உண்மையான நண்பன் பந்து யார்?
நாம் எல்லோரும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் இவன் நமக்கு பந்து, நண்பன் என்று சிலரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லோரையும் நினைத்துக் கொள்வதில்லை. எத்தனையோ பேர் இருந்தாலும் மாபிள்ளை, சித்தப்பா பிள்ளை என்று சில ஆட்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதாவது அப்படி நினைத்துக் கொள்ளும் போது நம்முடைய மனதில் என்ன வருகிறது என்று கேட்டால் இவர்களால் நமக்கு ரொம்ப உதவி கிடைக்கும் என்கிற பாவம். கஷ்ட காலத்தில் ரொம்ப உதவி செய்வான். இவன் என் பிள்ளை. என் பிள்ளை எனக்கு கஷ்ட காலத்தில் ரொம்ப உபகாரம் செய்வான். அந்த மாதிரி நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வாஸ்தவமாக கஷ்ட கலாத்தில் உபகாரம் செய்வது யார்? சாஸ்த்ரம் என்ன சொல்கிறது தெரியுமா? “ஆத்மைவஹ்யாத்மனோ பந்து:” உனக்கு நீ தான் பந்து. வேறு யாரும் இல்லை. அப்படி என்றால் அர்த்தம் புரியவில்லையே என்று பலபேர் கேட்கலாம். கஷ்டத்தில் உதவி செய்கிறவன்தான் பந்து என்று நாம் சொல்கிறோம். உனக்கு அந்த கஷ்ட காலத்தில் நீங்கள் முன்பு செய்திருந்த (தர்மம்) கர்மா உங்களுக்கு சுகத்தை உண்டாக்கும். அப்போது அந்த தர்மத்தை செய்தது யார்? நீங்கள்தான். நீங்கள் செய்த தர்மம்தான் உங்களுக்கு சுகம் கொடுக்குமே தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. நாம் யாரை நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமே அவர்களால் நாம் இந்த சரீரத்தை விட்டுப்போன பின்பு நம்மை ஏதாவது கவனிக்க முடியுமா? கவனிப்பார்களா? அதனால் நம்முடைய நிலைமை என்ன? நமக்கு என்ன ஆகப் போகிறது என்பது இவர்கள் யாருக்காவது தெரியுமா? அதில் இவர்கள் யாராவது உதவி செய்வார்களா, ஒன்றும் செய்ய மாட்டார்கள்; செய்யமுடியாது. இவர்கள் எது முடிய வருவார்கள்? நம்முடைய சரீரம் இருக்கும் வரைதான் நம்மோடு பேசுவார்கள்; பேசமுடியும். இந்தச் சரீரத்தை நாம் விட்டுப் போன பின் அவர்கள் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள். நாம் இந்தச் சரீரத்தை விட்டு போன பின்பு கூட நம் கூட வரும் ஒரே ஒரு பொருள் நாம் செய்த தர்மம்.
எல்லோரும் நம் உயிர் போனதும் நம்மைத் திரும்பிப் பார்க்காமல் போய் விடுவார்கள். ஆனால் தர்மம் ஒன்று மட்டும் நம்மோடுவரும். அந்த தர்மத்தினால்தான் நாம் அடுத்த ஜன்மத்தில் சுகத்தை அனுபவிக்க முடியும். அதனால் மனிதனுக்கு உண்மையான ஸ்நேகிதன் தர்மம்தான். அந்த தர்மத்தை செய்ய வேண்டியது நாம் தான். வேறு யாருமில்லை. அதனால் உனக்கு நீ தான் பந்து என்று சொல்கிறோம்.
அதே மாதிரி தொந்தரவு செய்யக்கூடியது அதர்மம். அதர்மத்தையும் நீ தான் செய்வாய். அதனால் உனக்கு நீ தான் சத்ரு. நீ அதர்மம் பண்ணினால் உனக்கு நீ தான் சத்ரு. நீ தர்மம் பண்ணினால் உனக்கு நீ தான் மித்ரன்.
ஆத்மை வ ஹ்யாத்மனோபந்து:
ஆத்மைவ ரிபுராத்மன: ||
ஆத்மைவ ரிபுராத்மன: ||
வேறு யாரோ நமக்கு சத்ரு, பந்து, மித்ரன் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது இல்லை. நாம் சரியான ரீதியில் இருந்தால் நமக்கு நாம்தான் பந்து. நாம் சரியான ரீதியில் இல்லாவிட்டால் நமக்கு நாம்தான் சத்ரு. இந்தத் தத்வத்தை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். சாஸ்த்ரம் என்ன சொல்கிறது? என்றைக்கும் தர்ம மார்க்கத்தில் இரு. அதர்ம மார்க்கத்தில் போகாதே. அதர்ம மார்க்கத்தில் போனால் உனக்கு நீயே தொந்தரவு பண்ணிக்கொண்ட மாதிரி ஆகிவிடும். நீ அதர்மத்தை செய்து அதனுடைய பலனை அனுபவிக்கும்போது இன்னொருவனை ஆக்ஷேபித்து ப்ரயோஜனம் இல்லை. அதனால் யாரும் பொறுப்பில்லை. நீ பண்ணின பாபத்தினால்தான் உனக்கு இந்த துக்கம் கிடைத்து இருக்கிறது.
சுகமோ துக்கமோ நீ செய்த தர்மத்தினாலேயும், அதர்மத்தினாலேயும் கிடைக்கிறதே தவிர அதற்கு இன்னொருவனை காரணமாக சொல்வது ரொம்ப அவிவேகம். அதற்கு யாரும் காரணமில்லை. உனக்கு சுகம் வேண்டுமானால் தர்மத்தில் இரு. துக்கம் வேண்டாமானால் அதர்மம் பக்கம் போகாதே. இராமாயணம் பார்க்கிறோம் ஏன் இராமர் அப்படி ஒரு தர்மத்தை ஆசரணம் பண்ணினார். அந்த தர்மாசரணத்தால் அவருக்கு ஆக வேண்டியது என்ன உண்டு? அவருக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. பகவான் பகவத் கீதையிலே சொன்னார்.
ந மே பார்தாஸ்திகர்தவ்யம் த்ரிஷுலோகேஷு கிஞ்சன |
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ சகர்மணி ||
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ சகர்மணி ||
அர்ஜுனா! இந்த மூன்று லோகங்களிலேயும் பகவானுக்குச் செய்ய வேண்டியது அல்லது அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. பகவானுக்கு எதை அடைய வேண்டும்? மொட்டை மாடியில் உட்கார்ந்து இருக்கிறவனுக்கு பின் எங்கே மாடி ஏற வேண்டும்? கீழே உட்கார்ந்து இருக்கிறவன் தான் மொட்டை மாடிக்கு ஏறிப் போக வண்டும். மொட்டை மாடியில் உட்கார்ந்து இருப்பவன் மேலும் ஏற வேண்டாமே. அந்த மாதிரி பகவான் நித்யத்ருப்தனாய் இருக்கிறவனுக்கு எதுவும் அடைய வேண்டியது செய்யவேண்டியது இல்லை. ஏன் இராமர் பகவானாக இருந்தும் வனத்திற்குச் சென்று கஷ்டப்பட்டார். நமக்கு எல்லாருக்கும் வழி காட்டுவதற்காக அவர் தர்ம மார்க்கத்தில் இருந்து சாதாரணமான மக்களைப் போல் எல்லாவித இன்னல்களையும் அனுபவித்தார். ஏனெனில் ஓர் இயற்கை ஸ்வபாவம் என்ன என்றால் நாம் யாரைப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எப்படி ஆசரணம் பண்ணுகிறார்களோ அது மாதிரி நாமும் ஆசரணம் பண்ணுவோம்.
நாம் பெரியவர்கள் என்று யாரை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் ஒழுங்காக இருந்தால் நாமும் ஒழுங்காக இருப்போம். அவர்கள் சரியாக இல்லையென்றால் அவரே சரியாக இல்லை. நான் இனி சரியாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று நினைத்து கொண்டு இருப்போம். அதனால் நம் எல்லோரையும் தர்ம மார்க்கத்தில் இருக்க வைப்பதற்காக அவ்வாறு இருந்தார். அவருக்கு தர்மத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் இராமர் அன்று தர்ம மார்க்கத்தில் இருந்ததனால் இன்று நாம் என்ன சொல்கிறோம் இராமர் அன்று தர்ம மார்க்கத்தில் இருந்ததினாலே நாம் இன்று இருக்க வேண்டும். இராமர் ஆதர்ஸம். இராமயாணத்தினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள். இராமர் போல் இருக்க வேண்டும். இராவணன் போல் இருக்கக்கூடாது. இரண்டு உபதேசம்தான் நாம் இராமாயணத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது இராமர் போல் வாழ்க்கையை நடத்து. இராவணன் போல் வாழ்க்கையை நடத்தாதே. ஏன் நடத்தக் கூடாது. கடைசியில் இராவணனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அது மாதிரி நமக்கும் கிடைக்கும். அவனுக்கு என்ன ஆயிற்று? ஸர்வநாசம் ஆகிவிட்டது. அவனுக்கு நெருங்கியவர்கள் ஒருவன் கூட பக்கத்தில் இருக்கவில்லை. இராமருக்கு என்ன ஆயிற்று கடைசியில் உலகம் பூராவும் அவரை ப்ரஸம்ஸை பண்ணியது (புகழ்ந்தது).
எங்கே போனாலும் இராமர், இராமர், இராமர் என்று ஜனங்கள் வாயில் வந்து கொண்டு இருந்ததே தவிர வேறு எதுவும் வரவில்லை. அதனால் நாம் தர்மம், அதர்மம் பற்றி சொன்னால் அதெல்லாம் பழைய காலத்து சமாசாரம் அப்பா என்று சிலபேர் சொல்லுவார்கள். பழைய காலத்து சமாசாரம் இல்லை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கூட தர்மம்தான் ஜயிக்கும். அதர்மம் ஜயிக்காது. தர்மம் செய்கிறவனுக்குத்தான் நன்மை கிடைக்கும். அதர்மம் செய்கிறவனுக்கு நன்மை வராது. இப்போது அதர்மம் பண்ணுகிறவன்தான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறான். முன்னுக்கு இப்போது வந்து கொண்டிருப்பவன் எல்லாம் தார்மீகன் என்று நாம் சொல்ல முடியுமா? எல்லா அக்கிரமும் பண்ணிக் கொண்டுதானே முன்னுக்கு வருகிறான். இப்போது தர்ம அதர்மத்தைப் பற்றிப் பேசி என்ன ப்ரயோஜனம் என்று சிலர் கேட்பார்கள். இந்த கேள்விக்கு முன்பே நம் தர்ம சாஸ்த்ரங்களில் ஜவாப் சொல்லி இருக்கிறார்கள்.
அதர்மம், அக்ரமம் செய்பவர்கள் முன்னுக்கு வருவார்கள். ஆரம்பத்தில் ரொம்பவும் முன்னுக்கு வருவார்கள். தன் எதிரிகளையெல்லாம் தோற்கடிப்பார்கள். அவர்கள் பெரிய பெரிய மாளிகைகள் எல்லாம் கட்டுவார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் கதி எப்படி இருக்கும்? அதற்கு இராவணனே ப்ரமாணம். மஹாபாரத்ததில் துரியோதனனே சாக்ஷி. கௌரவர்கள் அக்ரமமாகப் பாண்டவர்களுடைய இராஜ்யத்தை எல்லாம் அபகரித்தார்கள். 14 வருஷங்கள் எப்படி இருந்தான் துரியோதனன்? அந்த துரியோதனனுடைய இராஜ்யம் ரொம்ப ப்ரமாதமாகத்தான் இருந்தது. அந்த 14 வருஷம் ஆன பிற்பாடு பாண்டவர்களுடன் யுத்தம் நடந்தது. துரியோதனன் சமாசாரம் என்ன ஆயிற்று. அவனுடைய சகோதரர்கள் 99 பேரும் போய்விட்டனர். அவனும் போய்விட்டான். அவனுக்கு சம்பந்தப் பட்டவர்கள் எல்லோரும் போய்விட்டனர். துரியோதனன் பெயர் சொல்வதற்கு ஓர் ஆசாமி கூட இருக்கவில்லை. அதர்மம் செய்கிறவன் முன்னுக்கு வருவது வாஸ்தவம்தான். ஆனால் கடைசியில் என்ன ஆயிற்று அவனுக்கு. ஸர்வநாசம் ஆகிவிட்டது. இராவணனுக்கும் அதே மாதிரி. ஹனுமார் இலங்கைக்குப் போய் சீதாமாதாவை தர்சனம் பண்ணி இராவண சபையில் இராவணனைப் பார்க்கிற போது ஹனுமார் மனதில் என்ன வந்தது என்பதை வால்மீகி இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.
அந்த இராவணனின் தோற்றம், அவனுடைய ஐஸ்வர்யம், அவனுடைய ப்ரபாவம், அவனுடைய அட்டஹாஸம் எல்லாம் பார்க்கிறபோது ஹனுமாருக்கு தோன்றியதாம் இவனுடைய பெர்ஸனாலிட்டியைப் பார்த்தால் இவன் மூன்று லோகங்களையும் பரிபாலனம் பண்ணக் கூடிய தகுதி இருக்கிறவனாய் இருக்கிறான். ஆனால் இவனிடம் அதர்மம் ரொம்ப இருந்து அதுவே இவனை நாசமாக்கப் போகிறது. அந்த அதர்மத்தினால் இவன் நாசமாகப் போகிறான். இந்த அதர்மம் ஒன்று இவனிடம் இல்லையென்றால் இந்த மூன்று உலகங்களிலேயும் யாரும் இவனைப் பிடிக்க முடியாது. ஜகன்மாதாவான சீதாமாதாவை தப்பான திருஷ்டியால் பார்த்தானே அதுதான் அவன் பண்ணின அதர்மம். நான் யாத்திரை பண்ணியபோது ஒருவன் என்னிடம் கேட்டான். நீங்கள் இராவணனை ரொம்பவும் துச்சமாகப் பேசுகிறீர்களே அவன் என்ன தப்பு பண்ணினான் சொல்லுங்கள் என்றான். சீதையைக் கடத்தினான் என்று இருக்கிறது அது தவிர அவன் என்ன தப்பு பண்ணினான் என்று கேட்டான். என்னடா? சீதையைத் தூக்கிச் சென்றான். வேறு என்ன தப்பு பண்ணினான் என்று கேட்கிறாயே? சீதையைக் கடத்தினான் என்பது சாதாரணமான தவறா? அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உனக்கு புரியவில்லையா? நம்முடைய கலாசாரத்திற்கு நம்முடைய தர்மத்திற்கு ரொம்ப விபரீதமான காரியம்டா அது. நம் தர்மம் என்ன சொல்கிறது. நம் கலாசாரம் என்ன? நம் ஸம்ஸ்க்ருதி என்ன சொல்கிறது? நம் கல்சர் என்ன?
உலகத்தில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தாயார் மாதிரி என்று நினைக்க வேண்டும். தாயாரைப் பார்த்தால் உன் மனதில் எந்த விகாரமும் உண்டாகாதே அதே போல் எந்த ஸ்த்ரீயைப் பார்த்தாலும் நம் மனதில் எந்த விதமான விகாரமும் உண்டாகக் கூடாது. இது முதல் விஷயம். நாம் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் “அம்மா! அந்தப் பக்கம் போங்கோ” என்போம் அம்மா என்ற சப்தம்தான் வரும் வேறு எந்த சப்தமும் நம் வாயில் வராது. நம் முன்னோர் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் “அம்மா இங்கே வாருங்கோ! அம்மா அங்கே போங்கோ” என்று. ஒரு வேளை திட்டவேண்டி வந்தாலும் “அம்மா உங்களுக்கு புத்தி இல்லையா?” அப்போதும் அம்மா என்றே சொல்லுவோம். ஏனென்றால் “மாத்ருவத் பரதாரேஷு” இதற்கு விருத்தமாக வர்த்தனம் பண்ணின இராவணனை என்ன தப்பு பண்ணினான் என்று கேட்கிறாயே? உனக்கு புத்தி உண்டாடா? என்று நான் கேட்டேன். அதனால் என்ன சொல்வதற்கு வருகிறோம் என்று கேட்டால் மனிதன் அதர்மம் பண்ணி முன்னுக்கு வருகிறான் என்று நீங்கள் சொல்வது தாற்காலிகமானதுதான். அதர்மம் பண்ணி முன்னுக்கு வரக்கூடியது தாற்காலிகம். தாற்காலிகம் என்றால் டெம்பரரி. கடைசியில் அவனுக்கு ஸர்வநாசம் என்பது தப்பாது. அதனால் நாம் யாரும் அதர்மம் பண்ணி முன்னுக்க வர நினைத்தல் கூடாது.
தர்ம மார்க்கத்தில் நியாய மார்க்கத்தில் நாம் முன்னுக்கு வந்தால் நமக்கு என்றைக்கும் கெடுதல் வராது. ஆனால் அதர்ம மார்க்கத்தில் முன்னுக்கு வந்தால் மட்டும் அது நிற்காது. அந்த ஐஸ்வர்யமோ, அந்த அதிகாரமோ எதுவும் நிற்காது. இந்த விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உண்மையான நம்முடைய நண்பன் நாம் செய்கிற தர்மம் தான். அதே மாதிரி நமக்கு சத்ரு என்பது யார் என்று கேட்டால் நாம் செய்கிற அதர்மம்தான்.
நாம் இப்போது எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம் என்று சொன்னால் நாம் முன்பு செய்த அதர்மத்தினுடைய பலன். அதர்மத்தை முன்பு செய்து இப்போது துக்கத்தை நாம் அனுபவிக்கிறோம். இதற்கு நாம் யாரையும் நித்தித்துப் ப்ரயோஜனம் இல்லை. நாம் பண்ணின கர்மாவிற்கு நாம் யாரை நிந்திக்க வேண்டும்? இனிமேலாவது இனி அதர்மத்தை செய்யக் கூடாது என்று ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். செய்தது போதும். அனுபவித்தது போதும். இனிமேல் நாம் அதர்மத்தை செய்யக்கூடாது. இனிமேல் நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். தார்மீகனாக இருக்கவேண்டும் என்கிற பாவம் வநால் அவன்தான் சரியான மனிதன். ஆகையினால் நாம் நம்முடைய ஜீவனத்தில் உண்மையான நம்முடைய நண்பன் நம்முடைய பந்து என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தர்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. உண்மையான பந்து என்பது தர்மம்தான். இந்த சத்யத்தைப் புரிந்து கொண்டு நாம் தார்மீகர்களாக இருந்தால் அப்போதுதான் நம்முடைய இந்த வாழ்க்கை சார்த்தகமாகும். இல்லாவிடில் நாமும் இருக்கிறோம், ஏதோ வருகிறது, போகிறது எப்படியோ வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? ப்ராணிகளும் வாழ்கின்றன. அதுவும் எங்கேயோ ஆகாரத்தைத் தேடி சம்பாதிக்கிறது. ராத்திரி எங்கேயோ போய் தூங்குகிறது. யாராவது அடிக்க வந்தால் ஓடிவிடுகிறது. யாராவது ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு வந்தால் நெருங்கி வருகிறது. ப்ராணிகள் மாதிரி நாமும் இருந்தால் அந்த ப்ராணிகளுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்? தர்மம் என்று சொன்னால் முக்கியமாக பிறருக்கு உதவி செய்வது. அதர்மம் என்று சொன்னால் பிறருக்கு தொந்தரவு செய்வது. இந்த இரண்டு விஷயங்களை நாம் சரியாக புரிந்து கொண்டால் போதும்.
நான் என் வாழ்க்கையிலே யாருக்கும் தொந்தரவு பண்ணமாட்டேன். முடிந்த அளவுக்கு இன்னொருத்தருக்கு உபகாரம் செய்வேன். முடிந்த அளவுக்கு சாஸ்த்ரத்தில் தர்மம் பண்ணு, தர்மம் பண்ணு என்று சொன்னால் எல்லாரும் கோவில் கட்டு, சத்திரம் கட்டு, பாடசாலை கட்டு என்று சொல்ல வில்லை. அது எல்லோராலும் முடியாது. கோவில் கட்டுவதற்கும் சத்திரம் வைப்பதற்கும், பாடசாலை வைப்பதற்கும் எல்லோராலும் முடியாது; முடியுமா? கோவில் கட்ட முடியவில்லை என்றால் தர்மம் செய்வதற்கு வழியில்லை என்று அர்த்தமா? அவகாசம் இல்லை என்று அர்த்தமா? அதெல்லாம் கிடையாது. உனக்கு கோவில் கட்டக் கூடிய சக்தி இருந்தால் கோவில் கட்டு. உனக்கு அந்த சக்தி இல்லையென்றால் கோவில் கட்டித்தான் தார்மீகன் ஆக வேண்டும் என்பது இல்லை. அந்தக் கட்டியிருக்கிற கோவிலுக்கு தினமும் போய் பகவானை ஒரு ப்ரார்த்தனை பண்ணி நமஸ்காரம் பண்ணி விட்டு வாயேன். அதுவே ஒரு தர்மம் இல்லையா? யாரோ ஒரு மஹான் கோவில் கட்டி வைத்து இருக்கிறார் நீ தினமும் அந்தக் கோவிலுக்குப் போய் ஸ்வாமி சந்நிதியில் சிவனே என்று உட்கார்ந்து கொண்டால் அது ஒரு பெரிய தர்மம் உனக்கு. ஆனால் அது கூட செய்ய முடிவதில்லை நமக்கு. நம்முடைய நேரத்தை ஏதோ வேண்டாத விஷயங்களில்தான் கழிக்கிறோமே தவிர அந்தப் பகவத் ஸ்மரணத்திலேயோ, பகவத் கைங்கர்யத்திலேயோ கழிக்க நாம் தயாரில்லை.
பகவானுடைய நாமத்தை வாயினால் சொல்வது ஒரு பெரிய தர்மம். பகவான் நாமத்துக்கு எவ்வளவு மகிமை உண்டு என்பதை சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. பாகவதத்தில் அஜாமிள உபாக்யானம் கேட்டு இருப்பீர்கள் அஜாமிளன் என்பவன் ஒரு ராக்ஷஸன் அவன் செய்யாத தப்பிதமே கிடையாது. சமஸ்தமான அபராதமும் செய்தான் அவன். ஆனால் அவன் தன் பிள்ளைக்கு நாராயணன் என்று பெயர் வைத்தான். அது எதற்காக வைத்தானோ தெரியாது. நாராயணன் என்று வைத்தான் கடைசியில் அவன் ப்ராணன் போகிற சமயத்தில் அவன் பிள்ளையைப் பெயர் சொல்லி அதாவது நாராயணா என்றான். ப்ராணன் போய்விட்டது பகவான் பெயரைச் சொல்ல நினைத்து அவன் சொல்லவில்லை. பிள்ளை பெயரைச் சொன்னான். அவனுக்குப் பகவானுடைய ஸாரூப்யம் கிடைத்து விட்டது என்று பாகவதம் சொல்கிறது. பாகவதமோ, பாரதமோ, இராமாயணமோ இதெல்லாம் நமக்கு ஒரு ஸன்மார்க்கத்தைச் சொல்லக் கூடிய க்ரந்தங்களே தவிர, வெறும் கதை சொல்ல வந்த க்ரந்தங்கள் இல்லை. கதைப் புஸ்தகங்கள் என்று நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அவை நமக்கு ஒரு நல்வழியைக் காண்பிக்க வந்த புஸ்தகங்களே. அந்த பாகவத சரித்திரத்தில் அஜாமிளன் தனக்கு அவன் அறியாமலே பிள்ளையைக் கூப்பிடுவதற்காக நாராயணா என்ற நான்கு அக்ஷரங்கள் வாயில் வந்து விட்டது. ப்ராணன் போய்விட்டது. அவனுக்கு பகவத் ஸாந்நித்யம் கிடைத்து விட்டது என்கிறபோது பகவானுடைய நாமத்தை, மகிமையைத் தெரிந்து கொண்டு நாமத்தை சொன்னால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும். அவன் பகவான் நாமத்தை தெரியாமல் சொல்லி அவ்வளவு நல்லது கிடைத்தபோது பகவான் நாமத்தினுடைய மகிமையைத் தெரிந்து கொண்டு சொன்னால் எவ்வளவு நல்லது நமக்கு. அதனால் பகவான் நாமத்தை சொல்லக் கூடியது என்பது அவ்வளவு பெரிய தர்மம். பகவானுடைய பூஜை செய்வது என்பது எவ்வளவு பெரிய தர்மம் பகவத் கதாகாலக்ஷேபத்துக்குப் போய் உட்காருவது ஒரு பெரிய தர்மம்.
பக்தி அநேகவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. பகவத் கதை கேட்கக் கூடியது ஒரு பக்தி. பகவான் நாமத்தை உச்சாரணம் செய்வது ஒரு பக்தி. பகவானுக்கு நமஸ்காரம் செய்வது ஒரு பக்தி. பகவானை நினைத்து மனதில் த்யானம் பண்ணிக் கொண்டே இருப்பது ஒருபக்தி. ஆகையினால் இந்த பகவந் நாமஸ்மரணமோ பகவத் கதா ஸ்மரணமோ, பகவத் ஆராதனையோ பகவத் ஸ்மரணமோ இவையெல்லாம் தர்மங்கள்தான். இந்தத் தர்மங்களை நீ ஆசரணம் பண்ணினேயானால் உனக்கு அடுத்த ஜன்மத்திலேயும் இன்னும் உத்ர்க்ருஷ்டமான ஜன்மம் கிடைக்கும். இதைவிட்டுவிட்டு நம்முடைய ஜீவனத்தில் நாம் பிராணிகள் மாதிரி வாழ்க்கை நடத்தினோமானல் அதனால் நமக்கு எந்த விதமான ஒரு ஸ்ரேயஸ் என்பது கிடைக்காது. நம்முடைய உண்மையான நண்பன் தர்மபுத்திரன் என்பதை புரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையில் தர்மத்தை ஆசரணம் பண்ணி ஸ்ரேயஸை அடைய வேண்டும் என்பதுதான் சாஸ்த்ரத்தினுடைய உபதேசம். பகவத்பாத சங்கரரும் நமக்கு அதுதான் உபதேசம் பண்ணினார்.
கேயம் கீதாநாமஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜனஸங்கேசித்தம்
தேயம் தினஜனாயச வித்தம் ||
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜனஸங்கேசித்தம்
தேயம் தினஜனாயச வித்தம் ||
பகவானுடைய நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டுவா. பகவானுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் த்யானம் பண்ணிக்கொண்டுவா. உன்னுடைய வாழ்க்கை பவித்ரமாகும். இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு ஜீவனத்தில் யாருக்கும் தொந்தரவு பண்ணமாட்டேன் கூடுமானவரை மற்றவருக்கு உபகாரம் செய்வேன் என்கிற தீர்மானத்தோடு இருந்து கிடைத்த சமயத்தை எல்லாம் பகவானுடைய ஸ்மரணத்திலேயே விநியோகம் செய்து வாழ்க்கையை நடத்தினால் ரொம்ப புண்யசாலியான மனிதன் ஆகிவிடுவான். அவன் க்ஷேமத்தை அடைவான். இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை அடுத்த ஜன்மத்திலேயும் அவன் க்ஷேமத்தை அடைவான்.