ஸ்ரீ சங்கரர் அருளிச்செய்த துர்வாஸனா ப்ரதிகார தசகம்:
உலகில் மனிதப்பிறவி எடுத்துள்ள ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் அவரது வாஸனா பலத்தைப் பொருத்தனவே ஆகும். இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்ல விஷயங்களோ அல்லது தீய விஷயங்களோ, அவ்வனுபவங்கள் அழியும் போது நம்முடைய ஆழ்மனஸில் ஒரு ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. இந்த ஸம்ஸ்காரத்தினுடைய ஒருங்கிணைப்புதான் ஒருவனது குணங்களை நிச்சயிக்கின்றது. எனவேதான் ‘ஒருவரது எண்ணங்களே ஒருவரை உருவாக்குகின்றன’ என்று கூறுகிறோம். நம்முடைய சரீரம் ‘இரும்பு' என்றால் அஃதை அடித்து உருவம் கொடுக்கும் சம்மட்டியானது நம்முடைய எண்ணங்களே. இப்படிப்பட்ட ஸம்ஸ்காரத்தை ‘வாஸனை’ என்று குறிப்பிடுகிறோம். நல்ல மணமுள்ள புஷ்பங்களை வைத்து மூடிய பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்த பிறகும் எவ்வாறு அப்பாத்திரம் சுகந்தத்தைக் கொண்டுள்ளதோ, அதே போன்று நற்செயல்களில் முன்பிறவியில் ஈடுபட்டால் அஃதிலிருந்து உதித்த நல்வாஸனை இப்பிறவியிலும் நம்மை நற்செயல்கள் செய்வதில் ஈடுபடுத்தும். ஆனால் துர்கந்தம் வீசும் பதார்த்தங்கள் கொண்ட பாத்திரம் அவற்றை நீக்கிய பின்பும் பல காலம் துர்நாற்றத்தையே வீசும். இவ்வாறே முற்பிறவிகளில் தீய செயல்களில் ஈடுபட்டால், அதனின்று உதித்த துர்வாஸனைகள் இப்பிறவியில் நம்மை தீய செயல்களையே செய்யத் தூண்டிவிடும். ஆகையால் நற்செயல்களோ அல்லது தீய செயல்களோ செய்ததால் அதிலிருந்து நாம் சேகரித்த வாஸனையின் பலத்தினால், அதன் தரத்தை அநுசரித்தே இப்பிறவியில் இயற்கையாகவே நாம் நற்செயல்களிலோ அல்லது தீய செயல்களிலோ ஈடுபடுகிறோம். நல்ல வாசனையின் பயனாக நாம் செய்யும் நற்செயல்களால் நாமும் நம்மைச் சார்ந்தோரும் பல நன்மைகளை அடைகிறோம். மாறாக தீயவாஸனைகளின் விளைவாக தீய செயல்களில் ஈடுபட்டு நாமும், பிறரும் பல இன்னல்களை எதிர்கொள்கிறாம். ஆகவே துர்லபமான இந்த மனிதப் பிறவியில், இனி வரும் பிறவிகளில், நம்மை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள எப்பொழுதும் நற்செயல்களிலேயே ஈடுபட்டு நாம் நல்ல வாஸனைகளையே சேகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் என்ன செய்வது? நம்முடைய ப்ராரப்த கர்ம பலத்தால் நம்மையும் மீறி சில சமயம் கெட்ட வாஸனைகளையும் பற்றிக் கொண்டு விடுவோம். ஜீவராசிகளிடம் பரமகருணை கொண்ட ஸ்ரீசங்கரர், அவர்களுக்கு உபதேசம் செய்யும் வகையில் துர்வாஸனைகளிலிருந்து விடுபடும் எளிய வழிமுறையை நமக்கு ‘துர்வாஸனா ப்ரதீகார தசகம்’ என்ற பத்து ஸ்லோகங்களில் மிக அழகாக வர்ணித்துள்ளார்.
தீய வாஸனைகள் வேரோடு அகற்றப்பட வேண்டும். எங்ஙனம்? அதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1) துர்வாஸனைகள் செயல்பட்டு நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றை எதிர்த்து நல்வாஸனைகளைத் தரும் நற்பழக்கங்களைக் கடைபிடிப்பது. துர்நாற்றத்தை நீக்க நாம் சுகந்தத்தைத் தெளித்துக் கொள்வது போன்று இது உதவும். அதாவது சுகந்தமானது துர்நாற்றத்தால் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும். ஆனால், சுகந்தம் சற்றே குறையப் பெற்றாலும் துர்நாற்றம் மீண்டும் தலைதூக்கும். அதே போன்று, துர்வாஸனைகள் கெட்ட மணத்தைப் போன்று மீண்டும் வெளிப்படும். இந்நிலை ஏற்படாமல் இருக்க, அதாவது துர்வாஸனைகள் தலை தூக்காமல் இருக்க நல்வாஸனைகளைப் பெற நற்செயல்களில் இடையறாது ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
2) துர்வாஸனைகளோடு கூடிய மனத்தையே இயங்க விடாமல் அடக்கிவிடுவது. துர்மணம் பரப்பும் குப்பையை நெருப்பில் எரித்து அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறோமோ அவ்வாறே துர்வாஸனைகளைக் கொடுக்கும் சூழலிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு அவற்றை அழிக்க முற்பட வேண்டும். உதாரணமாக, மனத்தைப் பாதிக்கும் எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அவற்றிலிருந்து நாம் சுலபமாக விடுபட இயலும்.
3) துர்வாஸனைகளால் ஏற்படும் விளைவுகளை நம் மனத்திற்கு எடுத்துக்கூறி அம்மனத்தை வாஸனைகளிலிருந்து விலகப் பழக்க வேண்டும்.
ப்ரஹ்மானந்தத்தை அடையும் ஸாதனங்களாக இம்மூன்றையும் ஸ்ரீசங்கரர் தாம் இயற்றியுள்ள ‘துர்வாஸனா ப்ரதீகார தசகம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.
வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்து கொண்டும், அவற்றில் தவிர்க்கப்பட்டுள்ள நிஷித்தமான செயல்களைச் செய்யாமலும், அவரவர் நிலைக்கேற்ப செய்யத் தக்க செயல்களையும், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயப்பனவென்பதையும் பொழுது புலரும் சமயத்தினின்றே செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மனத்தூய்மை (சித்த சுத்தி)யை அடைந்து ஒருவன் ஆத்ம சிந்தனத்தில் ஈடுபட வேண்டும். அஃதை அனுசரித்து, துர்வாஸனைகள் நமக்கு ஏற்படுத்தும் இன்னல்களையும், நல்ல வாஸனைகளால் நாம் அடையப் பெறும் மகத்தான பலன்களையும், இதிஹாஸங்களின் கதாநாயகர்கள் தமது வாழ்க்கையின் மூலம் நமக்கு எடுத்துரைக்கும் நற்செயல்களையும், ப்ரதானமாக ஸ்ரீ மஹாபாரதத்தின் மோக்ஷதர்மப் பகுதியையும், வஸிஷ்டர் ஸ்ரீ ராமருக்கு போதித்த ‘யோக வாஸிஷ்டம்’ என்னும் ‘ஸ்ரீவாஸிஷ்ட ராமாயண’த்தையும் கருத்தூன்றி ஒரு மனமாகப் படித்து அறிந்து அதன் ஸாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறாக ‘ஸத்வாஸனைகள்’ நிலைபெற்றிருக்கும் நிலையில், அது தொடர்ந்து இறைவனிடத்தில் மாறாத பேரின்ப அனுபவமாக மாறுவதற்கு, மாலை நேரங்களில் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்ற க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ள வ்ருத்தாந்தங்களை (கதை) படித்து அனுபவிக்க வேண்டும். இவ்வாறாக பகல் நேரங்களில் செய்யக்கூடிய சிறிய இடைவிடாத முயற்சிகளால் ‘மனோலயம்’ ஸித்தித்து இருப்பதற்கு, இரவில் ஆத்ம சிந்தனையில் திளைத்து, ‘ஆத்மானந்தானுபவம்’ பெற வேண்டும். நம் சரீரம், இந்த்ரியம், முதலானவற்றைப் போஷிப்பதற்கான உலக வ்யவஹாரங்களில் நமக்கு இந்த உடலுடன் உறவை ஏற்படுத்தித் தற்போதுள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ள நம்முடைய ப்ராரப்த கர்ம வினைகளே மிஞ்சியுள்ள நமது வாழ்நாளின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறான மன நிறைவுடன் ‘நான்’ ‘எனது’ (அஹம், மம) என்ற வாஸனைகளை மீண்டும் தூண்ட வழியில்லாமல் செய்து கொண்டு வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.
குறிப்பு: நாம் செய்யும் வினைகள் ஸஞ்சிதம் (சேர்த்து குவிக்கப்பட்டவை). ஆகாமி (வருங்காலத்தில் சேமிப்பவை) என்று இரு வகைப்படும். அவற்றில் பக்குவத்தை அடைந்து தற்போதுள்ள ஸரீரத்தை கொடுத்துள்ள ஸஞ்சித வினையின் ஒரு பாகமே ப்ராரப்தம் எனப்படும். இந்த சரீரத்தில் நல் வாஸனைகளை அடையப்பெற்று இனி வரும் பிறவிகளில் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வோமேயானால் ஏதோ ஒரு பிறவியில் ஆத்மஞானத்தை அடைவது நிச்சயம். அப்போது முற்பிறவியின் மூட்டைகளாக உள்ள ஸஞ்சித வினைகள் வேரோடு அகன்றுவிடும். ஆகாமி என்பது ஒட்டாது. இதையே பகவான் கீதையில் ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா (ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा) என்று குறிப்பிடுகிறார்.
நம்முடைய மனதை நோக்கிக் கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
“ஓ மனமே! அனாதியான அஜ்ஞானம் அல்லது மாயா என்ற தத்துவம்தான் ‘இந்த பஞ்சகோசங்களாலான உடல்தான் நான்’ என்ற பிணைப்பை ஏற்படுத்தியது. துக்கமயமானதும், அசுத்தமானதும், அழிவுறக்கூடியதும் அஜ்ஞானமயமானதுமான இந்த கோசங்கள் நான் அல்லேன்; ‘எங்கும் நிறைந்ததும் அழிவற்றதும், ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமுமான ப்ரஹ்மமே நான்’ என்ற பாவனை மூலம் இந்த அஜ்ஞானத்தைக் கடக்க முயன்று அகற்ற வேண்டும். உன் அனுபவத்தில் உலகில் காண்கின்ற காட்சியனைத்தும் நிலையற்றன, பொய். அவையனைத்திற்கும் ஆதாரமாக நிற்கும் ஸத், சித், ஆனந்த ப்ரஹ்மஸ்வரூபமே மெய். அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தைத் தவிர நான் வேறல்லேன் என்று நினை. உண்மையில் அந்த ப்ரஹ்மத்தைத் தவிர நீ வேறல்லாததால் இந்த ப்ரபஞ்சத்தைப் பற்றிய ஸ்வரூப கற்பனைகளை அறவே ஒழித்து விடு. மனஸின் சஞ்சலத்தால் அவ்வப்போது உன் மகிழ்ச்சிக்காக உலக இன்பங்களில் நாட்டம் ஏற்பட்டு ‘இவை இவை வேண்டும்’ என்ற ஆசை மேலிடும். ஆனால் இவைகளை அடைவதால் ஏற்படும் துக்கத்தின் தொடரை நினைத்து நினைத்துப் பார்த்து அந்த ஆசைக்கு ஒருபோதும் இடம் தராதே. உன் ஆசை நிறைவேறாத போதோ அல்லது அஃதை அடைய தடை ஏற்படும்போதோ அதற்குக் காரணமானவைகளில் கோபம் உண்டாகும். கோபம் என்பதும் ஒரு கெட்ட வாஸனை. அதைத் தவிர்க்க சிறந்த உபாயம் பொறுமை. கோபம் உண்டாகும் சமயத்தில் அதைச் சிறிது நேரம் தள்ளிப் போடமுடியுமென்றால், அதாவது பொறுமையைக் கடைபிடிக்க முடியுமானால் கோபம் தானே அடங்கும். காமத்தின் மற்றொரு வகை லோபம். பிறரிடம் உள்ளது தன்னிடம் இல்லை. அதுவும் தனக்கு வேண்டும் என்ற உணர்வே லோபம். தன்னிடம் இருப்பதைக் கொண்டுத் திருப்தியடையும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் லோபத்தை வெல்லலாம்.
தொடர்ந்து மனதை நோக்கிக் கூறுகிறார். ஓ மனமே! சிற்றின்பம் என்பது உடலால் கிடைப்பதாகும். அதில் ஆனந்தம் கிடைப்பதாக நினைப்பது ஒரு ப்ரமை. இந்த ஆனந்தானுபவத்தை அனுசரித்து அதைத் தொடர்ந்து ஏற்படும் துக்க விளைவுகளை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் இந்த ப்ரமையை நீ விட்டுவிடலாம்; கடுமையான சொற்கள் பேசுவது என்பது பழக்கத்தால் இயல்பாகிவிட்ட வழக்கம். இந்த குணத்தை இனிமையாகப் பேசுவதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். வீணாகப் பேசுவதைக் குறைக்க மௌனத்தைக் கடைபிடி. தீயவர்களின் சேர்க்கையைத் தவிர்க்க முடியாமல் போகில் அதை மாற்ற நல்லோர்களுடன் நிர்பந்தமாக பழக முயற்சி செய். கர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்து கர்வம் கொள்ளாமலிருக்கப் பழகிக் கொள். பிறர் நிந்தித்தால் அதனை எதிர்த்து நீயும் நிந்திக்க முயலாதே. பிறர் உன்னை நிந்திக்க நேர்ந்தால் நிந்தையை எதிர்கொண்டு மனிதனாக வாழ்ந்து காட்டிய அவதார புருஷர்களான ஸ்ரீராமன், ஸ்ரீக்ருஷ்ணன், மஹர்ஷிகள் போன்ற பெரியோர்களையே இந்த உலகம் எவ்வாறு நிந்தித்தது என்பதை நினைவிற் கொண்டு, உன்னை மற்றவர் நிந்திப்பதைப் பொருட்படுத்தாதே. ஏனெனில் அவ்வாறு அவர்களை நிந்தித்தவர்கள் துன்பப்பட்டதையும் நீ அறிவாய்!
குறிப்பு: மற்றவர் நம்மை நிந்திக்கும்போது அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற கருத்தை “ஞானாங்குசம்” என்ற க்ரந்தத்தில் ஸ்ரீசங்கரர் கூறுகையில் என்ற ஸ்லோகத்தில் கூறுகிறார். இதன் கருத்து:
எந்த ஸாரமும் அற்ற இவ்வுலகில் ஒரு வேளை என்னை நிந்தித்துப் பேசுவதால் ஒருவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிட்டுமேயாகில், என் முன்பாகவோ அல்லது வேறு யாரிடமோ நிந்தித்துப் பேசட்டும். ஏனெனில் துக்க மயமான இவ்வுலகில் நம்மை நிமித்தமாகக் கொண்டு எவரேனும் மகிழ்ச்சியுற்றால் அது கிடைத்தற்கரிய பாக்யமன்றோ?
தமோ குணம் நிறைந்து நிற்கும்போது ஏற்படுவது நித்திரை. தமோ குணத்தை வளர்க்கிற பொருட்களால் தூக்கமும் அதிகமாகும். அதை வெல்ல ஸத்வ குணத்தை வளர்க்கிற உணவு வகைகளையே அதிகம் உண்ண வேண்டும். நித்திரையையும், விழிப்பற்ற நிலையான கனவு நிலையையும் எப்போதும் விழித்துக் கொண்டிருப்பதன் மூலம் அகற்று. (மனம் களைத்துப் போகும் வரை விழித்திரு; மனம் அடங்கினால் நன்கு நித்திரை வரும். மனம் அடங்கா நிலையில் கனவு ஏற்படும்). உணவை மிதமாக, அதாவது முன்பு உண்ட உணவு ஜீர்ணமானதை அறிந்து உட்கொண்டால் நோய்களைத் தவிர்க்க இயலும். ரஸனேந்த்ரியத்திற்கு அடிமையாகித் தவறான நேரத்தில் உணவு உட்கொள்வதன் விளைவே நமக்கு ஏற்படும் நோய்களின் காரணம். 1. ‘எனக்குத் துக்கமேற்படும்போது உதவுபவர் எவரும் இல்லையே’ என்று தீனமாக ஏங்கி நிற்காதே. ‘நான் நித்யன், என்னை ஒருவரும் அழித்துவிட முடியாது, உலகின் உயர்வும், தாழ்வும் என்னைப் பாதிக்காது’ என்ற மனோதைர்யமே இந்த தீன உணர்வை விரட்டி அடிக்கும். ‘வேண்டியதாயினும், வேண்டாததாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றும் நீ சேர்த்து வைத்த பொருட்கள் அனேகம். இவையனைத்தும், உனக்கு இவற்றில் ஏற்பட்ட நப்பாசை காரணமாகச் சேர்க்கப்பட்டவையே! உண்மையில் இவை உனக்குத் தேவையில்லை. தேவையற்றதாயின் விலக்குவேன் என்ற திடபுத்தியுடன் நீ சீர்தூக்கி, விலக்க வேண்டியவற்றை விலக்க முற்பட்டாயேயானால் பெருஞ்சுமையானது உன்னைவிட்டு விலகும். 2. பெண்ணாசை பொல்லாதது. இதனால் மடிந்தவர் ராவணன் போன்ற மஹா பலசாலிகள் என்பதை மனதிற்கொண்டு அதனைத் தவிர்த்து விடு. ‘அது கஷ்டம், இது கஷ்டம்’ என எங்கு நோக்கினும் கஷ்டத்தையே காணாதே. ஏனெனில் நீ ஆனந்தமயமான ஆத்மஸ்வரூபம் என்பதை நினைவிற்கொண்டு அதில் நிலைத்தால் தோற்றத்தில் துக்கமாகத் தோன்றுபவையும் ஆத்மஸ்வரூபமாகி கஷ்டமானவை என்ற நினைவு அகன்று விடும்.
குறிப்பு: 1. ஆஹாரத்தில் நியமத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் ப்ரஹ்லாத ஸ்வாமியின்
என்ற ஸ்லோகத்தில் காண்கிறோம். இதன் கருத்து -உணவை உண்பதற்காக வேதத்தில் விஹிதமான செயல்களைச் செய்ய வேண்டும். நம் உடலில் ப்ராணனை தங்கவைக்க எவ்வளவு உணவு தேவையோ அவ்வளவு உணவையே உண்ண வேண்டும். நம் உடலில் ப்ராணன் அவசியம்; ஏனெனில் அப்பொழுதுதான் தத்துவத்தை உணர முடியும். தத்துவத்தை உணர்வதால் பிறப்பென்ற துக்கம் மேலும் மேலும் தொடராது.
2. இதே கருத்தை ஸ்ரீ சங்கரர் பஜகோவிந்தத்தில்
என்ற ஸ்லோகத்தில் பொருள் சேர்த்து சொத்துக்களைக் குவிப்பது ஆபத்தானதாகும். கடுகளவும் பொருளால் ஆனந்தத்தை அடைய முடியாது. செல்வந்தன்கூட தன் பிள்ளைகளிடத்தில் பயப்படுகிறான். இதுவே உலக நியதியாக விளங்குகிறது என்று கூறுகிறார். பத்ருஹரி வைராக்ய சதகத்திலும், உலகில் பயம் நிறைந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறி ‘வைராக்யமேவ அபயம்’ என்று முடிக்கிறார்.
மனைவியினிடத்தில் உள்ள உனது பற்று மனைவியினிடத்தில் பிரியத்தால் அன்று. உன் மனைவி என்பதாலும் உனக்குப் பிரியமானவள் என்பதாலும்; ‘எனது’ என்ற உன் அம்சம் கலப்பதாலேயே இந்தப் பற்று. உன் பிள்ளைகளிடத்தில் உள்ள அன்பும் இவ்வாறே. அவளுக்கும் உன்னிடத்தில் அப்படித்தான் பிரியம். செல்வத்தில் உனக்குள்ள பற்றும் அவ்வாறே. ஏனெனில் உன்னுடைய தனத்தையே கப்பாற்றி வைக்க முயற்சி செய்கிறாய். ஒன்றில் பிரியம் அதிகமாக ஆக மற்றொரு பொருளில் ஆதரவு குறையும். ஆத்மாவிடத்தில் பிரியம் அதிகமாக ஆக மனைவியினிடத்தில் வைத்த பற்று தானே குறையும். என்னைச் சேர்ந்தது என்ற நினைப்பினால் மட்டுமே ஒரு பொருள் நமக்குச் சுகத்தை அளிப்பதில்லை. ஏனெனில் அப்படி நினைத்த ஒரு வஸ்துவும் அநித்யம்தானே? அஃது அழியும்போது அதனால் ஏற்படும் துக்கத்தை மனதில் கொண்டு எதிலும் என்னுடையது என்ற பற்றை வளர்த்துக் கொள்ளாதே. பிள்ளை சொத்து ஆகியவற்றில் வைக்கும் பற்றைக் குறைக்க இஃது ஒரு வழியாகும். ஒரு வஸ்து நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மோஹமே நம்மை அதன் மேல் பற்று வைக்கத் தூண்டுகிறது. அந்த மோஹத்திலிருந்து விடுபட்டால் பற்று தானாகவே அகன்று விடும். வெளியே இனியவன் போலத் தோன்றுபவன் உள்ளே கொடியவனாக இருக்கலாம். ஆனால் வெளியிலுள்ள இனிமையை மனத்திலும் கொண்டுவர கருணையை உள்ளதில் ஊன்ற விடு. தோழன், பகைவன் என்ற சிந்தனையில் ஏற்படும் விளைவுகளை எந்த விஷயத்திலும் உதாசீனமாக இருக்கப் பழகுவதன் மூலம் தவிர்த்துவிடலாம். எதிரிகளாக இருக்கும் பத்துப் புலன்களும் (பஞ்ச கர்மேந்த்ரியங்கள், பஞ்ச ஞானேந்த்ரியங்கள்) அதனதன் விஷயங்களை நாடி நம்மை இழுத்து அல்லல்படுத்துவதைத் தவிர்க்க அவைகளுக்கு விஷய சுகத்தை அனுபவிக்க முடியாதபடியான ஏகாந்த ஸ்தானத்தை நாடிச் செல்.
ஓ மனமே! சோர்வு ஏற்படும்போது சுறுசுறுப்பாக இயங்கு. மனஸை அமைதியாக்குவதன் மூலம் உடல் களைப்பை நீக்கு. புதிய பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவதால் சோம்பலை மாற்றிக் கொள். உலகில் ஏற்றத்தாழ்வுணர்வு காணப்பெற்றால், அவ்வாறான ஏற்றத்தாழ்வுடன் கூடிய பொருட்கள் அனைத்திற்கும் ஒரே மூலப் பொருள்தான் என்ற எண்ணத்தால் அதனைப் போக்கிக் கொள். தேஹத்தையே நான் என நினைத்து அதனால் ஏற்படுகிற அஹங்காரம், மமகாரம் போன்ற ப்ரமஜ்ஞானம், அதன் விளைவுகளை உண்மையான ஆத்ம சிந்தனையால் களைந்து விடு. பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி ஏளனமாகப் பேசும் பழக்கம் உண்டெனில் ‘என்னிடமும் அந்தக் குறைகள் உள்ளனவே! அப்படியிருக்க மற்றவரைக் குறைகூற எனக்குத் தகுதி ஏது?’ என்று ஸமாதானப் படுத்திக்கொள்.
அதனால் பிறரை ஏளனம் செய்வது நின்றுவிடும். மற்றவரைக் கெடுக்க வேண்டும் எனும் எண்ணம் வந்தால் அதே நிலை எனக்கு நேர்ந்தால்? என எண்ணிப் பார்க்கில் அந்த சிந்தனையாவது துரோகத்தைக் கைவிடச் செய்யும். ஒருவர் உன்னை நாடி வரும்போது கோபமாக இருப்பினும் படபடவெனப் பேசாதே. வந்தவரை இனிய முறையில் வரவேற்றுக் குசலம் விசாரி. அதன் பிறகு படபடப்புடன் பேசுவதற்கு அவசியமே இல்லை என்பதை உணர்ந்து நீயே அதை நினைத்து வெட்கப்படுவாய். நீ ஒரு செயல் செய்யும்போது அதன் விளைவு கெட்டதாகுமோ என்ற பயம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் நீ செயலாற்றும்போது மெத்தனமாக அலட்சியமாக இருப்பதே என்று புரியும். எனவே எச்சரிக்கையுடன் முழு மனதோடு ஈடுபடு.
மனமே! கடந்துபோன விஷயங்களைப் பற்றி நினைப்பது வீண் சிரமம். கடந்தது கடந்ததே. நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் நினைப்பதில் லாபமில்லை. அது நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆகவே அது தானே மறையப் போகிறது. நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றியும் அதிகம் சிந்திக்காதே. வரப்போவது யாதென்று தெரியாது. ஆகவே அதுவும் வீண். ப்ராரப்தம் அஃதை எப்படி அமைக்க உள்ளதோ நாம் அறியோம். நல்லவரோ, கெட்டவரோ-மற்றவர் செய்வனவெல்லாம் நாமும் செய்ய வேண்டுமென்று அனாவசியமாக ஆசைப்படாதே. உன்னுடைய நிலைமைக்கேற்றவாறு உன் பணிகளை அமைத்துக் கொள். எவரிடத்திலும் அதிகமான விருப்பத்தையோ, வெறுப்பையோ வளர விடாதே. விருப்பு வெறுப்பு கொள்பவனும் விரும்பப் பெறுவதும் வெறுக்கப் பெறுவதும் - இவை அனைத்தும் முடிவில் பிடி சாம்பல்தானே! அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன்?
மனமே! பாபச் செயல்களால் ஏற்படும் பலன்களை உனக்கு ஏற்பட்டுள்ள ஜனனம், மரணம் என்கிற ஸம்ஸாரப் பிணிகளைக் கொண்டு உன்னால் ஊகித்துக் கொள்ள இயலும். இந்த கர்மவினை உன்னை மீண்டும் தொடர்ந்து துன்புறுத்தாமல் இருக்க, அதன் மூலம் பந்தங்கள் விலக, ஒரே சாதனமாக விளங்கும் ஆத்ம ஞானத்தை அடையப் பெறுவாய். ஏற்றத் தாழ்வு எண்ணங்களை எல்லாவற்றிலும் ஸமநோக்குடன் இருப்பதன் மூலம், அகற்றிவிடு. நன்மை பயக்காத ஒரே காரணத்தால் மற்றவரைப் பற்றி அவதூறாகப் பேசாதே. பிறர் உன்னை நிந்திக்கும்போது ஏற்படும் துக்கம் ‘நான் அந்த நிந்தனைக்கு ஏற்றவன்’ என்று நினைத்தால் எளிதில் அகன்றுவிடும். பிறர் நம்மைத் துன்புறுத்துகையில் பரிவுடன் அதைப் பொறுத்துக் கொள். அதாவது பிறர் துன்புறுத்தினால் அந்த அளவில் ‘என் முன்வினை தீர்ந்தது’ என்ற திருப்தியுடன் ஸகித்துக் கொள்.
பொத்தல்கள் நிறைந்த கூடையில் கொட்டிய ஜலம் போன்று இந்த உடலுக்குள் நுழைந்த உயிர் உடலைவிட்டுப் பல துவாரங்கள் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஒரு பரத்தை செல்வத்தை இழந்து நிற்கும் காமுகனை விட்டு விலகுவது போல இந்த்ரிய சக்திகள் அனைத்தும் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமல் நம்மை விட்டு விலகி விடுகின்றன. காட்டுத்தீ பற்றி எரியும்போது தன்னை வளர்த்துத் தனக்கு அடைக்கலம் அளித்த காடு எரிகிறதே என்ற எண்ணம் சிறிதளவும் இன்றி உயிர் காக்க ஓடுகிற மான் கூட்டம் போல் நம் அறிவும் நம்மிடமிருந்து அகன்று விடுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் இருத்தி வேகமாக ஆத்மானுபவ மார்க்கத்தைக் கடைபிடி. எளிதில் கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியை வீணடித்துவிடாதே.
இதன் பொருள்:
வேதாந்தமென்னும் பாற்கடலைக் கடைந்து ஆத்மஞானம் என்னும் அம்ருதத்தையும் முக்தி என்னும் லக்ஷ்மியையும் நீ அடைவாயாக. ஆனால் கடலைக் கடையும்போது துணைப் பொருட்களாக தைர்யம் என்னும் ஐராவதம், சாந்தி என்கிற காமதேனு, புலனடக்கமாகிய கல்பகவ்ருக்ஷங்கள், மைத்ரீ, கருணை முதலான அப்ஸரஸ் ஸ்திரீகள், விவேகம் என்கிற உச்சைஸ்வர குதிரை, ஸந்தோஷம் என்கிற சிந்தாமணி, வைராக்யம் என்னும் விலவு ஆகியவை தோன்றும்.
ஸ்ரீ சங்கரர் மாண்டூக்ய காரிகையின் பாஷ்ய உரையில் முடிவில் பரமகுரவான ஸ்ரீ கௌடபாதருக்குத் தனது வந்தனஙளைத் தெரிவிக்கும் ஸ்லோகத்தில்,
இதன் பொருள்:
தமது பரமகுருவான கௌடபாதர், தம்முடைய ப்ரஜ்ஞா என்னும் மத்தினால் வேதம் என்கிற பாற்கடலைக் கடைந்து, கோரமான ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கும் ஜீவராசிகளிடம் மஹத்தான கருணை கொண்டு அமரர்களும் அடைய முடியாத ‘அத்வைதம்’ என்கிற அமுதத்தை எடுத்தருளியுள்ளார். அப்படிப்பட்ட பரம குருவிற்கு எம் வந்தனங்கள் என்று கூறுகிறார்.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அருளாலும், வேதங்கள், எம் குருசரணர்கள் ஆகியோருடைய க்ருபையாலும் துர்வாஸனைகளை விலக்க மாற்றுபசாரங்களை விளக்குகிற இந்த பத்து ஸ்லோகங்கள் எம்மால் இயற்றப்பட்டுள்ளன.