Tuesday, 11 March 2014

ஈச்வர கிருபை அடைய சுலபமான வழி:

ஈச்வர கிருபை அடைய சுலபமான வழி:


மனிதனுக்கு கஷ்டம் வரும் சமயத்தில் யார் ஞாபகத்திற்கு வருவார்கள் என்று சொன்னால் தாயார்தாம். ஏனெனில் இந்த உலகத்தில் தாயாருக்கு சமானமாகத்தன் குழந்தைகளுடைய நன்மையைப் பற்றி யோசிக்கக் கூடியவர் இன்னொருவர் கிடையாது. தன்னுடைய குழந்தை எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் கூட அந்த குழந்தையும் நல்லதாகட்டும் என்றுதான் அந்தத் தாயார் யோசனை செய்வாள். அதைத்தான் தாயாருடைய பெருமை. அதுதான் பகவத் பாதாள் சொன்னார்:


குபுத்ரோஜாயேத கஸ்சிதபிகுமாதா ந பவதி ||

பிள்ளை கெட்டவனாக இருந்தாலும் கெட்ட தாயார் இருக்க முடியாது. தாயாருக்கு அன்பு எப்போதும் இருக்கும். அதனால்தான் நமக்கு கஷ்டம் வந்தால் தாயார்தான் நினைவுக்கு வருகிறாள்.

ஆபதி கிம் கரணீயம்
ஸ்மரணீயம் சரணயுகள அம்பாயா

ஆபத்து வந்தால் என்ன செய்யவேண்டும்? ஜகன் மாதாவை நினைத்துக் கொள்ள வேண்டும்.

தத்ஸ்மரணம்கிம்குருதே
ப்ரஹ்மாதீனாபிகிங்கரி குருதே ||

அந்த ஜகன்மாதாவை நினைத்துக் கொண்டால் என்ன ஆகும்? எல்லாம் கிடைக்கும். எல்லா கஷ்டங்களும் பரிகாரம் ஆகும். எல்லா இஷ்டார்த்தங்களும் நிறைவேறும்.
எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலிருந்தும் கூட அந்த ஜகன்மாதா நமக்கு விடுதலை கொடுப்பாள். எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் கூட ஜகன் மாதாவை நாம் அத்யந்த பக்தியோடு ப்ரார்த்தனை செய்தால் துன்பங்கள் தாமாகவே நீங்கிவிடும்.
நமக்கு அதில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை, பக்தி, ஸ்ரத்தை வைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய ப்ரார்த்தனை கண்டிப்பாக பலிக்கும். ஒருவனுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்போகும் நிலைமையிலும் கூட தவறே செய்யாது இருந்தால் அந்தத் தாயாருடைய க்ருபை இருந்தால் நிவர்த்தியாகும். மனதில் அபாரமான பக்தி இருந்தால் நாம் எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். அந்த பக்தி இல்லையென்றால் நமக்கு ஒன்றும் நடக்காது. பலபேர் சொல்வார்கள் ஸ்வாமிஜி! நீங்கள் பேசுகிறீர்கள் அதைக்கேட்டு நாங்கள் எல்லாம் ப்ரார்த்தனை பண்ணினோம் காரியம் ஒன்றும் நடக்கவில்லை? ஏன் நடக்கவில்லை உன் மனதில் பக்தி இல்லை. ஏதோ சொல்வோம் அது நடந்தால் நடக்கட்டும் என்று. எப்படி நடக்கும்?

பகவத்பாதாள் ஸ்ரத்தையைப் பற்றிக் கூறியிருப்பது என்ன?

சாஸ்த்ரத்திலேயும் குரு வாக்யத்திலேயும் அபாரமான நம்பிக்கை வேண்டும். இப்படித்தான் சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. இப்படித்தான் நடக்கவேண்டும் என்கிற அபாரமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு பெயர்தான் ‘ஸ்ரத்தா’. அத்தனை பேரும் அந்த நம்பிக்கையோடு கார்யம் பண்ணுகிறோமா என்றால் அவரவர்கள் மனத்தைத்தான் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் யாருக்கும் விடை சொல்ல வேண்டியது இல்லை. அந்த ஸ்ரத்தை யாருக்கும் இருப்பது இல்லை.

நம்முடைய ஸமஸ்த ஆபத்துகளிலிருந்தும், நம்மை காப்பாற்றக் கூடிய சக்தி அம்பாளுக்குத்தான் இருக்கிறது. முதலில் அந்த தாயாரை அத்யந்த ஸ்ரத்தையுடன் ப்ரார்த்தனை பண்ண வேண்டும். அந்ததேவி ஒருத்திதான் பெயர்கள் அநேகம். மதுரையில் மீனாக்ஷி என்றும், சிருங்கேரியில் சாரதா என்றும், காசியில் அன்னபூரணி என்றும், கொல்லூரில் மூகாம்பிகை என்றும் கோலாப்பூரில் மகாலக்ஷ்மி என்றும் சொல்லி உபாசனை செய்கிறோம். பெயர் மாறினாலும் அந்த சைதன்யத்திலே எந்த வித்யாஸமும் இல்லை. அதே மீனாக்ஷி பெரியவளா இல்லை காசி விசாலாக்ஷி பெரியவளா என்று யாராவது கேட்டால் அவன் முட்டாள். ஒரே தேவிதான் காசியிலேயும், மதுரையிலேயும் எல்லா இடத்திலேயும் இருக்கிறாள்; அந்த தேவி ஸர்வத்ர ஏக ரூபமாகத்தான் இருக்கிறாள். பெயர்களில் தான் வித்தியாசம். எத்தனை பெயர்கள் இருந்தால் என்ன? அம்பாளுக்கு சஹஸ்ரநாம பூஜை பண்ணுவது இல்லையா? ஆயிரம் நாமங்கள் சொல்லி பூஜை பண்ணுவதனால் ஆயிரம் அம்பாள் இருக்கிறாள் என்று அர்த்தமா? ஒரே அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் சொல்லி பூஜை பண்ணலாம் என்றுதானே அர்த்தம். அதேமாதிரி பெயர்கள்தாம் வித்தியாசமே தவிர அம்பாளிடம் வித்தியாசம் இருக்காது. அதனாலே நாம் அந்த அம்பாளை ஸ்ரத்தையோடு, பக்தியோடு உபாசனை பண்ண வேண்டும். அந்த அம்பாள்தான் இங்கு ஸீதாலக்ஷ்மி என்கிற பெயரிலே பக்தர்களை அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறாள். பாலாத்ரிபுரஸுந்தரி என்கிற பெயரிலேயும் அந்த அம்பாள் விராஜமாக இருக்கிறாள். அந்த அம்பாளை நாம் ஸ்ரத்தை பக்திகளோடு உபாசனை செய்து ஸ்ரேயஸை அடைவோம். உங்கள் எல்லாருக்கும் கூட அந்த பக்தி இருக்கிறது. ஆனால் அது தீவிரமாக இருக்காது. தீவிரம் வரவேண்டும். எல்லோரும் பூஜை பண்ணுவதாகச் சொல்வார்கள். நான் பூஜைக்கு உட்கார்ந்தால் 2மணி நேரம், 3மணி நேரம் பூஜை பண்ணுவேன் என்று சொல்வார்கள். அந்த 2மணி நேரம், 3மணி நேரத்தில் மனம் அந்த பகவானிடம் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதுதான் விஷயம். மனம் எங்கே எல்லாமோ ஓடிக் கொண்டேயிருக்கும். அதன் நடுவில் பூஜை நடக்கும். ஜபமும் அதே மாதிரிதான் நடக்கும். மனம் எங்கேயோ ஓடிக் கொண்டேயிருக்கும். 108 ஜபம் நான் பண்ணினேன். 1008 ஜபம் பண்ணினேன் என்று கணக்குத்தான் 10000 ஜபம் கண்ணினேன் என்று சொன்னாலும் மனம் அதில் லயிக்க வேண்டும். ஒரு 5நிமிஷம் ஜபம் பண்ணினாலும் போதும்; 10 நிமிஷம் ஜபம் பண்ணினாலும் போதும் மனம் வேறு எங்கேயும் போகக்கூடாது. அதற்கு நாம் முயற்சி பண்ணவேண்டும். அப்படி செய்தால் நம்முடைய ஜபமோ, பூஜையோ எல்லாம் பலிக்கும். இல்லாவிட்டால் பகவானுடைய விஷயத்தில் லயிக்காமல் மனம் எங்கெங்கேயோ ஓடிக்கொண்டிருந்து, சும்மா வெளியில் பார்ப்பதற்கு மட்டும் ஜபம் பண்ணிக்கொண்டிருந்தால் அந்த ஜபம் பலிக்காது. அது மாதிரி நாம் எல்லாரும் கூட பக்தி என்பதை முக்கியமாக வைத்துக் கொண்டு பகவானை ஸேவிக்க வேண்டும். பகவானுடைய நாமத்தை ஜபிக்கவேண்டும்.

இந்த காலத்தில் ஜனங்களுக்கு பகவானுடைய க்ருபை கிடைக்க சுலபமான வழி என்ன என்று கேட்டால் பகவானுடைய நாம ஜபம். மீதி எல்லாம் பண்ணுவதற்கு எல்லோராலும் முடியாது. யாகம் செய் என்றால் எத்தனை பேரால் முடியும்? முடியாது. ஆனால் பகவானுடைய நாமத்தை ஜபம் செய் என்று சொன்னால் அதை என்னால் முடியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஊமையானாலும் பகவானை மனதால் நினைத்துக் கொள் என்று நாம் சொல்லலாம். மற்ற எவரும் பகவன் நாமாவை சொல்ல முடியாது என்று சொல்லக்கூடியவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஓர் ஆச்சர்யம் என்னவென்று கேட்டால் மனிதனுக்கு பகவன் நாமத்தை உச்சரிக்கிறது என்பது ரொம்ப சுலபமான கார்யம் அதாவது எந்தவிதமான ஒரு கஷ்டமான கார்யமும் இல்லை. என்றாலும் அது வாயில் வராது. வேண்டாத பேச்சுகள்தாம் வாயில் வரும். இது என்ன ஓர் ஆச்சர்யம்?

“அஹோ மோஹஸ்ய மாஹாத்ம்யம்” என்பார்கள்.

‘நமஸ்சிவாய’ என்கிற 5 அக்ஷரத்தில் ஒரு கஷ்டமான அக்ஷரமும் இல்லை. இது வாயில் நுழையாது என்பதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் வாயிலே நுழையக் கூடிய அக்ஷரங்கள்தாம். சமயம் இருக்கும் ஆனால் அதை மட்டும் சொல்ல மாட்டான். அமூல்யமான சமயத்தை நாசம் பண்ணுவான். இதை என்னவென்று சொல்வது? மகாமோகம் என்றுதானே சொல்லவேண்டும். இந்த மகாமோகம் போகவேண்டும்.

எந்த வஸ்து போனாலும் அது கிடைக்கலாம். ஆனால் சமயம் என்பது போனால் மட்டும் கிடைக்காது. நாம் 100 வருஷம் ஆயுள் வைத்துக் கொண்டாலும் ஒரு நாள் போய் விட்டதென்றால் அந்த நாள் வராது. இனி 99 வருஷம் 11 மாதம் 29 நாள்தான். வேறு வஸ்துவானால் முயற்சி பண்ணினால் கிடைக்கலாம். அப்படி மனிதனுடைய வாழ்க்கையில் அமூல்யமானது சமயம். அந்தச் சமயத்தை வீணாக்குவதைவிட ஒரு முட்டாள் தனமான அவிவேகம் வேறு எதுவும் இல்லை. அதனால் நாம் சமயத்தை வீணாக்கக்கூடாது. வேண்டாத விஷயத்தை சர்ச்சை செய்து நமக்கு என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அப்போது ஏன் அந்த விஷயத்திலேயே சமயத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த விஷயத்தை விட்டுவிடு. பகவானை சிறிது நேரம் தியானம் செய். அந்த ஸந்நிவேசம் யார் மனத்திற்கும் வராது. நாங்கள் நினைக்கிறது, செய்வது எல்லாம் தப்பு என்று சொல்கிறீர்களா? “தப்புதான்” எதற்கு அது? இந்த வேண்டாத விஷயங்களெல்லாம் விட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் நமக்கு எதுவும் வரப்போவதும் இல்லை. போகப் போவதும் இல்லை. அனாவசியம் அது. நீங்கள் என்ன உலகத்தையெல்லாம் சரி பண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது சாத்யம் இல்லை. உலகம் அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நதி ப்ரவாகத்தில் போய்க் கொண்டிருக்கிறபோது எதிர்க்கரைக்கு நீந்திச் செல்கிறேன் என்றால் முடியுமா? இல்லை போகவே முடியாது. அது இழுத்துகொண்டு போய்விடும். அதனால் நதிக்கு எதிர் கரைக்கு நீந்திச்செல்வது என்கிற முட்டாள் தனத்தை செய்யப் போகாதே. நதி எப்படி போகுமோ அப்படிப் போய்விடும். அதனால் நீங்கள் சமயத்தை வீணாக்காதீர்கள். நமக்கு எந்த விஷயம் தேவை இல்லையோ, அந்த விஷயத்தைப் பற்றி அனாவஸ்யமான சர்ச்சைகள் செய்வதால் அதில் ஒரு ப்ரயோஜனமும் இருக்காது. அப்பேர்ப்பட்ட விஷயத்தில் மனசைக் கொண்டு போகாமல் அதே சமயத்தில் பகவானுடைய நாமாவிலே பகவானுடைய நாமோச்சாரணத்தில் நாம் அந்த சமயத்தை விநியோகம் செய்தோமானால் அது மிகவும் விவேகமாகும். ரொம்ப நல்ல கார்யமாகும். ஜனங்களுக்கு இது தெரியாது. அதனால்தான் புரியாமல் அவஸ்தைப் படுகிறார்கள். தம்முடைய சமயத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நமக்கு வேண்டியது ஈஸ்வர க்ருபை. நமக்கு சௌக்கியம் வேண்டும். கூடுமானவரை சமயத்தை வ்யர்த்தமான விஷயங்களில் விநியோகிக்காமல் பகவன் நாம ஜபத்திலேயும், பகவத் த்யானத்திலேயும் விநியோகம் செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு ஸ்ரேயஸ் ஆகும் என்று இந்த சமயத்தில் உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்று கேட்டால் இன்றைக்கு அநேகம் பேர் வந்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் சுலபமான ஓர் உபாயம் வேண்டும். இது செய்யுங்கள், அது செய்யுங்கள் என்றால் யாருக்கும் சாத்யம் இல்லை. ஒரு சுலபமான உபாயம் ஈஸ்வர க்ருபையை அடைவதற்கு இந்த வார்த்தை சொன்னேன். எல்லோரும் பகவன் நாமத்தை கூடுமானவரை கிடைக்கிற நேரத்தில் சொல்லி பகவானுடைய க்ருபைக்கு பாத்திரமாகுங்கள் இந்த கொடிமங்கலத்திற்கு நான் வரவேண்டும் என்று வெங்கட்ராமன் ரொம்பவும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்காக நான் இங்கு வந்தேன். அம்பாளுடைய கோவிலை ரொம்ப அழகாக கட்டி அம்பாளை ப்ரதிஷ்டை செய்து இந்த இடத்திற்கு ஒரு நல்ல சாந்நித்யத்தை உண்டாக்கி உள்ளார். அதற்காக நான் அவருக்கு பரிபூரணமாக ஆசீர்வாதம் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் ரொம்ப ஸ்ரத்தா பக்திகளோடு இங்கு வந்து ஆசார்யாளைத் தரிசனம் பண்ணவேண்டும், ஆசார்யாளின் ஆசிர்வாதம் வேண்டும், ஆசார்யாளின் பேச்சைக் கேட்கவேண்டும் என்பதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் எல்லோருக்கும் பரிபூர்ணமான ஆசிர்வாதம் பண்ணி அந்த அம்பாளுடைய க்ருபை எல்லோருக்கும் இருக்கட்டும் என்று அம்பாளை ப்ரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பண்ணி இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.

- ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்

No comments:

Post a Comment