நமக்குச் சரணம் குருபாதுகையே
ஜெகத்குருஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயேநம:||
நம் மடத்தில் ஒவ்வொரு குருவுக்கும் தம் தின நித்ய அனுஷ்டானம் ஆன உடனே முதல் வேலை குரு பாதுகையின் ஆராதனை. நம்ம குரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராபர குரு, எல்லாரும் கூட ப்ராத ஆஹ்னிகம் ஆன உடனேயே குருபாதுகையை பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குருபாதுகையைத் தலை மீது வைத்துக் கொண்டு ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை நாம் இப்பொழுது இங்கு சொல்கிறோம்.
சரணம் நபவதி ஜனனீ, நபிதா, நஸுதா, நஸோதரா: நான்யே |
பரமம் சரணம் இதம் ஸ்யாத் சரணம் மம மூர்த்னி தேசிகன்யஸ்தம் ||
இந்த லோகத்தில் “சரணம் ந பவதி ஜனனீ, ந பிதா, ந சுதா:, ந சோதரா: நான்யே” - நமக்கு வேறு யாரும் சரணம் ஆக மாட்டார்கள். ஆச்ரயம் கொடுக்க மாட்டார்கள். நமக்கு ஏக மாத்திர சரணம் யார் என்றால் நம் தலை மீது இருக்கும் குருவின் பாதுகைதான். இதன் அபிப்ராயம் என்ன? - நமக்கு யாரும் சரணம் கொடுக்க மாட்டார்கள் என்றால் - தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மக்களும் இல்லை, அண்ணன் தம்பியும் இல்லை, குருபாதுகை ஒன்று தான் என்பதில் உள்ள அபிப்ராயம் என்ன? அப்படியானால் இவர்கள் யாரிடத்திலிருந்தும் நமக்கு ப்ரயோஜனம் ஆகாது, உபகாரம் ஆகாது என்றா? இல்லை. அவர்களிடமிருந்தும் உபகாரம் ஆகும். தந்தை, தாய், அண்ணன், தம்பி, மக்கள், உறவினர்கள் எல்லாரும் நமக்கு உபகாரம் செய்யக்கூடியவர்களே. இவர்களிடமிருந்து உபகாரம் ஆகாது என்று இல்லை. ஆனால் நமக்கு பரமோபாகாரம் என்பது அந்தத் தலை மீது இருக்கும் குருபாதுகையினால் தான். உபகாரம் என்றால் என்ன? பரமோபகாரம் என்றால் என்ன?
உபகாரம் என்றால் லௌகீகமான ப்ரயோஜனம். பரமோபகாரம் என்றால் ஸாஸ்வதமான ப்ரயோஜனம். லௌகீக ப்ரயோஜனம் இவர்கள் எல்லாரிடமிருந்தும் நமக்குக் கிடைக்கும். ஆனால் ஸாஸ்வதமான ப்ரயோஜனம் என்னவோ அது இவர்களிடமிருந்து ஆகாது.
அது என்ன ஸாஸ்வதமான ப்ரயோஜனம்? என்றால் மோக்ஷமே ஸாஸ்வதமான ப்ரயோஜனம். மனுஷ்யனுடைய ஜீவனத்திற்கு பரம லக்ஷ்யமானது மோக்ஷம். அந்த மோக்ஷத்தை ஸாதித்தால் தான் நாம் க்ருதார்த்தர்கள் ஆவோம். அது இல்லை என்றால், நாம் வேறு எதை ஸாதித்தாலும் க்ருதார்த்தர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. வேறு எதை ஸாதித்தாலும் நமக்கு வேறு ஜன்மம் கண்டிப்பாக உண்டாகிவிடும். மோக்ஷம் ஸாதித்தால் மட்டும் மறு ஜன்மம் உண்டாகாது.
அதைப் பற்றி பகவத்பாத சங்கரர் அனாத்மஸ்ரீ விக்ரஹணம் என்ற சின்ன ஸ்லோகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் இந்த ஆத்மஸாக்ஷாத்காரம் விட்டு எதை சாதித்து ப்ரயோஜனம் என்ன என்று சொல்கிறார்.
விஷ்ணோர்லோக விக்ஷிதோ வா தத: கிம் |
சம்போர்லோகஸ் சசிதோவா தத: கிம் |
ஏவ ஸ்வாத்மானைவ ஸாக்ஷாத்க்ருதோ பூத் ||
நான் வைகுண்டம் பார்த்திருக்கிறேன், கைலாசம் பார்த்திருக்கிறேனென்றாலும் திரும்பவும் இந்த லோகத்திற்கு வரத்தானே வேண்டும்? அதனால் அதை பரம லக்ஷ்யம் என்று சொல்ல முடியாது. ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஆனால் தான் முக்தி. ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிடைக்க வேண்டுமானால் அது ஸத்குருவினால் தான் முடியும். அதனால் தான் குருபாதுகை நமக்கு பரமோபகாரம் ஆகும் என்பதால் “பரமம் சரணம் இதம் ஸ்யாத், சரணம் மம மூர்த்னி தேசிகன்யஸ்தம்”.
நம் தலை மீது இருக்கும் குருபாதுகையே எனக்கு அத்யந்திகமான ஆஸ்ரயம் கொடுக்கக் கூடியது, என்று அர்த்தம் சொல்கிற இந்த ஸ்லோகத்தை ப்ரதி நித்யம் சொல்லிக் கொண்டு, குருபாதுகையைத் தலை மீது வைத்துக் கொண்டு, பிறகு பாதுகையை பூஜை செய்து, அதன் பிறகு அந்தப் பாதுகையை நமஸ்கரிப்பது சிருங்கேரி ஜகத்குருவின் தினப்படி க்ருத்யம் ஆகிறது.
இந்த குரு பாதுகையினால் நமக்கு என்ன என்ன அனுக்ரஹம் கிடைக்கும் என்பதை நம் பரமேஷ்டி குருவான ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் குருபாதுகா ஸ்தோத்திரத்தில் உத்திரவு கொடுத்திருக்கிறார்கள். அவர் “சமாதி ஷட்க ப்ரத வைபவாப்யாம் ஸமாதி தான வ்ரத தீக்ஷிதாப்யாம் ரமாதவாங்கிரி ஸ்திர பக்திதாப்யாம் நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்” என்று சொல்கிறார். சமாதி ஷட்கத்தைக் கொடுக்க வல்லது. சமாதியைக் கூட பாதுகையிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும். பகவானிடத்தில் பக்தி கூட அந்தப் பாதுகையின் ப்ரபாவத்தால் நமக்குக் கிடைக்கும்.
“சமாதி ஷட்கம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால் - வேதாந்தத்தை அப்யாஸம் செய்ய வேண்டுமானால் அதற்கு யாருக்கு அருகதை இருக்கிறது? இந்தக் காலத்தில் ப்ரதி வொருவனும் வேதாந்தம் கற்றுக் கொள்கிறவனே. ஒவ்வொருவனும் வேதாந்தம் கேட்பவனே. ஆனால் வாஸ்தவத்தில் வேதாந்தம் அப்யாஸம் செய்ய யாருக்கு அருகதை அல்லது யோக்யதை அல்லது அதிகாரம் இருக்கிறது என்பதற்கு பகவத்பாத சங்கரர் உத்தரவு கொடுத்திருக்கிறார். யாருக்கு விவேகம் இருக்கிறதோ, வைராக்யம் இருக்கிறதோ, சமாதி இருக்கிறதோ, முமுக்ஷுத்வம் இருக்கிறதோ அவருக்குத் தான் வேதாந்த அத்யயனத்தில் அதிகாரம் இருக்கிறது.
இதில் சமாதி ஷட்கம் என்றால், சமம் முதல் ஆறு குணங்கள். அவை சம, தம, உபரதி, திதிக்ஷு, ஸ்ரத்தா, ஸமாதான. இந்த ஆறையும் ஸ்ருதி, உபநிஷத் சொல்கிறது. ஆக உபநிஷத்தில் “சாந்தோ தான்த: உபரிதிஸ்திதிக்ஷு ஸ்ரத்தா வித்த ஸமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவாத்மானம் பஸ்யேத்” என்று சொல்லியிருக்கிறது.
ஆக உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சாந்தோ, தாந்தோ என்ற ஆறு சமாதி ஷட்கம் என்பது.
அதில் ‘சம’ என்றால் மனசை நிக்ரஹம் செய்வது. அதாவது மனசைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. ‘தம’ என்றால் மனசைத் தவிர மற்ற இந்திரியங்களை நிக்ரஹம் செய்வது. இந்திரியங்களில் அந்தர் இந்திரியம், பஹிர் இந்திரியம் என்று இரண்டு வகை இருக்கிறது. பஹிர் இந்திரியம் என்றால் கண், மூக்கு, காது, நாக்கு, சருமம். அந்தர் இந்திரியம் என்றால் உள்ளே இருப்பது, அதாவது மனசு. அந்தர் இந்திரியக் கட்டுப்பாடும் வேண்டும். பஹிர் இந்திரியர்க் கட்டுப்பாடும் வேண்டும். அப்படி என்றால் மனசும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பஹிர் இந்திரியங்களான கண், மூக்கு, காது, நாக்கு, சருமம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மனோ நிக்ரஹத்திற்கு ‘சம’ என்றும், பஹிர் இந்திரிய நிக்ரஹத்திற்கு ‘தம’ என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
அடுத்தது திதிஷஸ. திதிக்ஷா என்றால் ஸகிப்புத்தன்மை. வெயில், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது. இதற்கு ‘த்வந்த்வ’ என்று ஸாஸ்த்திரம் சொல்கிறது. த்வந்த்வ, ஸஹிஷ்ணுதா என்று சொல்வார்கள். பசி, பயாக்னி என்பதைக் கூட த்வந்த்வ என்பார்கள். நமக்கு இது எதுவுமே ஸகித்துக்கொள்ள முடியாது. வெயில் ஜாஸ்தி ஆகிவிட்டால் ஆகாது. குளிர் ஜாஸ்தி ஆகிவிட்டாலும் ஆகாது. கொஞ்சம் தாகம் எடுத்தால் நீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் பசித்தால் ஏதாவது சாப்பிட வேண்டும். எதையும் சகித்துக்கொள்ள நமக்கு சக்தி இல்லை. இதை கேலியாகச் சொல்வார்கள். சிலருக்கு தீர்த்தம் குடித்தால் குளிர்ந்து விடும். ஆரத்தி எடுத்தால் உஷ்ணம் ஆகிவிடும் என்று. இக்காலத்து மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். த்வந்த்வ ஸஹிஷ்ணுதா என்பதே இல்லை. ஆனால் அக்காலத்து மஹாத்மாக்களுக்கு த்வந்த்வ ஸஹிஷ்ணுதா இருந்தது. அவர்கள் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் நின்று கொண்டு தபஸ் செய்வார்கள். இதற்கு திதிக்ஷா என்று பெயர். இந்த த்வந்த்வ ஸஹிஷ்ணுதா என்பதற்கே திதிக்ஷா என்று பெயர்.
‘ஸ்ரத்தா’ என்றால் - ஸாஸ்திரத்திலும், குருவின் வாக்கியத்திலும் அபாரமான விஸ்வாஸம். அதற்கு ‘ஸ்ரத்தா’ என்று பெயர்.
இது மாதிரி சம, தம, உபரதி, திதிக்ஷா, ஸ்ரத்தா, ஸமாதானா என்ற ஆறை ‘சமாதி ஷட்கம்’ என்போம். இவை ஆறும் யாருக்கு இருக்கிறதோ, அவர் வேதாந்த அத்யயனம் செய்வதற்கு அருகதை உடையவர். ஏனென்றால், அவருக்கு மனோ நிக்ரஹம் இருக்கிறது. த்வந்த்வ ஸஹிஷ்ணுதா இருக்கிறது, தாழ்மை இருக்கிறது, ஸ்ரத்தா இருக்கிறது என்பதால் வேதாந்த அத்யயனத்திற்கு உட்கார்ந்தால் மனசு அதிலேயே இருக்கும். மனசு நிக்ரஹம் இல்லாமல் வேதாந்தம் கற்றுக் கொள்ள உட்கார்ந்தால் மனசு அதில் இருக்காது. எங்கோ சென்றிருக்கும். அதற்கே ஒருவர் சொன்னார்,” நான் வேதாந்தம் கற்றுத் தருகிறேன் என்றால் நிறைய லௌகீகர்கள் வருகிறார்கள். உட்காருவார்கள். அதில் அவர்களுக்குப் பெருமை இருக்கும். நாங்கள் பங்களூரில் மடத்தில் கீதா பாஷ்யம் கற்றுக் கொள்கிறோம். அங்கு இராமச்சந்திர ஸாஸ்திரி அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் கேட்டேன் என்று என்னிடம் நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். இங்கு ஸாஸ்திரிகள் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஸாஸ்திரிகள் பாடம் முடிந்து எழுந்து செல்வார். அவர்களும் எழுந்து செல்வார்கள். ஆனால் அதில் மீந்தது என்ன? நான் ஸாஸ்திரிகளிடத்தில் கீதா பாஷ்யம் பாடத்திற்குப் போகிறேன் என்பது. அவ்வளவுதான். என்ன காரணம் என்றால், அவர்களுக்கு சமாதியே இல்லை. மனசு எங்கோ சென்றிருக்கும். அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் வேதாந்த அத்யயனத்திற்கு இந்த சமாதி ஷட்கம் வேண்டும் என்று ஸாஸ்திரம் சொல்கிறது. இது நமக்கு எப்படி அனுக்ரஹம் ஆகும் என்றால் குருவின் ப்ரபாவத்தின் அனுக்ரஹத்தால் ஆகும். அதனால் குரு பாதுகை நமக்கு சமாதி ஷட்கம் அனுக்ரஹம் செய்ய சக்தி உடையது என்பது போல் “சமாதி ஷட்க ப்ரதவைபாவாப்யாம்” என்பதாக ஸ்துதிக்கிறார், குரு பாதுகா ஸ்தோத்திரத்தில்.
“அனந்த சம்சார சமுத்ர தார நௌகாயிதாப்யாம்”
இந்த சம்சாரம் என்ற ஸாகரத்தைத் தாண்டுவதற்குப் படகு இந்த குருபாதுகை. நாம் எப்படி ஒரு படகின் மூலமாக ஒரு நதியையோ, சமுத்திரத்தையோ தாண்டுகிறோமோ, அதே போல் சம்சாரம் என்ற சமுத்திரத்தை குருபாதுகை என்ற படகை வைத்துக் கொண்டு தாண்ட முடியும். அதாவது ஸத்குரு நம்மை சம்சாரம் என்ற ஸாகரத்தைத் தாண்ட வைப்பார். அதாவது சம்சாரம் என்ற ஸாகரத்தை நாம் தாண்டுவதற்கு நமக்கு ஸத்குரு அனுக்ரஹம் செய்வார். அதே போல் இன்னொரு ஸ்லோகத்தில்,
“காமாதி ஸர்ப்ப வ்ரஜ பஞ்ஜகாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம் |
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்...”
காமக் க்ரோதாதிகள், லோபாதிகள் நம் மனத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றன. காமக்ரோதலோபங்களால் தான் நாம் கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறோம். அதனால் தான் நமக்கு ஸகல விதமான துக்கங்கள் வருகின்றன. இந்த காமக்ரோதாதிகள் நாசம் அடைய வேண்டுமானால் ஸத்குருவின் க்ருபை வேண்டும். குருபாதுகைகளுக்கு அத்தனை மகிமை இருக்கிறது. அப்படிப்பட்ட குருபாதுகைகளை நாம் ஆராதித்து வந்தால் காமக்ரோதாதிகள் நாசம் அடையும்.
அடுத்து “விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்”
விவேகம், வைராக்யம் குருபாதுகையின் மகிமையால் கிடைக்கும்.
“போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்”
மோக்ஷம் கூட குருபாதுகையின் மகிமையால் கிடைக்கும். ஒரு ஸ்லோகத்தில் “ஸ்வார்ச்சா பராணாம் அகிலேஷ்டதாப்யாம் ஸ்வாஹா ஸஹாயக்ஷ துரந்தராப்யாம்”
அதில் குருபாதுகா ஸ்தோத்திரத்தில் அந்த “ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்” என்ற வார்த்தைக்கு யாருக்கும் சரியாக ஆர்த்தம் தெரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அர்த்தம் அவ்வளவு குப்தமாக இருக்கிறது. இன்று குருபாதுகா அனுக்ரஹ என்ற ஸமாரம்பம் இருப்பதால் நான் இங்கு சொல்வதற்கு ஆசைப்படுகிறேன்.
‘ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்’ எ ஸ்வாஹா: ஸஹாய என்றால் ‘அக்னி’ என்று பெயர். ஸ்வாஹா என்று அக்னியின் பத்னிக்குப் பெயர். அதிலிருந்து ஸ்வாஹா ஸஹாய: என்றால் அக்னி என்று அர்த்தம். அக்னியைக் கண்ணாக உடையவர் மஹேஸ்வரன்.
‘ஸ்வாஹாஸஹாயாக்ஷ: - ஸ்வாஹா ஸஹாய: அக்ஷி யஸ்ய ஸ:
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ:’ என்றால் பாலநேத்ர, பாலாக்ஷ, மஹாதேவ என்று அர்த்தம்.அந்த மஹேஸ்வரனுடைய கர்தவ்யம் என்னவோ அதை நிறைவேற்றக் கூடிய சக்தி உடையது இந்தப் பாதுகை. மஹேஸ்வரனுடைய கடமை என்னவென்றால், ஸாஸ்திரம் சொல்கிறது - ‘ஞானம் மஹேஸ்வராத் இச்சேத்.’ மஹேஸ்வரன் ஞான ப்ரதாநனாக இருக்கிறார். அந்த மஹேஸ்வரனுடைய கடமையை குருபாதுகை கொடுக்கிறது என்றால் ஞானத்தைக் கொடுக்கவல்லது. அப்படியாக “ஸ்வாஹா ஸஹாயா க்ஷ துரந்தாப் யாம்” என்றால் ஞானத்தைக் கொடுக்கவல்லது அது என்பதாகும்.
இப்படி அனேக மகிமையுள்ளது குருபாதுகை. அப்படிப்பட்ட குருபாதுகையை நான் நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லி நம்ம பரமேஷ்டிகுரு இந்த ஸ்தோத்திரத்தை ரசனை செய்து, ப்ரதி நித்யம் தன் குருவின் சந்நிதியின் முன் நின்று கொண்டு அவரின் பாதுகையைத் தலை மீது வைத்துக்கொண்டு இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வார்கள். அதே க்ரமப்படி இன்றும் நம் மடத்தில் நடந்து வருகிறது. குருபாதுகையின் மகிமை நிரூபிக்கப்பட்ட விஷயம்.