Thursday, 21 January 2016

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்

“சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருயுவா 
குரோஸ்தோமௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன சம்ஷயா:”

“தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியில் வீற்றிருக்கிறார். குரு இளையவர்; சீடர்களோ அவரை விட மூத்தவர்கள். உலகிலுள்ள சீடர்களை உய்விப்பதற்காக அவதாரம் செய்த ஸ்ரீசங்கரருக்குச் சீடர்களாக இருப்பவர்கள் இணையற்ற பாக்யம் செய்தவர்கள்” என்கிறது மாதவீய சங்கர விஜயம்.

ஸ்ரீஸனந்தனர் (பத்மபாதர்)
சங்கரர் காசி க்ஷேத்திரத்தில் வாசம் செய்த போது, ஓர் அந்தண குமாரன் ஆசார்யரைக் காண வந்தார். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே சங்கரர், இவன் ‘நான், எனது’ என்ற அபிமானம் இல்லாதவன் என்று எண்ணுமாறு அவர் தோற்றம் இருந்தது.

“சோழ தேசத்தவன் நான். சமசார பந்தத்தில் உண்டாகும் துக்கத்தைப் போக்கவே தங்களைச் சரணடைந்தேன்” என்றார் வந்தவர்.

சங்கரர் அவருக்கு முறைப்படி சந்யாச மந்திரம் உபதேசம் செய்தார். “ப்ரதமம் விநேயம் தம் தேஷிகேந்த்ரஸ்ய சனந்த நாக்யம்” ‘சனந்தரர்’ என்ற இவரே சங்கரரின் முதல் சீடர். திருமாலின் அவதாரம் என்றும் அருணரே சனந்தராகப் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது.
கங்கை நதியின் மறுகரையில் சனந்தரர் இருந்தபோது மறுகரையிலிருந்தார் சங்கரர். அவருடன் இருந்த சிஷ்யர்கள், “குருநாதர் சனந்தனருக்கு மட்டும் மும்முறை தம்முடைய கிரந்தங்களை உபதேசம் செய்திருக்கிறார்.” என்று அசூயை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனைப் போக்கவும் சனந்தனரின் ஒப்பற்ற குருபக்தியை வெளிப்படுத்தவும் விரும்பினார் சங்கரர். “சனந்தனா” என்று சங்கரர் அழைத்தது மறுகரையிலிருந்த சனந்தனரின் காதுகளை எட்டியது. அக்கணமே அவர் தாவி கங்கையில் கால் பதித்தார். சம்சாரமென்னும் பெரும் கடலையே தாண்டச் செய்கிறவர் ஆசார்யர்; அத்தகையவரின் சரண கமலங்களைத் தியானம் செய்தால் கங்கையைக் கடப்பதா கடினம் என்று கண் மூடித் தியானம் செய்து கை குவித்து கங்கையில் கால் பதித்தார் சனந்தனர். ஒவ்வொரு காலடி பதிக்கும் இடத்தில் எல்லாம் கங்கை கமலங்களைத் தோற்றுவித்தாள்.

உவகை பூத்து, சனந்தரை ஆலிங்கனம் செய்து கொண்டு “பத்மபாதரே” என்று பகவத்பாதர் அழைத்தார்.
உபநிஷத்துகளின் தாத்பர்யத்தை, வியாசர், சூத்திர வடிவிலே அருளினார். அதுவே பிரம்ம சூத்ரம். அதற்கு முதல் பாஷ்யம் இயற்றியவர் சங்கரர். அதனை விளக்கி பத்மபாதர் எழுதியதே “பஞ்சபாதிகா” ஆகும்.

“குருபக்தியிலே ஈடிணையற்றவராக விளங்கிய பத்மபாதர், பகவத்பாதரை, பரமேஸ்வரராகவே போற்றி வணங்கினார். ஆசார்யார் இருக்கும் இடத்தில் விலங்குகள் பகை மறக்கும்; வியாதிகள் அகலும்; துக்கம் நீங்கி விடும்; பூமித்தாய் மனிதகுலத்துக்குத் தேவையானவற்றை வாரி வழங்குபவளாகவும் இருப்பார்.” என்று சனந்தனர், குருநாதரின் குண விசேஷங்களைக் கூறித் துதித்தார்.
ஸ்ரீசைல க்ஷேத்திரத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வாசம் புரிந்த போது, தோஷங்கள் நிறைந்தவனும் கொடிய தோற்றம் கொண்டவனுமான காபாலிகன் அவரைக் கண்டான்.

“சான்றோரில் சிறந்தவரே! தங்கள் சிரஸை தானம் செய்தால் உங்களுக்குப் புகழும் எனக்குத் தவத்தின் பயனும் கிடைக்கும்” என்று கூறினான்.

அதற்கு ஆதிசங்கரர் இசைந்தார். கபால பைரவன் அவருடைய தலையைக் கொய்வதற்காகத் தயாராக நின்றான். சங்கரர் மனத்தையும் புலன்களையும் அடக்கி பிரணவத்தை ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.

பைரவன் கத்தியைக் கையில் உயர்த்தியதை, ஸ்நானம் செய்து நிஷ்டையில் இருந்த பத்மபாதர், தம் ஞானக் கண்களால் கண்டார்.

நரஸிம்ம மந்திரத்தை வெகுகாலமாக ஜபம் செய்து ஸித்தியடைந்தவர் பத்மபாதர். பிரஹ்லாதனுக்கு அருள்புரிந்த நரஸிம்மரை நினைத்த மாத்திரத்தில் நரஸிம்ம மூர்த்தியாகவே மாறி, குதித்து ஓடினார். பாய்ந்து சென்று வஜ்ராயுதம் போன்ற தம் நகங்களினால் பைரவனின் மார்பைப் பிளந்தார். பின்பு உயிரற்ற அவனுடைய உடலைப் பற்களால் கவ்வினார். அட்டகாசமாகக் கர்ஜித்து அண்டத்தை நடுங்கச் செய்தார்.

ஆங்காங்கு சென்றிருந்த சீடர்கள் சிம்மகர்ஜனையைக் கேட்டு ஓடோடி வந்தார்கள். நிகழ்ந்ததை அறிந்து அதிசயமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

நிஷ்டை கலைந்து நோக்கிய சங்கரர், ஆச்சர்யமான நரஸிம்ம வடிவத்தைத் தம் முன்னே கண்டு துதி செய்யலானார். “சந்த்ராம்ஷு சோதர்ய சடாஜடாலம்” என்று தொடங்கி பல ஸ்லோகங்களால் போற்றினார். “ஹர, ஹர நரஸிம்மரே! எங்களுடைய பாபங்களை விரைவில் விலக்குவீர்” என்று முடித்ததும் நரஸிம்ம ரூபம் சாந்தமடைந்து பத்மபாதராக குருவுக்கு வந்தனம் செய்தார்.
பின்பு சிறிதுகாலம் குருநாதருடன் வாசம் புரிந்த பத்மபாதர் சங்கரரின் பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதினார். முதல் பகுதி பஞ்சபாதிகையாகவும். அடுத்தது “விருத்தி” என்றும் எழுதி, பிரக்யாதி பெற்றார்.

பத்மபாதருக்குத் தீர்த்த யாத்திரை செய்யும் விழைவு ஏற்பட்டது. குருவின் அண்மையே புண்ணிய க்ஷேத்திரம். அவருடைய பாதஜலமே தீர்த்தம் என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும் தீர்த்த யாத்திரை செல்ல குருநாதரின் அனுமதி வேண்டி, பின்பு செல்லலானார். வடதேசங்களில் சஞ்சாரம் செய்து விட்டு தென்திசை நோக்கி வந்தார். காளஹஸ்தி, காஞ்சி, சிதம்பரம், ஸ்ரீரங்கம் வந்ததும், காவிரிக் கரையில் அமைந்த பூர்வாச்ரம வீட்டை அடைந்தார். பத்மபாதரின் மாமானும் உறவினர்களும் வரவேற்று உபசாரம் செய்தார்கள். மாமன் வீட்டில் பிக்ஷை முடிந்து, அனைவருக்கும் உபதேச மொழிகளைக் கூறிய பின்பு பத்மபாதர் ‘பஞ்சபாதிகா’ எழுதிய சுவடிகளை வைத்து விட்டு, இராமசேதுவுக்குச் சென்று திரும்பும் போது எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.

அத்வைத மதத்தின் மீது கொண்ட பகையால் மாமன், சுவடியுடன் வீட்டையே எரித்துச் சாம்பலாக்கினார். இராமசேது யாத்திரை முடிந்து திரும்பிய பத்மபாதர் விஷயம் அறிந்து பெரிதும் மனம் வருந்தினார். பின்பு சங்கரபகவத் பாதரைத் தரிசிக்கக் கேரளத்துக்குச் சென்றார். சுவடிகள் எரிந்ததைப் பற்றி குருநாதரிடம் தெரிவித்தார்.

“சிருங்கேரியில் இருந்தபோது என் முன்னிலையில் படித்த பஞ்சபாதிகா, என் மனத்திலிருந்து நீங்கவில்லை. நான் கூறுகிறேன், எழுதிக் கொள்வீர்” என்று சங்கர பகவத்பாதர் கூறியதும் பத்மபாதர் அகமகிழ்ந்தார்.

குருநாதரின் வாய் மொழியாக எழுந்த பஞ்சபாதிகாவை பத்மபாதர் எழுதி முடித்தார். ஆனந்தக் கண்ணர் பெருக்கினார். ஆடினார்; பாடினார். பேரானந்தம் கொண்டவராக சுவடிகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவமாடினார். “எத்தகைய பேறு பெற்றேன்” என்றார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதரின் முதல் சீடரான சனந்தனர், ‘பத்மபாதர்’ என்று குருவினால் போற்றப்பட்டு, குருவாய் மொழியாலேயே பஞ்சபாதிகையை மீண்டும் எழுதி, பாரத நாட்டின் மேற்குத் திசையிலே பகவத்பாதர் நிறுவிய துவாரகா மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தார்.

ஸ்ரீஹஸ்தாமலகர்

ஸ்ரீசங்கர பகவத்பாதர் மூகாம்பிகையைத் தரிசித்து விட்டு ஸ்ரீபலிபுரத்துக்குச் சென்றார். அங்கே இரண்டாயிரம் பிராமணோத்தமர்கள் வசித்து வந்தார்கள். மிருத்யு, ஸ்ரீபலிபுரத்தை நெருங்கவே அஞ்சியது. வேத அத்யனனம், அக்னி ஹோத்ரம் யக்ஞங்கள் என சத்கர்மாக்களில் அனைவரும் ஈடுபட்டார்கள். அந்த அக்ரஹாரத்திலே சகல சாஸ்திர நிபுணராக, கீர்த்தியுடன் வாழ்ந்து வந்த பிரபாகரருக்கு ஒரு புத்திரன் இருந்தான்.

பிரபாகரருக்கு எல்லாச் செல்வங்களும் இருந்தும், சந்தோஷம் இல்லை. காரணம், அவருடைய புத்திரன் புத்தியற்ற ஜடமாக இருந்ததுதான்.

எதுவும் பேசுவதும் இல்லை; எவர் பேசுவதையும் கேட்பதும் இல்லை. விளையாட்டில் விருப்பமில்லை. முட்டாள் என்று பிறர் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் வருந்துவதுமில்லை. ஆனால் தோற்றத்திலே மன்மதனாக, முகம் சந்திர பிம்பமாக, பூமாதேவியைப் போல் பொறுமை மிக்கவனாக இருந்தான்.

பிரபாகரர், இவன் இவ்வாறு இருக்க என்ன காரணம் என்பதை அறிய இயலாதவராக, துன்பத்தில் மூழ்கியிருந்தார். அவர் தம் பிள்ளைக்கு உபநயனம் செய்வித்தார். பதின்மூன்று வயதான, அவனுடைய நிலைக்குப் பரிகாரம் காண முற்பட்டார்.
அப்போதுதான், ஸ்ரீசங்கரபகவத்பாதர், ஸ்ரீபலிபுரத்துக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்து, பிரபாகரர் புத்திரனை அழைத்துக் கொண்டு பகவத்பாதரிடம், சென்றார்.

பிரபாகரர் ஆசார்யாரை வணங்கினார். புத்திரனையும் வணங்குமாறு கூற, அவனும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்காமல் அப்படியே கிடந்தான். ஸ்ரீசங்கரர், பிரபாகரர் மூலம், பிள்ளயைப் பற்றி அறிந்து கொண்டதும், கீழே கிடந்த அவனைப் பரமகருணையுடன் தூக்கி நிறுத்தினார்.
“நீ யார்? ஏன் இவ்வாறு ஜடம் போன்று நடந்து கொள்கிறாய்?”

“குருவே! நான் ஜடம் இல்லை. ஜடமாகிய இவ்வுடல் சேதனனான என்னுடைய தொடர்பினால் செயல் உள்ளதாகிறது.” என்று கூறிய அப்பிள்ளை, மேலும் பல ஸ்லோகங்களைப் பொழிந்தான்.

“நான் ஆத்மா! தூய்மையான மெய்யறிவு ததும்பும் ஆத்மா” என்னும் பொருள் பொதிந்த தத்துவம் நிறைந்த ஸ்லோகங்களைக் கூறியதும் ஸ்ரீசங்கர பகவத்பாதர் வியப்படைந்தார்.

ஸ்ரீபகவத்பாதர், பிரபாகரரை நோக்கி, “பிராமண சிரேஷ்டரே! உம்முடைய புதல்வன் உபதேசம் இல்லாமலே ஆத்ம ஞானத்தை அடைந்தவர்.” என்று கூறி தம் திவ்யமான வலக்கரத்தினால், அப்பிள்ளையின் தலையைத் தொட்டு பூரண அனுக்ரஹம் வழங்கினார். பின்பு, “இவன் தங்களுக்கு எவ்விடத்திலும் பயனளிக்க மாட்டான். முன் ஜன்ம வாசனையால் ஆத்ம ஞானியாக விளங்குகிறான். பற்றற்ற துறவறமே இவனுக்கு உரியது.” என்று மொழிந்தார்.

ஒப்பற்ற பரமாத்ம தத்துவத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகின்ற அவருக்கு “ஹஸ்தாமலகர்” என்ற திருநாமம் சூட்டினார். அவர் இயற்றிய ஸ்லோகங்கள் ‘ஹஸ்தாமலகீயம்’ என்று போற்றப்பட்டன.

தத்துவார்த்தமானவற்றை மிக எளிமையாக ஹஸ்தாமலகர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கர பகவத்பாதர், ஹஸ்தாமலகீயத்திற்கு உரை எழுதியுள்ளார். குருநாதரின் நூலுக்கு சீடர்கள் உரை எழுதுவது நடைமுறை. ஆனால் சீடரின் நூலுக்கு குருநாதர் உரை எழுதி, அந்நூலுக்கும், அந்தச் சீடருக்கும் மகத்துவம் சேர்த்திருக்கிறார்.

பிறவி ஞானியாக ஹஸ்தாமலகர் விளங்கியதற்குக் காரணம் உள்ளது. கங்கைக் கரையில் முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மணி, சிறுகுழந்தை ஒன்றுடன் கங்கையில் நீராட வந்தாள். குழந்தையை முனிவருக்கு அருகில் படுக்க வைத்து விட்டு அவள் நதிக் கரைக்குச் சென்று நீராடினாள். துயில் நீங்கிய குழந்தை மெல்லத் தவழ்ந்து சென்று நதியில் விழுந்து இறந்தது. தாய், விரைந்து வந்து குழந்தையை அணைத்துக் கொண்டு கதறினாள். முனிவர் தியானம் கலைந்ததும், நடந்ததை அறிந்து துயரமடைந்தார். தாம் செய்த தவற்றை உணர்ந்து, குழந்தைக்கு உயிரளிக்கத் தாமே, அதன் உடலில் புகுந்தார். அக்குழந்தையே தூய மெய்ஞானம் பெற்று ஹஸ்தாமலகர் ஆனார்.

ஹஸ்தாமலகர், ஸ்ரீசங்கரபகவத் பாதரின் அத்யந்த சீடரானார். பாரதநாட்டின் கிழக்கில், புரிஜகன்னாத் க்ஷேத்திரத்தில் ஸ்தாபித்த கோவர்த்தன மடத்தின் முதல் ஆசார்யராகத் திகழ்ந்தவர் ஹஸ்தாமலகர்.

ஸ்ரீதோடகாசார்யார்

சிருங்கேரியில் வாசம் புரிந்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர், சிஷ்யர்களுக்குப் பாஷ்ய பாடம் போதித்தார். மந்திரோபதேசம் செய்தார். பரதேவதையாக விளங்கும் ஸ்ரீசாரதையின் பூஜையிலும் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் ‘கிரி’ என்பவர் பகவத்பாதருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தார். பூஜைக்குத் தேவையானவற்றை சித்தம் செய்வார். பகவத்பாதர் எழுந்திருப்பதற்கு முன்பே கிரி எழுந்திருந்து, ஸ்நானம் செய்யத் தேவையான ஜலம், அணிய வஸ்திரம், அமர ஆசனம் அனைத்தையும் எடுத்து வைப்பது வழக்கம். அதிகம் படிப்பறிவில்லாதவர் எனினும் குருசேவையில ஆத்மதிருப்தி அடைபவராக விளங்கினார். குருநாதர் நின்றால், தாமும் நின்று, சென்றால் தாமும் செல்வார். பணிவின் இலக்கணம் ‘கிரி’ எனலாம்.

ஸ்ரீசங்கரர் ஒரு நாள் பாஷ்ய பாடம் நடத்துவதற்காக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் அவரிடம் பாடம் கேட்க காத்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் சென்று கொண்டிருந்தது. பாடம் தொடங்க ஏன் தாமதம் என்று மாணாக்கர்களுக்குப் புரியவில்லை.

“சிறிது பொறுத்திருங்கள். கிரியும் வந்து விடட்டும்.” என்று ஸ்ரீசங்கரர் கூறியதைக் கேட்டு சிலர் ஏளனமாகச் சிரித்தார்கள்
.
பத்மபாதர், “புத்தியற்ற, சாஸ்திர பாடம் கற்கத் தகுதியற்ற சுவர் போன்ற அவனுக்காகவா காத்திருக்க வேண்டும்?” என்று நினைத்துக் கொண்டதை குருநாதர் அகக் கண்களால் அறிந்தார்.

மாணாக்கரின் மமதையைப் போக்க வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் கருதினார். கிரியின் மீதான அபிப்ராயத்தை மாற்ற விழைந்தார். உடனேயே கிரிக்கு பதினான்கு வித்யைகளை மனத்தினால் அருளினார். அக்கணமே கிரி ஒப்பற்ற ஞானமும் வாக்குவன்மையும் பெற்றார். ஆத்ம தத்துவம் செறிந்த ஸ்லோகங்கள் அவருடைய வாக்கிலே உதயமாயின. குருநாதரை தோடக விருத்தத்தில் பாடியபடியே வந்ததைப் பார்த்து, பாடம் கேட்க வந்த மாணாக்கர்கள் அதிசயித்தார்கள். பத்மபாதர் செருக்கு அகன்று, தோடகரைப் போற்றினார்கள்.

உபநிஷத்துகளின் சாரத்தை விளக்கும் “ஸ்ருதி ஸாரஸமுத்தரணம்” என்னும் நூலையும் தோடகர் இயற்றினார். “தத்வமஸி” என்ற மஹா வாக்யத்தின் கருத்தை இந்நூலில் விளக்கியுள்ளார். 179 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல் தோடகரின் பரந்த ஞானத்துக்கு எடுத்துக் காட்டாகவும் பக்திப் பனுவலாகவும் உள்ளது.

வேதாந்தக் கருத்துகளின் பொக்கிஷமாகத் திகழ்கிற தோடகரின் ஞானச் செல்வத்தை அவருக்கு வாரி வழங்கியவரை “பவ சங்கர தேசிகமே சரணம்” என்று வணங்கி வழிபட்டார்.

உபநிஷத்துகளின் சாரத்தை எளிய முறையிலே விளக்கியுள்ளவர் ஸ்ரீதோடகாசாரியார். சங்கரபகவத் பாதரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரராகி ஞானம் பெற்றவர்.
ஸ்ரீபகவத்பாதர், பத்ரிகாஸ்ரமத்தில் ஜ்யோதிர் மடத்தை ஸ்தாபித்து அதன் முதல் ஜகத்குருவாக ஸ்ரீதோடகரை நியமித்தார்.

ஸ்ரீஸுரேஷ்வரர்:
மண்டனமிச்ரராக, உபயபாரதியை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டிருந்தவர். பூர்வ மீமாம்சா மதத்தின் தலைவராக விளங்கிய குமாரிலபட்டரின் சீடர் கர்மமே, வீடுபேறு அளிக்கும் என்பதில் உறுதி கொண்டிருந்தவர். திக்விஜயம் செய்து வந்த ஸ்ரீசங்கரபகவத்பாதர் பிரயாகையில், துஷாக்னியில் பிரவேசித்த குமாரிலபட்டரை சந்தித்தார். அவருடைய மொழிகளுக்கு இணங்கி, மாஹிஷ்மதி நகருக்கு வந்து மண்டன மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார்.

மண்டன மிச்ரரின் மனைவி உபயபாரதி நடுவராக இருக்க, சங்கரருடன் வாதம் புரிந்தார். வாத நிபந்தனையின்படி, மண்டனர் தோல்வியுற்றதும் சங்கரரின் சீடரானார். ‘ஸுரேஷ்வரர்’ எனத் துறவியாக தீக்ஷாநாமம் பெற்றார்.

ஸ்ரீவியாசர், சங்கரர் ஆகியோருக்கு இணையான ஞானம் பெற்றவர் ஸுரேஷ்வரர். பிரம்மதேவரின் அவதாரம்.

அத்வைதத்தின் அடிப்படை பிரம்ம சூத்திரம். இதனை எழுதியவர் பாதராயணர் என்னும் வியாசர். இவர் சூத்திரக்காரர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். ஸுரேஷ்வரர் துறவுச் சன்யாசம் அடைந்த பின்பு நர்மதை நதிக்கரையில் தங்கி அத்வைத சித்தாந்தத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஞான சூரியனாக விளங்கிய ஸுரேஷ்வரரை, பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு “வார்த்திகம்” எழுதுமாறு சங்கரர் கூறினார். ஆனால் சங்கரரின் சீடர்கள் பலரும் இதை விரும்பவில்லை.

மீமாம்ஸகராக இருந்து பின்பு அத்வைதியாக மாறிய ஸுரேஷ்வரர், ‘வார்த்திகம்’ எழுதுவதற்கு சீடர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அதன் பிறகு ஸ்ரீசங்கரர் ஸுரேஷ்வரரிடம், அத்வைதக் கருத்தை விளக்கும் தனித்ததொரு நூலை எழுதுமாறு பணித்தார். அதற்கிணங்க, ஸுரேஷ்வரர் “நைஷ்கர்யஸித்தி” என்ற நூலை எழுதினார்.

நான்கே பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் “பந்தத்தைப் போக்கும் உபநிடதத்தின் மையமான ஆத்மஞானத்தை பல ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். ஆயினும் குருநாதரின் கட்டளைக்குப் பணிந்து தாம் எழுதியிருப்பதாக” விநயத்துடன் குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவத்தின் அனைத்து சாரத்தையும் பிழிந்து தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. “அசேஷ-வேதாந்த ஸார-ஸங்கிரஹ-பிரகரணம்” என்பதாக ஸுரேஷ்வரர் கூறியிருக்கிறார்.

ஸ்ரீசங்கர பகவத்பாதர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்திற்கு ஸுரேஸ்வரர் எழுதியுள்ள அற்புதமான உரை நூலுக்கு “மானஸோல்லாஸம்” என்று பெயர். சங்கரரின் பஞ்சீகரணத்திற்கு வார்த்திகம் செய்துள்ளார்.

‘வார்த்திகம்’ என்பது “உக்தானுக்த துருக்தார்த்தவ்யக்தி காரிது வார்த்திகம்” என்பது அதன் இலக்கணம். பாஷ்ய நூல் மூன்று விதமான விளக்கங்களுடன் இருக்க வேண்டும். அதுவே வார்த்திகம். மூலநூலில் உள்ளதை உள்ளவாறே கூறுதல்; அதில் கூறாததையும் கூறுதல்; மூலநூலின் கருத்துக்கு மாறான விளக்கங்களைக் கூறுதல். இதுவே ‘உக்த’, ‘அனுக்த’, ‘துருக்த’ என்பதாகும்.

ஸ்ரீசங்கரர் எழுதிய தைத்ரீய உபநிஷத் பாஷ்யத்திற்கும், பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கும் ஸுரேஷ்வரர் விளக்கவுரை எழுதியுள்ளார். “தைத்ரீய உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்,” “பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்ய வார்த்திகம்” என்றும் அவை கூறப்படுகின்றன. ஸ்ரீசங்கரர் பல உபநிஷத்துகளுக்கு பாஷ்யங்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றுள் இரண்டு பாஷ்யங்களுக்கு மட்டுமே ஸுரேஷ்வரர் வார்த்திகம் எழுதியுள்ளார். அதற்கு ஒரு காரணம் இருந்தது.
ஸ்ரீசங்கரபகவத்பாதர் யஜுர்வேத தைத்ரீய சாகையைச் சேர்ந்தவர். அவரைப் போற்றும் வகையிலே அந்த உபநிஷத பாஷ்யத்திற்கு வார்த்திகம் அருளினார். யஜுர் வேதத்தின் காண்வ சாகையைச் சேர்ந்தவர் ஸுரேஷ்வரர். அதனால் பிருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்திற்கு வார்த்திகம் இயற்றியருளினார். சங்கரரை ‘பாஷ்யக்காரர்’ என்று போற்றுவது போல, ஸுரேஷ்வரரை “வார்த்திகக்காரர்” என்று போற்றுகிறார்கள்.

ஸ்ரீசங்கரபகவத்பாதர், நாட்டின் நான்கு திக்குகளிலும் நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார். அவர் முதன் முதலில் துங்கா நதி தீரத்தில் அமைந்த சிருங்கேரி எனப்படும் ரிஷ்யசிருங்கத் தலத்திலே ஸ்ரீசாரதா பீடத்தை நிறுவினார். அதற்கு ஸுரேஷ்வரரை முதல் ஆசார்யராக நியமித்தார்.
ஸ்ரீசங்கரபகவத்பாதர், பரமேஸ்வரரால் அளிக்கப்பட்ட ஸ்ரீசந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும் ஸ்ரீரத்ன கர்ப்பகணபதியையும் ஸுரேஷ்வரரிடம் அளித்தார். இன்றும் அவை சிருங்கேரியில் அவிச்சின்னப் பரம்பரையாக ஆசார்யாரால் பூஜிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீசங்கரபகவத்பாதர், நான்கு சிஷ்யர்களையும் போற்றியுள்ளார். ‘பத்மபாதரே’ என்று ஸனந்தனருக்குப் பட்டம் வழங்கி அவருடைய பக்தியை உலகறியச் செய்தார். ஜடமாக இருந்தவரை ஆத்மஞானியாக அறிமுகப் படுத்தி ஹஸ்தாமலகீய பாஷ்யமும் அருளி, தம் சிஷ்யருக்குப் பெருமை சேர்த்தார் ஆதிசங்கரர்.

‘கிரி’யாக குருசேவை புரிந்து வந்த எளியவனை, உயர்ந்த நிலைக்குச் செல்ல அனுக்ரஹம் புரிந்து ‘தோடகாஷ்டகம்’ பாட வைத்தவர் ஆதிசங்கரர்.
வாதத்திலே வென்று, சிஷ்யராக்கிக் கொண்டு ஸுரேஷ்வரராக தீக்ஷாநாமம் அளித்தார். ஸுரேஷ்வரரின் ஞானத் தெளிவிலே ஆதிசங்கரர் பெருமிதம் கொண்டார்.
பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதத் தடை ஏற்பட்டபோது, சங்கரர் தம் சிஷ்யரை சமாதானம் செய்து “இப்பூமியிலே ‘வாசஸ்பதி’ யாகப் பிறந்து பாஷ்யங்களுக்கு விளக்கவுரை எழுதப் போகின்றீர்” என்று வாழ்த்தி அருளினார்.

ஆதிசங்கரரின் அத்வைத மதத்தைப் பரப்பும் பணியிலே அவருடைய சீடர்கள் நால்வரும் பெறும் பேறு பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
ஆதிசங்கரரைத் தொடர்ந்து சுரேஷ்வரரும், பத்மபாதரும், ஹஸ்தாமலகரும், தோடகரும் அத்வைத குரு பரம்பரையின் நான்கு ரத்னமணிகளாக ஒளிர்ந்தார்கள்.

குரு சிஷ்ய பரம்பரையைத் தொடங்கி வைத்தவர்கள் மும்மூர்த்திகள். அதனை,

“ஸதாசிவஸமாரம்ப்பாம் சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

என்று ஸ்லோக ரூபத்தில் கூறுவது மரபாகும்.

“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்ட்டம்
சக்திம்ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம்
ஸ்ரீசங்கராசார்ய மதாஸ்ய பத்ம
பாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்ககாரமன்யான்
அஸ்மத் குரூன் ஸந்ததமான தோஸ்மி

என்று ஸ்தோத்திரம் செய்து வந்தனை புரிவோம்!

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

Wednesday, 20 January 2016

குருவின் தேவையும் அவரின் மஹிமையும்

குருவின் தேவையும் அவரின் மஹிமையும்
பூமியில் பிறக்கும் ஜந்துக்கள் எல்லாவற்றிற்கும் (மனிதர்கள் உட்பட) பிறந்தவுடன் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படுகிறது. மனிதனைத் தவிர ஐந்தறிவுள்ள மற்ற ஜந்துக்கள் எல்லாம் சீக்கிரத்தித்திலேயே ஸ்வயமாகவே ஆஹார வ்யவஹாரங்களை கவனித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்குத்தான் இன்னும் அதிகமான காலத்திற்குக் கவனிப்புத் தேவைப்படுகிறது. உடலை வளர்ப்பதற்குத் தாயாரின் கவனிப்பும் உள்ளத்தை வளர்க்கத் தந்தையின் கவனிப்பும் தேவைப்படுகிறது.

ஐந்து வயதிற்குப்பின் குருவின் கவனிப்பு தேவைப்படுகிறது. குரு என்பவர் எப்படியிருக்க வேண்டுமென்று நம் பகவத் பாதாள் ஸ்ரீஆதிசங்கரர் விவேக சூடாமணியில் விரிவாகக் கூறியிருக்கிறார். அதில் குருவானவர் அதிகம் கற்றவராக இருக்க வேண்டுமென்றும் சிஷ்யரின் முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் சிந்திப்பவராக இருக்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறார். அதேசமயம் சிஷ்யருக்கும் உரிமையும் கடமையும் இருக்கிறது. குருவைத் தேர்ந்தெடுப்பதில் உரிமையும் அவர் தாள்பணிந்து அவரின் அறிவுரைப்படி நடப்பதில் கடமையும் இருக்கிறது.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் காலடியில் பிறந்து வளர்ந்து குருவைத்தேடி நர்மதா நதிக்கரைக்குச் சென்று ஸ்ரீகோவிந்த பகவத் பாதாளிடம் சரணடைந்தார். அந்தச் சமயம் ஸ்ரீகோவிந்த பகவத்பாதாள் ஸ்ரீசங்கரரிடம் கஸ்த்வம்என்று கேட்டார். அதற்கு ஸ்ரீசங்கரர் சுத்த வேதாந்த தத்வமாக பதில் சொன்னார். அந்தப் பதிலைக் கேட்டவுடன் ஸ்ரீகோவிந்த பகவத்பாதர் மிகவும் சந்தோஷமடைந்து ஸ்ரீசங்கரரைத் தன் சிஷ்யராக ஏற்றுக் கொண்டார்.

குருவானவர் சிஷ்யரின் மூன்று விதமான தாபங்களையும் (ஆதிபௌதிகம், ஆதிதைவிகம், ஆத்யாத்மிகம்) போக்கி சிஷ்யரின் நிலைக்கேற்ப முன்னேறுவதற்கான வழி முறைகளையும் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஒரு சமயம் ஸ்ரீசந்திரசேகரபாரதீ ஸ்வாமிகளிடம் ஒரு சிஷ்யர் தனக்குத் தேவீமந்த்ர உபதேசம் வேண்டும் என்று பிரார்த்தித்தாராம்.

அதற்கு ஸ்ரீஸ்வாமிகள் உபதேசம் செய்யலாம். ஆனால் நீங்கள் பார்க்கிற தொழிலுக்கும் தேவீ உபாசனைக்கும் சரியாக வராதே. இடைஞ்சல்கள் இருக்குமேஎன்றாராம்.

உடனே அந்தச் சிஷ்யர் நான் இப்பொழுதே என் வக்கீல் தொழிலை விட்டு விடுகிறேன்.என்றாராம்.
ஸ்ரீஸ்வாமிகள் அதைக் கேட்டவுடன் நாளை காலையில் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள். உபதேசம் நடக்கும்.என்றாராம்.

இன்னொரு சமயம் வேறொரு சிஷ்யர் ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகளிடம் இதே மாதிரி உபதேசம் கேட்டவுடன் நீங்கள் உங்கள் தாயார் தந்தையை நன்றாக கவனித்து பணிவிடை செய்து வாருங்கள். பின்னால் பார்க்கலாம்.என்றாராம்.

அதற்கு அந்தச் சிஷ்யர் அவர்கள் தான் முரண்பாடாக நடந்து கொள்கிறார்கள்.என்றாராம்.
உடனே ஸ்ரீஸ்வாமிகள் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, என்று உங்களுக்குத்தான் வேதத்தில் கட்டளையிருக்கிறது. அவர்களுக்கு புத்ரதேவோ பவ என்று சொல்லவில்லை.என்று அவரைத் திருத்தி அனுப்பி வைத்தாராம்.

இந்த மாதிரி சிஷ்யரின் நிலைக்கேற்ப அவரைத் திருத்தி குருவானவர் முன்னேற்றுகிறார்.
ஆதி ஜகத்குருவான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் ஒவ்வொருவரும் தனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய வேண்டும். அதில்தான் முன்னேற்றமே இருக்கிறதுஎன்று கூறியிருக்கிறார். அர்ஜுனனுக்கு அவரின் கடமையான யுத்தம் செய்வதில்தான் கவனம் இருக்கவேண்டுமென்றும் உடனே ஞானம் பெற்று மோக்ஷத்திற்குச் செல் என்றும் கூறவில்லை. தற்காலத்தில் பலரும் அவரவர்களின் கடமையை மறந்துவிட்டு, அதாவது அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்யாமல் வேறு ஏதேதோ கார்யங்களைச் செய்து கொண்டு இவ்வளவு செய்தும் மன நிம்மதி இல்லை என்று அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சரியான நல்ல குருவைத் தேடாமல் யார் யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு முஸ்லிம் அன்பர் ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகளிடம் போய் நல்ல குருவை எப்படி, எங்கே போய்த் தேடுவது?” என்று கேட்டாராம். அதற்கு ஸ்ரீஸ்வாமிகள் நீங்கள் தீவிர எண்ணத்தோடும் பக்தியோடும் குருவைத் தேடினீர்களானால் உங்கள் எதிரிலேயே குரு நிற்பார்என்றாராம். உடனே அவருக்குத் திடீரென மனத்தில் தோன்றி ஸ்ரீஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து என்னை மன்னியுங்கள். நான் தவறாகக் கேட்டு விட்டேன். என்னை உங்கள் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளுங்கள்என்றாராம். ஸ்ரீஸ்வாமிகளும் அவரை ஆசீர்வதித்தாராம். அந்த மாதிரி நாமும் தீவிர எண்ணத்துடனும் பக்தியுடனும் மனப்பூரவமாகத் தேடினால் நமக்கும் கிடைப்பார். நாமும் முன்னேற முடியும்.

கடைசியாக குருவின் மகிமையைப் பற்றி ஒரு ஸ்லோகத்தில் (த்ருஷ்டாந்தோ நைவத்ருஷ்ட: த்ரிபுவனஜடரே... என்று) கூறியிருப்பதை இங்கு ஞாபகப்படுத்துவது அவசியமாகிறது.
இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல குருவிற்கு மட்டும் உதாரணமே சொல்ல முடியாது. முன்காலத்தில் சந்திரகாந்தக்கல் என்று ஒன்று இருந்ததே அதை குருவுக்கு உதாரணமாக சொல்லலாமா என்றால் அதுவும் சரியாக வராது. ஏனென்றால் சந்திரகாந்தக் கல் என்பது இரும்பைக் கூட தங்கமாக மாற்றக்கூடிய சக்தி படைத்தது. அந்த மாதிரி குருவும் சிஷ்யரை நல்ல நிலைக்கு உயர்த்தி விடுவாரே. ஆகையால் குருவானவர் சந்திரகாந்தக் கல் மாதிரி என்று சொல்லிவிடலாமென்றால் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் சந்திரகாந்தக் கல்லால் தங்கமாக்கப்பட்ட இரும்பு தங்கமாகத்தான் இருக்குமே தவிர அது சந்திரகாந்தக் கல் ஆகாது. அதாவது அந்தத் தங்கத்துக்கு வேறோர் இரும்பைத் தங்கமாக்கக் கூடிய சக்தி இல்லை. ஆனால் ஒரு நல்ல குருவால் முன்னேற்றி விடப்பட்ட ஒரு சிஷ்யர் தானும் ஒரு நல்ல குருவாக ஆகக்கூடிய சக்தியைப் பெற்று விடுகிறார். ஆகையால் அந்த உதாரணமும் சரிவராது என்று சொல்லி குருவுக்கு நிகர் குருதான் என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.

அந்தமாதிரி நம் ச்ருங்கேரி சாரதா பீடத்தில் வழிவழியாக வருகிற ஒவ்வொரு குருவும் நம் முன்னேற்றத்திற்காக இருக்கிறார். அவரை அண்டி நாம் அனைவரும் நற்கதி அடைவோமாக.

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்


Sunday, 10 January 2016

ஸாம்பாஷ்டகம்

ஸாம்பாஷ்டகம்
மஹான்கள் எனப்படுவோர் இதர உயிர்கள் அனைத்தையுமே உய்விக்கச் செய்ய வேண்டுமெனும் இயற்கையான அவா மிகுந்தவர்களாவர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34-ஆவது ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் இத்தகைய மஹானுபாவர் ஆவார். இறைவனைச் சரணடைந்தால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிட்டும் என்பதை இடைவிடாது ஜனங்களுக்கு உபதேசித்து வந்தவர் இவர். பற்பல தெய்விக ஸ்தோத்திரங்களைப் புனைந்தருளிய இவரது "ஸாம்பாஷ்டகம்" எனும் ஸ்தோத்திரமானது மிக அற்புதமான ஒன்று. ஸம்ஸாரப் பிணியினின்று விடுபட விழையும் அனைவராலும் தவறாது பாராயணம் செய்யப்பட வேண்டிய இவ்வுயர்ந்த ஸ்லோகம் கீழே தரப்பட்டுள்ளது.

ஸந்த: புத்ரா: ஸுஹ்தே உத வ: ஸத்களத்ரம் ஸுகேஹம்
வித்தாதீசப்ர திமவஸுமான் போபவீது ப்ரகாமம் |
ஆசாஸ்வாஸ் தாமம்ருதகிரண ஸ்பர்த்தி கீர்த்திச்சடா வா
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நல்ல புத்திரர்கள், நண்பர்கள், அனுகூலமான மனைவி, எல்லாப் பொருள்களும் நிறைந்த அழகிய வீடு, குபேரனுக்குச் சமமான ஐஸ்வர்யம், எண் திசைகளிலும் பரவிய நற்கீர்த்தி ஆகியவை உள்ள போதிலும் மனிதனுக்கு உயிர் போகும் தறுவாயில் அவற்றால் பயனில்லை. இவற்றில் ஒன்றாவது இவனைக் காப்பாற்றாது. அக்காலத்தில் மிருத்யுஞ்ஜயரான ஸாம்ப பரமேச்வரர் ஒருவரால்தான் உதவிபுரிய முடியும். ஆயுள் காலத்தில் எத்தனை பொருள்களைச் சேகரித்த போதிலும் சாகும்பொழுது எல்லாவற்றையும் விட்டுப்பிரிந்து தனியாகத்தான் செல்லவேண்டும்.
தான் கஷ்டப்பட்டு ஸம்பாதித்த பொருள்கள் மூலம் ஸத்கதியை அடையமுடியாது. முன்னதாகவே பக்தியுடன் ஸாம்ப பரமேசுவரனைச் சரணடைந்தால் அவர் தமது கருணையினால் மரண சமயத்தில் உனக்கு உதவி செய்து ஸத்கதியை அடையச்செய்வார். எப்பொழுதும் ஸாம்பனை பஜிக்கவேண்டும்.
ஸாம்ப என்ற பதத்திற்கு அம்பிகையுடன் கூடியவர் என்று பொருள். ஸாம்ப பரமேசுவரனை நாம் ஸ்மரித்தால் கருணையே வடிவம் கொண்ட ஜகன்மாதா குழந்தைகளான நாம் படும் துன்பங்களைப் போக்கி சாவற்ற நிலையளிக்கும்படி பரமேசனிடம் சிபாரிசு செய்வாள்.

வாதே ஸர்வானபி விஜயதாம் ஸத்ஸபாயாம் ந்ருபாக்ரே
போகான் ஸர்வான் அநுபவது வா தைவதைரப்யலப்யான் |
பூமௌ நீரே வியதி சரிதும் வர்ததாம யோகசக்தி:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

மஹாராஜாவின் முன்னிலையில் பெரிய வித்வத் ஸதஸ்ஸில் வாதத்தில் எல்லாப் பண்டிதர்களையும் ஜயிக்கும் படியான கல்வித்திறமை பெற்றும் பலனில்லை. ஸ்வர்க்க லோகத்தில் தேவதைகளுக்கும் கிடைக்காத அரிய போகங்களை இவ்வுலகில் அனுபவித்ததனாலும் பலனில்லை. நினைத்த மாத்திரத்தில் பூமியில் எங்கும் செல்வதற்கும், தண்ணீரின் மேலே நடப்பதற்கும், ஆகாசத்தில் சஞ்சரிப்பதற்கும், யோக சக்தியால் திறமை பெற்றிருந்தாலும் பலனில்லை. அந்த்யகாலத்தில் இவை காப்பாற்றாது. ஸாம்பன் ஒருவன்தான் மிருத்யுவிடமிருந்து காப்பாற்றுவான்.

ரூபம் வாஸ்தாம் குஸும விசிகாகர்வ கர்வாபஹாரி
சௌர்யம் வாஸ்தாமமாபதி ஸம்க்ஷோப தக்ஷம் நிதாந்தம் |
ப்ருத்வீபால ப்ரவர மகுடாகட்டணம் ஸ்யாத் பதே வா
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

தானே அழகிற் சிறந்தவன் என்று புஷ்ப பாணனான மன்மதன் கொண்டுள்ள கர்வத்தைப் போக்கும்படியாக, அவனைவிட மேலான அழகைப் பெற்றும் பயனில்லை. பலசாலிகளில் சிறந்தவனான தேவேந்திரனுடைய மனத்தையும் கலங்கச்செய்யும்படியாக, அதிகமான வீர்யம் அடைந்தும் பயனில்லை. மரணகாலத்தில் இவை உதவி செய்யாது. ஸாம்பன் ஒருவன்தான் உதவி செய்வான்.

கேஹே ஸந்து ப்ரவரபிஷஜ: ஸர்வரோகாபநோதா:
தேசே தேசே பஹுதநயுதா பந்தவ: ஸந்து காமம் |
ஸர்வே லோகா அபி வசநதோ தாஸவத் கர்ம குர்யு:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

எந்த வியாதி வந்தாலும், உடனே அதைப் போக்குவதில் திறமை வாய்ந்த சிறந்த வைத்யர்கள் வீட்டிலேயே இருந்தாலும் மரணத்திலிருந்து தப்பமுடியாது. எல்லா தேசங்களிலும் ஏராளமான ஐசுவர்யம் படைத்த உறவினர்கள் இருந்தாலும் அவர்களாலும் காப்பாற்ற முடியாது. தான் வாய் அசைத்த மாத்திரத்தில் உலகில் உள்ள எல்லா ஜனங்களும் வேலைக்காரர் போல் ஊழியம் செய்தாலும் பலனில்லை. அந்த்ய காலத்தில் இவையெல்லாம் பிரயோஜனப்படாது. ஸாம்பன் ஒருவன்தான் உதவி செய்வான்.

அத்யாஸ்தாம் வா ஸுமணிசுசிதம் திவ்யபாரீண (ந்த்ர) பீ
ஹஸ்த்யச்வாத்யைரபி பரிவ்ருதோ த்வாரதேசோsஸ்து காமா |
பூஷ்யந்தாம் வாபரணநிவஹைரங்ககான்யர்க்க சூன்யை:
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நவரத்னங்கள் இழைத்த திவ்ய ஸிம்மாசனத்தில் அமர்ந்து மஹாராஜாவாக விளங்கினாலும் தன் அரண்மனை வாசலில் எப்பொழுதும் யானைகள், குதிரைகள் முதலிய ஸைன்யங்கள் நின்றாலும், தனது சரீரத்தில் எல்லா அங்கங்களிலும் விலைமதிக்கமுடியாத ஆபரணங்களை அணிந்திருந்த போதிலும் மரணசமயத்தில் யமனிடமிருந்து தப்ப முடியாது. அப்பொழுது ஸாம்ப பரமேசுவரன்தான் உதவி செய்வார்.

தத்தாம் மூர்த்னி ப்ரவரமணிபிர் ஜுஷ்டதீவ்யத் கிரீடம்
வஸ்தாம் தேஹம் விவிதலஸனைர் ஹேமஸூத்ராவபத்தை: |
ஆருஹ்யாஸௌ விசரது புவம் திர்யகாந்தோனிகாம் வா
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நவரத்னங்கள் இழைத்த மிகுந்த ஒளியுடன் கூடிய திவ்ய கிரீடத்தை சிரஸில் அணிந்திருந்தாலும், ஸ்வர்ண ஜரிகைகளாலேயே நெய்யப்பட்ட பல தினுஸான பொன்னாடைகளை சரீரத்தில் தரித்திருந்த போதிலும், அட்டப்பல்லக்கில் ஏறி பூமி முழுவதும் சுற்றிவந்த போதிலும், சாகுந்தறுவாயில் இவையெல்லாம் உதவி செய்யாது. ஸாம்பன்தான் உதவி செய்வான்.
பட்டணப்பிரவேசத்தில் பல்லக்கைக் குறுக்காக எடுத்துச் செல்வது ஒரு விசேஷ மரியாதை. இது சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு மஹாராஜர்களால் அளிக்கப்பட்ட அஸாதாரண மரியாதையாகும்.

ஸர்வாசாந்த ப்ரகடிதரவைர் பந்திபி: ஸதூயதாம் வா
பேரீ டக்கா ப்ரமுகபிருதம் திக்ஷூ தந்த்வன்யதாம் வா |
ப்ருத்வீம் ஸர்வாமவது ரிபுபி: க்ராந்தபாதாக்ரபீட:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

ஸ்துதி பாடகர்கள் பூமியில் எல்லா திசைகளிலும் கடைசி வரை சென்று எங்கும் இவன் புகழைப் பாடினாலும் பலனில்லை. இவனுடைய திக்விஜயத்தைக் காட்டுவதற்காக எங்கும் பேரி டக்கா முதலான வாத்யங்கள் முழங்கினாலும் பிரயோஜனமில்லை. சத்ருக்கள் யாவரும் யுத்தத்தில் தோல்வியடைந்து இவன் பாதங்களை வைக்கும் பீடத்தில் சிரஸ் உராயும்படி வணங்கினாலும், பூமி முழுவதையும் ஆண்டாலும் எல்லாம் வியர்த்தமே. சாகும் தறுவாயில் ஸாம்பன் ஒருவனே உதவிசெய்வான்.

ஹ்ருத்யாம் பத்யாவளிமபி கரோத்வர்த்த சித்ரம் ஸுகாவ்யம்
ஷட்சாஸ்த்ரேஷ்வப்யமித திஷணோ க்ரந்த ஸந்தோஹ கர்த்தா |
ஸர்வேஷாம் ஸ்யாதமித ஹ்ருதயாநந்ததோ வாங்முகைர் வா
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

மனத்தை இன்புறச் செய்கின்ற சுலோகங்களையும் பாட்டுகளையும் விசித்திரமான கருத்துகள் நிறைந்த காவியங்களையும் இயற்றினாலும், ஆறு சாஸ்திரங்களிலும் எல்லையற்ற அறிவுத்திறனுடன் பற்பல நூல்களை இயற்றினாலும், கேட்பவர் யாவருடைய மனத்திலும் அளவற்ற ஆனந்தத்தை உண்டுபண்ணும்படியாக சொற்பொழிவு ஆற்றினாலும் பலனில்லை. மரணத்தறுவாயில் ஸாம்ப பரமேசுவரர் ஒருவரே உதவி செய்பவர். இந்த ஸ்தோத்திரத்திலிருந்து உலக போகங்களிலும் பீடாதிபத்யத்திலும் உபசரணைகளிலும், கௌரவத்திலும் ஸ்ரீ ஜகத்குருவின் மனம் கொஞ்சமும் ஈடுபடவில்லை என்பது நன்கு புலனாகிறது.

Wednesday, 6 January 2016

ஸ்ரீமத் ஆசார்யாள் அருளிய ஸமஸ்யா பூரணம்.

ஸ்ரீமத் ஆசார்யாள் அருளிய ஸமஸ்யா பூரணம்.


சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் 34ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீஸ்ரீ சந்திர சேகர பாரதி மஹாஸ்வாமிகள் மஹா மேதையாவார். இணையற்ற ஸம்ஸ்க்ருத பண்டிதராகிய ஸ்வாமிகள் தம் புலமையினால் இதர பண்டிதர்களை மெய் சிலிர்க்க வைத்திட்ட தருணங்கள் பற்பல. உதாரணத்திற்கு 'ஸமஸ்யா பூரணம்' என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காவது பாதத்தை மாத்திரம் சொல்லி அதன் அர்த்தத்திற்குப் பொருந்தும்படி மற்ற மூன்று பாதங்களையும் ரசனை செய்து கொடுக்கவேண்டியது என்பது ஸமஸ்யா பூரணம் என்பதன் தாத்பர்யம். சில ஸமயங்களில் நான்காவது பாதத்திற்கே அர்த்தம் புரியாமல் கொடுத்துவிடுவார்கள். அதையும் ஸமர்த்தனம் செய்து கொண்டு மற்ற மூன்று பாதங்களையும் கல்பிக்கவேண்டுமானால் மேதையும் கவிதா சக்தியும் விசேஷமாக இருந்தாலன்றி முடியாது. ஸ்ரீமத் ஆசார்யார் பால்யத்தில் இவ்விதமான ஸமஸ்யா பூரணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு நான்காவது பாதத்தின் அர்த்தம் "மலடிமகன் தன் தாயாரை இடைவிடாமல் பார்த்துக்கொண்டு சிரிக்கிறான் " என்று ஆகிறது. மலடி மகனே கிடையாது, அவனுக்குத் தாயார் இருந்தால் அவள் மலடியாயிருக்கமுடியாது. அவளே இல்லாத போது பார்க்கிறது எப்படி? சிரிக்கிறது எப்படி? இதை ஸ்ரீமத் ஆசார்யார் பின்வருமாறு ஸமர்த்தனம் செய்தார்கள்:-

மோக்ஷ: கர்மைகலப்ஸ்த்வத சிதிஸஹிதாத் கர்மணோ வ யதி ஸ்யாத்
ஞானம் ஸ்ரீதேசிகேந்த்ரப்ரவரகுருக்ருபா பூர்ணவீக்ஷாம் விநா ஸ்யாத்|
கர்மானுஷ்டானமுஜ்ஜன் ஜந இஹ லபதே சித்தசுத்திம் ததா வை
வந்த்யாஸூநூ: ஸ்வமாதுர் முகமநவரதம் வீக்ஷ்ய ஹாஸம் கரோதி||

“மோக்ஷம் என்பது கர்மாவினாலேயே கிடைக்கக்கூடியது என்றோ, ஞான(உபாஸன)த் தோடு சேர்ந்த கர்மாவினால் கிடைக்கக்கூடியது என்றோ ஏற்பட்டதேயானாலும், உபதேசம் செய்ய வல்லமையுள்ள குருச்ரேஷ்டரின் பரிபூர்ண கிருபா கடாக்ஷம் இல்லாமலேயே ஞானம் ஏற்படுமானாலும், கர்ம அனுஷ்டானத்தை விட்டுவிட்ட ஒரு மனிதன் மனத்தூய்மையை அடைவானாகிலும், அப்பொழுது மலடி மகனும் தன் தாயாரின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டு சிரிப்பான்.

(சமத்காரமாகச் சொல்லும் இந்த சுலோகத்தில் எத்தனை சாஸ்திரார்த்தங்களை ஸ்ரீமத் ஆசார்யார் அடக்கியிருக்கிறார் என்பதை நன்கு கவனிக்க வேண்டும். கர்மாவினாலேயே மோக்ஷம், அல்லது ஞான கர்ம ஸமுச்சயத்தினால் மோக்ஷம், என்பது ஒரு நாளும் ஸாத்தியமாகாது. மோக்ஷத்திற்கு ஸாதனம் ஞானம்தான். அதுவும் பரிபூர்ணமாயுள்ள குரு கிருபை இருந்தால்தான் ஏற்படும். அவ்விதம் குரு கிடைக்கவும், அவரை அண்டி உபதேசம் பெறவும், அவ்வுபதேசத்தை நன்கு கிரஹிக்கவும், மனஸ் அதிபரிசுத்தமாயிருந்தாலன்றி முடியாது. அந்த பரிசுத்தத் தன்மை ஏற்படவேண்டுமானால் சாஸ்திர விஹிதமான கர்மாக்களை அநுஷ்டித்தே தீரவேண்டும். இவ்விதமாக கர்மா மோக்ஷத்திற்கு ஸாக்ஷாத்தாக காரணமாகாமல் போனாலும் சித்த சுத்தியை உண்டாக்குவது மூலமாய் பரம்பரையாக் காரணமாகிறது.)

இன்னொரு ஸமயம் "பர்த்தா பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒருத்தி ஆசையோடு மாமனாரை ஆலிங்கனம் செய்து கொண்டாள்" என்ற அர்த்தமுள்ள நான்காவது பாதம் கொடுக்கப்பட்டபோது ஸ்ரீமத் ஆசார்யார் இவ்விதம் ஸமர்த்தனம் செய்தார்கள்:-

சிதே புண்யே க்ஷீணே சசினி ககநே ராஜதி தத:
ஸமுத்ரே தாரா காப்யபதத் இதமுத்வீக்ஷ்ய கவய: |
வதந்த்யேவம் லோகே ரஸிக ஹ்ருதயாஹ்லாதனகரா:
புர: பத்யு: காமாத் ச்வசுரமியமாலிங்கிதவதீ ||

சேர்த்துவைத்த புண்ணியம் தீர்ந்தவுடன் அதுவரை நக்ஷத்திர ரூபனாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போதே ஆகாசத்திலிருந்து ஸமுத்திரத்தில் விழுந்து விடுகிறான். இதை நன்கு கவனித்த கவிகள் ரஸிகர்களுடைய மனதிற்கு ஸந்தோஷத்தைக் கொடுக்க உத்தேசித்து இவ்விதம் உலகில் வர்ணிக்கிறார்கள்.

நக்ஷத்திரம் என்பதற்கு ஸ்த்ரீலிங்கத்தில் உள்ள தாரை என்ற சப்தத்தை எடுத்துக்கொண்டால் தாரா நாயகரென்று சொல்லப்படும் சந்திரன் பர்த்தாவாக ஆகிறான். அந்த சந்திரன் பிறந்த இடம் ஸமுத்திரமானதனால், ஸமுத்திரம் தாரைக்கு மாமனாராவார். சந்திரன் ஆகாசத்தில் பிரகாசித்துக்கொண்டேயிருந்தும் அவரை விட்டுவிட்டுக் கீழே உள்ள ஸமுத்திரத்தில் தாரை பாயவேண்டுமானால் ஸமுத்திரத்தனிடத்தில் அதிக ப்ரீதி இருப்பது போல் தோன்றும். இக்கருத்தையனுஸரித்து “பர்த்தாவிற்கு முன்னாலேயே ஆசையோடு ஒருத்தி மாமனாரை ஆலிங்கனம் செய்தாள் என்று.”

இந்த சுலோகத்திலும் கர்மா செய்து அடையக்கூடிய பதவி எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதற்கு ஒருநாள் அழிவு உண்டென்பதை ஸ்ரீமத் ஆசார்யார் ஞாபகப்படுத்துகிறார். (2)
“கொழுந்துவிட்டெரிகிற தீயின் நடுவில் தாமரைகள் மலருகின்றன" என்று நான்காவது பாதம் சொன்னால் இது ஸாத்தியமேயில்லாத கார்யமல்லவா என்று தோன்றும். அப்படியும் ஒரு காலத்தில் மலர்ந்தன என்பதைக் காட்டுகிறேன் என்கிறார் ஸ்ரீமதாசார்யார்.

அமருக ந்ருப மந்த்ரி ப்ரேரிதைர் தூதவர்கை:
ஸுஷிர நிஹித தேஹே வஹ்நிநா தீப்யமாநே|
வதந நயந பாதாதீனி யோகீந்த்ரராஜ:
ஜ்வலித தஹந மத்யே பங்பஜான் யுல்லஸந்தி||

ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யார் விசுவரூப மண்டன மிச்ரரை வாதத்தில் ஜயித்த பிற்பாடு உபயபாரதீ என்றும் ஸரஸவாணீ என்றும் சொல்லப்பட்டுவந்த அவர் பார்யை, “தன்னையும் ஜயித்தால்தான் பர்த்தா பூராவும் ஜயிக்கப்பட்டவராவார்” என்று சொல்லவே அவளுடன் வாதத்திற்கு ஆரம்பித்து எதற்கும் ஸ்ரீமத் ஆசார்யார் தக்கபடி பதில் சொல்லி வருவதைக்கண்டு அவருக்குப் பரிச்சயமில்லாத காம சாஸ்திரத்தில் கேட்க ஆரம்பித்தாள். “இதற்கும் பதில் சொல்கிறேன், ஆனால் கொஞ்சநாள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று ஆசார்யாள் அவளிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி ஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில் அமருகன் என்ற அரசன் இறந்து போய் அவன் உடலை அந்த்ய ஸம்ஸ்காரத்திற்காக ஸ்மசானத்திற்கு எடுத்துக்கொண்டு போயிருக்கும் விவரம் அறிந்து தன் யோகசக்தியினால் ஸ்ரீமத் ஆசார்யார் அந்த சரீரத்துக்குள் பிரவேசித்துக்கொண்டார். உடனே அரசனுக்கு உயிர் வந்து விட்டதாக மறுபடியும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சரீரத்தில் இருக்கும்போது காமசாஸ்திர ஸூக்ஷ்மங்களை அறிந்து கொள்ள ஸௌகர்யம் கிடைத்தது.

அரண்மனையிலிருந்த ஸ்திரீகளும் முன் இருந்த அரசனுக்கும் இப்பொழுதுள்ள அரசனுக்கும் நிறைய வித்யாஸமிருப்பதைக்கண்டு இவர் யாரோ மஹான், இந்த சரீரத்தில் நுழைந்திருக்கிறாரென்று ஊகித்துக்கொண்டு அவருடைய நிஜமான சரீரம் எங்கேயாவது இருக்கும், அதை எரித்துவிட்டால் இங்கேயே தங்கிவிடுவார் என்று ஆலோசனை செய்து அவ்வித சரீரம் அகப்பட்டால் உடனே எரித்துவிடும்படி உத்தரவு செய்து தூதர்களை அனுப்பினார்கள். அவர்கள் பல இடங்களில் தேடி, கடைசியாக ஸ்ரீமத் ஆசார்யாருடைய சரீரத்தையே கண்டுபிடித்து அதை எரிக்க ஆரம்பித்தார்கள். முன்னதாக சிஷ்யர்கள் ஓடிப்போய் நகரத்திலுள்ள அரசனுக்கு காதில் படும்படியாக மறைமுகமாக சில வார்த்தைகள் சொன்னார்கள். அதைக்கேட்டதும் ஸ்ரீமத் ஆசார்யார் அந்த உடலை விட்டு, தன் உடலுக்கு வந்து அங்கு அக்னியால் ஏற்பட்ட தாபத்தை நீக்கி அருளும்படி ஸ்ரீலக்ஷ்மீநரஸிம்மஹரை ப்ரார்த்தித்தன் பேரில் அப்படியே அக்னியால் எவ்வித துன்பமும் ஏற்படாமல் வெளிக்கிளம்பினார். இந்தக் கதை சங்கர விஜயங்களில் காண்கிறது. இதையே இந்த சுலோகத்தில் கண்டிருக்கிறது.

‘அமருக ராஜனுடைய மந்திரிகளால் ஏவப்பட்ட தூது கோஷ்டிகள் குகையிலிருந்த சரீரத்தை நெருப்பினால் எரிக்கையில், யோகி சிரேஷ்டர்களுக்கெல்லாம் அரசரான ஸ்ரீமத் சங்கர பகவத்பாதரின் முகம் (ஆகிற கமலம்) கண்கள் (ஆகிற கமலம்) பாதங்கள் (ஆகிற கமலம்) முதலான கமலங்கள் எல்லாம் எரிகிற அக்னியின் மத்தியில் நன்கு மலர்ந்து பிரகாசித்தன.’

(ஸ்ரீலக்ஷ்மீநரஸிம்ஹ தியானம் செய்யும்போது ஹ்ருதய கமலம் மலரும். வாயால் ஸ்தோத்திரம் செய்யும்போது முக கமலம் விகஸிக்கும். கைதூக்கிவிட வேண்டும். “மம தேஹி கராவலம்பம்” என்று பிரார்த்திக்கையில் கையை நீட்டும்போது புஜகமலம் பிரகாசிக்கும். பிரார்த்தனை முடிந்து கண்களைத் திறக்கும்போது நயன கமலங்கள் சோபிக்கும். பிறகு அக்னியிலிருந்து வெளிக்கிளம்பும்போது பாதாரவிந்தங்கள் தென்படும். இவ்விதமாக பல கமலங்கள் அக்னியிலிருந்து மலர்ந்து வெளிவந்திருந்திருக்கின்றன.)

‘எப்படி பல்லைப்பிடுங்கின பாம்புகள் பின்னால் மிகவும் துக்கப்படுமோ’ என்ற அர்த்தத்தைக் கொண்ட நான்காவது பாதத்திற்குத் தக்கபடி மற்ற மூன்று பாதங்களில் இதை திருஷ்டாந்தமாக வைத்து விஷயம் சொல்லவேண்டும்.

தேஹேபூர்வம் த்ருடே யே நிகில விஷய நிஷ்கம்ப போகைகசீலா:
ஆஸன் ஸர்வேந்த்ரியேஷு ப்ரதிஹதபடுதேஷ்வங்ககே சக்திசூன்யே |
தேsக்னௌ துந்தே ச மந்தேப்யவிஜிதஹ்ருதயா போகலாபைகலோபா:
சேகித்யந்தே ச பச்சாதபஹ்ருதாதநா கூடபாதா யதா வா ||

எவர்கள் முன்னால் சரீரம் திடமாக விருக்கும்போது எல்லா விஷயங்களையும் கொஞ்சமேனும் ஸங்கோசமில்லாமல் அனுபவிப்பதையே ஸ்வபாவமாகக் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களுக்குப் பின்னால் ஸகலவிதமான இந்திரியங்களும் ஸாமர்த்தியமற்றுப் போய் சரீரத்தில் சக்தியில்லாமலும் வயிற்றில் ஆஹாரத்தை ஜீரணிப்பதற்குக்கூட அக்னி மிகவும் மந்தமாயும் இருக்கையிலும் கூட மனத்தில் தோன்றும் ஆசைகளை ஜயிக்காதவர்களாகவும் விஷய சுகத்தையடைவதிலேயே துராசையுள்ளவர்களாகவும் இருந்து கொண்டு அவர்கள் பல்லைப் பிடுங்கின 
பாம்புகள் எப்படியோ அப்படியே மிகவும் துக்கத்தை அடைவார்கள்.

“மஹான்கள் எடுத்துக்கொண்ட கார்யம் நிறைவேறுவதற்கு அவர்களுடைய சொந்த பலம் வேண்டியதே தவிர, இதர ஸாதனங்களாகிய பக்க பலங்களை அபேக்ஷிக்கிறது கிடையாது” என்கிற தத்வத்தைக் கூறும் நான்காவது பாதத்திற்குத் திருஷ்டாந்தமாக ஸ்ரீமத் சங்கரபகவத்பாதரையே ஸ்ரீமத் ஆசார்யார் குறிப்பிடுகிறார்:-

ந சஸ்த்ரம் நோ வாஸ்த்ரம் ந ஸமார ரதோ நைவ ச படா:
ந ஹஸ்தீ நாப்யச்வ: ததபி பகவான் சங்கர குரு: |
விஜிக்யே ஸர்வானப்யஹ ஸ விமலாத்வைத வசஸா
க்ரியா ஸித்தி: ஸத்வே பவதி மஹதாம் நோபகரணே ||

“சஸ்திரம் இல்லை. அஸ்திரமும் இல்லை. யுத்தத்திற்கு வேண்டிய ரதமும் இல்லை. ஸைநிகர்கள் இல்லை. யானையும் இல்லை. குதிரையும் இல்லை. அப்படியிருந்தும் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்யார் சுத்தமான அத்வைதத்தைக்கூறும் வார்த்தையினால் எல்லாரையும் ஜயித்தாரே! என்ன ஆச்சர்யம்! மஹான்களுக்கு கார்யம் நிறைவேறுவது அவர்களுடைய பலமிருந்தால் ஏற்படும், வேறு ஸாதனங்களால் ஏற்படுகிறது என்பதில்லை."

(இவ்விதமாக விளையாட்டாகச் சொல்லியிருக்கும் சுலோகங்களில் கூட ஸகல சாஸ்திர ஸித்தாந்தத்தையும் ஸ்ரீமத் சங்கர பகவத்பாதரிடமிருந்த விசேஷ பக்தியையுமே ஸ்ரீமத் ஆசார்யார் வெளியிட்டிருக்கிறார்.)