போகும் இல்லையா சுகமாகப் போய்விடலாமே ஆனால் என்ன ஆச்சு, இவனையே டக்குன்னு சாப்பிட்டு விட்டது அது. அதேபோல் லௌகீகமான வ்யவகாரத்திலேயே ஆத்ம சிந்தனை செய்கிறேன், ஆத்ம சாக்ஷாத்காரம் வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு அந்த ஆசை நிஷ்ப்ரயோஜனமான ஆசை. அது என்ன ஆகும் என்று கேட்டால் கேவலம் ஜனங்களை ஏமாற்றிய மாதிரிதான் ஆகுமே தவிர ஆத்மார்த்தம் என்பது ஒன்றும் இருக்காது. பகவான் வந்து நமக்கு கீதையிலேயும், தவிரவும் தேவீ க்ரந்தங்களிலேயும் இந்த மார்க்கத்தை வெகு ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அனுஷ்டிக்க வேண்டியது ஒன்றுதான் நம்முடைய கடமை. சொல்கிற காரியம் எல்லாம் அவன் செய்ய வேண்டியதை செய்தாகி விட்டது. ஆனால் இந்தக் காலத்திலே நமக்கு வந்திருக்கக் கூடிய ஸமஸ்தை என்ன வென்று கேட்டால் நமக்கு சாஸ்த்ரத்திலே சொன்னதை செய்யவேண்டும் என்கிற தீவிரம் மனதிலே இல்லை. ஒரு பெரியவர் நாம் வந்து யாரை குருவாக நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர் சாஸ்த்ர சித்தாந்தத்தைச் சொன்னால் அதை செய்யவேண்டும் என்கிற பாவம் மனதிலே இல்லை. செய்யவேண்டும் என்கிற பாவம் இல்லாவிட்டால் இத்தனை பேர் உபன்யாஸத்துக்கு எதற்கு வருவார்கள் என்று கேட்டால் ஸ்வாமிகள் உபன்யாஸம் எப்படி செய்கிறார்? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு. ஏனெனில் உபன்யாஸம் ஆன பிற்பாடு அநேகம் பேர் சொல்லுவார்கள். ஸ்வாமிகள் ரொம்ப நன்றாக பேசுகிறார்கள் என்று நமக்கு சர்டிபிகேட். நான் அநேகம் பேரிடம் சொன்னேன், நான் நனகு பேசினேன், பேசவில்லை என்கிற சர்டிபிகேட் தேவையில்லை. நான் சொன்ன விஷயத்தை ஏதாவது மனதிலே கொண்டீர்களா? அதில் ஏதாவது அனுஷ்டானம் பண்ண முடியும் என்பதற்கு வந்தீர்களா? அது இருந்தால் சொல்லுங்கள். வெகு சந்தோஷம் ஆகும். நீங்கள் சொன்னது மனதில் ஆகிவிட்டது. அப்படி செய்வதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் பஹுசந்தோஷம். அதை விட்டுவிட்டு ரொம்ப நன்றாக பேசுகிறீர்கள். தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள். எப்படி பேசுகிறேள். இந்தப் பேச்சு எனக்கு தேவையில்லை. அப்படிச் சொன்னால் எனக்கு பிடிக்காது. ஆனால் யாராவது பகவான் கீதையிலே “மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே” என்று சொன்ன மாதிரி இத்தனை பேரில் ஒருவனாவது ஆசார்யாள் சொன்னதை நாம் அனுஷ்டானத்தில் கொண்டு வரவேண்டும் என்கிற அபிப்ராயத்துக்கு வந்தால் நிஜமாக அவன் ஸ்லாக்யமான மனுஷ்யன். அவன் தன்யனான மனுஷ்யன். அதனால் நாம் ஜீவிதத்திலே ஆத்யந்திகமான சுகத்தை அபேக்ஷிக்கிறோம். அது வந்து கேவலம் ஈஸ்வர அனுக்ரஹத்தினாலே ஈஸ்வர சாக்ஷாத்காரத்தினாலேதான் எற்படும். வேறு எதுவும் இல்லை. அப்பேர்ப்பட்ட ஈஸ்வர சாக்ஷாத்காரம் கிடைக்கிறதாக இருந்தால் நாம் ப்ரபஞ்சத்தில் ஆசையை விட்டுவிட்டு ஆத்ம சிந்தனைக்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நாம் எல்லாரும் ப்ரபஞ்சத்தை விட்டுவிட்டு ஆத்ம சிந்தனைக்கு உட்பகாரவேண்டும் என்று சொன்னால் அப்போது எல்லோரையும் கர்தவ்யப்ரஷ்டாளாக (கடமையை செய்யாதவர்களாக) ஆக்குகிறேன் என்று நினைக்கக்கூடாது. கர்தவ்யத்தை (கடமையை) நிர்வகித்து விட்டு பின்பு நம் ஆத்மார்த்தத்துக்கு வேண்டிய வழியை பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் கர்தவ்யத்தை நிர்வஹித்துவிட்டு என்று சொன்னால் திருப்பி தகராறு வருகிறது. எதுமுடிய கர்தவ்யம்? பையனுக்கு கல்யாணம். பேரனுக்கு கல்யாணம். கொள்ளுப் பேரனுக்கு கல்யாணம். இவ்வளவும் கர்தவ்யமாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நியாயமாக இவ்வளவும் நம் கர்தவ்யம் அல்ல. நம் க ர்தவ்யம் நமக்கு புத்ரன், அவனுக்கு கல்யாணம் பண்ணியாகிவிட்டது என்றால் நம் கர்தவ்யம் தீர்ந்தது. ஆனால் நாமாகவே இல்லாத கர்தவ்யங்கள் எல்லாவற்றையும் தலையில் போட்டுக் கொள்கிறோம். போட்டுக் கொண்டு என்னுடைய கர்தவ்யம் இன்னும் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வாஸ்தவமாக நம்முடைய கர்தவ்யம் முடியத்தான் இருக்கிறது. அதனாலே அந்த கர்தவ்யத்தை செய்தாகி விட்டது என்று சொன்னால் இனி அந்த விஷயத்துக்கு நாம் சிந்தனை செய்யப் போகக் கூடாது. செய்தால் அதற்கு முடிவு இல்லை. நான் முதலிலேயே சொல்லி ஆகிவிட்டது. ஒரு ரூபாய்க்காரன் பத்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்காரன் ஆயிரம் ரூபாய்க்கும் ஆசைப்பட்டுக் கொண்டேயிருப்பான். ஏதோ ஒரு இடத்திலே ஆசை என்பது நிற்க வேண்டாமா? அதற்கு அவதி (முடிவு) என்பது இல்லை.

தங்களுடைய கர்தவ்யத்தை எவ்வளவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்பிறதோ அவ்வளவு செய்துவிட்டு இனி தன்னுடைய ஆத்ம சாக்ஷாத்காரத்துக்கு வேண்டிய வழியை பார்த்துக் கொண்டால் அது ரொம்ப உத்தமமான ஒரு ஸந்நிவேசம். அதற்கு பகவான் எல்லாருக்கும் அனுக்ரஹம் செய்யவேண்டும் அதற்குத் தகுந்த ப்ரேரணையை கொடுக்கவேண்டும். தவிர நாம் வ்யவகாரத்திலேயே அத்யந்த ஈடுபாடு வைத்துக் கொள்ளக்கூடாது. அதிலே என்ன ஆகும். மனதிலே ஈஸ்வர சிந்தனைக்கு அவகாசம் இருக்காது. எவ்வளவுக் கெவ்வளவு வ்யவகாரங்களை ஜாஸ்தி ஆக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஈஸ்வர சிந்தனையிலிருந்து தூரமாகிக் கொண்டே இருக்கும். ஆனால் வியவகாரத்திலே இருக்கும் போது நமக்கு இருக்கிற ராக த்வேஷங்களோ காமக்ரோதங்களோ நம்மை ஜாஸ்தியாக வ்யவகாரத்துக்குள்ளேயே கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறது. ஒருவன் வந்து நமக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் என்று சொன்னால் அதை ரொம்பப் ப்ரமாதமாக்கி விடுகிறோம். ஒருவன் வந்து நம்மை ஒரு சின்ன வார்த்தை பேசிவிட்டான் என்று சொன்னால் அது ரொம்ப ப்ரமாதமாகிறது நமக்கு. கொஞ்சம் தெய்வசம்பத்து நமக்கு இருந்தால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் பகவான் கீதையிலே சொல்கிறார் நாம் எல்லோரும் கீதை படிக்கத்தான் படிக்கிறோம்.

“துவ்ய நிந்தாதுஸ்திர் மௌனீ
ஸந்துஷ்டோ யேனகேனசிதுப ஸ்துதிர்(த்)|
அனிகேத ஸ்திரமதிர் பக்திமான் மே
ப்ரியோ நர: ||”

என்கிறார். அவன் திட்டினால் உனக்கு என்ன? அவன் உன்னைப் புகழ்ந்தால் உனக்கு என்ன? அவன் திட்டி விட்டான் என்பதற்காக அவன் மேல் வ்யவகாரத்துக்கும் போக வேண்டாம். அவன் புகழ்ந்தான் என்பதற்காக அவனை ரொம்ப கட்டிக் கொள்ளவும் வேண்டாம். இரண்டும் வேண்டாம். இரண்டுக்கும் மௌனியாக இருங்களேன். இன்றைக்கு நமக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதற்கு நாம் சந்தோஷப் படவேண்டும். இவ்வளவு கிடைக்க வேண்டியது ஆயிற்றே! இவ்வளவு கிடைக்க வில்லையே என்று அதற்காக கொஞ்சமும் நம்முடைய ப்ரயத்தனம் (முயற்சி) பண்ண வேண்டாம். அதனால் ஈஸ்வரனிடமிருந்து தூரமாகிக் கொண்டே இருப்போம். ஈஸ்வரனுக்கு தூரமாகிக் கொண்டு இருக்கலாம் என்றால் திரும்ப ஒருவர் என்ன ஈஸ்வரனுக்கு தூரம்? ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான்தானே நாம் தூரம் எப்படி ஆகி விடுவோம் என்று. அப்படி அர்த்தம் இல்லை. ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அந்த சாக்ஷாத்காரம் நமக்கு கிடைப்பது இல்லையே. நாம் வாயில் சொல்கிறோமே தவிர வாஸ்தவமாக ஈஸ்வரன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்கிற ஸ்திரமான பாவம் இருக்கிறதா? யாருக்கும் இல்லை. ப்ரஹ்லாதனுக்கு இருந்தது. பாகவதத்திலே அந்த பாவம் ப்ரஹ்லாதனுக்கு இருந்தது. அதனாலே ஈஸ்வரன் ஸர்வத்ர இருக்கிறான் என்கிற பாவம் ஸ்திரமாக வேண்டும். அது ஸ்திரமானால் அதுதான் ஈஸ்வர சாக்ஷாத்காரம். ஆனால் வ்யவகாரத்திலேயே போய்க்கொண்டிருந்தால் அந்த பாவம் எப்படி ஸ்திரமாகும்? அதற்காகத்தான் சொல்கிறோம். ஒருவன் நிந்தித்தாலும், ஒருத்தன் புகழ்ந்தாலும் சமமாக இருக்கவேண்டும். மௌனி என்று சொன்னால் எப்போதும் மௌனமாக இருக்கவேண்டும். அதாவது பகவத் விஷயமான பேச்சு தவிர வேறு பேச்சு வேண்டாம் என்று அர்த்தம். மௌனம் என்று சொன்னால் எனக்கு வேண்டாத விஷயம் யாராவது பேச வந்தால் அப்போது எனக்கு மௌனம். எனக்கு வேண்டிய விஷயம் யாராவது பேச வந்தால் அப்போது நன்றாகப் பேசுவேன். இந்த மாதிரி இல்லை. பகவத் விஷயமான அத்யாத்ம விஷயமான பேச்சு இருந்தால் பேசுவோம். அது இல்லையென்றால் மௌனமாக இருப்போம் என்று உபநிஷத்திலேயே சொல்வார்கள்.

என்றைக்கு எனக்கு எது லப்யமாக இருக்குமோ ப்ராப்தமாக இருக்குமோ அன்றைக்கு அது எனக்கு கிடைக்கும். இதைவிட ஜாஸ்தி கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏன் ஸ்ரமப் படவேண்டும்? இவ்வளவுதான் எனக்கு ப்ராப்தம் என்று என் லலாடத்திலே (நெற்றியிலே) இருக்கிறது. அதற்காக நான் வ்யவகாரத்துக்கு போனால் என்ன ஆகும்? மனதில் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். என்ன நிச்சயம்? நமக்கு இருக்க வேண்டிய நிச்சயம் என்ன? இந்த சராசரமான விஸ்வத்துக்கு ஸ்ருஷ்டி கர்த்தாவானவன் பரமாத்மா இருக்கிறான். அவன் தான் நான் ஜன்மாந்தரத்தில் செய்த தர்மா தர்மங்களுக்கு பலத்தைத் தருவான். அவனை நான் என்றைக்கும் மறக்கக் கூடாது. அவனுடைய சாக்ஷாத்காரத்தினாலேதான். என்னுடைய ஜன்மத்துக்கு சார்த்தக்யம். இந்த ஸ்திரமான நிச்சயம் மனதிலே வேண்டும். இப்படி யார் இருப்பானோ அவன் எனக்குப் ப்ரியமானவன் என்று பகவான் சொன்னான். நாம் அந்த மாதிரி ஸ்திதியிலே இருக்க வேண்டும். நமக்கு அந்த ஸ்திதி ஏற்பட வேண்டும். அதற்கு நாம் பகவத் சிந்தனை செய்ய வேண்டும். அத்யாத்ம விஷயமான சாஸ்த்ரங்களைப் படிக்க வேண்டும். அது மட்டுமில்லை. மனமும் அதே மாதிரி பரிபாகத்திலே இருக்க வேண்டும். வேதாந்தத்திலே பெரிய பண்டிதர்கள் பேசுவது எல்லாம் எப்படி? வேதாந்தத்திலே பேச்செல்லாம் வ்யவகாரத்துக்கு சேர்ந்தது. அவ்வளவு வேதாந்தத்திலே பண்டிதன் ஆனவனுக்கு வைராக்யம் வரவேண்டாமா? என்று சொன்னால் ஒருவர் சொன்னார் இங்கு பாருங்கள் பாண்டித்யத்துக்கும், வைராக்யத்துக்கும் சம்பந்தமில்லை.

நிஷ்ணாதோ அபிச வேதாந்தே வைராக்யம் நைதி துர்ஜன: |
சிரம் ஜலநிதௌ மக்னோ மைனாக இ மார்தவம் ||

நிறைய புஸ்தகங்களைப் படித்திருக்கலாம். வேதாந்தத்திலே ப்ரவசனம் பண்ணலாம். மனதிலே வைராக்யம் வரவேண்டும் என்கிற உத்தேசம் கிடையாது. அப்படி உண்டா? உண்டு சாதாரணமாக எந்த பதார்த்தத்தையும் ஜலத்திலே போட்டால் அது ரொம்ப ம்ருதுவாகும். இது ஒரு சாமான்ய நியமம். ஆனால் நாம் புராணங்களில் கேட்கிற மாதிரி மைனாக பர்வதம் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஜலத்திலேயே மூழ்கி இருக்கிறது ஆனால் அதிலே கொஞ்சம் கூட மாற்றம் வரவில்லை. மென்மையாகவில்லை. “சிரஞ்ஜல நிதௌ மக்னோமைனாக இவ மார்த்தவம்” என்றார்.

ஆகையால் நாம் வேதாந்த க்ரந்தங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல் நம்முடைய வர்த்தனத்தையும் அந்த மாதிரி ஒரு நிவர்த்தி பரமாக வைத்துக் கொள்ளவேண்டும். அப்போது நம்முடைய ஜன்மம் சார்த்தமாகும். நம்முடைய வாழ்க்கை பவித்ரமான வாழ்க்கை ஆகும். இந்த விதமான வாழ்க்கையை நடத்துவதற்கு எல்லோரையும் ஈஸ்வரன் அனுக்ரஹிக்க வேண்டும். ஈஸ்வர பக்தி, குருபக்தி எல்லோருக்கும் மிகவும் அவசியமானது. அந்த இரண்டும் இந்த தெய்வ சாக்ஷாத்காரத்தை நமக்கு அனுக்ரஹம் செய்யக்கூடிய ஒரு நிதி மாதிரி ஆகும். உங்களுக்கு அது விசேஷமாக இருக்கிறது பகவத் அனுக்ரஹத்தினாலே உங்களுடைய குரு பக்தியும், தெய்வ பக்தியும் வ்ருத்தியாகட்டும். உங்களுக்கு இதேவிதமான ஒரு உத்தமமான ஸம்ஸ்காரம் ஏற்பட்டு பகவான் உங்களை அனுக்ரஹிக்கட்டும் என்று அந்த சாரதா சந்த்ரமௌளீஸ்வரரை ப்ரார்த்திக்கிறேன்.


Saturday, 12 April 2014

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின் அபாரமான மந்திரஸித்தி

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின்

 அபாரமான மந்திரஸித்தி:



“யச்சந்தி யத்பதாம்புஜ பக்தா:
குதுகாத் ஸ்வபக்தேப்ய:|
ஸர்வான் அபி புருஷார்த்தா:
தம் அஹம் ப்ரணமாமி சந்திரமௌளீசம்||”

பக்தர்களின் குறைகளை, வேண்டுகோளை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருப்பாதங்களில் ஸ்ரீஆசார்யாள் சமர்ப்பிக்கிறார்கள். குறைகளைப் போக்கி அருளுமாறு பக்தர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். பகவான், பக்தர்களுக்கு அருள் புரிவார் என்ற திடமான நம்பிக்கையுடன் குருநாதர்கள் ஆசி வழங்குகிறார்கள். அவர்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையும் பிரார்த்தனையும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறது.

அத்தகைய தபஸ் சக்திபடைத்த ஆசார்யர்களுள் ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் விசேஷமாகக் குறிப்பிடத் தக்கவராவார். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜையிலேயே நாளெல்லாம் மூழ்கியவர். ஈடினையற்ற மந்திர ஸித்தி கைவரப் பெற்றவர். தீக்ஷண்யமான விழிகளைக் காண்பவர்கள் பயமும் பக்தியும் ஒருங்கே அடைவார்கள்.

ஜபமும் விரதமும் அவரை அக்னியைப் போல ஜொலிக்கச் செய்தன. ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால், அதிலிருந்து பின் வாங்காத இயல்பு பெற்றவர்.

சிருங்கேரியில் ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் தங்கியிருந்த போது, ஒருநாள் திடீரென்று ஸ்ரீமடம் அதிகாரிகளிடம், “நாளை ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் யாத்திரையாகக் கிளம்புகிறார்” என்று அறிவித்தார்.
ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் யாத்திரை என்றால் ஸ்ரீஸ்வாமிகள் யாத்திரை செய்யப் போகிறார் என்பது தான் அதன் உட்பொருள். யாத்திரைக்குத் தயார் செய்வது என்பது எளிதான செயல் அல்ல. அதனால் அதிகாரிகள், “யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு நாள் கூட இல்லையே” என்று தயக்கத்துடன் மறுமொழி கூறினார்கள்.

“உங்கள் சௌகர்யம்” என்று ஸ்ரீஸ்வாமிகள் ஒரே வார்த்தையில் பதிலளித்து விட்டுச் சென்றார்கள். அதிகாரிகளும் சிப்பந்திகளும் ஸ்ரீஸ்வாமிகளின் இயல்பை நன்கு அறிந்து கொண்டவர்கள் தாம். ஆயினும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவகாசம் தேவைப்பட்டது.
பூஜைக்கான பாத்திரங்கள், சமையல் செய்வோர், யானைகள், குதிரைகள், சிப்பந்திகள், பசு, பல்லக்கு, தேவையான சாமான்கள் என சித்தம் செய்வதில் அதிகாரிகள் முனைந்திருந்த போது ஒருநாள் ஆகிவிட்டது. ஸ்ரீஸ்வாமிகள் அனைத்தும் சித்தமான பிறகே யாத்திரை மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் நினைத்துக் கொண்டார்கள்.

மறுநாள் உச்சிக்காலம் வந்தது. ஸ்ரீநரஸிம்ம பாரதீஸ்வாமிகள் பிக்ஷை ஆனதும் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர், ரத்ன கணபதி அடங்கிய பூஜைப் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார். சிருங்கேரியிலிருந்து கிளம்பி விட்டார்கள்.

ஸ்ரீமடமே பரபரப்புக்குள்ளாயிற்று. ஏற்கெனவே தயாராகிக் கொண்டிருந்தவையெல்லாம் அதிவிரைவில் ஏற்பாடாகின. பாதசாரியாக விரைந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீஆசார்யாளை அடைய, அனைவரும் விரைந்தார்கள். பல்லக்குகள், அதனைத் தூக்கும் போகிகள், மற்ற பரிவாரங்கள் என எல்லாம் ஓட்டமும் நடையுமாக, ஸ்ரீஸ்வாமிகளைத் தொடர்ந்து சென்றன.

“மேனா பல்லக்கில் எழுந்தருள வேண்டும்” என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்ட பின்பு வெகுதூரம் நடைபயின்று வந்த ஸ்ரீஸ்வாமிகள் மேனாவில் அமர்ந்து கொண்டார்கள். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜைப் பெட்டியை தம்முடன் பல்லக்கில் வைத்துக் கொண்டார்கள். யாத்திரை தொடர்ந்தது. யாத்திரை, மைசூர் வழியாக மராட்டியத்தை அடைந்தது. தென் மராட்டியப் பிரதேசங்கள் காடுகளால் சூழ்ந்தவை. மலைகள் அரண்களாக நின்றன. துஷ்ட மிருகங்களும் வனத்தில் வசிக்கும் பறவைகளும் பாம்பு போன்ற ஊர்வனவும் நிறைந்த பகுதி. வனப்பகுதியிலே வாழும் கொள்ளையர்களும் வழிப்பறி செய்பவர்களும் எதற்கும் அஞ்சாதவர்கள்.

பூனாவுக்கு அருகில் ஸ்ரீஸ்வாமிகள் யாத்திரை செய்து கொண்டிருந்தார்கள். அப்பகுதியில் “தக்தியர்' (tலீuரீs) என்று கூறப்பட்ட கொள்ளையர்கள் வாழ்ந்து வந்தார்கள். வனத்தில் யாத்திரை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களின் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொலை செய்து, அவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்ளும் வழக்கமுடையவர்கள். அத்தகைய வனப்பகுதியில் ஸ்ரீஉக்ரநரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் மேனா பல்லக்கு சென்று கொண்டிருந்தது. மேனா பல்லக்குடன் ஸ்ரீமடத்தின் காவலர்கள், பரிவாரங்கள் நடந்து சென்றார்கள்.

ஸ்ரீஆசார்யாள் இருபுறமும் பார்த்துக் கொண்டே சென்றார். மிகுந்த ரம்மியமான மாலைவேளை. சூரியன் மேலை வானில் செம்பொற் பந்தாகச் சுழன்று கொண்டிருக்க, பசுமையெல்லாம் பொன்மயமாக தேஜோமயமாகக் காட்சி தந்து கொண்டிருந்த பொன்மாலைப் பொழுது. சற்று தொலைவிலே வெண்ணிற அருவி மலைமீதிருந்து விழுகின்ற காட்சியிலே ஸ்ரீஸ்வாமிகள் லயித்திருந்தார்கள். அருவி, சிற்றாறாகப் பாய்ந்தோடும் பகுதியைக் கடந்த போது, ஸ்ரீஸ்வாமிகள், மேனாவிலிருந்து எட்டிப் பார்த்து, “அடுத்ததாகச் செல்ல உத்தேசித்திருக்கும் ஊர் சமீபத்தில் தான் இருக்கிறதா?” என வினவினார்கள்.
“சமீபத்தில் இல்லை. விரைவாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் அங்கே போய் விடலாம். “சந்தியாகாலம் வந்துவிட்டது. ஸ்நானம் செய்ய அருகில் சிற்றாறு ஓடுகிறது. ஆகையால் அடுத்த முகாமுக்குப் போவதற்கு பதிலாக இன்றைய அனுஷ்டானம், பூஜைகளை இங்கேயே செய்துவிடலாம். மேனாவை இறக்கி வைத்து விட்டு, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்”

கணீரென்ற குரலில் ஸ்ரீஸ்வாமிகள் மொழிவது அனைத்துமே உத்தரவாகவே இருந்தன. ஸ்ரீமடத்து அதிகாரிகள் அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அடர்ந்த காடு, ஓங்கி உயர்ந்த மலைகள், மரங்கள். சூரியன் அஸ்தமித்த நேரம். இன்னும் சிறிது நேரத்தில் பூரணமாக இருள் சூழ்ந்து விடும். ஆறு சலசலத்து ஓடும் ஒலியும் பறவைகளின் ஒலியும் காதுக்கு இனிமையாக இருந்தாலும், இருள் கவிந்த காட்டில் பூஜை செய்வது அபாயமல்லவா? கள்வர்கள், கொலைக்கும் அஞ்சாதவர்கள் நிறைந்த பகுதி இது என்பது ஸ்ரீஆசார்யாள் அறியாததா?

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் நினைத்த செயலை நடத்திக் காட்டும் இயல்புள்ளவர் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். எனவே மறு வார்த்தை கூறாமல், கவலையும் அச்சமும் கொண்டவர்களாக, இரவு பூஜைக்கான ஏற்பாடுகளை, செய்வதில் முனைந்தார்கள். ஸ்ரீஸ்வாமிகள் சிற்றாற்றில் ஸ்நானம் செய்யச் சென்றார்கள்.

சருகுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. தீவட்டிகள் ஏற்றப்பட்டன. பூஜை நடைபெறும் இடத்தைச் சுற்றி சிப்பந்திகள் தயாராக நின்றார்கள். ஸ்ரீமடம் காவலாளிகள் நீண்ட வாட்களைத் தாங்கியவர்களாக சற்று தொலைவில் நின்றார்கள். குதிரைகள், யானை, பசு, போன்றவை மரங்களில் கட்டப்பட்டிருந்தன. அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீஆசார்யாள் அங்கே வந்தார். நெற்றியிலே விபூதி பளிச்சிட்டது. கழுத்தில் ஸ்படிக மாலை. ருத்ராட்ச மணிமாலை. புதுவஸ்திரம் தரித்துக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார்கள். ஸ்ரீஆசார்யாள், ஸ்ரீசந்திரமௌளீஸ்வர பூஜையைத் தொடங்கினார். அவர் முன்பாக மலர்கள் தட்டுத் தட்டாக வைக்கப்பட்டிருந்தன. அபிஷேகம் முடிந்து அலங்காரத்தைத் தொடர்ந்தார்.
அச்சமயத்தில் தக்கியக் கொள்ளைக்காரர்கள் தீவட்டி வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு அதை நோக்கி வந்தார்கள் “பல்லக்கு, பரிவாரம் என்று வந்திருப்பவர்கள் கொழுத்த தனவந்தர்கள் தான். இன்று நமக்கு நல்ல அதிர்ஷ்டம் வாருங்கள். நாம் அவர்களை நெருங்குவதை அவர்கள் அறியக் கூடாது. அடிமேல் அடிவைத்து வாருங்கள்.”

கொள்ளையர்களின் தலைவனைப் போன்ற ஒருவன் கூறியதை அனைவரும் ஏற்று, மெல்ல நடந்து சென்று ஸ்ரீஆசார்யாள் பூஜை செய்யும் இடத்தை அணுகினார்கள். பூஜை செய்யும் ஸ்ரீஆசார்யாளைச் சுற்றி சிப்பாய்கள் நிற்பதைக் கண்ட கொள்ளையர்கள், வாளேந்திய சிப்பாய்களை, கொடுவாளைக் காட்டி மிரட்டி அழைத்துச் சென்று விட்டார்கள். அவர்களை ஓரிடத்தில் கட்டிப் போட்டு விட்டு கொள்ளையர்கள் மீண்டும் ஸ்ரீஆசார்யாள் பூஜை செய்யும் இடத்திற்கு வந்தார்கள்.
கரிய தோற்றம்; முகத்திலே முறுக்கு மீசை, உருட்டி விழிக்கும் கொடூரமான பார்வை, கூர்மையான ஆயுதங்களைத் தாங்கிய புஷ்டியான கரங்கள். கறுத்த போர்வையைப் போர்த்திக் கொண்டு நின்ற கொள்ளையர்களை மடத்தின் சிப்பந்திகளும் போகிகளும் பார்த்து அச்சத்தால் தேகம் நடுங்க பேச்செழாமல் நின்றார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள், வேறு எந்த விதச் சிந்தனையுமின்றி பூஜையில் ஆழ்ந்திருந்தார். 
ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் தங்கக் கவசம் அணிந்து, தங்க, வைர மாலைகளை அணிந்து ஒளிவீசிக் கொண்டிருந்ததைக் காணக் காண கொள்ளையர் தலைவனின் கொடூரமான முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது. ஸ்ரீஆசார்யாளின் அமுத மொழிகளிலே ருத்ரமும் சிவஸ்தோதிரரிங்களும் ஒலித்ததைக் கேட்டு கொள்ளையர்களும் அருகில் நெருங்க அஞ்சினார்கள். பூஜை முடிவடையட்டும் என்று காத்திருந்தார்கள். பூஜை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இருள் கனத்து, வானில் நக்ஷத்திரங்கள் மின்னின. பூஜை முடிவதற்குள் பொழுதே விடிந்து விடுமோ என்ற கவலை தோன்ற, தலைவன் தனது கூட்டத்தாரைப் பார்த்தான். பரிஜனங்களும் மடத்தைச் சேர்ந்த பிறரும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன், பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். குருநாதரின் கவனத்தைத் திருப்பும் துணிவு எவருக்கும் இல்லை.

பூஜை, நைவேத்யம், பிரார்த்தனை, தியானம் அனைத்தும் முடிந்த பிறகு ஸ்ரீஆசார்யாள் கண் மலர்ந்த போது அவருக்கு முன்னால் தலைவன் நின்றான். பளபளக்கும் வாளையும் அவனையும் பார்த்த பார்வையிலேயே, கொள்ளையர் தலைவனின் கொடூரம் மறைந்துபோயிற்று. கைகள் ஒருசேரக் கும்பிட்டான். மற்ற கொள்ளையர்கள் இதைக் கண்டு கோபமும் வியப்பும் அடைந்தார்கள். “இதென்ன! கொலை செய்யும் கைகள் முதல் முறையாகக் குவிகின்றனவே! இவரிடம் ஏதோ மாயம் இருக்கிறது! இல்லாவிடில் நமது தலைவர் இப்படி பணிந்து குழைந்து நின்றதில்லையே!”
“அவரைச் சொல்கிறாயே. நமக்கே அருகில் நெருங்க அச்சமாக இருக்கிறதே.” என்றான் மற்றொருவன். ஸ்ரீஆசார்யாள், தமக்கு முன்னால் நின்ற கள்வர் தலைவனை தீர்க்கமாக நோக்கினார். அவர் பார்வையில் பயமோ, உடலில் பதற்றமோ துளியும் இல்லாததைக் கண்டு, அந்தத் தலைவன் பரபரப்புற்றான்.

ஆயினும் வந்த வேலையைக் கவனிக்க வேண்டும் என்ற உணர்ச்சி உந்த, தலைவன், ஸ்ரீஆசார்யாளை நோக்கிக் கூறலானான். “சாமிக்குப் போட்டிருக்கும் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்து விடுங்கள் நாங்கள் போய்விடுகிறோம்.” ஸ்ரீ ஆச்சார்யாளின் அருள் வதனத்தில் புன்னகை அரும்பியது. “யாரப்பா நீங்கள்? எதற்காக நகைகளை உன்னிடம் கொடுக்க வேண்டும்? காரண காரியங்களைப் பார்த்துத் தான் எதையும் செய்ய இயலும். நீ வந்த காரியம், அதற்கு என்ன காரணம் விளக்கமாகச் சொல். கேட்போம்.”
இவ்வாறு அவனிடம் பேசியவாறே சுற்றிலும் அவருடைய திருவிழிப்பார்வை சென்று திரும்பியது. அங்காங்கே அச்சமே உருவாக நின்ற மடத்தின் சிப்பந்திகளையும் அவர்கள் அருகில் வாளும் கையுமாக நின்ற அரக்கர்களையும் கண்டார்.

“சாமி, நான் ரொம்ப நேரமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். வந்தோம் முடித்தோம் கிடைத்ததைப் பறித்துக் கொண்டு சென்றோம் என்கிற கொள்ளையர்கள் நாங்கள். இந்தக் காட்டு வழியிலே வருகிற பிரயாணிகளை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை நடக்கிறது. இன்றைக்கு, உங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றால் நாங்கள். எல்லோரும் பல நாட்கள் பசியின்றி இருக்க முடியும். உங்களைப் பார்த்தால், நாங்க கும்புடற சாமிமாதிரித் தெரியுது. அதனால் தான் இவ்வளவு நேரமா, ஒண்ணும் செய்யாமலே நாங்கள் இருக்கோம். நீங்களா கொடுத்து விட்டால் நல்லது.” கொள்ளையர் தலைவன் கூறிய பின்பும் ஸ்ரீ ஆச்சார்யாளின் வதனத்தில் மலர்ந்த புன்னகை மறையவே இல்லை.

“அன்பனே! நீ கூறியதெல்லாம் சரிதான். உன் குலத்தொழிலை நீ செய்யவந்திருக்கிறாய். ஆனால் ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் அணிந்திருக்கும் இந்த ஆபரணங்கள் எல்லாம் அவருக்குச் சொந்தமானவை. பக்தர்களால் அளிக்கப்பட்டவை. எல்லாம் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தவைகள். இவற்றை, எனக்கு சொந்தமில்லாத இவற்றை நான் எப்படி உனக்கு அளிக்க முடியும்? நீகேட்பது நியாயமாக இல்லையே!, மேலும் இவை எல்லாமே சிவபெருமானின் சொத்துக்கள். சிவன் சொத்து குல நாசம் என்பதை நீ அறிந்ததில்லையா? நீ செய்கின்ற பாபத்தொழிலைக் கைவிட்டு விடு. இனியாகிலும் திருந்தி நல்ல வழியிலே வாழுங்கள்.”

“காலங்காலமாகச் செய்கிற தொழிலில் பாப புண்ணியம் பார்த்துக் கொண்டிருந்தால் நாங்கள் எல்லாரும் பசியால் உயிரை விட வேண்டியது தான். இனிமேலும் பேசிக் கொண்டிருக்க முடியாது. அடேய், இருளா, சாம்பா, அந்தப் போர்வையைக் கீழே விரித்துப் போடு. பூஜை செய்யற சாமியை நாம தொடவேண்டாம். அவங்களே எல்லா நகைகளையும் எடுத்து இதில் போடட்டும். நாம் எடுத்துக் கொண்டு வந்த வழியில் போய்விடலாம். ம். போர்வையைக் கொண்டுவா!”

கொள்ளையர் தலைவன் கூறியதும் நான்கு பேர் ஓடிவந்து ஸ்ரீஆசார்யாள் முன்பாக கறுப்புக் கம்பளியை விரித்தார்கள். ஸ்ரீஆசார்யாள், ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு நமஸ்காரங்கள் செய்த பின்பு, அலங்காரமாகத் திகழ்ந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றினார்.

தங்கக் கவசத்தையும் ரத்தின மாலைகளையும் தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளங்களையும் மேலும் பல ஆபரணங்களையும் கம்பளியில் வைத்தார். ஸ்ரீசந்திரமௌளீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும் ரத்ன கர்ப கணபதியையும் பூஜைப் பெட்டியில் வைத்து விட்டு, “அப்பனே! இவற்றையெல்லாம் கொண்டு செல்ல உங்களால் முடிந்தால் கொண்டு செல்லுங்கள்” என்றார். “சாமி சொன்னபடி செய்துவிட்டார். வாங்க வாங்க. கம்பளியில் சுருட்டி பத்திரமா எடுத்துட்டுப் போகலாம்” என்றான் கொள்ளையர் தலைவன். தலைவன் உத்தரவுக்காகவே காத்துக் கொண்டிருந்த கொள்ளையர்களில் ஒருவன் கம்பளியைச் சுருட்டவந்தான். முடியவில்லை. அவனுக்கு உதவி செய்ய நான்கு பேர் ஓடிவந்தார்கள். நான்கு மூலைகளையும் ஆளுக்கு ஒரு புறமாகத் தூக்க முயன்றும் கம்பளியைத் தூக்க முடியவில்லை. மரத்தைப் பிடுங்கி வீச எறியத்தக்க பலசாலிகளான தங்களால் கேவலம் இந்தக் கம்பளிப் போர்வையைத் தூக்க முடியவில்லையே, எதனால்? என்று திகைத்தனர். மேலும் பலர் உதவிக்கு வந்தார்கள்.

இவற்றையெல்லாம் மடத்து சிப்பந்திகள் கண் கொட்டாத வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். 'இதென்ன விந்தை! இத்தனை தடியர்களால் தூக்க முடியவில்லை என்றால்?” அப்போது எவரும் எதிர்பாராதபடி கம்பளிப் போர்வை பற்றி எரிந்தது. நகைகள் இருந்த இடம் தவிர மற்ற பகுதிகள் எரிந்து கரிந்தன.

கொள்ளையர் தலைவன் திடுக்கிட்டான் எதிரிலே அமர்ந்து மோன நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் இவர் யார்? நாம் கும்பிடும் சாமிதானா? இவரிடமே நாம் திருடவந்தது தவறா? கம்பளியைத் தூக்க முடியாதது, ஒரு பக்கம் என்றால் கண் முன்னே எரிந்து போனது எதனால்?
நாம் செய்தது தவறு, செய்யத் தகாத குற்றத்தைச் செய்துவிட்டோம் என்று கொள்ளையர்கள் உணர்ந்தார்கள். “நாங்க கும்பிடற சாமி நீங்க, ஒங்ககிட்டே களவு செய்ய வந்த எங்களை மன்னிக்கணும். எங்களை வாழவைக்க வேணும். சாமி சாமீ..” என்று தலைவன் அரற்றினான், அழுதான். அழுது புரண்டான். விழுந்து வணங்கினான். அவனைத் தொடர்ந்து கொள்ளையர் கூட்டமே ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பாதகமலங்களைப் பற்றிக் கொண்டது. தங்களுடைய பாதகமலங்களைப் போக்கியருளும்படி கண்ணீர் விட்டார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள், கருணையும் வாத்ஸல்யமும் நிறைந்த திருஷ்டியால் அவர்களை நோக்கினார்கள். கூட்டத்தினர் அந்த 'நோக்கிலே' தங்கள் வாழ்வின் நோக்கமே அழிந்து போவதை உணர்ந்தார்கள். பாறைகளாக இருந்த அவர்கள் இதயத்திலே ஈரம் கசிந்தது. மனிதத்துவம் பூத்தது. கொடூரம் மறைந்தது.

ஸ்ரீஆசார்யாள் அவர்களின் திருமுகத்தையே தரிசித்தவண்ணம் அனைவரும் நின்றார்கள். அவருடைய அமுத மொழிகளைப் பருகுவதற்காக சாதகப் பறவைகளைப் போலக் காத்துக் கொண்டிருந்தார்கள். “ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரின் ஆபரணங்களை அபகரிக்கும் நோக்கத்துடன் வந்தீர்கள். இவர் யார் தெரியுமோ! மிகப்பெரும் கொள்ளைக்காரர். உங்களுக்கெல்லாம் தலைவர். ஸ்ரீருத்ரத்தில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?

“ககுபாய நிஷங்கிணே ஸ்தேனானாம் யதயே நமோநமோ
நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ”

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமோ? வாள் ஏந்திய கள்வர் தலைவராகிய பரமேஸ்வரருக்கு நமஸ்காரம். வில்லும் அம்பும் ஏந்திய கொள்ளையர் தலைவராகிய பரமேஸ்வரருக்கு நமஸ்காரம்” அத்தகைய பரமேஸ்வரர் தான், இதோ இங்கு ஸ்ரீசந்திரமௌளீஸ்வரராகக் காட்சி தருகிறார். உங்களுடைய தலைவரிடமிருந்தே நீங்கள் கொள்ளையடிக்க வந்தது அபசாரம் இல்லையா? பரமேஸ்வரர் உலகிலுள்ள எல்லாருக்கும் தந்தை. சொந்தத் தந்தையிடமே களவு செய்யலாமா? என அமைதியாய்க் கேட்டார். “சாமி! நாங்க புத்தியில்லாத அற்ப ஜன்மங்கள், எங்களுக்கு புத்தி கூறித்திருத்துங்கள், இனிமேல் நாங்கள் கொள்ளையடிக்க மாட்டோம். வழிப்பறி செய்யமாட்டோம். இது சத்தியம், சத்தியம். என்றனர் கொள்ளையர்கள்.

“ஆசீர்வாதம். எல்லாரும் க்ஷேமமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.” என்று தொடங்கி அவர்களுக்கு நல்லுபதேசங்கள் அளித்ததுடன் அவர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்கவும் உத்தரவிட்டார்கள், ஸ்ரீ ஆச்சார்யாள். இரவு முழுவதும் கொள்ளையர் அனைவரும், ஸ்ரீஆசார்யாள், பரிவாரங்களுக்குக் காவல் இருந்ததுடன், அவர்கள் அடுத்த முகாம் செல்லும் வரை உடன் சென்றார்கள்.

ஸ்ரீஉக்ர நரஸிம்ம பாரதீஸ்வாமிகள் அவர்களின் அபாரமான மந்திரஸித்தியையும் அளவற்ற கருணையையும் கண் முன்னே கண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் பரிவாரங்களும் மெய்சிலிர்த்தார்கள்.

நன்றி : அம்மன் தரிசனம் மாத இதழ்