தர்ம சூட்சுமங்கள்
நமக்கு எல்லோருக்கும் அனாதிகாலமாக சநாதன தர்மத்தை அனுஷ்டிக்கக்கூடிய ஒரு பரம்பரை வாய்த்திருக்கிறது. இந்த தர்மானுஷ்டானம்தான் நம்முடைய ஜீவனத்தில் மிகவும் முக்கியமானது; தேவையானது. மனிதனுக்கு எப்போதும் தான் சுகமாக இருக்கவேண்டும் என்கிற ஆசை. அந்த ஆசை எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டால் இந்த ஜன்மத்தில் மட்டுமில்லை, வருகிற ஜன்மத்திலும் நாம் சுகமாகத்தான் இருக்க வேண்டும், எனக்கு என்றைக்கும் துக்கம் வரக்கூடாது என்கிற அளவுக்கு இருக்கிறது. இந்த ஆசை நிறைவேறுவதற்கு ஒரேயொரு உபாயம் தர்மானுஷ்டானம்தான். நாம் சாஸ்த்ரோர்க்தமான தர்மத்தை ஸ்ரத்தையோடு ஆசரணம் பண்ணினால் நமக்கு இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மத்திலும் சுகம் கிடைக்கும்.
தர்மத்தைப் பற்றி ஸ்ரத்தை இல்லையென்று சொன்னால் நம்முடைய விருப்பம் என்றைக்கும் நிறைவேறாது. தர்மத்தை ஆசரணம் பண்ணவேண்டும் என்று சொன்னால் அஃது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை. மனஸ் வேண்டும். கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. “மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.” அநேகப்பேருக்கு “ஸந்த்யா வந்தனம் பண்ணுகிறீர்களா?” என்று கேட்டால் “இல்லை ரொம்ப சீக்கிரம் அலுவலகத்திற்குப் போக வேண்டியிருக்கிறது, அவகாசமே கிடைக்க மேட்டேன் என்கிறது” என்பார்கள். மனம் இருந்தால் மார்க்கம் இருக்கத்தான் செய்யும். சீக்கிரம் ஆபீஸ் போகவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் முன்னால் எழுந்திருந்தால் என்ன தப்பு? சீக்கிரம் ஆபீஸ் போகவேண்டும் என்பது வாஸ்தவம்தான். கொஞ்சம் முன்னால் எழுந்திருந்து ஸ்நானம் செய்துவிட்டு ஒரு பத்து நிமிஷம் சந்த்யாவந்தனம் பண்ணிப் பின்னர் ஆபீஸ் போகக்கூடாதா? ஸ்ரத்தை இல்லை. அதனால் அந்தக் காரணத்தையெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வழி. நீங்கள் இங்கே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் துக்கம் வருகிறது சுகம் வருவதில்லை என்று வருத்தப்பட்டு பயனில்லை.
ஓர் இடத்தில் ஸதாசிவப்ரும்மேந்த்ராள் சொன்னார். மனஸை உத்தேசித்து சொன்னார். “ஏ மனமே! இப்பொழுது ரொம்பவும் துக்கம் வந்திருக்கிறது என்று ஏன் கவலைப்படுகிறாய். போன ஜன்மாவில் ஒரு நல்ல கர்மாவும் பண்ணாமல் பாப கர்மாவையே பண்ணி இப்போது துக்கம் வருகிறது என்று வருத்தப்பட்டால் என்ன ப்ரயோஜனம்?”
ஒருவன் மாம்பழம் வேண்டும் என்று நினைத்தான். அதற்கு மரத்தை நட வேண்டும் என்று சொல்லி ஆலமரத்தோட பீஜங்களை (விதைகளை) கொண்டு வந்து நட்டான். பெரிய மரம் ஆகிவிட்டது. மாம்பழமே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டான். “மாம்பழம் வரும் என்று நினைத்து இந்த ஆலமரத்து பீஜத்தை கொண்டு வந்து நட்டேன். மாம்பழம் வரும் என்று நினைத்தேன்; ஆசைப்பட்டேன்.” என்றான். எதற்கு எது சம்பந்தம். அதேபோல் பாபகர்மாவை செய்துவிட்டு எனக்கு சுகம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன ப்ரயோஜனம்?
போன ஜன்மத்தில் ஒரு நல்ல கார்யமும் பண்ணாமல் இப்போது எனக்கு சுகம் கிடைக்கவில்லையே துக்கம் வந்திருக்கிறதே என்று சொன்னால் என்ன ப்ரயோஜனம்?
கர்மாவுக்கு அனுகூலமாகத்தான் பலன் கிடைக்குமே தவிர கர்மாவுக்கு விரோதமாக (மாறாக) பலன் கிடைக்காது. ஒரு பையன் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில் 90% மார்க் வரவேண்டும் என்கிற தீவிரமான இச்சை இருந்தால் அதற்கு தகுந்தபடி உழைக்க வேண்டும்; படிக்கவேண்டும். நான் ஒன்றும் படிக்க மாட்டேன். ஆனால் எனக்கு 90% மார்க் வரவேண்டும் என்றால் அஃது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு விஷயத்திலும் இதே மாதிரிதான். நமக்கு எதில் ஆசை இருக்கிறதோ அதற்கு தகுந்த சாதனத்தை அனுஷ்டிக்க வேண்டும். அந்தச் சாதன அனுஷ்டானம் இல்லையென்று சொன்னால் பலன் கிடைக்காது; பலன் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு ப்ரயோஜனம் இல்லை. அதனால் நாம் எல்லோருக்கும் சொல்வது தர்மத்தில் ஸ்ரத்தை இருக்கட்டும். மீதி எல்லாவற்றையும் விட தர்மம் மிக உயர்ந்தது என்கிற பாவம் இருக்கட்டும்.
நமக்கு எப்போது ஸ்ரத்தை உண்டாகும் என்று கேட்டால், தர்மம்தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்கிற பாவம் வந்தால் அதில் ஸ்ரத்தை உண்டாகும். இது பழைய காலத்து கதை இப்போது அதெல்லாம் யாருக்கு வேண்டும் என்று ஒதுங்கினால் அதில் ஸ்ரத்தை வராது. தர்மம் விஷயத்தில் பழைய காலத்து கதை என்று நினைத்துக் கொள்ளவே கூடாது. தர்மம் எல்லாக் காலங்களிலும் ஒன்றுதான். பழைய காலத்திற்கு ஒரு தர்மம்; இந்தக் காலத்திற்கு ஒரு தர்மம் என்பனவெல்லாம் இல்லை. ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி சந்த்யாவந்தனம் பண்ணிக் கொண்டு இருந்தார்களோ அதே க்ரமத்தில்தான் இன்றும் நாம் சந்த்யாவந்தனம் பண்ணுகிறோம். அந்த க்ரமத்தை யாரும் ஒன்றும் மாற்றவில்லை. அதனால் தர்மத்தை ஸ்ரத்தையாக அனுஷ்டித்து அந்த தர்ம பலமான சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்பதுதான் சாஸ்த்ரத்தினுடைய கருத்து. சாஸ்த்ரம் தர்மத்தை விதித்தது மனிதனுடைய நன்மைக்காகத்தான். நாம் அந்த தர்மானுஷ்டானத்தை பண்ணவில்லையென்று சொன்னால் சாஸ்திரத்திற்கு குறைவு ஒன்றும் ஆகப்போவதில்லை. அந்த சாஸ்த்ரத்தை உபதேசித்த மகரிஷிகளுக்கும் ஒன்றும் போகப்போறதில்லை. போகப்போவது நமக்குத்தான்.
நாம் பகவானுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சொல்வோம். அந்தப் பூஜையினால் பகவானுக்கு என்ன உண்டாகப்போகிறது? பகவானுக்கு ஒன்றும் வரப்போவதும் இல்லை. போகப்போவதும் இல்லை. அவருக்கு என்ன வேண்டும் பகவான் கீதையில் சொன்னார்.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம்
த்ரிஷுலோகேஸு கிஞ்சன || என்று சொன்னார்.
நானவாப்தமவாப்தவ்யம் வர்தேவச கர்மணி ||
த்ரிஷுலோகேஸு கிஞ்சன || என்று சொன்னார்.
நானவாப்தமவாப்தவ்யம் வர்தேவச கர்மணி ||
எனக்கு இந்த மூன்று லோகங்களில் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை அடைய வேண்டியதும் ஒன்றும் இல்லை. பகவான் நித்ய பரிபூர்ணனானவன். நித்யத்ருப்தனானவன். அவனுக்கு எது தேவை? பின் ஏன் பகவானை பூஜை பண்ணவேண்டும் என்று கேட்டால் நம்முடைய நன்மைக்காக. நமக்கு நல்லது ஆகவேண்டுமானால் பகவானை ஆராதனை செய்ய வேஎண்டும். பகவத் சிந்தனை செய்ய வேண்டும். நம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லி இருக்கிறதே ஒழிய அதிலிருந்து பகவானுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.
அதே மாதிரி தர்மம் கூட நமக்கு ஸ்ரேயஸ் உண்டாக சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. இந்த சத்யத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகவத்பாதாள் மாதிரி மகான்கள் இந்த தர்மத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அவதாரம் பண்ணினார்கள். ஒவ்வொரு யுகத்திலும் பகவான் அவதாரம் பண்ணியது தர்மத்தை காப்பாற்றுவற்காகத்தான்.
அதாவது தர்மத்திற்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு பகவான் ஸ்வயமாக (தானே) வரவேண்டியிருந்தால் அஃது எவ்வளவு மதிப்பான வஸ்துவாக இருக்கவேண்டும். இல்லாவிடில் பகவானே ஏன் வரவேண்டும். அதனால் தர்மம் ஸர்வோத்க்ருஷ்டமானது. அந்த தர்மத்தினுடைய ஆசரணம் நம் எல்லோருக்கும் ரொம்பவும் ஆவஸ்யகம். அந்த தர்மங்களைப் பற்றி சொல்கிறபோது சாஸ்த்ரத்தில் ஸத்யம்வத தர்மம்சர ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் நப்ரமதிதவ்யம் | என்று சொல்லியிருக்கிறது. உண்மை சொல்வது தர்மம். அத்யயனம் பண்ணுவது தர்மம். பெரியவர்கள் மதிக்கிறது தர்மம். இது சாதாரண தர்மம். சத்யத்தை சொல்வது, பெரியவர்களை மதிப்பது, யாருக்கும் தொந்தரவு பண்ணாமல் இருப்பது, அஹிம்ஸா எல்லாவற்றுக்கும் முதல் தர்மம் என்று சொல்லியிருக்கிறது. அஹிம்ஸா பரமோ தர்ம: யாருக்கும் தொந்தரவு பண்ணக் கூடாது. ஒருவனைக் கொல்லக்கூடாது, அடிக்கக்கூடாது என்பது மட்டும் தொந்தரவு இல்லை. இன்னொருவனுடைய மனத்திற்குக் கூட கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.
இன்னொருவனுடைய மனத்திற்கு கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய பேச்சு பேசி அதனால் அவன் மனதுக்கு கஷ்டம் உண்டானால் அஃது ஒரு பாபம். நீ செய்யக்கூடிய பாபம். அஃது அனேகருக்கு இன்னொருவனோடு ஒரு ம்ருதுவாக பேசக்கூடிய ஸ்வபாவம் இருக்காது. தான் சொல்லக்கூடிய வார்த்தை இன்னொருவன் மனதுக்கு கஷ்டத்தை கொடுப்பது என்னும் நினைவே சிலருக்கு இருக்காது. ரொம்ப கடினமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அதனால் மற்றவனுக்கு வருத்தம் ஆகிறதே என்பதே இருக்காது. ஆனால் அப்படி கடினமான வார்த்தை சொல்லி அவர்கள் மனம் வருத்தம் ஆகிறது என்றால் உனக்கு ஒரு பாபம் வரும். அதனால் (அஹிம்ஸா) இன்னொருவனுக்கு கஷ்டத்தை கொடுக்காதே என்பது ஒரு பெரிய தர்மம். உண்மையைச் சொல் என்பது ஒரு பெரிய தர்மம்.
சிலருக்கு பொய் சொல்லியே பழக்கம். எல்லாவற்றுக்கும் பொய் சொல்வது. பொய் சொல்வதினால் தான் அதர்மம் பண்ணுகிறோம் என்ற நினைவு அவர்களுக்கு வராது. ரொம்ப சகஜமாக பொய் சொல்லி விடுகிறார்கள். ஏதோ வக்கீல்கள் மாதிரி ஆட்களுக்கு வேறு வழி இருக்காது என்று சொல்கிறார்கள். ஆனாலும் அவர்களும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது. வக்கீல்கள் சொல்வார்கள் எங்களுக்கு வேறு வழியில்லை என்று. அப்படி பொய் சொல்லாவிட்டால் கேஸ் ஜயிக்க முடியாது என்று சொல்கிறார்கள். ஆனாலும் பொய் சொல்வதை தர்மம் என்று யாரும் சொல்ல முடியாது. நம்முடைய ஜீவிதத்தில் பொய் சொல்வது என்பது அது பெரிய பாப கர்மா. வேண்டாத விஷயத்திற்கெல்லாம் பொய் சொல்வது.
அதுதான் சாஸ்த்தில் ஒரு தர்ம சூக்ஷுமம் சொல்லி இருக்கிறார்கள்.
ஸத்யம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத்
ப்ரியம் ப்ரூயாத்
உண்மையைச் சொல்லவேண்டும் ப்ரியமான வார்த்தையைச் சொல்லவேண்டும்.
ஸத்யம் ப்ரூயாத் ட்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம் |
ப்ரியம் ச நாந்ருதம் ட்ரூயாத் ஏஷதர்ம: ஸநாதந: ||
ப்ரியம் ச நாந்ருதம் ட்ரூயாத் ஏஷதர்ம: ஸநாதந: ||
ஒரு பையன் பரிட்சை எழுதியிருக்கிறான். ரிசல்ட் வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு அந்த ரிசல்ட் பார்க்க முடியவில்லை. அவனுடைய நண்பர் ஒருவர் பார்த்து விட்டு வந்தார். இவன் அவரிடம் கேட்டான் “சார்! ரிசல்ட் வந்து விட்டதாமே எனக்கு என்ன ஆயிற்று? “பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டாய் என்று அவர் சொல்லிவிட்டார். ஆனால் அவன் பெயில் ஆகியிருந்தான். அவனை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் அப்படி பொய் சொன்னாராம். அப்புறம்தான் தெரிந்ததாம் அவன் பெயில் ஆகிவிட்டான் என்பது. அவன் என்னிடம் பொய் சொல்லிவிட்டாரே என்று ரொம்ப வருத்தப்பட்டானாம். சார் நீங்க ஏன் என்னிடம் பொய் சொன்னீர்கள்? என்றதற்கு இல்லை நீ சந்தோஷப்படுவாய் என்று சொன்னேனடா என்றாராம். சந்தோஷம் ஆகட்டும் என்று பொய் சொன்னீர்களா? ஒரு பெரிய பாபத்தை அல்லவா நீங்கள் செய்தீர்கள். அதனால்தான் அதில் சொல்லியிருக்கிறது “ப்ரியம் ச நாந்ருதம் ட்ருயாத்” ப்ரியமான வார்த்தை என்று சொல்லி பொய் சொல்லக்கூடாது. அப்ரியமான சத்யத்தை சொல்வதைவிட பேசாமல் இருப்பது நல்லது.
அந்தப் பையன் அவன் பெயில் ஆகி இருந்தாலும், ரிஸல்ட் எனக்கு சரியாகத் தெரியவில்லை என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஸத்யமான அப்ரியத்தை சொல்லக்கூடாது. அசத்யமான ப்ரியத்தையும் சொல்லக்கூடாது. இதுதான் தர்மத்தினுடைய சூக்ஷுமம். இந்த தர்ம சூக்ஷுமங்கள் ரொம்ப விசேஷமானவை.
ஒருவனை இராஜாவுடைய சைனிகர்கள் துரத்தி வந்து கொண்டு வந்தார்கள். அவன் ஒரு ரிஷியுடைய ஆஸ்ரமத்திற்குள் வந்தான். “சாமி! அவர்கள் எல்லோரும் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள் தயவு செய்து இடம் கொடுங்கள்.” என்று கேட்டானாம். “சரி வா! உள்ளே போய்க்கொள்” என்று அந்த ரிஷி சொல்லிவிட்டார். அவர்கள் எல்லோரும் வந்து “இங்கே ஒரு பையன் வந்தானா?” என்று கேட்டதற்கு “இல்லையப்பா இங்கு யாரும் வரவில்லை” என்று ரிஷி சொல்லி விட்டாராம். அப்போது அந்த ரிஷி சொன்னது சரிதான் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. ஏனெனில் அவர் உண்மையை சொல்லி அவன் இங்கு இருக்கிறான் என்று சொல்லியிருந்தால் அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டு போய் ரொம்ப ஹிம்ஸை பண்ணி இருப்பார்கள். அவனுடைய ஹிம்ஸையைத் தடுத்துவிட்டார் அவர். அதனால் அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னது பரவாயில்லை என்கிறது சாஸ்த்ரம். உண்மையை சொல்லி அவனுக்கு ஹிம்ஸையை வரவழைப்பதை அந்த ஒரு சின்ன அஸத்யத்தை சொல்லி அவனைக் காப்பாற்றினாரே! அது ரொம்ப பெரிய விஷயம். இதுதான் தர்ம சூக்ஷுமம் என்பது. அந்தச் சமயத்தில் அஸத்யம் அப்படி தர்மம் ஆகிறது. மீதி சமயத்தில் அஃது அதர்மம் ஆகிறது. அவையெல்லாம் தர்ம சூக்ஷுமங்கள்.
இன்னொருவனை ஹிம்ஸை பண்ணக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மிலிட்டரிக்கு போனவன். என்ன பண்ணவேண்டும்? அவன் சத்ரு சைன்யத்தைக் கொலை பண்ணவேண்டுமா? வேண்டாமா? பண்ணத்தான் வேண்டும்; அதற்காகத்தான் அவன் இருக்கிறான். என்னவோ யாரையும் கொலை பண்ணக்கூடாது என்று சொல்கிறீர்களே? என்றால் ஆமாம் அது நீ கொலை பண்ணினால் அதர்மம். அவன் பண்ணினால் தர்மம். அஃது எப்படி அவனுக்கு ஒரு சாஸ்த்ரம் எனக்கு ஒரு சாஸ்த்ரமா? ஆமாம்! பகவானே அர்ஜுனனிடம் என்ன சொன்னார்? நீ யுத்தம் செய். இஃது உன்னுடைய தர்மம். அர்ஜுனன் இத்தனை பேரைக் கொல்ல வேண்டுமே என்னால் முடியவில்லை; சாத்யமில்லை என்றான். அதற்கு பகவான் தவறு நீ நினைக்கிறது மகாதவறு. இஃது உனக்கு மகாபாக்யம்.
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வார ம பாவ்ருதம் |
ஸுகின: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்த மீத்ருசம் ||
ஸுகின: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்த மீத்ருசம் ||
ரொம்ப அதிர்ஷ்டசாலிகளுக்குத்தான் இந்த அவகாசம் கிடைக்கும். உனக்கு இந்த அவகாசம் கிடைத்திருக்கிறது. கிடைத்த அவகாசத்தை விடாதே. யுத்த பூமியில் இருக்கிறவனுக்கு யுத்தம் பண்ணுவது அவனுடைய தர்மம். ஆனால் இந்தப் பக்கம் வந்துவிட்டு அவன் ஓர் அடி கொடுத்தாலும் அஃது அதர்மம். அந்த இடத்தில் மட்டும் நீ சத்ரு சைன்யத்தை அழிக்கிறது தர்மமே தவிர இந்தப் பக்கம் வந்துவிட்டு ஒரு சின்ன அடி கொடுத்தாலும் அஃது அதர்மம். இப்பேர்ப்பட்டவை தர்ம சூக்ஷுமங்கள். அந்த தர்ம சூக்ஷுமங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் தானம் பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ஒரு ஏழை இருக்கிறான். “சாமி! நான் பட்டினியாக இருக்கிறேன். ஏதாவது கொடுங்கள்.” அவனுக்கு கட்டாயம் நீங்கள் தானம் பண்ணவேண்டும். ஒரு மனிதன் உன் எதிரில் பட்னியாக இருக்கும்போது எப்படி பார்த்து சகிக்க முடியும். சாப்பாடு போடவேண்டும். அல்லது அவனுக்கு சாப்பாட்டுக்கு பைசாவாவது கொடுக்க வேண்டும். அதே மாதிரி சார்! கள்ளு குடிக்கவேண்டும் பத்துரூபாய் கொடுங்கள் என்று கேட்டால் அவனை கழுத்தைப் பிடித்து தள்ளவேண்டும்; அவ்வளவுதான். அஃது எப்படி? அவனுக்கு மட்டும் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். இவனுக்கு மட்டும் கழுத்தை பிடித்து தள்ளவேண்டும் என்கிறீர்களே? என்றால் அதுதான் தர்மம்.
அவன் செய்யக்கூடிய அதர்மத்துக்கு நீ உதவி செய்யக் கூடாது. கள்ளு குடிப்பது என்பது அதர்மம். ஆனால் இவன் நான் பட்னி இருக்கிறேன் சாகப்போகிறேன் என்கிறான். அதற்கு நீ கட்டாயம் உபகாரம் பண்ணவேண்டும். இப்பேர்ப்பட்ட தர்ம சூக்ஷுமங்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டு அந்தமாதிரி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நம் முன்னோர் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். அப்படி நாம் தார்மீகர்களாக நம் வாழ்க்கையை நடத்தினால் வாழ்க்கை பலிதமாகும்.
பகவான் நமக்கு சம்பத்து (செல்வம்) கொடுத்து இருக்கிறார். எதற்காக? இன்னொருவனுக்கு உபகாரம் பண்ணவேண்டும். பகவானுடைய சேவை பண்ணவேண்டும். அதற்குத்தான் பகவான் நமக்கு சம்பத்தை கொடுத்து இருக்கிறார். இந்தச் சம்பத்தினால் நாம் பகவானுக்கு சேவையும் பண்ணவில்லை. மற்றவர்களுக்கு தானமும் பண்ணவில்லையென்றால் என்ன பண்ணுவது. இந்த சம்பத்தை நாம் தலையில் கட்டிக் கொண்டு போகப் போகிறோமா? இல்லை. நாம் தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். ஒரு துணியும் போட்டுக் கொள்ளாமல் வந்தோம். அதே மாதிரிதான் போவோம். ஒரு துணியும் கூட இருக்காது கடைசியிலே. அப்படி இருக்கிறபோது இவ்வளவு சம்பத்து யாருக்காக? பகவத் சேவை செய்யவேண்டும். ஸத்பாத்திரத்தில் தானம் பண்ணவேண்டும். அப்போதுதான் ஜன்மம் சார்த்தகமாகும். இந்த மாதிரி தர்ம சூக்ஷுமங்களை நாம் பெரியவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை நடத்தினால் நம்முடைய வாழ்க்கை பவித்திரமாகும்.
பகவத்பாதாள் தர்மத்தை ப்ரசாரம் செய்வதற்குத்தான் அவதாரம் செய்தார். அவருடைய அவதாரம் வேதாந்த சித்தாந்தங்களை ஜனங்களுக்கு போதிப்பதற்காக ஆனது. அப்பேர்ப்பட்ட பகவத்பாதாள் நம்முடைய குருநாதர் என்பது நம்முடைய மஹாபாக்யம். அப்பேர்ப்பட்ட பகவத்பாதாளுக்கு ஒரு மடத்தை இங்கு நிர்மாணம் பண்ணவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் மனோபீஷ்டம் நிறைவேறட்டும் என்று நான் ஆசீர்வாதம் பண்ணுகிறேன்.
No comments:
Post a Comment