குருவின் தேவையும் அவரின் மஹிமையும்
பூமியில்
பிறக்கும் ஜந்துக்கள் எல்லாவற்றிற்கும் (மனிதர்கள் உட்பட) பிறந்தவுடன் தனிப்பட்ட
கவனிப்பு தேவைப்படுகிறது. மனிதனைத் தவிர ஐந்தறிவுள்ள மற்ற ஜந்துக்கள் எல்லாம்
சீக்கிரத்தித்திலேயே ஸ்வயமாகவே ஆஹார வ்யவஹாரங்களை கவனித்துக் கொள்கின்றன. ஆனால்
ஆறறிவு படைத்த மனிதனுக்குத்தான் இன்னும் அதிகமான காலத்திற்குக் கவனிப்புத்
தேவைப்படுகிறது. உடலை வளர்ப்பதற்குத் தாயாரின் கவனிப்பும் உள்ளத்தை வளர்க்கத்
தந்தையின் கவனிப்பும் தேவைப்படுகிறது.
ஐந்து வயதிற்குப்பின் குருவின் கவனிப்பு தேவைப்படுகிறது. குரு
என்பவர் எப்படியிருக்க வேண்டுமென்று நம் பகவத் பாதாள் ஸ்ரீஆதிசங்கரர் விவேக
சூடாமணியில் விரிவாகக் கூறியிருக்கிறார். அதில் குருவானவர் அதிகம் கற்றவராக இருக்க
வேண்டுமென்றும் சிஷ்யரின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் சிந்திப்பவராக இருக்கவேண்டுமென்றும்
கூறியிருக்கிறார். அதேசமயம் சிஷ்யருக்கும் உரிமையும் கடமையும் இருக்கிறது.
குருவைத் தேர்ந்தெடுப்பதில் உரிமையும் அவர் தாள்பணிந்து அவரின் அறிவுரைப்படி
நடப்பதில் கடமையும் இருக்கிறது.
ஸ்ரீஆதிசங்கர
பகவத்பாதாள் காலடியில் பிறந்து வளர்ந்து குருவைத்தேடி நர்மதா நதிக்கரைக்குச்
சென்று ஸ்ரீகோவிந்த பகவத் பாதாளிடம் சரணடைந்தார். அந்தச் சமயம் ஸ்ரீகோவிந்த
பகவத்பாதாள் ஸ்ரீசங்கரரிடம் ‘கஸ்த்வம்’ என்று கேட்டார். அதற்கு ஸ்ரீசங்கரர் சுத்த வேதாந்த தத்வமாக
பதில் சொன்னார். அந்தப் பதிலைக் கேட்டவுடன் ஸ்ரீகோவிந்த பகவத்பாதர் மிகவும்
சந்தோஷமடைந்து ஸ்ரீசங்கரரைத் தன் சிஷ்யராக ஏற்றுக் கொண்டார்.
குருவானவர்
சிஷ்யரின் மூன்று விதமான தாபங்களையும் (ஆதிபௌதிகம், ஆதிதைவிகம், ஆத்யாத்மிகம்) போக்கி சிஷ்யரின்
நிலைக்கேற்ப முன்னேறுவதற்கான வழி முறைகளையும் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஒரு சமயம்
ஸ்ரீசந்திரசேகரபாரதீ ஸ்வாமிகளிடம் ஒரு சிஷ்யர் தனக்குத் தேவீமந்த்ர உபதேசம்
வேண்டும் என்று பிரார்த்தித்தாராம்.
அதற்கு
ஸ்ரீஸ்வாமிகள் “உபதேசம்
செய்யலாம். ஆனால் நீங்கள் பார்க்கிற தொழிலுக்கும் தேவீ உபாசனைக்கும் சரியாக வராதே.
இடைஞ்சல்கள் இருக்குமே” என்றாராம்.
உடனே
அந்தச் சிஷ்யர் “நான்
இப்பொழுதே என் வக்கீல் தொழிலை விட்டு விடுகிறேன்.” என்றாராம்.
ஸ்ரீஸ்வாமிகள்
அதைக் கேட்டவுடன் “நாளை
காலையில் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள். உபதேசம் நடக்கும்.” என்றாராம்.
இன்னொரு
சமயம் வேறொரு சிஷ்யர் ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகளிடம் இதே மாதிரி உபதேசம்
கேட்டவுடன் “நீங்கள்
உங்கள் தாயார் தந்தையை நன்றாக கவனித்து பணிவிடை செய்து வாருங்கள். பின்னால்
பார்க்கலாம்.” என்றாராம்.
அதற்கு
அந்தச் சிஷ்யர் “அவர்கள்
தான் முரண்பாடாக நடந்து கொள்கிறார்கள்.” என்றாராம்.
உடனே
ஸ்ரீஸ்வாமிகள் “மாத்ரு
தேவோ பவ, பித்ரு
தேவோ பவ, என்று
உங்களுக்குத்தான் வேதத்தில் கட்டளையிருக்கிறது. அவர்களுக்கு புத்ரதேவோ பவ என்று
சொல்லவில்லை.” என்று
அவரைத் திருத்தி அனுப்பி வைத்தாராம்.
இந்த
மாதிரி சிஷ்யரின் நிலைக்கேற்ப அவரைத் திருத்தி குருவானவர் முன்னேற்றுகிறார்.
ஆதி
ஜகத்குருவான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் “ஒவ்வொருவரும் தனக்கு விதிக்கப்பட்ட
கடமையைச் செய்ய வேண்டும். அதில்தான் முன்னேற்றமே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
அர்ஜுனனுக்கு அவரின் கடமையான யுத்தம் செய்வதில்தான் கவனம் இருக்கவேண்டுமென்றும்
உடனே ஞானம் பெற்று மோக்ஷத்திற்குச் செல் என்றும் கூறவில்லை. தற்காலத்தில் பலரும்
அவரவர்களின் கடமையை மறந்துவிட்டு, அதாவது அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச்
செய்யாமல் வேறு ஏதேதோ கார்யங்களைச் செய்து கொண்டு இவ்வளவு செய்தும் மன நிம்மதி
இல்லை என்று அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சரியான நல்ல குருவைத்
தேடாமல் யார் யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
ஒரு
சமயம் ஒரு முஸ்லிம் அன்பர் ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகளிடம் போய் “நல்ல குருவை எப்படி, எங்கே போய்த் தேடுவது?” என்று கேட்டாராம். அதற்கு ஸ்ரீஸ்வாமிகள்
“நீங்கள்
தீவிர எண்ணத்தோடும் பக்தியோடும் குருவைத் தேடினீர்களானால் உங்கள் எதிரிலேயே குரு
நிற்பார்” என்றாராம்.
உடனே அவருக்குத் திடீரென மனத்தில் தோன்றி ஸ்ரீஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்காரம்
செய்து “என்னை
மன்னியுங்கள். நான் தவறாகக் கேட்டு விட்டேன். என்னை உங்கள் சிஷ்யராக ஏற்றுக்
கொள்ளுங்கள்” என்றாராம்.
ஸ்ரீஸ்வாமிகளும் அவரை ஆசீர்வதித்தாராம். அந்த மாதிரி நாமும் தீவிர எண்ணத்துடனும்
பக்தியுடனும் மனப்பூரவமாகத் தேடினால் நமக்கும் கிடைப்பார். நாமும் முன்னேற
முடியும்.
கடைசியாக
குருவின் மகிமையைப் பற்றி ஒரு ஸ்லோகத்தில் (த்ருஷ்டாந்தோ நைவத்ருஷ்ட:
த்ரிபுவனஜடரே... என்று) கூறியிருப்பதை இங்கு ஞாபகப்படுத்துவது அவசியமாகிறது.
இந்த
உலகத்தில் எல்லாவற்றிற்கும் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல குருவிற்கு
மட்டும் உதாரணமே சொல்ல முடியாது. முன்காலத்தில் சந்திரகாந்தக்கல் என்று ஒன்று
இருந்ததே அதை குருவுக்கு உதாரணமாக சொல்லலாமா என்றால் அதுவும் சரியாக வராது.
ஏனென்றால் சந்திரகாந்தக் கல் என்பது இரும்பைக் கூட தங்கமாக மாற்றக்கூடிய சக்தி
படைத்தது. அந்த மாதிரி குருவும் சிஷ்யரை நல்ல நிலைக்கு உயர்த்தி விடுவாரே. ஆகையால்
குருவானவர் சந்திரகாந்தக் கல் மாதிரி என்று சொல்லிவிடலாமென்றால் அதுவும் சரியாக
இல்லை. ஏனென்றால் சந்திரகாந்தக் கல்லால் தங்கமாக்கப்பட்ட இரும்பு தங்கமாகத்தான்
இருக்குமே தவிர அது சந்திரகாந்தக் கல் ஆகாது. அதாவது அந்தத் தங்கத்துக்கு வேறோர்
இரும்பைத் தங்கமாக்கக் கூடிய சக்தி இல்லை. ஆனால் ஒரு நல்ல குருவால் முன்னேற்றி
விடப்பட்ட ஒரு சிஷ்யர் தானும் ஒரு நல்ல குருவாக ஆகக்கூடிய சக்தியைப் பெற்று
விடுகிறார். ஆகையால் அந்த உதாரணமும் சரிவராது என்று சொல்லி குருவுக்கு நிகர்
குருதான் என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.
அந்தமாதிரி
நம் ச்ருங்கேரி சாரதா பீடத்தில் வழிவழியாக வருகிற ஒவ்வொரு குருவும் நம்
முன்னேற்றத்திற்காக இருக்கிறார். அவரை அண்டி நாம் அனைவரும் நற்கதி அடைவோமாக.
நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்
No comments:
Post a Comment