Thursday 21 January 2016

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்

“சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருயுவா 
குரோஸ்தோமௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன சம்ஷயா:”

“தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியில் வீற்றிருக்கிறார். குரு இளையவர்; சீடர்களோ அவரை விட மூத்தவர்கள். உலகிலுள்ள சீடர்களை உய்விப்பதற்காக அவதாரம் செய்த ஸ்ரீசங்கரருக்குச் சீடர்களாக இருப்பவர்கள் இணையற்ற பாக்யம் செய்தவர்கள்” என்கிறது மாதவீய சங்கர விஜயம்.

ஸ்ரீஸனந்தனர் (பத்மபாதர்)
சங்கரர் காசி க்ஷேத்திரத்தில் வாசம் செய்த போது, ஓர் அந்தண குமாரன் ஆசார்யரைக் காண வந்தார். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே சங்கரர், இவன் ‘நான், எனது’ என்ற அபிமானம் இல்லாதவன் என்று எண்ணுமாறு அவர் தோற்றம் இருந்தது.

“சோழ தேசத்தவன் நான். சமசார பந்தத்தில் உண்டாகும் துக்கத்தைப் போக்கவே தங்களைச் சரணடைந்தேன்” என்றார் வந்தவர்.

சங்கரர் அவருக்கு முறைப்படி சந்யாச மந்திரம் உபதேசம் செய்தார். “ப்ரதமம் விநேயம் தம் தேஷிகேந்த்ரஸ்ய சனந்த நாக்யம்” ‘சனந்தரர்’ என்ற இவரே சங்கரரின் முதல் சீடர். திருமாலின் அவதாரம் என்றும் அருணரே சனந்தராகப் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது.
கங்கை நதியின் மறுகரையில் சனந்தரர் இருந்தபோது மறுகரையிலிருந்தார் சங்கரர். அவருடன் இருந்த சிஷ்யர்கள், “குருநாதர் சனந்தனருக்கு மட்டும் மும்முறை தம்முடைய கிரந்தங்களை உபதேசம் செய்திருக்கிறார்.” என்று அசூயை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனைப் போக்கவும் சனந்தனரின் ஒப்பற்ற குருபக்தியை வெளிப்படுத்தவும் விரும்பினார் சங்கரர். “சனந்தனா” என்று சங்கரர் அழைத்தது மறுகரையிலிருந்த சனந்தனரின் காதுகளை எட்டியது. அக்கணமே அவர் தாவி கங்கையில் கால் பதித்தார். சம்சாரமென்னும் பெரும் கடலையே தாண்டச் செய்கிறவர் ஆசார்யர்; அத்தகையவரின் சரண கமலங்களைத் தியானம் செய்தால் கங்கையைக் கடப்பதா கடினம் என்று கண் மூடித் தியானம் செய்து கை குவித்து கங்கையில் கால் பதித்தார் சனந்தனர். ஒவ்வொரு காலடி பதிக்கும் இடத்தில் எல்லாம் கங்கை கமலங்களைத் தோற்றுவித்தாள்.

உவகை பூத்து, சனந்தரை ஆலிங்கனம் செய்து கொண்டு “பத்மபாதரே” என்று பகவத்பாதர் அழைத்தார்.
உபநிஷத்துகளின் தாத்பர்யத்தை, வியாசர், சூத்திர வடிவிலே அருளினார். அதுவே பிரம்ம சூத்ரம். அதற்கு முதல் பாஷ்யம் இயற்றியவர் சங்கரர். அதனை விளக்கி பத்மபாதர் எழுதியதே “பஞ்சபாதிகா” ஆகும்.

“குருபக்தியிலே ஈடிணையற்றவராக விளங்கிய பத்மபாதர், பகவத்பாதரை, பரமேஸ்வரராகவே போற்றி வணங்கினார். ஆசார்யார் இருக்கும் இடத்தில் விலங்குகள் பகை மறக்கும்; வியாதிகள் அகலும்; துக்கம் நீங்கி விடும்; பூமித்தாய் மனிதகுலத்துக்குத் தேவையானவற்றை வாரி வழங்குபவளாகவும் இருப்பார்.” என்று சனந்தனர், குருநாதரின் குண விசேஷங்களைக் கூறித் துதித்தார்.
ஸ்ரீசைல க்ஷேத்திரத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வாசம் புரிந்த போது, தோஷங்கள் நிறைந்தவனும் கொடிய தோற்றம் கொண்டவனுமான காபாலிகன் அவரைக் கண்டான்.

“சான்றோரில் சிறந்தவரே! தங்கள் சிரஸை தானம் செய்தால் உங்களுக்குப் புகழும் எனக்குத் தவத்தின் பயனும் கிடைக்கும்” என்று கூறினான்.

அதற்கு ஆதிசங்கரர் இசைந்தார். கபால பைரவன் அவருடைய தலையைக் கொய்வதற்காகத் தயாராக நின்றான். சங்கரர் மனத்தையும் புலன்களையும் அடக்கி பிரணவத்தை ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.

பைரவன் கத்தியைக் கையில் உயர்த்தியதை, ஸ்நானம் செய்து நிஷ்டையில் இருந்த பத்மபாதர், தம் ஞானக் கண்களால் கண்டார்.

நரஸிம்ம மந்திரத்தை வெகுகாலமாக ஜபம் செய்து ஸித்தியடைந்தவர் பத்மபாதர். பிரஹ்லாதனுக்கு அருள்புரிந்த நரஸிம்மரை நினைத்த மாத்திரத்தில் நரஸிம்ம மூர்த்தியாகவே மாறி, குதித்து ஓடினார். பாய்ந்து சென்று வஜ்ராயுதம் போன்ற தம் நகங்களினால் பைரவனின் மார்பைப் பிளந்தார். பின்பு உயிரற்ற அவனுடைய உடலைப் பற்களால் கவ்வினார். அட்டகாசமாகக் கர்ஜித்து அண்டத்தை நடுங்கச் செய்தார்.

ஆங்காங்கு சென்றிருந்த சீடர்கள் சிம்மகர்ஜனையைக் கேட்டு ஓடோடி வந்தார்கள். நிகழ்ந்ததை அறிந்து அதிசயமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

நிஷ்டை கலைந்து நோக்கிய சங்கரர், ஆச்சர்யமான நரஸிம்ம வடிவத்தைத் தம் முன்னே கண்டு துதி செய்யலானார். “சந்த்ராம்ஷு சோதர்ய சடாஜடாலம்” என்று தொடங்கி பல ஸ்லோகங்களால் போற்றினார். “ஹர, ஹர நரஸிம்மரே! எங்களுடைய பாபங்களை விரைவில் விலக்குவீர்” என்று முடித்ததும் நரஸிம்ம ரூபம் சாந்தமடைந்து பத்மபாதராக குருவுக்கு வந்தனம் செய்தார்.
பின்பு சிறிதுகாலம் குருநாதருடன் வாசம் புரிந்த பத்மபாதர் சங்கரரின் பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதினார். முதல் பகுதி பஞ்சபாதிகையாகவும். அடுத்தது “விருத்தி” என்றும் எழுதி, பிரக்யாதி பெற்றார்.

பத்மபாதருக்குத் தீர்த்த யாத்திரை செய்யும் விழைவு ஏற்பட்டது. குருவின் அண்மையே புண்ணிய க்ஷேத்திரம். அவருடைய பாதஜலமே தீர்த்தம் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும் தீர்த்த யாத்திரை செல்ல குருநாதரின் அனுமதி வேண்டி, பின்பு செல்லலானார். வடதேசங்களில் சஞ்சாரம் செய்து விட்டு தென்திசை நோக்கி வந்தார். காளஹஸ்தி, காஞ்சி, சிதம்பரம், ஸ்ரீரங்கம் வந்ததும், காவிரிக் கரையில் அமைந்த பூர்வாச்ரம வீட்டை அடைந்தார். பத்மபாதரின் மாமானும் உறவினர்களும் வரவேற்று உபசாரம் செய்தார்கள். மாமன் வீட்டில் பிக்ஷை முடிந்து, அனைவருக்கும் உபதேச மொழிகளைக் கூறிய பின்பு பத்மபாதர் ‘பஞ்சபாதிகா’ எழுதிய சுவடிகளை வைத்து விட்டு, இராமசேதுவுக்குச் சென்று திரும்பும் போது எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.

அத்வைத மதத்தின் மீது கொண்ட பகையால் மாமன், சுவடியுடன் வீட்டையே எரித்துச் சாம்பலாக்கினார். இராமசேது யாத்திரை முடிந்து திரும்பிய பத்மபாதர் விஷயம் அறிந்து பெரிதும் மனம் வருந்தினார். பின்பு சங்கரபகவத் பாதரைத் தரிசிக்கக் கேரளத்துக்குச் சென்றார். சுவடிகள் எரிந்ததைப் பற்றி குருநாதரிடம் தெரிவித்தார்.

“சிருங்கேரியில் இருந்தபோது என் முன்னிலையில் படித்த பஞ்சபாதிகா, என் மனத்திலிருந்து நீங்கவில்லை. நான் கூறுகிறேன், எழுதிக் கொள்வீர்” என்று சங்கர பகவத்பாதர் கூறியதும் பத்மபாதர் அகமகிழ்ந்தார்.

குருநாதரின் வாய் மொழியாக எழுந்த பஞ்சபாதிகாவை பத்மபாதர் எழுதி முடித்தார். ஆனந்தக் கண்ணர் பெருக்கினார். ஆடினார்; பாடினார். பேரானந்தம் கொண்டவராக சுவடிகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவமாடினார். “எத்தகைய பேறு பெற்றேன்” என்றார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதரின் முதல் சீடரான சனந்தனர், ‘பத்மபாதர்’ என்று குருவினால் போற்றப்பட்டு, குருவாய் மொழியாலேயே பஞ்சபாதிகையை மீண்டும் எழுதி, பாரத நாட்டின் மேற்குத் திசையிலே பகவத்பாதர் நிறுவிய துவாரகா மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தார்.

ஸ்ரீஹஸ்தாமலகர்

ஸ்ரீசங்கர பகவத்பாதர் மூகாம்பிகையைத் தரிசித்து விட்டு ஸ்ரீபலிபுரத்துக்குச் சென்றார். அங்கே இரண்டாயிரம் பிராமணோத்தமர்கள் வசித்து வந்தார்கள். மிருத்யு, ஸ்ரீபலிபுரத்தை நெருங்கவே அஞ்சியது. வேத அத்யனனம், அக்னி ஹோத்ரம் யக்ஞங்கள் என சத்கர்மாக்களில் அனைவரும் ஈடுபட்டார்கள். அந்த அக்ரஹாரத்திலே சகல சாஸ்திர நிபுணராக, கீர்த்தியுடன் வாழ்ந்து வந்த பிரபாகரருக்கு ஒரு புத்திரன் இருந்தான்.

பிரபாகரருக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தும், சந்தோஷம் இல்லை. காரணம், அவருடைய புத்திரன் புத்தியற்ற ஜடமாக இருந்ததுதான்.

எதுவும் பேசுவதும் இல்லை; எவர் பேசுவதையும் கேட்பதும் இல்லை. விளையாட்டில் விருப்பமில்லை. முட்டாள் என்று பிறர் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் வருந்துவதுமில்லை. ஆனால் தோற்றத்திலே மன்மதனாக, முகம் சந்திர பிம்பமாக, பூமாதேவியைப் போல் பொறுமை மிக்கவனாக இருந்தான்.

பிரபாகரர், இவன் இவ்வாறு இருக்க என்ன காரணம் என்பதை அறிய இயலாதவராக, துன்பத்தில் மூழ்கியிருந்தார். அவர் தம் பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தார். பதின்மூன்று வயதான, அவனுடைய நிலைக்குப் பரிகாரம் காண முற்பட்டார்.
அப்போதுதான், ஸ்ரீசங்கரபகவத்பாதர், ஸ்ரீபலிபுரத்துக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்து, பிரபாகரர் புத்திரனை அழைத்துக் கொண்டு பகவத்பாதரிடம், சென்றார்.

பிரபாகரர் ஆசார்யாரை வணங்கினார். புத்திரனையும் வணங்குமாறு கூற, அவனும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்காமல் அப்படியே கிடந்தான். ஸ்ரீசங்கரர், பிரபாகரர் மூலம், பிள்ளயைப் பற்றி அறிந்து கொண்டதும், கீழே கிடந்த அவனைப் பரமகருணையுடன் தூக்கி நிறுத்தினார்.
“நீ யார்? ஏன் இவ்வாறு ஜடம் போன்று நடந்து கொள்கிறாய்?”

“குருவே! நான் ஜடம் இல்லை. ஜடமாகிய இவ்வுடல் சேதனனான என்னுடைய தொடர்பினால் செயல் உள்ளதாகிறது.” என்று கூறிய அப்பிள்ளை, மேலும் பல ஸ்லோகங்களைப் பொழிந்தான்.

“நான் ஆத்மா! தூய்மையான மெய்யறிவு ததும்பும் ஆத்மா” என்னும் பொருள் பொதிந்த தத்துவம் நிறைந்த ஸ்லோகங்களைக் கூறியதும் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வியப்படைந்தார்.

ஸ்ரீபகவத்பாதர், பிரபாகரரை நோக்கி, “பிராமண சிரேஷ்டரே! உம்முடைய புதல்வன் உபதேசம் இல்லாமலே ஆத்ம ஞானத்தை அடைந்தவர்.” என்று கூறி தம் திவ்யமான வலக்கரத்தினால், அப்பிள்ளையின் தலையைத் தொட்டு பூரண அனுக்ரஹம் வழங்கினார். பின்பு, “இவன் தங்களுக்கு எவ்விடத்திலும் பயனளிக்க மாட்டான். முன் ஜன்ம வாசனையால் ஆத்ம ஞானியாக விளங்குகிறான். பற்றற்ற துறவறமே இவனுக்கு உரியது.” என்று மொழிந்தார்.

ஒப்பற்ற பரமாத்ம தத்துவத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்ற அவருக்கு “ஹஸ்தாமலகர்” என்ற திருநாமம் சூட்டினார். அவர் இயற்றிய ஸ்லோகங்கள் ‘ஹஸ்தாமலகீயம்’ என்று போற்றப்பட்டன.

தத்துவார்த்தமானவற்றை மிக எளிமையாக ஹஸ்தாமலகர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கர பகவத்பாதர், ஹஸ்தாமலகீயத்திற்கு உரை எழுதியுள்ளார். குருநாதரின் நூலுக்கு சீடர்கள் உரை எழுதுவது நடைமுறை. ஆனால் சீடரின் நூலுக்கு குருநாதர் உரை எழுதி, அந்நூலுக்கும், அந்தச் சீடருக்கும் மகத்துவம் சேர்த்திருக்கிறார்.

பிறவி ஞானியாக ஹஸ்தாமலகர் விளங்கியதற்குக் காரணம் உள்ளது. கங்கைக் கரையில் முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மணி, சிறுகுழந்தை ஒன்றுடன் கங்கையில் நீராட வந்தாள். குழந்தையை முனிவருக்கு அருகில் படுக்க வைத்து விட்டு அவள் நதிக் கரைக்குச் சென்று நீராடினாள். துயில் நீங்கிய குழந்தை மெல்லத் தவழ்ந்து சென்று நதியில் விழுந்து இறந்தது. தாய், விரைந்து வந்து குழந்தையை அணைத்துக் கொண்டு கதறினாள். முனிவர் தியானம் கலைந்ததும், நடந்ததை அறிந்து துயரமடைந்தார். தாம் செய்த தவற்றை உணர்ந்து, குழந்தைக்கு உயிரளிக்கத் தாமே, அதன் உடலில் புகுந்தார். அக்குழந்தையே தூய மெய்ஞானம் பெற்று ஹஸ்தாமலகர் ஆனார்.

ஹஸ்தாமலகர், ஸ்ரீசங்கரபகவத் பாதரின் அத்யந்த சீடரானார். பாரதநாட்டின் கிழக்கில், புரிஜகன்னாத் க்ஷேத்திரத்தில் ஸ்தாபித்த கோவர்த்தன மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தவர் ஹஸ்தாமலகர்.

ஸ்ரீதோடகாசார்யார்

சிருங்கேரியில் வாசம் புரிந்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர், சிஷ்யர்களுக்குப் பாஷ்ய பாடம் போதித்தார். மந்திரோபதேசம் செய்தார். பரதேவதையாக விளங்கும் ஸ்ரீசாரதையின் பூஜையிலும் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் ‘கிரி’ என்பவர் பகவத்பாதருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தார். பூஜைக்குத் தேவையானவற்றை சித்தம் செய்வார். பகவத்பாதர் எழுந்திருப்பதற்கு முன்பே கிரி எழுந்திருந்து, ஸ்நானம் செய்யத் தேவையான ஜலம், அணிய வஸ்திரம், அமர ஆசனம் அனைத்தையும் எடுத்து வைப்பது வழக்கம். அதிகம் படிப்பறிவில்லாதவர் எனினும் குருசேவையில ஆத்மதிருப்தி அடைபவராக விளங்கினார். குருநாதர் நின்றால், தாமும் நின்று, சென்றால் தாமும் செல்வார். பணிவின் இலக்கணம் ‘கிரி’ எனலாம்.

ஸ்ரீசங்கரர் ஒரு நாள் பாஷ்ய பாடம் நடத்துவதற்காக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் அவரிடம் பாடம் கேட்க காத்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் சென்று கொண்டிருந்தது. பாடம் தொடங்க ஏன் தாமதம் என்று மாணாக்கர்களுக்குப் புரியவில்லை.

“சிறிது பொறுத்திருங்கள். கிரியும் வந்து விடட்டும்.” என்று ஸ்ரீசங்கரர் கூறியதைக் கேட்டு சிலர் ஏளனமாகச் சிரித்தார்கள்
.
பத்மபாதர், “புத்தியற்ற, சாஸ்திர பாடம் கற்கத் தகுதியற்ற சுவர் போன்ற அவனுக்காகவா காத்திருக்க வேண்டும்?” என்று நினைத்துக் கொண்டதை குருநாதர் அகக் கண்களால் அறிந்தார்.

மாணாக்கரின் மமதையைப் போக்க வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் கருதினார். கிரியின் மீதான அபிப்ராயத்தை மாற்ற விழைந்தார். உடனேயே கிரிக்கு பதினான்கு வித்யைகளை மனத்தினால் அருளினார். அக்கணமே கிரி ஒப்பற்ற ஞானமும் வாக்குவன்மையும் பெற்றார். ஆத்ம தத்துவம் செறிந்த ஸ்லோகங்கள் அவருடைய வாக்கிலே உதயமாயின. குருநாதரை தோடக விருத்தத்தில் பாடியபடியே வந்ததைப் பார்த்து, பாடம் கேட்க வந்த மாணாக்கர்கள் அதிசயித்தார்கள். பத்மபாதர் செருக்கு அகன்று, தோடகரைப் போற்றினார்கள்.

உபநிஷத்துகளின் சாரத்தை விளக்கும் “ஸ்ருதி ஸாரஸமுத்தரணம்” என்னும் நூலையும் தோடகர் இயற்றினார். “தத்வமஸி” என்ற மஹா வாக்யத்தின் கருத்தை இந்நூலில் விளக்கியுள்ளார். 179 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல் தோடகரின் பரந்த ஞானத்துக்கு எடுத்துக் காட்டாகவும் பக்திப் பனுவலாகவும் உள்ளது.

வேதாந்தக் கருத்துகளின் பொக்கிஷமாகத் திகழ்கிற தோடகரின் ஞானச் செல்வத்தை அவருக்கு வாரி வழங்கியவரை “பவ சங்கர தேசிகமே சரணம்” என்று வணங்கி வழிபட்டார்.

உபநிஷத்துகளின் சாரத்தை எளிய முறையிலே விளக்கியுள்ளவர் ஸ்ரீதோடகாசாரியார். சங்கரபகவத் பாதரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரராகி ஞானம் பெற்றவர்.
ஸ்ரீபகவத்பாதர், பத்ரிகாஸ்ரமத்தில் ஜ்யோதிர் மடத்தை ஸ்தாபித்து அதன் முதல் ஜகத்குருவாக ஸ்ரீதோடகரை நியமித்தார்.

ஸ்ரீஸுரேஷ்வரர்:
மண்டனமிச்ரராக, உபயபாரதியை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டிருந்தவர். பூர்வ மீமாம்சா மதத்தின் தலைவராக விளங்கிய குமாரிலபட்டரின் சீடர் கர்மமே, வீடுபேறு அளிக்கும் என்பதில் உறுதி கொண்டிருந்தவர். திக்விஜயம் செய்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர் பிரயாகையில், துஷாக்னியில் பிரவேசித்த குமாரிலபட்டரை சந்தித்தார். அவருடைய மொழிகளுக்கு இணங்கி, மாஹிஷ்மதி நகருக்கு வந்து மண்டன மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார்.

மண்டன மிச்ரரின் மனைவி உபயபாரதி நடுவராக இருக்க, சங்கரருடன் வாதம் புரிந்தார். வாத நிபந்தனையின்படி, மண்டனர் தோல்வியுற்றதும் சங்கரரின் சீடரானார். ‘ஸுரேஷ்வரர்’ எனத் துறவியாக தீக்ஷாநாமம் பெற்றார்.

ஸ்ரீவியாசர், சங்கரர் ஆகியோருக்கு இணையான ஞானம் பெற்றவர் ஸுரேஷ்வரர். பிரம்மதேவரின் அவதாரம்.

அத்வைதத்தின் அடிப்படை பிரம்ம சூத்திரம். இதனை எழுதியவர் பாதராயணர் என்னும் வியாசர். இவர் சூத்திரக்காரர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். ஸுரேஷ்வரர் துறவுச் சன்யாசம் அடைந்த பின்பு நர்மதை நதிக்கரையில் தங்கி அத்வைத சித்தாந்தத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஞான சூரியனாக விளங்கிய ஸுரேஷ்வரரை, பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு “வார்த்திகம்” எழுதுமாறு சங்கரர் கூறினார். ஆனால் சங்கரரின் சீடர்கள் பலரும் இதை விரும்பவில்லை.

மீமாம்ஸகராக இருந்து பின்பு அத்வைதியாக மாறிய ஸுரேஷ்வரர், ‘வார்த்திகம்’ எழுதுவதற்கு சீடர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அதன் பிறகு ஸ்ரீசங்கரர் ஸுரேஷ்வரரிடம், அத்வைதக் கருத்தை விளக்கும் தனித்ததொரு நூலை எழுதுமாறு பணித்தார். அதற்கிணங்க, ஸுரேஷ்வரர் “நைஷ்கர்யஸித்தி” என்ற நூலை எழுதினார்.

நான்கே பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் “பந்தத்தைப் போக்கும் உபநிடதத்தின் மையமான ஆத்மஞானத்தை பல ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். ஆயினும் குருநாதரின் கட்டளைக்குப் பணிந்து தாம் எழுதியிருப்பதாக” விநயத்துடன் குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவத்தின் அனைத்து சாரத்தையும் பிழிந்து தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. “அசேஷ-வேதாந்த ஸார-ஸங்கிரஹ-பிரகரணம்” என்பதாக ஸுரேஷ்வரர் கூறியிருக்கிறார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்திற்கு ஸுரேஸ்வரர் எழுதியுள்ள அற்புதமான உரை நூலுக்கு “மானஸோல்லாஸம்” என்று பெயர். சங்கரரின் பஞ்சீகரணத்திற்கு வார்த்திகம் செய்துள்ளார்.

‘வார்த்திகம்’ என்பது “உக்தானுக்த துருக்தார்த்தவ்யக்தி காரிது வார்த்திகம்” என்பது அதன் இலக்கணம். பாஷ்ய நூல் மூன்று விதமான விளக்கங்களுடன் இருக்க வேண்டும். அதுவே வார்த்திகம். மூலநூலில் உள்ளதை உள்ளவாறே கூறுதல்; அதில் கூறாததையும் கூறுதல்; மூலநூலின் கருத்துக்கு மாறான விளக்கங்களைக் கூறுதல். இதுவே ‘உக்த’, ‘அனுக்த’, ‘துருக்த’ என்பதாகும்.

ஸ்ரீசங்கரர் எழுதிய தைத்ரீய உபநிஷத் பாஷ்யத்திற்கும், பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கும் ஸுரேஷ்வரர் விளக்கவுரை எழுதியுள்ளார். “தைத்ரீய உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்,” “பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்” என்றும் அவை கூறப்படுகின்றன. ஸ்ரீசங்கரர் பல உபநிஷத்துகளுக்கு பாஷ்யங்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றுள் இரண்டு பாஷ்யங்களுக்கு மட்டுமே ஸுரேஷ்வரர் வார்த்திகம் எழுதியுள்ளார். அதற்கு ஒரு காரணம் இருந்தது.
ஸ்ரீசங்கரபகவத்பாதர் யஜுர்வேத தைத்ரீய சாகையைச் சேர்ந்தவர். அவரைப் போற்றும் வகையிலே அந்த உபநிஷத பாஷ்யத்திற்கு வார்த்திகம் அருளினார். யஜுர் வேதத்தின் காண்வ சாகையைச் சேர்ந்தவர் ஸுரேஷ்வரர். அதனால் பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கு வார்த்திகம் இயற்றியருளினார். சங்கரரை ‘பாஷ்யக்காரர்’ என்று போற்றுவது போல, ஸுரேஷ்வரரை “வார்த்திகக்காரர்” என்று போற்றுகிறார்கள்.

ஸ்ரீசங்கரபகவத்பாதர், நாட்டின் நான்கு திக்குகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார். அவர் முதன் முதலில் துங்கா நதி தீரத்தில் அமைந்த சிருங்கேரி எனப்படும் ரிஷ்யசிருங்கத் தலத்திலே ஸ்ரீசாரதா பீடத்தை நிறுவினார். அதற்கு ஸுரேஷ்வரரை முதல் ஆசார்யராக நியமித்தார்.
ஸ்ரீசங்கரபகவத்பாதர், பரமேஸ்வரரால் அளிக்கப்பட்ட ஸ்ரீசந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும் ஸ்ரீரத்ன கர்ப்பகணபதியையும் ஸுரேஷ்வரரிடம் அளித்தார். இன்றும் அவை சிருங்கேரியில் அவிச்சின்னப் பரம்பரையாக ஆசார்யாரால் பூஜிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீசங்கரபகவத்பாதர், நான்கு சிஷ்யர்களையும் போற்றியுள்ளார். ‘பத்மபாதரே’ என்று ஸனந்தனருக்குப் பட்டம் வழங்கி அவருடைய பக்தியை உலகறியச் செய்தார். ஜடமாக இருந்தவரை ஆத்மஞானியாக அறிமுகப் படுத்தி ஹஸ்தாமலகீய பாஷ்யமும் அருளி, தம் சிஷ்யருக்குப் பெருமை சேர்த்தார் ஆதிசங்கரர்.

‘கிரி’யாக குருசேவை புரிந்து வந்த எளியவனை, உயர்ந்த நிலைக்குச் செல்ல அனுக்ரஹம் புரிந்து ‘தோடகாஷ்டகம்’ பாட வைத்தவர் ஆதிசங்கரர்.
வாதத்திலே வென்று, சிஷ்யராக்கிக் கொண்டு ஸுரேஷ்வரராக தீக்ஷாநாமம் அளித்தார். ஸுரேஷ்வரரின் ஞானத் தெளிவிலே ஆதிசங்கரர் பெருமிதம் கொண்டார்.
பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதத் தடை ஏற்பட்டபோது, சங்கரர் தம் சிஷ்யரை சமாதானம் செய்து “இப்பூமியிலே ‘வாசஸ்பதி’ யாகப் பிறந்து பாஷ்யங்களுக்கு விளக்கவுரை எழுதப் போகின்றீர்” என்று வாழ்த்தி அருளினார்.

ஆதிசங்கரரின் அத்வைத மதத்தைப் பரப்பும் பணியிலே அவருடைய சீடர்கள் நால்வரும் பெறும் பேறு பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
ஆதிசங்கரரைத் தொடர்ந்து சுரேஷ்வரரும், பத்மபாதரும், ஹஸ்தாமலகரும், தோடகரும் அத்வைத குரு பரம்பரையின் நான்கு ரத்னமணிகளாக ஒளிர்ந்தார்கள்.

குரு சிஷ்ய பரம்பரையைத் தொடங்கி வைத்தவர்கள் மும்மூர்த்திகள். அதனை,

“ஸதாசிவஸமாரம்ப்பாம் சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

என்று ஸ்லோக ரூபத்தில் கூறுவது மரபாகும்.

“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்ட்டம்
சக்திம்ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீசங்கராசார்ய மதாஸ்ய பத்ம
பாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்ககாரமன்யான்
அஸ்மத் குரூன் ஸந்ததமான தோஸ்மி

என்று ஸ்தோத்திரம் செய்து வந்தனை புரிவோம்!

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

No comments:

Post a Comment