Thursday, 4 December 2014

அனைவருக்கும் எளிதான ஒரு மந்திரம் - ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்

அனைவருக்கும் எளிதான ஒரு மந்திரம்
(ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்)

வீதாகிலவிஷயேச்சம் ஜாதா நந்தாச்ருபுலகம த்யச்சம் |
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் ||
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் |
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்சுலம ஹிமானமஞ்சனாபாக்யம் ||

பகவத்பாதாளின் பெயரைக் கேட்காதவர்கள் மிகக் குறைவு. அவருடைய பெயர் இத்தனை நாள் புகழோடு விளங்குவதற்குக் காரணம் இருந்திருக்க வேண்டும். (அது என்னவென்று பார்ப்போம்.) அவர் காலத்தில் வேதத்திற்கு எதிராக இருந்த மதங்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அதர்மம் அதிகமாகி விட்டிருந்தது. அந்த நேரத்தில் பகவத்பாதரின் அவதாரம் கேரளத்தில் ஏற்பட்டது. அவர், “நான் வீட்டிலேயே வாழ்ந்து சாமான்யமான பேர்வழிகளைப் போல் இருந்தால் என்ன பிரயோஜனம் ஏற்படும்?” என்று சிந்தித்தார். பின் சிறுவயதிலேயே சந்யாசம் பெற்றுக்கொண்டு பாரதம் முழுவதும் பயணம் செய்து ஜனங்களுக்கு உபதேசங்களைக் கொடுத்தார். என்ன உபதேசத்தைக் கொடுத்தார்? “இறைவன் ஒருவனேதான். அவ்வாறு இருந்தாலும் அவர் பலவிதங்களில் காட்சியளிக்க முடியும்” என்றார் அவர்.

பகவானின் ஓர் உருவத்தை மட்டும் உண்மை என நினைத்துக்கொண்டு பூஜை செய்யும் ஒருவன் மற்ற உருவங்களை மதிக்க மாட்டான். இவ்வாறு மக்கள் தவறாக நினைத்துக் கொண்டு மற்ற உருவங்களிடம் மதிப்பு வைக்காமலிருந்தார்கள். இதைக் கண்ட பகவத்பாதாள், ‘எல்லாரும் பகவானையேதான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பகவான் (அவரவர்கள் பூஜை செய்யும்) அந்தந்த உருவத்தில் வருகிறான். அவர்கள் ஏதாவது ஓர் உருவத்தில் பகவானைப் பூஜை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறினார். அதனால் பகவத்பாதாள், “நீ பகவானை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் ஆராதனை செய்.ஆனால் அவர் உண்மையில் உருவமற்றவரேயாவார். உருவமில்லாதவரானாலும் பகவானானவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து பலவிதமான உருவங்களைப் பெற்றுக் கொள்கின்றான். அதனால் தான் மத்ஸ்ய, கூர்ம, வராஹ, இராம, கிருஷ்ண அவதாரங்களை பகவான் பெற்றுக்கொண்டார். நாம் முக்கியமாக விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஒப்புக்கொள்கின்றோம். ஆதலால் ஏதோ ஓர் உருவத்தை மட்டும் மனத்தில் வைத்துக்கொண்டு, மற்றவர்களுடன் சண்டை போடத் தேவையில்லை. மனம் தன் சம்ஸ்காரத்தை அனுசரித்து எந்த உருவத்தில் ஈடுபடுகிறதோ அதே உருவத்தை ஒருவன் ஆராதனை செய்யலாம். அவன் வேறோர் உருவத்தை ஆராதனை செய்கிறானோ, அந்த உருவத்தில் இவன் வெறுப்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இதற்குக் காரணமென்னவென்றால் பகவான் அந்த மனிதனுக்கு அந்த உருவத்தில் அனுக்ரஹம் செய்வான். அவன் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்காக எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். பகவானின் அருளில்லாவிட்டால் நாம் அவரைச் சிந்திக்கவே முடியாது. அர்ஜுனன், கிருஷ்ணருடனேயே இருந்து கொண்டிருந்தான். ஆனாலும் பரிபூர்ணமாக அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. பகவான் போர்க்களத்தில் அவனுக்கு உபதேசம் கொடுக்கும்போது, ‘நீ இப்போது என்னைப் பார்த்துத் தெரிந்துக் கொள். நான் உனக்கு திவ்ய திருஷ்டியை (ஞானக்கண்ணை)த் தருகின்றேன்’ என்று காட்டினான். அப்போதுதான் அர்ஜுனனால் பகவானுடைய உண்மையான உருவத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

ஆகவே பகவானுக்கு உண்மையில் உருவமில்லாவிட்டாலும் பல உருவங்களைப் பெற்றுக்கொள்கிறான். மேலும் அவனருள் இருந்தால்தான் அவனை நாம் அறிந்து கொள்ளமுடியும். நீ இராமரையோ, கிருஷ்ணரையோ, அம்பாளையோ, ஆஞ்சனேயரையோ ஆராதனை செய்யலாம். ஆஞ்சனேயர் யார்? அவர் மஹாதேவனின் அவதாரமாவார். மஹாதேவரின் ஓர் உருவம் போலுள்ளார் அவர். மனிதன் பகவானை ஆராதனை செய்து, அவருடைய சாக்ஷாத்காரத்தைப் பெற்றுவிட்டால் அப்போது அவன் பகவானை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. சமுத்திரத்திலேயே போய்ச் சேர்ந்து விட்டதென்றால், அதற்குப் பிறகு அதை ‘இந்த நீர்’ ‘அந்த நீர்’ என்று சொல்ல முடியாது. அதுபோல் நாம் பகவானிடம் ஐக்கியமடைந்து விட்டால் அப்போது பகவான் நம்மைத் தனிப்பட்டவனாக வைத்துக் கொள்ளவே மாட்டான் இதற்கு ஓர் உதாரணம் சமுத்திரம் ஆகும். ஏனெனில் அது எல்லா நதிகளையும் ஐக்கியமடையச் செய்து வேற்றுமையில்லாமல் செய்துவிடுகிறது. பகவான் ஸர்வக்ஞன். தயை வடிவாக உள்ளவன். இன்ப வடிவாகியுமுள்ளவன். நமது ஸ்வரூபம் (அவனை விட) வேறுவிதமாயிருந்தால் பகவானாலேயும் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது, நாம் பகவானை விட்டுப் பிரிந்த பிறகுதான் நமக்கு இப்போதிருக்கும் கெட்ட நிலை வந்துவிட்டது. நாம் அதிகமாகப் பிரிந்துவிட்டால் இன்னும் கெட்டுப்போய் விடுவோம். பகவானிடம் ஐக்கியமடைந்தால் நன்மையை அடைவோம்” என்று உபதேசித்தார்.

இம்மாதிரி பகவத்பாதாள் எல்லாப் பக்கத்திலிருந்தும் உபதேசம் செய்தார். பகவத்பாதாள் அதிகமாகச் சஞ்சாரம் செய்தது மட்டுமல்லாமல் எல்லாருக்கும் உபதேசமும் கொடுத்துக்கொண்டிருந்தார்.
மனிதன் என்ன செய்ய வேண்டும்? மனிதன் கர்மாவில் எப்போதும் ஈடுபடுபவன்.

“ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாதுதிஷ்டத்யகர்மக்ருத் |”

(யாரும் ஒரு கணப்பொழுதும் செயலற்றிருப்பதில்லை) என்று பகவான் சொல்கிறார். எந்த மனிதனாலும் ஒரு கணம் கூடக் காரியம் செய்யாமலிருக்கமுடியாது. அவன் கனவு நிலையில் (மனத்தால்) ஏதாவது செய்துகொண்டிருப்பான். விழிப்பு நிலையில் ஏதாவது செய்துகொண்டிருப்பான். ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றும் செய்வதில்லையென்றாலும் அந்நிலையை விட்டுவிட்டால் மனத்தில் ஏதாவது எண்ணம் வந்துகொண்டிருக்கும். பிறகு ஏதாவது செயல்கள் செய்துகொண்டுதானிருப்பான். ஆனாலும் ஆழ்-உறக்க நிலையில் பிராணனின் ஓட்டம் மட்டும் இருந்துகொண்டிருக்கிறது. செயல்கள்தான் பாபத்திற்குக் காரணமாக இருக்கின்றன. அவையே புண்ணியத்திற்கும் காரணமாயிருக்கின்றன. நாம் பகவானை நமஸ்காரம் செய்தால் நமக்குப் புண்ணியமும், சிரேயஸ்ஸும் கிடைக்கும். அதேசமயம், யாராவது ஒருவனைக் குறை சொன்னால் நமக்குப் பாபம் கிடைக்கும். ஒருவனுக்குச் சாஸ்திர அறிவுரைகளுக்கு இணங்க உபதேசம் செய்தோமானால் அது தர்மம் ஆகும். அதே சமயம் (கள்) குடிப்பதற்குப் பணம் கேட்கும் ஒருவனுக்குப் பணம் கொடுத்தால் அப்போது தர்மம் ஆகாது. எவனொருவன் நல்ல காரியங்கள் செய்கின்றானோ அவனுக்கு நாம் உதவி செய்தோமானால் அது நமக்குப் புண்ணியத்தைத் தரும். ஆனால் ஒருவனுக்கு இடையூறு செய்தோமானால் நமக்குப் பாபம் தான் கிடைக்கும்.

இவ்வாறு நம் ஜீவனத்தின் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டுதானிருக்கிறோம். இதனால் புண்ணியத்தையும், பாபத்தையும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறோம். புண்ணியத்தைச் செய்து கொண்டு போனால் அது நன்மையையே தரும். மாறாகப் பாபத்தைச் செய்து கொண்டு போனால் அது தீமையையே தரும். அதைத் தடுப்பதற்கு வழி வேண்டும். பாபத்திற்கும், புண்ணியத்திற்கும் நிவிருத்தியில்லையென்றால் நமக்கு ஸம்சாரம் (பிறப்பும் இறப்பும்) இருந்து கொண்டேதானிருக்கும். அதனால் பாபம், புண்ணியம் இரண்டும் நமக்கு இடைஞ்சலையேதான் கொடுக்கின்றன. பாபங்களுக்காகப் பிராயச்சித்தங்களிருக்கின்றன. நாம், “என்ன பாபத்தைச் செய்கிறோம்: எதைச் செய்வதில்லை” என்று எண்ணிக் கொண்டுகூட இருக்கலாம்.

“அனிச்சயா(அ)பி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக:”

(விரும்பாமல் தொட்டாலும் நெருப்பு நிச்சயம் சுட்டு விடுகிறது.)

அதைப்போல், எப்பேர்ப்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும். அக்னியின் இயல்பு என்னவென்றால், எந்தப் பொருள் அதனருகில் வருமோ அதைச் சுட்டுவிடும், அதேபோல் பகவானின் சுபாவம் என்னவென்றால்  எவர் பகவானின் நாமத்தைச் சொல்வாரோ, அவருடைய பாபத்தை அந்த நாமா நாசம் செய்துவிடும். ஆதலால் நாம் எந்தக் காரியத்தை எப்போது செய்துகொண்டிருந்தாலும் மனத்தால் மட்டும் பகவான் நாமாவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.அவ்வாறு செய்து வந்தால் நம் பாபம் கழிந்துவிடும். எப்படி மனத்தில் நாமாவைச் சொல்வது? எல்லாருக்கும் தாம் ஏதாவது ஒரு மந்திரத்தை - ஜபத்தைச் செய்துகொண்டு வந்தால் நல்லது என்ற ஆசை ஏற்படுகிறது. இம்மாதிரி நல்ல உபதேசம் கொடுப்பவர்கள் குறைவு. உபதேசம் கொடுப்பதற்குச் சிலபேர் கிடைத்தாலும் விதிக்கு அனுஸாரமாகக் கொடுப்பதில்லை. இம்மாதிரி நிலையில் நாம் என்ன செய்வது என்ற சந்தேகம் நமக்கு வரும்.
இதற்காக மந்திரம் ஒன்று இருக்கிறது. அது எப்பேர்ப்பட்ட மந்திரம்? எப்படி வேண்டுமோ அப்படி இந்த மந்திரத்தைச் சொல்லலாம். ஒருவன் புனிதமானவனானாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆசாரசீலனாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லலாம் என்று சொல்லியிருக்கிறது. அது என்ன மந்திரம்?

“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே”

என்ற மந்திரமேயாகும். இந்த நாமங்களை எல்லாரும் சொல்லலாம். இதற்கு நியமமே இல்லை. எப்போதும் தாராளமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். அவ்வாறு ஜபிப்பவனுக்கு பகவான் அனுக்ரஹம் செய்வான். அப்படிச் சொல்லிக் கொண்டுவந்தால் நாம் பகவானின் அருள்பெற்று புனிதமடைந்து ஜன்ம சாபல்யமடையலாம். ஆனால் சாமான்யமாக மனிதர்கள் என்ன செய்வார்கள்? சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பார்கள். பிறகு ஒரு நாள் செத்துப்போய் விடுவார்கள். இவ்வாறுதான் பிராணிகளும் வாழ்கின்றன. இப்படியே நம் வாழ்வுமிருந்தால் நமக்கும் பிராணிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆகவே எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஓர் உருவத்தை - இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ - ஏதாவது ஓர் உருவத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தியானம் செய்யவேண்டும். தியானம் செய்யும்போதும் பகவான் நாமாவைச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். அப்போது நிச்சயமாக நமது பாபங்கள் அழிந்துவிடும். சில சமயங்களில் சில காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்று நினைப்போம். ஆனால் செய்வதற்கு வேண்டிய பலம் இருப்பதில்லை. அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?

“புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வமரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத்ஸ்மரணாத் பவேத் |”

(அறிவு, பலம், கீர்த்தி, தைரியம், பயமின்மை, ஆரோக்கியம், ஜடத்தன்மையில்லாமை, மற்றும் நாவன்மையும் ஆஞ்சனேயரை நினைப்பதனால் ஏற்படுகின்றன.)

நாம் ஒருவரும் பயத்தை விரும்புவதில்லை. நாம் பயமில்லாமல் இருக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் பகவானிடம் சரணமடைகின்றோம். நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம். அதேபோல் பேசுவதில் சாமர்த்தியத்தைப்பெற விரும்புகிறோம். ஆகவே நாம் பகவான் ஆஞ்சனேயரை உபாசித்து அவருடைய பக்தர்களாக இருந்தால் அவரை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தால் - அவருடைய நாமாவை ஜபம்செய்து கொண்டிருந்தால் அவர் பிரசன்னமாகி நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிப்பார்: திட பக்தியையும் கொடுப்பார்.

ஹர நம: பார்வதீபதயே|
ஹர ஹர மஹாதேவ ||
ஜானகீகாந்தஸ்மரணம் |
ஜய ஜய ராம ராம ||

No comments:

Post a Comment