Thursday, 20 February 2014

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம்


ஸ்ரீஆதிசங்கரர் ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன்மகன் எப்படியாகிலும் உயிருடன் இருந்தால் போதும், மரணத்தின் வாயினின்றும் முதலையின் வாயினின்றும் அவர் மீண்டால் போதும். உயிருடன் அவர் இருந்தால் தன் கடைசி காலம் வரை அவரைப் பார்த்துக்கொண்டாகிலும் இருக்கலாமே என எண்ணி அவர் தாயார் அவரை ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள் தன் வயோதிக நிலையில் தன் ஒரே மகன் தன் ஈமச்சடங்குகளைச் செய்யக்கூட அருகில் இருக்கமாட்டானே என வருந்திய தன் தாய் ஆர்யாம்பாளிடம் சங்கரர் உறுதி அளிக்கிரார்

“ஹே அம்மா! நீ எப்போது நினைத்தாலும், அது பகலாக இருக்கட்டும், இரவாக இருக்கட்டும், இரண்டுக்கும் நடுவில் எப்போதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ பிரக்ஞையுடன் இருந்தாலும், பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பினும், அல்லது துயருற்ற நிலையில் இருப்பினும், என்னை நீ நினைத்த மாத்திரத்தில் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு உன்னிடம் வருவேன். நீ உயிர்நீத்தால் உன் இறுதிக் கடன்களை நானே செய்வேன். நீ என்னை நம்பலாம்.” எனக் கூறிய ஸ்ரீசங்கரர் தன் தாயார் மறைந்த பொழுது தன் மஹிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்யங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோக்ஷபதத்திற்கு அனுப்பிய பிறகு ஸ்ரீசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, உறவினரின் எதிர்ப்புக் கிடையே, தனது வீட்டுப் பின்புறம் வாழை மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் ஸம்ஸ்காரம் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத் துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களான ‘மாத்ரு பஞ்சக’த்தினைப் பாடுகிரார் :
“தாயே! என்னை கருவாய்த்தாங்கி நான் இவ்வுலகில் வந்து பிறக்கும்வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையாயிருந்த என்னை இரவெல்லாம் கண் விழித்துக் காத்து, மலம் முதலிய துர்கந்தங்களிலிருந்து காத்து, பத்தியமிருந்து, முகமலர்ச்சியுடன் என்னைக் காப்பாற்றிய உனக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்று முதல் இன்று வரை நீ செய்தவற்றுக்கு கைம்மாறு செய்யப் பல ஜன்மங்கள் போதாது. அப்படிப்பட்ட உனக்கு என் நமஸ்காரங்கள்”

“ஒரு சமயம் நீ உன் அருமைப் புதல்வனாகிய நான் ஸன்யாஸம் பெற்றதாக விடியற்காலையில் கனவு கண்டு, குருகுலத்தில் வாசம் செய்த என்னிடம் ஓடிவந்து என்னை அணைத்துக் கதறினாய். அந்தச் சமயம் குருகுலத்தில் யாவரும் காரணம் கேட்க, உன் கனவைச் சொல்லிக் கதறி, அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறிற்றே அத்தகைய தாயான உன் கால்களில் விழுந்து வணங்கிக் கதறுகிறேன்”. (இங்கு நாம் விதி வலியது எனக் காண்கிறோம். அந்தத் தாயின் கனவு மெய்யாகி ஸ்ரீசங்கரர் உண்மையிலேயே ஸன்யாஸம் ஏற்க நேர்ந்ததே!)
“எல்லாச் சக்திகளும் அற்றுப்போன உன் கடைசி காலத்தில் பிராண ரக்ஷணத்திற்குச் சிறிது நீர் தந்திருந்தால் எனக்கு மன ஆறுதல் உண்டாகியிருக்கும். அந்தப் பாக்யம் கூட எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பும் ஒவ்வொரு வருடமும் உனது திதியில் முறைப்படி சிராத்தம் செய்து உன் ஆத்மாவைத் திருப்தி செய்விக்கும் பாக்யத்தையும் ஸன்யாஸியான நான் அடையாது போய்விட்டேனே! மரண சமயத்தில் தாரக மந்திரத்தை உன் காதில் ஓதி அதன் மூலம் உன்னை மறுபிறப்பற்ற மோக்ஷத்தை அடைவிக்கும் பாக்யத்தையும் காலந்தாழ்த்தி வந்த காரணத்தினால் இழந்து விட்டேனே. அப்படிப்பட்ட என் மீது ஒப்பற்ற கருணையை வைப்பாயாக.”

 “அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் 'முத்தே! மணியே! என் கண்ணே! இராஜாவே! குழந்தாய்! நீ வெகு காலம் ஜீவிக்க வேண்டும்' என்று வாழ்த்திய உன் வாய்க்கு வரட்டரிசியைப் போடுகிறேனே”
“அம்மா! பிரசவ வேதனையில் 'அம்மா! அப்பா! சிவா! கிருஷ்ணா! கோவிந்தா! ஹரே முகுந்தா!' என்றெல்லாம் கதறிய உன் ஒரு கதறலுக்குப் பிரதிபலன் செய்ய முடியுமா? அந்த உன்னதத் தாயான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.”

முற்றும் துறந்த ஸன்யாஸியான, ஸாக்ஷாத் பரமேஸ்வர அவதாரமான ஸ்ரீஆதிசங்கரரையே இவ்வாறு தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமுண்டு, ஸ்ரீபகவத்பாதாள் சாதாரணமான உலகத்தில் நாமின்று காணும் ஸன்யாஸிகளைப் போன்றவர் அல்லர். தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய ஸன்யாஸிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். “தாயிற்சிறந்த ஆலயமில்லை” என்னும் சாஸ்திர வாக்யத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும் கூட, அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம் அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும், தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என லகுயோக வாஸிஷ்டம் கீழ்வரும் ஸ்லோகத்தினால் கூறுகிறது :
இவ்வாறு இருக்கையில் மஹாப்ரஹ்ம ஞானியான ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய், தந்தையின் மஹத்வத்தை விவரிக்க விழைவது சிரமஸாத்யம். அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப்போன்றதொரு மாமுனி தோன்றிய குலமே, அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்களென :
எனும் வரிகள் கூறுவதுடன் அப்படிப்பட்ட புனித மஹான்கள் புண்ய க்ஷேத்ரங்களுக்கு சமமாகி அவர்கள் செல்லும் இடமெல்லாம் புனிதமடைவதுடன் அவர்களின் பாதங்கள் பட்ட புழுதிகூடப் புனிதமடைந்து அவர்களைக் காணும் பாக்யம் பெற்றவர்களும் பவித்ர மடைகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமா!
அப்படிப்பட்டதொரு பரமானந்தக் கடலில் திளைத்த மனதை உடைய மகனின் பிறப்பினால் அந்தக் குடும்பமே புனிதமடைகிறது. அவன் பிறந்த பூமியே புனித பூமியாகிறது எனவும் விவரிக்கப்படுகிறது.
சாதாரணமாகவே சாஸ்திரங்கள் முதலானவை தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை மனுதர்ம சாஸ்திர காலத்திலிருந்து காண்கிறோம். மனுவானவர் ஒரு மகன் நூறு வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாதெனக் கூறுகிறார் :
பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன் பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. ஸ்ரீசாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை :

“தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும் அவள் காக்கப்பட வேண்டியவள்” எனக் கூறுவதன் மூலம் விளக்குகிறார். “ஒருவனுடைய ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு வித்திடுபவளும் அவளே என ஸ்ரீசங்கர பகவத்பாதாளே விளக்குகிறார்.

1 comment: