வேதத்தின் மகிமை:
நம்முடைய ஸநாதன தர்மத்திற்கு அத்யந்தப் ப்ரமாணமானது வேதம். அதனால்தான் நம்முடைய தர்மத்திற்கு வைதீக தர்மம் என்று பெயர். இந்த தர்மத்திற்கு மூலமான வேதங்கள் நமக்கு அத்யந்த பூஜ்யமானது; பவித்ரமானது. வேதத்திற்குச் சமமாக வேறு எந்த ப்ரமாணமும் கிடையாது. மீதிப்ரமாணங்கள் எல்லாம் வேதத்திற்கு அனுசரனையாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். வேதத்திற்கு விருத்தமானதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மீமாம்சையிலே பகவான் பிருங்கி மகரிஷி இதை ரொம்ப ஸ்பஷ்டமாக சொல்லியிருக்கிறார்
.
வேதத்திற்கு விரோதம் வந்தால் (விரோதம் என்றால்) என்ன அர்த்தம்? வேதம் சொல்வதற்கு விருத்தமாக வேறு ஏதாவது ப்ரமாணம் சொன்னால் அந்த ப்ரமாணம் நமக்குத் தேவையில்லை. எது வேதத்திற்கு அனுசாரமாக ப்ரமாணம் சொல்கிறதோ அந்த ப்ரமாணம்தான் தேவை.
ஸ்ம்ருதிகள், தர்ம சாஸ்த்ரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இவை எல்லாம் வேதத்திற்கு அனுசாரமாக இருப்பதால் நமக்கு ப்ரமாணமாக இருக்கிறது. விருத்தமானால் அது நமக்குப் ப்ராமணமாகாது. அப்பேர்ப்பட்ட நம்முடைய பரமப்ரமாணமான வேதங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு எல்லோருக்கும் இருக்கிறது. அந்த வேதங்களில் நமக்கு எத்தனையோ விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
பகவத் பாதாள் வேதத்தைப் பற்றி சொல்கிறபோது “ஸர்வக்ஞ கல்பஸ்ய” என்கிறார். வேதம் என்பது ஸர்வக்ஞமான பொருள். எது ஸர்வக்ஞமானது ஈஸ்வரன்தான் ஸர்வக்ஞன். ஈஸ்வரன் எப்படி ஸர்வக்ஞனான ஈஸ்வரனுக்கு தெரியாதது ஒன்றுமில்லையோ அதேபோல் வேதமும் ஸர்வக்ஞன் மாதிரி. அதாவது வேதத்திலேயிருந்து நமக்கு தெரியாத விஷயங்கள் என்பது ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் நாம் வேதத்திலேயிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்பேர்ப்பட்ட வேதத்திலே நமக்கு ஸ்ரத்தை ரொம்பவும் ஆவஸ்யகம் (அவஸ்யம்). ஏனென்றால் அந்த வேதத்திலேயிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஸந்தேஸங்கள் ரொம்பவும் அற்புதமானவை.
முதலில் ருக்வேத ஸம்ஹிதையின் கடைசியில் ஒருபெரிய ஸந்தேஸம் (செய்தி) ஸமஸ்த மனிதர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸமஸ்தமானவ ஜாதிக்கு அந்த ரிக்வேதம் கொடுக்கக்கூடிய ஸந்தேஸம் எத்தனை நூற்றாண்டுகளானாலும் பொருந்தும். காலங்கடந்து நிற்கக் கூடியது.
ஸந்தேசம்: எல்லோரும் ஒரே அபிப்ராயத்தோடு இருங்கள் யாரும் யாரைப்பற்றியும் தப்பான அபிப்ராயத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். எல்லோரும் ஒரே மனதோடு இருங்கள். அப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் பவித்ரமாக இருக்கும். இப்போது நாம் உலகத்திலே எந்த ஒரு சண்டை, சச்சரவு பார்த்தாலும் அங்கே ஒரே காரணம் அந்த இரண்டு பேருடைய ஒரு அபிப்ராய பேதம். அப்பா, பிள்ளை விஷயத்தில், அப்பா ஒன்று நினைத்தால் பிள்ளை ஒன்று நினைப்பான். பிள்ளை ஒன்று சொன்னால், பெண்டாட்டி இன்னொன்று சொல்வாள். குரு, சிஷ்யர்கள் விஷயத்தில் குரு ஒன்று சொன்னால் சிஷ்யன் இன்னொன்று சொல்வது வாடிக்கை. அப்போது இரண்டு பேருக்குள்ளும் அபிப்ராய சச்சரவுகளெல்லாம் வருகிறது. ஒரே அபிப்ராயம் இருந்தால் அதாவது நான் என்ன நினைக்கிறோனோ நீயும் அதையே நினைக்கிறதாக இருந்தால் இரண்டு பேருக்குள் சண்டை எப்படி வரும். ரிக்வேதம் எத்தனையோ வருஷங்களுக்கு முன் இந்த ஸந்தேஸம் நமக்கு கொடுத்தது.
ஒரே அபிப்ராயத்தோடு இருங்கள். ஒரே மனசோடு இருங்கள். ஒரே பகவானைப் பூஜை பண்ணுங்கள். இந்த ஸந்தேஸத்தை நாம் எடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்போது நம்முடைய ஜீவனத்தில் ஏதாவது சண்டை வருமா? இந்த ஸந்தேஸத்தை நாம் பின்பற்றினால் நமக்கு எங்கேயும் சண்டை வராது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம், நம்முடைய அகங்காரத்துக்கு ப்ராதான்யம் கொடுக்கிறோம். நாம் நினைத்ததுதான் நடக்கவேண்டும். அப்பாவும், பிள்ளையும் இரண்டு பேரிடையேயும் அபிப்ராய பேதம் வரும்போது அப்பா என்ன நினைக்கிறார் நான் சொன்னதுதான் நடக்க வேண்டுமென்று, பிள்ளை என்ன நினைக்கிறான் அப்பாவுக்கு வயது ஆகிவிட்டது ஆகவே ஒன்றும் பண்ணமுடியாது, தான் சொன்னதுதான் நடக்கவேண்டும் என்று சொல்கிறான். இவர்கள் இரண்டு பேரும் அகங்காரத்தை விட்டுவிட்டால் அந்தச் சண்டை இருக்காது.
அதேபோல் குரு சிஷ்யர்கள், குரு ஒன்று சொல்லும்போது சிஷ்யன் இன்னொன்று சொன்னால் அங்கே எப்படி ஒரு ஐக்யம் என்பது வரும். குரு என்ன நினைக்கிறார் “நான் குரு நீ சிஷ்யன் நான் சொன்னபடி நீ செய்ய வேண்டும்.” சிஷ்யன் என்ன நினைக்கிறான் “நீங்கள் பேசாமல் இருங்கள். உம்மால் ஒன்றும் பண்ணமுடியாது. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.” அப்போது எப்படி சரியாக இருக்கும். அதனாலே அந்த ரிக்வேதம் சொல்லி இருக்கக்கூடிய ஸந்தேஸம் முழு உலகத்திலே சாந்திக்கு (அமைதிக்கு) வேண்டியது இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் உலகத்திலே அமைதி ஏற்படும். அதற்கு வழி ஏற்படுத்தும். நாம் எல்லோரும் அமைதி வேண்டும் என்று அபேக்ஷிக்கிறோம். உலகத்திலே அநேகம் பேர் சொல்கிறார்கள் சாந்தியே இல்லை. ஏன் சாந்தியே இல்லை. இந்த ஸந்தேஸத்தை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக சாந்தி, அமைதி, நிம்மதி ஏற்படும். அப்பேர்ப்பட்ட ஸந்தேஸம் நமக்கு ரிக்வேதம் கூறியிருக்கிறது.
யஜுர் வேதத்தில் கிடைக்கக்கூடிய உபதேசங்கள், அநேகமானவை. யஜுர் வேதத்தில் அநேக அர்த்தவாதங்கள் வருகிறது. ஆனால் அந்த அர்த்த வாதத்திலிருந்து நமக்கு சில ஸந்தேஸங்கள் வந்திருக்கின்றன. மூன்றாம் கரணத்திலே முதல் ப்ரஸ்னத்திலே
முதலில் ப்ரம்மாவுக்கு ப்ரஜாச்ருஷ்டி பண்ண வேண்டும் என்று மனதில் வந்திருக்கிறது. தபஸ் பண்ணினார். தபஸ் பண்ணினதிலே பாம்புகள் வந்துவிட்டன. அவர் நினைத்தது நடக்கவில்லை. அப்போது சும்மா இருக்காமல் திரும்பவும் தபஸ் பண்ணினார். இரண்டாவது தபஸில் பக்ஷிகள் (பறவைகள்) வந்தன. இதுவும் சரியில்லை. திரும்பவும் தபஸ் பண்ணினார். அப்போது மனுஷ வ்ருத்தி ஆகிவிட்டது. இதிலேயிருந்து நமக்குத் தெரிவது என்னவென்று கேட்டால் நாம் ஒரு நல்ல கார்யத்தை ஆரம்பித்தால் அது ஸித்தியாகிற (நடக்கிற) வரையிலும் நாம் முயற்சியை விடக்கூடாது.
மூன்று விதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலர் நல்ல காரியம் பண்ணவேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். கடைசியிலே ஒரு விக்னம் வரும், விக்னம் வந்தவுடனே “சரி, இது என்னால் முடியாது” என்று சொல்லி விடுவார்கள். அதிலேயும் இன்னும் அதமர்கள் சிலர் இருக்கிறார்கள் ஆரம்பிக்கவே மாட்டார்கள். ஆரம்பித்தால் ஏதோ தடங்கல் வருகிறது யாருக்கு வேண்டும் இதெல்லாம். வேண்டவே வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். ஆரம்பிக்கவே மாட்டார்கள். மத்யமாக உள்ளவர்கள் ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரு நிலை வந்ததும் விட்டு விடுவார்கள். ஆனால் கடைசியில் உள்ளவர்கள் (உத்தமர்கள்) மட்டும் எத்தனை விக்னங்கள் வந்தாலும் விடாமல் அந்தக் காரியத்தை முடித்து விடுவார்கள். ப்ரும்மா ப்ரஜாஸ்ருஷ்டி செய்யவேண்டும் என்று ஆரம்பித்து தபஸ் பண்ணி முதலில் அவர் எதிர் பார்த்தது நிறைவேறாமல் திரும்பவும் தபஸ் பண்ணி அப்போதும் நிறைவேறாமல் திரும்பவும் தபஸ் பண்ணி அப்போதுதான் நிறைவேறியது.
இந்தக் காலத்தில் அதற்கு ஓரு உதாரணம் சொல்வதாக இருந்தால் சி.ஏ. பரீட்சை தேறுவது உதாரணமாக இருக்கும். யாரும் சி.ஏ பரீட்சை முதல் தடவையில் பாஸாகாமல் இரண்டு, மூன்று தடவையிலேதான் பாஸ் ஆவார்கள். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் விடாமுயற்சியினால் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தடவையோ தான் பாஸாக முடியும். எனக்குத் தெரிந்த ஒரு சிஷ்யன் பெங்களூரில் இருக்கிறான். அவன் 30ஆவது தடவைதான் பாஸ் பண்ணினான். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விடவே இல்லை தீர்மானமாக பாஸ் பண்ணியே தீருவேன் என்று இருந்தான். ஏனெனில் நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். ஸத்சங்கத்திலே நாமாகப் போய்ப் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு யாரும் கூப்பிடும்படியாக இருக்கக் கூடாது. ஸத்சங்கம் ஸத்காலக்ஷேபம் நடக்கிறபோது, யாருடைய ஆஹ்வானத்தையும் (அழைப்பு) எதிர் பார்க்காமல் நாமே அங்கே போய் உட்கார வேண்டும். ஏனென்றால் அங்கே அப்படி இருக்கும்போது நல்ல விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். யாரும் கூப்பிடவில்லை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அங்கே நாம் போய் உட்கார்ந்து ஸத்விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்நத மாதிரி எத்தனையோ விஷயங்கள் நமக்கு யஜுர் வேதத்தில் அந்த அர்த்த வாதங்கள் மூலமாகத் தெரிகிறது. தைத்ரிய உபநிஷத்தில்
ஸத்யம் வத தர்மம் சர
ஆசார்ய தேவோ பவ |
அதிதி தேவோ பவ ||
ஆசார்ய தேவோ பவ |
அதிதி தேவோ பவ ||
ஸத்யத்தையே பேசு. தர்மத்தை ஆசரணம் செய். குருவிடம் ரொம்ப மதிப்போடு இருக்கவேண்டும். வந்த அதிதிகளுக்கு சேவை செய்யவேண்டும். ஸத்யத்தை விடக்கூடாது. தர்மத்தை விடக்கூடாது. மகான்கள் எப்படி அபேக்ஷிக்கிறார்களோ அப்படி அபேக்ஷிக்க வேண்டும். அந்த மகான்கள் போல் நடக்க வேண்டும். இந்த மாதிரி விஷயங்கள் யஜுர் வேதத்தில் நமக்கு இருக்கின்றன.
சாம வேதத்திலும் நமக்கு உபதேசங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. சாமவேதம் கானம்தானே அதில் என்ன இருக்கப்போகிறது என்று யாராவது நினைத்துக் கொள்வீர்களோ என்னமோ சாம வேதத்தில் நிறைய உபதேசங்கள் இருக்கின்றன. மனுஷ்யனுக்கு ஸ்ரேயஸை அடைவதற்கு நான்கு தடங்கல்கள் இருக்கின்றன. இந்த நான்கு தடங்கல்களை நிவர்த்தி செய்தால் அந்த ஸ்ரேயஸ் கிடைக்கும். நான்கு தடங்கல்கள் 1.கோபம், 2.லோபம், 3.அந்ருதம், 4.அஸ்ரத்தை ஆகிய நான்கும் ஆகும். ஸ்ரேயோ மார்க்கத்துக்கு பிரதிபந்தகமாக இருக்கின்றன. இந்த நான்கையும் நீக்கவேண்டும். இந்த கோபம் என்பதை அக்ரோதத்தினாலே (அக்ரோதம் என்று சொன்னால் க்ஷமை. பொறுமை) அதாவது பொறுமை என்ற அக்ரோதத்தினாலே கோபத்தை நீக்கவேண்டும் லோபத்தை தானத்தினாலே நீக்கவேண்டும். அந்தத் தானம் என்பதற்கு பகவத் பாதாள் ‘தசஸ்லோகியிலே’ தானம் ப்ரம்மார்ப்பணம் என்று எழுதி யிருக்கிறார். தானம் பண்ணும்போது ப்ரும்மார்ப்பணமாக தானம் பண்ணவேண்டும். வேறு எதையும் எதிர் பார்க்காமல் ஈஸ்வரார்த்தமாக தானம் பண்ணி லோபத்தை நீக்கவேண்டும்.
லோபம் என்று சொன்னால் இரண்டு விதம். எல்லாம் எனக்கு கிடைக்கவேண்டும் என்பது ஒன்று. எனக்கு கிடைத்ததை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்பது ஒன்று. இந்த லோபம் என்பது மனுஷ்யனுக்கு ஸ்ரேயோ மார்க்ககத்திற்கு ப்ரதி பந்தகமாக இருக்கிறது. இதெல்லாம் உத்தேசித்து பகவான் பகவத் கீதையிலே
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசன மாத்மன: |
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்ரயம் த்யஜேத் ||
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்ரயம் த்யஜேத் ||
அதுதான் பகவத் கீதையை எல்லா வேதத்தின் ஸாரபூதம் என்று சொல்லுவோம் வேதத்தில் உள்ளது எல்லாவற்றையும் பகவான் பகவத் கீதையிலே ஸாரபூதமாக தந்துள்ளார். லோபம், க்ரோதம், அஸ்ரத்தை, அந்ருதம் ஆகிய நான்கையும், தானம், அக்ரோதம், ஸ்ரத்தை, ஸத்யம் என்கிற பாவத்தினாலே நீக்கவேண்டும். அக்ரோதம் பொறுமையினாலே கோபத்தை நீக்கவேண்டும் ஸத்யத்தினாலே அந்ருதத்தை நீக்கவேண்டும். ஸ்ரத்தையினாலே அஸ்ரத்தையை நீக்கவேண்டும். அஸ்ரத்தை இருக்கிறவனுக்கு தத்வம் புரியாது. அஸ்ரத்தையாக நாம் பண்ணக்கூடிய எந்தவிதமான கர்மா அல்லது, யாகமாகட்டும் அல்லது, தபஸாகட்டும் எது ஆனாலும் அது ஸார்த்தகமாகாது. பகவான் சொல்லியிருக்கிறார்.
அச்ரத்தயாஹுதம் தத்தம்
தபஸ்தப்தம் க்ருதம்ச யத் |
அஸதித்யுச்யதே பார்த
நசதத்ப்ரேத்ய நோ இஹ ||
தபஸ்தப்தம் க்ருதம்ச யத் |
அஸதித்யுச்யதே பார்த
நசதத்ப்ரேத்ய நோ இஹ ||
நீ அஸ்ரத்தையினால் எந்தக் கர்மாவை செய்தாலும் அந்தக் கர்மா பலிக்காது. உனக்கு ஜன்மாந்தரத்திலேயும் அதனால் ஒன்றும் பலன் வராது. இப்பவும் பலன் வராது அதுதான் உபநிஷத்திலே
யதேவ வித்யயா கரோதி
ஸ்ரத்தயோ பநிஷதா
ததேவ வீர்யவத்தரம் பவதி ||
ததேவ வீர்யவத்தரம் பவதி ||
என்று சொல்லப்படுகிறது.
அதுமாதிரி நமக்கு அஸ்ரத்தையை ஸ்ரத்தையினாலே நீக்கவேண்டும். லோபத்தை தானத்தினாலும் நீக்க வேண்டும். க்ரோதத்தை அக்ரோதத்தினால் நீக்கவேண்டும் க்ஷமையினாலே பொறுமையினாலே நீக்கவேண்டும். அந்ருதத்தையை ஸத்யத்தினாலே நீக்கவேண்டும். அதாவது இந்த உபதேசத்தினால நாம் க்ரஹிக்க வேண்டியது என்னவென்று கேட்டால் நம்முடைய ஜீவிதத்திலே நமக்கு என்றைக்கும் தானம் செய்யக்கூடிய ஸ்வபாவம் இருக்கவேண்டும். அதுவும் ப்ரும்மார்ப்பணமாகத்தான் தானம் செய்யக்கூடிய ஸ்வபாவம் இருக்கவேண்டும். சாஸ்த்ரத்திலேயும், குருவாக்யத்திலேயும் ஸ்ரத்தை என்பது வேண்டும். பொறுமை என்பது ரொம்பவும் வேண்டும். ஸத்யம் என்பது என்றைக்கும் வேண்டும். அஸத்யத்தை என்றைக்கும் சொல்லக்கூடாது. “ஸத்யமேவ ஜயதே”
ஸத்யத்துக்கு ஜயம் என்பது நிச்சயம். தற்காலிகமாக அஸத்யம் ஜயிக்கிறது. ஸத்யம் ஜயிக்கிறது இல்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஸத்யத்துக்கு ஜயம் என்பதுதான் வாஸ்தவம். அதனாலே ஸத்யத்தை நாம் கடைப்பிடித்து வாழவேண்டும்.
இப்படி நாம் வேதங்களில் ஒவ்வொன்றையும் பார்த்தால் பரமாற்புதமான உபதேசங்கள் இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட உபதேசங்கள் அந்த வேதங்களில் இருக்கிறதனாலேதான் அந்த வேதத்துக்கு வேறு எதற்கும் இல்லாத ஒரு மகிமை இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.
த்ரைலோக்ய நிர்மாண
நிபுண: பரமேஸ்வர
நிபுண: பரமேஸ்வர
த்ரைலோக்ய நிர்மாண நிபுண: பரமேஸ்வர: என்று சொல்கிறது. அதனாலே அப்பேர்ப்பட்ட பரமேஸ்வரன் அந்த வேதத்தை அனுக்ரஹித்ததினால் தானே அந்த வேதத்திலே ஓர் அக்ஷரம் கூட அப்ரமாணம் என்று நாம் சொல்ல முடியாது.
இப்போது கிராமங்களில் வேத பண்டிதர்களைப் பார்க்க முடியாது. பெரிய ஊர்களிலாவது வேத பண்டிதர்களைப் பார்க்க முடிகிறது. இன்னும் பரவலாக பண்டிதர்களுடைய ஸ்ரத்தை எப்படி இருக்குமோ தெரியாது அதனாலே இந்த வேதங்களை ரக்ஷிக்கவேண்டும். அந்த வேதத்தில் பதம் கனம், கிரமம், ஜடை ஆகியவற்றை ரக்ஷிக்க வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வேதங்களை சி.டி; டி.வி.டி போன்றவற்றின் மூலம் வெளியிடுகிறது. உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் பண்ணி இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.
- ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
No comments:
Post a Comment