மனிதன் தார்மீகனாக இருக்கவேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
பொதுவாக சாஸ்த்ரத்தில் கேட்டுக் கொண்டிருப்போம். என்ன இதற்கு அர்த்தம் என்று கேட்டால் எதைச் செய்தால் நமக்கு நல்லதாகும் என்று சாஸ்த்ரம் சொல்கிறதோ அது தர்மம். எதைச் செய்தால் நமக்குக் கெடுதலாகும் என்று சாஸ்திரம் சொல்கிறதோ அது அதர்மம். தர்மம், அதர்மம் என்கிற இரண்டு சப்தங்களுக்கு இது மிக சுருக்கமாகச் சொல்லக் கூடிய அர்த்தம். இந்த தர்மத்தினாலேயும் அதர்மத்தினாலேயும் நமக்கு நல்லது உண்டாகும், கெடுதல் உண்டாகும் என்று சொல்லுகிறோமே அது இந்த ஜென்மத்திலேயே என்று இல்லை அடுத்த ஜென்மத்திலே என்கிறதும் உண்டு.
நாம் இந்த ஜென்மத்தில் நல்ல கார்யத்தைச் செய்தால் ஜென்மாந்திரத்தில் அதனுடைய பலனான சுகத்தை அவசியம் அனுபவிப்போம். அதேபோல் இந்த ஜென்மத்தில் நாம் அதர்மத்தை ஆசரித்தால் அதனுடைய பலனாக துக்கத்தை அடுத்த ஜென்மாவில் அவசியம் நாம் அனுபவிக்க வேண்டி வரும். அதனால் இந்த தர்மாதர்மங்களின் பலத்தை இந்த ஜென்மத்திலேதான் நாம் அனுபவிக்க வேண்டும் என்ற நியமம் இல்லை. எதற்காகச் சொல்லுகிறேன் என்று கேட்டால் அதர்மத்தைச் செய்தால் கெடுதல் உண்டாகும் என்று சொன்னோம். அநேகம் பேர் “அது எப்படி நாங்கள் எங்கள் இஷ்டப்படி செய்கிறோம். எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. சரியாகத்தான் இருக்கிறோம்.” என்று சொல்லுவார்கள். நீங்கள் இப்போதைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் அதனுடைய பலன் ஜென்மாந்தரத்தில் நிச்சயமாக உங்களுக்கு அந்த துக்கம் அவசியம் வரும். இந்த விஷயத்தில் ஐயமே வேண்டாம்.
பகவான் நமக்கு பகவத் கீதையை உபதேசம் செய்தார். பகவத் கீதையிலே அநேக தத்வங்களை பகவான் நமக்கு உபதேசம் செய்தார். அந்த தத்வங்களை பகவான் உபதேசம் செய்யும் போது மனிதர்களை இரண்டு விதமாகப் பிரித்துச் சொன்னார். சில மனிதர்கள் தைவீ சம்பத்தோடு இருப்பார்கள். சிலர் ஆஸுர்ய சம்பத்தோடு இருப்பார்கள் என்று சொன்னார். தைவீசம்பத்து இருப்பவர்களுக்கும் அஸுர்ய சம்பத்து இருப்பவர்களுக்கும் வித்யாசம் என்று கேட்டால் “தைவீசம்பத்து மோஷாயா நிபந்தி அஸுரிமதா” என்று சொன்னார். தைவீசம்பத்து இருப்பவனுக்கு முக்தி. அஸுர்ய ஸம்பத்து இருக்கிறவனுக்கு பந்தம். பந்தம் என்று சொன்னால் இந்த ஸம்சார சக்ரத்திலே திரும்ப, திரும்ப சுற்றிக் கொண்டே இருப்பது. அதற்கு இன்னொரு விளக்கம் சொல்லப்போனால் இந்தப் பிறவி, மரணம் இரண்டும் மாறி, மாறி வந்துகொண்டே இருக்கிறது. இந்த பந்தம் என்பது நமக்கு இருக்கும் சமயத்தில் ஓர் இடத்தில் துர்வாஸர் சொன்னார் “நானாயோனி ஸஹஸ்ர ஸம்பவ விஸாக்யாதா ஜனன்ய கஸ.” ஐயோ! எத்தனை தாயார்கள் வயிற்றில் நான் பிறந்தேனா, எத்தனை தந்தைகள் எனக்கு ஆகிவிட்டார்களோ அதற்கு கணக்கே கிடையாது. எத்தனையோ ஜென்மங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு ஜென்மத்திலேயும் நல்லதோ கெட்டதோ என்னமோ பண்ணினேன். அந்த ஜென்மாவை முடித்தேன். திரும்ப இன்னொரு ஜென்மா வந்தது. அதிலேயும் என்னவெல்லாமோ பண்ணினேன். இப்படி அநாதியாக வந்து கொண்டே இருக்கிறது. இப்படியே இருக்கட்டும் என்று சொன்னால் அதற்கு யாரும் விவேகிகள் சம்மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த துக்கம் போதும், இனி இந்த துக்கம் வேண்டாம் என்றுதான் விவேகிகள் சொல்லுவார்கள். பிறவி என்பது வந்துவிட்டது என்று சொன்னால் பின்பு நாம் எவ்வளவு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தன்னுடைய மனசாக்ஷியைக் கேட்டால் தெரியும். இன்னொருத்தனுக்கு சொல்லவே வேண்டாம். பிறவி என்பதே ஒரு பெரிய துக்கம்.
பகவத்பாத சங்கரர் “சிவாபராத ஸமர்பண ஸ்தோத்ரம்” சொல்லும் சமயத்துலே சொன்னார்
“ஆதௌ கர்ம ப்ரசங்காத் கலஹதி கலுஷம்
மாத்ரு குக்ஷோஸ்திதம்மாம்
ஷண்மூத்ரான் அமேத்ய மத்யே க்வதயதி நிதாரம்
ஜாடரோ ஜாதவேதா.”
தாயார் வயிற்றில் இருக்கும் சமயத்துலே எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வருகிறது என்பது யாருக்கும் சொல்லவே முடியாது. பகவான் ஒரு விசித்ரம் நமக்குப் பண்ணி இருக்கிறான். தாயார் வயிற்றில் இருந்த சமயத்துலே எப்படி எல்லாம் இருந்தோம் என்பதை நமக்கு ஞாபகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அது நமக்கு ஒரு பெரிய உபகாரம் அவன் பண்ணினது. அதெல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும். ஆனால் யாரைக் கேட்டாலும் “மாத்ரு கர்ப்பத்திலே எப்படி இருந்தாய்?” என்று கேட்டால் “எனக்குத் தெரியாது. ஆனால் அதை அனுபவிக்கும்போது மட்டும் எனக்கு இனிமேல் இது வேண்டாம். இனிமேல் மாத்ரு கர்பத்துக்கு வர வேண்டாம் என்று” அந்த சமயத்தில் “ஒவ்வொரு ஜீவனும் சொல்லிக் கொண்டு இருக்குமாம். சாதாரணமாகவே ஒருவரை ஒரு தப்பு பண்ணி இருந்தால் அவனுக்கு ஒரு பெரிய தண்டனையை நீதிபதி கொடுத்து விட்டால் அந்த சிக்க்ஷை அனுபவிக்கும்போது இனி எப்போதுமே இந்தத் தவற்றை நான் பண்ணக்கூடாதப்பா! இனி எனக்கு என்றைக்குமே இந்த சிக்க்ஷை வரக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் ஜெயிலிலிருந்து வந்த பின்பு திரும்ப அவன் அந்தக் கார்யத்துக்குத்தான் போகிறான். அதேபோல் அந்த மாத்ரு கர்ப்பத்தில் இருப்பது, அந்த ஒன்பது மாசம் அதுவே ஒரு பெரிய சாதனை. வந்தாச்சு உலகத்துக்கு, இனி ஒன்றும் கவலையில்லை, என்று சொல்ல முடியுமா? பால்யம் அது ஒரு தீராத துக்கக்கதை ஏனென்று கேட்டால், பசிக்கும் ஆனால் பசிக்கிறது என்று சொல்லத் தெரியாது. ஏதாவது ஓர் எறும்போ ஏதாவது கடிக்கும். கடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. எல்லாத்துக்கும் அழுவது ஒன்றுதான் தெரியும் குழந்தைக்கு. அது அழுவதைப் பார்த்துவிட்டு நாம்தான் அதற்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.
அப்போது அது என்ன சௌக்யமா? கிடையாது. இல்லை ஒரு 5, 6, வயது வந்ததுக்குப் பிற்பாடு அப்போது எல்லாம் பேசத் தெரிகிறது. ஒன்றும் கஷ்டம் இல்லையே என்று சொன்னால் ஸ்கூலுக்குப் போகச் சொல்கிறார்கள். வீட்டிலே இருக்க விடமாட்டேன் என்கிறார்கள். அப்போது என்ன செய்வது? சரி வீட்டில் பிடுங்கல் தாங்க முடியாமல் ஸ்கூலுக்குப் போனால் அங்க வாத்யார் சும்மா இருக்க மாட்டேங்கறார். இந்த ஹோம் ஒர்க் பண்ணு, அதைப்பண்ணு, இதைப்பண்ணு என்று சொல்லி விடுகிறார். இனி அவருடைய பிடுங்கலும் தாங்க முடியவில்லை. வீட்டினுடைய பிடுங்கலும் தாங்க முடியவில்லை. என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. இப்படி கொஞ்ச நாள் ஓடுகிறது. பின்பு சரி ஓரளவுக்கு படித்தாகி விட்டது என்று சொன்னால் இது முடிய என்னவோ சுதந்திரமாக இருந்தோம். பின்பு கல்யாணம் என்று ஒரு சாஸ்த்ரம் பண்ணி விடுகிறார்கள். அதன்பின்பு அது இன்னும் பெரிய நரகமாக இருக்கிறது. இதெல்லாம் பார்க்கும்போது ஜீவனத்துலே சுகம் என்பது எவ்வளவு இருக்கிறது? மொத்தமாக பார்க்கும்போது துக்கம்தான் அதிகமாக இருக்கிறதே தவிர சுகம் என்பது கிடையாது. அது ரொம்ப அத்யல்பமாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது திரும்ப ஜென்மம் வேண்டும் என்று யார் கேட்பார்கள்? விவேகியானவன். “எனக்கு வேண்டாமப்பா ஜென்மம். அது வந்தால்தான் இவ்வளவு கஷ்டம்.” என்பான்.
நம்முன்னோர் ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சுருக்கமாக, “ஜென்ம துக்கஞ்ஜரா துக்கம் ஜாயா துக்கம் புனபுன ஸம்ஸார ஸாகரம் துக்கம் தஸ்மாத் ஜாக்ர ஜாக்ரத” இதெல்லாம் ஜென்ம துக்கம். பிறவி என்பது துக்கம். முதலில் சொல்லி ஆகிவிட்டது ஜரா துக்கம் = இந்த வயசான காலத்துலே இருக்கக்கூடாது என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள். “ஸ்வாமிகளே! வயசாகி விட்டது என்றால் இனி இந்த உலகத்துலே இருக்கக் கூடாது. வேகம் போய் விடவேண்டும்.” “எதுக்கு அப்படி சொல்றீர்!” “இல்லை அது அனுபவத்துக்கு வந்தால்தான் தெரியும். நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஸ்திதி வேண்டாம். காரணத்தை என்னடாவென்று கேட்டுப் பார்த்தால் தான் நல்ல பூர்வ வயசுலே இருந்த சமயத்துலே யார் மேலெல்லாம் ப்ரீதியை வைத்து அவர்களுக்காக தான் எவ்வளவோ உழைத்து அவர்களை வளர்த்தேனோ அந்தப் பசங்கள் இந்த வயசான காலத்துலே இந்த பெரியவரை திரும்பி பார்க்கவும் மாட்டான். ஐயா! எப்படி இருக்கேள் என்பதைக் கேட்கவும் மாட்டேன் என்கிறான். அப்படி இருக்கும் போது இருக்கணுமா? இங்கு நாம் இந்த ஸ்திதியிலே இருக்கணுமா? எந்தக் கார்யத்தையும் தானாக பண்ணிக்கொள்ள முடியாது. இன்னொருத்தனுடைய தயவு தேவை இருக்கிறது. யாரும் வரமாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் “ஜராதுக்கம்” “ஜாயாதுக்கம்” என்னமோ ஆரம்பத்திலே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நிறையப் பேருக்கு என்ன நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அந்த சௌக்யத்தை அனுபவித்தால்தான் தெரியும் என்று கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுகிறார்கள். பின்பு ஏனப்பா இதிலே இறங்கினோம். சௌக்யமாக இருந்திருக்கலாமே? இப்போது பெரிய கிணற்றுக்குள்ளே இறங்கின மாதிரி ஆகிவிட்டது. மேலுக்கு வரவே முடிவதில்லை” என்று சொல்லி விடுகிறார்கள்.
ஒருவர் என்னிடம் ப்ரத்யக்ஷமாகச் சொல்லி விட்டார். ரொம்பப் பெரிய மனிதர்தான். பெரிய ஸ்திதியிலே இருக்கிறவர். எனக்கு ஸந்நிதானத்தின் சகவாசம் சிறு வயதிலேயே ஆகி இருந்தால் கல்யாணமே பண்ணிக் கொண்டு இருக்க மாட்டேன்” என்றார். அந்தக் கஷ்டம் வந்து இப்போது ஆசார்யார் உபன்யாசத்தினாலேயும் என்னுடைய அனுபவத்தினாலேயும் எனக்கு இப்போது தெரிகிறது என்றார். அதனால் இந்த உலகத்திலே சுகம் என்பது அத்யல்பமாக இருக்கிறது. துக்கம்தான் நிறைய இருக்கிறது. அதனால் எவனும் இந்த ஜென்ம ஜராபரண சக்ரத்துலே சுற்றணும் என்பதை விரும்பவே மாட்டான். ஆனால் எவனுக்கு தைவீசம்பத்து இல்லையோ அசூர்யஸம்பத்து இருக்கிறதோ அவனுக்கு இந்த சக்ரத்திலிருந்து விடுதலை என்பது இல்லவே இல்லை. சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். தைவீ ஸம்பத்து இருக்கிறவனுக்கும் ஆஸுர்ய ஸம்பத்து இருக்கிறவனுக்கும் வித்யாசம் இவன் தார்மீகனாக இருப்பான். அவன் அதார்மீகனாக இருப்பான். மொத்தத்திலே சொல்லப்போனால் இவனுக்கு எப்போதும் தர்மத்திலேயே மனசு போய்க் கொண்டிருக்கும், அவனுக்கு எப்போதும் அதர்மத்திலேயே மனசு போய்க்கொண்டிருக்கும்.
அது எப்படி? என்று சொன்னால் ராமாயணத்திலிருந்து உதாரணம் காட்ட வேண்டி இருந்தால் ராவணன், விபீஷணன். ராவணனுக்கு எப்போதும் அதர்மத்திலேயே மனசு. விபீஷணனுக்கு எப்போதும் தர்மத்துலேயே மனசு. அவன் சொல்லிக் கொண்டே இருந்தான். விபீஷணன், ராவணனிடம் “அண்ணா! நீ பண்ணியது பெரிய தப்பிதம். இந்தத் தப்பிதத்தைச் செய்யக்கூடாது. நீ மரியாதையாக அந்த சீதாமஹாதேவியை ராமர் ஸந்நிதியில் ஒப்பித்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வா.” அது ராவணனுக்குப் பிடிக்கவில்லை. எப்படி பிடிக்கும்? ஸம்ஸ்க்ருதத்திலேயே ஒரு வசனம் உண்டு. “வினாச காலே விபரீத புத்தி” என்று அவனுக்கு ராவணனுக்கு, வினாச காலம். அதனால் விபீஷணன் என்று இல்லை யார் நல்லது சொன்னாலும் அவனுக்கு ஏறவே இல்லை.
உலகத்துலேயும் அநேகம் பேருக்கு நாம் ஒரு நல்லது சொல்லப்போனால் அந்த சமயத்துலே அவர்களுக்கு அது மண்டையில் ஏறாது. ஏனெனில் அவர்களுக்கு ஓர் அனர்த்தத்தை அனுபவிக்க வேண்டிய சமயம் வந்திருக்கும்போது யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே ஸ்திதி ராவணனுக்கு ஆகிவிட்டது. அவன் கேவலம் அஸுர்ய ஸம்பத்துடன் இருந்ததனால் அவனுக்கு வினாசம் ஸம்பவித்தது.
அதுவே விபீஷணன் தைவீ ஸம்பத்தோடு இருந்ததனால் அவனுக்கு பகவான் ஸ்ரீராமசந்த்ரனுடைய பரிபூர்ணமான அனுக்ரஹம் கிடைத்தது. பரம பாகவதோத்தமன் என்று நாம் எல்லோரும் கௌரவிக்கிறோம். அதனால் முக்யமாக மனிதன் தார்மீகனாக இருக்கவேண்டும். அதார்மீகனாக இருக்கக் கூடாது. மனசு எப்போதும் தர்மத்தைச் செய்யவேண்டும் என்பதில்தான் போகவேண்டுமே தவிர அதர்மத்தைச் செய்யணும் என்பதில் போகக்கூடாது. சாராம்சம். “அப்போது எல்லோருக்கும் என்ன தர்மம் தர்மம் என்கிறீர்கள்? நான் என்ன பண்ணனும்?” என்று சொல்கிறீர்கள் நீங்கள். அநேகம் பேர் கேட்டார்கள். “ஸ்வாமிகளே! சும்மா தர்மம், அதர்மம் என்று இரண்டு ஸப்தங்களில் உபன்யாஸத்தை முடித்து விடுகிறீர்கள். நாங்கள் என்ன செய்யணும் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.” என்று கேட்டார்கள். சாஸ்த்ரமே சொல்லி இருக்கிறது, நம்முடைய முன்னோர்கள் எதையும் விடவில்லை. எல்லாமே சொல்லியிருக்கிறார்கள். நாம் அதைப் பார்க்கவில்லை. பார்க்காதது நம்முடைய தவறு. அவர்களுடைய தவறு ஒன்றுமில்லை. எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் தர்மம், தர்மம் என்று சொன்னால் என் ஜீவிதத்துலே நான் தார்மீகனாக இருக்கணும் என்று சொன்னால் எப்படி இருக்கணும் என்றல்லவா நீ கேட்கிறாய், உனக்கு ஜவாப் சொல்கிறோம். ஓர் ஐந்து விஷயங்களை நீ ஞாபகம் வைத்துக்கொள். நீ தார்மீகன் என்று அர்த்தம். என்ன ஐந்து விஷயங்கள் என்று சொன்னால் அவர்கள் சொன்னார்கள் :
“அஹிம்ஸா, ஸத்யம் அஸ்தேயம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹா:
ஏதம் ஸாமாதிகம் தர்மம் சாதுர் வர்ணே ப்ரவீன்மனு”
ஐந்து விஷயங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளப்பா போதும். அந்த ஐந்து விஷயங்களையும் என்னுடைய வாழ்க்கையில் நான் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவேன் என்கிற தீர்மானத்துடன் இரு. கொண்டு வா. நீ தார்மீகன் என்று அர்த்தம். இதுக்கு விருத்தமாக இருந்தால் நீ அதார்மீகன் என்று தானாகவே தெரியும். அந்த ஐந்திலே முதலில் அவர்கள் சொல்வது அஹிம்ஸா. அஹிம்ஸா என்பதற்கு சாதாரணமாக நாம் என்ன நினைத்துக் கொள்கிறோம் என்றால் இன்னொருத்தனை இம்ஸிக்கக்கூடாது, கொல்லக் கூடாது என்று நினைத்துக் கொள்கிறோம். அதுமட்டும் அல்ல. இன்னொருத்தனுடைய மனசுக்குக் கூட நோவு உண்டாகும். எப்படி? நாம் வ்யவகரிக்கக்கூடாது. அநேகம் பேருக்கு இன்னொருத்தனுடைய மனசுக்கு நோவு உண்டாகும்படி பேச்சுகளைப் பேசுவது ஓர் அப்யாஸம்.
ரொம்பச் சின்ன விஷயத்துக்கு பெரிய வார்த்தைகளைச் சொல்லிவிடுவது. ஓர் அப்யாஸமாக இருக்கும். ஆனால் நாம் வந்து அவனை அடிக்காவிட்டாலும் அந்த கடினமான வார்த்தைகளைச் சொல்லி அவனுடைய மனசைப் புண்படுத்தினோமே அது ஒரு பெரிய பாபம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனுக்கு ஒண்ணும் பண்ணலையே ஏதோ இரண்டொரு வார்த்தை சொன்னேன் என்று சொல்லுவான். பின்பு கேட்டால் நீ சொன்ன அந்த இரண்டு வார்த்தைதான் நீ அடித்ததைவிட அவனுக்கு பெரிய உபத்ரவத்தைப் பண்ணியிருக்கிறது. ஒருத்தன் நமக்கு ஓர் அடி கொடுத்தான் என்றால் கொஞ்ச நேரம்தான் அந்த வலி இருக்கும். பின்பு போய்விடும். ஆனால் ஒரு கடினமான வார்த்தை சொன்னோமானால் எப்போதும் அவனுக்கு அது ஞாபகத்தில் இருக்கும். அடடா! இவர் என்னை இப்படி சொன்னாரே என்று இருக்கும். அதனால் அஹிம்ஸா என்பது எந்தவிதத்திலேயும் மற்றவர்களுக்கு நாம் உபத்ரவம் செய்யக் கூடாது என்பது.
உபத்ரவம் செய்யக்கூடாது காரணம் இல்லாமல். ஏனெனில் யுத்த களத்துக்குப் போய் யுத்தம் பண்ணவேண்டும் என்கிற சமயத்தில் அஹிம்ஸா என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் பேசாமல் இருக்கணும் என்றால் அது பெரிய தப்பிதம் ஆகிவிடும். அவனுக்கு அது ஒரு கர்தவ்யம். பகவான் அர்ஜுனனுக்குச் சொன்னார், “நீ யுத்தம் செய்யவேண்டியது உன்னுடைய கடமை. நீ இதைச் செய்யலை என்று சொன்னால் தப்பிதம் ஆகிவிடும்.” என்றார். யுத்த களத்தில் இருப்பவனுக்கு மட்டும்தான் அது தர்மம். பகவான் அர்ஜுனனுக்கு யுத்தம் செய்யச் சொன்னார் என்று சொல்லி நாமும் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் யுத்தத்துக்குப் புறப்பட்டோமானால் அது ரொம்ப விபரீதமாகிவிடும். “தஸ்மாத் யுத்தாய யுத்தாய்ஸ்ய” என்றார். அதனால்தான் நான் யுத்தத்துக்குப் புறப்பட்டேன் என்றால் அது சரிப்பட்டு வராது. யுத்தத்துக்கு வந்தவன் அந்த யுத்த களத்துக்குப் போன வீரனுக்கு மட்டும் அது தர்மமே தவிர வேறு யாருக்கும் அது தர்மம் ஆகாது. அதனால் நாம் யாருக்கும் உபத்ரவம் செய்யக்கூடாது என்பதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அது செய்வதற்கு அநேகம் பேருக்கு அநேக அவகாசங்கள் இருக்கும். அதிகாரமாகவோ, இன்னும் வேறு விதமாகவோ எனக்கு அதிகாரம் இருக்கு. அதனால் நான் அவனை இப்படி பண்ணிவிட்டேன், அப்படி பண்ணி விட்டேன் என்று சொல்வது பெரிசில்லை. ஆனால் அந்த அதிகாரத்தை உபயோகித்துக் கொண்டு அவனுக்கு ஓர் உபகாரம் செய்தேன், இவனுக்கு ஓர் உபகாரம் செய்றேன் என்று சொல்வது ரொம்பப் பெருமை. அதை விட்டுவிட்டு எனக்கு அதிகாரம் இருப்பதனால் அவனுக்கு ஓர் உபத்திரவம் பண்ணினேன் என்று சொல்வது பெரிசில்லை. அதனால் அஹிம்ஸா என்பதை முதல் தர்மத்தை மனசுலே வைத்துக்கொள் என்றார்கள்.
அடுத்ததாக சொன்னார்கள் ஸத்யம். ஸத்யம் சொல்வது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மை சொல்ல வேண்டும். நமக்கு என்ன தெரியுமோ எப்படி தெரியுமோ அப்படி சொல்ல வேண்டும். நாம் தெரிந்து கொண்டது ஒன்று, ஆனால் அவனுக்கு சொல்வது இன்னொன்று. அதுதான் அசத்யம் என்பது. நாம் என்ன பண்றோம்? அவனைத் தப்பான வழியிலே கொண்டு போகிறோம். அவன் இது மாதிரி நினைத்துக் கொள்ளட்டும், இப்படி அவன் தப்பு செய்யட்டும். அதனால் இப்படி அவன் துக்கம் அனுபவிக்கட்டும். அதைப் பார்த்து நாம் சிரிப்போம். ஸந்தோஷப்படுவோம். இதுவா எண்ணம்? அதுவே ஸத்யத்தைச் சொல்லி அவனை சரியான மார்க்கத்தில் கொண்டு போனோமானால் அதைவிட உத்தமமானது வேறு என்ன இருக்கிறது? ஒரு வார்த்தை நாம் சொன்னோமானால் என்றைக்குமே அதைக் காப்பாற்ற வேண்டும். ஜனங்களுக்கு ஒரு பெரிய ஸ்வபாவம். இன்று ஒரு வார்த்தை பேசுவது, நாளைக்கு இன்னொரு வார்த்தை பேசுவது. ஓய்! நேற்று இப்படி சொன்னீரே! என்றால் யார் அப்படி சொன்னது? நான் இல்லை. நீங்கள் வேறு யாரையோ நினைத்துக் கொண்டுவிட்டீர்கள். அப்போது ஒவ்வொன்றுக்கும் சாக்ஷி ஆதாரங்களை எப்படி கொண்டு வருவது? அது இன்னொருத்தன் அந்த மாதிரி நம்மைக் கேட்கும்படி நாம் பண்ணிக்கொள்ளக்கூடாது. நாம் என்றைக்குமே ஸத்யத்துக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இது எப்போதும் ப்ரதி ஒருவனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது அஸ்தேயம். அதாவது இன்னொருவனுடைய சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. நீ உழைக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். சாப்பிடவேண்டும். இன்னொருவனுக்கு நீ தர்மம் பண்ணலாம். நீ ஒன்றும் உழைக்காமல் எனக்கு அனாயசமாக அவனுடைய சொத்து எப்படி கிடைக்கும்? என்பதையே நீ யோசனை பண்ணிக்கொண்டு இருக்கிறாயே. இது ஒரு பெரிய தப்பிதம். சாஸ்திரத்திலே உனக்கு என்ன நியமம் சொல்லி இருக்கிறது என்று கேட்டால் “நியாயோ பார்த்தித வித்தேன கர்தவ்யம் த்யாத்ம ரக்ஷணம்” என்று சொல்லி இருக்கிறது. நியாயமான வழியிலே சம்பாத்யம் செய். உன்னைக் காப்பாற்றிக் கொள். மீதி பேருக்கு தர்மமும் செய். வேண்டாமென்று சொல்லவில்லை. நாம் என்ன செய்கிறோம், அநியாயம் பண்ணி நிறைய சம்பாதிப்பது அதை வைத்து தர்மம் செய்வது. திருப்பதியிலே வெங்கடாசலபதி ஸ்வாமி உண்டியலில் கொண்டு போட்டு விட்டு வந்து விடுவது.
ஒருவர் என்னிடம் சொன்னார், “நான் ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டேன், நான் ஒரு மார்க்கத்திலே சம்பாத்யத்துக்குப் போகிறேன். ஒரு மார்க்கம் என்றதும் அது என்ன மார்க்கம் என்று எல்லோருக்கும் புரியலாம். இந்த மார்க்கத்திலே எனக்கு எவ்வளவு வருகிறதோ அதிலே நான்காவது பாகம் உனக்கு என்று நான் ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டேன். எனக்கு நான்கு லக்ஷம் கிடைத்தது. ஒரு லக்ஷம் ஸ்வாமிக்குப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்”. என்றார். நான் உடனே “நீங்கள் நியாயமான மார்க்கத்தில் சம்பாதித்திருந்தால் அதிலே நீங்கள் ஒரு ரூபாய் ஸ்வாமிக்கு சமர்ப்பித்திருந்தாலும் ஸ்வாமிக்கு ஸந்தோஷம் ஆகியிருக்கும். நீங்கள் லக்ஷம் சம்பாதித்துவிட்டு வந்து விட்டேன் என்ற திருப்தி உங்களுக்கு இருந்தாலும் ஸ்வாமிக்கு மட்டும் இவன் தவறான வழியிலே போய்க் கொண்டு இருக்கிறானே என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யும்.” என்று நான் சொன்னேன். அதனால் நாம் அந்யாய மார்க்கத்திலே ரொம்பவும் சந்தோஷத்துக்கு பதிலாக நியாயமான மார்க்கத்தில் கொஞ்சமாக சம்பாதித்தாலும் அதுவே மனசுக்கு திருப்தி. நமக்கு இகத்துக்கும், பரத்துக்கும் சௌக்யத்தைக் கொடுக்கக்கூடிய மார்க்கம். அதுக்குத்தான் “அஸ்தேயம்”. இன்னொருவனுடைய சொத்தை அந்யாயமாக நீ அபேக்ஷிக்காதே. அந்யாயமின்றி நியாயமாக உனக்கு வரவேண்டி இருந்தால் நாம் ஒன்றும் அதில் ஆக்ஷேபிக்கவில்லை. ஒருவன் மற்றவனிடம் வேலை செய்தான். அவன் சரியாக மாதாமாதம் சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவரிடம் நீ தாராளமாக கேட்கலாம். அதில் யாரும் உன்னை ஆக்ஷேபிக்க மாட்டார்கள். என்னிடம் வேலை வாங்கினீர். எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்று கேட்கலாம். ஒரு சம்பந்தமும் இல்லாமல் எப்படி அவனுடைய சொத்தை நாம் அபகரிப்பது என்று மட்டும் யோஜனை செய்யாதீர்கள். அதுதான் சாஸ்த்ரம் சொல்கிறது.
அதனால் “அஸ்தேயம்.”
“சௌசம்” “சௌசம்” என்றால் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பரிசுத்தமாக இருக்கணும் என்று சொன்னால் நன்றாக உடலெல்லாம் நன்கு ஸ்நானம் பண்ணி நல்ல வேஷ்டி உடுத்திக் கொண்டு வந்து விட்டால் அதுதான் பரிசுத்தம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த பரிசுத்தி என்பது இரண்டு விதம். உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒன்று. அதைவிட ரொம்ப முக்யம் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது. மனசுலே ரொம்பவும் கல்மஷங்கள் இருந்து வெளியிலே பார்ப்பதற்கு மட்டும் ரொம்ப சுத்தமாக இருக்கிறேன் என்று சொன்னால் அது போதாதப்பா. “சௌசம் த்விவிதம் ப்ரோக்தம் பாஷ்யம் ஆத்யந்த்ரம் க்ருதா” ம்ருத்யனாம் யம்க்ருதம் பாஷ்யம் பாவ அந்திஸ்த காம்பாம்” என்று சொன்னார். வெளியிலே இந்த சரீரத்தை சுத்தப்படுத்திக் கொள்வது என்பது நல்ல ஸ்நானம் செய்து சுத்தமாக இருப்பது என்பது. மனசை சுத்திபடுத்திக் கொள்வது என்பது ஒன்று இருக்கிறது. அதற்கு இந்த ஸ்னானமெல்லாம் போறாது. மனசுலே இருக்கிற கல்மிஷங்களைப் போக்க வேண்டும். என்ன மனசுலே இருக்கிற கல்மிஷங்கள்? முக்யமாக இருப்பது காம, க்ரோதங்கள்தான்.
இன்னொன்று வேண்டும் என்பது காமம். இன்னொருவன் மேலே கோபித்துக்கொள்வது என்பது கோபம். இந்த இரண்டும் இருந்தால்தான் அவனுடைய மனசு அசுத்தமாக இருக்கிறது என்று நாம் சொல்லுவோம். அநேகம் பேருக்கு ரொம்ப சின்ன விஷயத்துக்கு ஒரு கோபத்தை உண்டாக்கிக் கொள்வது ஒரு சுகமான உணர்வு. ஆனால் கோபத்தினால் உண்டாகக் கூடிய அனர்த்தங்கள் எப்படி இருக்கும் என்று நான் ஓர் இடத்தில் சொன்னேன். இங்கே சொல்வது ரொம்பப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெரிய அதிகாரிக்கு கோபம் வந்தால் அவர் தன் அடுத்த அதிகாரி மேல் கோபத்தைக் காட்டலாம். அவர் வந்து தனக்கு அடுத்த அதிகாரியிடம் கோபம் காட்டிக் கொண்டே போனால் பெரிய அதிகாரிக்கு ஒரு கோபத்தினால் எத்தனையோ பேருக்கு ஆபத்துண்டாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரிய அதிகாரி வந்து “நான் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? இந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயம். இதை ரொம்ப சுலபமாகவே சரி பண்ணலாமே” என்கிற ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாரானால் யாருக்கும் அதனால் அனர்த்தம் உண்டாகாது. ஆனால் கோபம் வந்த சமயத்தில் நமக்கு அது ஒன்றும் தெரிய மாட்டேன் என்கிறது. எல்லாம் அனர்த்தங்கள் உண்டான பிற்பாடு அடடா நான் கோபித்துக்கொண்டதனால் இதுமாதிரி ஆகி விட்டதே என்று பின்பு பச்சாதாபம். பச்சாதாபத்தினாலே என்ன ப்ரயோஜனம்? ஆரம்பத்திலேயே விவேகம் இருக்க வேண்டும். அதனால் மனசிலே காம, க்ரோதங்கள் என்பதுதான் மனசுடைய கல்மிஷங்கள். இந்த கல்மிஷங்களை நீக்கினோமானால் மனசும் பரிசுத்தம் ஆச்சு என்று அர்த்தம். அதனால் சௌசம் என்று சொன்னால் சரீரமும், மனசும் பரிசுத்தமாய் இருக்கிறது. பரிசுத்தமாக சரீரத்தையும், மனத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு “இந்த்ரிய நிக்ரஹ”. நம்முடைய இந்த்ரியங்களை, இந்திரியங்கள் என்று சொன்னால் இந்த கண், காது, மூக்கு, நாக்கு இந்த சரீர அவயவங்கள். இதை நம்முடைய ஆதீனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன ஆதீனத்திலே வைத்துக்கொள்வது? அதாவது எங்கே ஒரு த்ரிசம் அல்லது சினிமா என்பது வருகிறது என்று கேட்டால் உடனே அங்கு போய் பார்க்கணும் என்ற எண்ணம் வருகிறது. எங்கேயாவது ஒரு பக்ஷணம் இருக்கிறது என்று சொன்னால் உடனே அதைச் சாப்பிடணும் என்ற எண்ணம் வருகிறது. இந்த மாதிரி நம்முடைய இந்த்ரியங்கள் கொஞ்சமும் நம் வசத்தில் இல்லாமல் அதுக்கு நாம் வசமாகி விட்டோம். அதனால்தான் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்திரியங்களுக்கு நாம் வசம் ஆகாமல் இந்த்ரியங்கள் வசத்திலேயே நாம் இருந்தால் ஒரு முறை சொன்னேன் பெரிய தார்மீகப் ப்ரவசனத்தைப் பண்ணிக்கொண்டே இருப்போம். எல்லோரும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பக்கத்திலேயே எவனாவது ஒரு ஜிலேபி கொண்டு வந்து விட்டால் ‘டக்கென்று’ வாயில் போட்டுக்கொண்டு விடுகிறான். இங்கே தர்ம ப்ரவசனம் நடக்கிறது அதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறோமே என்கிற நினைவு போய் விடுகிறது. ஏனென்றால் இந்த்ரியத்துக்கு அவன் வசமாகி விடுகிறான். ஆனால் “அந்தப் பக்கம் கொண்டு போடா இங்கு கொண்டு வராதே” என்று சொன்னால் அதுதான் ரொம்ப விரோதி. இந்த ஐந்தும் அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம் இன்னொருவனுடைய சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது சௌசம் = மனதையும் சரீரத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த ஐந்தும் எவனுக்கு இருக்கிறதோ அவன் தார்மீகன். இந்த ஐந்தும் எங்கு இல்லையோ அவனுக்கு தர்மத்தில் ப்ரவிருத்தியே இல்லை என்று அர்த்தம். நமக்கு முக்யமாக சாஸ்த்ரத்திலே சொன்ன வெவ்வேறு தர்மங்களை அனுஷ்டிப்பதற்கு சாமர்த்தியமும், அவகாசமும் இல்லாவிட்டாலும் இந்த ஐந்தையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அப்படியே நடப்பதற்கு, நமக்கு சாமர்த்தியம் இருக்கிறது. அந்த சாமர்த்தியத்தை நாம் உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
அதனால் எல்லோரும் இந்த ஐந்து தர்மங்களையும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். ஏதோவிருத்தமான தர்மங்கள் அஹிம்ஸைக்கு விருத்தமான ஹிம்ஸை என்பது அதர்மம். அஸத்யம் சொல்வது என்பது அதர்மம். இன்னொருவனுடைய சொத்தை அபகரிப்பது என்பது அதர்மம். மனசையும், சரீரத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது அதர்மம். இந்த்ரியங்களை தன்னுடைய வசத்தில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது அதர்மம். அந்த அதர்மங்களை யாரும் செய்யாதீர்கள். இந்த தர்மங்களை எல்லோரும் அனுசரணம் செய்யுங்கள். இப்படி இருக்கிறவன் தார்மீகன் என்று சொல்லப்படுவான். அவனுடைய ஜீவனம் ரொம்ப உத்தமமான ஜீவனமாகும். அவன் இகத்திலேயும், பரத்திலேயும், இகம் என்று சொன்னால் இந்த ஜென்மம், பரம் என்று சொன்னால் ஜந்மாந்த்ரம். இந்த ஜென்மத்திலேயும், ஜென்மாந்த்ரம் என்று சொன்னால் அடுத்த ஜென்மம் அதிலேயும் சௌக்யத்தை அடையலாம் என்று நம்முடைய சாஸ்த்ரங்கள் நமக்கு உபதேசம் செய்திருக்கின்றன. இந்த உபதேசத்தை நாம் மிக ஸ்ரதையோடு அனுசரித்து நாம் என்றைக்கும் இந்த ஐந்து தர்மங்களை அனுசரிப்போம் என்ற த்ருடமான தீர்மானத்தோடு இருந்தால் நம்முடைய ஜீவனம் சார்த்தகமாகும். பகவான் எல்லோருக்கும் அந்த ஒரு சக்தியைத் தந்து இந்த தர்மங்களை அனுஷ்டிக்கக்கூடிய ப்ரேரணையைத் தரட்டும் என்று பகவானைப் ப்ரார்த்திக்கிறேன்.